Skip to content
Post Views: 1,922
அத்தியாயம் 2
நிர்மலமான வானம். நிசப்தம் ஏன் இன்னும் இருக்கிறது என்று பறவைகள் கிறீச்சிட்டு உணவு இருக்கும் திசை நோக்கிப் பறந்துக் கொண்டிருந்தன.
Advertisement
அறைக்குள் இருந்து வழக்கம்போல் வலசைப் பறவைகளைப் பார்த்தான் ஆதித்யா.
மருத்துவர் யார் துணையோடாவது மெல்ல நடக்கச் சொல்லியிருந்தார். அரவிந்த் இன்னும் எழுந்து வரவில்லை. எனவே அவனுக்காக காத்திருந்தான் ஆதி.
Advertisement
Advertisement
காலைக் காற்றுக்கு ஒரு வாசம் உண்டு. விடியலின் அத்தனை அழகும் வித வித மலர்களாக விரிந்து கொடுத்து நாசியில் சுவாசமாய் ஏறும். ஆதியும் அதை நுரையீரலுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தான்.
நந்தவனத்தில் ஒரு தேவதை போல் மாடித்தோட்டத்திற்கு நடுவே அமர்ந்திருந்தாள் கண்மணி.
Advertisement
அவள் வழக்கமாக சாதகம் செய்யும் நேரம். ஆதிக்கு அது அமிர்த நேரம். நாளில் பாதி நேரம் அவள் பாடிய பாடல்களை தான் காதில் ஒலிப்பானுடன் கேட்டுக் கொண்டு இருப்பான். ஆனால் நேரில் பாடச் சொல்லிக் கேட்டால் முகத்தை திருப்பிக் கொள்வாள்.
“தாயே யசோதா” என்று தோடி ராகத்தில் ஆரம்பித்து பாடினாள். ஜன்னல் வழி அவளின் குரல் அவன் காதில் வந்து தேனை ஊற்றியது.
“யசோதா
பாலனென்று தாவி அணைத்தேன் – அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலமாகச் செய்வதெல்லாம்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிகவாகுதடி”
தம்புராவை மீட்டிக் கொண்டு அவள் பாட, ஆதியின் நரம்புகள் சுருதி மீட்டின.
கண்மணி முகம் அவன் மனக்கண்ணிலாடியது. இரு மீன்கள் எப்போதும் முத்தமிடுவதை போன்ற அழகான இதழ்கள்.
‘இந்த அழகான மீன்களை கொத்தும் மீன் கொத்தி நான் ஆவேனா..’ எப்போதோ ஒரு மோக வேளையில் அவன் அவளிடம் பிதற்றியது நினைவிற்கு வந்தது.
எத்தனை நாட்கள் ஆயிற்று கண்மணியின் இதழ்களை தீண்டி..
தீண்ட தீண்ட இன்னும் இன்னும் என்று கேட்கும் நிமிடங்கள் அவை. உள்ளுக்குள் ஓடிய நினைவுகள் அவனை கண்மணியை நோக்கி செலுத்த ஆரம்பித்தன.
தட்டுத்தடுமாறி கைத்தடியை பிடித்து நின்று விட்டான். சுவற்றை பிடித்து ஏற்கனவே நிற்க பழகியதால் ஓரளவு நிற்க முடிந்தது. மாடிக்கு செல்ல லிஃப்ட் வசதி இருந்ததால் மன வலிமையில் அதனுள் செல்லும் வரை திடமாக இருந்தான். ஆனால் மாடிக்கு சென்ற பின் கதவு திறந்ததும் தடாலென கீழே விழுந்தான்.
சத்தம் கேட்டு திரும்பிய கண்மணி ஆதியை அங்கு எதிர்பார்க்கவே இல்லை.
தம்புராவை கீழே வைத்தவள் எழுந்து ஓடி வந்து அவனை தூக்கினாள். காலின் வலி அவன் முகத்தில் பிரதிபலித்தது.
அவனை நெஞ்சோடு சாய்த்தவள் கண்கள் தன்னையறியாமல் கலங்கியது. ‘எப்படி இருந்தவன் இப்படி ஒரு அடி எடுத்து வைக்கும் போது கீழே விழுந்து கிடக்கிறான்’.. நினைக்க நினைக்க மனம் கதறியது.
அவள் திட்டப்போகிறாள் என்று எதிர்ப்பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி தான். கோபத்தை சிந்தும் அவள் கண்கள் கண்ணீரை சிந்திக் கொண்டு இருந்தன.
பெண் மனம் இது தானே. ஆணுக்கு அது புரிந்து விட்டால் இனிய இல்லறம் அங்கு துவங்கி விடும்.
“கண்மணி..” அவன் அழைப்பே காதலை, ஏக்கத்தை, தாகத்தை, மோகத்தை சொல்லியது. ஓர் ஆயிரம் ஆண்டு நேசத்துக்கு தவித்த ஜீவனின் குரலாக அது ஒலித்தது.
“எழுந்திரிங்க.” அவள் வேறு எதுவும் பேசவில்லை. அவனின் முகம் அவளது தாடைக்கு அருகில் இருந்தது.
கண்மணியின் சுவாசம் அவனுக்கு மூச்சு முட்ட செய்தது. அவளின் இருதயத்தில் மேலும் கீழுமாய் இறங்கி ஏறிய மூச்சில் அவன் தடுமாறிப் போனான்.
இதழ்களை குவித்து அவளின் கன்னத்தை நோக்கிப் போனான்.
“அம்மா.. என்ன ஆச்சு..” அரவிந்த் குரல் கேட்டு அப்படியே அவளின் நெஞ்சத்தில் சாய்ந்தான் ஆதி.
“மாமா.. கீழ விழுந்துட்டாங்க அரவிந்த். என்னால தூக்க முடியல. கொஞ்சம் ஒரு கைப்பிடி..”
அரவிந்தும், கண்மணியும் ஆதியை தூக்கி மீண்டும் அவன் அறைக்கு கூட்டி வந்தனர்.
“மாமா. நான் தான் காலையில வரேன்னு சொன்னேன் இல்ல.. எதுக்கு தனியா மேல போனீங்க” ஆதியை அமர வைத்து அவன் காலில் அடிப்பட்ட இடத்தை தடவிக் கொடுத்தான்.
“அம்மா இருக்காங்களேன்னு தான் நடக்க போனேன் அரவிந்த். லிஃப்ட்ல நிக்க முடிஞ்சது. ஆனா மாடியில தடுமாறிடுச்சு.”
“மாமா.. நீங்க இன்னும் கொஞ்ச நாள்ல நல்லா ஆகிடுவீங்க. ஆனா அதுக்குள்ள எதுக்கு அவசரப்படறீங்க.”
அரவிந்த் பேசிக்கொண்டே இருந்தான். கண்மணி ஆதியின் சட்டையை கழட்டி வேறு சட்டையை மாட்டி விட்டாள். அவன் கண்களை அவள் கண்கள் சந்தித்து மீண்டது.
அவனும் அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அவள் கண்களில் அவன் மேல் உள்ள பரிதாபத்தை படிக்க முடிந்ததே தவிர, அவளின் மனதை படிக்க முடியவில்லை.
இயந்திரத்தனமாய் செய்தாலும் ஆதிக்கு வலித்து விடுமே என்ற அவளின் கவனம் அவள் கையின் மென்மையில் தெரிந்தது.
அடிப்பட்டு கிடந்த போது கூட, மருத்துவமனையில் மட்டுமே செவிலியர்கள் அவனுக்கு உதவியாக இருந்தார்கள். வீட்டிற்கு வந்ததும் உடை மாற்றுவதில் இருந்து உணவு தரும் வரை கண்மணியே பொறுப்பு ஏற்றுக் கொண்டாள்.
அவன் மனம் மாறுவதற்கு அது கூட ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். அருவெறுப்பு, அசூயை, கோபம், வெறுப்பு இல்லாமல் ஒரு தாயை போல அவள் காட்டிய பரிவு அவனை மனிதனாக யோசிக்க வைத்தது.
‘அப்படி உனக்கு என்ன தந்து விட்டேன் கண்மணி.. வலியும், வேதனைகளையும், ஏமாற்றத்தையும் தவிர..’ மீண்டும் மீண்டும் அவன் யோசித்து, அவளிடம் யாசித்தது காதலை தான். அதை மட்டும் கல்லுளிமங்கியாக தர மறுத்தாள்.. மறுத்துக் கொண்டே இருக்கிறாள்..
அரவிந்தின் கேள்விகளுக்கு ஆதியின் வாய் ‘உம்’ கொட்டினாலும் கண்கள் என்னவோ கண்மணியை சுற்றியே வந்தது.
“அமைதியா படுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லு அரவிந்த். தேவையில்லாம அவரா நடந்து எதாவது ஆனா இன்னும் மாசக்கணக்குல இப்படியே இருக்க வேண்டியது தான்”
ஆதிக்கு அவளின் கோபங்கள் கூட இப்போது காதலை தான் பிரதிபலிப்பது போல் இருந்தது.
‘இதென்ன பதின் வயது தடுமாற்றம் போல உள்ளம் தவிக்கிறது. ஒரு இதழ் ஒற்றலுக்காக உடல் துடிக்கிறது.. இது தான் காதலா.. வயது முதிர்ந்தாலும்.. இளமை திரும்புகிறதா.?’ ஆதி அவளின் கடைக்கண் பார்வைக்கு காத்திருந்தான். அவள் கோடிட்டு காட்டி விட்டால் இந்த உலகத்தையே பிரட்டி எடுத்து விடுவான்.
உள்ளமெங்கும் நிறைந்தவள் எதிரில் இருந்தும் அவளின் அன்பை பெற முடியாத தன் துரதிருஷ்டத்தை சபித்துக் கொண்டான் ஆதி.
மிக பிரம்மாண்டமான அரங்கம். மின் விளக்குகள் வெளிச்சத்தை அள்ளித் தெளித்து இருந்தன. ஒரு பக்கம் இசைக்குழுவினர், ஒரு பக்கம் மிகப்பிரபலமான பாடக, பாடகிகள், எதிர்கால பிண்ணனி பாடகர்களாக உருவாவதற்கு வந்திருந்த இளம் தலைமுறையினர், அவர்கள் அத்தனை பேரையும் பார்பபதற்காக வந்திருந்த மக்கள் என பிரபல தொலைக்காட்சியின் அடுத்த திரைக்குரலுக்கான தேடல் நிகழ்ச்சி துவங்க இருந்தது.
இசைக்குழுவின் பிரதான இசைக்கலைஞராக அரவிந்த் இருந்தான். அவனை நெருக்கமாக காமிராக்கள் படம்பிடிக்கும் போதெல்லாம் நேரிலும், தொலைக்காட்சியிலும் அவனை ரசிக்கும் ரசிகைகள் ஏராளம்.
ஆதியின் மருமகன், மயில் ராவணனின் பேரன் என்று எப்போதும் அவன் அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. பிரபல பாடகி கண்மணியின் மகன் என்று கூட சொல்ல மாட்டான். மிக நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அவனை யாரென்று தெரியும்.
நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. பாடகர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் திறமைகளை காண்பித்தார்கள்.
இளம் ரோஜா வண்ண ஆடையில் அன்று மலர்ந்த ரோஜா போல் இருந்தாள் அடுத்து வந்த மதுரா.
குஜராத்திய தந்தைக்கும், தமிழ் தாய்க்கும் பிறந்தவள். தமிழின முக வடிவமும், வடக்கத்திய நிறமும் கொண்டவளாக அனைவரையும் வசீகரித்தாள்.
ஜோன்புரி ராகத்தில் மெல்லிய ஆலாபனையை பாடியவள் தொடர்ந்து, ‘முன்பே வா என் அன்பே வா..’ என்று பாடினாள்.
‘நீரும் செம்பலச்சேரும் கலந்தது போல.. ‘ என பாட, நடுவர்கள் தலையிட்டு அவளை திருத்தினர். நிகழ்ச்சி தடைப்பட்டது. அவளுக்கு சொல்லித்தந்த அந்நிகழ்ச்சியின் முன்னாள் பாடகர் அருகே ஓடி வந்து மீண்டும் அவளுக்கு
‘செம்புலச்சேரும்..’ சொல்லித்தர அவள் தடுமாறி போனாள். அவள் வாயில் செம்பல என்று தான் ஒலித்ததே தவிர, செம்புலச்சேறும் என்று அழுத்தம் திருத்தமாக வரவில்லை. சுற்றி இருந்தவர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அவளிடம் சரியான உச்சரிப்பும் ராகமும் சேரவில்லையென்றால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டி இருக்கும் என்று சொன்னதும், அவளுக்கு அழுகை வந்தது.
ஏற்கனவே மெல்லிய சோகம் இழையோடும் அவள் குரல் இன்னும் சோகத்தை சுமந்து ஒலித்தது.
“காதல் பாடல் சோக ராகத்தில் இருந்தால் ரசிக்கப்படுமா” நடுவர் கேட்க மீண்டும் தடைப்பட்டது நிகழ்ச்சி. அழகான பெண்களை முன்னிறுத்துவதில் தானே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ரசிக்கப் படுகிறது.. அதனால் எப்பாடு பட்டாவது மதுராவை நிகழ்வில் தொடர்ந்து இருக்க வைக்க வேண்டும் என்ற ஒருங்கிணைப்பாளர்கள் அவள் சரியாக பாடும் வரை விடவில்லை. அவள் தமிழை புரிந்துக் கொள்வாளே தவிர தமிழில் எழுதவோ, பேசவோ தெரியாது. அழுகையில் கண்கள் இரண்டும் பளபளத்தன.
பத்து நிமிடம் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
ஏனோ அந்த சின்னஞ்சிறு முகத்தை பார்க்க பார்க்க அரவிந்திற்கு பாவமாக இருந்தது.
தன்னிடத்தில் இருந்து எழுந்து வந்தான்.
அவனை அறிமுகப்படுத்திக் கொண்டு, “ரொம்ப அழகா பாடற.. ஆனா அதைவிட ரொம்ப பயப்படற. இது ஒரு கமர்ஷியல் ப்ரொக்ராம். நீ உன்னை பலவீனப்படுத்திக்க இடம் கொடுத்தா, அது தான் அவங்களுக்கான வியாபாரம்..அமைதியா அஞ்சு நிமிஷம் உனக்கு ரொம்ப பிடிச்சதை நினைச்சுக்க. அதிலேயே மனசை செலுத்து. அப்புறமா வந்து பாடு..ம்ம்ம். அது செம்…புலம்..புலம்.திரும்ப திரும்ப அந்த வார்த்தையை மனசில் நிறுத்தி பாடு. உன்னையே அந்த கதாநாயகி இடத்தில் நினைச்சுக்க. பாட்டுக்கான பாவமும் சரியா வந்திடும்.”
அரவிந்தை மதுரா எதிர்ப்பார்க்கவில்லை. அவன் இசைக்கும் சிறு துணுக்குகள் லட்சக்கணக்கில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும். அப்படிப்பட்டவன் அவள் அருகில் வந்து இத்தனை ஆதூரமாக பேசுவான் என்று நினைக்கவில்லை. அவள் கண்கள் பட்டாம்பூச்சியை போல் படபடத்தது. அவளின் பார்வை அரவிந்தின் கண்களில் விட்டில் பூச்சியை போல் விழுந்து நிலைக்கொண்டது.
தலையை ஆட்டினாள். பத்து நிமிட இடைவெளி முடிந்து மீண்டும் ஒளிப்பதிவு தொடங்கியது.
அரவிந்தின் தலையசைப்பும், கண்களை மூடி திறந்த அந்த விழியசைவும் அவளுக்குள் நம்பிக்கையை தந்தது.
அட்சரம் பிசகாமல் உருகி உருகி காதலில் தவித்து ஸ்ரேயா கோஷலைப்போலவே பாடினாள். அரங்கம் கைத்தட்டியது. நடுவர்களின் பாராட்டுக்கு இடையில் மதுராவின் கண்கள் அரவிந்துக்கு நன்றி சொன்னது.
ஒளிப்பதிவு முடிந்ததும் அரவிந்த் வயலினை பெட்டியில் வைத்து விட்டு, வெளியே வந்து ஓய்வாக ஓரிடத்தில் அமர்ந்தான். தயங்கி தயங்கி அவனருகில் வந்தாள் மதுரா.
நிழலாடியது. அரவிந்தின் முகத்தில் சிரிப்பாடியது.
“நல்லாவே பாடிட்ட மதுரா. நிச்சயம் உன் குரலுக்கான அங்கீகாரம் நல்ல முறையில் கிடைக்கும்..” அரவிந்த் விழி மலர்ந்து, இதழ் விரித்து பாராட்டியதை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் மதுரா.
“ம்ம்.. உங்களுக்கு தான் தாங்க்ஸ் சொல்லனும். நீங்க மட்டும் தைரியம் கொடுக்கலன்னா நான் பாடிருக்கவே முடியாது. என்னோட கனவும் இங்கேயே முடிந்திருக்கும். அதுக்கப்புறம் நான்.. உயிரோட இருந்திருக்க மாட்டேன்” அவள் நிதானமாக சொல்லவும், அரவிந்த் திடுக்கிட்டான்.
இருபது வயதில் இருக்கும் பெண்ணிற்கு கனவு நனவாகவில்லை என்றால் தன் உயிரை போக்கி கொள்ளும் எண்ணம் எப்படி வரும்?
“ஹேய்.. கனவு இன்னிக்கு நடக்கலன்னா நாளைக்கு நடக்கப் போகுது.. இதுக்கு சாகறன்னு பெரிய விஷயத்தை பேசற. அந்த அளவு உன் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா..?”
“என் மேல நம்பிக்கை இருக்குறதால தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். ஆனா இந்த கனவு என்னோடது இல்ல. வேற ஒருத்தரோடது. அவங்க கனவுக்காக வந்துட்டு அது நிறைவேறலன்னா நான் உயிரோடு இருந்து பலனே இல்ல..”
தோளை குலுக்கி உதட்டை பிதுக்கினான் அரவிந்த். கண்ணில் ஒரு மின்னல் கடந்தது மதுராவிற்கு.
“லுக். நீ யாரோட கனவை வேணா நிஜமாக்கு. ஆனா அது நிறைவேற வரைக்கும் பொறுமை வேணும். ஒரே முயற்சில எல்லாமே எல்லாருக்கும் கிடைக்கனும்னா அது நடக்காத காரியம்.. ஆல் தி பெஸ்ட்.. பை.” என்று எழுந்து அவளை தாண்டி நடந்து சென்றான். ஆனால் அவள் அந்த இடத்திலேயே ஒரு தாழ்வழுத்த மண்டலம் போல் நிலைக்கொண்டாள்.
அரவிந்த் தன் காரை பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்து கிளம்பினான். வேகமாக செல்ல முயன்ற அவனது கார், ப்ரேக்கிட்டு நின்றது.
எதிரில் மஞ்சள் நிற சல்வாரில் ஒருத்தி முறைத்துக் கொண்டு கைக்காமித்து நிறுத்தினாள்.
அரவிந்த் அவளை பார்த்தான். அருகில் வந்து முன் கதவை திறந்து வண்டியில் ஏறினாள். அவனுக்கு பிடித்த லாவண்டர் நறுமணம் சட்டென காரை நிறைத்தது.
“அரவிந்த். ஏதோ அந்த புதுப்பொண்ணுக்கு தைரியம் சொல்றேன்னு பார்த்தா, அவ கூட காபிகேஃப் வரைக்கும் வந்து உட்காந்து அரட்டை அடிச்சிட்டு வர. என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசவே இல்ல.. நான் கோபமா இருக்கேன்.”
“அவகிட்ட நான் அரட்டை அடிக்கல. அவளா வந்து தாங்க்ஸ் சொன்னா. அப்புறம் கனவு அது இதுன்னு சொல்ல ஆரம்பிச்சா. நான் அப்படியே டாட்டா சொல்லிட்டு வந்துட்டேன். நீ வேற இடத்தில் இருந்தா, நான் எப்படி உன்னை பாக்க வர முடியும்?.”
“நான் உன்னை மானிட்டர்ல பாத்துட்டே தானே இருக்கேன். அது ஏன் உனக்கு தோணமாட்டேங்குது.”
“கெரியரை கெரியரா பாக்கனும்னு உனக்கு எத்தனை முறை சொல்றது. அங்க உட்காந்துட்டு என்னை ஏன் பாக்கற? அப்படியே பாக்கறது உன் இஷ்டம்னா… என் வேலையில் கவனமாக இருக்கறது என் இஷ்டம்.”
“என்னால உன்னை பாக்காம இருக்க முடியாது. உயிரை பாதி எடுத்து தனியா வைக்க முடியுமா? ஓகே.. நம்ம டீல் ஞாபகம் இருக்கு இல்ல..என்னை நீ பாக்க வரலைன்னா எனக்கு நீ என்ன கேட்டாலும் வாங்கித் தரேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்க.”
“ம்ம்.. விட மாட்டியே. சரி என்ன வேணும் கேளு..”
“வழக்கம் போல ஒரு கேப்புசினோ.. வித் டபுள் கீரீம்.”
“வா வெளிய போலாம்.. இங்க வேண்டாம்.” என்று அவளை பூந்தமல்லியில் இருக்கும் இன்னொரு கடைக்கு கூட்டிச் சென்றான்.
சுற்றிலும் காதலர்கள்..மெல்லிய வீணை நாதம். காதலில் கிறங்கினார்களோ இல்லையோ இசையில் கிறங்கி ஒன்றும் பேசாமல், ஒருவர் கண்களில் இன்னொருவர் குடியிருந்தனர்.
கடைசி மூலையில் இருந்த கேபினில் அமர்ந்தான் அரவிந்த். அவன் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள் அவள்.
கேப்புசினோக்கள் உயர்ந்த கண்ணாடி கோப்பைகளில், அதில் இருந்த சிறிய ஸ்பூன்களுடன் காதலர்களை போலவே சிணுங்கிக் கொண்டு வந்தன.
ஒரு துளி க்ரீமை வாயில் எடுத்து வைத்து அது கரைவதற்கு நேரம் எடுத்து, மீண்டும் க்ரீமை மெதுவாக ஸ்பூனால் தள்ளி ஒரு மிடறு காபியை அருந்தினாள். கண்கள் மூடி நாவின் சுவையரும்புகளில் காபியின் சுவையையும், மணத்தையும் மிதக்க விட்டாள். உதட்டினோரம் ஒரு சிரிப்பு.
நெஞ்சம் ஒரு முறை மீண்டும் தாவென்று கேட்டது. காபி தம்ளரில் அவளின் செக்க சிவந்த இதழ்கள் லேசாக பட்டது. மீண்டும் ஒரு மிடறு அவள் வாயில் வந்ததும், அதே ரசிப்பும், சிரிப்பும். இப்பொழுது உதட்டின் மீது வெள்ளை வானவில்.
அரவிந்த் அலைபேசியில் இருந்த கவனத்தை திருப்பி அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“இவ்ளோ பெருசாகியும் இந்த மாதிரி குடிக்கறதை நிறுத்தவே இல்ல இல்ல..”
அவளின் உதட்டின் மீது இருந்த வெள்ளை கோடுகளை டிஷ்யூ பேப்பரால் துடைத்து விட்டான். நாசியில் உரசியது அவனின் ஒரு விரல் நுனி.
மாயங்களும், மாற்றங்களும் எப்போதும் விரல் நுனியில் தானே நிகழ்கின்றன.
அந்த ஸ்பரிசத்திற்கு தானே இந்த சிறுபிள்ளைத்தனத்தை அவள் தவறாமல் செய்வாள்.
காபிக்கு இணையாக அவனை ரசித்தாள். அரவிந்தின் கண்கள் மீண்டும் அலைபேசியில் தாழ்ந்தன.
error: Content is protected !!