Skip to content
Post Views: 7,286
ஒரு பெண்ணை அவமானப்படுத்த, அவளை சேர்ந்தவர்களை கேவலப்படுத்த வேண்டுமென்றால், ரொம்ப ஈசியாக செய்ய முடிவது அவளின் நடத்தையை பற்றி அவதூறு சொல்வது!
சொல்லி விட்டால் அதுவே போதும்!
ஒரு பெண் தன் சொந்த முயற்சியால், கடும் உழைப்பால், அறிவாற்றலால், முன்னேறினால் கூட, அதை அவள் நடத்தையை குறை கூறி அதை ஒன்றும் இல்லாமல் செய்து விடலாம்!
இது ஏதோ இன்று நேற்று நடப்பது அல்ல! காலம் காலமாய்!
Advertisement
அந்த காலத்தில் மதுவின் அத்தை வேதவதியைக் கூட தான்!
அவரை மட்டுமல்ல அவள் தம்பியான மதுவின் அப்பா ரவீந்திரனையும் தான் கேவலபடுத்தினார்கள்!
அதனால் தானே அவள் அப்பா இறந்ததே!
Advertisement
தங்கள் அம்மா அப்பாவை விபத்தில் இழந்த பிறகு அத்தை வேதவதியும் அவள் குட்டித் தம்பியும் தூரத்து உறவினர்கள் வீட்டில் வளரும் நிலை!
Advertisement
இத்தனைக்கும் அவர்களின் கொஞ்ச சொத்துக்களை விற்ற பணத்தையும் கொடுத்து விட்டு தான்!
வேதவதி பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, அருகே இருந்த ஒரு சைவ ஹோட்டலில் கணக்குப் பிள்ளைக்கு அசிஸ்டென்ட் ஆக வேலைப் பார்த்தாள்.
அந்த ஹோட்டல் முதலாளி ராமச்சந்திரன் முப்பதை தாண்டியும் கல்யாணம் ஆகாதவர்!
Advertisement
காரணம் அவர் வீட்டில் இருந்த உள்குத்து! அவருக்கு அம்மா இல்லை.
அவரின் சிற்றன்னையோ அவருக்கு திருமணம் ஆக விடவே இல்லை, வந்த வரன்களை எல்லாம் குறைக் கூறி தடுத்து வந்தார்!
அவருக்குப் பின் வாரிசு இல்லாமல் போகும் அவரின் சொத்தும் தன் மகன்களுக்கு போக வேண்டும் என்ற உயரிய எண்ணம்!
இந்நிலையில், வேதவதியின் உறவினர், அவளுக்கு ரெண்டாம்தாரமாய் ஒரு மாப்பிள்ளையை அவளுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும், அவள் மறுத்து அழுது வருவதாகவும் கணக்குப் பிள்ளை மூலம் கேள்விப்பட்டு, ராமச்சந்திரன் நேரே போய் கேட்க,
ஒரே தகராறு ஆகி விட்டது!
“எங்க பொண்ணுக்கு எங்க வசதிக்கு இந்த மாப்பிள்ளை தான் பார்க்க முடிஞ்சது என்ன பண்ண சொல்றீங்க?’
“நான் வேணுமின்னா பணம் தரேன், அந்த பொண்ணுக்கு இஷ்டமில்லாத கல்யாணம் வேண்டாம்!”
“அது எப்படிங்க நீங்க கொடுப்பீங்க, நீங்க என்ன அண்ணனா இல்ல வேற உறவுக்காரனா?”
“அப்புறம் எங்க பொண்ண தான் தப்பா பேசுவாங்க, நீங்க இவ்வளவு நாள் அவளை வச்சுட்டு இருந்துட்டு இப்ப பணம் செலவு பண்ணி கல்யாணம் செய்து கொடுத்து செட்டில் பண்றீங்கன்னு!”
“அய்யோ!” அதிர்ந்தே போய் விட்டார் ராமச்சந்திரன்!
அதற்குள் கூட்டத்தில் ஒருவர், “அவ்வளவு அக்கறை இருந்தா, நீங்களே பண்ணிக்க வேண்டியது தானே!” என்று சொல்லி விட, சட்டென ஒரு நொடிப் பொழுதில் முடிவெடுத்து தான் வேதவதி ராமச்சந்திரன் திருமணம் நடந்தது!
அதை சகித்துக் கொள்ளாத அவரின் சிற்றன்னை, உடனே அவர் தந்தையிடம் வேற ஜாதி பொண்ண கல்யாணம் செய்த அவரை வீட்டை விட்டு அனுப்பும் படி சொல்ல,
பின் ஒருவாறு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின், அவருக்கு அநியாயமான ஒரு பாகப்பிரிவினை செய்து கொஞ்சம் சொத்தைக் கொடுத்து வெளியே அனுப்பிவிட்டனர்!
அங்கே வேதவதியின் வீட்டில் “உன் தம்பியையும் உன்னோடவே கூட்டிட்டு போய்டு, இல்ல அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடு” என்று ரவியையும் அனுப்பி விட்டார்கள்!
தன் திருமணம் பொருட்டு அனாதையாகி விட்ட அந்த சிறுவனை அப்படியே விட்டு விட அவருக்கு மனதில்லை!
தன் கூடவே கூட்டிக் கொண்டு வந்து விட்டார்!
அப்படி இணைந்தவர்கள் தாம் மதுவின் மாமாவும் அப்பாவும்.
அதன் பின் சில வருடங்களில், பின் வேதவதியும் பிரசவத்தில் குழந்தையோடே இறந்துவிட, அதற்கு பின் ராமச்சந்திரனுக்கு எல்லாமே ரவீந்திரன் தான்!
பின் ரவியின் குழந்தைகள் மது, மானசா, மாதவன் தான்!
ராமச்சந்திரன் தன் சொந்த ஊரில் இருந்து இங்கே வந்து, மனைவியின் பேரில் ஆரம்பித்தது தான் வேதவிலாஸ் உயர்தர சைவ உணவகம்!
தரமான சுவையான பாரம்பரிய உணவுக்கு பேர் போனது அவரின் வேதவிலாஸ்!
வருடங்கள் உருண்டோட, ராமச்சந்திரன் வழிகாட்டுதலிலும் ரவீந்திரனின் கடும் உழைப்பாலும் அதன் புகழும், அவர்களின் செல்வ வளமும் வளர்ந்தது!
ரவி லீலா திருமணமும் நடந்தது! செல்வவளத்துடன் கூடவே குழந்தைகளும் வளர்ந்தார்கள்!
எல்லாம் நல்ல படியே தான் போய்க் கொண்டிருந்தது!
சீனியர் மோஸ்ட் ஐயப்ப குருசாமியான ராமச்சந்திரன் ஒரு அய்யப்ப படி பூஜை பஜனையின் போதே இறக்கும்வரை!
அவர் இப்படி பூஜையின் போதே இறந்த செய்தி சோசியல் மீடியாக்களில் வர, அதுவரை ஒதுங்கியிருந்த அவரின் சிற்றன்னை மகன்கள் களத்தில் இறங்கினார்கள்!
அவரின் வேதவிலாஸ் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களுக்கும் தாங்களே வாரிசு என்று வழக்குப் போட்டு அனைத்திற்கும் ஸ்டே வாங்கி, ஹோட்டலை மூடும் படி செய்தார்கள்.
பேங்க் அக்கௌன்ட் பிரீஸ் செய்யப்பட்டது!
நல்ல வேளையாக ராமச்சந்திரன், ரவியின் மறுப்பையும் மீறி லீலாவின் பெயரில் புறநகரில் இடம் வாங்கி கட்டியிருந்த வீடு அதில் தப்பித்தது!
குழந்தைகள் பேரில் போட்டுருந்த கொஞ்ச டெபாசிட்களும்!
புது பிரான்ச் ஆரம்பிக்கவென்று வாங்கியிருந்த கொஞ்ச கமர்சியல் கிட்சன் சாமான்கள் புது வீட்டில் இறக்கி வைக்கப்பட்டதால் தப்பித்தன!
காதில், கழுத்தில் போட்டிருந்த தினப்படி நகைகளும், ஒரு விசேசத்திற்கு போட்டுக் கொண்டு வீட்டில் கழட்டி வைத்து இருந்த, லாக்கரில் திரும்ப கொண்டு போய் வைக்காமல் இருந்த கொஞ்ச நகைகளும் அவற்றோடே தப்பித்தன!
ரவீந்திரன் ரொம்பவும் நிலைகுலைந்தார்!
அவரால் ஹோட்டலை விட்டு வரவே முடியவில்லை! பூட்டி சீல் வைப்பதை தாங்க முடியவில்லை!
“பரவாயில்ல விடுங்க, நாம் மறுபடியும் ஜீரோவில் இருந்து ஸ்டார்ட் பண்ணி மறுபடியும் ஜெயிச்சு விடலாம், நீங்க மனசு விட்டுடாதீங்க!” சொன்ன லீலாவின் வார்த்தைகளில் கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்த ரவீந்திரனை, வடிவேலுவின் பேக்கரி காமெடியை சொல்லி, வம்பிழுத்தார்கள் வேண்டாதவர்கள் – அவர்கள் வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள்!
“வீர பாகுவ நீ படத்துல தானே பார்த்து இருக்க! இவர் தான் நிஜ வீரபாகு! இவங்க அக்காவ அனுப்பி தான்… “
காதை இறுக பொத்திக் கொண்டு வீடு வந்தார் ரவி!
“டேய் படு பாவிங்களா! என் அக்கா கல்யாணத்தின் போது எனக்கு பத்து வயசு கூட இல்லடா!
இந்த வேத விலாஸ் என்னோட கடும் உழைப்பில் வளர்ந்ததுடா!”
“ஐயோ மாமா, இப்படி ஏன் என்னை விட்டுட்டு போனீங்க மாமா?”
“எனக்கு அப்பா அம்மா முகம் கூட மறந்து போச்சே! எனக்கு எல்லாமே நீங்க தானே! இப்படி என்ன தவிக்க விட்டுட்டு போயிட்டீங்களே!”
நெஞ்சு வெடித்து விடும் அளவு அழுதார்!
“அய்யோ எனக்கு ரெண்டு பொம்பள பிள்ளைங்க வேற இருக்காங்களே! என் பொண்டாட்டி பிள்ளைங்கள நான் எப்படி காப்பாத்த போறேன்?”
“அவங்க இல்லண்ணா நானும் உங்க கூடவே வந்துருப்பேன் மாமா!”
‘என்னை ஏன் மாமா இப்படி வளர்த்து விட்டீங்க? அப்படியே விட்டு இருக்கலாம் இல்ல!
நான் எங்கயாவது கூலி வேலை செய்துட்டு இருந்திருப்பேனே! இப்படி என்னை ஏன் முதலாளி இடத்துல வச்சு அழகு பார்த்தீங்க?”
‘பல பேருக்கு இந்த கையால சம்பளம் கொடுத்துட்டு, நான் இப்ப போய்,
இந்த வயசுக்கப்புறம் எங்க போய் வேலைப் பார்ப்பேன், எவன் எனக்கு வேலை கொடுப்பான்?
என் பொண்டாட்டி பிள்ளைங்கள எப்படி காப்பாத்த போறேன்?”
கதறி தீர்த்தார்!
“கவலைப் படாதீங்க மதுப்பா, நமக்கு முத்துக்கள் போல மூணு பிள்ளைங்க இருக்காங்க! நான் இருக்கேன்! நீங்க மஹா பாரதத்துல விராட பருவம் படிச்சது இல்லையா?”
“ஆனானப்பட்ட தர்ம மஹராஜாவே வேலைக்காரனா, பாஞ்சாலியே பணிப்பெண்ணா இருந்தாங்கன்னு படிச்சிருக்கோம் இல்லையா?
அது போல நமக்கு இது ஒரு விராட பருவ காலம்னு நினச்சுப்போம்!”
“இதுல இருந்து மீண்டு வருவோம். எனக்கு நம்பிக்கை இருக்குங்க! தைரியமா இருங்க!” இப்படி எல்லாம் சொல்லி லீலா சமாதானம் செய்தும் கூட ரவீந்திரன் மனம் தைரியம் கொள்ளவே இல்லை!
மனைவியையும், பெரிய மகளையும் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பி விட்டு, சின்ன மகளும் மகனும் பள்ளிக்கு சென்று விடுவதால்,
பகல் முழுவதும் தனிமையில் மன உளைச்சலில் இருந்த அவர் ஒரு நாள், அதன் காரணாமாகவே, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தவர், மனைவியின் மடியிலேயே உயிரையும் விட்டு விட்டார்!
துக்கத்திற்கு வந்த, அவர்களது லாயர், மதுவையும் அவள் அம்மாவையும் கூப்பிட்டு பேசினார்.
“அம்மா, சட்டபடி சொத்து அவர்களுக்கு தான் போகும்!”
“உங்க மாமா ஏதாவது உங்க அப்பா பேர்ல, இல்ல உங்க யார் பேர்லயாவது உயில் எழுதி வச்சுருந்தா, அத வச்சு எல்லாத்தையும் மீட்டு விடலாம்!”
“உங்க மாமாவோட பிரண்ட்ஸ் சர்க்கிளில் விசாரித்து பார்” என்று சொல்லி விட்டுப் போனார்!
“அப்படி ஏதும் இருந்திருந்தா, இந்நேரம் அவங்க கொண்டு வந்து கொடுத்துருப்பாங்களே சார்”!
“சரிம்மா, பாரு..” என்று விடைப் பெற்றார் அவர்!
கெட்டதிலும் ஒரு நல்லதாக, ராமச்சந்திரன் உயில் எழுதி தான் வைத்து இருந்தார்!
எல்லோர் பேரிலும் பிரித்து பிரித்து!
அது அவரின் ஒரு முஸ்லீம் நண்பருக்கு மட்டும்தான் தெரியும்!
அவருக்கு இப்படி ஒரு முஸ்லீம் பிரன்ட் இருப்பதே ரவியைத் தவிர வேறு யாருக்குமே தெரிந்திருக்கவில்லை!
தெரிந்த ரவியோ, அதைப் பற்றி யோசிக்கும் நிலையில் அப்போது இல்லை!
அந்த நண்பர் வளைகுடா நாட்டில் இருந்த அவரின் மகன்களில் வீடுகளில் மாறி மாறி இருந்தவர், பின் ஹஜ் யாத்திரை சென்று விட்டு, சில மாதங்கள் கழித்து ஊர் திரும்பிய பின் தான்
ராமச்சந்திரன் ரவீந்திரன் மறைவு பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ந்து போய், அவர்கள் இப்போது இருக்கும் வீட்டை விசாரித்துக் கொண்டு மனைவியோடு வந்து, லீலாவை, குழந்தைகளை பார்த்து விட்டு, தானே முன் இருந்து இந்த உயில் காப்பியை வாங்கிக் கொடுத்தார்!
அதை மதுவும் லாயரிடம் கொடுத்து விட்டு வந்தாள்.
அதற்கு பின் , சினிமாவில் வருவது போல ஓவர் நைட்டில் எல்லாம் நிலைமை மாறி விட வில்லை!
மே மாதம் கோர்ட் லீவ் வந்தது!
பின் லாயருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது!
பின் அவரின் மகள் கல்யாணம் வந்தது!
பின் லாயர்கள் பாய்கோட்(ஸ்ட்ரைக்) வந்தது!
மதுவின் அம்மாவுக்கு உடல்நிலை கேடும் கூடவே வந்தது!
மது அம்மாவையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் போய்க் கொண்டு அதற்கே நேரத்திற்கும் பணத்திற்கும் போராடிக் கொண்டு இருந்ததால், அவளும் கேஸ் பற்றி எல்லாம் சிந்திக்கவே இல்லை!
ஒரு நாள் மகள் படும்பாடு கவலைக் கொடுத்ததோ என்னமோ, லீலாவும் தன் கணவரோடு சென்று விட முடிவெடுத்தது போல உயிரை விட்டுவிட்டாள்!
மது தான் இப்போது தனியே தன் தம்பி தங்கைகளுடன்!
ஆதரிப்பார் என்று நம்பி அடைக்கலமான மாமாவின் வீட்டில் கிடைத்ததோ பெரும் அவமானம் ஒன்றே!
அதன் பின்,
தன் மீது, தன் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து தான் மது தன் மாமாவின் வீட்டில் இருந்து கிளம்பியதே!
கூடவே அவள் அம்மாச்சி அவர்களுக்காக வந்து விடவும் அவளுக்கு மிகுந்த தைரியம் உண்டாயிற்று!
குறுக்கு வழியில்லாமல், யாரையும் ஏமாற்றாமல், உழைத்து பணம் சம்பாதிக்கும் அனைத்து வேலைகளையும் அவர்கள் பார்த்தார்கள்!
மது சின்ன சின்ன கேட்டரிங் வேலைகள் எடுத்து செய்தாள்.
மாதவன் படித்துக் கொண்டே பார்ட் டைம் ஆக ஆன்லைன்னில் மார்க்கெட்டிங், லோகோ மேகிங், விர்சுவல் அசிஸ்டென்ட் போன்ற பிரீலான்சிங் வொர்க்ஸ் எடுத்துப் பண்ணினான்.
மானுவோ, அவள் சின்ன வயதில் இருந்து கற்று இருந்த யோகாவை ஆன்லைன் மூலமும் வீடுகளுக்கே சென்று நேரடி வகுப்புகள் எடுத்தும் வந்தாள்.
முக்கியமாக கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக என்று இருக்கும் சில வகை சிறப்பு ஆசனங்களை அவள் அவர்கள் வீட்டிற்கே போய் சொல்லிக் கொடுத்தது நிறைய பேரின் பாராட்டுதலோடு வருமானமும் ஈட்டித் தந்தது.
ஏன் அவர்கள் பாட்டி, பட்டு கூட வீட்டில் இருந்து கொண்டே சின்னதாக ஒரு கடை செட்டப் செய்து கொண்டு, பாக்கெட் பால், தயிர் கூல்ட்ரிங்க்ஸ் விற்றும், கொல்லைபுறம் விழுந்த தென்னை மட்டைகளிலிருந்து துடைப்பம் செய்தும், கைகளால் சின்ன சின்ன துணி பிட்டுகளைக் கொண்டு கால்மிதியடி(Foot Mat) செய்து கொடுத்தும் பணம் சம்பாதித்தார்!
யாரிடமும் எதுவும் இனாமாக பெறவில்லை! யாரிடமும் பல்லிளித்து காரியம் சாதித்துக் கொள்ள வில்லை! முழுக்க முழுக்க உழைப்பு உழைப்பு மட்டுமே !
அவர்கள் நண்பன் ராஜு மட்டும் விதி விலக்கு! அவனிடம் பண உதவி தவிர்த்து மற்ற உதவிகள் பெற்றாள் மது!
ரொம்ப நாள் ஆகியும் கேஸ் நடப்பதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் இருக்க, ராஜு தான் அதை விசாரித்தான் அவன் லாயர்ஸ் வட்டாரத்தில்!
“தேவையான டாக்குமெண்ட்ஸ் கொடுத்தும் பெரிய ப்ரோக்ரஸ் இல்லயே மது! என்று விசார்க்க போக, மதுவின் லாயர் விலை போய் இருப்பது தெரிந்தது!
உயில் காப்பி கிடைக்கும் வரை அவர் நியாயமாக தான் இருந்தார்!
உயில் காப்பி அவரிடம் இருப்பது எதிர் பார்ட்டிக்கு தெரிந்து, அதை கோர்ட்டில் அவர் போடாமல் இருக்க அவரை விலை பேசிவிட்டார்கள்!
இது ராஜுவுக்கு தெரியவர, அவன் மதுவை வேறு லாயரிடம் அழைத்து சென்று, பழைய லாயரிமிடமிருந்து கேஸ் கட்டை வாங்கி, இப்போது அவன் கவனமாக அவள் கேசை பார்த்துக் கொண்டிருக்கிறான்!
இப்போது அவன் கொடுத்த ஊக்கத்தால், இந்த கேண்டீன் காண்ட்ராக்டும் கிடைத்து, அவள் கொஞ்சம் “ஸ்..அப்பா..” என்று கொஞ்சம் ஆசுவாசம் ஆன நேரம், இந்த ரகுவின் வாயால் இப்படி ஒரு சுடு சொற்கள்!
உனக்கு வேண்டும் மது! நீ இருக்கிற நிலைமைக்கு, உன் மனசு, அவன் மேல் சலனப்பட்டதுக்கும் தேவையில்லாமல் கொஞ்ச நேரம்னாலும் அவன் மேல ஆசைப் பட்டதுக்கும் சரியான தண்டனை!
இனியாச்சும் உன் மனச அலைப்பாய விடாம ஒழுங்கா இருக்கிற வழியப் பாரு!
உனக்கு நிறைய கடமைகள் இருக்கு! உன் மனசை மூடி பத்திரமா வச்சுக்கோ,! என்றல்லாம் தனக்குத் தானே சமாதானம் செய்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து டிவி பார்க்கத் தொடங்கினாள் மது!
ஆனால் அப்படியெல்லாம் இருக்க விட்டுவிடுமா காதல்! அதுவும் அவள் அவன் மீது கொண்டிருக்கும் அன்கண்டிசனல் லவ்!
error: Content is protected !!