Skip to content
Post Views: 6,025
“எந்த பூவிலும் வாசம் உண்டு.. எந்த பாட்டிலும் ராகம் உண்டு..
எந்தன் வாழ்விலும் அர்த்தம் உண்டு!
புது உறவு.. புது நினைவு.. லலலா.. லலலா.. லலல்ல.. லால..”
மது உற்சாகமாய் பாடிக் கொண்டே குளித்துக் கொண்டிருந்தாள்!
Advertisement
“அக்கா, எவ்வளவு நேரமா குளிப்ப? எனக்கு காலேஜுக்கு நேரம் ஆகுது, சீக்கிரம் வாக்கா..” வெளியில் இருந்து மதுவை அழைத்துக் கொண்டிருந்தாள் மானு.
“ஏய்.. நீ வேணுமின்னா, மாடியில போய் குளி! அக்காவ ஏன் டிஸ்டர்ப் பண்ற?” அவளைத் திட்டினான் மாது.
“இருந்து இருந்து, மது அக்கா முகத்துல இப்ப தான் சந்தோசமே தெரியுது!
Advertisement
அவ இப்ப தான் ஹேப்பியா இருக்கா, சந்தோசமா, பொறுமையா குளிச்சுட்டு வரட்டுமே!” மதுவின் சந்தோசத்தைக் கெடுக்க கூடாது என்று நினைத்தான் அவன்!
Advertisement
“இல்லண்ணா, என் ஷாம்பூ, சோப் எல்லாம் இங்க தான் இருக்கு! அதான்.
ம்ம். சரி. ஓகே.. நான் போய் வேற ஏதாவது வேலை இருந்தா பார்த்துட்டு இருக்கேன், டிரஸ் எடுத்து வச்சுட்டு இருக்கேன்.
அக்கா பொறுமையாக வரட்டும்!” அவளும் மதுவின் சந்தோசத்தைக் கெடுக்க விரும்பாமல் போய் விட்டாள்.
Advertisement
மது மட்டுமா, மாதுவின் முகத்திலும், மானுவின் முகத்திலும் கூட இப்போது தான் ஒரு சந்தோசத்தைப் பார்க்க முடிகிறது!
எப்போதும் அவர்கள் கண்ணில் ஒரு சின்ன சோகம் இருந்து கொண்டே இருக்கும்!
அதுவும் மானு.. அந்த டீன் ஏஜில் பெற்றோர் இருவரின் மறைவு அவளுள் சொல்ல முடியாத, அல்லது தெரியாத ஒரு ஏக்கம், சோகத்தை எப்போதுமே வைத்துக் கொண்டிருந்தது!
கடைக்குட்டியான அவளின் அந்த பீலிங், இன்னொரு கடைக்குட்டியான ரகுவிற்கு நன்றாகவே புரிந்தது!
எனவே அவன், தன்வி, தாருவுடன் அவளையும் எங்காவாது வெளியே கூட்டிப் போனான்!
மானு, அவள் அப்பாவிற்கு பிறகு அதிகம் ஒட்டிக் கொண்டது, அவளின் ரகு அத்தானிடம் தான்!
அவனும் ஒரு தந்தையைப் போல அவளிடம் நடந்து கொண்டான் ரொம்ப கேரிங்காக!
மானுவிடம் இப்படி என்றால், மாதுவிற்கு ஒரு நல்ல மென்டர்(Mentor) ஆக இருந்தான்.
மாதுவுக்கு டை கட்ட தெரியவில்லை. அவன் வீட்டில் அப்பாவும் மாமாவும் வேஷ்டி சட்டை தான்! அதனால் அவனுக்கு சொல்லித் தர யாரும் இல்லை!
பார்மல் டிரஸ்சிங் , பிளேசர் டை அணிந்து கொள்வது பற்றி எல்லாம் ரகு தான் அவனுக்கு சொல்லிக் கொடுத்தான்.
கூடவே மாதுவின் இங்கிலிஷை திருத்தினான்!
மாதுவும் ரகுவை ஒரு யுனிசெக்ஸ் பியுட்டி பார்லருக்கு கூட்டிக் கொண்டு போய் அவனுக்கு பொருத்தமான ட்ரெண்டியான ஹேர் ஸ்டைல்க்கு மாற்றினான்.
ரகுவை மீசை வைக்க சொன்னான்.
“ஏண்டா?”
ரகு எப்போது கிளீன் ஷேவ் பண்ணியிருப்பான்.
“இல்லைத்தான்.. அது வந்து..“
நிச்சயதார்த்த விழாவில், எல்லோரும் நலுங்கு வைக்கறேன், விபூதி வைக்கிறேன் என்று அவனை ஒரு நாதசுரம் வாசிப்பவர் போல் ஆக்கி விட்டார்கள்!
அதனால் மாது, “அத்தான், கல்யாணம் வரைக்குமாவது மீசை வைங்க ப்ளீஸ்” என்று கேட்டுக் கொள்ள, ரகுவும் அதன் படியே செய்தான்.
ரகு, மது அவன் நான் வெஜ் சாப்பிட்டு விட்டு அவளை நெருங்கும்போது கொஞ்சம் சங்கடப் படுகிறாள் என்று உணர்ந்து, அவன் சாப்பிடும் ஒரே ஒரு நான் வெஜ் அயிட்டமான மீனையும் கூட சாப்பிடுவதை நிறுத்தியே விட்டான்!
இது மதுவுக்கு கூட தெரியாது!
மதுவின் பாட்டியை ஒரு புல் ஹெல்த் செக்கப்புக்கு வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு போனான்.
போய், எல்லாம் பண்ணி விட்டு, “பாட்டி, ஸ்ட்ராங் பாட்டி! இந்த வயசுலயும் ஹெல்த்தியா இருக்காங்க மது! சூப்பர்! ஹெச் பி எல்லாம் கூட நல்லாவே இருக்கு மது!” ஆச்சர்யப்பட்டான்!
“அந்த காலத்துல நல்லா மில்லெட்டா சாப்பிட்டு வளர்ந்த கட்டை! அப்படி தான் இருக்கும்” சிரித்தாள் மதுவும்!
இப்படி மதுவின் வீட்டிற்கு, மூத்த ஆண் தலைவன் இல்லாத, அந்த குடும்பத்திற்கு அறிவிக்கப்படாத வீட்டுத் தலைவன் ஆகி விட்டான் ரகு!
அவர்கள் அவனை அப்படி தான் நடத்தினார்கள்!
அங்கே ரகுவின் வீட்டில், அவளை ஒரு மஹாலட்சுமி ஆக ஏற்கனவே டிக்ளேர் செய்துவிட்ட பெரியப்பா, நல்ல மருமகள் ஆக என்று சர்டிபிகேட் கொடுத்து விட்ட மாமனார், நாத்தனார் ராகினி ..
அப்புறம் மதுவை ஒரு சகோதரியாக எண்ணும் வைஷு, ராகவன்!
“மதூ.. மதூ” என்று சதா பின்னால் சுற்றும் குழந்தைகள்!
ராஜுவும் வீட்டுக்கும் ரகுவை ஒரு நாள் ராஜு அழைத்துக் கொண்டு போனான்.
அங்கே மது மாப்பிள்ளை, மது மாப்பிள்ளை என்று ஒரே ராஜ உபசரிப்பு அவனுக்கு!
ராஜுவின் அப்பா அவனிடம் பேசினார்.
“ரொம்ப கஷ்டபட்டுடுச்சுப்பா அந்த பொண்ணு! காலேஜுக்கு காரில் போய் வந்துட்டு இருந்த பொண்ணு தான் அது!
உங்க அளவு வசதி இல்லன்னாலும், ஓரளவு அவங்களும் வசதியா தான் இருந்தாங்க.
ஓவர் நைட்ல தெருவுக்கு வந்த மாதிரி ஆகிடுச்சு அவங்க நிலைமை!
அவங்க அப்பாவால கூட இந்த திடீர் வறுமைய ஏத்துக்க முடியாம செத்துப் போய்ட்டாரு!
ஆனா இந்த பொண்ணு, தானும் அதை ஏத்துக்கிட்டு, அவங்க அம்மா தம்பி தங்கச்சிங்களுக்கு தைரியம் சொல்லி, கூடவே கேசையும் நடத்திட்டு, வேலைக்கும் போயிட்டு..
அந்த வயசுக்கு அது ரொம்ப பெரிய சுமை தான்ப்பா!”
“ஆனா ஒண்ணு, எந்த சூழ்நிலையிலும் அது, யார் கிட்டயும் இறங்கிப் போகவே இல்லை!”
“ரொம்ப ஸெல்ப் ரெஸ்பெக்ட் உள்ள பொண்ணு!”
“இவ்வளவு ஏன்? அது என் பொண்ணு மாதிரி! ராஜு அவங்க வீட்டுல ஒருத்தன் மாதிரி இருப்பான்.
ஆனா என்கிட்ட அது ஒரு நாளும் பண உதவி வாங்கிட்டதே இல்லை!”
“பண உதவிய கூட விடு.. இங்க என் டிரைவர தெரிஞ்சு வச்சுருக்கவன் கூட என் பேர யூஸ் பண்ணி, போற இடத்துல காரியம் சாதிச்சுப்பான்,
ஆனா மது ஒரு நாளும் என் இன்ப்ளுயன்ச யூஸ் பண்ணிட்டதே இல்ல!
ரொம்ப நல்ல பொண்ணுப்பா அது. ரொம்ப கஷ்டப்பட்டுட்ட பொண்ணு!
இனியாவது, உன் மூலமா அது சந்தோசமான இருக்கட்டும்! நீ அத நல்லா வச்சுப்ப தானே தம்பி?”
“ஸுயூர் சார், இது என்ன இப்படி கேட்டுட்டீங்க? அவ என் தேவதை!
இனி அவள் வாழ்க்கையில் கஷ்டம்னு ஒண்ணு வரவே வராது!” ரகு அவர் கைப்பற்றி உறுதியளித்தான்!
“சார்ன்னு கூப்பிடாதேப்பா, அவ என் பொண்ணுன்னா, நீ என் மாப்பிள்ளை! அதனால மாமான்னு கூப்பிடு!”
“சரி மாமா!”
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் நன்றாகவே போய்க் கொண்டிருந்தன.
கல்யாணத்திற்கு பந்தல் கால் போடும் வரை மதுவை அவர்கள் வீட்டிற்கு போக அனுமதி கொடுத்திருந்தார் பட்டு பாட்டி!
மது இன்றும் அங்கே தான் இருக்கிறாள்.
பெரியப்பா கேட்டார், “மது இன்னிக்கு என்ன பாட்டு பாடலாம்?”
“ம்ம். கண்ணன் பாட்டு.. அதாவது கண்ணா.. கண்ணான்னு வரப் பாட்டு வச்சுக்கலாமா?”
“ம்ம் பேஷா..”
ரகு இன்னும் வந்திருக்க வில்லை. அதனால், மது பாடினாள்.
“கண்ணனே நீ வரக் காத்திருந்தேன், ஜன்னலைப் பார்த்திருந்தேன்
கண் விழி தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்!”
பாடிக் கொண்டே தன்விக் குட்டிக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் கண்ணனும் வந்தே விட்டான்!
வந்தவன் அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.
“ஏய், மது டார்லிங் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி நீ என் ரூமுக்கு வந்துட்டு தான் போகணும்!”
அவள் மொபைலை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, தன்வி,
“ம்ம் அடுத்த பாட்டு?” என்றாள்.
“சின்ன கண்ணன் அழைக்கிறான்,
என் செல்ல கண்ணன் அழைக்கிறான்,
ராதையை, பூங்கோதையை…
அவள் மையல் கொண்ட ரகசிய ராகத்தை பாடி..”
அவள் பாடினாள்!
அதற்குள் தன்விக்கும், தாருவிற்கும் ஏற்பாடு செய்து இருந்த ஹோம் டுயுசன் டீச்சர் எக்ஸாம் நெருங்குகிறது என்று சீக்கிரமே வந்து விட,
அவருக்கும் காபி ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு, அவளை அவர்கள் படிக்கும் அறைக்கு அனுப்பி வைத்தாள் மது.
இங்கே பெரியப்பவைத் தேடி, அவரிடம் பேச பழைய நண்பர் ஒருவரும் வந்து விட்டார்.
அவர்கள் இருவரும் அவரின் அறைக்கு பேச சென்று விட்டனர்.
ரகு எல்லாத்தையும் CCTV யில் பார்த்து விட்டும் மீண்டும் மதுவை அழைத்தான்.
அவள் போனவுடன்,
“ஏய் மது, பெரியப்பாவுக்கு மட்டும் தான் பாடுவியா? உன் நந்துவுக்கு கிடையாதா?”
“ஆமா நான் பெரிய எம் எஸ் பாருங்க, பாடச் சொல்லி ஆளாளுக்கு கேக்குறாங்க! நான் சும்மா அவர் சந்தோசத்துக்கு ரெண்டு ரெண்டு வரி பாடிட்டு இருக்கேன்..அதைப் போய்..”
“இப்ப எனக்காக பாட போறியா இல்லையா?“
“உடனே கோபம் வந்துடுமே உங்களுக்கு, இருங்க கதவை சாத்திட்டு வரேன்.”
அப்ப பயங்கர ரொமான்ஸ் பாட்டுப் போல, அதான் நம்ம டார்லிங் கதவ எல்லாம் சாத்துது!
அவள் பாடினாள்.
“கண்ணன் ஒரு கைக்குழந்தை..
கண்கள் சொல்லும் பூங்கவிதை..
……
தொடர்ந்து பாடினாள்.
“அன்னமிடும் கைகளிலே ஆடி வரும் பிள்ளை இது.”
உன்னருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லைஅது.”
என்று பாடி. ஆராரிரோ என்று முடிக்க,
“ஏய். என்னடி, இது இப்படி பாடி என்னை தூங்க வைக்கவா உன்ன பாட சொன்னேன்.
ப்ளீஸ் இன்னும் எதாச்சும் ரொமாண்டிக்கா பாடுடி!”
“ம்ம் சரி”.
“இது கொஞ்சம் அப்படி தான்”.
“ஒரு நாள் ..உன்னோடு ஒரு நாள்.
உறவினில் ஆட, புதுமைகள் காண,
காண்போமே எந்நாளும் திருநாள்..
……….
உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு.
கோபம் வேகம் மாறாதோ
மாறும் நன்னாள் என்நாள் காண்பேனோ?
செல்லமாக அவன் தாடையைப் பிடித்துக் கொஞ்சி கொண்டே மேலும் பாடினாள்.
“மங்கள் நாண் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும் என்றும் காவல் நீயாக..
உந்தன் வாழ்வின் தீபம் நானாக..
…………….
காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்..”
அவள் கண்களில் நீர் கோர்க்க அவனை அணைத்து கொண்டாள்!
“ஏய்.. மது, ஏண்டி இவ்வளவு இமோஷனல் ஆகுற?”
“நான் ஏதோ சும்மா பாட சொன்னேன்!”
“ஏய். அழாதடி..” இன்னும் இறுக்கிக் கொண்டான்.
“ம்ம் .. இது சந்தோசத்துல வர கண்ணீர்!”
“நீங்க எப்போதும் இப்படியே இருப்பீங்கல்ல! என்னால உங்கள எக்காரணம் கொண்டும் பிரிய முடியாது..”
“ஏய்.. லூசு, நாம ஏண்டி பிரிய போறோம்..? வா, நாம எங்காயாச்சும் வெளியே போயிட்டு வரலாம். நான் ஈவனிங் ஓபிக்கு வேணுமின்னா லேட் ஆ போய்க்கிறேன்!”
மது அவனிடம் ரொம்பவே இளகிக் கொண்டிருக்கிறாள் இப்போதெல்லாம்.
வயதுக்கு மீறிய குடும்ப சுமைகள், பொறுப்புகளை சுமந்து வந்த அவள் மனம், இப்போது இளைப்பாற ரகுவின் தோள் தேடியது!
எந்த பொறுப்புகளும் இல்லாத ஒரு லேசான மன நிலைக்கு ஆசைப் பட்டது.
தன்னைப் பார்த்துக் கொள்ள ரகு வந்து விட்டான், எது வந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான், என்ற நம்பிக்கை வளர்ந்து கொண்டே இருந்தது அவளுள்!
தான் எதைப்பற்றியும் ரொம்ப சிந்திக்க வேண்டாம் என்று அவள் மனம் அவனை சார்ந்து இருக்க தொடங்கியது.
அதனால் இப்பவெல்லாம், சின்ன விசயத்துக்கு கூட முடிவு எடுக்க அவள் ரகுவை எதிர்பார்க்கிறாள்.
ஒரு ப்ளவுஸ் கை லென்த் கூட அவனைக் கேட்டு தான் முடிவு செய்தாள்!
“இடியே விழுந்தாலும் தாங்கிக் கொள்வேன்” என்ற அவள் மனம், இப்போது
ஒரு சாதாரண காய்ச்சல் வந்த போது தாங்கிக்க முடியாது அவன் அருகாமையைத் தேடியது.
ஆமாம் மதுவுக்கு காய்ச்சல்!
அவர்கள் வீட்டில் முகூர்த்த கால் போட்ட மறுநாள்!
“இது கல்யாண காய்ச்சல்!” என்றார் ராஜுவின் அம்மா!
மானுவோ, அது மகேஸ்வரி அத்தை முகூர்த்த கால் போடும் பங்கசனுக்கு வந்து விட்டு போனதால் வந்த பேட் வைப்ஸ் என்றாள்
அவள் சொல்வதும் உண்மைதான்!
அத்தனை பொறாமை மகேஸ்வரியிடம்!
ஏதோ சாதாரண வரன் என்று நினைத்துக் கொண்டு தான் வந்தாள் அவள்!
இங்கு வந்து ரகுவின் குடும்பம் பற்றி அறிந்து, மதுவுக்கு போய் டாக்டர் மாப்பிள்ளையா என்று வயிறு எரிந்தாள் அவள்!
மதுவோ, காய்ச்சலில் ரகுவின் அருகாமையைத் தேடினாள்.
அவள் தான் இனி கல்யாணம் வரை அங்கே போக முடியாதே!
ரகு வந்து விட்டான்.
வந்து அவளுக்கு ஊசிப் போட்டு விட்டு, “என்னடி, இது ஒரு சாதாரண வைரல் பீவரக் கூட உன்னால தாங்க முடியலையா?”
“நீ பெரிய பெரிய பிரச்சினைகள் எல்லாம் அசால்ட்டா டீல் பண்ணியிருக்க? இதுக்கு போய் இப்படி?”
“அதெல்லாம் உங்கள பார்க்குறதுக்கு முன்னாடி!
நான் இப்ப எல்லாம் உங்கள ரொம்ப டிபெண்ட் பண்றேங்க! நீங்க வேணும் என் பக்கத்துல எப்பவும்!”
“உன் பக்கத்துல தான் இருக்கப் போறேன்! இன்னும் ஒரு அஞ்சு நாள் மட்டும் தாண்டி!
எதைப் பத்தியும் யோசிக்காம நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. அப்ப தான் கல்யாணத்தப்ப பேஸ் நல்லா பிரெஷ் ஆ இருக்கும்!” அவளை அணைத்து முத்தமிட்டு சென்றான்!
அவன் போனவுடன் மது யோசித்தாள்!
“நானே நானா யாரோ தானா? என் இப்படி மாறிட்டேன்! டேய் நந்து கண்ணா, இப்படி என்னை ஆகிட்டியேடா!! சிரித்து கொண்டாள் மது!
அவள் சிரிப்பைக் கெடுக்க, இளகிப்போய் இருக்கும், நெகிழ்ந்து இருக்கும் அவள் இதயத்தைக் குத்தி காயப்படுத்த, அங்கே..
அந்த ஒரு ஏழரை.. ஏரோப்ளேனில் வந்து இறங்கி விட்டது தெரியாமல்!
ஏழரை?
எஸ். ஏழரை இஸ் நத்திங் பட் பார்த்தி!
error: Content is protected !!