Skip to content
Post Views: 5,984
அஞ்சனாவின் போன் ஒலித்தது. போனை எடுத்துப் பார்த்தாள். நிஷாதான் அழைத்திருந்தாள்.
மண்டபத்திற்குள் இருந்த சத்தத்தில் இவள் பேசுவது சரியாக காதில் கேட்கவில்லை என நிஷா போனை கட் செய்துவிட்டாள். ரோகிணியிடம் சொல்லிவிட்டு போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
மண்டபத்தை விட்டு வெளியே வந்து, மரங்களுக்கு இடையே போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொண்டு நிஷாவுக்கு போன் செய்தாள்.
“ஹலோ….”.
Advertisement
“சொல்லு நிஷா. இவ்வளவு காலையிலேயே போன் பண்ணியிருக்க…?”
“உனக்கு என்னம்மா….? ஜம்முன்னு ஊர் சுத்திட்டிருக்க. இங்கபாரு நான் அடுப்புல நின்னு வெந்து அவிஞ்சிட்டிருக்கேன்”.
“ஹா…. ஹா…. உன்னை யாரு வரவேணாம்னு சொன்னது. உன்னையும்தான லீவ் போட்டுட்டு என்கூட ஊருக்கு வான்னு கூப்பிட்டேன். நீதான் பெரிய இவள் மாதிரி டயலாக்கெல்லாம் பேசுன”.
Advertisement
“நான் இப்ப லீவ் எடுக்கமாட்டேன். சேர்த்துவச்சு ஒரு வாரம்போல லீவ் போட்டுட்டு ஊருக்கு போய் ஜாலியா….. இருந்துட்டு வரேப்போறேன்னு சொல்லிட்டு, இப்ப புலம்புனா….”.
Advertisement
“சரி அதைவிடு. புளிசாதம் எப்படி செய்யறது…? அதை சொல்லு…”
“ஏன்…? என்னாச்சு…..? கேன்டீன்ல சாப்பிட வேண்டியதுதான…..”
“என்னவோ நேத்திலிருந்து புளிசாதம் சாப்பிடனும்போல இருந்தது. அதான் ட்ரை பண்ணலாமேன்னு….”
Advertisement
“அதுக்கு புளியோதரை மிக்ஸ் கடையில விக்குமேடி, அதை வாங்கி ட்ரை பண்ணு”.
“ம்ப்ச்…. அவ்வளவுதூரம் நடந்து போய் வாங்கிட்டு வரதுக்கு எல்லாம் பொறுமை இல்ல. நீ என்ன பண்ணனும்னு சொல்லு நானே ட்ரை பண்றேன்”.
“சரி. நான் சொல்றேன். நோட் பண்ணிக்கோ…. என போனிலேயே நிஷாவுக்கு செய்முறையை சொல்ல ஆரம்பித்தாள்”..
“இவ்வளவு வேலை பண்ணனுமா… நான் என்னவோ டக்குனு செஞ்சுடலாம்னு பார்த்தேன்….”
“சோம்பேறி. ஈஸிதான்… ட்ரை பண்ணிப்பாருடி. அப்புறம் எப்பதான் செஞ்சு கத்துப்பே…”
“போடி… கிட்சன்குள்ள வரத நினைச்சாலே காண்டாகுது. நாக்கு செத்துப்போயிருக்கு. நீ எப்ப வருவ…..?”
“இந்த வீக் என்ட்தான் வருவேன்……”
“சீக்கிரம் வந்துருங்க அம்மணி. உங்க அறுசுவை நளபாகத்த ருசிக்க என் நாக்கு ஏங்கிட்டிருக்கு….. என்னை காக்க வைக்காம சீக்கிரம் வந்து சேரு தாயி”.
“ஹா… ஹா… வரேன்டி. வைடி போனை….. விட்டா பேசிட்டே இருப்பா…” என போனை கட் செய்துவிட்டு திரும்ப மண்டபத்திற்குள் சென்றுவிட்டாள் அஞ்சனா.
@@@@@@@@
கதவுதட்டும் சத்தம் கேட்டு நிஷா வெளியே வந்து கதவைத் திறந்து பார்த்தாள். அங்கே உமாபதி நின்றிருந்தான்.
இதை அம்மா உன்கிட்ட கொடுத்துட்டு வரசொன்னாங்க என ஒரு மூடிபோட்ட கிண்ணத்தை அவளிடம் கொடுத்தான். கையில் அதனை வாங்கி திறந்து பார்த்தவளது முகம் மத்தாப்பு போல ஜொளித்தது.
“ஹி… ஹி… தேங்க்ஸ்…. ஆன்டிக்கு நான் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க”.
சரி என தலையை அசைத்து, இரண்டு எட்டு வைத்தவன், யோசனையாக நின்று, திரும்பி “அஞ்சனா எப்ப வராங்க….” என்றான் நிஷாவிடம்..
இவன் ஏன் இதை கேட்கிறான் என யோசனையானாலும்…., “இந்த வீக் என்ட்…” என பதில் மொழிந்தாள்.
சரி என தலையசைத்தவன், படிகளில் இறங்கி சென்றுவிட்டான். கீழ் வீட்டிலிருந்து பிரேமா எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்து கொடுத்தனுப்பியிருந்தார்.
அவருக்கு அஞ்சனா ஊருக்கு சென்றது தெரியும். அஞ்சனா ஊருக்கு போகும்போது அவரிடம் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தாள். நிஷாவுக்கு அவ்வளவாக சமையல் வராது என்பதும் தெரியும் அவருக்கு. ஆதலால்தான் காலையில் சமைக்கும் போதே இவளுக்கும் சேர்த்து குழம்பு வைத்து கொடுத்து விட்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் நிஷாவிற்கு மனதில் ‘’ஹப்பாடா….’’ என்று இருந்தது. சந்தோஷமாக அந்த குழம்பை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தவள், குக்கரில் வெறுமனே சாதத்தை மட்டும் வைத்துவிட்டு… துணியை எடுத்துக்கொண்டு குளிப்பதற்காக பாத்ரூம் சென்றாள்.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அன்று மதிய விருந்து முடிந்து வீட்டிற்கு புறப்பட்டனர்.
செல்வதுரை ரோகிணியின் கையைப் பிடித்துகொண்டு, “இப்படியே வீட்டுக்கு வாடா…. வீட்டுக்கு வந்துட்டு போயேன்…..” என்றார் தங்கையிடம்.
“இருக்கட்டும் …ண்ணே. உங்களையெல்லாம் பார்க்கவே முடியாதான்னு ஏங்கிட்டிருந்தேன். என்னவோ ஆண்டவன் புண்ணியத்துல உங்களையெல்லாம் இங்க பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். என்னவோ நம்ம சொந்தத்த எல்லாம் திரும்ப பார்த்ததுல மனசுக்கு அவ்வளவு தெம்பாயிருக்கு. ம்ம்… இனி எப்ப திரும்ப உங்களையெல்லாம் பார்ப்பனோ…?” என்றார் ஏக்கமாக.
“அதுக்குதான் வீட்டுக்கு வந்துட்டு போன்னு சொல்றேன். உன் மனசு எனக்கு புரியுது. மாப்பிள்ளை இல்லாம வர சங்கடபடறேன்னு நினைக்கறேன். அவரையும் அழைச்சிட்டு கட்டாயம் நம்ம வீட்டுக்கு வரனும்”.
“முன்னமாதிரி நீங்க நம்ம வீட்டுக்கு வரபோக இருந்தாதான், அண்ணன் எனக்கும் நிம்மதியாயிருக்கும். பழசையெல்லாம் மனசுல வச்சுக்காதடா. அதெல்லாம் நினைச்சா… எனக்கே வருத்தமாயிருக்கு. ஏதோ அண்ணன் புத்திகெட்டுப் போய் பண்ணிட்டதா…. மன்னிச்சுடு” என்றார் ரோகிணியின் கைகளைப் பிடித்துகொண்டு.
“என்ன… .ண்ணே… நீ….? மன்னிப்பு அது இதுன்னு…… பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு. விடு. அதெல்லாம் நான் மறந்துட்டேன்”.
“உன்னை எனக்கு தெரியாதா……டா.? எனக்கென்னவோ….. மாப்பிள்ளைக்கு இன்னும் என்மேல கோவம் போகலன்னு தோணுது. அதான் நான் அன்னைக்கு வீட்டுக்கு வந்து பேசினப்போவும் அவர் சரியா பேசல. மாப்பிள்ளை பேச்சுலயே தெரிஞ்சுது”.
“எல்லாம் சரியாயிடும் ண்ணே. அதையே நினைச்சு வருத்தப்படாத”.
“நான் வேணா… வந்து மாப்பிள்ளைகிட்ட மன்னிப்பு கேட்கவா….டா…?”
“அய்யய்யோ… அண்ணே….. அந்தமாதிரி எதுவும் பண்ணிடாத…… விடு அதையெல்லாம். பழசையே நினைச்சுட்டிருக்காத….”
“இதுவே நம்ம அப்பா அம்மா இருந்திருந்தா…. உன்னை சரியா கவனிச்சுருப்பாங்களோ….? உன்னை இப்படி தனியா தவிக்க விட்டிருக்க மாட்டாங்கல்ல”.
“விடு ண்ணே… பழசை திரும்ப திரும்ப பேசறாதால என்ன ஆகப் போகுது?”
“அண்ணன் இத்தனை வருஷமா… உன்னை கண்டுக்காம, கவனிக்காம விட்டுட்டேன்னு…. மனசு கிடந்து தவிக்குது….டா.. சில சமயம். நான்…” என ஏதோ சொல்ல வந்தவர்… நிறுத்தி கண்கலங்கியபடி “மாப்பிள்ளை…..ய பிள்ளைய எல்லாம் கூட்டிட்டு ஒருமுறை நம்ம வீட்டுக்கு வாடா…..”. என அழைத்தார். செல்வதுரைக்கு தொண்டை கமறி நாதழுதழுத்தது அழைக்கும்போதே.
அண்ணனின் கையைப் பிடித்து தட்டிக்கொடுத்த ரோகிணி “ஏன் கஷ்டப்படற ண்ணே. அதுவும் ஒரு நாள் நடக்கும் ண்ணே கவலைப்படாத…” என அஞ்சனாவைப் அர்த்தமாக பார்த்துக்கொண்டே சொன்னவர்…, “நீ உன்னைப் பார்த்துக்கோ… கண்டதையும் நினைச்சி.. மனசை போட்டு குழப்பிக்காத” என்றார்.
மீனாவின் கையைப் பிடித்து இன்முகமாகவே தலையசைத்து “வரேன் அண்ணி”. என விடைபெற்ற ரோகிணி, தேவாவிடமும் தலையசைத்து விட்டு அஞ்சனாவை அழைத்துகொண்டு புறப்பட்டு விட்டார்.
மீனாவும் கண்கள் கலங்க ரோகிணியையே பார்த்து நின்றிருந்தார். தேவநாதன் சென்று கார் எடுத்து வந்தவுடன் இவர்களும் மண்டபத்திலிருந்து புறப்பட்டனர்.
ரோகிணிக்கு காரில் ஏறி உட்கார்ந்தவுடன்… இதுவரை அடக்கி வைத்த அழுகை வெளியே வந்திருந்தது. துடைக்க துடைக்க கண்களில் கண்ணீர் வற்றாமல் வந்து கொண்டேயிருந்தது அவருக்கு.
அவர் தனக்குள் அழுகையை விழுங்க முயன்று முடியாமல் தத்தளித்ததிலேயே…. உணர்வுகளை மறைக்க அவர் போராடுவது தெரிந்தது.
அஞ்சனா ரோகிணியின் கையைப் சமாதானமாக பிடித்து தட்டிக் கொடுத்தாள். மகளது தோளில் சாய்ந்தவர்… வாயை ஒரு கையால் அழுந்த மூடி… கண்களை மூடிக்கொண்டு, உடல் குலுங்க அழ ஆரம்பித்தார் சத்தமில்லாமல். அவரின் அழுகை அவளையும் என்னவோ பண்ணியது.
அஞ்சனாவுக்கு என்ன சொல்லி தாயை தேற்றுவது என தெரியவில்லை. மௌனமாக அவரது முதுகை வருடி கொடுத்து கொண்டிருந்தாள். தாயின் தவிப்பு அவளின் மனதையும் பிசைந்தது..
இன்னும் எத்தனை வச்சிருக்காங்களோ… இதமாதிரி வெளிய சொல்லாம இவங்க மனசுக்குள்ளயே… இப்படி போட்டு புழுங்கிட்டு? யார்கிட்டயும் ஷேர் பண்ணாம அவங்களுக்குள்ளயே பூட்டி வச்சு என்னல்லாம் அவஸ்தைபட்டாங்களோ..? என ரோகிணியைப் பற்றின வேதனை அவளையும் கவ்விக்கொண்டது.
தேவநாதன் நேற்று அவளிடம் பேசிச் சென்றது எல்லாம் இப்போது அவள் காதில்… வலம்வர துவங்கியிருந்தது.
தேவநாதன் கார் ஓட்டிக்கொண்டிருந்தாலும் பக்கத்தில் அமர்ந்திருந்த தந்தையின் மேல்தான் கண் இருந்தது. செல்வதுரை முகத்தில் தெளிவில்லாமல் கலக்கமாகவே உட்கார்ந்திருந்தார். அவரது பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது. மனதில் முந்தைய நினைவுகள் எல்லாம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அவரைப் புரிந்துகொண்ட தேவநாதன் “ப்பா… டையர்டா இருந்தா… சீட்டை பின்னாடி சாய்ச்சுவிட்டு தூங்குங்களேன். நைட்டும் சரியா தூங்கல நீங்க” என்றான் முன் பக்கமாக தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த செல்வதுரையைப் பார்த்து.
“இருக்கட்டும்…. ப்பா…”
பின்னாடி மீனாவைத் திரும்பி பார்த்தவன் “ம்மா… ஜூஸ் ஏதாவது சாப்பிடறீங்களா….? கடையில நிப்பாட்டவா…..” என்றான்.
“எனக்கு எதுவும் வேணாம். அப்பாக்கு வேணுமான்னு கேட்டுக்கோ…” என்றார் செல்வதுரையை கண்களால் காட்டி.
“ப்பா… நிப்பாட்டவா…”
வேண்டாம் என தலையசைத்தார் செல்வதுரை.
சில நிமிடங்கள் அமைதியாக பக்கவாட்டில் ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த மீனா மெல்ல திரும்பி முன்னே பார்த்தார். செல்வதுரை கண்ணைமூடி சாய்ந்திருந்தார் இருக்கையில்.
திரும்பி தேவநாதனைப் பார்த்தார். ரியர்வியு கண்ணாடி வழியாக மீனாவைப் பார்த்தவன், என்ன ம்மா…? ஏதாவது வேணுமா…..? என்றான் உதட்டசைத்து மெல்ல.
இல்லை என தலையசைத்தவர், தயங்கிக்கொண்டே… மெல்ல “அவளைப் பார்த்தியா…. உனக்கு பிடிச்சிருக்கா……?” என்றார்.
மீனாவின் கேள்வியில் மென்னகை புரிந்தவன், “எவளை…? யாரை…?” என்றான் ஒன்றுமே தெரியாததுபோல் மீனா கேட்க வருவது புரிந்தாலும்.., புரியாததுபோல……
மீனா அவனை முறைத்தார்.
“என்னம்மா…?”
“போடா… தெரியாத மாதிரி நடிக்காத நீ. அந்த பொண்ண பார்த்தியான்னு தான கேட்டேன்….”
“எந்த பொண்ணு….. ம்மா…”
நெற்றியைச் சுருக்கி யோசனையுடன் தேவநாதனைப் பார்த்தவர்…, இவனுக்கு நிஜமாவே….. நான் கேட்கறது தெரியலையா…. இல்ல தெரியாதது மாதிரி நடிக்கிறானா….. எனப் பார்த்தார் மீனா.
திரும்ப கண்ணாடியில் மீனாவின் யோசனையான முகத்தைப் பார்த்து குறுநகை புரிந்தவன், ஒன்றும் தெரியாததுபோல…, “என்ன ம்மா…” என்றான் அப்பாவியாக முகத்தை வைத்துகொண்டு.
“போ…. டா…. நான் கேட்கறது என்னன்னு தெரியாதா…. உனக்கு…” என முறுக்கிக் கொண்டார்.
“அச்சோ… என் செல்ல அம்மாக்கு அதுக்குள்ள கோவம் வந்துடுச்சு…” என கொஞ்சியவன். “நீங்க பாட்டுக்கு மொட்டையா….. அந்த பொண்ணுன்னா…. நான் எந்தப் பொண்ணை கண்டேன். அங்க கல்யாணத்துல….., எத்தனை பொண்ணுங்க வந்தாங்க”.
அவனைப் பார்த்து பல்லைக் கடித்த மீனா, “ஏன்டா…… அவங்களை எல்லாம்…, நான் ஏன் கேட்க போறேன். உன் அத்தை பொண்ணதான் கேட்டேன். பார்த்தியா…? பிடிச்சிருக்கான்னு……?
“ஹ்ம்ம்…. இப்படி தெளிவா….. சொன்னாதான தெரியும். அந்த பொண்ணுன்ன உடனே….. நான் குழம்பிட்டேன்”.
“டேய் நானாவது ஒரு தடவைதான் அந்த பொண்ணுன்னு சொன்னேன். நீ என்ன……டா இப்படி கூவி கூவி அந்த பொண்ணு……. அந்த பொண்ணுன்னு கடை வைக்கறே…..” என முறைத்தார் தேவநாதனை மீனா.
“அது உங்க தப்பு. நீங்க அவள் பேரை சொல்லி கேட்டிருந்தீங்கனா…… எனக்கு தெரிஞ்சிருக்கும். பேரும் சொல்லாம….. ஊரும் சொல்லாம….. மொட்டையா….. அந்த பொண்ணுன்னு சொன்னீங்கனா…… எனக்கு எப்படி தெரியுமாம்? என கலாய்த்தான்.
“டேய்…. உன்னை…” என தலையில் அடித்துக் கொண்டு சிரித்தார்….. மீனா அவனது கிண்டல் தொனியில்.
“எதுக்கு திடீர்னு இப்ப அவளைப்பத்தி கேட்கறீங்க…?”
“அவளைப் பார்த்தியே….., பிடிச்சிருக்கான்னு….. கேட்டேன்?”
மீனாவைத் திரும்பி பார்த்தவன், “பிடிச்..சா…மட்டும் என்ன பண்ணப்போறீங்க…? அவங்க அப்பாதான் பொண்ணை கட்டிக்கொடுக்க சம்மதம் இல்லைன்னு சொல்லிட்டார் இல்ல…” என்றான்.
………………………………
“என்ன ம்மா….. அமைதியாயிட்டீங்க……?”
“என்ன சொல்ல சொல்றே…..? பதில் தெரியாமதான் நானும் தவிச்சிட்டிருக்கேன். எல்லாம் உங்கப்பாவ சொல்லனும்…..” என கணவனை பார்த்தார் மீனா.
“மீனாவைப் பார்த்து முறுவலித்தவன், விடுங்க ம்மா… அவர் பொண்ணு தர மாட்டேன்னதுக்கு அப்பா என்ன பண்ணுவாரு….?”
“அன்னைக்கு அந்த அண்ணன் உனக்கு பொண்ணை தரமேட்டேன்னு சொன்னதும் எனக்கு அவ்வளவு கோவம்…. இதுல உங்கப்பா வேற அங்க உங்காந்து அந்தண்ணன் கிட்ட கெஞ்சிகிட்டுருக்காரு…..”
…………………..
“என் பிள்ளைக்கு என்ன குறைச்சல். நாங்க என்ன பொண்ணு கிடைக்காமயா… அவர் பொண்ண கட்ட நினைச்சோம்….”
“விடுங்க ம்மா….., உங்களுக்கு உங்க பையன் உசத்தின்ற மாதிரி, அவருக்கு அவர் பொண்ணு உசத்தி. உங்களுக்காவது மூணு பிள்ளைங்க இருக்கு. அவர் ஒரே ஒரு பொண்ணு பெத்து வச்சிருக்காரு. அவருக்கும் ஆசை இருக்கும் இல்ல”.
“நீ என்னடா….? எனக்கு ஆதரவா பேசறயா….? இல்ல உன் அத்தை புருஷனுக்கு ஆதரவா பேசறயா…. நீ மட்டும் எப்படியிருப்ப…? எல்லாம் உங்கப்பாபோலதான இருப்பே…”
“ஹா….. ஹா….. என்னம்மா…. சின்ன குழந்தை மாதிரி….. பொசுக்கு பொசுக்குன்னு கோச்சுக்கறீங்க. மனசுல தோணுனத சொன்னேன்”.
தாயும் மகனும் பேசிக்கொண்டு வருவதை செவிமடுத்துக் கொண்டிருந்தாலும்…. அவர்களது உரையாடலில் செல்வதுரை ஏதும் தலையிடவில்லை.
@@@@@@@@@@
கதவை யாரோ இடிப்பது போல சத்தம் கேட்டு தூக்கக் கலக்கத்துடன் எழுந்து உட்கார்ந்தாள் நிஷா. இந்த நடு இராத்திரியில யார் என யோசனையாக லைட்டைப் போட்டு கதவைத் திறந்து பார்த்தாள். வெளியில் பிரேமா நின்றிருந்தார்.
பயத்துடன், முகமெல்லாம் கலங்கி அழுகையுடன் நின்றிருந்தவரைப் பார்த்ததும்…, இவளுக்கு பயம் வந்தது. ‘’ என்னாச்சு ஆன்ட்டி…..?’’ என பதறினாள் நிஷா.
கொஞ்சம் என்னோட வா……. என பயத்தில் அழுதவர்….. அவளது கையைப் பிடித்து ஒன்றும் சொல்லாமல் இழுத்து சென்றார் அவர்களது வீட்டிற்கு.
அவர்களது அறைக்கு பிரேமாவுடன் வந்தவள் நாச்சியப்பன், அங்கே மயங்கி சரிந்திருந்ததைப் பார்த்து பதறினாள். “என்னாச்சு அங்கிள்க்கு…..” என நாச்சியப்பனின் அருகில் சென்று அவரைத் தொட்டுப் பார்த்து, உலுக்கி கத்தி… எழுப்ப முயன்றாள் ஆனால் அவரிடம் எந்த அசைவும் இல்லை. பிரேமாவை நிமிர்ந்து பார்த்து…, “என்னாச்சு ஆன்ட்டி…? ஏன் அங்கிள் இப்படி இருக்காங்க…” என்றாள் கலக்கத்துடன்.
தெரி…யல….. எ…னக்…கும் என அழுகையோடே கூறினார். அவருக்கும் வார்த்தைகள் முழுதாக வரவில்லை வாயிலிருந்து. விசும்பல் சத்தம்தான் கேட்டது அவரிடமிருந்து. “தூங்கிட்டிருந்தவர்…… திடீர்னு எழுப்பி….. தண்ணி வேணும்னு…. சைகையாலே கேட்டார். போய் தண்ணி எடுத்துட்டு வரதுக்குள்ள… இப்படி பேச்சு மூச்சில்லாம விழுந்து கிடக்கார். எழுப்பினாலும் எழுந்துக்கல. எனக்கு பயமாயிருக்கு….. நிஷா என கதறினார் பிரேமா.
“ஒன்னும் இல்ல ஆன்ட்டி… பயப்படாதீங்க…. உமா ஸார் இல்லயா….?”
இல்லை என தலையசைத்தார்.
முதலில் நாச்சியப்பனின் சுவாசத்தை செக் செய்தவள்….. குடு குடுவென்று ஓடிச் சென்று அவளது போனை எடுத்து வந்து எமர்ஜென்ஸிக்கு கால் செய்து ஆம்புலன்சை வரவைத்தாள்.
ஆம்புலன்ஸ் வருவதற்குள் பிரேமாவை கிளப்பி தானும் வீட்டை பூட்டிகொண்டு கிளம்பினாள். ஆம்புலன்ஸ் வந்ததும் அவர்களுடன் தானும் சேர்ந்து ஹாஸ்பிட்டலுக்கு புறப்பட்டிருந்தாள். பிரேமாவை தனியாக விட அவளுக்கு மனதில்லை. பிரமை பிடித்தவர்போல அப்படியே மலங்க மலங்க விழித்து நின்றிருந்தார் விசும்பலுடன்.
நாச்சியப்பனை அருகிலிருந்த ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுவந்து சேர்த்தனர். நல்லவேளை அது இருபத்தி நான்கு மணிநேரமும் செயல்படும் மருத்துவமனை என்பதால் உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்திருந்தனர்.
பிரேமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மருத்துவமனை வருவதற்குள்ளேயே அவருக்கு பயத்தில் வேர்த்து வழிந்து, தொண்டையெல்லாம் வறண்டு போனது மிரட்சியில். மகனும் பக்கத்தில் இல்லாமல் தனியாளாக இருந்தது அவருக்கு சொல்ல முடியாத துயரத்தை கொடுத்தது.
மருத்துவமனை வந்தும் நிஷா பிரேமாவைத் தனியாக விடாமல், அவரின் கைகளைப் பிடித்துகொண்டு அவரின் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டாள் ஆறுதலாக. அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. உள்ளுக்குள் பயமாகவும் இருந்தது. மனதிலேயே நாச்சியப்பனுக்கு ஒன்றும் இருக்ககூடாது, அவருக்கு சரியாகிவிட வேண்டும் என ஜெபித்து கொண்டே உட்கார்ந்திருந்தாள். நட்டநிசி நேரம். புது ஊர். அஞ்சனா வேறு இல்லை. யாரை அழைப்பது உதவிக்கு என அவளுக்கும் தெரியவில்லை.
உமாபதி வெளியூர் சென்றிருந்தான். அவனது நம்பரை பிரேமாவிடம் இருந்து வாங்கி அவனுக்கு போன் செய்து பார்த்தாள். நள்ளிரவு என்பதால் அவனும் போன் எடுக்கவில்லை.
இரவு நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருக்கலாம் என நினைத்தவள், இங்கு அவர்கள் ஹாஸ்பிட்டலில் இருக்கும் விவரத்தை மெசேஜ் வழியாக அவனுக்கு அனுப்பி வைத்தாள்.
ஹாஸ்பிட்டலுக்கு வந்து இரண்டு மணிநேரமாகியும் இன்னும் டாக்டர்கள் என்ன… ஏது… என்று ஒரு விவரமும் சொல்லாமல் இருந்தனர். நேரம் ஆக ஆக… நிஷாவுக்கும் பயம் அதிகமாக ஆரம்பித்தது.
தனியாக இதுமாதிரியெல்லாம் ஹாஸ்பிட்டலுக்கு இதுவரை வந்ததில்லை. இந்நேரத்தில் யாரை அழைப்பது என தெரியாமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
பிரேமா அழுதழுது முகமெல்லாம் சிவந்திருந்தது. அவருக்கு தொண்டையெல்லாம் கட்டி குரலே வெளி வரவில்லை. அவளுக்கும் தொண்டை வறண்டிருந்தது. தண்ணீராவது வாங்கி வரலாம் என எழுந்தவள், அவரிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்த பார்மசிக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து அவருக்கும் கொடுத்து, தானும் தண்ணீர் அருந்தினாள்.
நாச்சியப்பனை பரிசோதித்த டாக்டர்கள்….. அவருக்கு மைல்ட் அட்டாக்தான். பயப்படும்படி ஒன்றும் இல்லை. சரியான நேரத்தில் அவரை பார்த்து கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள் என பிரேமாவிடமும் நிஷாவிடமும் பேசி ஆறுதல் சொல்லி சென்றிருந்தனர்.
காலை விடிந்து எழுந்த பின்தான் உமாபதி போனில் இருந்த மிஸ்டு காலைப் பார்த்து போன் செய்தான். அவனுக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது. நைட் இந்நேரத்திற்கு விடாமல் போன் செய்திருக்கிறார்கள் என்றால் ஏதோ… என்னவோ… என பயந்திருந்தான்.
உமாபதியின் போன் காலைப் பார்த்ததும் போனை பிரேமாவிடம் கொடுத்துவிட்டாள் நிஷா. போனில் உமாபதியின் குரலைக் கேட்டதும் அது ஹாஸ்பிட்டல் என்பதைக்கூட மறந்து கத்தி கதறிவிட்டார் பிரேமா.
அழுகையினூடே அவர் பேசியதில் ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. இன்னும் பயம்தான் கூடியது அவனுக்கு. யார் இருக்கிறார்கள் என விசாரித்து போனை நிஷாவிடம் கொடுக்கச் சொல்லி அவளுடன் பேசினான்..
போனில் நிஷாவின் குரல் ‘’ஹலோ’’ என கேட்டதும்………. நிஷா….. அம்மா ஏன்….. அழறாங்க………? என்ன நடந்தது. யாருக்கு என்னாச்சு….? தெளிவா சொல்லு.
அ…..து அங்கிள்கு………. என ஆரம்பித்தவள் இரவு நடந்ததனைத்தையும்…., ஹாஸ்பிட்டல் வந்ததையும்……. டாக்டர் கூறிச்சென்றதையும்…… இன்னும் நாச்சியப்பன் ஐ.சி.யு.வில் தான் இருக்கிறார் என்பதையும் பொறுமையாக அவனுக்கு கூறினாள்.
அதிர்ச்சியில் அவனால் ஒன்றுமே பேசமுடியவில்லை சில நொடிகள். அவனிடமிருந்து எந்த சத்தமும் இல்லையென்பதால்…. ஹலோ.. ஹலோ…. என அழைத்துக்கொண்டே இருந்தாள் நிஷா.
அவளது அழைப்பில் தொண்டையை கனைத்து தன்னை சரி செய்தவன் “நீ கொஞ்சம் அங்க அம்மாகூட இருக்க முடியுமா…. நிஷா? அவங்க ரொம்ப பயந்திருக்காங்கன்னு தோணுது… ப்ளீஸ்…” என கெஞ்சினான்.
“ஷ்யூர். நான் ஆன்ட்டி கூடதான் இருக்கேன். நீங்க பயப்படாம வாங்க”.
“ஹ்ம்ம். சீக்கிரம் வர ட்ரை பண்றேன் நிஷா…….. இங்க பிளைட் டிக்கெட் அவெளபிளிட்டி பார்க்கனும்”.
“பிளைட் டிக்கெட்டா…? எங்கயிருக்கீங்க…. நீங்க?”
“பாம்பேல…? லேட் பண்ணாம…, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ… வந்துடுவேன். அதுவரைக்கும் அம்மாவ தனியா விடாத? நான் வேணா என் பிரண்ட் யாரையாவது…. வரமுடியுமான்னு கேட்கவா…?”
“அதெல்லாம் வேணாம். நான் ஆன்ட்டிகூட இருக்கேன். நீங்க சீக்கிரம் வாங்க…” என பிரேமாவிடம் கொடுத்துவிட்டாள் போனை.
பிரேமாவிடம் போனிலேயே “அப்பாக்கு ஒன்னும் ஆகாது… நீங்க பயப்படாம இருங்க… நான் சீக்கிரம் வந்துடுவேன்… என தைரியம் கூறி அவரை சமாதானப்படுத்தியவன். போனை வைத்துவிட்டு ட்ராவஸ்க்கு போன் பண்ணி பிளைட் டிக்கெட்டுக்கு முயன்று கொண்டிருந்தான்.
தொடரும்.
error: Content is protected !!