Skip to content
Post Views: 14,121
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 5
நிரஞ்சன் உடன் நர்மதா கூரியர் அலுவலகம் கிளம்பி வந்தாள். நிரஞ்சன் மனைவி முகம் பார்க்க, நர்மதா எதுவும் பேச வில்லை, அமைதியாக தான் இருந்தாள். இந்த புடவை வேண்டாம் என்று சொல்லும் போது அழுது கரைந்தவள், அடுத்து முழு மெளனம் தான்.
“நான் கார்லையே இருக்கேன். நீ மட்டும் போயிட்டு வா…” என்று நிரஞ்சன் அனுப்பி வைக்க,
Advertisement
பதில் சொல்லாமல் தலையசைத்து கிளம்பி விட்டவள், அடுத்த கால் மணி நேரத்திற்கு பின் வந்து காரில் ஏறி கொண்டாள்.
நிரஞ்சன் திரும்பி, திரும்பி மனைவி முகம் பார்த்து கொண்டே வர, நர்மதா முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு பெரு மூச்சு விட்டவன்,
“ உன் ஃபீலிங்ஸ் எனக்கு புரியுது நம்மு. உங்க அப்பா ஆசையா எடுத்து கொடுத்த புடவை, நான் திருப்பி கொடுக்க சொன்னதே தப்பு தான். அதை விட மாமாக்கு தெரியும் போது இன்னும் சங்கடம். சுபா என் தங்கச்சியா இருந்தாலும், நான் சுபாக்கு சப்போர்ட் பண்ணல. உன்னை எனக்கு புரியுது. ஆனாலும், ஒரு புடவைக்காக உன்ன விட சின்ன பொண்ணு கிட்ட மல்லுக்கு நிக்கணுமா…”
Advertisement
“என்னங்க.. பிரச்சனை சேலை கிடையாது. சுபாக்கு எங்களவே பிடிக்கல. எங்க அம்மா, அப்பா வீட்டுக்கு நாங்க வாறதே பிடிக்கல. அந்த கோபம் தான் பிருந்தாக்கு…” என்று நர்மதா புரிய வைக்க முயல,
Advertisement
“ சோ வாட்… சுபாக்கு பிடிக்கலன்னா, நீ போகாத நர்மதா… நம்மளோட வரவை விரும்பாத ஒரு வீட்டுக்கு நாம ஏன் போகணும்?… ஜஸ்ட் இக்னோர்…” என்று நிரஞ்சன் சொல்ல,
“என்னங்க சொல்றீங்க. அப்படி எப்படி நான் கண்டுக்காம இருக்க முடியும். அது என் பொறந்த வீடு. எனக்கு கல்யாணம் ஆகிட்டா, எனக்குன்னு ஒரு குடும்பம் வந்துட்டா, அந்த வீடு என் வீடு இல்லன்னு ஆகிருமா?.. என்னை பெத்தவங்க, என் கூட பிறந்தவன் எல்லாம் அங்க தான் இருக்காங்க. சுபாவா பார்த்து நாங்க ஒதுங்கி நிக்கணுமா…” ஆதகங்கமாக வந்தது நர்மதா குரல்.
“ஆமா… என்று கூலாக சொன்னான் நிரஞ்சன்.
Advertisement
“என்ன…” திகைத்து போய் நர்மதா பார்க்க.
“உண்மை தான் நர்மதா. அது எப்படி உன் வீடாகும். உனக்கு கல்யாணம் ஆகிருச்சு, உன் குடும்பம் வேற… நீ அங்க பொறந்தா, அது உன் வீடாகிடுமா?…” என்றவன்,
“ இப்போ யாராவது உன் கிட்ட வந்து உன் குடும்பம் எதுன்னு கேட்டா நீ என்ன சொல்லுவ?… என்னை, நம்ம பிள்ளைகளை தான சொல்லுவ?… அப்புறம் எது உன் குடும்பம். நீ மட்டும் கல்யாணம் ஆகி வந்து புருசனுக்கு உரிய எல்லாத்தையும் உரிமை கொண்டாடலாம். அதுவே உன் வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு ஒதுங்கி நிக்கனுமா?… நல்ல நியாயம் நர்மதா. இதுல நீ டீச்சர் வேற…” எப்பவும் போல அவன் நக்கல் குரலில் பதில் சொல்ல,
“நான் சுபாக்கு உரிமை இல்லன்னு சொல்லவே இல்லையே…” பட்டென்று நர்மதா சொல்ல,
“நான் சுபாக்கு மட்டும் தான் உரிமைன்னு சொல்றேன்…” குரல் மாறாமல் நிரஞ்சன் சொல்ல,
“என்னங்க…”
“ஆமா நர்மதா. இந்த கார் யாரோடதுன்னு கேட்டா, நீ என்ன சொல்லுவ? எங்க கார்ன்னு தான சொல்லுவ, இல்லை என் புருசன் கார்ன்னு சொல்லுவியா?… உன் வீடு எதுன்னு கேட்டா? நம்ம வீட்டை தான சொல்லுவ, இல்லை இது என் புருசன் வீடு. எங்க வீடு மதுரையில இருக்குன்னா சொல்லுவ?… கோவில், அட்ரஸ், ஆதார், ரேசன் எல்லாம் உன் இடம் எது நர்மதா?… அதை தான் சுபா உங்களுக்கு புரிய வைக்க நினைச்சு இருக்கும். நீயும், உங்க அக்காவும் தான் வீம்பா இருக்கீங்க…”
“அப்ப, அந்த வீட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா?…”
“ஏன் இல்லை. நீங்க அந்த வீட்டு பொண்ணுங்க தான். ஆனா, அது உங்க வீடு கிடையாது. அது சுபா வீடு…”
“அது அவ வீடாவே இருக்கட்டும். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்க சொல்ற மாதிரி, நாங்க அந்த வீட்டுல தான பொறந்தோம். அப்ப எங்களுக்கும் உரிமை இருக்கு தான…”
“அத சுபா தான் யோசிக்கணும். நியாயமாகவும் சிந்திக்கணும்…” என்ற கணவனின் வார்த்தை நர்மதாக்கு கோபத்தை கொடுத்தது,
“அவ ஏங்க யோசிக்கணும். எங்களுக்கு உரிமை இருக்கு… நேத்து வந்த அவ யோசிக்கணுமா?… உங்களுக்கே அநியாயமா தெரியலை. எங்க வீடுன்னு நான் பங்கு கேட்கலையே, ஒரு கஷ்ட நஸ்டம்ன்னா, நல்லது கெட்டதுன்னா போய் வர எங்களுக்கு வீடு வேணாமா?… எம் பிள்ளைகளுக்கு சொந்தம் வேணாமா… எங்க அப்பா, அம்மா இருக்குற வரைக்கும் நாங்க போக தான் செய்வோம்…” உறுதியாக நர்மதா சொல்ல,
“இப்ப தான் தெரியுது, சுபா ஏன் நாத்தனார்ன்னு சொன்னாலே எட்டி காயா எட்டி நிக்குதுன்னு… தாங்ககுற புருசன் வீட்ட வச்சுகிட்டே, அம்மா வீடுனு ஆள பறக்குறீங்க. கொஞ்சம் கண்டிப்பா இருக்குற புருசனா மட்டும் இருந்தா?… புருசன் வீட்டுலயும் நீங்க தான் ஓங்கி இருக்கணும், அம்மா வீட்டுலயும் நீங்க தான் ஓங்கி இருக்கணும். நல்லா ஓங்கிய பண்பு தான்…” என்று நிரஞ்சன் மீண்டும் நக்கல் பேச,
“அட போடாங்க…”என்று மனதில் நினைத்து கொண்டு வாயை மூடி கொண்டு கொண்டாள்.
“லுக் நர்மதா… உன் வரவை விரும்பாத வீட்டுக்கு நீ போக கூடாது. அது எனக்கு மரியாதை இல்லை. உன் புருசன் மரியாதை உன் கையில தான். அத்தோடு எனக்கு ஒரு விசயம் புரியவே இல்லை. நீயும் வருசத்துக்கு ரெண்டு தடவை தவ்வி குதிச்சு அம்மா வீடுன்னு ஓடுற, வரும் போதெல்லாம் சின்ன பிள்ளை மாதிரி பஞ்சாயத்து வேற… நீயும், உங்க அக்காவும் வந்தாலே உன் தம்பி, தம்பி பொண்டாட்டி, உங்க அம்மா வரை ஒரு பக்க நீளத்துக்கு கட்டுரை வாசிக்கிறாங்க. அப்புறம் ஏன் போறீங்கன்னு தான் தெரியலை…”
“அது தாங்க சொந்தம். அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கும். உறவுகளும் அப்படி தான். முன்ன பின்ன தான் இருக்கும். எல்லாத்தையும் அனுசரிச்சு, இழுத்துக்கு தான் போகணும்…” என்று நர்மதா சொன்னதும், வந்த சிரிப்பை உதட்டில் மறைத்து,
“சரி தான் நர்மதா, சொந்தம் என்றால் அப்படி தான் இருக்கும். அப்ப ஏன் நீயும், உங்க அக்காவும் ஒரு சேலைக்கு, அதுவும் ரெண்டு தடவை கட்டிட்டு தூக்கி போட போற, கோவிலுக்கு ஃப்ரீயா வந்த சேலைக்கு மல்லுக்கு நின்னீங்க… அனுசரிச்சு போறது தான சொந்தம், நீங்க ஏன் அனுசரிச்சு போகல. உங்களுக்கும் இளைய பொண்ணு கிட்ட என்னடி போட்டி…” என்று நிரஞ்சன் பாயிண்டை பிடிக்க,
“அட பாவி… இதுக்கு தான் இவ்வளவு சுத்துனையா?…” என்ற லுக்கில் நர்மதா பார்க்க,
விரிந்து சிரிக்க பார்த்த உதட்டை இழுத்து பிடித்தவன்,
“நான் ஒன்னு கேட்டா, உண்மையை மட்டும் சொல்லணும்… சுபாவ, உன் தம்பி பொண்டாட்டியா பார்க்காம, என் தங்கச்சியா மட்டும் பாரு… உன் வரவை விரும்பாமல் முகம் சுளிக்ககிற, உதாசீனப்படுத்துற, புறணி பேசுற, போட்டு கொடுக்குற ஒரு நாத்தனார் வீட்டுக்கு திரும்ப நீ போவியா? மாட்டா… அப்ப அம்மா வீடுன்னா மட்டும் என்ன?…”
“மடக்கி விட்டான். இனி எங்கு வாயாட…”
“இங்க பாரு நர்மதா… எந்த உறவும் நமக்கான எல்லை கோட்டை வகுத்து அதுல நிறுத்தி வச்சா, அங்கேயே நின்னுடனும். அப்ப ஒரு மதிப்பு, மரியாதை இருக்கும். அதை தகர்க்க நினைச்சா, உறவு உடைஞ்சு தான் போகும். உங்க அம்மா, அப்பாவ இங்க வர சொல்லு, எவ்வளவு நாள் வேணாலும் இருக்கட்டும்… அதை விட்டு நிரஞ்சன், அவன் பொண்டாட்டிக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு. அதை கெடுக்காதே…” என்று சொல்லி விட்டு, மனைவி முகம் பார்க்க,
அவள் முகம் போன போக்கில் மந்தகாச புன்னகை வந்தது கணவனுக்கு…
“வெற்றி களிப்பு… பிள்ளை பூச்சியை நசிக்கிபிட்டு சிரிப்பை பாரு… எப்ப பாரு இவன் வாய் முன்னாடி தோத்து போறதே பொழப்பா போச்சு… ஏன் நர்மதா அவனை மாதிரி உனக்கு பாயிண்ட் புடிச்சு பேச தெரியலை… பாரு, கடைசில அவன் வாதம் தான் ஜெயிச்ச மாதிரி போச்சு…” என்று மனதோடு புலம்பி கொண்டாள்.
ஆனால் ஒன்று, எதிர்க்க இருக்கும் நபர் சொல்லும் கருத்தின் நியாயத்தை அணுகாமல். தன் சொல்லில் உள்ள நியாயத்தை மட்டுமே புரிய வைக்கும் இவனிடம் தோத்து போவதில் ஆச்சர்யம் ஒன்னும் இல்லை…
வீடு வந்து விட நிரஞ்சன் உறங்க அறைக்கு சென்றான். நர்மதா பின் பக்க தோட்டத்துக்கு சென்று விட்டாள். கொஞ்ச நேரம் அமைதியாக அமர்ந்து யோசித்து கொண்டு இருக்க, பிருந்தாவிடம் இருந்து கால் வந்தது. அதுக்குள்ள என்று நினைத்து அட்டன் செய்து காதுக்கு கொடுக்க,
“அடி நம்மு, என்ன பார்சல் இது?…” என்று பிரிக்காமலே வந்தவுடன் கால் செய்து விட்டாள்.
“பிரிச்சு பாரு…”
“அரை மணி நேரத்துல என் வீடு இருக்கு, அதுக்கு எதுக்கு கூரியர்…” என்றபடி பிரித்தவள், அதிர்ந்து போய்
“நர்மதா என்ன இது?… அங்க எதுவும் சண்டையா?…” என்று பயந்து போய் விசாரித்தாள்.
பின்னே அருகில் இருக்கும் அக்கா வீட்டிக்கு கூரியர் வந்து இருக்கு, அதுவும் அப்பா எடுத்து கொடுத்த சேலை, பெரிதாக யோசிக்க தேவையில்லையே…
ஒரு பெருமூச்சு விட்டு நர்மதா நடந்ததை சொல்ல, பிருந்தாவுக்கு அவ்வளவு கோபம்.
“என்ன நினைச்சு இருக்கான் உன் புருசன். நம்ம அப்பா எடுத்து கொடுத்தது, அவன் வேண்டாம்னு சொல்ல என்ன உரிமை இருக்கு. இதுல உனக்கு அட்வைஸ் வேற…” என்று கொதிக்க,
“அதுக்கும் மேல நடந்தது…” என்று அவர்களின் வாக்குவாததையும், அது முடிந்த விதத்தையும் சொல்லி,
“ஒரு வேளை நாம தான் தப்பா பிருந்தா…” என்று தங்கை கேட்க.
“அடச்சீ, உன் புருசன் பேசுறான்னு… நாளைக்கு நம்ம அம்மா, அப்பாவையும் அவளுக்கு பிடிக்காது. அப்ப அவங்களும் ஒதுங்கி போகணுமா?… உன் மாமியார் மட்டும் உன்னை ஒன்னுமே சொல்றது இல்லையா?… வேலைக்கும் போயி, வீட்டையும் நீ தான் பாக்குற… அப்ப எங்க போச்சு உன் புருசன் கொள்கை. நீ உன் புருசன், மாமனார், மாமியார்ன்னு எல்லாரையும் அனுசரிச்சு தான போற… ஒத்துவரலைன்னு அவங்களை நீ ஒதுக்கி வச்சா, நிரஞ்சன் சரின்னு சொல்லுவானா இல்லை கட்டாயபடுத்தி உறவை வளர்க்க முடியாதுன்னு யார் பக்க உறவை முடிச்சு வைப்பான். உன்னையா இல்லை உன் மாமியாரையா?… நல்ல சான்ஸ் அப்படியே உன் புருசனை வச்சு வாங்க வேண்டிய தான… வாய்ல என்ன பழமா வச்சு இருந்தா…” என்று பிருந்தா கத்த,
நர்மதாக்கு ஒரு மாதிரி தாழ்வாக இருந்தது. கணவன் பேசும் போதும் பதில் பேச தெரியவில்லை. தன் அக்காவிடமும் பதில் பேச தெரியவில்லையே…
“நீயும் என்னை கத்தாத பிருந்தா. நானும் போராடி தான் விட்டுட்டேன்…” என்று வருத்தமாக சொல்ல,
பிருந்தாக்கு புரிந்தது. நிரஞ்சன் பற்றியும் தெரியும், தன் தங்கை பற்றியும் தெரியும்…
“அந்த சுபாக்கு இருக்கு… கண்டுக்காம விட்டா ரொம்ப தான் துள்ளுறா… நான் போடுற போடுல அவ புருசன் அலறி அடிச்சு ஓடனும். இந்த தாய் கிழவிக்கும் இருக்கு… நீ போனை வை, அவளை ஒரு பிடி பிடிக்கிறேன்…” என்று பிருந்தா துள்ள,
“வேணாம் பிருந்தா. அவளுக்கு ஒன்னுமே இல்லை. நடந்ததை தானே சொன்னேன்னு முடிச்சுடுவா… அம்மா, அப்பா சத்தம் போட்டாலும் அவளுக்கு ஒன்னுமில்லை. அவ புருசன், அவ கூட தான் நிப்பான். அப்புறம் அப்பா, மக வீட்டுல பிரச்சனைன்னு ஓடி வருவாரு… இங்க வந்து அதுவும் என் வீட்டுல நியாயம் பேச முடியுமா…” என்று தங்கையின் வார்த்தை ஒத்து கொள்ளும் படி தான் இருந்தது.
“ஏதோ அப்பா வளர்ப்பு தான் தப்புன்ற மாதிரி அவரை நிக்க வச்சு பேசுவாங்க என் மாமியார். அதுவும் உன் கொழுந்தனை எந்த பக்கம் சேர்க்கன்னு தெரியாது. அப்பாவ ஏதாவது சொல்லிட்டா எனக்கு பொறுக்காது… நானும் பேச வேண்டி வரும். என்னை ஏதாவது சொன்ன அப்பாக்கும் பொறுக்காது.. பிரச்சனை நமக்குள்ள தான் ஓட்டிட்டு இருக்குமே தவிர எதுவும் மாறாது. அவர் வயசுக்கு மக வீட்டுல வந்து பேச்சு கேட்கணுமா?…” என்று தெளிவாக புரிய வைக்க,
பிருந்தாக்கு அதிக வருத்தம். இவ்வளவு இழுத்து விட்ட தம்பி பொண்டாட்டியை ஒன்னும் செய்ய முடியலையே. அதனால் தான் நர்மதா பெயரை இழுத்து இருக்கா… இதுவே தான் என்றால் பயப்படாமல் ஒரு கை பார்த்து இருப்பேன். நர்மதாக்கு அப்படி அல்ல, குடும்பமே உட்கார்ந்து அலசும். நம் குடும்பத்தில் பிரச்சனை வராமல் இருக்க, ஒதுக்கி தள்ள தான் வேண்டும்.
“சரி நம்மு. இந்த சேலையை என்ன பண்ண?..”
“அப்பாக்கு தெரிஞ்சா மனசு தாங்காது. சுபா குணத்தை சொல்ல, நம்ம அப்பாவை கஷ்ட படுத்த முடியாது. சேலை மட்டும் அனுப்பி இருந்தேன். அப்பவே பஸ் புடிச்சு சென்னை வந்துடுவார். மக வீட்டுல சண்டைன்னு தெரிஞ்சா, எந்த அப்பா மகளே பார்க்கட்டும்ன்னு அமைதியா இருப்பார். அவர் வந்தா , நான் முன்ன சொன்னது தான் நடக்கும் பிருந்தா. அந்த சேலை உன் கிட்ட இருக்கட்டும். நான் கட்டுன என்ன, நீ கட்டுனா என்ன? எல்லாம் ஒன்னு தான்…”
“அடுத்த வாரம் வர உன் பிறந்த நாளுக்கு இதவே நான் கிப்ட்டா குடுக்கவா…” என்று பிருந்தா கேட்க.
“ வேணாம். என் புருசன் சேலையை பார்த்திட்டார்…”
“அப்புறம் என்ன தான் பண்ண?…”
“ஒன்னும் வேணாம். சேலை உன்கிட்டவே இருக்கட்டும். நீயே வச்சுக்க… நான் நைட் பேசுறேன்…” என்று முடித்து கொண்டாள் நர்மதா.
நாள் நகர்ந்தது. அடுத்த இரண்டு நாள் நர்மதாக்கு ஓயாத வேலை. தலைகீழாக கிடந்த வீட்டை, திரும்ப தன் வசத்திற்க்கு மாற்றி, எப்பவும் போல பள்ளி, வீடு, வேலை, கணவன், பிள்ளைகள் என்று நாள் நகர்ந்தது.
அன்று இரவு பிருந்தா தங்கைக்கு போன் செய்து,
“நம்மு, நாளைக்கு உனக்கு வேர்கிங் டே தான…” என்று கேட்க.
“ம்ம், சனிக்கிழமை ஆஃப் டே… ஏன் பிருந்தா..”
“ ஸ்கூல் முடிச்சதும் வீட்டுக்கு போகாம, அங்க இருக்குற கஃபேல வெயிட் பண்ணு. நான் வாரேன்…” என்று சொல்ல,
“எதுக்கு பிருந்தா?…”
“எனக்கு உன்னை பார்க்கணும் நம்மு… வெயிட் பண்ணு…” என்று முடித்தாள் பெரியவள்.
அடுத்த நாள் அதே போல நர்மதா காத்திருக்க, பிருந்தா வந்து விட்டாள்.
“என்ன பிருந்தா… என்னவாம்?…”
“என்ன என்னவாம்?… வீட்டுல சண்டைன்னு சொல்ற, எனக்கு மனசே இல்லை… உடனே உன்னை பார்க்க வர தான் நினைச்சேன். ஆனா, அந்த எம்டன் நினைச்சு தான் இருந்துட்டேன். நான் உடனே உன்னை பார்க்க வந்தா, பிரச்சனை தெரிஞ்சு தான் வந்து இருக்கேன்னு நினைப்பாங்க… வீட்டு விசயத்தை வெளியே சொல்றன்னு உன் மேல கோபமானா… என்னை எதுவும் சொன்ன கூட நான் பதிலுக்கு பதில் பேசுவேன். ஆனா, நீ தான அங்க வாழனும். ஆனாலும், உன்னை பார்க்காம இருக்க முடியல. அதான் வேலைக்கு வந்த இடத்துல பார்க்க வந்தேன்…” என்ற அக்காவின் பேச்சு, நர்மதாக்கு லேசாக கண் கலங்கியது.
இதோ இது தான் உடன் பிறந்த பிறப்பு என்பது.. தங்கச்சிக்கு ஒரு கஷ்டம் என்றதும் தீர்வு சொல்ல வேண்டாம், ஓடி வந்து பார்க்கும் மனசே பெரியது அல்லவா… இதற்கு தான் ஒருத்தருக்கொருத்தர் துணையாக இருந்து கொள்வீர்கள் என்று ஒரே ஊரில் மாப்பிள்ளை பார்த்தார் போல தந்தை…
“இந்தா…” என்று அக்கா ஒரு பார்சல் கொடுக்க,
பிரித்து பார்த்தவள், “இது உன் சேலை தான.. சட்டை தச்சுட்டையா, ஆரி வொர்க் சூப்பரா இருக்கு…” என்ற நர்மதா, எதோ தோன்ற, நிமிர்ந்து தன் அக்காவை பார்த்தாள்.
“பிருந்தா.. இது..”
“உனக்கு தான் நர்மதா…”
“எனக்கா? இது உனக்கு எடுத்த சேலை …”
“அதுனால என்ன.. நாம மாத்திகிட்டதே இல்லையா? உன்னை விட்டு நான் மட்டும் எடுக்க மனசு வரல. அந்த சேலையை கொடுத்தாலும் எம்டன் கிட்ட மாட்டிப்போம். அதான் என் சேலையை மாத்தி வச்சேன். உன் பிறந்த நாள் கிஃப்ட்ன்னு வீட்டுல சொல்லிடு… நம்ம அப்பா ஆசையா எடுத்து கொடுத்தார்…” என்று பிருந்தா சொல்ல,
நர்மதா சேலையை வருடி கொண்டாள். கொஞ்சம் வருத்தம் மறைந்தது. அக்கா சேலை தனக்கு வந்ததில் வருத்தமெல்லாம் இல்லை. இவர்களுக்குள் இது சகஜம் தான். முன்பெல்லாம் அப்பா, இருவருக்கும் ஒரே போல தான் எடுப்பார். கலர் மட்டும் தான் வேற இருக்கும். இவளுக்கு நீல கலர் என்றால், அவளுக்கு பச்சை. மத்த படி எல்லாம் ஒரே மாதிரி தான்.
நீங்களாக உங்களுக்கு பிடிச்சதை எடுக்க சொன்னால், நாள் முழுக்க பார்த்து கொண்டே இருப்பார்கள். பல நேரங்களில் அக்காக்கு தங்கையும், தங்கைக்கு அக்காவும் தான் தேர்வு செய்வார்கள். அப்படி ஒரு நாளாக இன்று மாறி போனது.
கல்யாணத்துக்கு முன் தான் இந்த ஒற்றுமை. கல்யாணம் முடிந்தது கட்டும் சேலை கூட கணவனுக்கு பிடித்த மாதிரி என்று மாறி போனார்கள்.
error: Content is protected !!