Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maruvak Kaathal Kondaen

மருவக் காதல் கொண்டேன்-22 (2)

மைக்கேல் கிருஷ்ணாவின் காரை எடுக்க, வழக்கமாக அவரின் அருகில் முன்னாடி அமரும் கிருஷ்ணா, இன்று பின்னாடி உமையாள் அருகில் அமர்ந்தான்.

உமையாள் இதை கவனித்தாலும் பெரிதாக அலட்டி கொள்ளாமல் இருக்க, காரில் ஏறிய சில நிமிடங்களிலே கிருஷ்ணா உறங்க ஆரம்பித்துவிட்டான்.

இத்தனை நாள் சரியாக உறங்காதது, வேலை பளு, திருமணத்தை குறித்த தன்னவளின் எண்ணங்கள் பற்றிய கவலை என உள்ளத்தின் அலைப்புறுதல் எல்லாம் அவனவளின் அருகாமையில் கரைந்து காணாமலே போக, அவன் ஆழ்ந்த உறக்கத்தின் வசம்.

உறங்கும் அவனை பார்த்த உமையாளுக்கு அவனின் அயர்ந்த தோற்றம் கண்ணில் பட ஓரிரு வினாடிகள் உறங்கும் அவனை பார்த்தவள், பின்பு தன் கண்களை அவனிடம் இருந்து பிரித்து, திருப்பி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.



Advertisement

ஒன்றிரண்டு வண்டிகளே சென்று கொண்டிருந்த அந்த பெரிய சாலையில், தங்களின் கார் சற்று வேகம் எடுப்பது தெரிய, அதோடு சற்று வளைந்து வளைந்து செல்வது போலவும் தோன்ற, மைக்கேல் இப்படி எல்லாம் வண்டி ஓட்ட மாட்டாரே என்ற சந்தேகத்துடன்,

“மைக் என்ன ஆச்சு” என்று உமையாள் கேட்க, அதே நேரம் அவரும் வண்டியில் கவனத்தை வைத்துவாறே,

“சீட் பெல்ட்” என்று இரத்தின சுருக்கமாக சொல்ல, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட உமையாள், உறங்கி கொண்டு இருந்த கிருஷ்ணாவை நெருங்கினாள்.

Advertisement

ஏற்கனவே வண்டியின் அதிகமான அசைவில் தூக்கம் சற்று கலைந்து எழ இருந்த கிருஷ்ணாவின் அருகில், உமையாள் செல்ல, அவளின் அருகாமையை அந்த அற உறக்க நிலையிலும் மூளை உணர, சட்டென விழித்து விட்டான் கிருஷ்ணா.

Advertisement

விழித்தவன் தனக்கு மிக அருகே நெருங்கி, குனிந்து என்னமோ செய்து கொண்டிருந்த தன்னவளின் தலையின் கேசம் மட்டுமே தெரிய, அவளின் அருகாமையை ஓரிரு வினாடிகள் ரசித்தவன், ஏதோ சரியில்லை என்று மூளை எடுத்துரைக்க,

 

[the_ad id=”6605″]

Advertisement

 

“என்ன உமையாள்” என்று கேட்க, இவன் விழித்துவிட்டதை உணர்ந்த உமையாள், திரும்ப தன் இடத்தில் அமர்ந்து, தனக்கு காரின் பட்டையை அணிவிக்க முயன்றவாறே அவனை பார்க்கமால்,

“சீட் பெல்ட் போடுங்க, சீக்கிரம்” என்று சொல்ல, அவனின் கைகள் மறு கேள்வி கேட்காமல், அவள் சொன்னதை செய்தாலும், முழுதாக விழித்து கொண்ட மூளை சூழ்நிலையை ஆராய்ந்து, கிரகித்து கொள்ள முயன்று கொண்டு இருந்தது.

கிருஷ்ணா பின்னால் திரும்பி பார்க்க, இரண்டு கார்கள் அதி வேகத்தில் இவர்களை இடிப்பதற்காக துரத்தி வந்து கொண்டு இருந்தன.

மைக்கேல் இலாவகமாக முன்னேறி கொண்டு இருக்க, இரு கார்களுமே இவர்களின் பக்கவாட்டில் முன்னேறி, இவர்களை இடிப்பதற்கு மிக அருகில் நெருங்கி வந்து, மைக்கேலின் திறமையால் மயிரிழையில் இவர்களை இடிக்காமல் விலகி கொண்டு இருந்தன.

தாங்கள் சென்று கொண்டிருந்த சாலையில், தங்களுக்கு முன்னால் குறிப்பிட்ட இடைவெளியில் சென்று கொண்டிருந்த இருவேறு வாகனங்களின் இடையில், ஒரு கார் மட்டுமே நுழையும் அளவு இருந்த இடத்தில் தங்கள் காரை செலுத்திய மைக்கேல், அந்த வாகனங்களுக்கு ஈடான வேகத்தில், தங்களின் காரையும் செலுத்த, இவர்களை தூரத்தி கொண்டு வந்த கார்கள் இரண்டுமே கொஞ்சம் பின் தங்கியது.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட மைக்கேல், சற்று நகர்ந்தாலும் பக்கவாட்டில் இருந்த, இரு வாகனங்களின் மேல் மோதிவிடும் அபாயம் இருந்த நிலையில் கூட, தடுமாறாமல் காரை வெகு திறமையாக செலுத்தினார்.

துரத்தி வந்த கார்கள் முன்னேறவும் முடியாமல், இவர்களை நெருங்கவும் முடியாமல் திணற, திடிரென தங்களின் காரின் வேகத்தை அதிகபடுத்திய மைக்கேல், அரணாக இருந்த அந்த வாகனங்களை தாண்டி அதிவேகத்தில் காரை செலுத்தினார்.

மைக்கேல் திடிரென காரை அதிவேகத்தில் செலுத்தி முன்னே செல்ல, இதை எதிர்பார்க்காத இவர்களை துரத்தி கொண்டு வந்த கார்கள், சற்று தடுமாறி விட்டு, இவர்களை பின்தொடரும் வண்ணம், அவர்களும் முழுவேகத்தில் தங்கள் காரை செலுத்தினர்.

வலது பக்கத்தில் வந்த கார் முன்னேற முடியாமல் சற்று பின்தங்க, இடது பக்கத்தில் இருந்த கார் அந்த வாகனங்களை கடந்து சில நொடிகளில் இவர்களின் காரை நெருங்கியது.

இடது பக்கத்தில் இவர்களை நெருங்கிய காரின் ஓட்டுநர், இவர்களை இடித்து கவிழ்ப்பதற்காக தனது காரை வலது பக்கத்தில் ஓடிக்க, அந்த கார் இவர்களின் காரை இடிக்க போகும் கடைசி நொடியில் மைக்கேல் தங்களுடைய காரின் வேகத்தை இன்னும் அதிகபடுத்தி முன்னாள் செல்ல, இவர்களை இடிக்க நினைத்த கார், அதன் கட்டுப்பாட்டை இழந்து, சாலைகளின் நடுவே சாலைகளை பிரிக்க பயன்படுத்தும் இரும்பு பலகையில் மோதி நின்றது.

இன்னும் ஒரு கார் இவர்களை துரத்தி வந்து கொண்டு இருக்க, தங்களுக்கு முன்னாள் இடது பக்கத்தில் சாலையோரம் ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பத்தை கவனித்த மைக்கேல், முழு வேகத்தில் அந்த லாரியை நோக்கி முன்னேறினார்.

மைக்கேலின் உத்தேசம், காரில் இருந்த இருவருக்கும் புரிய, இருவருமே இருக்கையை இறுக்கி பிடித்து கொண்டு அமர்ந்தனர்.

மைக்கேல் அந்த லாரியை நோக்கி அதிவேகத்தில் முன்னேற, இவர்களை பின் தொடர்ந்து வந்த அந்த இன்னொரு காரும் அதே வேகத்தில் இவர்களை தொடர, அந்த லாரியை இடிப்பது போல சென்ற மைக்கேல், அதை இடிக்க இருந்த கடைசி நொடியில் அவர்களின் காரை வலது பக்கம் ஒடித்து திருப்பினார்.

இவரின் செய்கையை எதிர்பாராத பின்னாடி வந்த காரின் ஓட்டுநர், நடக்க இருப்பதை உணர்ந்து சுதாரிக்க எடுத்து கொண்ட சொற்ப நேரத்தில், அந்த கார் அதிகவேத்தில் நின்றிருந்த லாரியின் மீது நேருக்கு நேராக மோதி இருந்தது.

சிறிது தூரம் வந்த பின்பு,பின்னாடி திரும்பி பார்த்த மைக்கேல், எந்த வண்டியும் தங்களை தொடரவில்லை என்று உறுதி செய்து கொண்டு, காரின் வேகத்தை குறைத்தாலும், நிறுத்தாமல், பின்னாடி அமர்ந்து இருந்த இருவரிடமும்,

“நீங்க ரெண்டு பேரும் ஓகே தானே” என்று கேட்க, இருவருமே தலையசைக்க, அதன்பின் தான் காரை சீரான வேகத்தில் இயக்க ஆரம்பித்தார்.

மைக்கேல் காரை சீரான வேகத்தில் இயக்க ஆரம்பித்ததும், தனது பட்டையை எடுத்துவிட்டு, உமையாளை நெருங்கினான் கிருஷ்ணா.

அவனின் கண்கள், உமையாளின் தலை முதல் கால வரை, அடி ஏதும் பட்டுவிட்டதா என பதட்டத்துடன் ஆராய, கைகளோ ஆதுரமாக அவளின் தலையை தடவி விட்டவாறே, அவளிடம் பதட்டத்தில் முக்கி எடுத்த குரலில்,

“உமையாள் நீ ஓகே தானே, அடி ஏதும் படல இல்லை” என்று அவளிடம் வாய் வார்த்தையாகவும் விசாரிக்க, அவனின் பதட்டம் புரிந்து உமையாளும்,

“அடி எல்லாம் எதுவும் படல கிருஷ்ணா, ஐ அம் ஓகே” என்று சொல்ல, அவளின் தலையில் உள்ளங்கையால் ஒரு அழுத்தம் கொடுத்துவிட்டு கையை எடுத்தவன், அவளிடம் இருந்து விலகிய அடுத்த நிமிடம் காவல்துறையில் இருக்கும் தன் நண்பனுக்கு அழைத்து இருந்தான்.

தன் நண்பனிடம் நடந்ததை விவரித்த கிருஷ்ணா, அந்த இரண்டு கார்களும் விபத்துக்குள்ளாகி இருக்கும் இடத்தையும் குறிப்பிட்டு சொல்லி, இது யாரின் வேலை என்று விசாரிக்க சொல்லி அழைப்பு துண்டித்தான்.

காரில் முதலில் இருந்தே அமைதி இருந்தாலும், இந்த அமைதி சற்று முன்பு நடந்த நிகழ்வில் தாக்கமாக இருக்க, அது ஒருவருக்குமே உகந்தாக இல்லை.

 

[the_ad id=”6605″]

 

 

மைக்கேல் காரை வசீகரனின் வீட்டில் நிறுத்த, இறங்கிய உமையாளுடன் தானும் இறங்கிய கிருஷ்ணா அவளிடம்,

“கரன் வேற வீட்டுல இல்ல, நீ இங்க தனியா இருக்க வேண்டாம், எதாவது எடுக்கணும்னா எடுத்துக்கோ, நைட் அங்க நம்ப வீட்டுல ஸ்டே பண்ணு” என்று கொஞ்சம் காராகவே சொன்னான்.

“அதான் மைக்கேல் இருக்காரே” என்று சொல்ல வார்த்தை வாய் வரைக்கும் வந்தாலும், சற்று முன்பு நடந்த நிகழ்வுக்கு பிறகு எப்படியும் கிருஷ்ணா சம்மதிக்க மாட்டான் என்பது புரிய, உமையாள், அவனுக்கு சம்மதமாக தலையசைத்து விட்டு உள்ளே சென்றாள்.

கிருஷ்ணா சொல்லிய “நம்ப வீடு” என்ற பதத்தையும் உமையாள் கவனிக்கவில்லை.

கிருஷ்ணா அவளுக்காக வெளியே காத்திருக்க, அதிக நேரம் எடுக்காத உமையாள், இரவு உடைக்கு மாறி, தனது கைபேசியை மட்டும் எடுத்து கொண்டு வந்தாள்.

இருவரும் மீண்டும் வர, மைக்கேல் குழப்பத்துடன் அவர்களை பார்க்க, காரில் ஏறிய கிருஷ்ணா அவரிடம்,

“எங்க வீட்டுக்கு போங்க” என்று சொல்ல, அவர் உமையாளை பார்க்க, அவள் சம்மதமாக கண் அசைத்ததும் தான் காரை எடுத்தார்.

கிருஷ்ணா இதை கவனித்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அங்கு சென்றதும் மைக்கேலை உமையாள் கிளம்ப சொல்ல, அவரோ தயங்கத்துடன் தான் அவளை பார்த்தார்.

பின்பு உமையாளின் கண்டிப்பான பார்வையில் தான், அவர் தான் தங்கி இருந்த வசீகரனின் வீட்டிற்கு கிளம்பினார்.

 

[the_ad id=”6605″]

 

உமையாளை உள்ளே அழைத்து சென்ற கிருஷ்ணா, மாடியில் தன் அறைக்கு பக்கத்து அறையை அவளுக்கென கொடுத்தவன், உள்ளே சென்று அவளுக்கு தேவையானது எல்லாமே இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொண்டு, ஏதாவது தேவை என்றால் தயங்காமல் தன்னை அழைக்குமாறும் சொல்லிவிட்டு தான் சென்றான்.

அவன் சென்ற பிறகு கட்டிலில் விழுந்த உமையாளின் எண்ணங்கள் எல்லா திசைகளிலும் பயணிக்க, உறங்க முயன்று கொண்டு இருந்தாள் அவள்.

அவளின் பக்கத்து அறையில் இருந்த கிருஷ்ணாவோ, உறங்கும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல், “இன்று நடந்தது யாரின் வேலையாக இருக்கும்” என்று தீவிரமாக குறுக்கும் நெடுக்கும் நடந்து யோசித்து கொண்டு இருந்தான்.

ஏற்கனவே இருக்கும் பல பிரச்சனைகள் போதாதென்று புது பிரச்சனை வேறு.

காதல் கொள்வோம்………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!