Skip to content
Post Views: 8,605
அவளின் ஆதியானவன் – 3
அத்தியாயம் 3:
சாப்பிட்டுவிட்டு சிவகாமியும் ஈஸ்வரமூர்த்தியும் முற்றத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
“ஏன் சிவகாமி, நம்ம மாரிமுத்து மச்சான் இருக்காருல்லோ. அவரு மக மல்லிகாவ நம்ம ஆதிக்கு குடுக்க பிரியப்படறராராட்டமிருக்கு. நம்ம பழனி அய்யன்கிட்ட சொல்லி கேக்க சொல்லிருக்காரு. நீ என்ன சொல்ற”
Advertisement
மாரிமுத்து, ஈஸ்வரமூர்த்தியின் ஒன்றுவிட்ட தங்கை அன்னபூரணியின் கணவர். அவர்களின் ஒரே மகள்தான் மல்லிகா. பன்னிரண்டாவது வரைதான் படிப்பு. அதை தாண்டுவதற்குள் இருபது வயதை கடந்துவிட்டாள். இப்பொழுது இருபத்து நான்கு வயதிருக்கும்.
“மல்லிகா மாநிறமா இருந்தாலும் கண்ணுக்கு நல்ல லட்சணமாத்தேன் இருக்கும்ங் . ஆனா அன்னம் மதினி மாதிரியே கொஞ்சம் பட் பட்டுன்னு பேசி போடும். ஏனுங். நம்ம ஆதி மறுக்கா கல்யாணத்துக்கு சம்மதிப்பானுங்ளா”
“நீ என்ன சிவகாமி இப்படி கேட்டு போட்ட. அவங்க சம்மதிக்காட்டி அப்படியே விட்டு போட முடியுமா. நம்மதேன் பேசி புரிய வைக்கோணும்”
Advertisement
“புள்ள முகத்துல ஒளியே இல்லீங். ஏதோ கடமைக்கு வாழறத்தோட்டம் இருக்கானுங்.”
Advertisement
“ஒரு கல்யாணத்த முடிச்சி போட்டோம்னா அதெல்லாம் சரியாயிடுவார். நீ ஒன்னும் வெசனப்படாத சிவகாமி. விடியால அவர்ட்ட பேசிபோடறேன்”
“எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதானுங். எப்படி இருந்த வீடு. இந்த கௌரி புள்ளையும் , அது மாமன் குடும்பம் வந்ததோட்டு இங்க நெம்ப வர மாட்டேங்குது” என்று புலம்பிக்கொண்டே படுக்க சென்றார்.
மறுநாள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்த ஆதி மாடுகளை சென்று பார்த்து, அவற்றுடன் சிறிது நேரம் செலவிட்டவன், விடிந்ததும் வேட்டிக்கு மேல் ஒரு டீசர்ட் அணிந்து கொண்டு வயலுக்கு கிளம்பிவிட்டான். அவனின் உடற்பயிற்சியே அவன் வயல்களை சுற்றி வருவதுதான்.
Advertisement
வயலில் சுற்றி அவன் வாக்கிங்கை முடித்து விட்டு, எந்தந்த வயல்களில் என்னென்ன வேலைகள் இருக்கிறது என்று மனதுக்குள் குறித்து கொண்டான்.
அதற்குள் அவனின் ஒன்றுவிட்ட அத்தையின் மகன் வசந்தன் வயலுக்கு வந்து விட்டான். அதாவது அன்னபூரணியின் அக்கா வள்ளியின் மகன். அவரின் கணவர், வசந்தனுக்கு இரண்டு வயது இருக்கும்போது ஒரு மழைநாளில் ரோட்டில் அறுந்து கிடந்த மின்சார வயர் தாக்கி இறந்து விட்டார்.
அதற்கு பிறகு தாய், தகப்பனின் ஆதரவில் மகனை வளர்த்தார் வள்ளி. ஈஸ்வர மூர்த்தியும் சிவகாமியும் வள்ளியிடம் மிகவும் அனுசரணையாக இருப்பார்கள்.
அன்னபூரணிக்கு நேர் எதிர் வள்ளி. மிகவும் சாந்தமானவர்.
வசந்தன் பதினைந்து வயதில் இருந்து ஆதியுடன் வயலில் இறங்கி விட்டான். அக்ரியில் மாஸ்டர்ஸ் பண்ணியிருக்கிறான். இருபத்து ஏழு வயதாகிறது. ஆதிக்கும் அவனுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம் என்பதால் நண்பர்களாக பழகுவார்கள்.
ஆதியின் மனதிற்கு நெருங்கிய நண்பனும் கூட. ஆதி எவ்வளவோ சொல்லியும் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யாமல், தன் சொந்த வயலில் விவசாயம் பார்த்து கொண்டே ஆதிக்கும் உதவியாக இருக்கிறான்.
இப்பொழுது வயலுக்கு வந்த வசந்தனிடம் “வா வசந்த். இன்னைக்கு களையெடுக்க ஆளுங்களுக்கு சொல்லிட்டியா”
“சொல்லிட்டேன் மச்சான் . நா இங்க பாத்துக்கிறேன். நீ சக்கரை ஆலையில கணக்கு முடிக்கோணும்ன்னு சொன்னீயல்லோ . அங்க பாரு”
“சரிடா. அத்தை எப்படி இருக்காங்க”
“அம்மா நல்லாருக்கு மச்சான் . அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்”
“என்ன மச்சான்”
“என்ற சின்னம்மா மவ மல்லிகாவ உனக்கு கட்டி வைக்க நினைக்கிறாங்களாட்டருக்கு. என் காதுல விழுந்தது. அதான் உன்ரகிட்ட சொல்லி போட்டேன்”
அதற்கு ஒன்றும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பிறகு
“மச்சான் கௌரியோட மாமன் புள்ள”என்று ஆதி சொல்ல ஆரம்பிக்கும் போதே வசந்த் அவனின் கையை பிடித்து கொண்டு
“சூப்பர் மச்சான். நானே சொல்லோணும்ன்னு நினைச்சேன். அந்த சந்தியா புள்ள செம அழகா இருக்குமாட்ருக்கு . நம்ம ஊரு ஆகாவளி பயலுக எல்லாம் இப்ப அது பின்னாடித்தேன் நோட்டம் வுட்டுட்டு திரியிறானுவ. இந்த அராத்து மல்லிகா புள்ளைய கட்றத்துக்கு நீ அந்த சந்தியா புள்ளைய கட்டி போடலாம் மச்சான்”
அவனை ஒரு மார்க்கமாக பார்த்த ஆதி
“அந்த சந்தியா கூடத்தான் நம்ம கௌரி ஸ்கூட்டியில் காலேஜ் போகுது. அந்த புள்ள வேற கொஞ்சம் ஆர்வ கோளாறு போல. அவங்க ரெண்டு பேரு மேலயும் ஒரு கவனம் வச்சுக்க” என்று சொல்லிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் ஆதி.
ம்கூம் நா கூட இவன் திருந்தி போட்டான்னு ஒரு நிமிசம் தப்பு கணக்கு போட்டு போட்டேன். ம்….இவனுக்கு திரும்ப கல்யாணம் ஆகி , அதுக்கு பிறவு நமக்கு பொண்ணு தேடி கல்யாணம் பண்றதுக்குள்ள…என்று நினைத்து கொண்டே ஒரு பெருமூச்சை விட்டான் வசந்த்.
வீட்டுக்கு சென்று புல்லட்டிலிருந்து இறங்கி உள்ளே சென்றான் ஆதி. தாழ்வாரத்தில் ஈஸி சேரில் அமர்ந்திருந்த ஈஸ்வரன் “ஐயா ஆதி” என்று அழைத்தார்.
புல்லட் சத்தம் கேட்டு அவசரமாக வெளியில் வந்த சிவகாமியும் அங்கு வந்து நின்றார்.
ஆதி அவரிடம் சென்று “என்னங்ப்பா” என்றான்.
“நம்ம மாரிமுத்து மச்சான்” என்று அவர் ஆரம்பித்ததுமே அவரை கை காட்டி நிறுத்திய ஆதி “குறுக்க பேசறதுக்கு மன்னிச்சிங்ப்பா எனக்கு தெரியும் . வசந்த் சொன்னான். இந்த பேச்சே வேண்டாம்ங்ப்பா”
“ஏஞ் சாமி”
“வேண்டாங்ப்பா. ஏற்கனவே பண்ண கல்யாணமே போதுங்ப்பா. இன்னொரு டைம் அதே தப்ப பண்ண முடியாதுங்ப்பா”
“ஒருக்கா தப்பு நடந்து போட்டுங்கிறதுக்காக கல்யாணமே வேண்டாம்னா எப்படி சாமி”
“என்ன விட்ருங்ப்பா. நா இப்படியே இருந்திட்றேன்” என்று விட்டு உள்ளே சென்று விட்டான் ஆதி.
வருத்தமாக கணவரை பார்த்து கொண்டிருந்த சிவகாமியிடம் “அவரை கொஞ்ச நாள் விட்டுத்தேன் பிடிக்கோணும் சிவகாமி” என்றார் ஈஸ்வர மூர்த்தி.
அன்று வழக்கம் போல் கௌரியும் சந்தியாவும் கல்லூரி கிளம்பி வந்து கொண்டிருந்தனர். சந்தியா திடீரென்று வண்டியை நிறுத்தி விட்டு எதிரே நடக்கும் காட்சியை பிரமிப்புடன் பார்த்தாள்.
என்னவென்றால் இவளுக்கு முன்னால் புல்லட்டில் சென்று கொண்டிருந்த ஆதி திடீரென்று வண்டியை நிறுத்தியவன், நிறுத்திய வேகத்தில் பக்கத்தில் நின்றிருந்தவனை ஓங்கி ஒரு உதை விட்டான்.
புல்லட்டில் இருந்து இறங்கி காலை தூக்கி வேட்டியை மடித்து கட்டிவிட்டு, கையிலிருந்த வெள்ளி காப்பை மேலே ஏற்றி விட்டவன், எதிரில் உதை வாங்கி தடுமாறி எழுந்து கை கட்டி நின்றவனை, மாற்றி மாற்றி கன்னத்தில் அறைந்தான்.
இத்தனைக்கும் அடி வாங்கியவனும் நல்ல வாட்ட சாட்டமாக இருந்தான். திருப்பி அடிக்காமல் அடியை தலை குனிந்து வாங்கி கொண்டிருந்தான். அவன் மனைவி பக்கத்தில் கை குழந்தையை இடுப்பில் வைத்துகொண்டு அழுது கொண்டிருந்தாள்.
குழந்தை சத்தமாக அழ ஆரம்பித்ததும்தான் கோபம் குறைந்து சுற்று புறம் உணர்ந்து அடியை நிறுத்தினான் ஆதி. பிறகு அவன் மனைவியிடம் எதோ பேசியவன் புல்லட்டில் ஏறி கிளம்பி விட்டான்.
கௌரி பக்கத்தில் நின்றிருந்த கிழவியிடம் “ஏனாத்தா செந்திலு என்ன பண்ணி போட்டு அண்ணன்கிட்ட அடி வாங்கினான்”
“அத ஒண்ணுமில்ல அம்மிணி. அவன் வீட்டுல பாலு கறந்துகிட்ருந்த கறவ மாட்ட பிடிச்சு அடி மாட்டுக்காரன் கிட்ட வித்து போட்டு, பக்கத்தூர்ல போய் சீட்டாடிருக்கானுங்கோ. நல்ல வேளை அவன் பொண்டாட்டி உடனே போய் ஆதி தம்பிகிட்ட சொல்லிபோட்டா. தம்பி மாட்ட மீட்டு கொண்டு வந்து அவக வீட்ல கட்டி போட்டாங்கோ. அத திருப்பி கேக்கத்தேன் இப்ப வந்து அடிய வாங்கிட்டு போறான் இந்த ஆகாவளி பய” என்று சொல்லிவிட்டு நடந்து விட்டார் பாட்டி.
அதற்குள் இவர்கள் எதிரில் வந்த ஆதி புல்லட்டை நிறுத்திவிட்டு கௌரியை பார்த்து “இங்க என்ன வேடிக்கை. கிளம்புங்க” என்று அதட்டிவிட்டு சென்று விட்டான்.
“இன்னைக்கும் உங்கண்ணனுக்கு நா ஒருத்தி இருக்கது கண்ணுக்கு தெரியவேயில்ல பாரேன். அவருக்கு நிறைய கோபம் வருமா கௌ”
“ம் ரொம்ப. ஆனா அதுக்கு நியாயமான காரணம் இருக்கும்”
“எது எப்படியோப்பா. காலையிலேயே செம சீன். உங்கண்ணா பைட் சீன் மாஸா இருந்துச்சி. அந்த வேட்டிய அவர் மடிச்சு கட்ற ஸ்டைல் இருக்கே…”
“ஏண்டி. அவன் அவ்ளோ அடி வாங்கிட்டு போறான். நீ எங்கண்ணன சைட் அடிச்சுகிட்டு இருந்துருக்க” என்று பேசிக்கொண்டே சென்றார்கள்.
அன்று இரவு வழக்கம் போல் ஆதியும் அருணும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
சிவகாமி அருணிடம் “ஏன் கண்ணு. இன்னைக்கு கேப்பை ரொட்டி எடுத்துட்டு போனியல்லோ. சரத்து கண்ணு சாப்புட்டுச்சா”
“அவன் மட்டும் இல்லிங்ம்மா. அந்த சந்தியாவும் சாப்பிட்டுச்சு. கொஞ்ச நாளாவே உங்க சாப்பாட அதுவும் சேந்துதான் சாப்டுட்ருக்கு”
“அப்படியா கண்ணு. சொல்லிருந்தீன்னா சாப்பாடு கொஞ்சம் கூட குடுத்திருப்பேனல்லோ”
“அதெல்லாம் நிறையதான் இருக்கும்ங்ம்மா. இந்த சந்தியா என் சாப்பாட சாப்ட்டா, அதோட சாப்பாட வம்பு பண்ணி என்னட்ட கொடுத்து போடுங்ம்மா. அவங்க அம்மா சூப்பரா சமைக்கிறாங்க. இன்னைக்கு காளான் பிரியாணி குடுத்திருந்தாங்க. அத என்னட்ட கொடுத்துட்டு, இந்த அடைய சாப்பிடுதுங்கம்மா”
“டவுன்ல வளந்த புள்ளையல்லோ. அதான் நம்மட சாப்பாடு புடிக்குதாட்ருக்கு. நீ அந்த புள்ளையோட ஸ்நேகிதமாய்ட்டியா கண்ணு”
“அதெல்லாம் இல்லீங்ம்மா. எனக்கும் அதுக்கும் ஆகவே ஆகாது. ஆனா கிளாஸ்ல எல்லாரோடையும் பிரெண்டாயிடுச்சுங்கம்மா. செம வாய்ம்மா”
“உனக்கு மட்டும் ஏன் கண்ணு பிடிக்கல”
“இந்த சரத் பயலோட சேந்து என்ன நெம்ப கலாய்க்குதுங்ம்மா. மச்சான்னு கூப்பிடலன்னா கூட பரவால்லீங்ம்மா. அருணான்னு புள்ளைங்கள கூப்பிட்ற மாதிரி கூப்புடுதுங்ம்மா. நா எல்கேஜி பையனாட்ட பிஹேவ் பண்றேன்னு சொல்லுதுங்ம்மா “
“ஆமாஞ் சாமி. அது சொல்றதும் உண்மதேன். பால்வாடி போகும்போதும் இப்படித்தேன் வந்து எல்லா கதையும் அம்மாகிட்ட சொல்லி போடுவ. இப்பவும் அப்படித்தேன் இருக்க ராசா” என்றவரை முறைத்துவிட்டு சென்றான் அருண். ஆதியும் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றான்.
மறுநாள் வெள்ளிக்கிழமை. பக்ரீத் என்பதால் அன்று கல்லூரி விடுமுறை. காலையிலேயே சந்தியாவை அழைத்து கொண்டு தன பெரியன்னை வீட்டிற்கு வந்தாள் கௌரி.
ஈஸ்வரமூர்த்தியும், சுந்தரமூர்த்தியும் ஒரு பஞ்சாயத்துக்காக காலையிலேயே கிளம்பி பக்கத்தூருக்கு சென்றிருந்தனர். வெளியில் செல்வதற்காக கிளம்பி வாசலுக்கு வந்த அருண் இவர்களை பார்த்து விட்டு “வாங்க மஹாராணிங்ளா. எங்க வீட்டுக்கெல்லாம் வழி தெரியுமா உங்களுக்கு” என்றான்.
கௌரிதான் “டேய் இது என் வீடு. நா எப்ப வேணா வருவேன். தெரியுமில்ல” என்றாள்.
“ஏய் குள்ள வாத்து, யார அடா புடாங்ற” என்று குட்ட வந்தவனிடம் இருந்து தப்பித்து உள்ளே ஓடி விட்டாள் கௌரி. அவள் பின்னோடு சந்தியாவும் உள்ளே சென்றாள்.
உள்ளே வந்தவர்களை பார்த்த சிவகாமி “வாடா தங்கம்” என்று கௌரியை அழைத்தவர், “அடடே வா கண்ணு. வீட்ல ஐயனாத்தாள்லாம் நல்லாருக்காங்ளா” என்றார்.
“நல்லாருக்காங்க ஆன்ட்டி”
“அதென்னதது ஆண்ட்டி. அத்தைன்னு கூப்பிடு கண்ணு. சித்ரா சொன்ன மாதிரியே நெம்ப அழகா இருக்க சாமி” என்று சந்தியாவின் கன்னத்தை வழித்து முத்தமிட்டார் சிவகாமி.
சந்தியா ஸ்கை ப்ளுவில் லாங் ஸ்கர்ட்டும், வய்லட்டில் குட்டி டாப்பும் அணிந்திருந்தாள்.
சந்தியா ஒரு படி மேலே போய் அவரை கட்டி அணைத்து விடுவித்தவள் “நீங்களும் உங்க புட் மாதிரியே செம ஸ்வீட் அத்தை. எவ்ளோ அழகா இருக்கீங்க. ஆனா ஒரு டவுட் அத்தை”
“என்ன கண்ணு”
“நீங்க இவ்ளோ சிரிச்ச முகமா இருக்கீங்க. உங்களுக்கு பிறந்த ரெண்டு பசங்க மட்டும் ஏன் உர்ராங்குட்டானா இருக்காங்க அத்தை” என்றவள் கூறியதை கேட்டு வாய்விட்டு சிரித்தார் சிவகாமி.
கரெக்ட்டாக அந்த நேரத்தில் என்ட்ரி கொடுத்தான் ஆதி. பேசியதை கேட்டிருப்பானோ என்று ஒரு நிமிடம் ஜெர்க்கானாள் சந்தியா.
சிவகாமி ஆதியிடம் “தம்பி, இது உன்ர சித்தியோட அண்ணன் பொண்ணு சந்தியா” என்று அறிமுகபடுத்தி வைத்தார்.
அவளை பார்த்து வரவேற்கும் விதமாக தலையாட்டிவிட்டு “டிபன் எடுத்து வைங்ம்மா” என்று டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தான் ஆதி.
சந்தியாதான் மனதிற்குள் பெரிய ஆதித்ய சோழன்னு நினைப்பு, வாய திறந்து பேச மாட்டாரு என்று திட்டி கொண்டிருந்தாள்.
“நீங்களும் வந்து சாப்பிடுங்க கண்ணுங்ளா” என்று ஆதிக்கு டிபன் வைத்தார் சிவகாமி.
“நாங்க சாப்டுட்டோம் பெரியம்மா” என்று அங்கிருந்த தூணில் சாய்ந்து கீழே அமர்ந்தாள் கௌரி.
“அவதான் சாப்ட்டா. நா சரியா சாப்பிடவே இல்ல. என்ன டிபன் அத்தை”
“அடிப்பாவி. இப்பதானே பத்மா அத்தை சப்பாத்தி குடுத்தாங்க சாப்டுட்டு வந்தோம்”
“சும்மா இரு கௌரி தங்கோ. நீ வா கண்ணு. இன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னு திணைல பாயசம் பண்ணேன். கம்பு தோசையும் இருக்கு. நீ சாப்பிடு”
“கண்டிப்பா அத்தை. உங்க சாப்பாட்டுக்கு நா அடிமை. இந்த ஊருக்கு வந்ததுல ரெண்டு விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சுட்டு. ஒன்னு உங்க சாப்பாடு” என்று ஆதிக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் சந்தியா.
“இன்னொன்னு என்னம்ணி”
“அத இப்ப சொல்லமுடியாது அத்தை. நேரம் வரும்போது உங்ககிட்ட சொல்றேன்” என்று சந்தியா சொல்லி கொண்டிருக்கும் போதே, அவர்கள் வீட்டில் வேலை செய்யும் மாடசாமி வந்து “ஆத்தா நம்ம செவலை மாடு கன்னு போட போகுதுங்கோ” என்றதும் அவளை சாப்பிட சொல்லிவிட்டு அவசரமாக பின் கட்டுக்கு சென்றார் சிவகாமி.
கௌரியும் செல்ல போவதை பார்த்து “ஏய் நீ எங்க போற. இரு நானும் வரேன். மாடு குட்டி போட்றத நா நேர்ல பாத்ததே இல்ல”
“நீ சாப்டுட்டு பொறுமையா வா தாயி. நா போறேன்” என்று ஓடிவிட்டாள் கௌரி.
அவசர அவசரமாக சாப்பிட ஆரம்பித்தாள் சந்தியா.
அப்பொழுது “மெதுவா சாப்பிடு. கன்னு போடறதுக்கு இன்னும் நேரமெடுக்கும்” என்ற கணீர்குரல் கேட்டது.
தலையை தூக்கி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தன்னை பார்த்து கொண்டிருந்த ஆதியிடம், “இல்ல இங்க அசரீரி பேசுச்சு” என்றாள்.
“அசரீரியா இருக்காது. உராங்குட்டானா இருக்கும்” என்று அவளை முறைத்து கொண்டே கூறினான் ஆதி.
ஆஹா அப்ப நம்ம பேசுனத கேட்டுட்டானா என்று ஒரு வினாடி முழித்த சந்தியா “இங்க உராங்குட்டான் ஏதும் இல்லையே, நீங்கல்ல பேசுன மாதிரி இருந்தது” என்று கூறிவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி சாப்பிட ஆரம்பித்தாள்.
அடிப்பாவி என்னையே என் வாயால உராங்குட்டான்னு சொல்ல வச்சிட்டாளே. அருண் சொல்ற மாதிரி சரியான கேடிதான் போல என்று கடுப்பாகி மாட்டு தொழுவத்திற்கு சென்றான் ஆதி.
error: Content is protected !!