Skip to content
Post Views: 185
அத்தியாயம் 18
பத்து நாள்கள் கழித்து மேகலை சாந்திக்கு அழைத்து விஷாலினியின் திருமண விசயத்தை சொன்னார். “என் மகன் ஆசைப்பட்டான்தான், அதுக்காக விருப்பமில்லாத பொண்ணை கட்டாயப்படுத்துற அளவுக்கு மோசமானவன் இல்ல.
அவன்தான் விஷாலினி வேணாம்னு விலகிட்டான்ல? அப்புறம் எதுக்கு இவ்வளோ அவசரமா கல்யாணம் பண்ற? அத்த இறந்து மூனு மாசம் கூட முடியாம நல்லதுல கலந்துக்க முடியாதுனு உனக்கு தெரியாதா மேகலை?” என்றார் கோபமாக.
மேகலை தெரிந்தேதான் இப்படி முடிவெடுத்தார். மகள் திருமணத்திற்கு தாய் வழி உறவினர் வரவேண்டும் என்ற ஆசை இருந்ததுதான். முக்கியமாக சாந்தி வரவை மனம் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதில் விஷாலினிக்கு விருப்பமில்லை.
Advertisement
மேகலை விஷாலினியை சம்மதிக்க வைக்க முயன்றார். ஆனால் அதற்கு விஷாலினி கொடுத்த பதில்கள் மேகலையின் எண்ணத்தை கை விட வைத்தது.
எனவே தாய் வழி உறவினர் வர முடியாத சூழல் பார்த்து தேதியை முடிவு செய்தார் மேகலை. அதோடு தனது மகளுக்கு முடிந்தவரை சீக்கிரம் திருமணம் நடத்தினால்தான் கிருஷ்ணன் மனம் மாறுவான் என்ற எண்ணமும் திருமணத்தை அவசரமாக நடத்த முக்கிய காரணமாக அமைந்தது.
“தெரியும் அண்ணி, ஆனா விஷாலினி இந்த வருசம் ஃபைனல் இயர். இந்த தேதியை விட்டா அதுக்கப்புறம் லீவ் போட வாய்ப்பே இல்லைனு சொல்லிட்டா. அதனாலதான் இந்த தேதில கல்யாணத்தை வச்சோம்.”
Advertisement
“இன்னும் ஆறேழு மாசம்தான? படிப்பு முடிஞ்சபின்ன வச்சிருக்கலாமே மேகலை? அதுக்குள்ள விஷாலினியோட கொஞ்சம் பேசி பழகியிருப்பேன், மாமா, உங்கண்ணன் மேல அவளுக்கு இருக்க கோபத்தை குறைச்சிருப்பேன். உன் கல்யாணத்துல பிரிஞ்ச குடும்பம் விஷாலினி கல்யாணத்துக்கு அப்புறமாவது சரியாகும்னு ஆசையா இருந்தேன்.
Advertisement
விஷாலினியை நேர்ல பார்த்த பின்ன மாமா அவளைப் பத்தித்தான் பேசிட்டிருக்கார். அத்த நகை மொத்தமும் விஷாலினிக்குதானு சொல்லிட்டிருக்கார்.
கிருஷ்ணனுக்கு விஷாலினி கிடைக்கலன்ற வருத்தம் இருந்தாலும், பேத்திக்காக இதுவரைக்கும் ஏதும் செய்ததில்ல, கல்யாணத்தையாவது ஜாம் ஜாம்னு நடத்தனும்னு சொல்லிட்டிருக்கார். ஆனா நீ நாங்க இல்லாமலே முடிவு பண்ணிட்ட” என்று குறைபட்டார் மிகுந்த வருத்தத்தோடு.
இதற்கு மேல் மறைப்பது தவறென “அதுக்கு விஷாலினி சம்மதிக்கனுமே அண்ணி” என்றார் மேகலை.
Advertisement
“என்ன மேகலை சொல்ற?” என அதிர்வாய் கேட்டு, “நீ எடுத்து சொன்னா கூடவா கேட்கமாட்டா?” என்றார் ஆற்றாமையோடு.
“சொல்லாம இருப்பேனா அண்ணி?” என குறைபட்டு, “இத்தனை நாள் இல்லாத பாசம் இப்போ எதுக்கு வந்திருக்குனு நான் புரிஞ்சிக்கலையாம்”
“அவளுக்கு என்ன புரிஞ்சதாம்?”
நாம வேணும்னு நினைச்சிருந்தா பாட்டி நம்மளை கேட்டப்போவே உங்க அப்பா இல்ல அண்ணன் யாராது போன் செய்து நம்மளை வர சொல்லியிருக்கலாமில்ல? பாட்டியோட கடைசி ஆசையை நிறைவேத்தக் கூட அவங்க ஈகோ இடம் கொடுக்கல.
உங்க அண்ணி போன் செய்யவும் ஆச்சு. இல்லைனா பாட்டி இறப்புக்கு கூட நாம போயிருக்கமாட்டோம். அவங்களும் அதைப்பத்தி கவலைப்பட்டிருக்கமாட்டாங்க. தப்பு செய்த தங்கையை தள்ளி வச்ச பெருமைலையே இருந்திருப்பாங்கன்னு சொல்றா.
யார் எப்படின்னாலும் எங்கண்ணி என்னோட உறவா இருக்கத்தான் நினைச்சாங்க. நான்தான் மறுத்துட்டேனு சொன்னேன்.
உறவா இருக்கனும்னு நினைச்சவங்க எதுக்கு புருசனுக்கு தெரியாம திருட்டுத்தனமா பேசினாங்க. திருட்டுத்தனமா பேசினதாலதான நீங்க இனி பேச வேண்டாம்னு சொன்னிங்க… எத்தனை பேர் எதிர்த்தும் பாட்டிம்மா நம்மளை விட்டுச்சா? அதுமாதிரி உங்கண்ணன்கிட்ட என் நாத்தனாரோட நான் பேசுவேனு சொல்லியிருக்கலாமில்ல?
இந்த இருபது வருசத்துல திருவிழா, பிள்ளைகள் பிறந்தநாள்னு எத்தனை கொண்டாடியிருப்பாங்க? அங்க ஒருத்தி தனியா இருக்காளே… நல்ல நாள்லயாவது போன் பண்ணி விசாரிக்கலாம்னு தோணியிருக்கா அவங்களுக்கு? தோணாது.
ஏன்னா… அவங்களை பொறுத்தவரை தப்பு செய்த மேகலைக்கும், அவ பொண்ணுக்கும், தாத்தா கட்டின வீட்டையும், பார்த்துக்க பாட்டிம்மாவையும் அனுப்பி வச்சதே பெரிய விசயமா இருந்திருக்கு. இருந்துட்டு போகட்டும். அதை நான் குற்றம் சொல்லல.
ஆனா இத்தனை வருசத்துக்கு அப்புறமும் அவங்க பெருமையை காட்ட நமக்கு செய்ய நினைக்குறாங்க பாருங்க… இதை என்னால ஏத்துக்கவே முடியாதுனு சொல்றாண்ணி” என்றார் மேகலை.
இத்தனை யோசிக்கிறாளா என்று வியந்த சாந்தி “உண்மையா உங்கண்ணன் இப்போ ரொம்ப வருந்தறார் மேகலை” என்றார் வருத்தமாக.
“எனக்கு புரியுது அண்ணி. அவங்க காலம் தாழ்ந்து நம்மளை புரிஞ்சிக்கிட்ட மாதிரி நீயும் ஓர் நாளைக்கு புரிஞ்சிப்ப. ஆனா அப்போ எத்தனை பேர் உயிர் போயிருக்குமோனு சொன்னேன்.
பரவால்லம்மா, அப்படி ஒன்னு நடந்தா அதுக்கான தண்டனையை நான் அனுபவிச்சிக்குவேன். என் குற்றவுணர்வை போக்க யார் முன்னவும் போய் நிக்கமாட்டேனு சொல்றா.
எனக்கு அழுகையே வந்துடுச்சு. உன்னை பாட்டி வளர்த்த மாதிரிதான் என்னையும் என் அப்பாம்மா வளர்த்தாங்க. என் அண்ணனும் அண்ணியும் என்மேல ரொம்ப பாசமாத்தான் இருந்தாங்க. நான் செய்த நம்பிக்கை துரோகத்தை தாங்க முடியாமத்தான் ஒன்னுமேல ஒன்னுனு எல்லாம் தப்பா போய்டுச்சுனு சொன்னேன்.
நீ சொல்றது தப்பும்மா, என் பாட்டி என்னை வளர்த்ததை விட நூறு மடங்கு அதிகமா உன்னை வளர்த்துருக்காங்க. பாட்டிம்மா வீட்டுல நீ இருந்த ரூம்ல உன்னோட சின்ன வயசு போட்டோலயிருந்து ஃபங்ஷன் போட்டோ வரை பார்த்தேன். நல்லா இளவரசி மாதிரி வளர்த்துருக்காங்க.
என்னை பொறுத்தவரை இந்த வீடு பெரிய சொத்துதான். ஆனா உனக்கு அப்படியா? அப்படி பட்ட அரண்மணையில வளர்ந்துட்டு, என் எதிர்காலத்துக்கு வேண்டி பூ கட்டி சேமிச்சிருக்கிங்க. அங்க வீட்டை பார்த்த பின்னதான் இந்த வீட்டுல வாழப்பழக ஆரம்பத்துல எவ்வளோ கஷ்டப்பட்டுருப்பிங்கனு புரிஞ்சிக்கிட்டேன்.
கருவுல இருக்க குழந்தையையே அழிக்கமாட்டேனு சொன்ன நீங்க… நான் பிறந்த பின்னாடி வேற கல்யாணம் செய்ய கண்டிப்பா சம்மதிக்கமாட்டிங்கனு புரிஞ்சிருப்பாங்கதான?
அப்போ புரியலனாலும், நான் வளரும்போதாவது புரிஞ்சிருப்பாங்கள்ல? ஆசையா பெத்து வளர்த்த மக இல்லாம நம்ம பேத்தி ஃபங்ஷனை நடத்தக்கூடாதுனு பாட்டி சொல்லியிருப்பாங்கதான?
ஜெகதீசன் பொண்ணை பிடிக்கலனாலும், நீ மட்டுமாவது வந்துட்டு போ மேகலைனு உங்கண்ணன் உன்னை கூப்பிட்டிருக்கலாமில்ல? ஏன் கூப்பிடல? அவ்வளோ ஏன்? பாட்டியை அழைச்சிட்டு போக வந்த உங்கப்பா ஒரு வாய் சோறாவது சாப்பிட்டு போனாங்களா? இல்லையே…
அப்படி என்னதான்ம்மா நீ தப்பு செய்திட்ட? காதலிச்ச. நம்பினவன் நல்லவனு நினைச்சிட்ட. அந்தாள் ஏமாத்துக்காரன் தெரிஞ்சும் உங்கண்ணன் பேச்சை மீறி என்னை பெத்துட்ட.
அவங்க பேச்சை கேட்டு வேற கல்யாணம் செய்திருந்தா, ஊரார் முன்னாடி அந்தாள் பொண்டாட்டி பேசினதெல்லாம் மறந்திருப்பாங்க. உன்னையும் மன்னிச்சிருப்பாங்க.
ஆனா நீ அதை செய்யல. நான் வேணும்னு நினைச்சிட்ட. தங்கை புருஷன் ஏமாத்துக்காரன், அந்தாளால தங்கை வாழ்க்கை வீணாகிடுச்சுன்றதை விட, தங்கை நம்ம பேச்சை கேட்கலன்றதுதான் இத்தனை வருசத்து பகைக்கு காரணம். ஆக… பகையோட ஆணிவேரே நான்தான்.
இன்னைக்கும் நான் ஏமாத்துக்காரனோட பொண்ணுதான். ஆனா அவங்க மகன் விரும்பவும் தங்கை மகளா போய்ட்டேன். நான் இன்னொருத்தரை விரும்பறேனு சொல்லியும் மகனுக்கு கேட்க வந்தாங்களே… இப்போ மட்டும் காதல் சரியானு கேக்குறா அண்ணி. அவ கேக்குறதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியல. நான் யாருக்குனு பார்க்கட்டும்?” என்றார் வருந்திய குரலில்.
விஷாலினி கேட்கும் அனைத்தும் நியாயமானவையே. சாந்திக்கும் வாதாட திராணியில்லை. ஆனாலும் மகன் சொன்னதையும் சொல்லிவிட வேண்டும் என்று, “உறவுக்காரியா கூட விஷாலினி இங்க வரமாட்டா. அவளை கல்யாணம் செய்யும் எண்ணத்தை விட்டுட்டேன். ஆனா இந்த வீட்டு வாரிசு அவள். அவளுக்கானதை கொடுத்துடுங்கனு கிருஷ்ணன் சொன்னான் மேகலை” என்றதற்கு மேகலை பக்கம் பதிலில்லை.
மேகலையை புரிந்தவராய், “அப்போ இனியும் கூட நம்ம உறவு நிலைக்கப்போவதில்லையா மேகலை?” என்றார் சோர்ந்த குரலில்.
“அப்படியில்ல அண்ணி. எங்களுக்கு பண உதவி, சீர்னு மட்டும் ஏதும் வேண்டாம். மத்தபடி நாம பேசுறதுக்கு அவ அனுமதி தேவையில்ல” என்றார்.
“பண உதவி வேணாம்ன்றது உன் விருப்பமா? இல்ல விஷாலினி விருப்பமா மேகலை?”
சங்கடம்தான் என்றாலும், “இரண்டு பேர் விருப்பமும்தான் அண்ணி. எனக்கு உங்க உறவு வேணும். இருபது வருசமா அன்பை காட்டி வளர்த்த அப்பா, அண்ணன் உறவும் வேணும். ஆனா சீர், பணங்காசுனு எதுவும் வேண்டாம். இதுல என் பொண்ணோட தன்மானம் அடங்கியிருக்கு” என்று தன் மனதையும் சொன்னார்.
மிகுந்த வருத்தத்தோடு “சரி மேகலை, நான் வைக்கிறேன்” என்க, “அண்ணி, நாளைக்கு நல்ல நாள். விஷாலினிக்கு புடவை எடுக்கலாம்னு இருக்கோம். அங்க காஞ்சிபுரம்தான் வரோம். நீங்களும் வந்திடுங்க” என்று கோரிக்கையாக சொல்லி, கடையின் பெயரையும் சொன்னார் மேகலை.
“சரி மேகலை, வந்திடறேன்” என்று இணைப்பை துண்டித்தார் சாந்தி.
இங்கே மேகலை பிரபாவதியிடம் அனைத்தும் சொல்லி வருந்திக்கொண்டிருக்க, அங்கே சாந்தி தன் கணவனிடத்தில் சொல்லிக்கொண்டிருந்தார் வருத்தத்தோடு.
வேலவன், “ம்… விஷாலினி சொல்றது சரிதான். அந்தபுள்ளைக்கு ஏதும் செய்யலன்றதை விட, அதை பெத்ததாலதானே மேகலையை தள்ளி வச்சோம்?” என வருந்தி, “ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் நம்மளை எதிர்பார்த்திருக்கு சாந்தி, ப்ரியா பெரிய பொண்ணானப்போ நாம சொல்லியிருக்கனும். நீயும் அம்மாவும் எவ்வளவோ சொன்னிங்க. நான்தான் கேட்காம விட்டுட்டேன். என் பேச்சை கேட்டு அப்பாவும் விலகியிருந்துட்டார்.
ஒரு காலகட்டத்துக்கு அப்புறம்தான் அம்மாவை ஒதுக்கினவங்க நமக்கும் வேணாம்னு முடிவெடுத்திருக்கும்போல. நாம இவ்வளோ ஒதுக்கின போதும் அம்மா சாக கிடக்குறாங்கனு தெரிஞ்சதும் மேகலையை கூட்டிட்டு வந்துருக்கா.
அம்மா சாவுக்கு அந்த பிள்ளமாதிரி நான் கூட அழல, ஏன்னா… எனக்கு அம்மாவோட சேர்த்து அப்பா, நீ, பிள்ளைகள்னு ஒரு குடும்பமா இருந்தோம்.
ஆனா அந்த பிள்ளைக்கு மேகலையை விட்டா நம்ம அம்மாதான உறவா இருந்திருக்கு… அதான் அத்தனை அழுகை. இதுக்கும் அந்த பிள்ளைக்கு பதிமூனு வயசிருக்கும்போதே அம்மா இங்க வந்திடுச்சு. பத்து குடுத்தா ஆயிரமா திருப்பி கொடுக்கும் குணமுள்ள பிள்ளையை ஒன்னுத்துக்கும் ஆகாத பிடிவாதத்தால இழந்துட்டேன்.
இத்தனை வருசதுக்கப்புறம் யோசிச்சு என்ன பிரியோஜனம்?” என வருந்தி, “மேகலை, விஷாலினி விருப்பத்துக்கே இருந்துக்கலாம். அப்படியிருந்தாலாவது என்னை மன்னிக்கிறாங்களா பார்க்கலாம்” என்றார் ஏக்கத்தோடு.
*** *** *** *** ***
விஷ்ணு விஷாலினிக்கு அழைத்தான். இவள் வகுப்பில் இருக்கவே அழைப்பை ஏற்கவில்லை. ‘க்ளாஸ் முடிஞ்சதும் கால் பண்றேன்’ என்று செய்தி அனுப்பினாள்.
அடுத்து மூன்று மணிநேரம் வரை அழைக்கவேயில்லை விஷாலினி. பின்னே விடுதியறைக்கு வந்து குளித்து விஷ்ணுவிற்கு அழைத்தாள்.
error: Content is protected !!