Skip to content
Post Views: 861
“தம்பி, ஜெயந்தன் உங்களை பாக்க வந்திருக்கார்.”
“எந்த ஜெயந்தன் அண்ணா..” கையில் உள்ள டேபில் ஏதோ பார்த்துக் கொண்டே கேட்டவன், முகத்தில் ஒரு சின்ன மின்னல் கீற்று தோன்றி மறைய, நிமிர்ந்து அர்த்தமாக பார்த்தான் ஆதி. அவனின் பார்வையை புரிந்துக் கொண்டு சுந்தர் தலையை ஆட்டினார்.
Advertisement
“நேர்ல வந்திட்டு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார். அதான் உங்களை கேட்டுட்டு சொல்றேன்னு உட்கார வச்சிட்டு வந்திருக்கேன்.”
Advertisement
“அட.. அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு பாக்கற அளவு இப்போ நான் இல்ல அண்ணா.. வர சொல்லுங்க. அஞ்சு நிமிஷத்தில் ரெடி ஆகிடறேன்”
Advertisement
சொன்னது போல ஆதி ஐந்து நிமிடத்தில் அலுவலக அறையில் இருந்தான்.
Advertisement
ஜெயந்தன், ஒப்பனையும், திரையுலகமும் ஒதுக்கிய கதாநாயகன்.
ஆதியின் தயாரிப்பில் இரண்டு படங்கள் நடித்திருக்கிறான். ஒரு படத்தில் உதவி இயக்குநர். நாற்பதை கடந்த பின் வாய்ப்பும் அவனை தேடவில்லை. அவனும் வாய்ப்புகளை தேடவில்லை.
ஆதியை பார்த்து ஜெயந்தனுக்கு ஆச்சர்யம். அவனை பார்த்து ஆதிக்கு ஆச்சர்யம். ஆதியின் முகத்தில் சிரிப்பு கொஞ்சம் இருந்தது. அவன் முகத்தில் அதுவும் இல்லை.
“ஜெயந்தன்.. ஆளே ஏன் இப்படி மாறி போய் இருக்கீங்க?.”
“ஆதி.. ஆதி சார். நீங்களும் தான். இந்த அளவு ஒரு விபத்து உங்களை மாத்தும்னு நினைக்கல சார்.”
“ஆதி.. மட்டும் போதும். என்ன நண்பர்களுக்குள் புது பழக்கம்.”
“தோற்றவனுக்கு பார்க்கறவன்லாம் பெரிய ஆளுங்க தான்.”
“நானும் இப்போ உங்களை மாதிரி ஒருத்தன் தான் ஜெயந்தன். உங்களை பாக்க நிஜமாவே ஷாக்கா இருக்கு. இருபது வருடங்களும் உங்களை கைத்தூக்கி விடலையேன்னு
வருத்தமாவும் இருக்கு.”
“இருபது வருடங்கள் கையை இழுத்து பிடிச்சு இறக்கித்தான் விட்டிருக்கு ஆதி. ஒருத்தனுக்கு ஒன்னு கெரியர் சிறப்பா அமையனும். இல்ல வாழ்க்கை சரியா அமையனும். ரெண்டுமே மறுக்கப்பட்டவன் வாழ்றது பூமிக்கு பாரம். என்னை நம்பி இருக்க சில ஜீவன்களுக்காக இப்போ உங்க முன்னாடி நிக்கிறேன். நீங்க மறுக்க மாட்டீங்கன்னு நம்பிக்கையில் வந்திருக்கேன். வெட்கத்தை விட்டு சொல்லப் போனா என் கடைசி நம்பிக்கை நீங்கதான்.” கைகளை எடுத்து கும்பிட்டான் ஜெயந்தன்.
“கலைஞன் கையேந்தக் கூடாது ஜெயந்தன். என்ன விஷயம்னு சொல்லுங்க.”
“இதுவரைக்கும் என் வாழ்க்கையில் நான் கத்துக்கிட்டதை வச்சு ஒரு படம் எடுக்கனும்னு ஆசை. வாழ்வா சாவா என்ற நாணயம் இது. சுண்டி விடப்போறேன். ஜெயிச்சா நிலத்துக்கு மேல் வாழ்க்கை. தோத்தா நிலத்துக்கு கீழ.. இதை சொன்னதும் யாரும் படம் பண்ண ஒத்துக்கல. கட்டக் கடைசியா உங்களை பாக்கலாம்னு நினைச்சேன். நீங்க இருக்க நிலைமையில் தொந்தரவு பண்ணத் தோணல. ஆனா நான் இருக்கற நிலைமையை பார்த்தா உங்களை தொந்தரவு பண்ணலாம்னு தோணுச்சு.”
“நீங்க மாறவே இல்லை ஜெயந்தன். என்ன படம்? ஒன்லைன். தலைப்பு என்ன?”
“ ‘நிராயுதபாணியின் போர்’ தலைப்பு ஆதி. தோத்துட்டே இருக்க ஒருத்தனுக்கு ஒரு நாள் அரசாங்கமே கைல கிடைக்குது. அவன் தான் ராஜா.. ஆனா ராசியில்லாத ராஜா. அவன் அந்த கடைசி வாய்ப்பை உபயோகப்படுத்தறானா இல்லையா.. இல்ல அவன் ராசி அவனுக்கு முன் நிக்குதா..இதான் கதை.”
ஆதிக்கு கண்முன் அவன் வாழ்க்கையே வந்தது போல் இருந்தது.
எதையும் யோசிக்கவில்லை. சரியென்று சொல்லி விட்டான்.
ஜெயந்தனுக்கு ஆச்சர்யம்..
“இதான் ஆதி. உங்க மனசுல சரின்னு பட்டா எதையும் யோசிக்க மாட்டீங்கன்னு தெரியும்.”
“ஆரம்பிச்சிடலாம். ஆனா முன்ன மாதிரி என்னால் இப்போ அவ்ளோ செலவு பண்ண முடியாது. பட்ஜெட் என்னன்னு சொல்லுங்க. அதில் எவ்வளவு குறைக்க முடியுமோ அதை பண்ணலாம்.”
“பத்து கோடி ஆதி. இதுக்கு மேல் எதுவும் ஆகாது. எனக்கு சம்பளம் வேண்டாம். அதுக்கு பதில் ஏரியா பிரிச்சு கொடுத்திருங்க. வர்ற வருமானத்தில் வாங்கிக்கறேன்”
“இந்த நம்பிக்கையிலேயே தெரியுது. படம் நல்லா போகும்னு. கண்டிப்பா நாம பண்றோம். இன்னிக்கே எல்லா விஷயத்தையும் டீடெயிலா பேசிடலாம்.”
இருவரும் படத்தினை பற்றிய தகவல்களை பேசிக் கொண்டு இருந்தனர். மதிய வேளை உணவுக்கு அழைக்க வந்தாள் கண்மணி. அவளுக்குமே ஜெயந்தனை பார்த்து ஆச்சர்யம்.
“கண்மணி.. நானும் ஜெயந்தனும் புது படம் ஒன்னு பண்ணலாம்னு முடிவு எடுத்துருக்கோம்.”
“ஓ.. வாழ்த்துகள் ரெண்டு பேருக்கும். யார் டிரைக்டர்.?”
“நான் தாங்க. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் நான். மத்த விஷயங்களை எல்லாம் பாத்துட்டு தான் முடிவு பண்ணனும்.”
“ம்யூசிக் கூட நம்ம பையன் அரவிந்த்தை முயற்சி செய்ய சொல்லலாம். பாடறதுக்கு நம்ம வீட்டிலேயே நிறைய பேர் இருக்காங்க. கண்மணி, ராகா.. ஹான் மதுரா. புதுசா ஒரு பொண்ணு பாடறதுக்காகவே இங்க வந்திருக்கு ஜெயந்த்”
“ஆதி.. நிஜமாவா? ம்யூசிக் பத்தி அப்போ கவலைப்பட வேண்டாம்.”
“ம்ம் ஆமா. அந்த பொண்ணு சொன்னேன் இல்ல.. அவ வாழ்க்கை கதை கூட ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தது..”
“சினிமா என்ன வெறும் கற்பனை கதை தானா. ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு கதை.அதைத்தான் திரையில் நாம் பாக்கறோம்”
“ஆமா..ஜெயந்த்”
அனைவரும் சாப்பிடும் போதே மதுராவை பற்றி ஜெயந்தனிடம் சொன்னான் ஆதி.
உண்டதும், அலுவலக அறைக்கு அரவிந்தையும், மதுராவையும் அழைக்க சொன்னான் ஆதி. கண்மணி அவர்களை அங்கு அழைத்து வந்தாள்.
“மதுரா. வாம்மா. நீ சூப்பர் சிங்கர் டைட்டில் விண் பண்றதுக்கு முன்னாடி படத்துல பாடப்போற.” இனிய அதிர்ச்சியை தந்தான் ஆதி.
மதுரா கண்கள் இன்னும் விரிந்தது. அரவிந்த்தை பார்த்தாள். அவன் குழப்பமாக ஆதியை பார்க்க,
“அரவிந்த்.. இந்த படத்துக்கு நீ ம்யூசிக் டிரை பண்ணு. சரியா வரலைன்னா அப்புறம் யாரையாவது பார்ககலாம். அம்மாவும் பாடி ரொம்ப நாளாச்சு. சோ.. எல்லாருக்கும் இது ஒரு கம் பேக். அதுவும் என் நண்பன் ஜெயந்த் கொடுக்க போற பெரிய ஹிட் இது.”
“மாமா.. என்ன டக்குனு முடிவு எடுத்துட்டீங்க.?”
“அது தானே ஆதி.. அரவிந்த்..” என்று சிரித்தான் ஜெயந்தன்.
“அங்கிள்.. நான் சினிமால பாடறது .. இது நிஜமா நடக்க போகுதா..?”
“மதுரா. நிஜமாதான்.” என்று அவளின் தோளை மெல்ல அணைத்து சொன்னாள் கண்மணி.
“இந்த மாதிரி ரிஷப் குரல் எல்லா இடத்திலேயும் ஒலிக்கனும்னு நினைச்சேன். ஆனா அவரோட ஆன்மா என்னை தேர்ந்தெடுத்திருக்குப் போல. நிச்சயம் இதன் மூலமா எங்க ஊருக்கு நல்லதை நான் செய்வேன்.”
ஆதியும், ஜெயந்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“அப்ப அவர் உயிரோட இல்லையா.. மை காட்” அரவிந்த் குரல் அலறலாக ஒலித்தது.
ஆதி அவனின் கைகளை பிடித்துக் கொண்டான்.
“இல்ல..எங்களுக்காக பாடின, எங்களுக்காக பல கஷ்டங்களை பார்த்த, அந்த குரல் எங்களுக்காகவே அடங்கிருச்சு.”
“மதுரா. என்ன ஆச்சு அவருக்கு” கண்மணி கேட்டாள்.
“ம்ம். ஏறக்குறைய பத்து வருஷம், நாங்க வெளி உலகத்தை பாக்காமயே அதை பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். மாற்றம் வேணும்னா வேலை வேணும். சான்றிதழ் இல்லாத படிப்பை வச்சு எங்க வேலைக்கு போக முடியும்? . எங்க எல்லார் கையும் ஒன்னா சேர்ந்தா தானே மத்த பெண்களை அந்த மரண குழியில் இருந்து வெளிக் கொண்டு வர முடியும். அதனால் ஒரு பத்து பேரை முதன் முதலா பனிரெண்டாவது பரீட்சை பிரைவெட்டா எழுத முயற்சி எடுத்தார்.
என்ன சொல்லி வெளியே கூட்டிட்டு போக முடியும்னு யோசிச்சப்ப தான்,
எங்க ஊருக்கு பக்கத்தில் முதலமைச்சரோட, ‘பத்து நாட்கள் மக்களுடன்’ அப்படின்னு ஒரு திட்டம் கிராமங்கள்ல மக்களோட மக்களா அவங்க இருக்கிறதை தேர்தலுக்காக படம் பிடிக்க வந்தாங்க.
அப்போ சின்ன பெண்களா, பத்து கிராமங்கள்ல இருந்து தேர்ந்தெடுத்து பக்கத்துல ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க.
அதுல நாங்க பத்து பேர். அதை இன்னொரு வாய்ப்பாக பயன்படுத்த நினைச்சார் ரிஷப். ஒருவேளை முதல்வரை நேர்ல பாக்க முடிஞ்சா அவங்கள்ட்ட இங்க இருக்க நிலைமையை சொல்ல முடியும்னு நினைச்சார். அந்த பத்து நாள் அவர் ஊருக்கு போறதா சொல்லிட்டு எங்களோட வந்தார்.
முதல்வரை நாங்க நேர்ல சந்திக்க முடியல. எங்களை தனியா ஒரு பக்கம் படம் பிடிச்சாங்க. அவங்களை பங்களாக்குள்ள அவங்க ஆளுங்களோட படம் பிடிச்சாங்க.
கிடைச்ச நேரத்தில் நாங்களும் அந்த பத்து நாள்ல பரீட்சையை எழுதினோம்.
கடைசி நாளன்னிக்கு எப்படியாச்சும் நாங்க முதல்வரை சந்திக்க பத்து கிராமத்து பெண்களும் போராட்டம் பண்ணோம். அப்புறமா முதல்வரை பாக்க அனுமதி தந்தாங்க. எங்க சார்பா ரிஷப் தான் பேசினார்.
எல்லா பிரச்சினைகளும் தேர்தலுக்கு பின்னாடி சரியாகும்னு அவங்க சொன்னாங்க. அதை நம்பி ஊருக்கு வந்தோம். ஆனா அங்க இருந்த யாரோ மூலமா ஊருக்கு நாங்க பரீட்சைக்கு போனது, ரிஷப் எங்களுக்காக பேசினது எல்லாம் தெரிய வந்துருச்சு. எல்லாருக்கும் கோபம் தான். தாத்தாக்கு அவர் பேச்சை மீறி ரிஷப் செஞ்சது பிடிக்கல.
ஆனா அவர் எதுவுமே அப்ப சொல்லல.. ஊர் மக்களும் எங்களை அதுக்கு அப்புறமா மலைக்கோவிலுக்கு அனுப்பல. ஊருக்குள்ளேயே தான் பெண்களோட சந்திப்பு தினமும் ஆண்கள் எதிர்ல நடந்தது.
அந்த வருஷம் நடக்கற அரண்மனை திருவிழால பெரிய ஜூகல்பந்தி ஏற்பாடாச்சு. அதுக்கு தாத்தாவும் ரிஷப்பும் பாடறதா இருந்தது. தாத்தா மலைக்கோவிலுக்கு ரிஷப்பை பயிற்சிக்காக கூட்டிட்டு போனார். இருக்கறதுலேயே கடினமான பயிற்சியான தீபக் ராக பயிற்சி அது. இந்துஸ்தானில அதை யாரும் அவ்வளவா பாட மாட்டாங்க.
உங்க எல்லாருக்குமே தெரிஞ்சு இருக்கும்.. தீபக் ராகம், தான்சேனால் அக்பர் அவையில் பாடியே விளக்குகளை ஏற்ற வைத்த ராகம்..
ஆனா அதுல அஞ்சு ராகங்களின் தாட் இருக்கும். அதாவது அஞ்சு ராகங்களை தீபக் ராகமா ஸ்வரங்களை மாற்றி பாடறது. பூர்வி, பிலாவல்,கல்யாணி, காபி, கமாஜ்னு அஞ்சு வகையா பிரிச்சு பாடனும். ஆனா அதை குறிப்பிட்ட கதியில் பாடலைன்னா உடம்பு முழுக்க அனலா கொதிக்கும். துகள் துகளா எரிஞ்சு கூட போகும். கடைசியாக மல்ஹர் ராகத்தை பாடி அந்த சூட்டை படிப்படியா குறைப்பாங்க. தீபக் ராக்ததை தான் கடைசியா ரிஷப்க்கு சொல்லித்தர போறேன்னு தாத்தா சொன்னார்.
குருவை சந்தேகப்பட முடியுமா..கிணற்றில் குதின்னாலும் கேள்வி கேட்காம குதிக்கிறது தானே சிஷ்ய பாவம்.
பயிற்சி ஆரம்பமாச்சு. விடாம இரவும் பகலும் அஞ்சு ராகங்களை பாடினார் ரிஷப். கொஞ்ச நேரம் தான் இடைவேளை. மீண்டும் அடுத்த நாள் சாயந்திரம் ஆரம்பிச்சு இரவு வரைக்கும் பாடிட்டே இருந்தார். நாங்களும் சண்டை போட்டு அங்க பாக்க போனோம்.
நேரம் ஆக ஆக, பௌர்ணமிக்கு முந்தைய நாள் நிலவை, மேகங்கள் சுத்தமா மூட ஆரம்பிச்சது.
எங்களால் நிக்க முடியாத அளவு அனல் காத்தா இருந்தது. ரிஷப்பை போதும்னு அம்மா தடுக்க பார்த்தாங்க. ஆனா அவங்களுக்கு விழுந்தது என்னவோ அறை தான். அப்பா முதன் முதலா அடிச்சு இருந்தார்.
ஆனா தாத்தா விடாம ரிஷப்பை பாடுன்னு சொன்னார். ரிஷபும், அவர் குரலை ஆரோகணமும், அவரோகணமுமா மாற்றி மாற்றி பாடினார். இரண்டு, நாலு, ஆறுன்னு அவர் சொன்ன வேகத்துக்கு ரிஷப் குரல் ராகத்தை பாடுச்சு.
ஆனா சில மணி நேரத்தில் அந்த அனலுக்கு அவரோட குரல் அஸ்தியானது.
துடித்து துவண்ட ரிஷப்பை எங்களால் காப்பாத்த முடியல. அத்தனை ஆண்களும் சேர்ந்து ராவணனை எரிச்சதா நினைச்சாங்க.
ஒருத்தன் தன் பலம்னு நினைக்கிற ஒரு விஷயத்தை அவன்கிட்ட இருந்து எடுத்துட்டா அவன் தோத்து போனதா நினைக்கற கீழ்த்தரமான மனிதர்கள் வாழ்ற அந்த இடம் ஒரு நரகமா மாறுச்சு. அவர் குரல் போனாலும், அவர் உயிரோட தான் இருந்தார். அது அவங்களுக்கு பொறுக்கல. நாங்க அவரை விட்டிட சொல்லி கெஞ்சினோம். தாத்தாக்கிட்ட மல்ஹர் பாட சொன்னேன்.. அதை பாடத்தெரிஞ்ச ரெண்டு ஆள் தாத்தாவும் ரிஷப்பும் தான். ஆனா தாத்தா பேச்சை மீறி ரிஷப் பாடாததால் தான் அந்த நிலைமை.
எங்க அழுகை குரலுக்கு மழை கூட இரங்குச்சு. ஆனா தாத்தா இரங்கல.. எங்க விடுதலைக்கு பாடுபட்ட ஒருத்தரை இப்படி தண்டிச்ச அந்த ஊர் ஆண்களை எந்த கடவுளும் தண்டிக்கல. மாறா நல்லது பண்ண ஒருத்தரை தான் சங்கீதம் கூட பழி வாங்கிடுச்சு.
அங்கிருந்து அவரை கீழ கூட்டிட்டு வர அனுமதிச்சாங்க. நாங்க தான் அவரை கூட்டிட்டு வந்தோம். அவரால வந்த மருத்துவமனைல கூட அவருக்கு சிகிச்சை செய்ய முடியல. அடுத்த நாள் பெரிய ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க.
யாராலயும் அவரை கூட்டிட்டு ஊர் தாண்டி போக முடியல.. வேற வழியில்லாம ரணத்துக்கு அங்கிருந்த பச்சிலை வச்சு மருந்து போட்டாங்க எங்க ஊர் பெண்கள். ஆனா அந்த மருந்து ஆலகால விஷத்தை என்ன பண்ண முடியும்.?
தன்னால் இனி பாட முடியாதுன்னு அவருக்கு தோணினதும் அவர் பண்ண முதல் விஷயம்.. எங்களை அந்த ஊர்ல இருந்து போக சொன்னது தான். எப்படியாச்சும் உங்க கனவுகளை நிறைவேத்த போராடுங்க. ஆனா ரொம்ப தூரம் உங்களை பாதுகாக்கிற இடங்களுக்கு போங்கன்னு சைகையில் சொன்னார். ஆனா எப்போதையும் விட ஊர் கட்டுப்பாடு அதிகமா இருந்தது. எங்களால வெளில வர முடியல. நான் தாத்தா, அப்பா, அம்மாக்கிட்ட வெளில போறேன்னு சொன்னேன்.
தாத்தாவால தாங்கிக்க முடியல. என்னை அவர் அடித்த அடி கொஞ்ச நஞ்சம் இல்லை. ஒரு வாரம் போனதும், அதிசயமா எங்களை வெளில போக ஒத்துக்கிட்டாங்க வீட்ல. ஆனா அதுக்கு பிறகு அவங்களுக்கும் எங்களுக்கும் எதுவும் கிடையாதுன்னு சொன்னாங்க. நாங்க வெளில வந்தாலாவது யார் மூலமா ரிஷப்பை அங்கிருந்து கூட்டிட்டு வர முடியும்னு நினைச்சோம். அஞ்சு பேர் டெல்லிக்கும், அஞ்சு பேர் சென்னைக்கும் ரயில் ஏறினோம்.
இங்க வந்து என்ன பண்றதுன்னு தெரியல. அம்மா கொடுத்த பணம் கொஞ்சம் தான் இருந்தது. அதை வச்சு கம்மி காசு கேட்கிற ஹாஸ்டல்ல தங்கி, அப்ப கிடைச்ச வேலைக்கு போக ஆரம்பிச்சோம்.. அப்பதான் இந்த சூப்பர் சிங்கர் போஸ்டர் கண்ணுல பட்டுச்சு. ரிஷப் சொல்லிட்டே இருப்பார்.
தகுதியை வளர்த்துக்கிட்டே இருங்க. உங்களுக்கான வாய்ப்பு ஒரு நாள் வரும். அதுல முழு மூச்சா இறங்குங்க. வெற்றி கிடைக்கும்.அப்ப உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ங்கன்னு சொல்வார். அப்படி கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தினேன்.
நாலு பேர் உழைப்புல நான் ஒருத்தி நிகழ்ச்சிக்கு போனேன்.
நான் செலக்ட் ஆன விஷயத்தை எப்படியாச்சும் அம்மாக்கு தெரியப்படுத்த பத்து முறை முயற்சி செஞ்சு பத்தாவது முறை அம்மா ஃபோன்ல கிடைச்சாங்க. ஆனா அவங்க சொன்ன விஷயம் என் நெஞ்சை கிழிச்சது. எங்க பத்து பேருக்காக ரிஷப் அவரோட உயிரை தியாகம் பண்ணிட்டார்னு. எங்க ஊர் ஆண்கள் எங்க பத்து பேர் விடுதலைக்காக கேட்ட பரிசு அது. அதையும் கொடுத்துட்டார்..ரிஷப்”
ஓங்கி குரலெடுத்து அழத்தொடங்கினாள் மதுரா.ஒரு பக்கம் கண்மணியும், இன்னொரு பக்கம் அரவிந்தும் தாங்கிப் பிடிக்க அவள் அரவிந்தின் நெஞ்சின் மேல் சாய்ந்து அழுதாள். அவனின் கை அவளை ஆறுதலாய் அணைத்தது.
ஒரு துயரம் அதை விட பெரிய துயரத்தை சந்திக்கும் போது தன் துயரம் பெரிதாக தெரிவதில்லை.
அங்கிருந்த அனைவருக்கும் இப்போது அதுதான் தோன்றியது.
ஜெயந்தன் தன் கடைசி முயற்சி இது.. தன்னை தூக்கி எறிந்தவர்களின் முன் கடைசியாக சாதிக்க வேண்டும்.. முடியவில்லை என்றால் உயிரை விட வேண்டும் என்று விரும்பினான்.. ஆனால் கொண்ட கொள்கைக்காக அதுவும் பிறருக்காக தியாகம் செய்த ஒரு ஜீவனை பற்றி கேள்விப்பட்டு இனி எது வந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி அவனுக்குள் எழுந்தது.
ஆதிக்கோ முழு மூச்சாக தான் நிலைப்பெற்று நிற்க வேண்டும் என்று தோன்றியது.
கண்மணி மெல்ல மதுராவை தாங்கி அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அரவிந்தும் அவளுடன் அங்கு சென்றான். அவனால் மதுராவின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
கண்மணி அவளுக்காக குடிக்க எதாவது எடுத்து வருகிறேன் என்று செல்ல, மதுராவின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டான் அரவிந்த்.
தேம்பியுழுது ஒரு நிலைக்கு திரும்பினாள் மதுரா.
அழுத வானம் விடிந்தது போல் இருந்தது.
“எனக்கு கிடைச்ச பெரிய ஆறுதல் என்ன தெரியுமா.. உங்க கண்கள்.. அப்புறம் நீங்க தோளை குலுக்கி பேசறது..ரெண்டும் எனக்கு ரிஷப்பை நினைவுப்படுத்துது. இது ரெண்டுத்துக்காக தான் முதல் நாளில் இருந்து தவம் கிடந்தேன். பக்கத்துல இருந்து உங்களை பாத்துட்டே இருந்தா அவருக்காக நான் எல்லாத்தையும் செய்ய முடியும்னு தோணுச்சு. கடவுள் ஏதோ ஒரு வழியில் நமக்கு வெளிச்சத்தை காண்பிப்பார்னு ரிஷப் சொல்வார். நீங்க தான் என் வெளிச்சம். என் கனவு நிறைவேறற வரைக்கும் நீங்க என்னோட இருப்பீங்களா..?”
அவளின் கண்களை சந்திக்க முடியவில்லை அரவிந்தால். தன்னால் ஏதோ ஒரு விதத்தில் அவளுக்கு உதவ முடியும். அதற்காக தான் அவள் இங்கு வருவதற்கு இயற்கையும் உதவி செய்தது போல. ஆனால் முதல் நாளில் இருந்து எவ்வளவு அலட்சியமாக அவளை கையாண்டு இருந்திருக்கிறான்..
அவன் செய்த ஒரு நல்ல காரியம். அவளை அன்று நிகழ்ச்சியின் போது தைரியம் அளித்து பாடச்சொன்னது..
“மதுரா. நீ இப்படி கேட்கவே வேண்டாம். நானும் என் குடும்பமும் எப்பவும் உனக்காக உனக்கு பக்கத்தில இருப்போம். நீ இனி எங்கேயும் போய் கஷ்டப்பட வேண்டாம். இங்கேயே இரு.. மாமா நிச்சயம் உன் ஊருக்கு என்ன பண்ணனும்னு யோசிப்பார். அவருக்கு தெரிஞ்சவங்க மூலமா உதவி பண்ணுவார்..”
அவன் சொன்னதும் அவளின் கைகள் அவனது இடுப்பை சூழ்ந்தது. அவனது மார்பு அவளின் கண்ணீரால் நனைந்தது.. வேறு வழியில்லாமல் அவளை இறுக அணைத்தான் அரவிந்த். அதை விட பெரிய ஆறுதல் வேறு எதுவும் இருக்க முடியாது என்று நினைத்தான்.
கதவு தட்டப்பட்டது. இருவரும் விலகினார்கள்.
கண்மணி உள்ளே வந்தாள்.
“மதுரா. நீ இப்படி அழுதுட்டே இருந்தா எப்படி ப்ரொக்ராம்ல கலந்துக்க முடியும். நீ ரிலாக்ஸ் ஆகு. நீ எங்கேயும் போக வேணாம்னு ஆதி சொல்ல சொன்னார். இங்கேயே எங்களோட இரு. யாரும் இல்லன்னு நீ யோசிக்க கூடாது..”
படபடவென அவள் பேசுவதை இருவரும் பார்த்தார்கள். அரவிந்த் மதுராவை பார்த்து ‘இது தான் என் அம்மா’ என்பதை போல் கண் காண்பித்தான்.
“ஆண்ட்டி..” என்று அவளை அணைத்துக் கொண்டாள் மதுரா. அவள் நெற்றியில் தன் இதழை பதித்தாள் கண்மணி.
ராகா, தாரா போல் அவளும் ஒரு மகளானாள் கண்மணிக்கு.
“ஆதி.. நாம ஒரு அடி எடுத்து வச்சு தன்னம்பிக்கையோட நின்னா, உலகம் சாதிச்ச ஆயிரம் உதாரணங்களை காமிக்கும்.. இன்னிக்கு அது உண்மையா ஆயிருச்சு இல்ல..”
“ஆமா.. ஜெயந்தன். ஏனோ தானோன்னு தான் நானும் இருந்தேன். இரண்டு மூன்று நாட்களாக நடக்கறதை பார்த்து எனக்கு ஏதோ நல்ல சகுனங்கள் தெரியுது.”
“ம்ம்ம்.. கண்டிப்பா நம்ம படம் சக்ஸஸ். முழு உழைப்பை இதுல போடுவோம்.”
“ஒருத்தனை திட்டம் போட்டு தோக்கடிச்சிட்டா அவன் வாய்ப்பிழந்து, உயிரிழந்து போவான்னு நினைக்கிறாங்க. ஆனா தோற்றவன் பின் தான் ஒரு சரித்திரம் நிகழும். அது தான் உண்மையாக போகுது.. நம் இணைந்த கைகள் இனி வரலாறை எழுதப் போகுது..”
ஆதி சொல்லி முடிக்கவும்,
கண்மணி இருவருக்கும் காபியை எடுத்து வந்தாள்.
“ஆதி.. இந்த மாதிரி காபி கடைசியா நாம் சேந்து குடிச்சோம். அதுக்கு பின்னாடி ஒரு நாளும் நான் இது மாதிரி குடிக்கல..” ஜெயந்தன் பார்வையால் கண்மணிக்கு நன்றி சொன்னான். அவள் இருவரையும் பார்த்து சிரித்தாள்.
ஆதி கண்கள் மூடி ஒவ்வொரு மிடறையும் மெல்ல ரசித்து ருசித்து குடித்தான். காபி தொண்டைக்கும் நெஞ்சிற்கும் இடையில் ஒரு நம்பிக்கை சுவையாய் இறங்கியது.
error: Content is protected !!