Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நாதம்

ஜீவ நாதம் – 10

ஆகாய கங்கை தலை மேல் வீழ்ந்தது போல் இருந்தது ஆதிக்கு. 



Advertisement

அவன் முதன் முதலாக தனியாக வெளியில் யார் மீதும் பாரத்தை சுமத்தாமல் வந்திருக்கிறான்.‌

தயாரிப்பாளர் சங்கத்தில் தன் புதிய படத்திற்காக, கண்மணி பெயரிலான புதிய நிறுவனத்தை பதிவு செய்ய வந்திருந்தான். கிட்டத்தட்ட தயாரிப்பை விட்டு  ஆறேழு வருடங்கள் ஆயிற்று. 

Advertisement

Advertisement

சுதந்திர காற்று உள்ளுக்குள் தனி தைரியத்தை தந்திருந்தது. 

மீண்டும் ஒரு ஓட்டம். கூட யார் வருகிறார்கள் என்ற கவலை இல்லை. முட்டி மோதி ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம். கடிவாளமிட்ட குதிரையாக நின்றிருந்தான். புதிய பொறுப்பாளர்கள்.. புதிதாக ஒருவனை சந்திப்பதை போலவே பார்த்தார்கள். 

Advertisement

அங்கு வேலை முடிந்து படத்தின் பெயரை பதிவு செய்தான். 

முன்பிருந்த அலுவலகத்துக்கு ஜெயந்தனுடன் வந்தான். 

கண்மணி அங்கு புதிதாக அலுவலகத்தை  மாற்றியிருந்தாள். 

வாசலில் தோரணங்கள். மாலைகள். இருபுறமும் அவனின் பழைய பணியாளர்கள். புதிதாக பொறுப்பேற்க வந்த புது ஆதியை வரவேற்றார்கள்.  

உள்ளே நுழைந்தான். அவனுக்கென்று வெள்ளை சிம்மாசனத்தை போன்ற உயர்ந்த நாற்காலி. 

சிங்கம் வைத்த கைப்பிடி. பிரத்யேகமாக அவனுக்கென்றே தயார் செய்யப்பட்டது. 

கண்மணியை பார்த்தான். அவளின் முகம் பெருமிதத்தில் கூடுதலாக மின்னியது. 

கண்காண்பித்தாள். அந்த மைவிழிக்கு மயங்கி அவளை காதலுடன் பார்த்து விட்டு அந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவனுக்கு பின் ‘கண்மணி ப்ரொடக்ஷன்ஸ்..’ பெரிய தங்க நிற பலகை மின்னியது. 

அவனுக்கான பெரிய பலம் கண்மணி. அவனருகில் நின்றாள். 

மேஜையில் “ஆதித்யா.. தி கிங்” என்ற பெயர் பலகையை பார்த்து புருவங்கள் உயர்ந்தது.‌

யாருக்கும் தெரியாமல் அவள் கைகளை பிடித்தான். மெல்லிய சுரண்டலில் அவன் மனம் அவளுக்கு தெரிந்தது. 

மெதுவாக அவனது தோளில் ஒரு அழுத்தத்தை தந்தாள். 

“ஆதி.. இப்போ எப்படி இருக்கு தெரியுமா? அப்படியே பழைய ஆதி.. அதே மிடுக்கு. அதே கம்பீரம். சந்தோஷமா இருக்கு ஆதி.” ஜெயந்தன் சொன்னான். 

“காலங்கள் மாறினால் காட்சிகள் மாறும் ஜெயந்தன். எல்லாமே நம்ம நம்பிக்கைல தான் இருக்கு.” 

“ஒவ்வொரு மனிதனும் இரண்டு கதைகளோடு தான் வாழ்வான். ஒன்னு அவன் வாழும் கதை‌.. இன்னொன்னு அவன் வாழ நினைத்த கதை.

என் நண்பன் முத்துக்குமார் சொன்னது. அதுல இந்த வாழ நினைத்த கதை நிறைய பேருக்கு நினைவாவே நின்னுடும். சிலருக்கு தான் அது நிஜத்தில் நடக்கும். நம்ம கனவு நிஜமாகும்னு இப்போ எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு ஆதி.” 

“ஜெயந்தன்.. நாம பேசின மாதிரி கதை நம்மளை தாண்டி வெளியே போக கூடாது. ஒரு வசனம் கூட.” 

“உங்க நம்பிக்கையை நான் காப்பாத்துவேன். என் தலைவிதியை மாற்றி எழுதின பேனா நீங்க.” 

“நமக்குள்ள புகழ்ச்சி எதுக்கு ஜெயந்தன்” 

ஜெயந்தன் படத்திற்கான அடுத்த கட்ட வேலைகளை அவனுடன் விவாதித்து விட்டு சென்றான். கண்மணி அனைத்திலும் அவனுடன் இருந்தாள். இந்த பிரம்மாண்ட கனவு தொழிற்சாலைக்குள் எத்தனை எத்தனை சிறிய வேலைகள். ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும். இத்தனை தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உழைத்தால் தான் ஒரு திரைப்படம் உருப்பெறும். அவளுக்கு ஒவ்வொன்றும் ஆச்சர்யமாக இருக்க, படம் முடியும் வரை ஆதியுடன் இருக்க ஆசைப்பட்டாள். 

அதை அவனிடம் சொன்னதும்,

“ஆயுள் முழுதும் உடன் வா என்பவனிடம், பதியம் செய்த செடி வளரும் வரை வருகிறேன் என்கிறாய்” 

“பார்ரா..” 

“அப்படி பார்க்காதே என்கிறேன். உன் கண்ணின் மணி நான். எப்படி பார்க்காமல் இருப்பது என கேட்கிறாய்..” 

“அடடா..” 

“உருகும் மெழுகாய்..நான். எனை ஏற்றும் தீக்குச்சியாய் நீ.” 

“போதும் போதும். மழை வர மாதிரி இருக்கு.. கிளம்பலாம். உங்க கொஞ்சல் எல்லாம் வீட்டில் போய் வச்சுக்கலாம்” 

“பேச்சு பேச்சா இருக்கணும். வீட்டுக்கு போனதும் மாத்தக் கூடாது.” 

உதட்டை அழுத்தி கடித்தாள். சிரிப்பும், வெட்கமும் அவளுக்குள் ஒளிந்தது. 

*

காதல் தோல்வி பாடல்கள் அன்று அரங்கத்தை சோக மழையில் நனைத்தது. 

“காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்.. நரகசுகமல்லவா. நெருப்பை விழுங்கி விட்டேன். அமிலம் அருந்தி விட்டேன்” யாரோ ஒருவர் பாட, ராகா அமிலமழையில் நனைந்தவள் போல துடித்தாள்‌.

மாளவியிடம் முதல் நாள் தான் அழுது புலம்பியிருந்தாள்‌‌. ராகாவை அப்படி பார்க்க மாளவியால் முடியவில்லை‌.

“ராகாக்குட்டி. இப்படி அழுது அழுது உன் முகமே மாறிடுச்சு பாரு. காதல்னா ஒருமுறை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு வேலையை பார்த்தா ஆகுமா? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் அவங்களை நாம நினைச்சு உருகிட்டு இருக்கோம்னு வெளிப்படையா காமிச்சு தான் ஆகனும். உன் கைக்குள்ள அரவிந்த் வரவரைக்கும் நீ உன் காதலை வெளிப்படுத்து.. அவன் நிச்சயமா உன்னை புரிஞ்சுப்பான்” என்று கட்டிக் கொண்டாள். மாளவியின் வார்த்தைகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுப்பவள் ராகா. இன்று அவனிடம் தன்‌மனதில் உள்ளதை எல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.

“சில நேரம் மாயம்

செய்தாய் சில நேரம் காயம்

செய்தாய் மடி மீது தூங்க

வைத்தாய் மறு நாளில் ஏங்க

வைத்தாய் வெயிலா மழையா

வலியா சுகமா எது நீ….

நீதானே என் பொன்வசந்தம்…” 

மதுரா கண்களை மூடி ஆழ்ந்து பாடிக் கொண்டு இருந்தாள். 

ராகா மனம் அந்த பாட்டை பிரதிபலித்துக் கொண்டிருந்தது. விசித்திரம் அவள் மன வேதனைக்கு காரணமானவள் அதை பாடிக் கொண்டு இருந்தாள். 

ராகா கண்கள் அரவிந்த்தை விட்டு அகலவில்லை. அன்று அவன் மதுராவுக்காக அந்த மாலில், அத்தனை பேர் எதிரில் சொந்த வரிகளை போட்டு அவன் பாடிய பாடலை  இணையத்தில் பார்த்த பின்பு அரவிந்துடன் பேசவே இல்லை. அவனும் இவளை தேடி வரவே இல்லை.

ராகா அரவிந்தின் சிந்தனையிலிருந்து முழுதுமாக நீங்கி விட்டாள் என்பது போல் அவன் நடந்துக் கொள்வது அவளுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது. 

நிகழ்ச்சி முடிந்ததும் அரவிந்த் அருகில் போய் நின்றாள். 

“ஹே ராகா.. என்ன பிசியா இருக்கியா.. பாக்கவே முடியல..” அரவிந்த் அத்தனையையும் எடுத்து வைத்துக் கொண்டே கேட்டான். 

“என்னை ஞாபகம் இருக்கா அரவிந்த். இத்தனை நாள் என்னை பாக்கனும்னு கூட தோணவே இல்லல்ல.” 

“அப்படியெல்லாம் இல்ல ராகா. நான் ப்ரொக்ராம் முடிஞ்சு அப்படியே கிளம்பிடறேன். நீ அங்க பிசியா இருக்கறதா பஷீர் சொன்னான்.” 

“சரி இத்தனை நாள் என்கிட்ட பேசாததுக்கு நான் கேட்கறதை  

வாங்கித்தா..” 

“இப்போவா.. நான் கிளம்பற டைம் ஆகிடுச்சே ராகா.” 

“நீ ஒன்னும் வெளிய வர வேணாம்.. இங்க இருக்க காபி கேஃப்க்கு வா.” 

“இன்னொரு நாள் போலாம் ராகா. மணி என்ன பாரு.. டயர்டா இருக்கு.” 

“என்ன ஆனா என்ன? எனக்கு இப்போ ஒரு காபி வேணும். தலை வலி உயிர் போகுது” வேறு எதாவது என்றால் அரவிந்த் அதை தள்ளி போட்டு இருப்பான். தலைவலி என்றதும் அவனுக்கு துடித்தது. அவளுக்கு தலைவலி வந்து விட்டால் இரண்டு மூன்று மணிநேரம் வலி விண்ணென்று தெறிக்கும். அவளும் அவ்வளவு துடிப்பாள். 

“ம்ம். இரு மதுராட்ட சொல்லிட்டு வரேன்” 

காதுகளில் ரத்தம் பாய்ந்தது‌.

“அரவிந்த், நான் உன்னோட வரதுக்கு அவகிட்ட நீ பெர்மிஷன் வாங்கனுமா..” 

“லூசு மாதிரி பேசாத ராகா. அவளை வீட்டுக்கு நான் தானே கூட்டிட்டு போறேன். அதான் இங்க வெயிட் பண்ண சொல்லனும்.. இல்ல நம்மளோட அவளை கூட்டிட்டு போனும்.” 

“நான் உன்கூட ஒரு அஞ்சு நிமிஷம் தனியா இருக்கனும் அரவிந்த்.” 

“காபி தானே கேட்ட ராகா..” 

எதுவும் பேசாமல் கைகளை கட்டிக் கொண்டு அவனை முறைத்தாள். 

அரவிந்த் அமைதியாக போய் மதுராவிடம் சொல்லி அங்கு அழைத்து வந்தான். 

“மதுரா.. இது ராகா. பாத்திருப்பியே.. அசிஸ்டெண்ட் டிரக்டர் இங்க.. என் க்ளோஸ் பிரண்ட்” 

“தெரியுமே‌‌..பாத்திருக்கேன் பேசினதில்ல.. ஹாய்..” 

இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள் ராகா. ‘க்ளோஸ் ப்ரெண்ட்’ 

அவனின் வார்த்தைகள் சுருக்கென்று தைத்தது. 

ஒரு போலி சிரிப்புடன் அவளை பார்த்தாள். 

மதுராவுக்கு ஒரு மாதிரி இருந்தது. 

மூவரும் வெளியில் இருந்த காபி கேப்க்கு வந்தனர். 

“அரவிந்த். அம்மாக்கிட்ட நம்ம விஷயம் பேசினேன்‌. அவங்களுக்கு நம்ம காதல்லயோ, கல்யாணத்துலயோ பிரச்சினை இல்லன்னு சொன்னாங்க.‌ சித்தப்பா பத்தி உனக்கு ஆல்ரெடி தெரியும். அவருக்கு அங்கிள் எப்பவும் நண்பன் தான். அப்புறம் ஏன் இப்படி என் மேல் இவ்வளவு பாரபட்சம் காமிக்கற” 

அவள் பேச பேச மதுரா அதிர்ந்தாள். அவளுக்கு தமிழ் புரியும் என்பது ராகாக்கு தெரியாதே.. 

அரவிந்த் எதுவும் பேசாமல் வந்து கேபினில் அமர்ந்தான். 

மதுரா இருவரையும் பார்த்துக் கொண்டே இருந்தாள். தர்மசங்கடமாக இருந்தது. இருவரின் அந்தரங்கம் விவாதிக்கப்படும் போது தான் எதற்கு? என்று தோன்றியது. 

“நான் வேணா வெளிய வெயிட் பண்ணவா?” 

மதுரா கேட்டாள். 

“இரு மதுரா.. இப்ப கிளம்பிடலாம்..ராகா என்ன வேணும் சொல்லு..?” 

“நீ தான் வேணும் அரவிந்த்” 

உதட்டை குவித்து காற்றை வெளியிட்டான். 

மதுரா இயல்பாக இருப்பது போல் காண்பித்து கொண்டாள். 

“ராகா‌. விளையாடாத. காபி தானே கேட்ட?” 

“ம்ம்.. கேப்புசினோ டபுள் சாக்லேட்” 

மதுரா விழித்தாள். அவளுக்கு தெரியாத வஸ்துவும், தெரிந்துக் கொள்ள கூடாத விஷயமும் அந்த விவாதத்தில் இருந்தது. 

“மதுரா.. காபி குடிக்கறியா?” 

தலையை சரியென்று ஆட்டினாள். 

மதுராவுக்கும், ராகாவுக்கும் ஒரே மாதிரி இரண்டு காபி சொல்லப்பட்டது. 

காலில் இருந்த ஷூலேசை  சரி பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த். 

“அரவிந்த்.. என்னை பாரு. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு. இன்னொருத்தர் முன்னாடி நான் இவ்வளவு கெஞ்சி, என் காதலை சொல்றது..” 

“ராகா.. ப்ளீஸ்.‌ நிறைய முறை சொல்லிட்டேன். இது சரியா வராது. அங்கிளும், மாமாவும் வேணா ஒன்னா போகலாம். ஆனா மாளவி அத்தை மாமாவை எப்படி பாப்பாங்கன்னு நினைச்சு கூட பாக்க முடியல..” 

“நீயா ஒன்னுத்துக்குமே உதவாத காரணத்தை சொல்ற. பிரச்சினையில்லாத ஒன்னை பிரச்சினைன்னு நீயும் நம்பி என்னையும் குழப்பற” 

“உனக்கு புரியாது ராகா. முதல்ல என் வேலையில் ஒரு நல்ல நிலைமைக்கு வரேன். அதுக்கு அப்புறம் தான் வாழ்க்கையோட அடுத்த கட்டத்தை பாக்க முடியும். அதுவரைக்கும் நான் உன்னை வெயிட் பண்ண சொல்லல.” 

“ஓ.. அப்ப மூவ் ஆன் ஆகுன்னு சொல்ற. நிச்சயமா போக மாட்டேன். நீ உன் வாழ்க்கையில் கல்யாணம்னு ஒரு முடிவு எடுப்ப இல்ல. அதுவரைக்கும் என் காதலை நான் நிரூபிச்சிட்டே இருப்பேன்.” 

“ம்ம்.” 

“சரி நீ கிளம்பு. இந்த பொண்ணு வேற மொழி தெரியாம நம்மளை உத்து உத்து பாத்துட்டு இருக்கு.” 

“அவளுக்கு தமிழ் நல்லாவே புரியும்.” என்று சொல்லிவிட்டு எழுந்தான் அரவிந்த். 

ராகாக்கு தான் கொஞ்சம் அதிகப்படியாக பேசி விட்டோமோ என்று தேன்றியது. 

‘அதனால் என்ன.. அவளுக்கு தெரிய வேண்டிய விஷயம் தான். நான் தான் அரவிந்த்தின் காதலி..இதை அவளிடம் சொல்லியாகி விட்டது’ 

அரவிந்த் வீடு வரும் வரையில் எதுவும் பேசவில்லை. மதுராவுக்கு அவனின் தர்மசங்கடம் புரிந்ததால் எதுவும் கேட்கவில்லை. 

ஆனால் மனதுக்கு ஏதோ பாரமாக இருந்தது. அவன் மனதில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல், தான் ஆசையை வளர்த்துக் கொண்டோமோ என்று தோன்றியது. 

அதுதான் தன் நிலை தனக்கே தெரியுமே. தான் எதற்காக இங்கு வந்தோம்.. அதை விட்டு விட்டு மனதை அலைபாய விட்டதற்கு இறைவன் கொடுத்த அடி இது என்று நினைத்துக் கொண்டாள். 

ஊர்க் குருவி வானத்திற்கு ஆசைப்படலாமா.. வானம் இறங்கி வந்ததே பெரிய அதிர்ஷ்டம். மனதை சமாதானப்படுத்த முயன்றாள்.. 

அது தேம்பி அழுது அவளை மன அழுத்தத்திற்கு கொண்டு வந்து விட்டது. 

அரவிந்த்க்கு ராகா அப்படி பேசியது சிறிது வருத்தமாக தான் இருந்தது. ‘சூழ்நிலையை புரிந்துக் கொள்ளாமல் இப்படி அவசரப்படுத்தினால் என்ன அர்த்தம்.? மாமா வேறு புதிய படத்திற்கு இசையமைக்க சொல்லியிருக்கிறார்.. அந்த பயமே இன்னும் விடவில்லை. இப்போது காதலில் குதிப்பது தற்கொலைக்கு சமம்..’

தலையை இடவலமாய் ஆட்டியபடி அவன் வண்டியை ஓட்டியதை பார்க்கும் போது மதுராவுக்கு பரிதாபமாக இருந்தது. 

‘ராகா பேசியது வருத்தம் போல..’ அவனது தலையை கோதி விட மதுராவின் விரல்கள் துடித்தன. ஆனால் இன்னொருவரின் சொத்தின் மேல் விரல் நுனி படுவது கூட பாவம் என்று தோன்றியது. வெளியில் பார்வையை சிதற விட்டாள். 

*

கண்மணியின் மடியில் தலை வைத்து படுத்து இருந்தான் ஆதி. 

அவளின் விரல்கள் அவனது இதழின் மீது இருந்தது. ஒவ்வொரு நகமும் விரலோடு தான் ஒட்டியிருக்கிறதா என்று பரிசோதித்தது அது. 

“இன்னிக்கு ப்ரொட்யூசர்ஸ் அசோசியேஷன் போனீங்களே.. என்ன நடந்ததுன்னு சொல்லவே இல்ல..” 

“அதுவா.. எனக்கு புதுசா ஒரு இன்டர்வியூக்கு போன மாதிரி இருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கி வச்சிருந்தாங்க. யாரும் என்னை தெரிஞ்சுக்கிட்ட மாதிரியே காமிச்சுக்கல. 

சில பேர் பார்வை இவனா.. இவன் எப்படிடா மறுபடியும் வந்தான்னு கேட்கிற மாதிரி இருந்தது. 

சிலர்.. மறுபடி இத்தனை நாள் கழிச்சு ஒன்னுமில்லாம வந்திருக்கான்.. இவன்லாம் எங்க தேற போறான்னு பார்த்த மாதிரி இருந்தது. 

பெரிய தலைங்க ஒருத்தர் கூட கண்டுக்கவே இல்ல.. ஒரு காலத்தில் நான் படம் எடுக்க போறேன்னு சொன்னா கூட, அப்பவே பாராட்ட ஆரம்பிப்பாங்க.. படம் வந்ததும் நீ நான்னு போட்டி போட்டுட்டு சேனலுக்கு விமர்சனம் கொடுப்பாங்க. ஆனா என்ன நினைச்சாங்களோ, நான் ஏதோ தப்பு பண்ண மாதிரி அவங்க ஒதுக்கினப்ப, ஒரு நொடி தோணுச்சு. எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்னு? ஆனா அடுத்த நொடியே தோணுச்சு.. தப்பு பண்ணாத நான் ஏன் பயப்பட்டு ஒதுங்கனும்..?” 

“கரெக்ட்.. இதான்.. இந்த ஆட்டிட்டயூட் வேணும். எங்கேயும் நம்ம கன்டெண்ட் சரியா இருந்தா, நிச்சயமா நாம அங்கீகாரம் கிடைக்கலன்னு ஒதுங்க கூடாது. மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு. இடைத்தரகர்கள் சொல்ற கருத்துல இல்ல..” 

“ம்ம். ஆமா கண்மணி.. இதே தான் நான் யோசிச்சேன். முன்ன படம் தயாரிப்புன்னு இறங்கினது நான் தான். ஒரு பதினைஞ்சு வருஷம் இருக்கும். பீல்ட்ல இருக்க டிரெக்டர்ஸ், ஆக்டர்ஸ், மீடியா, டெக்னீஷியன்ஸ்ன்னு எல்லாரும் என்னை கொண்டாடின நாட்கள்.. அப்போதான் ரத்னா வந்தான். படத்தயாரிப்பு பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது..

நான் சைலண்ட் பார்ட்னர். என் பேர் கூட நீ சொல்ல வேணாம். எனக்கு பணம் வேணும். நிறைய சம்பாதிக்கனும். அது போதும். நீ வேலையை பாரு. மார்க்கெட்டிங் நான் பாத்துக்கறேன்னு சொன்னான். 

அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவனே தான் படம் கதையை டிசைட் பண்ணான்.. படம் ஓட மீடியாஸ்ட்ட பேரம் பேசினான். ஆதி கம்பெனில ரத்னா தான் ஓனர்.. ஆதி பினாமி.. அப்படிங்கற மாதிரி பேச்சு வர வச்சான். 

அப்போதான் ஸ்வாதி பிரச்சினை வந்தது. அதனால நான் சரியா கான்சன்ட்ரேட் பண்ணல.. கம்பெனி வேலைகள் எக்குத்தப்பாக போக ஆரம்பிச்சுது‌. அவனும் என்னை ஒரு வேலைக்காரனை விட கீழ்த்தரமா நடத்தினான். 

சடன்னா எனக்கு என்னமோ தப்பா பட்டுச்சு. ஒன்னுமே வேலை செய்யாம, உழைப்பை மட்டும் நான் போட்டுட்டு இருக்கறப்ப, இவனா என்னை கேட்காம பணத்தை இன்வெஸ்ட் பண்ணிட்டு அந்த ரிட்டென்ஸ் எடுக்க என்னை திரும்ப நைட்டும் பகலும் ஓட வச்சான். 

உனக்கு ஞாபகம் இருக்கா.. அரவிந்த் அப்போ கிரிக்கெட்ல ஸ்டேட் லெவலுக்கு ஜூனியர்ல விளையாடினான்.. 

நான் அப்போ கூட அங்க போகல. அவன் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கினப்ப அதை கூட செலிப்ரேட் பண்ண விடல.. படம் வேலைதான் முக்கியம்.. போ இதை பண்ணு

. அதை பண்ணுன்னு விரட்டினான். ஆனா நம்ம குழந்தை பாவம் ஏமாந்துட்டான். அதான் மொத்தமா கிரிக்கெட்ட விட்டுட்டு இசையில் கான்சன்ட்ரேட் பண்ணான். 

நானே அவன் கனவை என்னோட அஜாக்கிரதையால அழிச்சிட்டேன். “ 

பெருமூச்சு விட்டவனை விதிர்த்து போய் பார்த்தாள். 

“அப்புறமா ரத்னாட்ட சொன்னேன்..  இந்த முறை  கலைமாமணி அவார்ட், விஜய் அவார்ட் வாங்கறப்ப எந்த ரெப்ரெஸண்டேட்டிவ் அனுப்பாம, நானே போறேன். இந்த கம்பெனி என் உழைப்புன்னு சொல்லனும்.. அப்பிடின்னு சொன்னேன்.. அவனுக்கு ஒரு ஆத்திரம் வந்ததே.. நீ படம் எடுத்ததே நான் போட்ட பிச்சை. இது முழுக்க முழுக்க என் உழைப்பு.. நீ வெளிய போய் இதெல்லாம் உன்னோடதுன்னு சொன்னா எனக்கு எப்படி இருக்கும்னு கேட்டான்.. உயிர் நண்பன்னு நினைச்சவன் முதுகில் ஓங்கி ஒரு குத்து குத்தினான். 

ஒருபக்கம் நீ வார்த்தையால் கொன்ன.. இன்னொரு பக்கம் அரவிந்த் ஒதுக்கினான். தேவா மாளவி ஒரு பக்கம் நல்லா வாழ்ந்து என்னை வெறுப்பேத்தினாங்க. நண்பன்னு நினைச்சு என்னை எங்கேயும் வெளிக்காமிக்காம இருந்ததுக்கு ஊர் முழுக்க அவனை நான் ஏமாத்தி எல்லாத்தையும் எடுத்துக்கிட்டதா தகவல் பரப்பினான். அது மட்டுமில்ல.. அவன் தனியா ஒரு கம்பெனி ஆரம்பிச்சு ப்ரொட்யூஸ் பண்ணி டிஸ்டிரிப்யூட் பண்றான்னு தெரிஞ்சது‌.. சரின்னு நான் மொத்தமா அவன்ட்ட இருந்து விலகினேன். ஆனா என் தொழிலை மொத்தமா அழிச்சான். ஆட்சி அவனுக்கு சாதகமா இருந்ததால அவனை எல்லாரும் கொண்டாட ஆரம்பிச்சாங்க. 

ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாதவனா நான் நின்னேன். அப்போ நீ மட்டும் தான் என் ஸ்டெரஸ் பஸ்டர்னு நினைச்சு கிட்ட வந்தா நீ சாகடிப்ப.. நான் என்ன பண்ணுவேன்.. அது மொத்தமா தேவா மேல் திரும்பினது‌..

நீ மட்டும் யோக்கியமான்னு கேட்காத.. நான் நினைச்சது தேவா, மாளவியை விட்டு பிரியனும்னு தான்.. அவன் கடைகளை கூட நான் எடுத்து அந்த கடனை மொத்தமா அடைச்சு அதுல வர வருமானத்தை மாளவிக்கு கொடுத்து உன் புருஷனை விட நான் பெட்டர்னு சொல்ல தான் நினைச்சேன். சத்தியமா அடுத்தவன் உழைப்புக்கு நான் உரிமை கொண்டாடல.. ஆனா எல்லார் கண்ணுக்கும் நான் தப்பா தெரிஞ்சேன்..” 

ஆதியின் கண்களின் மேல் கண்மணியின் கண்ணீர் விழுந்தது. 

பாவமன்னிப்பு கேட்டவனை ஆசீர்வதித்த கடவுளின் கண்ணீராக அது இருந்தது. 

“இவ்ளோ மனசுல வச்சிட்டு தான் உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்கிட்டு ஒதுங்கி போனீங்களா..? அது தெரியாம, உங்களோட நிக்க வேண்டிய நானே உங்களை அநியாயமா வார்த்தையால் கொன்னிருக்கேன்.‌ நான் பண்ணது பெரிய பாவம். உங்களை அப்போவே அரவணைச்சு இருந்தா மாளவி வாழ்க்கை கூட அப்படி ஆயிருக்காது.. என்னை மன்னிச்சிடுங்க..” 

“நீ தான் என்னை மன்னிக்கனும் கண்மணி. இன்னிக்கு நான் திரும்ப வந்து நிக்கறப்ப ஒட்டுமொத்த திரையுலகமும் என்னை ஒதுக்கறப்ப, மனசு தாங்காம தான் உன்கிட்ட கொட்டினேன்.‌ நீ என்னை ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம்.. ஆனா இந்த ஒதுக்கல் எல்லாம் எனக்குள்ள நெருப்பை தான் மூட்டுது. 

நிச்சயம் அதே திரையுலகம் என்னை பாராட்டற அளவு என்னை நான் உயர்த்திப்பேன்.

கடமையை செய்ய போறேன்.. அங்கீகாரம் தன்னால வரும்.. உழைப்புக்கு அன்னிக்கு மரியாதையோ பேரோ கிடைக்கல.. அதுக்கும் சேர்த்து இந்த உலகம் இனி என்னை புரிஞ்சுக்கும்.” 

அவனின் தலையை கோதி, இரு கைகளால் அவனின் முகத்தை உயர்த்தி மூச்சு முட்ட இதழ்களை பதித்துக் கொண்டு இருந்தாள் கண்மணி.. 

“இப்போ தெரியுது என் ஆதி சுத்த தங்கம்னு. உங்களை நான் உயிர் இருக்க வரை நேசிப்பேன். இந்த உலகத்தில் எல்லாத்தையும் விட நீங்க தான் எனக்கு முக்கியம்.” அவனது இதழ்கள் அவள் வசம் ஆனது. 

இதுவரை தராத அத்தனை காதலும் அவனுக்கு தந்து திக்கு முக்காட வைத்தாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!