வசந்தங்கள் வாடுவதில்லை 3
இரவு ஓன்பது மணி. சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன். இன்று அஞ்சனாவும், நிஷாவும் வேலையில் சேருவதற்காக பெங்களூர் புறப்படுகின்றனர். சென்னை வந்து அங்கிருந்து, ட்ரேயின் மூலமாக பெங்களூர் செல்ல இருக்கின்றனர்.
இரயிலில் ஏறி உட்கார்ந்திருந்தனர் அஞ்சனாவும் நிஷாவும். அஞ்சனாவின் தந்தை வேல்முருகனும், தாய் ரோகிணியும் நிஷாவின் பெற்றோரும் இவர்களை ஏற்றிவிட வந்திருந்தனர் இரயில் நிலையத்திற்கு.
பெங்களூர் வருகிறேன் என்றவர்களை வேண்டாம் என மறுத்திருந்தனர் இருவரும். பெங்களூரில் வேல்முருகனின் உடன் படித்த நண்பர் நாச்சியப்பனின் வீட்டின், மேல்மாடி போர்ஷனில்தான் இவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாச்சியப்பன் வேல்முருகனுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர். தமிழகத்தை சேர்ந்தவர். படித்து முடித்து வேலைக்காக பெங்களூர் சென்றவர், அங்கேயே செட்டிலாகியிருந்தார்
Advertisement
அவரது வீட்டு மேல் மாடி போர்ஷனில்தான், இப்போது அஞ்சனாவும் நிஷாவும் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. போன வாரமே பெற்றோருடன் சென்று தங்கும் இடம், அலுவலகம் எல்லாவற்றையும் நேரில் பார்த்து வந்திருந்தனர் இருவரும்.
வேல்முருகன் அப்போதே இவர்கள் தங்குவதற்கு ஏதுவாக தேவையான பொருட்களை அங்கேயே வாங்கி, அவர்கள் தங்கும் இடத்தில் எல்லாம் செட் செய்து கொடுத்து விட்டிருந்தார்.
ஆதலால் இப்பொழுது பெண்கள் மட்டும் கிளம்பினர். வேல்முருகனும் ரோகிணியும், மகளுக்கு அத்தனை புத்திமதி சொல்லி, பத்திரம் சொல்லி வழியனுப்பினர்.
Advertisement
இரயில் மெல்ல நகர ஆரம்பித்தது. அஞ்சனா ஜன்னல் அருகே நகர்ந்து உட்கார்ந்து தாய், தந்தையை பார்த்து கையசைத்தாள். அவர்களும் கையாட்டி விடைகொடுத்தனர்.
Advertisement
நிஷா, “ப்பா……… ஓவர் சீன்டி…. இதெல்லாம்… என்னவோ…… நாடு விட்டு, நாடு போற மாதிரி. ஏற்கனவே இரண்டு பேரும் சென்னையில ஹாஸ்டல்லதான தங்கி படிச்சோம்” என கிண்டல் செய்தாள்…. அஞ்சனாவை, கெக்கபிக்க என சிரித்துக்கொண்டே.
அஞ்சனாவும் அவளது கேலியில், முறைக்க முயன்று தோற்று சிரித்தவள், திரும்பி அவள் முதுகில் ஒரு அடி வைத்தாள்.
“அதுவேற இதுவேற நிஷா. பெங்களூரவிட சென்னை பக்கம் இல்லையா. நினைச்சவுடனே வீட்டுக்கு வந்துரலாம். காலேஜ் ஹாஸ்டல்லேயே தங்கியிருந்தோம். அப்பாவும் சென்னை வரும்போதெல்லாம் வந்து பார்ப்பாங்க. இது அப்படியா……? அதான் கொஞ்சம் பயப்படறாங்க…”
Advertisement
“நீ மட்டுமாடி……. பெங்களூர் போற. நானும்தான உன்கூட வரேன். எங்க அப்பா அம்மாவும்தான வந்திருந்தாங்க. இந்த மாதிரி பீலீங்க்ஸ் ஏதாவது இருந்துதா….? எவ்வளவு சமத்தா பொண்ணை வழியனுப்பினாங்க. இங்கதான் ஓவர் பீலிங்க்ஸ்…..” என கேலி செய்தாள்.
“அவங்களுக்கு உன்னை நினைச்சு பயம் இல்லடி. உன்னால அடுத்தவங்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதேன்னுதான் பயமே. அதைதான் அத்தை என்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க”.
“இவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோம்மா…..ன்னு. இவ்வளவு நாள் ஹாஸ்டல்ல இருந்துட்டீங்க. இப்ப தனியா வேற வீடு எடுத்து இருக்க போறீங்க. இவள் எப்ப……., என்ன பண்ணுவாளோன்னு எனக்கு பயமா வருதுன்னு, புலம்பிட்டு இருந்தாங்க….. உங்க அம்மா”.
“ஓஹ்…. மம்மி. என் இமேஜை டேமேஜ் பண்ணிட்டியே…”
நிஷாவின் பாவனையில் சிரித்துகொண்டு உட்கார்ந்திருந்தாள் அஞ்சனா.
“என் மம்மி அதைதான்…… உன்கிட்ட இரகசியமா….. குசு……குசுன்னு பேசிட்டுருந்துதா… நான்கூட என்னை பிரியறதை நினைச்சு வருத்தப்படறாங்களோன்னு……. நினைச்சேன்”.
நிஷா கொஞ்சம் வாய் துடுக்கு. சமயத்தில் வாயைவிட கை நீண்டு விடும். காலேஜில் அவளை எந்த பிரச்சினையிலும் சிக்காமல் காப்பது எல்லாம் அஞ்சனாதான். ஆதலால்தான், காலேஜில் அஞ்சனாவோடே நிஷாவை அவள் பெற்றோர் சேர்த்தது.
நிஷா, அஞ்சனா ஒருத்திக்குதான் கட்டுப்படுவாள். இங்கு வேலைக்குகூட அஞ்சனா இருக்கும் தைரியத்தில்தான் அனுப்பிவைத்தனர். இப்பொழுது கிளம்புவதற்கு சற்று முன்னும் அஞ்சனாவிடம் தனியாக, நிஷா அறியாமல் அவளை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி சென்றிருந்தார் நிஷாவின் அம்மா.
அதைத்தான் அஞ்சனா நிஷாவிடம் கூறிக்கொண்டிருந்தாள்.
“ச்ச……. இந்த மம்மிய……”
“அடங்குடி…..” என அவள் தோளில் தட்டினாள்.
நிஷா, “சரி சாப்பாட்டை எடு. பசிக்குது எனக்கு”.
அஞ்சனா சிரித்துக் கொண்டே அவளது அம்மா கட்டிக் கொடுத்த சப்பாத்தி குருமாவைப் எடுத்து பிரித்தாள்.
“ம்ம்……. ஸ்மலே…….. தூக்குதே… சப்பாத்தியா.. குடு.. குடு..” என டிபன் பாக்ஸ்….. மூடியில் சப்பாத்தியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள் நிஷா. ரோகிணி இருவருக்கும் சேர்த்துதான் கட்டிக் கொடுத்திருந்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்து பக்கத்தில் வைத்த அஞ்சனா, தானும் அவளுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
இரண்டு அடுக்கு ஏசி கோச்சில் பயணம் செய்தார்கள். எதிரில் மத்திம வயதில் ஒரு தம்பதியர் அமர்ந்திருந்தனர். சாப்பிட்டு சிறிது நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர்கள், பதினொரு மணிபோல் படுத்துவிட்டனர்.
காலை ஆறுமணி போல பெங்களூர் வந்து சேர்ந்திருந்தனர். கே.எஸ்.ஆர். இரயில் நிலையத்தில் வண்டி நின்றதும், இருவரும் லக்கேஜை எடுத்துக் கொண்டு இறங்கினர்.
இவர்களை அழைப்பதற்காக நாச்சியப்பனே நேரில் வந்திருந்தார் இரயில் நிலையத்திற்கு. அவருடன் அவரது மகன் உமாபதியும் வந்திருந்தான். அவன் காரிலேயே வெளியில் உட்கார்ந்திருந்தான்.
நாச்சியப்பன் மட்டும் உள்ளே வந்திருந்தார். அஞ்சனா இறங்குவதைப் பார்த்ததும் அவர்களை நோக்கி நடந்து வந்தார். நாச்சியப்பனை கண்டுகொண்டு அவரை பார்த்து புன்னகைத்தாள் அஞ்சனா.
அவரும் அவளைப் பார்த்து புன்னகைத்தவர், வாங்கமா……… என அவர்களை வரவேற்று, பயணத்தைப் பற்றி விசாரித்தவர், வெளியே அழைத்து வந்தார்.
இவர் வருவதைப் பார்த்த உமாபதி, டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி வந்து டிக்கியை திறந்து வைத்தான். நாச்சியப்பன் தனது மகனை இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்து பேசிக்கொண்டிருந்தார்.
அன்று அவர்கள் வந்திருந்த போது அவன் வீட்டில் இல்லை. ஆதலால் அவனும் பார்க்கமுடியவில்லை. இன்றுதான் அவனும் இவர்களை பார்க்கிறான்.
தந்தை அறிமுகப்படுத்தியதும் அவர்களை பார்த்து சிநேகமாக புன்னகைத்தவன், இவர்கள் உட்காருவதற்கு காரின் பின் கதவைத் திறந்துவிட்டு. அவர்கள் உட்கார்ந்ததும். டிரைவிங் சீட்டில் வந்து அமர்ந்தவன், நாச்சியப்பன் வந்து முன் பக்கம் ஏறியதும் காரை ஸ்டார்ட் செய்தான்.
நாச்சியப்பன் பின்பக்கமாக திரும்பி உட்கார்ந்து, அஞ்சனாவிடம் பேசிக்கொண்டே வந்தார். அவர் கேட்பதற்கு எல்லாம் அஞ்சனா பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
நாச்சியப்பனுடன் அவ்வளவாக பழக்கம் இல்லை அஞ்சனாவுக்கும். புதிய இடம். புதிய மனிதர். ஆதலால் அவளுக்கும் சகஜமாக பேச வரவில்லை. நிஷா அமைதியாக ஜன்னல் வழியே, ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.
“என்னைக்கு மா…….. வேலைக்கு ஜாயின் பண்ணனும்”.
“நாளையில இருந்து……… அங்கிள்”.
“எப்படி…. போகப் போறீங்க………? பஸ்ஸா…, மெட்ரோ…….வா…..?”
“இன்னும் டிசைட் பண்ணல அங்கிள். முதல்ல கொஞ்ச நாள் ஆட்டோல, கேப்ல போலாம்னு இருக்கோம். அப்புறம்தான் முடிவு பண்ணனும்”.
“அதுவும் சரிதான். நாலுநாள் போய் வந்தாதான் உங்களுக்கும் பழக்கப்படும். எந்த உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்கமா.. உன் அப்பன் என்னை நம்பிதான் இங்க விட்டுட்டு போயிருக்கான்” என்றார் கனிவாக புன்னகையுடன்”.
“கண்டிப்பா அங்கிள். எங்களுக்கும் இங்க யாரையும் தெரியாது”.
“இன்னைக்கு உங்க இரண்டு பேருக்கும் நம்ம வீட்டுலதான் சாப்பாடு. நீங்க சமையல் எதுவும் செய்ய வேணாம்”.
“இருக்கட்டும் அங்கிள். நாங்க பார்த்துக்கிறோம். எப்படியும் நாளையில இருந்து சமைச்சுதான ஆகனும். எதுக்கு உங்களுக்கு சிரமம்”.
“சிரமமெல்லாம் இல்லம்மா. இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்கங்க. குளிச்சிட்டு இரண்டு பேரும் கீழ வந்திடுங்க சாப்பிட”.
அதற்குமேல் மறுத்தால் தவறாக எண்ணிக் கொள்வாரோ என நினைத்தவள், சரி என தலையசைத்தாள்.
நிஷா எதிலும் கலந்துகொள்ளாமல் இவர்கள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். உமாபதியும் எதுவும் பேசவில்லை.
வீடு வந்ததும், இறங்கியவர்கள் அவர்களது லக்கேஜை டிக்கியில் இருந்து எடுத்து கீழே வைத்தனர்..
“இருக்கட்டும் மா….., உமாவ மேல கொண்டு வரச் சொல்றேன். நீங்க போங்க”.
சின்ன சின்ன பைகளை மட்டும் கையில் எடுத்துக் கொண்டவர்கள், மேலே படி ஏறி சென்றனர். உமாபதி அவர்களது லக்கேஜ்களை மேலே கொண்டுவந்து வீட்டின் வாயில் கதவின் அருகிலேயே வைத்தவன், கீழே இறங்க திரும்பினான்.
அஞ்சனா, “தேங்க்ஸ் ங்க…..”
தலையசைத்து சிரித்தவன், கீழே இறங்கிவிட்டான்.
இருவரும் குளித்து முடித்து கீழே இறங்கி நாச்சியப்பன் வீட்டிற்கு வந்தனர் சாப்பிடுவதற்காக. காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு நாச்சியப்பன் மனைவி பிரேமா வந்து கதவைத் திறந்தார்.
இவர்களைப் பார்த்ததும் புன்னகையுடன் வரவேற்றவர், உள்ளே அழைத்து சென்று உட்காரவைத்தார்.
உடுகாருங்க மா………, அங்கிள் குளிச்சிட்டிருக்காரு. டிபன் இன்னும் பத்து நிமிஷத்துல ரெடியாகிடும். காபி சாப்பிடறீங்களா.. என கேட்டார்.
“இருக்கட்டும் ஆன்ட்டி……” என அஞ்சனா மறுப்பதற்குள், நிஷா முந்திக் கொண்டு சரி என தலையசைத்திருந்தாள். பிரேமா உள்ளே சென்றதும், அஞ்சனா திரும்பி நிஷாவை முறைத்தாள்.
“ஏன்டி மானத்தை வாங்குற….? ஒரு நாள் காபி சாப்பிடாம உன்னால இருக்க முடியாதா……….? காபி பைத்தியம்”.
“காலையில எழுந்ததும் காபி சாப்பிட்டு பழக்கமாகிடுச்சி அஞ்சு. அது இல்லாம என்னால இருக்க முடியாது. காலையிலிருந்து காபி சாப்பிடாததால தலைவேற வலிக்குது. அதான் ஆன்ட்டி கேட்டதும் ஒகே சொல்லிட்டேன்…” என அசடு வழிந்தாள்.
அதற்குள் பிரேமா இருவருக்கும் காபி எடுத்து வந்து கொடுத்தார்.
நிஷா, “தேங்க்ஸ் ஆன்ட்டி.”
அவளை பார்த்து புன்னகைத்தவர், கிட்சனுக்குள் சென்றுவிட்டார்.
நாச்சியப்பன் குளித்து முடித்து வந்ததும், எல்லோரையும் ஒன்றாக சாப்பிட அமர வைத்து பரிமாறினார் பிரேமா. அவர்களுடன் சேர்ந்து, உமாபதியும் அலுவலகம் செல்ல தயாராகி வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான் உண்பதற்காக.
எல்லோருக்கும் அவல் உப்புமாவையும், காய்கறிகள் போட்ட அரிசி கிச்சடியையும் பரிமாறினார் பிரேமா.
நல்ல பசியில் இருந்த நிஷாவுக்கு, பிரேமா பரிமாறியதைப் பார்த்து திரு திரு என முழித்தாள். சாதாரண நாட்களிலேயே அவளுக்கு உப்புமா என்றால் தொண்டையில் இறங்காது.
ஹாஸ்டலில் படிக்கும் காலத்திலேயே உப்புமா போட்டால் சாப்பிட மாட்டாள். “உப்புமா பிடிக்காதவங்க எத்தனை பேர் இருப்பாங்க. கூட ஏதாவது ஒன்னு செஞ்சு வைக்கலாம் இல்ல. இப்படி வாரத்தில இரண்டு நாள் உப்புமாவ போட்டு கொல்லுதுங்க”, என பிரட்டையோ….., பழத்தையோ வாங்கி வந்து சாப்பிடுவாள்.
உப்புமாவே பிடிக்காதவளுக்கு, அவல் உப்புமாவா இறங்கும். சாப்பிடமுடியாமல் தட்டையும் அஞ்சனாவையும் மாறி மாறி பார்த்து திருதிருத்தாள்
அஞ்சனாவுக்கு அவளது பார்வையில் சிரிப்பு வந்தது. சிரிப்பை உதட்டிற்குள் மென்று மறைத்தவள், ஏதும் பேசாமல் குனிந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
நிஷா சாப்பிடாமல் முழிப்பதைப் பார்த்த பிரேமா “என்னமா……….. ஏதாவது வேணுமா………?” என்றார்.
மறுப்பாக தலையை இடமுல் வலமும் அசைத்தவள், உப்புமாவை விட்டு கிச்சடியை எடுத்து வாயில் வைத்தாள். அந்த டேஸ்டும் அவளுக்கு பிடிக்கவில்லை. உமட்டிக்கொண்டு வந்தது.
வேறு வழியில்லாமல் தட்டில் இருந்ததை எடுத்து விழுங்க ஆரம்பித்தாள். என்ன முயன்றும் நிஷாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. வேறு வழியில்லாமல் மறைத்துகொண்டு சாப்பிட்டு முடித்தாள்.
இன்னும் கொஞ்சம் வைக்கவா….மா என பிரேமா கரண்டியை எடுத்ததும், “ஆங்……… வேணாம் ஆன்ட்டி.., இதுவே வயிறு புல்லாகிடுச்சு”. போதும், என அவசர அவசரமாக எழுந்துவிட்டாள்.
அஞ்சனா, நிஷாவை வெறுப்பேற்றுவதற்காகவே, “தேங்க்ஸ் ஆன்ட்டி………, உப்புமாவும், கிச்சடியும் சூப்பரா இருந்தது”.
நிஷா திரும்பி அஞ்சனாவை முறைத்தாள். என்னை வெறுப்பேத்தனும்னே சொல்றாள் பாரு என மனதில் வசைபாடிக்கொண்டிருந்தாள்.
சாப்பிட்டு முடித்தவர்கள் நாச்சியப்பனிடமும் பிரேமாவிடமும் சொல்லிக்கொண்டு மேலே கிளம்பினர்.
“மதியமும் இங்கயே சாப்பிட வந்திருங்க …….மா” என்றார் பிரேமா.
என்னது மத்தியானம் வேறயா……….., என அலறிய நிஷா, “இருக்கட்டும் ஆன்ட்டி. உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்களே சமைச்சுடறோம்” என முந்திக்கொண்டு பதிலுரைத்தாள் நிஷா.
நிஷாவின் பாவனையில் பொங்கிய சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள் அஞ்சனா.
“சரிம்மா……., ஏதாவது வேணும்னா……. கூச்சப்படாம கேளுங்க” என முடித்துக்கொண்டார்.
விட்டா போதும் என விழுந்தடித்துக்கொண்டு மேலே ஓடினாள் நிஷா.
“ஏய்… ஏன்…டி இவ்வளவு அவசரமா ஓடி வர……, பொறுமையா வந்தாதான் என்னவாம்”.
“நீ பேசாதடி….. துரோகி. என்னை வெறுப்பேத்தனும்னே…… என்ன சீன் போட்ட அங்க. உப்புமா நல்லாயிருக்கு ஆன்ட்டி…., கிச்சடி சூப்பராயிருக்கு… ஆன்ட்டின்னு… உருகுற அப்படியே”
“பக்கத்தில ஒருத்தி சாப்பிட கஷ்டபடறாளேன்னு இல்லாம, என்னவோ பார்காதத பார்த்த மாதிரி, அந்த வெட்டு வெட்டற. போடி….. என்கிட்ட பேசாத”.
“ஹேய் சீரியஸா எடுத்துகிட்டயா………., சும்மா விளையாட்டுக்கு……டி. ஐ…ய….ம் யுவர் பெஸ்ட்…………. பிரண்டாக்கும்”.
“பிரண்ட்…….லாம் கிடையாது. துரோகி……. போடி….. ” என முறுக்கிக் கொண்டாள்.
“சரி……. சரி……. கோச்சுக்காத. மதியானம் உனக்கு பிடிச்ச மாதிரி சமைக்கலாமா…..?”
“ஹ்ம்ம்…..” என சந்தோஷமானவள், “அதுக்கு எனக்கு சமைக்க தெரியனுமே?” என்றாள் முழித்துக்கொண்டே.
“ஹா…. ஹா…….., உனக்கு தெரியாட்டி என்ன…….? எனக்கு தெரியுமில்ல”.
“நீ மட்டும் என்ன பெரிய எக்ஸ்பெர்ட்டா……….? ஒன்னு இரண்டு ஐட்டம் சமைக்க தெரியும்”.
“சரி போ……….. அப்ப நீயே சமைச்சுக்கோ……..?”
“உடனே மூஞ்சை தூக்காத….., உனக்கும் வேணாம்…….., எனக்கும் வேணாம்… ஏன் ரிஸ்க்கு. பேசாம இங்க எங்கயாவது டிபன் சர்வீஸ் இருக்கான்னு பார்க்கலாமா…?”
“பார்க்கலாம்தான். தினமும் வெளி சாப்பாடுனா……, சரி வராதே நிஷா……” என்றாள் யோசனையாக.
“முதல்ல கொஞ்ச நாளைக்கு பழகற வரைக்கும் ட்ரை பண்ணுவோமே….”
“முதல்ல இன்னைக்கு லன்சுக்கு என்ன பண்ணலாம்…..?”
“குட் கொஸ்டின். என்ன பண்றது…….? நாமதான் சமைக்கனும்”.
“சரி வா……… இங்க பக்கத்துல எங்க கடை இருக்குன்னு….. பார்த்துட்டு……., காய்கறி…… பழம்…., பிரட்… பால் எல்லாம் வாங்கிட்டு வரலாம்” என கிளம்பினாள் அஞ்சனா.
“முதல்ல எது வாங்கறமோ இல்லையோ………? பாலும் காப்பி பொடியும் வாங்கனும் அஞ்சு”.
“சரி. வா போய் வாங்கிட்டு வரலாம்” என இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு கடைக்கு கிளம்பினர்.
உமாபதி வேலைக்கு செல்வதற்காக வெளியே வந்து காரை ஸ்டார்ட் செய்தவன், இவர்கள் இருவரும் கீழே இறங்கி வருவதை பார்த்து, தேங்கி நின்றான்.
உமாபதி செல்லாமல் காரிலேயே உட்கார்ந்தபடியே தங்களை கேள்வியாக பார்த்ததும், அவனருகில் சென்றவர்கள், “காய்கறி பால்லாம் வாங்கிட்டு வரலாம்னு கடைக்கு கிளம்பினோம் ஸார்” என்றாள் அஞ்சனா.
“உங்க பேர் என்றான் தயக்கமாக…..”
“அஞ்சனா…….. ஸார்”.
“சும்மா… என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க அஞ்சனா……, வாங்க நானே ட்ராப் பண்றேன்”.
“வேணாம். எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்க. நாங்களே நடந்து போயிடுவோம்”.
“நான் அந்த வழியாதான் போறேன். அப்படியே ட்ராப் பண்ணிடறேன். நெக்ஸ்ட் டைம் தனியா போக ஈசியாயிருக்கும்”.
சரி என தலையசைத்தவள், நிஷாவையும் அழைத்துக்கொண்டு காரின் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தாள்.
அந்த வீதியை கடந்து, வலது புறம் திரும்பி அரை கிலோ மீட்டர் தூரம் வந்தபின் ஒரு சூப்பர் மார்கெட் வந்தது. பக்கத்திலேயே, காய்கறி கடைகளும், பழக்கடைகளும் கூட இருந்தது.
சூப்பர் மார்கெட்டின் முன் நிறுத்தியவன், “இங்கயே வீட்டுக்கு தேவையான எல்லா சாமான்களும் கிடைக்கும். ஓரளவு விலையும் ரீசனபிளா இருக்கும்” என இறக்கிவிட்டான்.
“தேங்க்ஸ்….ங்க…” என இருவரும் இறங்கிக்கொண்டனர்.
இவர்கள் கடைக்குள் செல்லும்வரை பார்த்து இருந்தவன், காரை எடுத்துச் சென்றான்.
கடையில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கியவர்கள், வெளியே வந்து காய்கறிகள், பழங்களையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்தே வந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்ததும், நிஷா கேசை ஆன் செய்து, பாலை காய்ச்ச ஆரம்பித்தாள். இரண்டு டம்பளரை எடுத்து காபி பொடி, சர்க்கரை எல்லாம் போட்டு கொதித்த பாலை அதனுடன் சேர்த்து கலக்கியவள், அஞ்சனாவிடம் ஒரு டம்பளரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அவளுக்கும் ஒன்று எடுத்துகொண்டு வந்து அமர்ந்தாள்.
“ம்ம்….., பரவாயில்லையே காபி நல்லாயிருக்கு நிஷா…”
“எனக்கு உருப்படியா தெரிஞ்சது…., அது ஒன்னுதான்……”
“சரி, நீ எனக்கு காய் மட்டும் கட் பண்ணி கொடு. நான் சமைச்சுடறேன்”.
“என்னை செய்யபோற…….?”
“என்ன வேணும்…….. உனக்கு?”
“நல்லா காரசாரமா ஒரு வத்த குழம்பு வச்சு…….., அப்பளம் பொரிச்சு சாப்பிடலாமா…………?”
“இவ்வளவுதான…….. செஞ்சு தரேன்”.
“ஹேய்…. என்ன இவ்வளவுதானன்னு, சாதாரணமா சொல்ற…… இதுவரைக்கும் செஞ்சிருக்கியா…..? இல்ல….., என்னை வச்சுதான் டெஸ்ட் பண்ண போறியா…….?”
“ஊர்ல ஒரு தடவை அம்மா சொல்லி குடுத்து… வச்சிருக்கேன். அதே மாதிரி செய்ய ட்ரை பண்றேன்……” என்றாள் சிரித்துக்கொண்டே.
“அடிப்பாவி…….., நீ ட்ரை பண்ணி பார்க்க, நான்தான் கிடைச்சனா….”.
அஞ்சனா ரோகிணிக்கு போன் செய்து, எப்படி வத்த குழம்பு வைப்பது என அவரிடம் கேட்டுக்கொண்டு, அதன்படியே செய்ய ஆரம்பித்தாள்.
வெங்காயம், பூண்டு, கத்திரிக்காய் எல்லாம் சேர்த்து ரோகிணி சொன்னது போலவே வத்த குழம்பு வைத்தவள், உருளைகிழங்கை தோல்நீக்கி, மெல்லிய வடிவில் வட்ட வட்டமாக நறுக்கி, உப்பு மஞ்சளுடன் மிளாகாய்தூள் தூவி, கருவேப்பிலை, பூண்டு தட்டிபோட்டு, வறுத்து எடுத்தாள். கூடவே அப்பளத்தையும் பொறித்து வைத்தாள்.
நிஷா சமைத்ததை எல்லாம் வெளியே கொண்டு வந்து ஹாலில் வைத்தவள், சாப்பிடுவதற்கு ஏதுவாக தட்டையும், தண்ணீரையும் எடுத்து வந்து வைத்தாள்.
அஞ்சனா தயிர் பாக்கெட்டை கட் செய்து அதை ஒரு கிண்ணத்தில் ஊற்றியவள் சாப்பிடும் இடத்தில் கொண்டுவந்து வைத்தாள்.
இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து உணவை பரிமாறி சாப்பிட ஆரம்பித்தனர்.
“ம்ம்….. செமையா இருக்குடி குழம்பு. சான்ஸே இல்ல. நிஜமாவே நல்லாயிருக்கு…” என சப்புக்கொட்டிக் கொண்டே ரசித்து சாப்பிட்டாள் நிஷா.
“அதுவும் இந்த உருளைகிழங்கு வறுவல் அல்டிமேட் போ….” என வறுத்த உருளையையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தாள்.
தொடரும்.
