Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்! அத்தியாயம் 4

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 4

   பிருந்தாக்கு முகமே சரியில்லை. அழுகை எல்லாம் வரவில்லை. ஆனால், பெரிதான வேதனை மனதில் நின்றது. தாங்கள் ஒன்றுமே இல்லையா, வெறும் விருந்தாளி மட்டும் தான.

       பிருந்தாக்கும், செழியனுக்கும் இடையே ஏழு வருட இடைவெளி. வீட்டின் மூத்த மகளாக அனைத்து செல்லத்தையும் அனுபவித்தவள் இவள். பிருந்தாக்கு தான் ஐந்து வயதில் காது குத்தி முதல் விசேஷம் எடுத்தார்கள். சடங்கு, கல்யாணம் என்று வீட்டின் முதல் விசேஷம் இவளுக்கு தான் நடந்தது. அத்தனை உரிமையாக வலம் வந்த வீட்டில், தனக்கு பின் பிறந்த ஒருவன், நீ வெறும் விருந்தாளி என்று சொல்லாமல் சொல்லி விட்டான்.



Advertisement

   லீவுக்கு வந்தோமா, பேசாமல் இருந்தோமா என்று செல்ல வேண்டுமாம். எதுவும் உரிமையாக முன் நின்று பேச கூடாதாம். என் அம்மா நான் கேட்க தான் செய்வேன். உனக்கு ஏழு வருசத்துக்கு முன்னாடியே இந்த வீட்டில் பிறந்த நான் யார்?… மனதில் ஆதங்கம் நிறைந்து நின்றாலும் அமைதியாக படுத்து கிடந்தாள் பிருந்தா.

   மெல்ல திரும்பி தங்கையை பார்க்க, நர்மதா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். லேசான சிரிப்பு பிருந்தாக்கு… தனக்கிருக்கும் ஆதங்கம் கூட இவளுக்கு இல்லையே. அப்போதிருந்து இப்போது வரை அவளை பாதுகாப்பது பிருந்தா தான். உடன் பிறந்தவன் ஒட்டாமல் நிற்க, அக்கா, தங்கை இருவரும் ஒட்டி கொண்டார்கள்.

     மறுநாள் காலை வருண் பிறந்த நாள். அக்கா, தங்கை இருவரும் நல்ல உறக்கத்தில், வெளியே சென்று எட்டி பார்க்கவே இல்லை. காலையிலே செழியன் தம்பதி மகனோடு கோவிலுக்கு சென்று விட்டார்கள். பிறந்தநாளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், கறி குழம்பு, மீன், முட்டை தொக்கு என்று பெரிய லிஸ்ட் போட்டு வைத்து இருந்தார்கள். ஹோட்டலில் வாங்கலாம் என்று சொல்ல, வீட்டில் நான்கு பெண்கள் இருக்க வெளியே சொல்ல வேண்டாம் என்றது விஜயா தான்.

Advertisement

    தன் இரு பெண்கள் வயதுக்கு வந்தது முதல் சமையல் வேலைக்கு பழகி விட்டார். நூறு பேர் வீட்டுக்கு வந்தாலும் சமைக்கும் திடம் பிருந்தா, நர்மதா இருவருக்கும் உள்ளது. எவ்வளவு வேலையும் சலிக்காமல் பார்ப்பார்கள்.

Advertisement

    மகள்களை நம்பி வாக்கு கொடுத்து இருக்க, அவர்களோ எழுந்து வெளியே வரவே இல்லை.

  “நேரம் பார்த்து பழி வாங்கிட்டாளுக…” புலம்பி கொண்டார் விஜயா.

   நர்மதா முழித்து தான் கிடந்தாள். தம்பி, அவன் மனைவி வெளியே சென்று விட்டது தெரியும், இருந்தும் பிருந்தா சொல்லி விட்டாள்.

Advertisement

  “நேத்து அம்புட்டு பேசினாங்க தான. நாம வெறும் விருந்தாளி நம்மு. விருந்தாளி எல்லாம் வீட்டு வேலை பார்க்க மாட்டாங்க. பேசாம ஒன்பது மணி வரைக்கும் படுப்போம்…” என்றாலும் இருவருக்கும் உறக்கம் வர வில்லை.

  நேரம் சென்றது, மகள்கள் வரவில்லை என்றதும் விஜயாவே சமைக்கும் பொருட்களை எடுத்து வைக்க தொடங்கினார். பார்த்து இருந்த பாலமரத்தானும் உதவி செய்ய தொடங்கினார்.

   “அந்த பெரிய பாத்திரத்தை தூக்குங்க… மேல உட்கார்ந்தே காய் வெட்டுங்க. கீழ உங்களுக்கு தோது படாது…” என்று தாய் சொல்வது கேட்க,

  எழுந்து விட்டாள் பிருந்தா. அதற்கு மேல் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. நர்மதா லேசான சிரிப்போடு பார்க்க,

  “வேற என்னத்த பண்ண. மனசு கேட்க மாட்டாது. ஆயிரம் தான் இருந்தாலும் பெத்தவங்க… வயசான காலத்துல வேலை செய்ய விட்டு பார்க்க முடியல. போகுது விடு நம்மு, அவங்க எண்ணம் அவங்களோட… தாய் கிழவி சொல்ற மாதிரி படிக்க வச்சு, நல்ல இடத்துல குறை இல்லாம கட்டி கொடுத்தாங்க. அப்படி என்ன ஆம்பிளை பிள்ளை உசத்தின்னு கோபம் தானே தவிர, அவங்களை குறை சொல்ற அளவுக்கு நமக்கு குறை வைக்கல…” என்று அக்கா சொன்னதும்,

  நர்மதா சிரிப்பு மேலும் விரிந்தது. பிருந்தா எப்போதும் அப்படி தான். அன்பை கொட்டி கொடுப்பவள், அதே அன்பை எதிர்பார்க்கவும் செய்வாள். அது குறையும் போது கோபம் வர தான் செய்யும்.

    இருவரும் வெளியே வந்து பார்க்க டீ கூட போட வில்லை. தாய் வீடு வந்தால் ரெஸ்ட் தான் எடுக்கணுமா என்ன? மகளின் கை மணத்தை சுவைக்க பெற்றோருக்கும் ஆசை இருக்கும் தானே…

  நர்மதா டீபோட, பிருந்தா காலை உணவு வேலையை பார்க்க தொடங்கினாள். விஜயாவுக்கு அவ்வளவு திருப்தி. சுருக்கென்று பேசி விட்டாலும், மகள்கள் ஒதுங்கி கொண்டால் மனசு கேட்காது.

   “கண்ணுக்கு கண்ணு ஒத்த மருமக, உங்களுக்கு டீ கூட போட்டு குடுக்கலையா?…” நக்கலாக கேட்க.

  “இந்த பெரியவ எல்லாம் செய்வா , அதே நேரத்துல சொல்லியும் காட்டுவா…” சாடினார் தாய்.

  வேலை பரபரப்பாக நடந்தது. பிள்ளைகளை தாத்தா, பாட்டி கவனித்து கொள்ள… அக்கா, தங்கை இருவரும் பம்பரமாக சுழன்றார்கள். அதுவரை கூட செழியன் குடும்பம் வர வில்லை.

  “நாம இப்படி அவளுக்கு வேலை செஞ்சு வச்சா. நம்ம மேல அவளுக்கு என்ன மரியாதை இருக்கும். அவளுக்கு பயந்து செஞ்ச மாதிரி ஆகாது…” பிருந்தா கேட்க.

    அக்காவை பார்த்தவள், “என் புருசனை உனக்கு பிடிக்காது தான…” என்று கேட்க.

  “உன் புருஷனை மட்டுமா உன் மாமியார், மாமனார் யாரையும் பிடிக்காது. அவங்களை தவிர மத்த எல்லாரும் கீழன்னு நினைப்பு…” கடுப்பாக பிருந்தா சொல்ல,

  “அதுதான், என் குடும்பத்தை பிடிக்காதுன்னு என்னை நீ ஒதுக்கி வைப்பியா…”

 “நீ என் கூட பிறந்தவ, அவங்களுக்கா உன்னை தள்ளி வைப்பேனா… என்ன இருந்தாலும் நாம ஒரு தாய் பெத்தவங்க இல்லையா…”

   “அதுதான், அப்படியே தம்பியையும் நினை… அவன், அவன் பொண்டாட்டி முகத்தை பார்க்காத… கூட பொறந்து வந்துட்டானே, இரத்த சொந்தம், விட முடியாது. அவனுக்கு செய்யும் போது நம்ம தூக்கி வளர்த்த நம்ம தம்பி. அவ்வளவு தான்…”

 “இந்த உறவும் எவ்வளவு நாளைக்கு… இதோ இந்த வயசானவங்க உயிரோடு நடைமாடுற வரைக்கும் தான். அம்மா என்ன சொல்றது, அவங்க இல்லாத காலத்துல நாமே வரமாட்டோம். அவன் என்னக்கா நம்மளை விருந்தாளின்னு சொல்றது, நம்ம அம்மா, அப்பா மட்டும் இல்லை.. விருந்தாளியாக கூட நான் இந்த பக்கம் வர மாட்டேன்…”

  “அதே நினைப்பு தான் எனக்கும்… ஏதோ இவங்களுக்காக வாராது தான். மருமகன் வீட்டுல வந்து இருக்க மாட்டாங்க. பேரன், பேத்தின்னு நினைச்சுக்கே இருப்பாங்கன்னு தான் ஓடி வாராது. ஆனா, ஒன்னு நம்மு, இந்த சிலுப்பிக்கு திரியிற சிலுப்பட்டைக்கு மதுரைகாரி யாருன்னு ஒரு நாள் காட்டுறேன் பாரு…” என்று சபதம் எடுத்தாள் பிருந்தா.

   பெற்றவர்களுக்காக இவர்களை கண்டு கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுத்ததால், தாமதமாக வந்த தம்பி குடும்பத்தை கணக்கில் கொள்ள வில்லை.

   முதல் நாள் ராத்திரி தான் நிரஞ்சன் ஊருக்கு வர சொல்லி ஃப்ளைட் டிக்கெட்டை அனுப்பி இருந்தான். தன் குடும்பத்துக்கு மட்டும் அல்லாமல் பிருந்தா குடும்பத்துக்கும்… அன்று மாலை ஊருக்கு கிளம்ப வேண்டும்.

  “வாய் பேசினாலும், இப்படி குடும்பத்தை கவனிக்கிரதால உன் புருசனை ஒன்னும் சொல்ல முடியாம போயிருது…” என்று சாடினால் பிருந்தா.

   நர்மதா சிரித்து கொண்டாள். செல்வ விநாயகம் இப்படி எல்லாம் வெட்டி கௌரவம் பார்க்க மாட்டான். எல்லாம் ஒரே குடும்பம், சொந்தம் என்று தான் நினைப்பான். ஆனால், நிரஞ்சன் அப்படியல்லவே… செல்வ விநாயகம் செலவு செய்தால், நிரஞ்சன் தன்மானம், கௌரவம் என்ன ஆவது.

   பிறந்த நாள் விழா களைகட்டியது. சுபாவோட குடும்பத்தில் எல்லோரும் வந்து இருந்தார்கள். இவர்களிடமும் நன்றாக பேசினார்கள். கொஞ்சம் கலகலப்பாக இருந்தது.

   பிருந்தா கை செயின் எடுத்து மருமகனுக்கு போட, நர்மதா கணவன் எடுத்து கொடுத்த செயினை கழுத்தில் போட்டாள். விஜயாவுக்கு மிக திருப்தி. சாப்பாடு அமர்கல பட்டது. பாலமரத்தான் மகள்கள் பெருமை பேசினார்.

    சுபா அண்ணன் அங்கிருந்தே ஊருக்கு செல்வதால் கவனிப்பு பலமாக இருந்தது. அக்கா, தங்கை இருவரும் கண்டு கொள்ள வில்லை. பெரியவர்களுக்கு உடை எடுத்து கொடுத்தவர்கள், பிள்ளைகள் கையில் பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள் செழியன் தம்பதி.

   விஜயாவுக்கு ஒரு மாதிரி சுருக் என்று இருந்தது. பாலமரத்தான் பார்த்து கொண்டு தான் இருந்தார்.

  “தம்பி செழியா…”

  “என்னம்மா?…”

   “அக்காங்க ஊருக்கு போறாங்க…”

 “ம்ம்… அப்பா சொன்னார். எனக்கு தெரியும்மா… என் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு குட்டி பார்ட்டி இருக்கு. நேரம் இருந்தா வாரேன், இல்லன்னா நீங்களே வழி அனுப்பி வைங்க…” என்றவன் தன் குடும்பத்தோடு நகர்ந்து விட்டான்.

  விஜயாவுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். அதை காண்பித்து கொள்ளாமல்,

   “நீங்க ஊருக்கு போறதுகுள்ள தம்பி வாரேன்னு சொல்லி இருக்கான்…” என்று தாய் சொல்ல,

  “அவன் வந்தாலும் எங்களுக்கு நூறு ரூபாய் கூட தர மாட்டான்…” பிருந்தா சொல்ல,

  “அவனவே குறை சொல்லுங்க…”

“குறை இல்லம்மா நிஜம். அவனுக்கு கூட பொறந்தவங்களுக்கு செய்யணும்ன்னு கூட தெரியாது. நீங்க பார்த்தீங்க தான, அவன் மச்சான் ஊருக்கு போறேன்னு சொல்லவும் எவ்வளவு செஞ்சான். பொறாமை இல்லை ஒரு எதிர்பார்ப்பு. எங்க ரெண்டு பேர் கைலையும் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து, நல்ல படியா போயிட்டு வாங்கன்னு வழி அனுப்பி வச்சா என்னவாம்…” என்று பிருந்தா கேட்க.

  “அதான் நாங்க செய்யுறமே… அவன் வேற, நாங்க வேறையா?…” எதிர் கேள்வி கேட்டார் தாய்.

  நர்மதாவும் பேசி விட்டாள், “அம்மா உங்களுக்கு புரியலையா… இங்க காசு பிரச்சனை இல்லை. நீங்க எங்களை நல்லா படிக்க வச்சு, நல்ல இடத்துல கட்டி கொடுத்து இருக்கீங்க. நாங்களே ஓரளவு வசதியா தான் இருக்கோம். நான் அம்பதாயிரம் வாங்குறேன், அக்கா எழுபதாயிரம் வாங்குறா… உம் மகன் குடுக்குற ஆயிரம் ரூபாய் எங்களுக்கு பெருசு இல்லை. அப்புறம் ஏன் அவன் கிட்ட எதிர் பாக்குறோம். நானும், அக்காவும் தள்ளி இருந்தாலும் ஒன்னா தான் இருக்கோம். என்ன நடந்தாலும் எங்களுக்குள்ள சொல்லி, பேசிப்போம். அப்படி அவனும் எங்க கூட இருக்கணும்ன்னு தான் நினைக்கிறோம்…” என்று சின்ன மகள் புரிய வைக்க,

  பிருந்தா, “அவன் ஒட்டாம இருக்க காரணம் நீ தான்ம்மா. அவன் முன்னாடியே நீங்க இல்லாத காலத்துல நாங்க வர கூடாதுன்னு சொல்ற… அப்படி வந்து நாங்க என்ன ஆள போறோம். உம் மகனும், மருமகளும் எங்களுக்கு என்ன செய்ய போறாங்க. இந்த வீட்டு பிள்ளைகளா உரிமையா வரும் போதே கண்டுக்க மாட்டாங்க. நாங்க இங்க வாரதே உங்களை பார்க்க தான். பெத்தவங்களா நீங்க இருக்கும் போதே, எங்களுக்கு மரியாதை இல்லை. நீங்களும் இல்லாத காலத்துல எங்களுக்கு இங்க யார் சொந்தம்…” என்று பெரிய மகள் சொன்னதும்,

   பதறி போய் விஜயா, “பிருந்தா என்ன பேசுற…”

  “நிதர்சனம் இது தான் ம்மா… இன்னும் கொஞ்ச நாள் போன எங்க பிள்ளைகளும் பெருசா வந்துருவாங்க. அவங்க படிப்பு, செட்டில்மென்ட்ன்னு நாங்க பிசியாகிடுவோம். பொறந்த வீடு வர எங்களுக்கு நேரமே இருக்காது. மாமியார் வீட்டை எதிர்பாக்குற நிலையில எங்க புகுந்த வீடும் இல்லை. உண்மையா நாங்க வந்தது உங்களுக்காக தான். நீ சொல்ற மாதிரி நாங்க வராம போயிட்டா… தம்பி தான் தனியா நிப்பான். காசு, பணம் எல்லாம் ரெண்டாவது… அவனுக்கும் சொந்தம்ன்னு கூட நிக்க நாங்க வரனும்ன்னு நினைச்சோம். ஒத்த தம்பி, தனியா நிக்க கூடாதுல்ல. ஆனா, இப்போ தெரியுது. அவன் தனி எல்லாம் இல்லை. நீங்க இருக்குற வரைக்கும் நாங்க வந்து தலையை காட்டிட்டு தான் போவோம்…” என்று பிருந்தா சொன்னதும்,

  “என்னங்க, என்ன சொல்றாங்க உங்க பிள்ளைக. பெரிய மனுசி மாதிரி என்னென்னவோ பேசுறாங்க. என்னன்னு கேளுங்க…” என்று விஜயா சொல்ல,

  அமைதியாக மனைவியை பார்த்த பாலமராத்தான், “பிள்ளைக சொல்றது சரி தான் விஜி. நாம இருக்குற வரைக்கும் வரட்டும். நாம இல்லாத காலத்துல வர வேணாம். ஆனா, நான் இருக்குற வரைக்கும் எம் பிள்ளைக மூணு பேருக்கும் தான் உரிமை இருக்கு… ஒரு நல்லது, விசேஷம், கோவில்ன்னா எம் மனசு மூணு பேரையும் தான் தேடும்…” என்றவர்,

   மகள்களை பார்த்து, “உங்களை பெத்த தகப்பன் நான் இருக்கேன்… ஆம்பிளை பிள்ளை பார்ப்பான்னு உங்க ரெண்டு பேரையும் நான் இதுவரைக்கும் விட்டதில்லை. இனியும் விட மாட்டேன்…” என்றவர் எழுந்து வெளியே செல்ல, ஒன்றும் சொல்ல முடியாமல்,

   “நீங்களே கொம்பு சீவி விடுங்க…” என்று புலம்பி கொண்டார் விஜயா.

  மக்கள் இருவரும் கிளம்பி விட்டார்கள். வெளியே சென்ற தந்தை இன்னும் வர வில்லை. சற்று முன் தான் தம்பி குடும்பம் திரும்பி வந்தது. தந்தை வந்த பின் சொல்லி கொண்டு செல்ல வேண்டும்.

   ஆட்டோ சத்தம் கேட்டது. ரெண்டு பேர் ஏதோதோ பைகளில் கொண்டு வந்து வைக்க, பின்னரே தந்தையும் வந்தார்.

 “என்னப்பா… என்ன இதெல்லாம்…” என்று பார்க்க,

 எல்லாம் உணவு பண்டங்கள். முறுக்கு,சீடை,தட்டை, ஜிலேபி, எள்ளு உருண்டை, ஜிரணி, மிக்சர், பூந்தி, லட்டு ,அதிரசம், பருப்பு வகைகள், சுண்டல், கடலை, புட்டு மாவு, அரிசி மாவு, செக்கு மர் எண்ணெய் என்று தனித்தனியாக ரெண்டு, ரெண்டு கிலோ தனியாக வாங்கி வந்து இருந்தார்.

 “எதுக்குப்பா இவ்வளவு?…” என்று நர்மதா கேட்க.

  “பொறந்த வீட்டுக்கு வந்து சும்மாவா போவீங்க…”

 “சென்னையிலும் இதெல்லாம் கிடைக்கும் ப்பா… இதுக்கு நீங்க அலையனுமா?…” பெரிய மகள் கேட்க.

  “போன திரும்பி வர ஆறு, எட்டு மாசமாகும். நாங்களும் வந்து பாக்குற தூரம் கிடையாது. பிள்ளைகளை வெறும் கையா அனுப்ப மனசு வரல. எம்புட்டு நாளைக்கு, நாங்க இருக்குற வரைக்கும் தான…” என்று தந்தை சொன்னதும்,

 பதறி போய், “அட, என்னப்பா நீங்க… உங்க பேரன், பேத்தி பிள்ளைகளை தூக்க வேணாம். சும்மா பேசாதீங்க…” என்ற மகளுக்கு லேசாக சிரித்தவர்,

 தானே உட்கார்ந்து ரெண்டு பெரிய அட்டை பெட்டி எடுத்து தனித்தனியாக மகள்களுக்கு எடுத்து வைக்க தொடங்கினார்.

  விஜயா உள்ளே சென்று, குழம்பு மசால், தாளிப்பு வடகம், கொஞ்சம் கருவாடு, அப்பளம், வத்தல் என்று எடுத்து வர,

  “அம்மா… என்ன இது! நீயுமா?…”

   “ஃப்ளைட்ல தான போறீங்க. கொண்டு போங்க, குழம்பு மசால் எல்லாம் காய வச்சு, வறுத்து அரைக்க மாட்டீங்க…” என்று விஜயா எடுத்து வைக்க, அதுவும் பேக் செய்ய பட்டது.

  பொருட்களோடு சேர்த்து அந்த ரெண்டு சேலையும் கொண்டு வர, மகள்கள் தொட கூட இல்லை. விஜயா கணவன் முகம் பார்க்க, அவரும் கண்டு கொள்ள வில்லை.

  தாய் முகம் மாறி விட்டது. நேத்து இருந்து சொல்லி கொண்டே இருக்கிறார். இருவரும் எடுக்க வில்லை, கணவர் சொல்லுவாரா என்று பார்க்க, அவரும் சொல்ல வில்லை.

  பால மராத்தான் நினைத்தார், இப்படி எதிர்ப்பு தெரிவித்தால் தான் மகள்களை, மருமகள் முன் விட்டு கொடுத்து பேசமாட்டாள் என்று அமைதியாகி விட்டார்.

  பெண்கள் இருவரும் கிளம்பும் வரை கூட, செழியன் குடும்பம் வெளியே வர வில்லை. இவர்களும் போய் சொல்லி கொள்ள வில்லை.

 “இவன் பெரிய இவன்… போகும் போது கூட எட்டி பாக்குறான பாரு நம்மு… மகாராணி கதவடைச்சு உள்ள இருப்பா, நாம போய் கூப்பிட்டு சொல்லிட்டு வரணுமோ…” கடுத்தாள் பிருந்தா.

வெளியே டாக்ஸி வந்து போது தான் செழியன் குடும்பம் வெளியவே வந்தது. அங்கிருந்த பொருட்களை பார்த்து,

  “மதுரையவே வாங்கி அனுப்பி விடுறாங்க உங்க அம்மாவும், அப்பாவும்… என்ன தான் நாம கூட இருந்தாலும், மகள்கள் மேல தான் பாசம் அதிகம்…” என்று சுபா சொல்ல,

 “அதுனால என்ன, நீ வாங்கி குடுக்களையே… எங்க அப்பா, அம்மா தான செய்றாங்க. உனக்கென்ன வந்துச்சு…” என்று செழியன் எதிர் கேள்வி கேட்க. வாயை மூடி கொண்டாள் சுபா.

   செழியன், அவனாக செய்ய வராதே தவிர, பெற்றோர்கள் செய்வதை எதிர்க்க மாட்டான்.

    அவர்களாக அருகே வந்து நின்ற தம்பி, அவன் மனைவியை பார்த்து ரகசியமாக சிரித்த அக்கா தங்கை இருவரும், அதன் பின் சொல்லி கொண்டு கிளம்பி விட்டார்கள்.

  பால மராத்தான் உடன் வந்தவர், பக்கத்தில் இருக்கும் துணி கடையில் நிறுத்த சொல்ல,

  “என்னப்பா, எதுவும் வேண்டாம்… சொன்ன கேளுங்க…” தடுக்க பார்த்தாள் பெரியவள்.

 அவருக்கு, மகள்கள் ஆசையாக எடுத்த சேலையை வைத்து விட்டு கிளம்பியது மனம் தாங்க வில்லை. தன் சக்திக்கு மீறி ஒன்றும் செலவு இல்லை. தன் சக்தி இருக்கும் வரை பிள்ளைகளுக்கு செய்வோம்…

  தடுத்த மகள்களை கேட்காமல் அவர்கள் எடுத்த நிறத்திலே ஆளுக்கு ரெண்டு பட்டு சேலை எடுத்து கொடுத்த பின் தான் ஓய்ந்தார். அங்கிருக்கும் கடைக்கு அழைத்து சென்று பிள்ளைகளுக்கும் தேவையானதை வாங்கி கொடுக்க, கத்தி விட்டாள் பிருந்தா.

   சாண்வி, அவர் கையிலே தான் வைத்து இருந்தார். “அப்பா இறக்கி விடுங்க… கை வலிக்க போகுது…” என்று நர்மதா சொல்லியும் கேட்க வில்லை.

   எல்லாவற்றையும் பார்த்து, எடுத்து வைத்து, தூக்கி கொண்டு என்று அவ்வளவு செய்து மகள்களை அனுப்பி வைக்க, கண் நிறைந்து போனது மகள்களுக்கு…

   “யார் செய்ய விட்டால், நமக்கு என்ன… நம் அப்பா இருக்கிறார். வேற என்ன வேண்டும்…” நிம்மதியாக கிளம்பினர் இருவரும்.

 இரவு பத்து மணிக்கு மேல் தான் சென்னை வந்து இறங்கினார். முன்பே மெசேஜ் போட்டு இருக்க, நிரஞ்சன் மட்டும் வரவில்லை. மாமா செல்வ விநாயகம் வர, யோசனையானது நர்மதாக்கு… அப்படியெல்லாம் விட்டு விடுபவன் அல்லவே, வேற எதுவும் பிரச்சனையா?…

   செல்வ விநாயகமும் அங்கிருக்கும் கடைக்கு மகள்களை அழைத்து சென்று வாங்கி கொடுக்க,

  “மாமா போதும், அப்பா வாங்கி கொடுத்ததே அவ்வளவு இருக்கு…” என்று தடுத்தாலும், சில உணவு பண்டம் வாங்கி கொடுத்து தான் விட்டார்.

   கணவன் போன் எடுக்க வில்லையேன்றதும், தன் அக்கா குடும்பத்தோடு தான் நர்மதா வீடு வந்து சேர்ந்தாள்.

  இரவு நேரத்தில் தொந்தரவு பண்ண வேண்டாம் என்று உள்ளே அழைத்த தங்கையை தடுத்து, வாசலோடு கிளம்பி விட்டாள் பிருந்தா.

 அதில் நர்மதாக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஆனால், வீட்டில் நிலவரம் தெரியாமல் எவ்வாறு உள்ளே அழைக்க, நிரஞ்சன் தான் கணிப்பில் அடங்குபவன் அல்லவே…

   மாமனார் தான் வந்து கதவை திறந்தார். வீட்டில் வேற யாரையும் காணம். பிள்ளைகள் தூக்கத்திற்கு அழுக, அவர்களை கவனிக்க, மற்றது பின் சென்று விட்டது.

   பிள்ளைகளை குளிக்க வைத்து அறைக்கு தூக்கி வர, அங்கே நிரஞ்சன் உறங்கி கொண்டு இருந்தான்.

 “என்ன! வீட்டில் இருந்து கொண்டு தான் தங்களை அழைக்க வர வில்லையா? ஆக, விசயம் பெருசு போல…” என்று நினைத்தபடி பிள்ளைகளை உறங்க வைக்க,

   பிள்ளைகள் தந்தை மீது தாவி விளையாட,

  “பேசாம படுங்க, அப்பா தூங்குறாங்க…” என்று சொல்லும் போதே, நிரஞ்சன் எழுந்து பிள்ளைகளை தூக்கி கொண்டான்.

நர்மதா பார்த்த படி நிற்க, கணவன் கண்டு கொள்ள வில்லை. பிள்ளைகள் உடன் படுத்து கொண்டான். கணவனை தொந்தரவு செய்யாமல் நர்மதாவும் குளித்து வந்தவள், மறுபக்கம் படுத்து கொண்டாள்.

  கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும்.

   காலையில் வழக்கம் போல விழிப்பு வர, எழுந்து கொண்டவள் திரும்பி கணவனை பார்த்தாள். அவன் உறக்கத்தில், மெல்ல எழுந்து பாத்ரூம் போய் குளித்து வெளியே வர, நிரஞ்சன் எழுந்து அமர்ந்து, மனைவியை முறைத்து கொண்டு இருந்தான்.

  புரியாமல், “என்னங்க?…” என்று கேட்க.

   “நல்ல தூக்கத்துல இருந்தேன். நீ தான் எழுப்பி விட்ட…” என்று காய,

 “நான் எழுப்பவே இல்லையே…” அவள் சொல்ல,

 “நீ பாத்ரும்ல தண்ணி திருகி விட்ட சத்தம் கேட்டு தான் எனக்கு தூக்கம் போச்சு. அறிவு இல்லை, எப்படி நடக்கணும்ன்னு தெரியாது. இப்படி தான் அடுத்தவங்களை தொந்தரவு பண்ணுவியா?… தூங்குராங்கன்னு உனக்கு தெரியாதா…” என்று எகிறி கொண்டு வந்தான்.

  தன் மேல் தான் கோபமாக இருக்கிறான் என்று தெரிகிறது. ஆனால், எதற்கு என்று தான் தெரிய வில்லை. மேலும் அவனை சீண்டாமல் கீழ வந்து விட்டாள் நர்மதா.

  என்னவென்று புரியாமல் இருந்தவளுக்கு, மாமியார் வைத்து வாங்கியதில் விசயம் என்னவென்று புரிந்து விட்டது.

 “உனக்கு ஒரு நாத்தனார் இருந்தா தான் புரியும். என் மகன் உன்னை அப்படி தாங்குறான். என்ன குறை உனக்கு… ஒரு சேலைக்கு போய் அந்த சின்ன பொண்ணு கிட்ட மல்லுக்கு நிக்குற…”

 நர்மதா தயங்காமல் நடந்ததை மாமியாரிடம் சொல்லி விட்டாள். கொஞ்சம் சிடுசிடுப்பு உள்ளவர் தான். ஆனால், ரொம்ப மோசமில்லை என்பதால் தன் தரப்பு நியாயத்தை சொல்ல,

    “அவ சரியில்லாம இருக்கட்டும் நர்மதா. ஆனா, நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு… அவ, அவங்க வீட்டுல சொன்னா, நம்மளை தான் சரியில்லைன்னு சொல்லுவாங்க. பார்த்து நடங்க…” என்றதோடு சுசீலா நிறுத்தி கொண்டார்.

  அடுத்து பெரிய தலையை கவனிக்க வேண்டும். நிரஞ்சன் மதியம் வரை கண்டு கொள்ள வில்லை. மதிய உறக்கத்தில் வீடு இருக்க,

  “நர்மதா…” என்று சத்தம்.

தயங்கியே வந்தாள், “என்னங்க?…”

“ஊர்ல இருந்து என்ன கொண்டு வந்த?…”

அவன் கேள்வி புரிந்த உடன், கணவன் பேச்சிற்கு இடம் கொடாமல்,

 “அந்த சேலையை நான் எடுத்துட்டு வரலங்க. எங்க அம்மா எனக்கு கொடுத்ததையும், நான் எதையும் எடுத்து வரல…” என்று முன்னேற்பாடாக சொல்ல,

 “அப்ப கொண்டு வந்த மூட்டை என்னது?…”

“அது எங்க அப்பா எனக்காக வாங்கி கொடுத்தது…”

“குட். அதையும் திருப்பி அனுப்பிடு…”

என்ன என்று அதிர்ந்தவள். “என்ன சொல்றீங்க. அது எவ்வளவு ஆசையா அந்த மனுசன் வாங்கி கொடுத்தாரு… திரும்பி அனுப்ப சொல்றீங்க…”

 “என் மரியாதையே போச்சு. உங்க அப்பா ஆசை தான் முக்கியாமா… திருப்பி கொடுடீ… இதுகப்புறம் அங்க இருந்து ஏதாவது வந்துச்சு…”

  “சரிங்க. இனி அங்க இருந்து எதுவும் வாங்க மாட்டேன். ஆனா, மகளுக்குன்னு குடுத்து விட்டதா திருப்பி கொடுக்க சொல்லாதீங்க. எங்க அப்பா ரொம்ப வேதனை படுவார்…” அவனோடு வாதாடுவது வீண். அனுசரித்து தான் புரிய வைக்க வேண்டும்.

   “என் குடும்பத்தை பார்த்துக்க எனக்கு தெரியும். எம் பிள்ளைக லட்சத்துல வாழ்வாங்க. உங்க அப்பா வீட்டுல கொடுக்குற வத்தல், அப்பளம், வடை, முறுக்கு குப்பை எல்லாம் என் குடும்பத்துக்கு தேவையே இல்லை…” என்றவன்,

  “எங்க சொந்தத்துல என்ன நினைப்பாங்க… வசதியானவங்க, ஆன ஒரு சேலைக்கு போய் போட்டி போடுறாங்கன்னு கேவலமா பேச மாட்டாங்க. என் மானத்தவே வித்துட்டு வந்துட்டா…” என்று கோபம் குறையாமல் சொன்னவன்,

  “நல்ல படியா திருப்பி அனுப்பி வச்சுடு இல்லை தூக்கி குப்பையுல போட்டுறுவேன். எப்படி வசதி?…” என்று மிரட்ட,

   நர்மதாக்கு அழுகை வந்து விட்டது. திருப்பி அனுப்பினால், அப்பா… அவர் மனம் என்ன பாடு படும் என்று நினைக்கும் போதே அழுகை பொங்கியது.

  அழுகையை அடக்கி கொண்டு பொருட்களை எடுத்து வைக்க, கை நடுங்கியது. எவ்வளவு அலைச்சல், ஓட்டம், ஒரு ரூபாய் என்றாலும் எங்க அப்பா சம்பாதித்த பணம் என்று நினைக்கையிலே தாள முடியவில்லை.

  அவள் முகத்தையும், நடுங்கும் கரத்தையும் பார்த்தவன். தலையை கோதி கொண்டு ஒரு பெரு மூச்சு விட்டு,

  “நர்மதா… மத்த எல்லாம் இருக்கட்டும். அந்த புடவையை மட்டும் திருப்பி அனுப்பி வச்சுடு. வா, நானே உன்னை கூரியர் ஆபீஸ் கூட்டி போறேன்…”

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!