Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 14

இவன் ஏன்… இப்படி வித்தியாசமா… ஏதோ… மாதிரி பார்க்கிறான்…? என்னவோ இருக்கு.  ஏன் அப்படி பார்த்தான்…? என குழம்பியவளாக வீட்டிற்கு சென்றுவிட்டாள் நிஷா.

அவளுக்குத்தான்… தான் அன்று உமாபதியின் மேல் மோதியதில் எந்த ரியாக்‌ஷனும் வரவில்லையே.  அதை அவள் அன்றே மறந்திருந்தாள்.  ஆனால் உமாபதியால் மறக்க முடியவில்லை.  அன்றிலிருந்து அவன் இவளை நினைக்காமல் இருந்ததும் இல்லை.

நாச்சியப்பனுக்கு உடல்நிலை சரியில்லாதபோது… தக்க சமயத்தில், நிஷா பிரேமாவின் கூட இருந்து உதவியதில், அவள் மீது அவனுக்கு நல்லெண்ணமும்… மதிப்பும் இத்தனை நாட்களாக மனதுக்குள் இருந்தது.  அது இப்போது கனிந்து வேறு மாதிரியாக உருவெடுத்திருந்தது போல.

அவனுக்கும் அவனை தெரியவில்லை,  சில சமயம் அவளின் மீதான பிடித்தத்தில் தடுமாறியவன், பல சமயம்  தனக்குள்ளேயே தயக்கத்தில் இருந்தான்.



Advertisement

பெண்ணின் மீது வந்திருக்கும் ஈடுபாடு காதலா….. ஜஸ்ட் ஒரு ஈர்ப்பா… என நிலையில்லாமல் குழம்பிக் கொண்டிருந்தவன். மனம் விட்டு நிஷாவிடம் பேசவும் தைரியம் வரவில்லை.

அவளை நேரில் பார்க்கும் சமயங்களில் எல்லாம் இனிமை கலந்த இம்சைகள்தான் உள்ளுக்குள். ஒவ்வொரு சமயமும் ஒரு… ஒரு… விதமான உணர்வலைகளில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருந்தான்.

இப்பொழுதுகூட நிஷா படி ஏற துவங்கியதும் யோசிக்காமல் சட்டென்று அவளை பேர் சொல்லி அழைத்ததும், அவளிடம் பேச்சை வளர்க்கும் ஆசையில்தான். இருந்தாலும்… என்ன பேசுவது என தெரியவில்லை உமாவுக்கு.

Advertisement

என்னவோ… இப்போதுதான் விடலைப் பையனுக்கான அத்தனை உற்சாகமும் அவன் முகத்தில் தெரிந்தது.  இன்ப மோனத்தில் திளைத்தவனுக்கு,  நிஷா கிண்டலுக்கு சொல்லி சென்றதைகூட கண்டுகொள்ளாமல், அதனை நிஜம் என நம்பியவன்… மனதில் தன்னையே நினைத்து சிரித்துக் கேலி செய்து கொண்டிருந்தான்.

Advertisement

அவனுக்கு அவ்வளவாக அசைவ உணவுகளில் பிரியம் இருந்ததில்லை.  “ஹ்ம்ம்… காலையிலேயே… கோழிகறியும்…. கொத்துப் பரோட்டாவுமா…” என செல்லமாக அவளை மனதிற்குள்ளேயே  அலுத்துக்கொண்டு சிரித்துக்கொண்டவன், “உன் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான்டா…” என தன்னையே கிண்டல் செய்துகொண்டு நின்றிருந்தான்.

மறுநாள், ஞாயிறு.  நிஷா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.  காலையிலேயே யாரோ கதவைத் தட்டுவதுபோல சத்தம் கேட்டதும் “ம்ப்ச்… சன்டே அதுவுமா… தூங்க விடறாங்களா…?  யாருடா…. அது? பெல் அடிச்சு இம்சை பண்றது…” என புலம்பியவாரே வந்து கதவைத் திறந்தாள்.

வெளியே உமாபதி நின்றிருந்தான் கையில் பாத்திரத்துடன்.  தூங்கி எழுந்த கோலத்துடன்… அப்படியே வந்து நின்றவளைப் பார்த்ததும் உமாபதிக்குதான் சங்கோஜமாக இருந்தது.

Advertisement

டிரஸ்சகூட சரி பண்ணாம… அப்படியே வந்து நிக்கிறா.  இவ்வளவு நேரமா… தூங்குவாங்க…?  அய்யோ… இவளோட என் பாடு திண்டாட்டம் தான்போல…

தலைமுடி கலைந்து…, முகத்தில் வந்து விழுந்திருந்தது கூட தெரியாமல், விலகியிருந்த மேலாடையையும் சரிசெய்யாமல் தூக்கக் கலக்கத்துடன்… அப்படியே வந்து கதவைத் திறந்திருந்தாள் நிஷா.

அணிந்திருந்த டீசர்ட்டும் முன்புறம் இறங்கி… நின்று எதிரில் இருந்தவனை சோதனைக்குள்ளாக்கி கொண்டிருந்தது.

பிரேமாவாக இருக்கும் என வந்து கதவைத் திறந்தவளுக்கு.. உமாபதியைக் கண்டதும்… கேள்வியாகப் அவனையே பார்த்து நின்றாள் வாயை திறக்காமல்.

“இதை அம்மா குடுத்துட்டு வரச் சொன்னாங்க…” என கையில் வைத்திருந்த பாத்திரத்தை அவளது கையில் திணித்தவன்… அங்கிருந்து விட்டால் போதும் என ஓடிவிட்டான்.

“இவன் எதுக்கு… இப்ப பேயைப் பார்த்தமாதிரி ஓடறான்.  நாம என்ன அப்படியா இருக்கோம்?  ஒருவேளை தூங்கியெழுந்து அப்படியே வந்ததனால… தலைமுடியெல்லாம் கலைஞ்சு… பார்க்கறதுக்கு அப்படிதான்…. இருக்கேனோ….?” என அவளுக்கே சந்தேகம் வந்து, அப்படியே கண்ணாடி முன்னால் வந்து நின்று பார்த்தாள் தன்னை.

அப்போதுதான் அவளது மேலே அணிந்திருந்த டீசர்ட் கசங்கி, முன்பக்கமாக இறங்கியிருந்ததைப் பார்த்தவள், அச்சோ…. என வெட்கி கண்ணைமூடி…. தலையில் சிருங்காரமாக தட்டிக் கொண்டாள் கூச்சத்தில்.

“இப்படியேவா… போய் நின்னேன்… அவன் முன்னால.  அதான் அவன் அந்த ஓட்டம்… ஓடுனானா…” என மனதில் நினைத்து சிரித்துக் கொண்டவள், பாத்ரூம் சென்று வந்தாள்.

பிரேமா கொடுத்தனுப்பியிருந்த பாத்திரத்தை திறந்து பார்த்தவளுக்கு மசாலா வாசனை மூக்கை துளைத்தது. சுடச்சுட ஆப்பமும்… கோழி குருமாவும்… இருந்தது உள்ளுக்குள்ளே.  அதனைப் பார்த்ததும் அவளது முகம் பிரகாசத்தில் விரிந்தது.

“ம்ஹா…. வாசனையே சூப்பரா இருக்கே.  காலையிலேயே… இன்னைக்கு உனக்கு வேட்டைதான்டி…” என தட்டை எடுத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்துவிட்டாள் உடனேயே.

                             @@@@@@@@@@@@@@

அஞ்சனா அவளது அறையில் இருந்த ஜன்னலின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள்.  அவளுக்கு நேர் எதிரில் இருந்த மேஜையில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் ஜெகன்.  ஒரு கையால் மேஜை முன் இருந்த சேரைப் பிடித்துக் கொண்டிருந்தவன், மறுகையை பேன்ட் பாக்கெட்டினுள் விட்டிருந்தான்.

அஞ்சனா கொஞ்சம் டென்ஷனாகதான் இருந்தாள். அவள் எத்தனை பிரயத்தனப்பட்டும் முகம் முழுவதும் பதட்டம்தான். பட்டுப்புடவையின் முந்தியில் போட்டிருந்த நாட்டில் இருந்த நூலை விரலில் சுற்றுவதும் பிரிப்பதுமாக தலையை குனிந்து நின்றிருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து…. பெரிய பட்டாளமே வந்திருந்தது அஞ்சனாவைப் பார்க்க.  இவ்வளவு பெரிய கூட்டத்தை அவள்மட்டுமல்ல, வேல்முருகன்கூட எதிர்பார்க்கவில்லை.

இவர்களை இப்படி கும்பலாக பார்த்ததும்… கூச்சம், தயக்கம்…, சங்கோஜம்…, பயம் என எல்லாம் கலந்த  உணர்வுகளின் நிலையில் சிக்குண்டிருந்தாள் போல.  அதுதான் இந்த பதற்றத்திற்கு காரணம் போல.

வந்திருந்த மக்கள் எல்லாம், இத்தனை நேரம் அவளை பக்கத்தில் உட்காரவைத்து கொண்டு… குடும்பமாக மாற்றி மாற்றி ஆளாளுக்கு பெண்ணுடன் சகஜமாக பேசுகிறோம் என்ற முறையில் கேள்விமேல் கேள்வி கேட்டு  ஒரு வழி செய்திருந்தனர் அவளை.  அதிலேயே அவள் களைத்து போயிருந்தால்.  அது பத்தாது என்று இதோ மாப்பிள்ளை வேறு அவளுடன் பேசவேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தான்.

வேல்முருகன் அவளை உள்ளே போகச்சொல்லி கண்ணைக் காட்டியதும்….. தப்பித்தோம்…., பிழைத்தோம்…. என அங்கிருந்து வந்திருந்தாள்.

அடுத்த சில நிமிடங்களிலேயே….. மாப்பிள்ளை அவளிடம் தனியாக பேச விரும்புவதாக சொல்லி, இதோ ஜெகன் வந்து நின்றான்.  வந்ததிலிருந்து அவன் ஏதும் பேசாமல் நின்றிருப்பதை உணர்ந்தவள், நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

இதற்காகவே காத்திருந்ததுபோல அவளைப் பார்த்து புன்னகைத்தான்.  பதிலுக்கு இவளும் முறுவலித்தாள்.

“இதுதான் உன் ரூ..மா….?” என்றான் கண்களால் சுற்றி பார்த்துக்கொண்டே.

ஆமாம் என தலையசைத்தாள்.

“நைஸ்.  இந்த பெயின்டிங்க் எல்லாம் நீ வரைஞ்சதா…?”

“ஹ்ம்ம்….”

“நல்லாயிருக்கு.  பெயின்டிங்னா ரொம்ப பிடிக்குமோ…?”

“ம்ம்…  அது….. எல்லாம் நான் ஸ்கூல் படிக்கும்போது…. வரைஞ்சது”.

“ம்ம்… என்னைப் பத்தி சொன்னாங்களா…. உங்க வீட்ல….?”

என்னவென்று சொல்லுவாள்…..?  ஜெகன் வீட்டில் இருந்து, முதல் முறை இவளை பெண் பார்க்க வருவதற்கு முன்னேயே வேல்முருகன் அவளிடம் மாப்பிள்ளையின் பெயர், அவனைப் பற்றின விவரமெல்லாம் சொன்னார் தான்.  ஆனால்…. அது எல்லாம் அவளுக்குதான் புத்தியில் ஏறவில்லை. என்ன சொல்வது அவனிடம்?  இல்லையென்றா…. சொல்லமுடியும்.  “ஹ்ம்ம்….” என தலையசைத்து வைத்தாள் பொத்தாம் பொதுவாக.

“அப்ப உனக்கு….. ஓகே…… வா…..”

என்ன ஓ..கேவா….?  எதை ஓகேவான்னு கேட்கிறான்….? திரு… திரு…. என முழித்தாள்.  அப்பா என்ன சொல்லி வச்சிருக்கார் இவன்கிட்ட…?  அச்சோ…. இவன் என்னத்த ஓகேவான்னு கேட்கறான்…?  ஒன்னும் தெரியலையே…?

அவள் முழிப்பதை வைத்தே ஒருவேளை இவகிட்ட சொல்லலையோ என சந்தேகித்தவன் “கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேலைய விட்டுடனும்னு… சொல்லியிருந்தேன்”.

புருவத்தை நெறித்து, தலையை நிமிர்த்தி… ஜெகனை நேராக பார்த்தவளுக்கு உள்ளுக்குள் உஷ்ணம் ஏறியது.

“என்னைப் பத்தி எதுவும் உங்க வீட்ல சொல்லலையா….?” என்றான் சந்தேகமாக.

“ஸாரி…. அப்பா சொன்னாங்க…., நாந்தான் ஏதோ வேலை டென்ஷன்ல சரியா கேட்கல…” என தயங்கினாள்.

“இது என்ன பதில்..? சொன்னாங்க கேட்கலேன்னு…”  என அவளை குழப்பமாக சந்தேகத்துடன் கூர்ந்து பார்த்தான்.  இந்த கல்யாணத்துல இவளுக்கு விருப்பமில்லையோ….?  யாரையாவது லவ் பண்றாளா……?  என ஆராய்ச்சியாக பார்த்தவன், இவள் சம்மதம் இல்லாம இவங்க அப்பா ஏற்பாடு பண்றாரோ….? இவளுக்கு இதில இன்ட்ரஸ்ட் இல்லையோ…….? என சந்தேகமே வந்துவிட்டது அவனுக்கு.  குழம்பியவன் அவளிடமே கேட்டுவிடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான்.

“உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா….?”

அது அவளுக்கே இன்னும் புரிந்த பாடில்லை.  முதல் தடவை பெண் பார்க்கும் பொழுதும் சரி, இப்பொழுது ஜெகன் வீட்டினர் வந்து பார்த்து சென்ற பொழுதும் சரி….. அவளுக்குள் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.  ஏதோ கடமைக்கு நடப்பதுபோல் இருந்தது அவளுக்கே.  உள்ளுக்குள் உற்சாகமோ… எதிர்பார்ப்போ… எதுவும் வரவில்லை.

அவளுக்குமே இன்னும் விளாங்காத நிலையில் என்ன சொல்வாள் அவனுக்கு….?  ஒரு சில சிமயம் அவளும் நினைப்பதுண்டு.  பிரண்ட்ஸ் எல்லாம் இதைப் பத்தி எப்படி கதை கதையா பேசுவாங்க.  ஏன்…? நமக்கு மட்டும் ஒன்னும் தோண மாட்டேன்னுது.

இந்த சினிமாவில காட்டற மாதிரி பொண்ணும் மாப்பிள்ளையும் பார்த்தவுடனே… பட்டாம்பூச்சி பறக்கறது, பல்பு எரியறது எல்லாம் நடக்காதோ…?  என்னன்னமோ காமிக்கிறாங்க.

நமக்கென்னடா…. ஒன்னுமே நடக்கல.  நமக்கு மட்டும்தானா..? எல்லாருக்கும் இப்படிதானா……?  காலேஜ் படிக்கும்போதுகூட பசங்கள பார்த்து எந்த பட்டாம்பூச்சியும் பறக்கலயே நமக்குள்ள.

ஒருவேளை நமக்கு ஏதாவது ஹார்மோன் இஷ்யூவா… இருக்குமோ…? என அவளை அவளே கிண்டல் செய்ததுண்டு.

இவள் பதில் சொல்லாமல் கனவுலகத்தில் சஞ்சரித்திருப்பதைப் பார்த்த ஜெகனுக்கு கன்ஃபார்மே ஆகிவிட்டது.  இவள் யாரையோ காதலிக்கிறாள்… என மனதில் உறுதியே செய்துவிட்டான்.

“அஞ்சனா…”

“ஹாங்….. என்ன கேட்டீங்க……..?”

“சுத்தம்…” என தலையில் கைவைத்தவன்….., “யாரையாவது லவ் பண்றியா…..?”

“ம்கூம்…..”

“அப்ப லவ் பெயிலியரா…..?”

அவளுக்கே அவனது கேள்வியில் சிரிப்பு வந்தது.  உதட்டில் புன்னகை நெளிய…. “ஏன் அப்படி கேட்கறீங்க….?” என்றாள்.

“எதுவாயிருந்தாலும்…. கல்யாணத்துக்கு முன்னாடியே பேசி தெரிஞ்சுக்கறது பெட்டர் இல்லையா.  உன்னை உங்க வீட்ல கம்பெல்கூட பண்ணியிருக்கலாம். இந்த கல்யாணத்துக்கு”.

“ம்கூம்…. இல்ல.  அப்படி எதுவும் இல்ல”.

அப்பாடா….. என தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்…. “என் பேராவது தெரியுமா….? இல்ல அதுவும்….” என இழுத்தான்.

“ம்கூம்….” என்றாள் தலையசைத்து பாவமாக.

“சுத்தம்.  ஐம் ஜெகன்.  I.C.W.A.,   C.A. முடிச்சுட்டு ஒரு புகழ் பெற்ற எம்மென்சி கம்பெனியின் பெயரைச் சொல்லி அதில் சீப் ஆடிட்டரா வொர்க் பண்றேன்.  எங்க கம்பெனியோட பிரான்ச் பாம்பே, புனே இங்கலாம் இருக்கறதால அடிக்கடி அங்கயும் நான் போக வேண்டியிருக்கும் வேலை விஷயமா”.

“நானும் இப்படி வெளியே வேலையில பிஸியாயிருந்து…, எனக்கு வரப்போற மனைவியும் வேலைக்கு போயிட்டு பிஸியாயிருந்தா லைப் பீஸ்புல்லா போகாது.  அதுக்குதான் எனக்கு வரப்போற மனைவி, கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகக்கூடாதுன்னு எதிர் பார்க்கிறேன்.  அதுதான் என்னோட ஃபர்ஸ்ட் கண்டிஷன்கூட”.

“முதல்தடவை பொண்ணு பார்க்க வந்தப்பவே உங்கப்பாகிட்ட இதைபத்தி விளக்கமா சொல்லியிருந்தேன்.  அவரும் ஓகே சொல்லியிருந்தார்” என அவனைப்பற்றி கூறினான் அவளிடம்.

அவளுக்கு உள்ளுக்குள் புசுபுசுவென கோவம் வந்தது.  இந்த அப்பா இதைப் பத்தியெல்லாம் என்கிட்ட பேசவேயில்லையே.  பேசுனா… எங்க நான் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லாம விட்டிருப்பாரு… ஜெகன் வேலையைப்பற்றி பேசியதும் யோசனையுடன் அமைதியாகி விட்டாள் ஒன்றும் சொல்லாமல்.

“அஞ்சனா…”

“ஹ்ம்ம்….. சொல்லுங்க”.

“பேசிட்டிருக்கும் போதே அடிக்கடி ஆஃப் மோடுக்கு போயிடற…”

“இல்லல்ல.  நீங்க சொல்லுங்க…”

”நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன்.  இனி நீதான் சொல்லனும்….”

இதற்கு என்ன பதில் சொல்லுவாள்.  தயங்கி நின்றவள், தன்னால் வேலைக்கு செல்லாமல் இருக்க முடியுமா என சிந்தித்துப் பார்த்தாள், சில நிமிடங்கள்.

“ஸாரி… இதைப்பத்தி அப்பா என்கிட்ட ஒன்னும் சொல்லல.  எனக்கு வேலைக்கு போகனும்.  கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைய விட முடியாது… என்னால” என்றாள் தயங்கிக் கொண்டே.

“மாசத்துல… பாதி நாள்…. என்னால வீட்லயே இருக்க முடியாது அஞ்சனா.  பாம்பே…. புனேன்னு… பறந்துட்டே இருப்பேன்.  மீதியிருக்குற நாள்லயும்…. நாம ஒருத்தர ஒருத்தர் பார்க்க முடியாம, நீயும் பிஸியா….. இருந்தா…. லைப் பீஸ்புல்லா இருக்காது….”

“அதுமட்டுமில்லாம. நீ பெங்களூர்லயும்…. நான் சென்னையிலயும் இருந்தா…. சரியா வருமா..?”

“உங்கள எனக்கு புரியுது.  உங்களுக்கு உங்க ப்யூச்சர நினைச்சு கனவு இருக்கறமாதிரி… என் மனசுக்குள்ளேயும் எனக்கான ஆம்பிஷன் இருக்கு.  அதை என்னால கலைக்க முடியாது”.

“ம்ம்…   அதுக்கு நீ வீட்டில இருந்தே ஏதாவது பண்ணலாமே. நீ என்ன பண்ணனும்னு சொல்லு, அதுக்கு தகுந்தமாதிரி…, நான் உனக்கு எல்லாம் அரேன்ஜ் பண்ணித் தரேன்.  பணம் பிரச்சினையில்ல….”

அவனைப் பார்த்து சிரித்தவள், “பணம் என்னோட எய்ம் இல்ல.  அப்படி நினைச்சிருந்தா… என்னோட அப்பாவே எனக்கு நான் நினைக்கறத பண்ணிக் கொடுப்பாங்க”.

“நான் எனக்கு விருப்பப்பட்டத… ஆசைப்பட்டத பண்ணனும்னு நினைக்கறேன்.  இப்ப மட்டும் இல்ல.  எப்பவும்.  அதுக்கு எந்த முட்டுக்கட்டையும் யாரும் போடறத நான் விரும்பல…  இப்ப மட்டும் இல்ல.  கல்யாணத்துக்கு அப்புறமும்….” என ஸ்திரமாக மொழிந்தாள்.

புரியுது என தலையசைத்தவன், “இதோ உனக்கு பிடிச்ச மாதிரி பெயின்டிங்க்ஸ், அந்த மாதிரி…. ஆர்ட்ஸ் சைட்ல ட்ரை பண்ணலாமே.  இல்ல நீ கலை சம்பந்தப்பட்டது எதுனா படிக்கறதுனாகூட படி”.

“அது ஸ்கூல் டேஸ்ல ட்ரை பண்ணது.  இப்ப எனக்கு அதுலலாம்…, அந்த அளவுக்கு  பெரிசா இன்ட்ரஸ்ட் இல்லை”.

இரண்டு கைகளையும் பான்ட் பாக்கெட்டில் விட்டு, அவளையே ஒரு நிமிடம் உற்று பார்த்தவன், அவளை நோக்கி அடியெடுத்து வைத்து… “உனக்கு என்னை பிடிச்சிருக்கா….?” என்றான் அவளது கண்களை ஊடுருவி ஆராயும் நோக்கில்.

மௌனமாக நின்றிருந்தாள் பதில் கூறாமல்.

“சொல்லு அஞ்சனா…. என்னை பிடிச்சிருக்கா….?”

அவனை நிமிர்ந்து பார்த்தவள்…, பதில் சொல்ல முடியாமல்…. தடுமாற்றத்துடன் தலை குனிந்தாள்.  என்ன சொல்லுவாள்….?  அவளைப் பொறுத்தவரை திருமணத்தைப் பற்றின எந்த கனவும், ஆசையும் இதுவரை இல்லை.  இனிமேல்…. வருமோ…? கேளவிதான் இன்னமும்.

ஆசைகளை மனதில் வளர்த்துக்கொண்டு…, பின்னால் அதுபோல நடக்க வில்லை என்றால் தேவையில்லாத வேதனையும்… வருத்தமுமே மிஞ்சும் என்ற எண்ணம் கொண்டவள் மனதுக்குள்.

இப்போது அவளிடம் ஜெகன் கேட்ட கேள்விக்கு உண்மையிலேயே பதில் இல்லை.  மாப்பிள்ளை நன்றாக இருக்கிறான். படித்திருக்கிறான்.  நல்ல வேலையில் இருக்கிறான்.

அவளைக் கேட்டால் இது மட்டும் போதுமா…?  ஒரு வாழ்க்கைக்கு என்றால், அதுவும் அவளுக்கு தெரியாது.  எல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார் என அவர் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தாள்.

ஆதலால்…. “நீங்க அப்பாகிட்ட பேசிக்கோங்க” என்றுவிட்டாள்.

என்ன மாதிரியான பதில்… இது.  இவள் கிட்ட எதைக் கேட்டாலும் சுத்தல்ல விடறா…ளே.  ஸ்டெடியா… எதையும் பேச மாட்டேன்றாளே… என ஆயாசமாக…. வந்தது ஜெகனுக்கு.

வேறு யாராவது அவனிடம் இப்படி அக்கறையின்றி பொறுப்பில்லாமல் பதில் கூறியிருந்தால்… கண்டு கொள்ளாமல் வேண்டாம் என மறுத்து சென்றிருப்பான்.  அவளை அவனுக்கு நிரம்ப  பிடித்திருந்ததால்தான் பொறுமையாக நின்றிருந்தான் இன்னமும்.  பல்லைக்கடித்து… இப்போது அவனால் கோவத்தை அடக்கதான் முடிந்தது.  அவளிடம் காட்ட முடியவில்லை.

முதல்முறை அவளை பெண் பார்க்க வந்தப்பவே அவளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.  அஞ்சனா பெண்களையே திரும்பி பார்க்க வைக்கும், ஆளை அசரடிக்கும் அழகி.  ஜெகனும் பார்ப்பதற்கு நன்றாக இருப்பான்.  நல்ல உயரத்தில், மாநிறத்தில்…… கலையான முகத்துடன்….., கம்பீரமான தோற்றத்துடன் இருப்பவன்தான் அவனும்.

கல்லூரியில் அவன் பின்னால் சுத்திய பெண்கள் ஏராளம்.  பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான் என்றாலும், அவனது வீட்டின் செல்வச் செழிப்பும்…. உயர் மட்டத்திற்கே உரிய நாகரிகமான  வாழ்க்கையும்… அவனது பிறப்பிலேயே ஒட்டியிருந்தது.

அப்படிப்பட்டவன்… முதலில்…., இந்தக் கிராமத்தில் பெண் பார்க்க வந்த அன்று….. சுவாரஸ்யம் இல்லாமல் பெற்றவர்களின் விருப்பத்தில்தான் வந்தான்.  ஆனால் இங்கு வந்து வேல்முருகனின் வீட்டையும்…, அவர்களது செல்வ வளமையையும்….. பார்த்தவனுக்கு எண்ணமே மாறியிருந்தது.  அவளும் ஒரே பெண்.  அவனும் ஒரே பையன்.  பணம் அவனுக்கு முக்கியம் இல்லை.

இதை விட செல்வந்தர்கள் எல்லாம் அவனிற்கு பெண்தர தயாராக இருந்தனர்.  ஆனால் அவன் மனதுக்குள் கணித்து வைத்தது போல்  இதுவரை அமையவில்லை.

முதலில் பெண் பார்க்க வந்தன்று….. அஞ்சனாவைப் பார்த்ததும்…. அவன் மனதில் வடித்து வைத்திருந்த இதயராணி இவள்தான் என  முடிவே செய்துவிட்டான்.

இருந்தும்…., தனக்கு மனைவியாக வரப்போகிறவள், திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வதில் தனக்கு விருப்பமில்லை என்பதை வேல்முருகனிடம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தான் அன்றே.  அவருக்கும் திருமணத்திற்குப் பின் அஞ்சனா வேலைக்கு செல்வதில் விருப்பமில்லை.  இப்போது மகளிடம் பேசினால், திருமணத்திற்கு மறுத்துவிடக் கூடும் என பயந்து, பின்னால் பொறுமையாக பேசிக்கொள்ளலாம் என சொல்லாமல் விட்டிருந்தார்.

அன்று வேல்முருகன் ஜெகனது விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாமல் சரி என சம்மதித்திருந்தது….. அஞ்சனாவுக்கு தெரியாதே.  அழகு, படிப்பு, வசதி, எல்லாம் ஒரு சேர அஞ்சனா கிடைத்ததில் அவனுக்கு இரட்டிப்பு சந்தோஷம்.

என்ன ஒன்று… இவ்வளவு பணம், வசதியிருந்தும்…. அலட்டல் இல்லாமல் மிடில்கிளாஸ் மனிதர்கள் போல் இருந்தனர் வேல்முருகனின் குடும்பம்.

அதைப் பார்த்துதான் ஜெகனது வீட்டாருக்கு வருத்தமாக இருந்தது.  ஜெகனுக்கும் அதில் மாற்று கருத்து இல்லை.  இந்த கால கட்டத்திற்கு ஏற்றாற்போல நவ நாகரிகமாக… இருக்க வேண்டும் என விரும்பினார்கள் போல மாப்பிள்ளையின் வீடு.

அஞ்சனா கூட மிடில்கிளாஸ் குடும்ப பெண் போல பட்டுப்புடவையில் தலைவாரி… பூ வைத்து இருந்தது… பிடித்திருந்தாலும்…, இந்த காலத்திற்கு எற்றதுபோல் மாடர்னாக இருக்கவேண்டும் என ஆசைப் பட்டான் ஜெகன்.

வேல்முருகனின் குடும்பத்தையும்… ஜெகனின் குடும்பத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வாழ்க்கை முறையிலும்…, பழக்கவழக்கத்திலும்…., உடை விஷயத்திலும்…., ஏணி வைத்தால்கூட எட்ட முடியாது.

ஜெகனது வீட்டிலிருந்து வந்திருந்தவர்கள் எல்லாரும் அவ்வளவு நவநாகரிகமாக… ஸ்டைலாக இருந்தனர் பார்ப்பதற்கே.  அதுமட்டுமில்லை… அவர்களது பேச்சிலும்… நடத்தையிலுமே… டாம்பீகமும் நாசுக்கும் வெளிப்பட்டது.

ரோகிணிக்கு இவர்களது குடும்பத்தை பார்த்ததுமே பயம் வந்தது மனதில்.  இது என்ன…, இவங்களுக்கும் நமக்கும் ஒத்துவருமா….? என்ற யோசனை வந்திருந்தது அவருக்கு.

பெண் வாழ்க்கைபடும் இடம் வசதியாக…. இருந்தால் மட்டும் போதுமா….? மத்ததை எல்லாம் பார்க்கவேண்டாமா…..?  என்ற உறுத்தல் வந்திருந்தது.

ஜெகனுக்கு அஞ்சனாவை மிகவும் பிடித்ததால்தான் பேசி முடிப்பதற்காக குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து வந்திருந்தனர்.  ஜெகனுக்குமே அஞ்சனாவை திரும்ப பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்ததால் தான்…, இந்த முறையும் வந்திருந்தான்.

சென்ற முறையே அஞ்சனாவிடம் தனியாக பேச நினைத்தவனுக்கு அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.  இந்த முறை மிஸ் செய்யாமல் அவளிடம் பேசி…, அவளது விருப்பத்தையும் அறிய ஆவல் கொண்டிருந்தவனுக்கு… அவளது பதிலில் சப்பென்றானது.

ம்ம்… இவளை தேத்தறது ரொம்ப கஷ்டம்போல என மனதிலேயே கௌண்டர் கொடுத்துக் கொண்டவன், ஏதும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு வெளியேறியிருந்தான்.

வெளியில் பெரியவர்கள் நிச்சயத்திற்கு நாள் பார்த்து…. மற்ற சம்பிரதாயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

நிச்சயத்தை சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் வைத்துகொள்ள சொல்லி பேச்சு நடந்து கொண்டிருந்தது அங்கே.  வேல்முருகன் முழிபிதுங்கி அமர்ந்திருந்தார்.  நிச்சயம் பெண் வீட்டில்தான் செய்யவேண்டும் என சொல்லியிருந்தார்கள்.

வேல்முருகன் சரி என ஒப்புக்கொண்டார்.  அவர் தங்களது ஊரில் சுத்துப்பட்டில் இருக்கும் சொந்தங்களை எல்லாம் அழைத்து விமரிசையாக நடத்த எண்ணியிருந்தார்.

ஆனால் அவர்களோ இங்கு நடத்த ஒப்புக் கொள்ளவில்லை.  சரி திண்டிவனத்திலாவது… பெரிய திருமணமண்டபம் புக் செய்து நடத்தலாம் என்றாலும் அதற்கும் மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை.

அவர்களுக்கு இந்த கிராமத்தில்…. இவர்கள் நடத்தினால்…. எங்கே பட்டிக்காடு கணக்காக…. சாங்கியம்….. சம்பிரதாயம் என அலைகழிப்பார்களோ என்ற அச்சம் மனதில் இருந்தது மாப்பிள்ளை வீட்டினருக்கு.

மனதில் நினைத்ததை வெளிப்படையாக சொல்லாமல்…, எங்க ஆட்களுக்கு எல்லாம் இவ்வளவு தூரம் வந்து செல்வது கடினமாக இருக்கும்.  இங்கே நிச்சயம் வைத்தால்…. யாரும் அவ்வளவாக வரமாட்டார்கள்… என்று பூசி மழுப்பியிருந்தார்கள்.

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ரோகிணிக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது.  நிச்சயத்துக்கே இந்த அலப்பறன்னா…., இன்னும் கல்யாணம்….. மத்த விஷயத்துக் கெல்லாம் என்ன ஆர்டர் போடுவாங்களோ….? என அச்சமாக இருந்தது அவருக்கு.

அவர்களுக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை வேல்முருகனால்.  அவருக்கு யோசிக்க வேண்டியிருந்தது.  அவருடைய சொந்த பந்தத்திடம் கலந்து பேசிவிட்டு சொல்வதாக கூறியிருந்தார்.

அதுவும் மாப்பிள்ளை வீட்டுக்கு சரியாகப்பட்டதால்…. மேலும் அவரை வற்புறுத்தாமல்….. சரி என ஒப்புக்கொண்டு புறப்பட்டனர்.  புறப்படும் போது அஞ்சனாவிடம் சொல்லிக்கொள்ள அவளை வெளியே அழைத்தனர் எல்லோரும்.

வெளியே வந்த அஞ்சனா… அவளது அறையின் கதவைப் பிடித்து கொண்டு அங்கேயே நின்றுவிட்டாள்.  அவளிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர் மாப்பிள்ளை வீட்டினர் எல்லாம்.  அவள் வந்து நின்றதிலிருந்து கண்ணெடுக்காமல் அவளைத்தான் பார்த்திருந்தான் ஜெகன்.

புன்னகையுடன் தலையசைத்து நின்றிருந்தவளின் அருகில்…. சென்றவன்… அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்து நின்றான்.

அச்சோ இவர் என்ன எல்லார் முன்னாடியும் இப்படி பார்க்கிறார்…. என பயம் வந்தது அஞ்சனாவுக்குள்.

அவளையே விழியெடுக்காமல் பார்த்திருந்தவன்… “உன் கண்டிஷனுக்கு நான் ஒத்துக்கறேன் அஞ்சனா.  இப்ப உனக்கு சந்தோஷம்தானே…” என்றான் தோரணையாக.

என்ன கண்டிஷன்…?  எதைச் சொல்றான்…? என்று பார்த்தவளிடம்…  “நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் நீ வேலைக்கு போலாம்.  இப்ப உனக்கு சந்தோஷமா…?” என்றான் ஸ்டைலாக.

எல்லாம் நேரக் கொடுமை..டா…  ஏதோ இவன் பிச்சை போட்டு நான் வேலைக்கு போறமாதிரி…?  எல்லாம் என் அப்பாவ சொல்லனும்… என உள்ளுக்குள்ளேயே வேல்முருகனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.

ஜெகனுக்கோ, இப்பயாவது ஏதாவது பேசறாளா…?  அழுத்தம் பிடிச்சவ… என மனதிற்குள்ளேயே திட்டியவன்…, “என்னை உனக்கு பிடிச்சிருக்கான்னு… கேட்டதுக்கு… நீ பதிலே சொல்லாம மழுப்பிட்டே…” என குறைபட்டான்.

ஆனால், “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.  உன்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்பவே…  பிடிச்சுடுச்சு.  அன்னைக்கே உன்கிட்ட பேசனும்னு நினைச்சேன்.  முடியல…’’.

“உன்னை திரும்ப பார்க்கனும்னு ஆசைப்பட்டதாலதான் இன்னைக்கும் வந்தேன்”.

…………………..

“உன்னோட போன் நம்பர் வேணும்.  சொல்லு, அஞ்சனா…” என தன் போனை கையில் எடுத்தான்.

திரும்பி வேல்முருகனைப் பார்த்தாள் அஞ்சனா.  அவர் கண்ணை மூடித் திறந்து கொடு என சைகை செய்தார்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜெகனுக்கு எரிச்சலாக இருந்தது.  எல்லாத்துக்கும் அப்பா கிட்ட பர்மிஷன் கேட்டுட்டுதான் பண்ணுவா… போலிருக்கு.

திரும்பி அவனைப் பார்த்த அஞ்சனா, தனது மொபைல் நம்பரை அவனிடம் கொடுத்தாள்.  தனது போனில் அவளது நம்பரை சேவ் செய்தவன்…, அவளுடைய நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்து, சேவ் செய்ய சொல்லிவிட்டு சென்றுவிட்டான் வீட்டினருடன்.

அவர்கள் வீட்டிலிருந்து சென்றதும்தான் அஞ்சனாவுக்கு சுவாசமே சீரானது.  அதுவரை இயல்பாக இருக்கமுடியாமல்… இறுக்கமாகவே தவித்தவளுக்கு, மூச்சுகூட அனிச்சையாக விட முடியாமல் திணறலாக  இருந்தது.

ரோகிணிக்கும் அப்படிதான் இருந்தது.  இதை வாய்விட்டு வெளியில் சொன்னால்.. எங்கே அதற்கும்  மாமியார்  பேசுவாரோ… என பயந்தவர், யாரிடமும் எதையும் பேசவில்லை.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!