Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒற்றை ஜன்னல்

ஒற்றை ஜன்னல் – 10 . 2

மண்டபத்திற்கு வந்தவள் விழிகள் தன் குடும்பத்தைத் தேடியது அவள் கண்ணிலே அவர்கள் படவில்லை, கூர்ந்து கவனிக்க மண்டபத்தின் கடைசியில் ஒரு மூலையில் அமர்ந்திருந்ததனார் ‘ஏன் அங்க இருக்காங்க’ என்று எண்ணியவள் பார்கவிக்கு மெல்ல கைக்காண்பிக்க, அவள் தாயிடம் ஏதோ கூறிவிட்டு மேடைக்கு வந்து அக்காவின் அருகில் நின்றுகொண்டாள்.

 

 



Advertisement

“என்னாச்சு? ஏன் அங்க இருக்கீங்க” என்றாள் துளசி, பார்கவியின் முகமே சரியில்லை.

 

Advertisement

 

Advertisement

“என்ன பாரு…” என்க.

 

 

Advertisement

“இங்க கிடைக்குற மரியாதைக்கு இதுவே போதும்னு தோணுச்சு” என்றாள் அவள், அவளையும் தன் குடும்பத்தையும் ஒரு முறை அழுத்தமாகப் பார்த்தவள் அமைதியாக நின்றுகொண்டாள், ரிசப்ஷன் முடிந்து உணவுண்டு பாதி பேர் சென்றுவிட்டனர் கடைசி பந்தி நடந்துகொண்டிருந்ததது அது முடிந்ததும் பெண்ணும் மாப்பிள்ளையும் குடும்பமும் உண்ண வேண்டும்.

 

 

துளசி வெற்றியிடம் “நான் அங்க இருக்கேன்” என்றாள் அவள் குடும்பத்தைக் காட்டி “சரி” என்றவன் அவனின் தாய் தந்தையிடம் சென்று நின்றுகொண்டான்.

 

 

ஒரு பேச்சுக்குக்கூட அவளுடன்  வந்து அவர்களை அழைக்கவிலை பேசவில்லை துளசி அவர்களின் அருகில் செல்லச் சாந்தா விழிகளைத் துடைத்துக்கொண்டிருந்தார், மனதில் எங்கோ ஒரு வலி எழுந்தாலும் தாயிடம் எதுவும் பேசவில்லை துளசி.

 

 

துர்காவை விசாரித்துப் பிள்ளைகளைக் கொஞ்சியவள் “எங்கக்கா மாமா… உன் மாமியார் மாமனார் காணும்” என்றாள்.

 

 

“அவங்க வரல, கல்யாணத்துக்கு வந்தாங்களே திரும்ப இவ்ளோ தூரம் வரணும்,  மாமா வெளில நிக்குறாங்க” என்றாள் பட்டும் படாமலும்.

 

 

“சரி” என்றவள் பார்கவிக்கு கண் காண்பித்து கொஞ்சம் தள்ளிச்சென்றாள்,  சாந்தா தடுத்தும் பார்கவி எழுந்து அக்காவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

 

 

“என்ன பிரச்சனை” என்றாள் துளசி.

 

 

“வேண்டாம்… நீ கஷ்டப்படுவ” என்றவளை பார்த்துச் சிரித்த துளசி “ஆமா ஆமா… ரொம்ப கஷ்டப்படுவேன் ஏன்னா இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இனிமேதான் வருத்தம் வரப்போகுது” என்றவள் “சொல்லு” என்று அழுத்தமாகக் கேட்க.

 

 

“பாண்டிச்சேரி  பஸ் ஸ்டாண்ட் வந்துட்டு மாமா உன் மாமனாருக்கு கால் பண்ணாரு அங்கேயிருந்து எப்படி வரணும்னு கேட்க, அதுக்கு உன் மாமனார் வீட்டுக்கு வர வேண்டாம் இங்க யாருக்கும் சாப்பாடு இல்ல நீங்க ஹோட்டல்ல சாப்பிட்டு அப்படியே மண்டபம் போயிடுங்க அப்படின்னு சொன்னாரு, மாமாக்கு ரொம்ப அவமானமா ஆயிடுச்சு”.

 

 

“என்ன… திங்க சோறு இல்லாம இங்க வந்திருக்கேனா என்ன மாதிரி மனுஷன் இந்த ஆளு இப்படி மானங்கெட்டு அங்க போகணுமா அப்படின்னு அங்கேயே திரும்பப் பாத்தாரு அக்காவும் அம்மாவும் சமாதானப்படுத்தி அப்புறம்தான் கிளம்புனோம், யாருக்குமே சாப்பிட பிடிக்கல ஜூஸ் மட்டும் குடிச்சுக்கிட்டோம்”.

 

 

“நாலு மணில இருந்து மண்டப வாசல்ல நிக்குறோம் உன் மாமனார் மாமியாரே ஆறு மணிக்குத்தான் வந்தாங்க” என்றபோதே அவள் குரலில் கோபத்தை அடக்குவது புரிந்தது.

 

“சாப்டீங்களா” என்றாள் துளசி.

 

 

“இல்ல மாமா இங்க சாப்பிட வேண்டாம் சொல்லிட்டாரு நாங்க போற வழில சாப்பிட்டுக்குறோம்” என்றாள்.

 

 

“நீங்க ரோஷப்பட்டு வெளில சாப்பிடுவீங்க நான் சூடு சொரணை எல்லாத்தயும் வித்துட்டுல வந்திருக்கேன் அதனால இங்க கொட்டிக்கணும்” என்றவள் “அவ்ளோதானா விஷயம்” என்றாள் துளசி.

 

 

“உன் மாமனார் கூடப் பொறந்தவங்க ரெண்டு தங்கச்சி ஒரு தம்பி அந்தத் தம்பி வைப் நிறைய சொன்னாங்க” என்க.

 

“என்ன?” என்றாள் துளசி.

 

 

“இந்தப் பாண்டிச்சேரி வீடு பால் காச்சினப்போ தான் அவங்க எல்லாரும் இங்க வந்தாங்களாம் அதுக்கு அப்புறம் யாருமே இங்க வந்ததில்லையாம், யாரையுமே கூப்பிடவும் மாட்டங்களாம் சாப்பாடும் போடமாட்டங்களாம் வரும்போது சாப்பிட்டு வந்திடுங்கன்னு சொல்லுவாங்கலாம்”.

 

 

 

“ஒரே பையன் கல்யாணம் எங்க யாருக்குமே துணி எடுத்துக் கொடுக்கல,  எங்க வீட்டலலாம் நாங்க எல்லாருக்குமே எடுத்துக் கொடுத்தோம் அப்படின்னாங்க, அதோட எல்லா வருஷமும் கெட் டு கெதர் வைப்பாங்களாம் ஆனா ஒருதடவை கூட இங்கேயோ கடலூர்ல இவங்க வீட்டலயோ வெச்சதில்லயாம் எல்லார் வீட்டுக்கும் போய் வழிச்சு திங்குறதுதான் இவங்க வேலைன்னு கேவலமா அம்மா முன்னாடியே பேசினாங்க” என்க துளசிக்கு தொண்டை அடைத்தது.

 

 

 

“பொண்ண தள்ளிவிட வேற பாழும் கிணறு கிடைக்கலயான்னு அம்மாகிட்ட கேட்டாங்க,  உன் மாமியாரோட அம்மா உயிரோட இருக்காங்களாம் ஆனா உன் மாமியார் இதுவரைக்கும் அவங்கள கொண்டுவந்து வெச்சு பாத்துக்கிட்டது இல்ல, உன் மாமியாரோட தம்பியும் தங்கச்சியும்தான் மாத்தி மாத்தி பாத்துக்குறாங்க”.

 

 

“யார் வீட்டுக்குப் போனாலும் எந்தப் பொருளும் வாங்கிட்டு போகமாட்டாங்க வெறும் கையை வீசிட்டு தான் போவாங்க அது குழந்தைங்க இருந்தாக்கூட அப்படிதான் ஏன் பெத்த அம்மாவைப் பாக்க போனாலே அப்படித்தானாம்” என்றவள் விழிகள் வெற்றியின் மீது படிந்தது.

 

 

“இன்னும் வேறையென்ன” என்றாள் துளசி தொண்டையடைக்க.

 

“இல்ல வேற ஒண்ணுமில்ல” என்றாள் பார்கவி பதட்டமாக.

 

 

“சொல்லு பாரு… நீங்க எல்லாரும் போயிடுவீங்க உங்க அம்மா அமைச்சுக்குடுத்த வாழ்க்கையை இந்த உசிர் போறவரைக்கும் நான் வாழனுமே சொல்லு” என்றாள் பிடிவாதமாக.

 

 

“இவருக்கு மெடிக்கல் இருக்கு ஆனா வருமானம்…” என்று தயங்கியவள் “வருமானம் வெறும் இருபதினாயிரம் தானாம்… மாப்பிள்ளைக்கு இவ்ளோதான் சம்பளம்னு தெரிஞ்சுதான் இதுவரைக்கும் கல்யாணமே நடக்குல, இதெல்லாம் விசாரிக்கம பொண்ணை தூக்கி குடுத்திடீங்க என்ன… பொண்ணுக்கு லவ்…” என்றவள் அப்படியே நிறுத்தினாள்.

 

 

 

“சொல்லு” என்றாள் துளசி.

 

 

“இல்லக்கா…”.

 

 

“சொல்லு பாரு”.

 

 

“பொண்ணுக்கு லவ் அப்படி இப்படி ஏதாவது இருந்து அதனால இவனுக்குக் கட்டி வெச்சுடீங்களா அப்படினு கேட்டாங்க” என்க.

 

 

 

விழிகளை இறுக மூடிக்கொண்டாள் துளசி “துளசி… ரொம்ப அழகான பேர் உன்னை மாதிரியே…   எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு துளசி…   என்கூட வாழ்ந்துபாரு எனக்கு உன்னைப் பிடிக்குமா பிடிக்காதான்னு தெரியும்” என்றவன் குரல் உள்ளுக்குள் அவளை உடைக்க.

 

 

 

“ஆமாம் காதல்தான்… என் கண்முன்னாடியே காத்தோடு கரைஞ்சு போச்சு” என்ற துளசியின் விழிகள் நிற்காமல் பொழிய வேகமாக மணமகள் அறைக்குள் நுழைந்துகொண்டாள், பத்து நிமிடம் கடந்து வெளியில் வந்தவள் முகம் கழுகி எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல் வந்து நின்றாள்.

 

 

“துளசி வந்து சாப்பிடு உனக்குத்தான் வெய்ட் பன்றோம்” என்றாள் வெண்மதி.

 

 

துளசியின் விழிகள் தன் குடும்பத்தைப் பார்த்தது “அவங்க சாப்டங்கலாம்” என்றார் விஜயலக்ஷ்மி.

 

 

அவளுக்குத் தெரியுமே அவர்கள் யாரும் ஒரு துளி தண்ணீர் கூடக் குடிக்கவில்லை என்று அவளை நோக்கி வந்த சாந்தா “ஒரு நிமிஷம் சம்பந்தி பேசிட்டு அனுப்புறோம்” என்க, மற்றவர்கள் சாப்பிட சென்றனர்.

 

 

பிரேம் ஆனந்தி அங்கு ஹோட்டல் புக் செய்திருந்ததனர் ஆகையால் சித்தியையும் துர்கா மற்றும் குடும்பத்தையும் அழைக்கச் சேகர் வேண்டாம் என்று மறுத்த்துவிட்டான்.

 

 

 

“இல்ல பிரேம் நாங்க ஊருக்குப் போறோம்” என்று பிடியாக நின்றுவிட்டான்.

 

 

“துளசி” என்று அவள் கையைப் பிடித்த அன்னையை ஒரு நொடி பார்த்தவள் “அப்பாவை நல்லா பாத்துக்கோங்க, போறவழில சாப்பிட்டு போங்கக்கா” என்றவள் சேகரை பார்த்துத் தலை அசைத்தாள்.

 

 

சாந்தா அவளையே பார்த்துநிற்க அவர் கையை விலக்கிவிட்டு சாப்பாட்டு அறைநோக்கி நடந்தாள் துளசி, அவர்கள் இன்று இங்கேயே தங்கி நாளைப் பாண்டிச்சேரி சுற்றிபார்க்கவே வந்தார்கள் இப்பொழுது கோபத்தில் சேகர் புறப்படச் சொல்ல மகளும் பேசாமல் செல்லச் சாந்தா முதல்முறை தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தி அழுதார்.

 

 

“அக்காவோட வலிக்கும் கண்ணீருக்கும் முன்னாடி உன்னது ஒண்ணுமே இல்லம்மா” என்ற பார்கவி விழிகளை மூடிச் சீட்டில் சாய்ந்துகொண்டாள்.

 

 

விஸ்வநாதன் விஜயலக்ஷ்மி இருவரின் சொந்தங்களும் அப்படியே மண்டபத்திலிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர், இவர்கள் யாரையுமே வீட்டிற்கு அழைக்கவில்லை, இரவு அறையில் உடையைக் கூட மாற்றாமல் அமர்ந்திருந்தாள் துளசி.

 

 

“ஏய்… போய்க் குளிச்சிட்டு டிரஸ் மாத்து அப்படியே இருக்க” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் “எங்க வீட்டு ஆளுங்கள நீங்க ஏன் வாங்கன்னு கூடக் கூப்பிடல, அவங்க என்ன சோறு கிடைக்காம இங்க சாப்பிட வந்தாங்களா நம்ம வீட்டுக்கு வரவங்களுக்கு சாப்பாடு இல்லனாலும் வாங்க சாப்பிட்டு போங்கன்னு சொல்லிக் கடைல வாங்கியாவது குடுக்கணும்”.

 

 

“அவங்க உங்க வீட்டுக்குச் சம்பந்தகாரவங்க பொண்ணை குடுத்தவங்க அவங்களை வீட்டுக்கு வரவேண்டாம்னு ஏன் சொன்னாரு உங்க அப்பா” என்றாள் நிதானமாக அத்தனை கோபம் இருந்தும் மிகவும் பொறுமையாகச் சத்தம் இல்லாமல் கேட்டாள்.

 

 

“ஏய் சின்ன விஷயத்துக்கு எதுக்கு இவ்ளோ ரியாக்ட் பண்ற” என்றான் அவன்.

 

 

“சின்ன விஷயமா! இது சின்ன விஷயமா உங்களுக்கு என் வீட்டாளுங்க கிட்ட நீங்கப் பேசுனீங்களா அவங்கள வாங்கன்னு சொன்னீங்களா” என்க.

 

 

“அவங்க பொண்ணு ரிஸப்ஷனுக்குத்தானே வந்தாங்க அதுக்கு தனியா வேற கூப்பிடணுமா இப்படிலாம் இருக்கா என்ன?  சும்மா ஏதாவது நீயா சொல்லாத” என்றான் எரிச்சலாக.

 

 

“நீங்கக் கல்யாணத்துக்கு வந்தப்போ அவங்க எப்படி மரியாதையா நடத்தினாங்க அதே மாதிரி நீங்களும் செய்யணுமா இல்லையா என் கழுத்துல இதை நீங்கக் கட்டி ஒரு வாரம் ஆகுது, என்னைப் பத்தி ஏதாவது தெரியுமா உங்களுக்கு, என் அப்பா முடியாம கிடக்குறாரு ஒரு நாளாவது நீங்களோ உங்க வீட்டு ஆளுங்களோ அவரைப் பத்தி விசாரிச்சீங்களா” என்றாள்.

 

 

 

“வயசானா உடம்பு சரியில்லாம போறது சகஜம்தான், அதுதான் நீ தினமும் பேசுறியே அப்புறம் என்ன… நான் என் வீட்டுக்கே போன் பண்ணி பேசமாட்டேன் உன் வீட்டுக்கு நான் என்ன பேசுறது, நாங்க சரியாதான் இருக்கோம் நீயும் உன் குடும்பமும்தான் ஒண்ணுமில்லாத விஷயத்தை இவ்ளோ பெருசா பேசுறீங்க”.

 

 

“இப்போகூட நதியா எவ்ளோ அழுதா இங்க படுக்கணும்னு எல்லாரும் அவளைச் சமாதான படுத்தி நமக்கு ரூம் குடுத்தாங்க, அக்கா மாமா கூட அட்ஜஸ்ட் பண்ணி கீழ படுத்திருக்காங்க நீ அவங்களையே குத்தம் சொல்ற, கல்யாணம் பண்ணிட்டாலே உங்க இஷ்டத்துக்கு நாங்க ஆடணுமா ரொம்ப பேசாம ஒழுங்கா படு” என்றவன் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டான்.

 

 

லைட்டை அமர்த்திவிட்டு வெளியில் இறங்கிய துளசி மொட்டைமாடியில் ஒரு மூலையில் தெருவைப் பார்த்துக் கிடந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்துகொண்டாள்.

 

 

“ப்பா… என்ன மரியாதையான ஆளுங்க இல்லம்மா, ஊரும் சூப்பர்” என்ற பிரேம் “துளசி வா வா இப்போதான் வந்தோம் செஞ்சி போயிட்டு வரோம்,  உக்காரு ஊரு ரொம்ப நல்லா இருக்குடா ரொம்ப கிராமமும் இல்ல டவுனும் இல்ல கொஞ்சம் உள்ள போகணும்”.

 

 

“நல்லா பெரிய வீடு அந்தக்கால வீடு, நிறைய இடம் தோட்டம் வீட்டுக்கு முன்னாடியே மல்லிக பந்தல் அப்படியே பூத்து குலுங்குது செடியே தெரியல அவ்ளோ பூ,  நிறைய மரம் இருக்கு நல்லா பாத்துக்குறாங்க இவங்க இங்க இருக்குறதால அங்க ஆளு வெச்சு பாத்துக்குறாங்க”.

 

 

 

“அவ்ளோ சொந்தம் வந்து கூடிடுச்சு நாங்க போகும்போது, சாப்பாடு ரொம்ப அருமை அசையவே முடியல இல்ல ஆனந்தி” என்க.

 

 

“ஆமாம் துளசி அவ்ளோ நல்லா இருந்துச்சு ரொம்ப நல்லா பழகுறாங்க எல்லாரும், தமிழோட சொந்தக்காரங்களை ஞாபகம்  வெச்சுக்கவே நீ பேமிலி ட்ரீ போடணும்” என்று சிரித்தாள்.

 

 

“வண்டி நிறைய காய் பழம் அது இதுனு நிரப்பிட்டாங்க” என்றான் பிரேம், சாந்தா நிறைவான புன்னகையோடு அமர்ந்திருக்க ப்ரியா ஜெயந்தி முகங்கள் மட்டும் கடுகடுவென்று இருந்ததது இவளுக்கு இப்படியொரு வாழ்வா என்று.

 

 

“ஒருநிமிஷம்” என்ற ஆனந்தி ஒரு சிறு கூடையை எடுத்துவந்தாள் வாழையிலை போட்டுக் கட்டி வைத்திருந்தனர், அதைத் துளசியின் கையில் கொடுத்தவள் “தமிழ் உனக்காகக் குடுத்தார் அவங்க வீட்டில பூத்தது அவரோட சித்தி அத்தை, அத்தை பொண்ணுங்க அப்படினு ஒரு கூட்டமே ஒக்காந்து கட்டினுச்சு” என்றவள்.

 

 

“பாரு எங்க தலையில்கூட எவ்ளோ பூ” என்றாள்.

 

 

வெட்க சிரிப்போடு அதை ஆசையாக வாங்கிக்கொண்டவள் வேகமாக உள்ளே சென்றாள், இலையைப் பிரித்து எடுக்க மல்லியின் வாசம் அந்த அரை முழுதும் சுகந்தம் பரப்பியது மேலே ஒரு துண்டுக் காகிதம் படபடக்கும் இதயத்தோடு அதை எடுத்துப் பிரித்தாள் துளசி.

 

 

“இதை நானே உனக்கு வெச்சுவிடணும்னு ரொம்ப ஆசையா இருக்கு ஆனா இப்போ முடியாதே, தலை நிறையா வெச்சுக்கோ கல்யாணத்துக்கு அப்புறம் செஞ்சி போகும்போது நானே கட்டி உனக்கு வெச்சுவிடுவேன், பூக்கட்டகூட கத்துக்கிட்டேன் உனக்காக… சீக்கிரம் வந்துடு துளசி” என்று முடிந்திருந்தது.

 

 

“தமிழ்…” என்று முகத்தை மூடி விம்மினாள் துளசி.

 

 

“ஏன் என் லைப்ல வந்தீங்க தமிழ்… ஏன் என் மனசுல ஆசைகளை விதசீங்க… நான் ஏன் எல்லாத்திலயும் உங்கள தேடுறேன் தமிழ்… என்னைவிட்டு போங்க போங்க” என்று சுவரோடு தலையை முட்டிக்கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!