Skip to content
Post Views: 13,585
காவ்யா அறையை விட்டு வெளிவரவேயில்லை. சித்தார்த் பெண்கேட்டதை பிரபாவதியிடம் சொல்லியிருந்தாள் விஷாலினி. பிரபாவதி பொறுத்தவரை பெண்களுக்கு ஒருமுறைதான் திருமணம். இளம் விதவைகளுக்கு மறுமணம் தவறில்லைதான்.
ஆனால் கணவன் மனைவி பிரச்சனைக்காக மறுகல்யாணம் என்பது பிடிக்கவில்லை என்பதோடு மிகப்பெரிய குற்றம்போல் எண்ணினார். சித்தார்த் காவ்யாவை கேட்டதால்தான் இத்தனை அவசரமாய் காவ்யாவின் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்கிறான் என்று பெரும் கவலைக்குள்ளானார் பிரபாவதி.
விஷ்ணு வரவும், “சித்தார்த் நல்ல பையன்தான். ஆனா நம்ம காவ்யாக்கு பிடிக்கனுமே விஷ்ணு. வற்புறுத்தி கல்யாணம் செய்யிறது தப்பில்லையா? அப்படி செய்தாலும் காவ்யா சந்தோசமா வாழமாட்டா விஷ்ணு. சித்தார்த் வாழ்க்கையும் வீணாகிடும்” என்று மன்றாடினார் பிரபாவதி.
விஷ்ணு விஷாலினியை முறைக்க, “பெரியவங்ககிட்ட சொல்லனும்தான?” என்றாள் பாவம்போல்.
Advertisement
“ம்மா, சித்தார்த்தை காவ்யாக்கு பிடிக்கலனா கட்டிக்கொடுக்க வேண்டாம். ஆனா காவ்யா விசயத்துல இனியும் காலம் தாழ்த்தினா அப்பாக்கும் உங்களுக்கும் மனஉளைச்சல் அதிகமாகும். காவ்யா பி.ஹெச்.டி முடிச்ச பின்ன மறுகல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம், முதல்ல டிவோர்ஸ் பண்ற வேலையைப் பார்ப்போம்” என்றான்.
“என்னங்க அமைதியா இருக்கிங்க?” என்று கணவனைப் பார்த்தார் ஆற்றாமையோடு.
“என்னை என்ன பண்ண சொல்ற பிரபா? என் கல்யாணத்துல காவ்யா விசயம்தான் அதிகமா பேசினாங்க. காவ்யா வாழ்க்கையை நாம கெடுத்தது போல பேசுறாங்கனு விஷ்ணு வருந்தறான்.
Advertisement
ஏன்… நீயும் கூட காவ்யா வாழ்க்கையை சரி பண்ணிட்டு விஷ்ணுக்கு பண்ணலாம்னுதான சொன்ன? டிவோர்ஸ் பண்றதை ஏன் தப்பா பார்க்குற? காவ்யாவுக்கான விடுதலையா பாரு.
Advertisement
பொண்டாட்டி வேணும்னு நினைச்சிருந்தான்னா நாலு வருசமா சும்மா இருப்பானா? இப்படிபட்டவனோட வாழ்றதை விட, அத்துவிட்டுட்டு வேற வாழ்க்கையை அமைச்சிக்கிறது தப்பில்ல” என்றார் கோபாலன்.
பிரபாவதி இராமனைப் பார்க்க, “விஷ்ணு இன்னைக்கு எடுத்த முடிவை ஒரு வருசம் முன்னவே நான் சொன்னேன், ஆனா நீங்க கேக்கல. சரி வரலைனா அத்துவிடுறதுல தப்பே இல்ல. கல்லானாலும் கணவன்னு பொண்ணுங்க இருக்கிறதாலதான் திவாகர் மாதிரியான ஆம்பிளைங்களுக்கு திமிர் கூடிப்போகுது” என்றார் உண்மைக் கோபாமாக.
குடும்ப ஆண்மகன்கள் முடிவெடுத்த பின்னே நாம் ஒருத்தி தடுத்து ஒரு பிரியோஜனமுமில்லை என்ற இயலாமையோடு தளர்ந்து அமர்ந்துவிட்டார் பிரபாவதி.
Advertisement
“முதல்ல எனக்கும் அதிர்வாத்தான் இருந்தது பிரபா, விஷ்ணு எடுத்து சொன்ன பின்னாடி அதுதான் சரினு தோணுது” என்று மனைவிக்கு ஆறுதலளித்து, “பொண்ணு வாழ்க்கையை நினைச்சுகிட்டு பையனை கண்டுக்காம விடுற, விஷ்ணு கோவிலுக்கு போகனும்தான? அதுக்கான ஏற்பாட்டை செய்” என்றார் கோபாலன்.
ஆறு மணிபோல் விஷ்ணுவும் விஷாலினியும் கோவிலுக்கு கிளம்பினர்.
சுவாமி தரிசனம் முடித்து ஓரிடத்தில் விஷ்ணு அமர, விஷாலினியும் அருகே வந்தமர்ந்தாள். பேபி பிங்க் பட்டு சாரியும், அளவான நகைகளும் அணிந்திருந்தாள். விஷாலினிக்கு மிக அழகாகத்தான் இருந்தது.
ஆனால் ஆடை அணிகலன்களை விட, சூடியிருந்த மொட்டு மல்லிகை, முழங்கைவரை வைத்திருந்த மருதாணி, நெற்றியில் குடிகொண்டிருந்த குங்குமம், கைகளை நிறைத்திருந்த கண்ணாடி வளவிகள், கால் விரலை அணைத்திருந்த மெட்டி என்று இவைகள்தான் விஷ்ணுவை மொத்தமாய் ஈர்த்தது.
மனைவியை ரசனையோடு பார்த்தவன் “ம்… நல்லாத்தான் இருக்க” என்றான் ரசனையாக.
காவ்யாவை நினைத்திருந்த விஷாலினிக்கு விஷ்ணுவின் ரசிப்பு ஆற்றாமையை உண்டாக்க, “போங்க… நீங்க தப்பு பண்றிங்க” என்றாள்.
காவ்யாவைப் விசயத்தை சொல்கிறாள் என்று விஷாலினியின் மனம் அறிந்தபோதும், “இதென்ன வம்பா போச்சு, பொண்டாட்டியை ரசிக்கிறது தப்பா?” என்றான்.
“காவ்யாக்கா நிச்சயம் இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிக்கமாட்டாங்க” எனும்போதே, “அவ பேச்சை விடுறியா?” என்றான் கடுப்போடு.
காவ்யாவின் மனநிலையை நினைத்தால் வாதாடத்தான் தோன்றியது விஷாலினிக்கு. ஆனால் தற்போது பேசினால் இன்னும்தான் கோபப்படுவான் என்றும், பொது இடம் என்றும் அமைதியானாள்.
காவ்யாவை நினைத்து இவளோடு சண்டைபோட போட வேண்டாம் என்று “காலேஜ்க்கு எத்தனை நாள் லீவ் போட்டுருக்க?” என்றான் கோபமில்லாமல்.
“நாளைக்கு முக்கியமான க்ளாஸ் இருக்கு, அம்மாதான் டையர்டா இருக்கும், நாளைக்கும் லீவ் போடுனு பிடிவாதம் பண்றாங்க”
மேகலை எதை நினைத்து சொல்லியிருப்பார் என்று புரியவே, புன்னகைத்தவன், “உனக்கு நாளைக்கு காலேஜ் போகனும்னா போ. ஆன்ட்டிகிட்ட நான் சொல்றேன், நானும் காலைலயே கிளம்பிடுவேன்” என்றான்.
சரியென்பதாய் தலையசைத்தாள். “அங்க பாரு” என்றான்.
விஷ்ணு காண்பித்த திசையைப் பார்க்க, அங்கே ஓர் இளஞ்சோடி அமர்ந்திருந்தனர். புன்னகையோடு ஆண் கேட்கும் கேள்விக்கு, நாணத்தோடு பெண் பதிலளித்துக்கொண்டிருந்தாள். இருவரும் இடைவெளி விட்டு அமர்ந்திருந்த போதும் அவர்களின் பார்வையில் அத்தனை நெருக்கம் இருந்தது.
“நானும்தான் கல்யாணம் செய்திருக்கேன்” என்று பெருமூச்சிழுத்து, ‘என் தலையெழுத்து’ என்று முணகினான் பொய் கோபத்தோடு.
“அவங்களுக்கு ஏதும் பிரச்சனையிருக்காது. அதனால சந்தோசமா இருக்காங்க. நாம அப்படியா? நம்ம கல்யாணத்தன்னைக்கே தங்கையை டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ண வச்சிருக்கிங்க. இதுக்கு நீங்க காவ்யாக்காவோட பேசாமலே இருந்திருக்கலாம்” என்றாள் ஆற்றாமையோடு.
“ஆமா… அவங்க அப்படியே சந்தோசமா வாழ்ந்திட்டிருந்தாங்க, நான் பிரிச்சு டிவோர்ஸ் பண்ண வைக்கிறேன்” என முறைத்து, “அவ வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன். நீ உன் வேலையை மட்டும் பாரு” என்றான் அதட்டலாக.
விஷாலினியின் முகம் மேலும் வாடிட, “கிளம்பலாம்” என்றெழுந்தான்.
காவ்யாவை நினைத்து நான் தனது தனிப்பட்ட சந்தோசத்தை இழக்கிறேன் என்று கோபமாக இருக்கிறான் என்றும், புதுமணத் தம்பதியருக்கான சந்தோசத்தை எதிர்பார்க்கிறான் என்றும் புரிந்தது.
ஆனாலும் காவ்யாவின் விருப்பமின்மையோடு விஷ்ணுவின் வற்புறுத்தலால் நடந்தேறிய விவாகரத்து நிகழ்வை ஏற்கமுடியாமல் போகவே என்ன முயன்றும் இயல்பாய் இருக்க முடியவில்லை விஷாலினியால். இருவரும் அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தனர்.
வீடு வந்ததும் விஷாலினியின் மனம் அன்னையைத் தேடியது. “நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று விஷ்ணுவிடம் சொல்ல, “மாத்த வேண்டாம் விஷாலினி” என்றார் பிரபாவதி.
“அத்த” என்று சங்கடமாய் பார்க்க, “இங்க வா” என்று மருமகளை கிச்சனுக்கு அழைத்துச் சென்று, “இன்னைக்கு உனக்கு சாந்திமுகூர்த்தம். பொண்ணை பெத்தவங்களுக்கு இந்த சடங்குக்காக மகளை அனுப்ப தவிப்பாத்தான் இருக்கும். மேலைக்கு சங்கடம் கொடுக்காத. அம்மாவை காலைல பார்த்துக்கலாம், இப்போ காவ்யாவோட போய் இரு. டிபன் செய்துட்டு கூப்பிடறேன்” என்றார்.
பொண்டாட்டி வேணும்னு இருந்திருந்தா இத்தனை வருசம் விட்டுவைப்பானா? அவன் வந்து காவ்யாவை கூட்டிட்டு போவானு இன்னும் எத்தனை வருசம் காத்திருக்கிறது?
காவ்யாக்கு இள வயசுன்றதால இன்னைக்கு சித்தார்த் பொண்ணு கேட்டான். இன்னும் அஞ்சாறு வருசம் கழிச்சு யாராவது பொண்ணு கேட்பாங்களா? காவ்யா புருசன் நாற்பதுல கூட மறு கல்யாணம் செய்துக்குவான். நம்ம பொண்ணை அத்தனை வருசம் வச்சிருக்க முடியுமா? விஷ்ணு எடுத்த முடிவுதான் சரி.
கட்டின பொண்டாட்டியையே மதிக்காதவன் நம்மளை மதிச்சு அழைக்க வருவானு பகல் கனவு காணுறதை விட, அவனை அத்து விட்டுட்டு வேற வாழ்க்கையை தேடுறதுதான் சரி. இப்போ ஏத்துக்க கஷ்டமா இருந்தாலும் வரும் காலத்துல எல்லாம் சரியாகிடும். காவ்யா சந்தோசத்தை மனசுல வச்சுதான் விஷ்ணு இந்த முடிவை எடுத்திருக்கான்.
இரண்டாவது கல்யாணம் கொலகுத்தம்னு நினைச்சிட்டிருக்காத. அப்படி நினைச்சுதான் மேகலை வாழ்க்கை போச்சு. கட்டினவன் சரியில்லைனு தெரிஞ்ச பின்ன வேற வாழ்க்கையை தேடுறது தப்பே இல்ல. என்று மனைவியை தேற்றியிருந்தார் கோபாலன்.
கவணன் மீதும், மகன் மீதும் நம்பிக்கை வைத்து, மகளுக்கு தைரியம் சொல்லி, தன்னையும் தேற்றியிருந்த பிரபாவதிக்கு, தற்போது மகன் மருமகள் சந்தோசம் முக்கியம் என்று தோன்றிட, சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாட்டை செய்ய சொன்னார் கணவனிடம்.
தனதறைக்கு செல்ல எத்தனித்த விஷ்ணுவிடம், “உன் ரூமை க்ளீன் பண்ணிட்டிருக்காங்க விஷ்ணு, படுக்கனும்னா அங்க போ” என்று தனதறையை காண்பித்தார் கோபாலன்.
தனறையை அலங்கரித்துக் கொண்டிருப்பது புரிய, “இல்லப்பா, எனக்கு கால் பண்ணனும்” என்று மாடிக்கு சென்றான் விஷ்ணு.
சித்தாத்திற்கு அழைத்து திவாகர் பற்றி சொல்லி, “நான் சொன்னதுக்காக டிவோர்ஸ் பண்ண கையெழுத்து போட்டுட்டா, ஆனா யார் சொன்னாலும் வேற கல்யாணம் செய்துக்கமாட்டா. அப்படி நிலைமை வந்தா செத்துடுவா” என்று காவ்யா நிலையையும் சொல்லி, “நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்துக்கோ” என்றான் தன்மையாகவே.
“சரிடா” என்று சித்தார்த்தும் நல்லவிதமாகவே சொல்ல, பணி குறித்து இருவரும் பேசிக்கொண்டிருந்தனர் ஒருமணி நேரம் வரை. “போய் தங்கச்சியை பாருடா, அவங்களுக்கான நேரத்தை என்னோட செலவிட்டு தேவையில்லாத என்னை வில்லனாக்கிடாத” என்று சிரிப்போடு இணைப்பை துண்டித்தான் சித்தார்த்.
“என்னை யோசிச்சு உன் சந்தோசத்தை இழக்காத, விஷ்ணு காரணமில்லாம ஏதும் செய்யமாட்டான்” என்று தன் வேதனை மறைத்து விஷாலினிக்கு அறிவுரை வழங்கியபடி அலங்கரித்தாள் காவ்யா.
*** *** *** *** ***
விஷ்ணு அறைக்குள் வந்தாள் விஷாலினி. கோவிலுக்கு வந்த சாரியில் வருவாள் என்று விஷ்ணு எதிர்பார்த்திருக்க, பன்னீர்ரோஜா வர்ண பட்டில், பெரிய நகைகள் ஏதும் அல்லாமல் அளவான நகையோடு, மணக்கும் மல்லிகை சூடி வந்திருந்தாள்.
ஆம், மீண்டும் காவ்யா மீதான மனக்குறையை பகிர்ந்து விஷ்ணுவை கோபப்படுத்த விரும்பவில்லை விஷாலினி. சில நாள்கள் போகட்டும், பிறகு தன்மையாக எடுத்து சொல்லலாம் என்றெண்ணியிருந்தாள்.
அன்று ஆசையாய் அணைத்தவன் அணைப்பை ஏற்காமல் நான் நின்றது, அதனால் விஷ்ணு அடைந்த கோபத்தையும், இன்று கோவிலில் வேறொரு தம்பதியினரைப் பார்த்து ஏக்கம் கொண்டதையும் நினைத்தவள் இன்றைய நாள் கணவனுக்கானது என்பதை புத்தியில் பதித்து, இன்று விஷ்ணுவிற்கு மறுக்கக்கூடாது என்று மனதளவில் தன்னை தயார் படுத்தித்தான் அறைக்குள் நுழைந்தாள்.
இன்றைய நாளில் நிகழ்வை அறியாத பெண்ணில்லை விஷாலினி. அறைக்குள் நுழையும் போது சுலபம் என்று தோன்றிய விசயம், தற்போது விஷ்ணு அறைக்கதவை தாழிட்டதும் மிகக்கடினம் போல் தோன்ற, நொடி நேரத்தில் வியர்க்க ஆரம்பித்தது.
விஷ்ணுவின் முகம் பார்க்க முடியவில்லை. சற்று நேரம் தலைகுனிந்திருந்தவள், எத்தனை நேரம் இப்படியே நிற்பது? எதிர்கொள்ளத்தானே வேண்டும் என்று அச்சம் விலக்கி, நின்ற இடத்திலிருந்தே பால் எங்கே என்று தேடினாள்.
விஷாலினி அருகே வந்தவன், “எனக்கு பால் வேண்டாம். உனக்கு வேணும்னா குடி” என்று நீட்டினான் பால் டம்ளரை.
“எனக்கும் வேண்டாம், இப்போதானே சாப்பிட்டேன்” என்றாள்.
மீண்டும் பாலை ஃப்ளாஸ்கிலேயே ஊற்றி டேபிள் மீது வைத்தவன், அறை வெளிச்சத்தை குறைத்து, “படு” என்று தானும் படுத்தான்.
பெரும் தயக்கம்தான் என்றாலும் விஷாலினி கட்டிலில் அமர, “நான் சொன்னா படுக்க வருவியா? இப்படியே தூங்கிடுவியா?” என்றெழுந்தவன், கபோர்டில் இருந்து அவளின் உடையை எடுத்து கொடுத்தான் சின்ன சிரிப்போடு.
‘என் டிரஸ்சா?’ என்ற யோசனையோடு அவன் நீட்டியதை பார்க்க, அன்று காஞ்சிபுரத்தில் அவள் விட்டு வந்திருந்த இரவு உடை அது.
சேரியோடு படுப்பதும் பழக்கமில்லாதது ஆதலால் உடையை வாங்கி குளியலறைக்குள் சென்றாள். மேலுடையை எடுக்க, அதனுள் இருந்த உள்ளாடையைப் பார்த்ததும் குப்பென சிவந்தாள் விஷாலினி.
உடையை மாற்றியும் விஷ்ணு முன்னே வர பெரும் அவஸ்த்தையாக இருக்க, கையில் பட்டுப்புடவையோடு நின்றிருந்தாள். ஐந்து நிமிடத்திற்கு மேலாகியிருக்க, “என்ன? பாத்ரூம்க்குள்ளயே தூங்கப்போறியா?” என்றான் சிரிப்போடு.
இவள் வெளியே வர, அவளின் சிவந்த முகத்தை பார்த்தவாறு கையிலிருந்த உடைகளை வாங்கி தனியே வைத்தவன், “என் மேல செம்ம கோபத்துல இருக்கேனு எனக்கு தெரியும். கோபமில்லாத மாதிரி நடிச்சு என்னைப் படுத்தக்கூடாது. சமத்தா படுத்து தூங்கிடனும்” என்றான் அன்பு கட்டளையாக.
இதென்ன தூங்க சொல்லிட்டான் என்று வியந்தவாறு மெத்தையில் அமர்ந்தவள் விஷ்ணுவைப் பார்த்தாள். என்ன என்பதாய் புருவம் தூக்கியிறக்கினான்.
ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்து இவள் படுக்க, விஷ்ணுவும் படுத்தான். ஐந்து நிமிடம் வரை அமைதியாய் இருந்தவள், நான் இவன் மேல கோபமா இருக்கேனு நினைச்சு தூங்க சொல்லியிருப்பானோ என்ற யோசனையோடு மெல்ல அவன்புறம் நகர்ந்து படுத்து இடைவெளியை குறைத்தாள்.
தற்போது இருவருக்கும் நிறைய இடைவெளி என்றும் இல்லை, நெருக்கம் என்றும் இல்லை. ஒருமுறை புரண்டால் இருவரும் நெருங்கிடும் இடைவெளியில் படுத்திருந்தனர்.
இன்றைய தினம் விஷ்ணுவை ஏமாற்றக்கூடாது என்று மீண்டும் தோன்ற, விஷ்ணுவின் முதுகை பார்த்திருந்தவள், “காலைல எத்தனை மணிக்கு கிளம்புவிங்க?” என்று மெல்லிய குரலில் பேச்சை துவக்கினாள். இவள் புறம் புரண்டு படுத்தவன், “உன்னை காலேஜ்ல விட்டுட்டு கிளம்பறேன்” என்றான்.
விஷாலினி மீண்டும் எதோ கேட்க வர, “நேத்து நைட்டும் தூங்கல, செம்ம டையர்ட்ல இருக்கேன். தூங்கு” என்று கண்மூடினான்.
விஷாலினி படிப்பு முடியட்டும் என்று விஷ்ணு விலகியிருக்க, அதையறியாத விஷாலினியோ… நீங்க செய்த தப்பை சொன்னா கோபம் வருமா? தூங்கினா தூங்குங்க, எனக்கென்ன வந்தது? என்று இவளும் கண்மூடினாள்.
error: Content is protected !!