Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் -1

அவளின் ஆதியானவன் -1

அத்தியாயம் 1:

புலர்ந்து புலராத காலை பொழுது. பூமிப் பெண்ணானவள் சூரியனின் கரங்கள் தன்னைத் தழுவிக்கொள்வதற்காக ஆவலுடன் காத்திருந்தாள். அவளது ஆர்வத்தை அறியாத சூரியன் தன் தங்கக் கதிர்களை பூமிக்கு அனுப்ப சரியான நேரத்தைத் தேடிக் கொண்டிருந்தான்.

முதலில் கீழ் வானம் சிவப்பு நிறமாக மாறியது. அதை விரைவில் மேகம் மூடியது. பிறகு மீண்டும் சிவந்தது. சிறிது நேரத்தில் சூரியன் ஆரஞ்சு நிற பந்தாக எழுந்தது.



Advertisement

இன்னும் கொஞ்ச நேரத்தில் அது கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு பிரகாசிக்க ஆரம்பித்துவிடும் என்பதால், காபியை பருகிக்கொண்டே அதை அவசரமாக கண்களால் விழுங்கி கொண்டிருந்தாள் சந்தியா. இந்த ஊருக்கு வந்த பத்து நாட்களில் அவளுக்கு இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டது. அவள் அறையின் பால்கனி கிழக்கு திசையை நோக்கி இருப்பதால், அவளுக்கு வசதியாக போய்விட்டது.

சந்தியாவின் அப்பா திருப்பூரைச் சேர்ந்தவர் என்றாலும், சந்தியா பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில்தான். அவர்கள் வசித்ததும் பிளாட்டில்தான். அங்கு சுழலும் இயந்திர வாழ்க்கையில், இயற்கையை ரசிப்பதெற்க்கெல்லாம் அவளுக்கு நேரம் இருந்தது இல்லை.

கடந்த மூன்று மாதங்களில் தன் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது என்று ஆச்சரியமாக யோசித்து கொண்டிருந்தாள் சந்தியா. அதில் முக்கிய நிகழ்வு பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் அருகே இருக்கும் அணைக்குடி (ஊரின் பெயர் கற்பனையானது) கிராமத்திற்கு வந்ததே.

Advertisement

இந்த ஊருக்கு வந்ததில் காயப்பட்டிருந்த சந்தியாவின் மனம் மட்டுமல்லாமல் , அவளைப் பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருந்த அவள் பெற்றோரின் மனமும் சிறிது நிம்மதி அடைந்திருந்தது.

Advertisement

இயற்கை எழில் கொஞ்சும் கிராமம், கள்ளம் கபடம் இல்லாத மனிதர்கள், சந்தியாவின் அத்தையின் குடும்பம், குறிப்பாக அவள் அத்தையின் ஒரே மகள் கௌரி என அனைவரும் சேர்ந்து அவளை மகிழ்ச்சியாக மாற்றி கொண்டிருக்கின்றனர் என்று சொல்லலாம்.

கௌரியை நினைத்ததும் சந்தியாவிற்கு கல்லூரிக்கு கிளம்ப வேண்டும் என்பது நியாபகம் வந்தது. அவளும் கௌரியும் கோவையில் உள்ள ஒரு புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் படிக்கிறார்கள். நான்காம் ஆண்டு. ஆனால் வெவ்வேறு துறை.

கௌரி கம்ப்யூட்டர் சயின்ஸும் , சந்தியா டெக்ஸ்டைல் ​​இன்ஜினியரிங்கும் படித்து வருகின்றனர். பதினைந்து நாட்களுக்கு முன்பே கல்லூரி திறந்துவிட்டனர். ஆனால் சந்தியா இரண்டு நாட்களாகத்தான் வகுப்பிற்கு சென்று வருகிறாள். சந்தியாவை பெங்களூர் கல்லூரியில் இருந்து கோயம்புத்தூர் கல்லூரிக்கு மாற்றுவதுதான் சற்று கடினமாக இருந்தது. தெரிந்த அரசியல்வாதி ஒருவரின் சிபாரிசின் பேரில் சந்தியாவின் அத்தையின் கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து சீட் வாங்கியிருந்தனர்.

Advertisement

சந்தியாவின் தந்தை செல்வம் பெங்களூரில் மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கியில் மேலாளராக இருந்தார். இன்னும் மூன்று நான்கு வருடங்கள் பதவி காலங்கள் இருந்தாலும் மகளின் மனமாற்றத்திற்காக விஆர்எஸ் கொடுத்துவிட்டு இந்த ஊருக்கு வந்துவிட்டார்.

சந்தியாவின் தாய் பத்மா இல்லத்தரசி. பத்மா செல்வம் இருவருமே தங்கள் மகளுடன் தோழமையாக பழக கூடியவர்கள். சந்தியாவும் எல்லோருடனும் எளிதில் நட்பாகி விடுவாள். நல்ல தெளிவான பெண். அவளுடைய முடிவுகள் பெரும்பாலும் சரியானவையாகவே இருக்கும். ஆனால் அவளும் இருபத்தி ஒரு வயது நிரம்பிய பெண்ணே. அனுபவக் குறைவின் காரணமாக, அவள் குழப்பமடையும் போது அவளுடைய பெற்றோர் அவளை வழிநடத்துவார்கள்.

இப்போதும் சந்தியாவின் அப்பா தான் ஊரை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தார். அதுவும் சொந்த ஊரான திருப்பூருக்குப் போகாமல் தங்கையைப் கட்டி கொடுத்த இந்த ஊருக்கு வந்தார். அவருக்கு திருப்பூரில் பெரிதாக சொந்த பந்தங்கள் கிடையாது. செல்வத்தின் திருமணத்திற்கு முன்பே அவரது பெற்றோரும் இறந்துவிட்டனர்.

பத்மா வேறு இன பெண். அவரை பார்த்ததும் பிடித்து போய் செல்வம் திருமணம் செய்து கொண்டார். பத்மாவுக்கும் பெற்றோர்கள் இல்லை. திருப்பூரில் ஒரே ஒரு அண்ணன் இருக்கிறான். பத்மாவுக்கு அவனிடம் அதிக ஓட்டுதல் இல்லை. செல்வம் பத்மாவை விரும்பி பெண் கேட்டதும், பணம் செலவில்லாமல் திருமணம் செய்து கொடுத்து விட்டு ஒதுங்கி கொண்டான்.

இவ்வாறு பெண் கட்டியதில் கோபம் கொண்டுதான் செல்வத்தின் தங்கை சித்ராவின் கணவர் சுந்தர மூர்த்தி ஒதுங்கி கொண்டார். ஆனால் இப்போது ஒரு பிரச்சனை, இங்கு வரலாம் என்று முடிவு செய்து செல்வம் அவர்களிடம் சொன்னதும் எந்த தயக்கமும் இல்லாமல், அவரின் தங்கையின் குடும்பம் அரவணைத்து கொண்டனர் .

தற்போது அவர்கள் பார்த்து கொடுத்த வீட்டில் தான் வாடகைக்கு குடியிருக்கின்றனர். புதிதாக கட்டப்பட்ட மாடி வீடு. கீழே இரண்டு அறைகள், ஒரு ஹால் மற்றும் ஒரு சமையலறை . மாடியில் ஒரே ஒரு அறை மட்டுமே. படிகள் வீட்டிற்கு உள்ளேயே இருக்கிறது. அங்குதான் சந்தியா தங்கியிருக்கிறாள் .

செல்வத்தின் தங்கை சித்ராவின் வீடு, நான்கு வீடு தள்ளி இருந்தது. அது ஒரு பழைய கால முற்றத்து வீடு. குடும்பம் பிரிந்த போது அவர்கள் இந்த வீட்டிற்கு வந்தனர். அடுத்த தெருவில் சுந்தர மூர்த்தியின் அண்ணன் ஈஸ்வர மூர்த்தியின் குடும்பத்தினர், அவர்களின் பெரிய பூர்வீக வீட்டில் இருக்கின்றனர். அந்த ஊரின் பெரிய குடும்பம் அது.

சந்தியா குளியலை முடித்துவிட்டு பிரவுன் கலர் ஆலியா கட் சுடிதார் அணிந்து வந்தாள். தோள் வரையிருந்த அடர்த்தியான முடியை போனிடெயில் போட்டிருந்தாள். சன் ஸ்க்ரீன் தடவி, கொஞ்சம் பவுடர் போட்டு லிப் கிளாஸ் மட்டும் போட்டிருந்தாள். அவளை பார்த்தாலே நகரத்தில் வளர்ந்தவள் என்று சொல்லிவிடலாம்.

இயற்கையிலேயே அழகான பெண்ணும் கூட. எலுமிச்சை நிறம் என்பார்கள் அல்லவா? அப்படி ஒரு நிறம். கயல் கண்கள். எள்ளு பூ நாசி. இயற்கையிலேயே சிவந்த உதடுகள். ஐந்தரை அடி உயரம். ஸீரோ சைஸ் உடல் வாகு.

சந்தியா கீழே இறங்கி வந்து டைனிங் டேபிளில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த செல்வத்திடம் “குட் மார்னிங் பா” என்றாள்.

“குட் மார்னிங் டா. உனக்காகத்தான் வெயிட்டிங். சாப்பிடலாமா” என்றவர் தன் மனைவியை “பத்மா” என்று அழைத்தார். பத்மாவும் கிச்சனிலிருந்து சாம்பார் கிண்ணத்தை எடுத்து வந்து மேஜையில் வைத்துவிட்டு அவர்களுடன் அமர்ந்தார் . பத்மா பொங்கல் சட்னி சாம்பார் செய்திருந்தார்.

அதை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டு, மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பாட்டை முடித்துவிட்டு, “நான் கிளம்புறேன் ப்பா. கௌரிய பிக்கப் பண்ண சரியாயிருக்கும். பை மா” என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள் சந்தியா. அவளை சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்தவர்கள், அவள் கிளம்பி சென்றதும் ஒரு வருத்தமான பெருமூச்சுடன் உள்ளே சென்றனர்.

சந்தியா சென்று ஸ்கூட்டியை கௌரி வீட்டு வாசலில் நிறுத்தியதும், கௌரி சரியாக வாசலுக்கு வந்துவிட்டாள்.

வந்தவள் சந்தியாவைப் பார்த்து மலைத்து நின்றாள் . “மேக்கப் போட்டதே தெரியாத மாதிரி மேக்கப் போட எனக்கும் சொல்லி குடு சந்தியா” என்று சொன்ன கௌரி க்ரீன் கலர் சுடிதாரில் , இடுப்புக்கு கீழ் வரை இருந்த சுருள் முடியுடன், உடைத்த கோதுமையின் நிறத்தில் கிராமத்து பெண்களுக்கே உண்டான அழகுடன் இருந்தாள்.

“மேக்கப்பே போடாம நீ எப்படி இவ்வளவு அழகாக இருக்கன்னு முதல்ல சொல்லு கௌ” என்றாள் சந்தியா

கௌரி ஸ்கூட்டியின் பின்புறம் ஏறி அமர்ந்து, “கௌ ன்னு கூப்பிடாத சந்தியா” என்று சிணுங்கினாள்.

“நீளமா இருக்க பேர சுருக்கி கூப்பிடறேன்” என்று சொல்லி கொண்டே வண்டியை கிளப்பினாள் சந்தியா.

“ரெண்டே வார்தையிருக்க பேர் உனக்கு நீளமா இருக்கா. அப்ப உன்ன சந்துன்னு கூப்பிடவா”

“தாராளமா கூப்ட்டுக்கோ” என்று பேசி கொண்டே, அவர்கள் ஊரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். பாதி வழியில் திடீரென்று வண்டியை பிரேக் போட்டாள் சந்தியா.

என்னவென்று கேட்ட கௌரியிடம் ஒரு பெரிய பச்சைத் தவளை சாலையைக் கடந்து பக்கத்து வாய்க்காலில் இறங்கியதை காட்டினாள்.

“ஏய் அதான் போய்டுச்சே. நீ எங்க போற சந்தியா. இங்கல்லாம் நிக்க கூடாது. வா போகலாம்” என்றவளின் பேச்சை கண்டு கொள்ளாமல் சந்தியா வாய்க்கால் மதகை பிடித்தபடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த இடம் கொஞ்சம் காடாக ஆள் அரவமில்லாமல் இருக்கும். பெரும்பாலும் குடி மகன்கள் அங்கு இளைப்பாறுவார்கள். கௌரி எப்போதும் பஸ்ஸில்தான் கல்லூரிக்கு செல்வாள். சந்தியா வந்தபிறகு அவளோடு ஸ்கூட்டியில் வருகிறாள்.

அப்போது அவர்கள் அருகே ஒரு புல்லட் வந்து நின்றது.

“என்ன கௌரி இங்க நிக்கிற” என்ற கணீர்க் குரல் கேட்டதும் சந்தியா திரும்பிப் பார்த்தாள்.

கௌரி “இல்லீங்ண்ணா . காலேஜ் போயிட்டு இருந்தோம். வழில பச்சை தவக்களை போச்சுதுங் . அதை வேடிக்கை பாத்துட்டு நிக்கிறாளுங்கண்ணா” என்று சந்தியாவை சுட்டிக் காட்டினாள் கௌரி.

சந்தியாவை திரும்பிப் பார்த்தவன், பிறகு கௌரியைப் பார்த்து, “இங்கல்லாம் நிக்க கூடாதுன்னு உனக்குத் தெரியாதா. சீக்கிரம் கிளம்பு” என்றான்.

கௌரி சந்தியாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். அவளும் எதுவும் பேசாமல் வந்து வண்டியை எடுத்தாள். அவர்கள் சென்றவுடன்தான் அவன் புறப்பட்டு எதிர்புறம் சென்றான்.

சிறிது தூரம் சென்றதும் சந்தியா “அது யாரு கௌ?” என்றாள்.

“எங்க ஆதி அண்ணா சந்தியா. முழுப்பெயர் ஆதித்யன். என்னோட பெரியப்பா பையன். எங்களுக்கெல்லாம் சின்ன வயசுல இருந்தே ஆதி அண்ணான்னா பயம்.”

சந்தியா கௌரியின் பெரியப்பாவை மட்டும்தான் பார்த்திருக்கிறாள். அவர்கள் குடும்பத்தினரை பார்த்ததில்லை. செல்வமும், பத்மாவும் மட்டும் அவர்கள் வீட்டுக்கு ஒருநாள் சென்று வந்தனர். அன்று சந்தியா தலைவலி என்று செல்லாமல் வீட்டிலேயே இருந்து விட்டாள்.

“அவர பாத்தா பயப்டற மாதிரியா இருக்கு. செம மேன்லியா இருக்கார் சைட் அடிக்கலாம் போல” என்ற சந்தியா ஆதித்யனின் தோற்றத்தை நினைவு கூர்ந்தாள்.

வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக, அவனுக்காகவே உருவாக்க பட்டதுபோல் இருந்த புல்லட்டில் அமர்ந்திருந்தான் . ஆறடிக்கு மேல் உயரம் அதற்கு பொருத்தமான உடலமைப்பு. கருமையான களையான முகம். அடர்ந்த பெரிய மீசை. கூர்மையான மூக்கு. அழுத்தமான உதடுகள்.

எல்லாவற்றையும் விட சந்தியாவை ஈர்த்தது அவனது கண்கள் தான். அவன் சந்தியாவை ஒரு நொடிக்கும் குறைவாகவே திரும்பிப் பார்த்தான். அதற்குள்ளாகவே அவளுக்கு படபடத்துவிட்டது.

உள்ளுக்குள்ளே என்ன நினைக்கிறோம் என்பதை அவன் கண்களாலேயே ஊடுருவி பார்த்து சொல்லி விடுவான் போலும். குறிப்பாக அவன் அவளை மிகவும் சாதரணமாக பார்த்துவிட்டு திரும்பியது அவளுக்கு புது அனுபவம்.

இதுவரை அவள் பார்த்த ஆண்களின் கண்கள், சாதாரணமாக அவளைப் பார்த்தில்லை. அவசரமாகப் பார்த்து திரும்பி விட்டாலும், மீண்டும் இன்னொருமுறை நிதானமாக பார்த்து விட்டே செல்வார்கள். அவளை அலட்சியமாகப் பார்த்துவிட்டு திரும்பிவிட்ட ஆதியின் கண்கள் சந்தியாவின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது..

சந்தியாவின் யோசனையை கலைப்பது போல கௌரி சொன்னாள் “ஆதி அண்ணாக்கு மேரேஜ் ஆயிடுச்சு”

சடன் பிரேக் போட்டு ஸ்கூட்டியை நிறுத்தினாள் சந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!