Skip to content
Post Views: 14,279
அன்றைய நாளில் மேகலையால் அவமானப்பட்ட கோபம் இருந்த போதும், இப்படி ஏமாற்றுக்காரனின் குழந்தையை சுமந்து வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ளாமல், வேறொரு வாழ்வை தேடுவதில் தவறில்லை என்று தங்கையின் எதிர்காலத்தை நினைத்துதான் வேலவன் குழந்தையை அழிக்கச் சொன்னது.
தான் சொன்ன வார்த்தையை இத்தனை வருடம் தங்கை மகள் சுமந்திருப்பாளென்று சத்தியமாய் நினைக்கவில்லை. மேலும் உதிர்த்த வார்த்தைகள் எத்தனை காயப்படுத்தியிருக்கும் என்று நினைத்ததும் வேலவன் கண்கள் கலங்கிவிட, விஷாலினிக்கும் மனம் வலித்தது.
“ம்மா…” என்றாள் பலவீனமான குரலில்.
மகன்மேலும் மருமகள் மேலும் பாட்டிம்மாவிற்கு எத்தனை பாசம் என்று விஷாலினி அறிவாள். பாட்டியின் துக்கம் மறையும் முன்னே அவர்களின் புதல்வனை காயப்படுத்துகிறோம் என்று மனம் தவிக்கவே, சற்று நேரத்திற்கு முன்பு கோபத்தில் வேகமாய் தொடுத்ததை போல தற்போது தொடுக்க முடியவில்லை. பூவை எடுத்து நாரோடு சேர்க்க கை இடறியது.
Advertisement
பூக்களை விடுத்து எழுந்தவள் தனியறைக்குள் புகுந்துகொண்டாள். மேகலை மகளிடம் செல்ல, சாந்தியும் அறைக்கு வெளியே நின்றார். “ம்மா… பாட்டிம்மா மகனை காயப்படுத்த நான் நினைக்கலம்மா. அவர் நம்ம மாமா குடும்பத்தை கேவலமா நினைக்கிறார். அதான் கோபம் வந்துடுச்சு” என்றாள் கலக்கத்தோடு.
தன் கணவனை பாட்டிம்மா மகன் என்றும், குடித்தனம் இருப்பவர்களை நம்ம மாமா என்று சொன்னதிலேயே தனது குடும்பத்திற்கும் தங்கை குடும்பத்திற்கும் என்ன சம்மந்தம் என்று புரிந்தது சாந்திக்கும் வேலவனிற்கும்.
தவறு செய்த தங்கையை தள்ளி வைத்த ரோசக்காரன் என்ற பெருமையுண்டு உறவினரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும். தங்கையின் வாழ்வாதரத்திற்கு தனது தாத்தா ஏற்பாடு செய்திருக்கிறார். துணைக்கு தன் அன்னையை அனுப்பியுள்ளோம் என்று இத்தனை வருடங்களாக குற்றவுணர்வில்லாமல் வாழ்ந்தார் வேலவன்.
Advertisement
ஆனால் விஷாலினியை பொறுத்தவரை அவளை கருவிலேயே கொல்ல நினைத்த பாவி நான். மேலும், தாய்மாமன் முறையை நான் செய்ய தவறியபோது அதை கோபாலன் செய்திருக்கிறார். அனைத்தும் உண்மைதானே…
Advertisement
ராகப்ரியா பெரிய பொண்ணானபோது மேகலைக்கு சொல்லவேண்டும் என்று அன்னை வற்புறுத்தினார். நான் ஒழுக்கமானவன் என்ற இறுமாப்பும், தன் பேச்சை கேளாமல் குழந்தையை பெற்றெடுத்து தனித்து வாழும் தங்கை மேலிருந்த கோபமும் மேகலையோடு நெருங்க விடாமல் செய்தது.
விஷாலினி பெரிய பெண்ணனான போது மேகலை சொல்வாள் என்று எதிர்பார்த்தனர் வேலவனும் மேகலையின் தந்தையும். மேகலையின் அன்னையும் கூட ஒரு வார்த்தை உன் அண்ணனுக்கு சொல்லு என்றார்.
தான் வேண்டாம் என்றுதானே அண்ணன் மகள் பெரிய பெண்ணானதை தன்னிடம் சொல்லவில்லை? அது மட்டுமா? இத்தனை வருடங்களில் என் மகளை யாரேனும் வந்து பார்த்திருப்பார்களா? எனில் இன்றுவரை தன்னையும் மகளையும் அவமானமாகத்தான் நினைக்கிறார்கள். அதனால் அவர்களும் எனக்கு வேண்டாம் என்று அன்னையிடம் சொல்லிவிட்டார் மேகலை.
Advertisement
பழைய எண்ணங்கள் வலம்வர அனைவரும் பத்து நிமிடம்வரை அமைதியாக இருந்தனர் கணத்த மனதோடு. அவ்வளவு பூக்கள் குவிந்திருக்க, சாந்தி அதனை தொடுக்க அமர்ந்தார்.
அறையிலிருந்து வெளியே வந்த விஷாலினி, “உங்களுக்கு எதுக்குங்க சிரமம்? நான் கட்டிடுவேன்” என்று பூக்களை தொடுக்க ஆரம்பித்தாள்.
“யார் எப்படியோ… மேகலையை எப்போவும் நான் வெறுத்ததில்ல. மேகலையே இனி என்னோட பேசவேண்டாம்னு சொன்னதாலதான் பேச்சை நிறுத்தினேன். இது என் நாத்தனார் வீடு. என் விருப்பப்படி இருப்பேன்” என்று வேறொரு நாரை எடுத்து பூத்தொடுக்க ஆரம்பித்தார் முறைப்போடு.
“உங்களை நான் குறை சொல்லலைங்க, உங்களைனு இல்ல… யாரையுமே நான் குறை சொல்ல விரும்பல. என்னை உங்களுக்குள்ள இழுக்கறதுதான் கஷ்டமாயிருக்கு” என்றாள்.
“இந்த ங்க போட்டு பேசாத. அத்தை சொல்லு” என்று உரிமையாய் அதட்ட, தொண்டை வரை வந்த வார்த்தைகளை முழுங்கி விரக்தியாய் ஒரு பார்வை பார்த்து பூ தொடுக்கும் வேலையில் கவனமானாள் விஷாலினி.
விஷாலினியின் அந்த பார்வை ஊசியாய் குத்தியது சாந்திக்கு. வாரம் இரண்டு அல்லது மூன்று முறையேனும் பாட்டியோடு பேச அழைப்பு விடுக்கும் சாந்தி, ஒருமுறையேனும் விஷாலினியை பார்க்கவோ, பேசவோ விழைந்ததில்லை என்று அனைவருமே அறிவார்கள்.
இத்தனை வருடங்களில் இல்லாமல் இன்று தன் மகன் விரும்புகிறான் என்ற காரணத்திற்காக இங்கு வந்ததோடல்லாமல், தன்னை அத்தை என்றழைக்க சொல்கிறோம். அதை தாளமுடியாமலும், பழையதை பேசி மனக்கஷ்டம் வேண்டாம் என்பதையும் ஒற்றைப் பார்வையில் உணர்த்துவது போல் தோன்றியது சாந்திக்கு.
நல்ல வசதியான குடும்பம், யாரிடமும் தேவையின்றி பேசாமல், கம்பெனியிலும் கண்ணியத்தோடு பழகும் கிருஷ்ணனுக்கு பெண் கொடுக்க போட்டி போடுகிறார்கள் சாந்தி வழி உறவினரும், உள்ளூர் வாசிகளும்.
ஆனால் தன் மகன் ஆசைப்படுவது விஷாலினியை மட்டுமே. ஒற்றை மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத வருத்தத்தில் தங்கை மகளையே பார்த்திருந்தார் வேலவன்.
நாம் யார் என்பதை விட, யார் யார் பார்வையில் நாம் யாராகிறோம் என்பதுதான் முக்கியம் என்றுணர்ந்த வேலவன் மகனைப் பார்த்தார் இயலாமையோடு.
கிருஷ்ணனும் விஷாலினியைத்தான் பார்த்திருந்தான். வழக்கமாய் வீட்டிலிருக்கும்போது உடுத்திக்கொள்ளும் இரவு உடையில்தான் இருந்தாள். முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லை. விஷாலினி தனக்கு இல்லை என்று தெளிவாக புரிந்த போதும் கிருஷ்ணனை கட்டிப்போட்டது அவளின் எளிமையான தோற்றம்.
தாய் வீட்டின் பெருமையை அத்தை சொல்லவில்லை என்றாலும் தன் வீட்டிற்கு வந்தபோது நிச்சயம் அறிந்திருப்பாள். தனது வசதி, ரத்தபாசம், என்று ஏதும் ஈர்க்கவில்லை விஷாலினியை.
தன் அன்னை அத்தை என்று சொன்னதற்கு அவள் பார்த்த பார்வை சொன்னது அவளின் மனதை. ம்… தாம் இங்கு வந்திருப்பதை அவளின் அன்னைக்காக சகிக்கவில்லை. தனது பாட்டி ஆன்மாவிற்காக சகிக்கிறாள்.
இவள் மீதும் தப்பில்லை. பாட்டி இவள் வீட்டில் இருக்கும்வரை தொடர்பில்லாமல் இருந்திருந்தாலும், பாட்டி நம் வீட்டிற்கு வந்த பின்னேயாவது நம் குடும்பத்தார் பேசியிருக்கலாம். பாட்டியோடு வாரம் இரண்டு மூன்று முறையாவது பேசுவாள் என்றறிவான். அம்மாதான் அழைப்பு விடுத்து கொடுப்பார். ஆனால் பாட்டியைத் தவிர்த்து யாரும் பேசமாட்டோம்.
உறவுகளின் நிராகரிப்பின் வலியை அதை உணர்ந்தவர்களுக்குத்தான் புரியும். இவள் தனக்குள் வந்த பின்னே இவளின் நிராகரிப்பு கொடுக்கும் வலியை பதினைந்து நாள்களுக்கே தாளமுடியவில்லை கிருஷ்ணனால்.
பிறந்து வளர்ந்த வீட்டில் அவர்களுக்கான அங்கீகாரம் மொத்தமாய் துறந்து இருபது வருடங்களாக வாழும் அத்தையின் வலி மிகப்பெரியது என்பதை விஷ்ணு புரிய வைத்திருந்தான்தான். ஆனால் இங்கு வந்த பின்னேதான் புரிந்தது தனது அத்தை வாழ்வது வலி நிறைந்த வாழ்க்கை மட்டுமல்ல, மிகக் கொடுமையான வாழ்க்கை என்று.
விஷாலினி பிறந்தநாளுக்கு இதுவரை கேக் வெட்டியதில்லை. உறவினர் என்று யார் வீட்டிற்கும் சென்றதில்லை. பண்டிகை நாள்களில் கூட வழக்கம்போல தனிமையான வாழ்க்கைதான்.
அனைத்திற்கும் மேலாக விஷாலினியின் தந்தை, தந்தையின் தங்கை தந்தை மகனின் வரவும், அதனால் விஷாலினிக்கும், மேகலைக்கும் உண்டான மனஉளைச்சலையும் சொல்லி, நான் அருகில் இருந்தபோதும் என் உதவியை கூட நாடாமல் தனியாளாய் சமாளித்தாள் விஷாலினி.
கட்டினவன் ஏமாற்று பேர்வழி, தந்தை வீட்டின் உறவும் இல்லை என்ற நிலையில் இத்தனை வருடம் கடந்துவிட்டார்கள். துன்பகாலங்களில் அரவணைக்காமல் தற்போது உறவு வேண்டும் என்பது நியாயமானதா? என்று கிருஷ்ணனிடம் அனைத்தையும் பொறுமையாய் விளக்கியிருந்தான் விஷ்ணுவர்தன்.
விஷ்ணு இத்தனை எடுத்துரைத்தபோதும், அத்தையை விலக்கி வைத்தது பெரும் தவறென்று உணர்ந்த போதும் விஷாலினியை விட மனமில்லாமல் போகவே, தனது மன எண்ணத்தை விஷ்ணுவிடம் மறைத்து, “இத்தனை வருடம் அத்தையை தனித்து விட்டது பெரும் தப்புதான். விஷாலினிக்கு என்னை பிடிக்கலனா பரவாயில்லை. என் அத்தையோடான உறவையாவது தக்க வைத்துக்கொள்கிறேன் என்றிருந்தான் கிருஷ்ணன்.
இதற்கு என்ன சொல்வதென்று… ஆன்ட்டி விரும்பினால் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் விஷாலினியை தொல்லை செய்யக்கூடாது என்று எச்சரித்திருந்தான் விஷ்ணு.
(கிருஷ்ணன் விரைவில் மேகலையை பார்க்க செல்வான் என்று அறிந்திருந்தான் விஷ்ணு. ஆனால் விஷாலினியே சமாளிப்பாள் என்ற நம்பிக்கையோடு, நீண்ட நெடிய வருடங்கள் கழித்து கிடைக்கும் பிறந்த வீட்டின் உறவை ஏற்கலாமா வேண்டாமா என்பதை மேகலைதான் முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்ததால் இவ்விசயத்தில் தானும் விலகியிருந்து, தனது பெற்றோரையும் விலகியிருக்க சொல்லியிருந்தான் விஷ்ணு.)
நானாவது பொறுமையா சொல்றேன். விஷாலினி சாகுறமாதிரி கேள்வி கேட்பாள் என்று விஷ்ணு சொன்னது நினைவிற்கு வந்தது கிருஷ்ணனிற்கு.
அனைவரும் அமைதியாக இருக்கவே, இதற்கு மேலும் ஏதும் கொடுக்காமல் இருக்க முடியாதென்று சமையலறை சென்றார் மேகலை.
டீ வைத்து எடுத்து வர, சாந்தி “வெறும் டீ மட்டும்தானா? எனக்கு பசிக்குது” என்றார்.
டீயை வைத்து அனைவருக்கும் கொடுத்து, “என் சமையல் உங்க வீட்டு சமையல் அளவுக்கு இருக்காது. பாத்திரமும் பிரபா அண்ணி வீட்டுல வாங்கித்தான் செய்தாகனும். உங்களுக்கு பரவால்லைனா சமைக்கிறேன்” என்றார் சிறு தயக்கத்தோடு.
சாந்தி, “ஆறு பேருக்கு சமைக்கக்கூட பாத்திரம் இல்லையா?” என்று அதிர்வாய் கேட்க, “இவ்வளோ சங்கடப்படாதிங்க அண்ணி, அவ்வளோலாம் நான் கஷ்டப்படுல, தேவைக்கு அதிகமாவே கையிருப்பு இருக்கு. நிறைய பேருக்கு சமைக்கும் சூழல் இதுவரை வந்ததில்ல. அதனால பாத்திரம் வாங்க யோசிச்சதில்ல” என்றார் இயல்பாக.
உங்க வீட்டு சமையல் என்று மேகலை சொன்னதில் வேலவன் மனம் வலிக்கவே வேதனையோடு பார்த்தார் தங்கையை. தனது வீட்டில் சமையல் சமையலர்கள் செய்வார்கள். என்ன சமைக்க வேண்டும் என்று சாந்தி சொல்வார். சாந்தியின் மேற்பார்வையில் சமைப்பார்கள்.
தனது வீட்டில் இருக்கும்வரை மேகலை சமைத்ததில்லை. பிடிக்காத திருமணம் என்பதாலோ என்னவோ இப்படி நுணுக்கமான விசயங்களை யோசிக்கவில்லை வேலவன். வேலவன் மனதிலிருந்ததெல்லாம் வருமானத்திற்கு பிரச்சனையில்லை. வீட்டில் குடியிருப்போர் நல்ல அனுசரனையாக இருக்கிறார்கள். வேறு ஏதும் பிரச்சனையில்லை என்பது மட்டுமே.
அத்தனை வேகமாய் பூக்களை தொடுத்துக்கொண்டிருந்தாள் விஷாலினி. பேத்தியையே பார்த்திருந்த தனது தாத்தாவை பார்த்திருந்தான் கிருஷ்ணன். உங்க வீட்டு சமையல் அளவிற்கு இருக்காது என்று அத்தை சொன்னதும் தாத்தா முகம் வேதனையை காட்டியது.
அவர் அருகே சென்று, “இருபது வருசமா பிறந்த வீட்டைத் துறந்து இருந்தவங்களுக்கு இப்படி வார்த்தை வரலைனாதான் தாத்தா அதிசயம். ஜெகதீசன் பொண்ணுனு தள்ளி வச்ச உங்களுக்கு, அது தன்னோட மக வயித்து பேத்தின்றது எப்படி தாத்தா இல்லாம போச்சு?
அத்தனை வசதியோட வாழ்ந்தவங்க இருபது வருசமா பொண்ணுக்காக இப்படி வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்காங்க. இந்த வாழ்க்கைதானே அவங்களோட நிஜம். நாம எல்லாரும் சேர்ந்து கத்துக்கொடுத்த பாடத்தாலதான் நம்ம வீடுன்றது மாறிப்போய் உங்க வீடுனு ஆகியிருக்கு” என்றான் வருத்தத்தோடு.
என்ன முயன்றும் விஷாலினியின் கண்கள் கண்ணீரை வெளியனுப்ப, அதனை கண்டவன் மனம் மேலும் வேதனையடைந்தது. “அத்தை நம்ம குடும்பத்துக்கு அவமானம் தேடித் தந்துட்டாங்க, அந்த கோபத்துல அத்தையை ஒதிக்கி வச்சதால அவங்களும் நம்மளை ஒதுக்கி வச்சதா இத்தனை வருசமா நானும் தப்பா நினைச்சிட்டிருந்துட்டேன்.
இங்க வந்த பின்னதான் விஷாலினி பக்க நியாயமும், அத்தையோட வாழ்க்கை முறையும் புரிஞ்சது. இரண்டு பேரையும் ஒதுக்கி வச்சி தீர்க்க முடியாத பாவத்தை செஞ்சிட்டோம். இனி என்ன செய்தாலும் அது மாறாது.
கருவை அழிச்சிடுனு சொன்னவங்க வீட்டுல விஷாலினியால உறவு வச்சிக்க முடியாதுதான். ப்ரியா என்ன தப்பு செய்தாலும் இப்படிலாம் அவளை விட்டுருக்கமாட்டேன்.
பிறந்த வீடுனு ஒன்னு இருக்கிறதே அத்தை மனசுல இல்லாம போச்சு. இவங்க வாழ்க்கை முறையை என்னால சகிக்க முடியல. நம்மகிட்ட கோடி கணக்குல பணமிருந்தும் ஏதும் செய்ய முடியாது. இவங்க அதை ஏத்துக்கமாட்டாங்க.
ரொம்ப குற்றவுணர்வா இருக்கு தாத்தா. என்னால இங்க இருக்க முடியல, நான் கிளம்பறேன். இவங்களுக்கு ரொம்ப நேரம் கஷ்டம் கொடுக்காம நீங்களும் சீக்கிரம் கிளம்பிடுங்க” என்று கணத்த மனதோடு சொல்லி வெளியேறினான் கிருஷ்ணன்.
கிருஷ்ணன் பின்னோடு வந்த மேகலை, “நீ நினைக்குற அளவுக்கு எனக்கு இங்க கஷ்டமில்ல கிருஷ்ணா. மாசம் இருபதாயிரம் வாடகை பணம் வருது. பூ கட்டிக்கொடுக்குற காசுலயே எங்க செலவு அடங்கிடும். விஷாலினிக்கு மெரிட்ல சீட் கிடைச்சதால அவ படிப்புக்கும் பெருசா செலவாகல.
கோபத்துல தனியா விட்டுட்டாலும் வருமானத்துக்கு ஏற்பாடு செய்திருக்காங்கதான? இந்த வீடு இல்லைனா எனக்கு பாதுகாப்பே இருந்திருக்காது. எனக்கு யார் மேலயும் வருத்தமில்ல. நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை சரியில்லாம போனதுக்கு அப்பா, அண்ணன் என்ன செய்வாங்க?
நம்ம குடும்பத்துல யாரும் காதல் கல்யாணம் செய்துக்கிட்டது கிடையாது. அறிவுகெட்டுப்போய் நான் அந்த தப்பை செய்துட்டேன். அந்தாளோட பொண்டாட்டி அன்னைக்கு ரொம்ப பேசிடுச்சு. என்னால அப்பா அண்ணனுக்கு ரொம்ப அசிங்கமாகிடுச்சு. அப்போ கோபம் இருக்கத்தான செய்யும்? எங்களை நினைச்சு நீ வருத்திக்காத. உனக்கு விஷாலினியை விட அழகான பொண்ணு கிடைப்பா. சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோ” என்றார் தவிப்பாக.
தந்தையும், தாத்தாவும் இத்தனை ஒதுக்கிய போதும், மொத்த பிழையையும் தன்மேல் சுமத்திக்கொண்டு, தனக்காக பார்க்கும் அத்தையின் குணம் கிருஷ்ணனை மேலும் கலங்க வைத்தது. “பண்ணிக்கிறேன்த்தை. உங்க பொண்ணு கிடைக்கலன்றதுக்காக தேவதாஸ் மாதிரிலாம் ஆகமாட்டேன்” என்று தனது மனவலியை மறைத்து, கிண்டலாய் சொல்லி கிளம்பினான்.
*** *** ***
“என் மகனுக்குத்தான் விஷாலினு ஆனபின்ன, இனி கிருஷ்ணனையும், மேகலையோட அப்பா குடும்பத்தையும் அப்படி நினைப்போட பார்க்க விடக்கூடாது. எனக்கு அது சுத்தமா பிடிக்கல. உடனே கல்யாணத்தை முடிச்சாகனும்” என்று மகனிடம் பிடிவாதம் செய்துகொண்டிருந்தார் கோபாலன்.
error: Content is protected !!