வசந்தங்கள் வாடுவதில்லை 3
அன்று அனுவுக்கு திருமணம். அஞ்சனாவும், நிஷாவும் தோழியின் திருமணத்துக்கு வந்திருந்தனர். நாளை அதிகாலை முகூர்த்தம் என்பதால், இன்று மாலை நடக்கும் ரிசப்ஷனுக்கு வந்திருந்தனர் இருவரும்.
திண்டிவனத்தில், சென்னை செல்லும் ஹைவே ரோட்டில் பிரமாண்டமாக இருந்தது அந்த திருமண மண்டபம். மண்டபத்தினுள் இருக்கும் விஸ்தாரமான பார்க்கிங் ஏரியா முழுவதும் கார்கள் வரிசை கட்டி நின்றது.. உள்ளே நிறுத்த இடம் இல்லாமல் கார்கள் மண்டபத்தின் வெளியேயும் நிறுத்தப்பட்டிருந்தது. ஆட்டோவில் இருந்து இறங்கிய அஞ்சனாவும் நிஷாவும் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.
இவர்களைப் பார்த்ததும் வரவேற்பில் நின்றிருந்த அனுவின் தாயார் வந்து சந்தோஷமாக வரவேற்று, இவர்களை மணமகள் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று விட்டு வந்தார்.
தோழிகளை பார்த்ததும் மலர்ச்சியுடன் வந்து கட்டிக்கொண்டாள் மணப்பெண். ‘’இதான் நீங்க கல்யாணத்துக்கு வர டைமாடி…? உங்களை முன்னாடியே வரச்சொன்னா எந்த நேரத்துக்கு வரீங்க…..?” என செல்லமாக கோவித்துக் கொண்டாள் இவர்களிடம்.
Advertisement
நிஷா, “ஹேய்… கல்யாணப் பொண்ணே, ரிலாக்ஸ். எதுக்கு கோவம்…? நீ உங்க ஆட்களோட பிஸியாயிருப்ப….. நாங்க வந்து என்ன பண்ண போறோம்?”
“அனு, “ப்பாஹ்… செம பதில்… போடி. “நீங்க லேட்டா வந்ததுக்கு… நொண்டி சாக்கு ம்…. கொஞ்சம்கூட பிரண்டுன்ற பாசமே இல்ல…”
“பார்ரா… லவ்ஸ்ச. ம்ம்…. அதான் உனக்குன்னு ஒரு ஆளை அப்பாயின்ட் பண்ணியாச்சுல்ல. அங்க பிழிய வேண்டியதுதானடி… உன் லவ்ஸ்ச….”
Advertisement
அனு, அதான எது குறைஞ்சாலும், உன் வாய் மட்டும் குறையாதே… என்றாள் சிரித்துக்கொண்டே.
Advertisement
அஞ்சனா புன்னகையுடன் இருவரையும் பார்த்திருந்தாள்.
ஹா… ஹா… “அது இல்லனா எப்படி…? வாய் இல்லனா நாய் தூக்கிட்டு போயிடும்டி…”
அஞ்சனா, அடங்குடி என அவள் தோளில் ஒன்று வைத்தாள். இப்படியாக தோழிகள் கலாட்டாவும் கேலியுமாக பேசிக்கொண்டிருந்தவர்கள், தங்களது பள்ளி நாட்களுக்கே பயணித்திருந்தனர் பழைய கதைகளை எல்லாம் பேசி சிரித்து.
Advertisement
மணப்பெண்ணின் தாயார் இவர்கள் இருவருக்கும் ரூமுக்கே குடிக்க ஜூஸ் கொடுத்து விட்டிருந்தார்.
“எடுத்துக்கங்கபா…..”
அஞ்சனா, “உனக்கு. நீ குடிக்கலையா…?”
“நான் இப்பதான் குடிச்சேன். நீங்க சாப்பிடுங்க.” அதற்குள் இன்னும் சில தோழிகள் வந்திருந்தனர். தோழிகள் ஒன்று சேர்ந்தால் அரட்டைக்கு சொல்லவும் வேண்டுமா….? கிண்டல், கேலி, சிரிப்பு என களைகட்டியது அந்த இடம்.
மணப்பெண்ணை பார்க்க என மாப்பிள்ளையின் சொந்தங்கள் சில பேர் வரவே அனுவிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்து உட்கார்ந்தனர்.
ஏற்கனவே பரிசமெல்லாம் முடிவடைந்திருந்ததால், மணமகளை அழைத்து வந்து நலங்கு வைத்து அவர்கள் வழக்கப்படி சடங்குகள் செய்து முடித்தார்கள்.
அடுத்து ரிசப்ஷன் துவங்கியது. மணமகனும் மணமகளும் மணமேடையில் வந்து நின்றனர்.
“அக்கா….” என காஞ்சனாவின் காதில் கிசுகிசுத்தாள் கீர்த்தி.
கீர்த்தியை திரும்பி பார்த்த காஞ்சனாவை, அஞ்சனா உட்கார்ந்திருக்கும் இடத்தை கண்களாலேயே சுட்டி காட்டி, “இவள் எங்கக்கா இங்க……”
“இது என்ன கேள்வி…? அவளும் கல்யாணத்துக்கு வந்திருப்பாள்…..”
கீர்த்தி, “ம்ப்ச்….. க்கா, அதையா கேட்டேன். நாம எல்லாம் மாமாவோட க்ளோஸ் ஃபிரண்ட் பையன் கல்யாணத்துக்காக வந்திருக்கோம். அவள் எப்படி…….?”
காஞ்சனா, “எப்படி வந்தா நமக்கென்ன…….? அத்தை காதுல விழப்போகுது. பேசாம உட்காரு”. ஆம். செல்வதுரையின் நெருங்கிய நண்பரின் மகன்தான் மாப்பிள்ளை. செல்வதுரையின் நண்பர் மணமகனுடன் சேர்ந்து தம்பதியராக வீட்டிற்கே வந்து பத்திரிக்கை வைத்து குடும்பமாக திருமணத்திற்கு வரவேண்டும் என அழைத்திருந்ததால், இவர்களும் குடும்பமாக கிளம்பி வந்திருந்தனர். தொழில்முறை பழக்கம் வேறு. எனவே தள்ளமுடியாமல் பிள்ளைகளுடன் வந்திருந்தார்.
கீர்த்தி, “இதான் பர்ஸ்ட் டைம் அவளை சேரியில பார்க்கறது இல்ல. ஆள் நல்லா வளர்துட்டா…”
காஞ்சனா, “ஹ்ம்ம்…” காஞ்சனாவும் அஞ்சனாவைதான் பார்த்துகொண்டிருந்தாள்.
“சேலையில பார்க்க நல்லாயிருக்கா இல்ல”.
“ஹ்ம்ம்…”
அதற்குள் மணமகனின் தந்தையும் தாயும் வந்து இவர்களை வரவேற்று, மணமேடைக்கு அழைத்து சென்றனர்.
நிஷா, “ஹேய் உங்க மாமா போறார் பாரேன். கூட போறது எல்லாம் யாரு…? அவங்க பேமிலியா……?” நிஷா காட்டிய திசையில் திரும்பி பார்த்த அஞ்சனா, ஏதும் பேசாமல் அமைதியாக திரும்பிக் கொண்டாள்.
நிஷா, “இவங்க… எங்கடி இங்க கல்யாணத்துக்கு…?” என மற்றவர்களுக்கு கேட்காமல் அஞ்சனாவின் காதில் கிசுகிசுத்தாள்.
“ம்ப்ச்…, யாருக்கு தெரியும்…?” சும்மாயிருடி. ஆனால் நிஷாவுக்கு தெரிந்து கொள்ளவில்லை என்றால் மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது. அவளது கண்கள் முழுவதும் அவர்கள் மேலேயே சுற்றி கொண்டிருந்தது.
செல்வதுரை குடும்பத்தினர் மாப்பிள்ளையிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து, “ஓ……… மாப்பிள்ளை வீட்டுக்கு சொந்தக்காரங்களா……?” என அவளே கேள்வி கேட்டு, அவளே பதிலும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அஞ்சனா எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
நிஷா, “ஹேய் நாமளும் கிஃப்ட் குடுத்துட்டு கிளம்பலாமா……?”
“கொஞ்சம் நேரம் ஆகட்டும் நிஷா… கூட்டமாயிருக்கு மேடையில. கொஞ்சம் கூட்டம் குறையட்டும். அப்படியே அவள்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பிடலாம்”.
ஆமாமா.. கூட்டமாதான் இருக்கு. படையே திரண்டு வந்திருக்கு கல்யாணத்துக்கு… என செல்வதுரை குடும்பத்தை கண்களால் காட்டி கேலி செய்துகொண்டிருந்தாள் நிஷா.
“ஹேய் சும்மாயிருடி…. இவ வேற…” என அஞ்சனா அவளது தோளை இடித்தாள்.
“ஏய் உனக்கேன் கோவம் வருது. நான் நாட்டு நடப்ப சொன்னேன்…”
அதற்குள் அவர்களுடன் படித்த இன்னும் சில நண்பர்களும் வரவே அவர்களின் மேல் கவனம் சென்றது. மேடையில் கூட்டம் குறைந்ததும் வந்திருந்த நண்பர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து மணமக்களை காண சென்றனர்
அனு தன்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்த தோழிகளை எல்லாம் மணமகனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். மாப்பிள்ளையும் இவர்களுடன் இன்முகமாக பேசினான். மணமக்களுடன் பேசியிருந்து, அவர்களை வாழ்த்தி பரிசைக் கொடுத்தவர்கள், போட்டோ எடுத்துகொண்டு, சாப்பிடுவதற்காக சென்றனர்.
நீண்ட காலம் கழித்து எல்லோரும் மீட் செய்வதால் அவர்களுக்குள் பேச நிறைய விஷயங்கள் இருந்தது. நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக உட்காருவதற்கு தோதுவாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து சாப்பிட அமர்ந்துகொண்டனர். கலகலப்பாக தோழிகளுடன் பேசிக்கொண்டே அமர்ந்த அஞ்சனா எதிர்வரிசையில் இருந்த குடும்பத்தை கவனிக்க வில்லை.
சரியாக இவர்கள் உட்கார்ந்திருப்பதற்கு எதிர் திசையில் இருக்கும் பந்தியில் செல்வதுரையின் குடும்பம் அமர்ந்திருந்தது. பேச்சுவாக்கில் தோழிகளிடம் பேசி சிரித்துகொண்டே எதேச்சையாக எதிரில் இருப்பவர்களைப் பார்த்த அஞ்சனாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. எழவும் முடியாமல், நிமிரவும் முடியாமல் சங்கோஜமாக இருந்தது அவளுக்கு. இப்படி இவர்களை எல்லாம் ஒன்றாக நேருக்கு நேர் இதுவரைபார்த்ததில்லை.
உறவினர் வீட்டு விசேஷங்களில்… தூரமாக இருந்து பார்த்திருக்கிறாள். இப்படி மிக நெருக்கத்தில் பார்த்தது இதுவே முதல் முறை.
நிஷா திரும்பி அஞ்சனாவைப் பார்த்தாள். ‘’ பேசாம சாப்பிடுடி……., என்னை ஏன்……பார்க்குற..?”
மீனா, “அது உங்க தங்கச்சி பொண்ணுதான……?” என்றார் கணவனிடம். முன்னமே அஞ்சனாவை கண்டுகொண்டிருந்தார் செல்வதுரை. ஏதும் பேசமுயலவில்லை.
இப்பொழுது மீனா கேட்கவும் ஆமாம், என தலையாட்டினார்.’’
மீனா அஞ்சனாவைதான் விழியெடுக்காமல் பார்த்திருந்தார். “அப்படியே உங்க தங்கச்சிய பார்க்கற மாதிரி இருக்கு. ரோகிணிய உரிச்சி வச்சிருக்கா உருவத்துல”.
செல்வதுரையும் அதைதான் அவளை பார்க்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வார். அஞ்சனாவிடம் பேச எண்ணம் இருந்தாலும், மனதில் தயக்கம் இருந்தது.
அஞ்சனாவுக்கு வாயில் எடுத்து வைக்கும் உணவு தொண்டையில் இறங்குவேனா என அடம் பிடித்தது. மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் என சொல்வார்களே அந்த நிலையில் உட்கார்ந்திருந்தாள். என்னவோ எதிரில் உட்கார்ந்திருக்கும் மொத்த குடும்பமும் அவளையே பார்த்து கொண்டிருப்பதுபோல மனதுக்குள் தவிப்பு.
உணவில் கவனம் வைக்க முடியாமல் அலைபாய்ந்தது மனம். உணவை பாதியில் முடித்துகொண்டவள், நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு, அங்கிருந்து எழுந்து கைகழுவி, வரவேற்பு நடக்கும் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள்.
எதிலிருந்தோ தப்பித்து ஓடிவந்ததுபோல மனம் முழுவதும் ஆசுவாசம். அமைதியாக உட்கார்ந்திருந்தாள் அங்கேயே. தோழிகள் சாப்பிட்டு வந்ததும், மணப்பெண்ணிடம் சொல்லிக் கொண்டு அனைவரும் புறப்பட்டனர்.
மண்டபத்தின் வெளியே வந்தததும் ஒவ்வொருவராக விடைபெற்று கலைந்தனர்.
நிஷா, “சரியா கூட சாப்பிடல நீ. வா ஒரு ஜூஸாவது குடிச்சிட்டு போகலாம்”.
“அதெல்லாம் வேண்டாம். வீட்டுக்கு போலாம் வா… லேட்டானா அப்பத்தா ஏதாவது சொல்லும்” என ஆட்டோ பிடிக்க நடந்தாள் அஞ்சனா நிஷாவை அழைத்துகொண்டு.
அடுத்த ஒரு மணிநேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். அஞ்சனாவை வீட்டில் வி்ட்டுவிட்டு, நிஷா அவளது வீட்டிற்கு சென்று விட்டாள்.
