Skip to content
Post Views: 6,929
அஞ்சனாவும் நிஷாவும் வேலையில் சேர்ந்து இரண்டு மாதம் முடிந்திருந்தது. முதன் முதலில் வேலைக்கு செல்லும் போது இருந்த பயம், பதற்றம் தடுமாற்றம் எல்லாம் மட்டுப்பட்டு, வேலை கொஞ்சம் பழகியிருந்தது.
இவர்கள் வேலை செய்யும் இடத்திலும் தமிழர்கள் நிறைய பேர் இருந்ததால், இவர்களுக்கு உதவியாக இருந்தது வேலை கற்றுக்கொள்ள. முதல் சில மாதங்கள் ட்ரைனிங் பீரியட் என்பதால், இருவரும் ஒரே டீமில்தான் இருந்தனர்.
பெரும்பாலும் சமைத்தே சாப்பிட்டவர்கள், முடியாத சமயத்தில் வெளியிலும், கேன்டீனிலும் சாப்பிட்டுக் கொண்டனர்.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே விடுமுறை எடுத்து ஊருக்கு வர சொல்லி வீட்டிலிருந்து அழைப்பு விடுத்திருந்தனர். சேர்ந்த புதிதில் விடுமுறை அதிகம் எடுக்க முடியாது என்பதால், தீபாவளிக்கு இரண்டு தினம் இருக்கும்போது ஊருக்கு புறப்பட்டு வந்திருந்தனர் அஞ்சனாவும், நிஷாவும்.
Advertisement
நேற்று பெங்களூரிலிருந்து வந்திருந்த தோழிகள் இருவரும், இன்று தீபாவளிக்காக தங்களுக்கு புதுத்துணி எடுப்பதற்காக, “செல்வதுரை அன்ட் சன்ஸ்” கடைக்கு வந்திருந்தனர்.
திண்டிவனத்தில் அதுதான் மிகப்பெரிய கடை என்பதாலும், அங்குதான் லேட்டஸ்ட் கலெக்ஷன் எல்லாம் கிடைக்கும் என்பதாலும் இருவரும் அங்கே வந்திருந்தனர்.
நிஷா, “நம்ம நிலைமைய பார்த்தியாடி…….., காலேஜ் போகும் போதும் இங்கதான் வந்து துணி எடுத்தோம். இப்பவாவது வேலைக்கு போயிட்டமே, பெங்களூர்ல துணி எடுக்கலாம்னு பார்த்தா….., கொடுத்து வைக்கல. இப்பயும் இங்கதான் வந்து துணி எடுக்க வேண்டியதாயிருக்கு….. எல்லாம் நம்ம நேரக் கொடுமைடி…” என சலித்துகொண்டாள்.
Advertisement
“என்னமோ பெங்களூர்ல வருஷ கணக்கா வாழ்ந்த மாதிரி அலுத்துக்கற. இப்பதான போயிருக்கோம். இன்னும் நமக்கு அந்த ஊரே பழக்கப்படல… எது எங்க இருக்குன்னு…?”
Advertisement
“இருக்கட்டுமே…. அங்க டிரஸ்லாம் சீப்பாவும் இருக்கும். கலெக்ஷன்ஸ் இன்னும் நல்லாயிருக்கும்ல” என்றாள் ஆசையாக.
“பேசாம………. துணிய எடுடி. எதுக்கெடுத்தாலும் ஏதாவது சொல்லிகிட்டு”.
“ம்ம்… எனக்கு இங்க எதுவுமே பிடிக்கல. பேசாம நாம அங்கயே எடுத்திருக்கலாம்”.
Advertisement
“ஹேய்…. இப்போதைக்கு ஏதாவது எடு. நெக்ஸ்ட் டைம் பெங்களூர்ல ட்ரை பண்ணலாம்”.
“ஹ்ம்ம்…” சரி என அஞ்சனாவிடம் தலையாட்டினாலும், நிஷாவுக்கு மூடே இல்லை துணி எடுப்பதற்கு. ஆர்வமோ… விருப்பமோ… ஏதோ ஒன்று குறைந்திருந்தது. எடுக்க வேண்டுமே என்ற கட்டாயத்திற்காக, ஏனோ தானோவென துணியை புரட்டிக்கொண்டிருந்தாள்.
நிஷா, நாம் வேறு யாருக்காவது துணி எடுக்க கடைக்கு வந்தோம்னா அப்ப பார்த்து நம்ம கண்ணுல எல்லாம் சூப்பர் சூப்பரா படும். இன்னைக்கு என்னவோ சோதனையா கண்ணுல ஒன்னுகூட சிக்க மாட்டுது. என்னடா சரவணா உனக்கு வந்த சோதனை என புலம்பிக் கொண்டே எதையோ ஒன்றை செலக்ட் செய்தாள். ம்ம்… நாட் பேட். இப்போதைக்கு இருக்கட்டும். வேற தேடற அளவுக்கு மூட் இல்ல. அப்புறமா நல்லதா எடுத்துக்கலாம் என அவளாகவே பேசிக்கொண்டடிருந்தாள்.
“யாருகிட்டடி பேசிகிட்டிருக்க….”
சிரித்துக்கொண்டே “யாருமில்லடி. சும்மா உளறிட்டிருக்கேன். என்னவோ இன்னைக்கு எனக்கு மூட் ஆஃப்ல இருக்கு போல. வா சீக்கிரம் வீட்டுக்கு போகனும்” என்றாள் நிஷா.
நிஷா சொன்னதும் ஒருவகையில் உண்மை. சுரத்தில்லாமல்தான் இருந்தாள்.
பேசிக்கொண்டே இருவரும் தங்களுக்கான உடைகளை தேர்வு செய்து எடுத்தவர்கள், பில் போடும் கௌண்டருக்கு வந்து நின்றார்கள். பில் கௌண்டரில் கூட்டம் அதிகமாக இருந்தது.
“க்யூ…… பெரிசா இருக்கு அஞ்சு, எனக்கு காலெல்லாம் வலிக்குது. நான் போய் உட்காரவா…..?”
“சரி…., நீ போய் உட்காரு, கிட்ட வந்ததும் கூப்பிடறேன்”.
சரி என தலையசைத்து, நிஷா ஓரமாக போடப்பட்டிருந்த நாற்காலிகளில் போய் அமர்ந்துகொண்டாள்.
அஞ்சனா பில் போடும் இடத்திற்கு நெருங்கியவுடன், நிஷாவை கையசைத்து கூப்பிட்டாள். நிஷா வந்து அவளது அருகில் நின்றாள்.
அதற்குள் பின்னால் நின்றிருந்தவர், ‘’ஹலோ, இவ்வளவு நேரமா நாங்க எல்லாம் க்யூல நின்னுட்டு வரது கண்ணுக்கு தெரியலையா……? போய் வரிசைல நின்னு வாங்க’’ என சத்தம் போட ஆரம்பித்தார்.
அஞ்சனா, “என்னோடதான் நின்னுட்டு இருந்தாங்க. கால் வலிக்குது, நிக்க முடியலன்னு போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாங்க”.
“அதெல்லாம் முடியாது. க்யூல…….. போய் நின்னு வர சொல்லுங்க”.
நிஷா, ச்சை… “ஸார் சொன்னா புரிஞ்சுக்க மாட்டீங்களா…..? நானும் இவளோடதான் நின்னேன். கால் வலிக்குதுனு…… முடியலன்னு… உட்கார போனேன்”.
அதற்கும் பின்னால் நின்றவர், “தூர போய் நின்னு பேசுங்க. உங்களால எங்களுக்கும் பில் போட லேட்டாகுது……” என்றார்.
நிஷா கோவத்தை அடக்கி கொண்டு, “ம்ப்ச்……. நீ பில் போட்டுட்டு வாடி…….. நான் வெயிட் பண்றேன். எனக்கு டிரஸே வேணாம்…. என எடுத்த துணியை கொண்டு போய், எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு…… வந்துவிட்டாள் எரிச்சலுடன்.
நிஷா கலங்கிய முகத்துடன் துணியை கொண்டுபோய் போட்டுவிட்டு வந்தது, அஞ்சனாவின் மனதிற்கு என்னவோ…… போலிருந்தது. நிஷா எடுக்காமல் தான் மட்டும் எடுக்க, அவளுக்கு மனம் வரவில்லை. எப்போதும் தோழிகள் இருவரும் சேர்ந்துதான் துணி எடுப்பார்கள். இன்று இதுபோல் ஆனதை நினைத்து கஷ்டமாக இருந்தது அஞ்சனாவிற்கு.
நிஷாவுக்கு….. வேறு கடை போகலாம் என்ற எண்ணம் இருந்தாலும், அஞ்சனாவுக்காக, எப்போதும் அவள் வாங்கும் கடைக்கே, அவளுடனே வருவாள்.
சாதாரண நாட்களாக இருந்தால் கூட பரவாயில்லை. தீபாவளி அதுவுமாக நிஷா எடுக்காமல் தான் மட்டும் எடுப்பது சுயநலமாக பட்டது அஞ்சனாவுக்கு. ஆதலால் அவளும் எடுத்த துணியை பில் போடாமல் கொண்டு போய் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
அஞ்சனா, “வா…… போலாம்”.
அஞ்சனாவுக்கு பின்னால் நின்றிருந்தவர், வாயை வைத்துகொண்டு சும்மாயில்லாமல், “திமிர் பிடிச்சதுங்க. க்யூல… நின்னு வாங்க சொன்னா… என்னமா கோவம் வருது. துணியை வீசிட்டு போகுதுங்க…? பொண்ணுங்கனா பொறுமை வேணாமா…? நாலெழுத்து படிச்சுட்டா… பெரிய இவங்கன்னு… தெனாவுட்டு வந்துடுது. இதுங்க எல்லாம் எங்க உறுப்பட…… போகுதுங்க” என முனுமுனுத்தார். சரியாக அது அங்கு நின்றிருந்த நிஷாவின் காதில் விழுந்து வைத்தது.
நிஷா, “ஹலோ……, பார்த்து பேசுங்க….. மரியாதையில்லாம பேசினீங்க நடக்கறதே வேற…….” என எகிற ஆரம்பித்துவிட்டாள்.
“என்னமா….? வாய் நீளுது….”
“பில்லு போட விடமாட்டேன்னீங்க……., அதோட விடவேண்டியதுதான. நீங்க யாரு…….? எங்களை பத்தி தப்பா பேச…..”
அஞ்சனாவுக்கு ஒன்னும் புரியவில்லை. நிஷா எதற்கு கோபப்படுகிறாள்…? என தெரியாமல் விழி பிதுங்கினாள். அவள் துணியை கொண்டு போய் வைத்துவிட்டு வருவதற்குள் நிஷாவுக்கும் பின்னால் நின்றிருந்த மனிதருக்கும் முட்டிக்கொண்டிருந்தது.
நேற்று இரவுதான் பெங்களூரில் இருந்து வந்திருந்தார்கள். இன்றாவது ரெஸ்ட் எடுக்கலாம் என நினைத்தால் வீட்டிலிருந்து போய் புதுத்துணி எடுத்துவா… என துரத்தியிருந்தார்கள். பயண அலுப்பு. உடல் அசதி. இதில் இவ்வளவு கஷ்டப்பட்டு செலக்ட் செய்த துணியை……. எடுக்க முடியவில்லையே என்ற கடுப்பு எல்லாம் சேர்ந்து கொண்டு கொதி நிலைக்கு தள்ளியது அவளை. இது பத்தாது என பின்னால் நின்றிருந்தவர் வேறு நக்கலாக பேசியதில் கோவத்தின் உச்சியில் இருந்தாள் நிஷா.
சிசிடிவி மூலம் அங்கு கூட்டமாக குழுயிருந்தவர்களை பார்த்த தேவநாதன், அந்த பிளோருக்கு….. விரைந்து வந்தான். பண்டிகை நாட்களிலும், விசேஷ காலங்களிலும் கடையி்ல் கூட்டம் அதிகமாக இருக்கும். அதற்காகவே இந்த மாதிரியான நேரங்களில் கடைக்கு வந்து அண்ணன்களுக்கும் அப்பாவுக்கும் உதவியாக இருப்பான். இன்றும் அதுபோல் வந்தவன் சிசிடிவியைப் பார்த்துவிட்டு தாமதிக்காமல் மேலே வந்துவிட்டான்.
“என்ன பிரச்சினை நிஷா….?” என்றாள் அஞ்சனா.
“எல்லாம் உன்னாலதான்….., ஊர்ல உலகத்துல வேற கடையே இல்லாதமாதிரி…., எப்பப்பாரு…… இந்த கடைய விட்டா உனக்கு வேற கடையே தெரியாது…..” என ஆவேசத்துடன் அவளிடமும் எகிறினாள்.
தேவநாதன் வரவும் நிஷா பேசவும் சரியாக இருந்தது. நிஷா பேசியதில்…… அஞ்சனாவின் முகம் சுருங்கியது.
அஞ்சனாவின் முகம் வாடியதும்தான், சட்டென்று கோவத்தில் தான் பேசியதை நினைத்து சங்கடப்பட்டாள் நிஷா. அஞ்சனாவின் கையைப் பிடித்து “ஸாரி….டி, கோவத்துல யோசிக்காம பேசிட்டேன். ஸா…ரி” என்றாள் கண்களாலேயே இறைஞ்சுதலாக.
சரி விடு….. அவர் என்ன பேசினார்….? ஏன் இவ்வளவு கோவம்… உனக்கு?
தேவநாதன் பில் கௌண்டரில் இருந்த பெண்ணிடம் திரும்பி விசாரித்தான், என்ன தகராறு….? என்று. அதற்குள் அங்கு பில் போட நின்றிருந்த பெண்மனி ஒருவர், “அந்த இரண்டு பொண்ணுங்களும் ஒன்னாதான் வந்தாங்க, நானே பார்த்தேன்”.
நிக்க முடியல, பில் போடும் போது வரேன்னு போய் உட்கார்ந்துடுச்சு இந்த பொண்ணு. பில் கௌண்டர் கிட்ட… வந்ததும், உட்கார்ந்திருந்த பொண்ணு எழுந்து பில் போட வந்தப்ப, இந்தாள் அவங்கள பில் போட விடமாட்டேன்னு சத்தம் போட்டு, போய்…. முதல்ல இருந்து க்யூல நின்னு வான்னு… அனுப்பிட்டாரு”.
“அது நிக்க முடியாதுன்னு, எடுத்த துணிய கொண்டு போய் திருப்பி வேணாம்னு, எடுத்த இடத்துலேயே வச்சுட்டு வந்துடுச்சு. அது எடுக்காததால கூட இருந்த பொண்ணும் எடுக்கல போல”.
இந்ந ஆள் வாயை வச்சுட்டு சும்மா இருக்காம அந்த பொண்ணுங்கள ஏதோ பேசியிருக்காரு…… அது அந்த பொண்ணு காதுல விழுந்திடுச்சு போல. அதான் அந்த பொண்ணு சண்டை போடுது”.
தேவநாதன் திரும்பி அந்த மனிதரை பார்த்து, “துணி எடுக்க வந்தா அதமட்டும் பாருங்க ஸார். எதுக்கு தேவையில்லாததெல்லாம் பேசி வியாபாரத்தை கெடுக்கறீங்க….” என்றான்.
“ஹலோ….. நான் உங்க கஸ்டமர். கஸ்டமரை முதல்ல எப்படி மதிக்கனும்னு கத்துக்கங்க…. உங்க முதலாளிய கூப்பிடு… நான் அவர்கிட்டயே பேசிக்கறேன்……” என சத்தம் போட ஆரம்பித்தார் தேவநாதனிடம்.
பில் கௌண்டரில் இருந்த பெண் பயந்துபோய் பார்த்தாள் தேவநாதனை. அவனுக்கு இதுமாதிரியான வம்படிகள் எல்லாம் பிடிக்காது. ஸ்ட்ரெயிட் பார்வேட். முதலில் கைதான் பேசும். ஏற்கனவே பார்த்த அனுபவம் இருக்கிறது அந்த பொண்ணுக்கு. ஆதலால் உள்ளுக்குள் உதறல் வந்தது பில் போடும் பெண்ணுக்கு. எங்கே தனக்கும் திட்டு விழுமோ என கதிகலங்கி நின்றிருந்தாள்.
இதில் அந்த மனிதர் வேறு “கூப்பிடு உங்க முதலாளிய” என சொன்னதும் தலை சுற்றியது அந்த பெண்ணுக்கு. “ஆண்டவா இன்னைக்கு யார் முகத்துல முழிச்சனோ, காலையிலே உரண்டை ஆரம்பிச்சுடுத்து” என புலம்பிக் கொண்டிருந்தாள் மனதினேலேயே.
இந்தாள் வேற நேரங்காலம் தெரியாம இம்சை என மனதிற்குள்ளேயே திட்டித்தீர்த்தவள் “ஸார் இவங்கதான் எங்க முதலாளி…” என்றாள் முந்திக்கொண்டு அந்த மனிதரிடம்.
அவளுக்குமே எரிச்சலாக வந்தது. அந்த பொண்ணுங்களை பில் போட விட்டிருந்தா… இரண்டு நிமிஷத்தில முடிய வேண்டிய வேலையை…., இப்படி இழுத்து வம்பாக்கிட்டாரே… என்று. இன்னும் தேவநாதன் வேற என்ன பேசுவானோ என பயமாக இருந்தது, அந்த பில் போடும் பெண்ணுக்கு.
நிஷா இப்போது அஞ்சனாவை முறைத்தாள். தேவையா இதெல்லாம். இங்க வராம இருந்திருந்தா….. இதெல்லாம் நடந்திருக்குமா….. என்று இருந்தது…….. அவளது பார்வை.
அஞ்சனாவுக்கு உள்ளுக்குள்ளேயே கனன்று கொண்டிருந்தது கோவம். அங்கு நடந்திருந்த கலவரத்தில். இப்படி எல்லோரும் பார்க்கும்படி பேச்சுவாங்க வேண்டியதாகிவிட்டதே என்று.
அதுவுமில்லாமல் அங்கு தேவநாதன் வந்து நின்றதை எண்ணி இன்னும் தலையிறக்கமாக இருந்தது அவளுக்கு. எல்லாம் சேர்ந்து அவளுக்கு. உள்ளுக்குள் வேகத்தை கொடுத்தது.
அதில் பின்னால் நின்றவர் பேசியிருந்த பேச்சு…. வேறு இன்னும் கோவத்தை கூட்டியது.
அவரின் அருகில் சென்றவள், “முதல்ல நீங்க எப்படி அடுத்தவங்ககிட்ட பேசனும்னு தெரிஞ்சுக்கோங்க. நீங்க சொன்னதுக்கு எதுவும் பேசாமதான நாங்க திரும்பி போனோம். திரும்பவும் என்ன பேசினீங்க……?”
“நான் என்ன பேசினேன்……?”
“நீங்க என்னவோ சொல்லியிருக்கீங்க. அதுதான் அவளுக்கு கோவம் வந்து உங்ககிட்ட பேசியிருக்கா……. அவளைப்பத்தி எனக்கு நல்லா தெரியும். நீங்க எதுவும் சொல்லாம அவள் பேசமாட்டாள். துணி எடுக்க வந்தா, உங்க வேலைய மட்டும் பார்க்கனும். அடுத்தவங்கள பத்தி பேசவோ, கமென்ட் பண்ணவோ….. உங்களுக்கு ரைட்ஸ் இல்ல”.
“முதல்ல நீங்க வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்குங்க. எங்க….. எப்படி நடந்துக்கனும்னு கத்துக்கங்க…… அப்புறம் கஸ்டமர்ஸ்கிட்ட எப்படி பிகேவ் பண்ணனும்னு…….. அவருக்கு கிளாஸ் எடுக்கலாம்” என தேவநாதனைக் காட்டி சொன்னாள்.
அஞ்சனா பேசுவதை…….. கேட்டு அசந்து நின்றான் தேவநாதன். அவளையே வாய் திறக்காமல்… “ஆஹ்…..” என… பார்த்திருந்தான்.
திரும்பி தேவநாதனை கண்களாலேயே எரித்தவள், “என்ன அப்படியே மிட்டாய் கடைய பார்த்த மாதிரி நிக்கறீங்க…? அவர் மட்டும்தான்… உங்க கஸ்டமரா……? அப்ப நாங்கலாம் யாரு……?” என எகிறியவள்….. திரும்ப தேவநாதன் பதில் சொல்வதற்கு இடமே கொடுக்காமல், நிஷாவின் கையைப் பிடித்து இழுத்து சென்றுவிட்டாள் வேகமாக.
அவளையே பார்த்து நின்றான் சில நொடிகள். திரும்பி பில் கௌண்டரில் இருக்கும் பெண்ணிடம், கஸ்டமர்ஸ்குள்ள பேசி தகராறு ஆகறவரைக்கும் என்ன பண்ணீங்க…? உடனே சால்வ் பண்ண வேணாமா…? இரண்டுபேர்ல யாருக்காவது ஒருத்தருக்கு முதல்ல பில் போட்டு அனுப்பியிருந்தா…. இவ்வளவு பிரச்சினை ஆகியிருக்காது இல்ல.
இவர் இவ்வளவு பேசற வரைக்கும் வேடிக்கை பார்த்துட்டு இருப்பீங்களா….?
ஸார் நான் இங்க பில் போடறதுல கவனமா இருந்தேன் ஸார். அதனால என்ன நடந்ததுனு கவனிக்கறதுக்கு முன்னாடியே பிரச்சினையாகிடுச்சு.
ஏதாவது பிரச்சினைன்னா உடனே கூப்பிடமாட்டீங்களா என கடிந்தான்…. அதற்குள் அங்க க்யூ பெரிதாகியிருந்ததுத. சரி பில் ரெய்ஸ் பண்ணுங்க. இனி இப்படி நடந்தா…., .உடனே சால்வ் பண்ணனும்…., இல்லைனா போன் பண்ணி யாரையாவது கூப்பிடனும்…….. என முகத்தை இறுக்கமாக வைத்து கண்டித்தவன்… இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கங்க என இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து சென்றான்.
ஹப்பாடா…. தப்பிச்சோம்டா சாமி. இன்னைக்கு ஏதோ முதலாளி நல்ல மூட்ல இருந்தாரு போல…. நாலு வார்த்தையோட நிப்பாட்டிட்டாரு… என வேக வேகமாக அங்கு அவ்வளவு நேரம் பேசி பிரச்சினை செய்தவரை அழைத்து….. முதலில் பில் போட்டு கொடுத்து அனுப்பிவைத்தாள் அந்த பெண்.
தீபாவளி நேரமாதலால் கடையில் ஏற்கனவே கூட்டம். இதில் பில் போடாமல் நின்றிருந்ததால் இன்னும் அங்கே கூட்டம் கூடியிருந்தது. அந்த நேரத்தில் சத்தம் போடவோ… வேறு எதையும் பேசவோ எண்ணமில்லை அவனுக்கு. அதுமட்டுமில்லாமல் என்றுமில்லாமல் இன்று அஞ்சனா வேறு அவனைப் பார்த்து கடித்து சென்றிருந்ததால் மூளை கொஞ்சம் செயலிழந்திருந்தது அவனுக்கு.
அஞ்சனா நிஷாவின் கையைப் பிடித்துகொண்டு வெளியே செல்லும் சமயம் செல்வதுரை கடையினுள் நுழைந்தார். அஞ்சனா வெறும் கையுடன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குமளவு கடுகடு என வைத்து சென்றதை யோசனையானது.
எப்போது வந்தாலும் ஏதாவது வாங்காமல் செல்லமாட்டாள். இப்போது எதுவும் எடுக்காமல் சென்றதை யோசித்துகொண்டே கடையினுள் நுழைந்தார்.
அவனது அறைக்குள் நுழைந்த தேவநாதனுக்கோ இன்னும் சித்தம் தெளியவில்லை. அவள் பேசிச் சென்றதே விடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது காதில்.
ஆள் பார்க்க சாது மாதிரி இருந்துட்டு என்னா கோவம் வருதுயா…? பட்டாசு மாதிரி பட படன்னு வெடிச்சுட்டு போயிட்டா…. என எண்ணி சிரித்துக்கொண்டான் உள்ளுக்குள்ளேயே.
இவனுக்கு நினைவு தெரிவதற்கு முன்பே, சிறு வயதாக இருக்கும் காலத்திலேயே அத்தை குடும்பத்திற்கும் இவர்களுக்குமான உறவு விட்டிருந்தது. அஞ்சனாவை அவனுக்கு தெரிவதற்கெல்லாம் வாய்ப்பில்லை.
நான்கைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு விசேஷ வீட்டில் பார்க்கும் பொழுதுதான் அவனது வீட்டினரின் மூலம் அறிய நேர்ந்தது அத்தையின் குடும்பத்தையும், அத்தை மகளையும். அப்போதே ஆச்சர்யம்தான் அவளை நினைத்து.
அதன்பின் அவர்களது கடைக்கு வரும்பொழுது ஒன்றிரண்டு முனை பார்த்திருக்கிறான். அன்று கல்யாணத்தில்கூட அவளை பெரிதாக அவன் கண்டுகொள்ளவில்லை. இன்றுதான் முதல்முறையாக நேருக்கு நேர் அருகில் நின்று பார்த்தது, அவள் பேசிக் கேட்டது எல்லாம்.
நிஷாவுக்கு வருத்தமானது. தன்னால்தான் அஞ்சனா துணி எடுக்காமல் வந்துவிட்டாளோ… என உள்ளுக்குள் குற்றவுணர்வானது. தான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் அவளாவது எடுத்திருப்பாள் என வருத்தப்பட்டாள்.
“நிஷா, அஞ்சு, துணி எடுக்காம போனா…….. வீட்ல கேள்வி கேட்பாங்க. வா……. வேற கடைக்கு போய் எடுத்துட்டு போகலாம்”.
“அஞ்சனா, ம்ப்ச். அதெல்லாம் வேணாம் வா வீட்டுக்கு போகலாம். எனக்கு இப்ப துணி எடுக்கற மூடே இல்ல”.
“அச்சோ….. உங்க அப்பத்தா கேட்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாதுடி….. பேசாம வா…”
அஞ்சனாவுக்கும் தெரியும். துணி எடுக்க வந்துவிட்டு, எடுக்காமல் சென்றாள், லஷ்மி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. கடையில் நடந்ததை சொன்னால், அவ்வளவுதான் பொம்பளை பிள்ளையை தனியா அனுப்பாதன்னு சொன்னேனே கேட்டியான்னு அதற்கும் ரோகிணிக்குதான் திட்டு விழும்.
அதற்கு பயந்தே இருவரும், வேறு ஒரு துணி கடையில் தங்களுக்கான துணிமணிகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
தொடரும்.
error: Content is protected !!