Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் – 8

அத்தியாயம் 8:

கதவு திறந்த சத்தத்தில் அதிர்ந்து திரும்பிய சுதா, அங்கு நின்ற ஆதியை பார்த்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தவள், பிறகு அழ ஆரம்பித்தாள்.

ஆதி அவனின் மொபைலை எடுத்து அவன் அப்பாவிற்கு அழைத்தான்

“என்ன தம்பி இந்நேரத்தில கூப்புடுறீங்”



Advertisement

“அப்பா. அம்மாவையும் கூட்டிட்டு என் ரூமுக்கு வாங்கங்ப்பா”

“என்னய்யா என்ன பிரச்சனை, எனக்கு பதறுதல்லோ”

“அப்பா ஒன்னுல்ல. நீங்க வேற யாரையும் எழுப்பிடாதீங். அம்மாவை மட்டும் கூட்டிட்டு வாங்கங்ப்பா” என்றதும் சிறிது நேரத்தில் ஈஸ்வரனும் சிவகாமியும் பதறி அடித்து எழுந்து வந்தனர்.

Advertisement

ஆதி கதவு திறந்ததும் உள்ளே வந்தவர்கள் அழும் சுதாவையும், தூக்கு மாட்டியிருந்த புடவையையும் பார்த்து விட்டு உறைந்து போனார்கள்.

Advertisement

சிவகாமி வேகமாக சுதாவின் அருகில் சென்றவர் “என்ன கண்ணு இதெல்லாம்” என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

ஆதிதான் “சாவுறதா இருந்தா உன் வீட்லயே சாவ வேண்டியதுதான. என் வீடுதான் கிடைச்சுதா உனக்கு” என்றான்.

அவனை அமைதிப்படுத்திய ஈஸ்வரன் “என்னம்ணி பண்ணி வச்சிருக்க. ஏதாச்சும் கெட்டது நடந்துருந்தா உன்ர ஆத்தாளுக்கு நா என்ன பதில் சொல்லுவேன்” என்று தலையில் கைவைத்து அங்கிருந்த சேரில் அமர்ந்தார். அவரின் காலில் விழுந்த சுதா,

Advertisement

“என்ன மன்னிச்சுருங் மாமா. எனக்கு வேற என்ன பண்றதுன்னு தெரியலீங். நா நம்ம வீட்ல வேல செய்றாரே பொன்ராசு மாமா, அவரோட பையன் மனோரஞ்சனை லவ் பண்றேனுங் மாமா” என்றுவிட்டு கதறி அழுதாள்.

“இந்த விஷயம் உன்ர ஆத்தாளுக்கும் ஐயனுக்கும் தெரியுமா” என்றார் சிவகாமி.

“தெரியுங்கத்தை. மனோ வந்து பொண்ணு கேட்டதுக்கு அப்பா அடிச்சு விரட்டிட்டாருங்”

“நாங்க நிச்சயம் பண்ண வந்தன்னைக்கே எங்கட்ட நீ சொல்லிருக்கலாமல்லோ கண்ணு”

“யார்ட்டயாவது சொன்னா ரெண்டு பேரும் விஷத்தை குடிச்சுட்டு, சுகந்திக்கும் சாப்பாட்டுல கலந்து குடுத்துடுவோம்ன்னு நேத்து வரைக்கும் என்ன மிரட்டி வச்சுருந்தாங் அத்தை. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலீங்”  என்று அழுதாள் சுதா.

இயல்பிலேயே மிகவும் அமைதியானவள் சுதா. பயந்த சுபாவமும் கூட. இவள்  எப்படி லவ் பண்ணியிருப்பாள். அந்த அளவுக்கு தைரியம் இருந்ததா இவளுக்கு என்றுதான் யோசித்தனர் மூவரும்.

“ஏன் இப்ப தூக்கு மாட்ட தெரிஞ்ச உனக்கு, உங்க வீட்ல மாட்ட தெரியலையோ” என்றான் ஆதி

“சாவறதுக்கு கூட என்ன விடலீங் மச்சான். இருபத்திநாலு மணி நேரமும் காவல் இருந்தாங்க” என்று அழுதவளை கண்டு கொஞ்சமும் இரக்கம் வரவில்லை ஆதிக்கு.

லவ் பண்ண தைரியம் இருந்தவளுக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கொள்ள தைரியம் இருந்திருக்க வேண்டுமல்லவா. இன்று இங்கு எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் யாருக்கு என்ன பதில் கூற முடியும்.

சின்ன வயதிலிருந்து பார்த்தவள். தன்னை போலத்தான் அவளும், மாமன் மகன் என்பதால் கல்யாணத்திற்கு சம்மதித்திருப்பாள் என நினைத்து அவள் சம்மதத்தை நேரில் கேட்காமல் விட்ட தன மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டான் ஆதி.

ஆதி சுதாவிடம் “நா தாலி கட்டறவரைக்கும், உன்ன காதலிச்சவன் என்ன பண்ணிக்கிட்ருந்தான்” என்றான்.

“அவர் பேர்ல தப்பில்லங் மச்சான். அவங்க வீட்லயும் அப்பாக்கு பயந்துக்கிட்டு எங்க காதலுக்கு ஒத்துக்கலங்க. மனோ ரெண்டு நாள் முன்ன வரைக்கும் தனியா அப்பாட்ட வந்து தகராறு பண்ணிருக்காருங்க. அப்பா ஆளுங்கள வச்சி அவர் கால உடைச்சி போட்டாருங் மச்சான்” என்று சொல்லிவிட்டு ஓவென அழுதாள்.

சிறிது நேரம் யோசனை செய்த ஆதி “சரி. நா உனக்கு தாலி கட்டிட்டேன். நைட் இங்க தங்கிட்ட. நாளைக்கு போய் உன்ன அவனை கல்யாணம் பண்ணிக்க சொன்னா ஒதுக்குவானா, இல்ல சந்தேகப்படுவானா” என்றான்.

தம்பி என்றழைத்த சிவகாமியையும், ஐயா என்று அழைத்த ஈஸ்வரனையம் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு சுதாவை பார்த்தான் ஆதி.

“அவரு சந்தேகம்லாம் பட மாட்டாருங் மச்சான். ஆனா இதெல்லாம் நடக்கிற காரியமா. முதல்ல எங்க அப்பா ஒத்துக்க மாட்டாருங். ஊரு உலகம் வேற என்ன சொல்லும்”

“ம்… நீ இப்ப செத்து போயிருந்தீன்னா அதே ஊரு உலகம் என்னை என்ன சொல்லும்” என்று கடுப்படித்தான் ஆதி.

ஈஸ்வரன் “இதெல்லாம் என்னங் தம்பி. கல்யாணம்ன்னா விளையாட்டு விஷயமா. காலம் எல்லாத்தையும் மறக்கடிக்கும் கண்ணு. கொஞ்ச நாள் ஆற போட்டு அப்புறம் சேந்து வாழ” என்று சொல்ல போனவரை முடிக்க விடாமல் “அப்பா” என்று கோபமாக தடுத்து நிறுத்தினான் ஆதி.

“உங்களுக்கு புரியலையா. என்ன கல்யாணம் பண்ணதுக்காக ஒருத்தி தூக்குல தொங்க போயிருக்கா. கேட்டா ஒருத்தன காதலிச்சேன்னு சொல்லல, காதலிக்கிறேன்னு சொல்றா. அவளோட  போய்…. என்னால முடியாதுங்கப்பா” என்றவனை பயந்து போய் பார்த்தனர் ஈஸ்வரனும் சிவகாமியும்.

“தாலி கட்டிட்டா என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு தான மாமா இப்படி பண்ணிருக்காருங். நாளைக்கு மறுவீடு போக வேற யாரையும் அழைச்சிட்டு போக வேண்டாம். நம்ம நாலு பேர் மட்டும் போவோம்” என்று விட்டு வேறு அறைக்கு தூங்க சென்றுவிட்டான்.

மறுநாள் தில்லை நாயகத்திடம் “ஏன் இப்படி பண்ணீங்க. நேத்து உங்க பொண்ணுக்கு ஏதாச்சும் ஆயிருந்தா இந்நேரம் நா ஜெய்ல்ல இருத்துருக்கணும்”  என்றான் ஆதி.

அதற்கு தில்லை நாயகம் கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் “மாப்ள. அவ என் பொண்ணு இல்லீங். உங்க பொண்டாட்டியாக்கும். எது நடந்திருந்தாலும், நா அவள உங்களுக்கு தாரை வார்த்தை கொடுத்திட்டனுங். இனிமே நீங்களாச்சு. உங்க பொண்டாட்டியாச்சுங்” என்றவரை கடுமையாக முறைத்தவன்

“அவ மனசுல வேற ஒருத்தன நினைச்சுக்கிட்ருப்பா. தாலி கட்டிட்டா நா அவளோட குடும்பம் நடத்தணுமா. எனக்கு அப்படி ஒன்னும் அவசியம் இல்லீங்”

“இப்ப நா என்ன செய்யோணும்ன்னு சொல்றீங் மாப்ள”

“நா அவளை டைவர்ஸ் பண்றேன். நீங்க அந்த பையன்கிட்ட பேசி அவனுக்கே அவளை கல்யாணம் பண்ணி வைங்க” என்றதும், இதுவரை அமைதியாக இருந்த ஆதியின் அத்தை பரிமளா போய் சுதாவை அடிக்க ஆரம்பித்தார்.

“தாலி கழுத்துல ஏறி ஒருநா கூட ஆகல. அதுக்குள்ளாற விவாகரத்து அது இதுன்னு பேச்சு வந்துட்டு. அப்படி என்னடி காதலு. கழுத்துல தாலி ஏறினதுக்கப்றம் இன்னொருத்தன் நினைப்பு உனக்கு என்னத்துக்குடி” என்று கேட்டு அடித்தவரிடம் ஆதி

“ஏனுங் அத்தை. இவ்ளோ நடந்திருக்கு. நீங்களாவது உண்மைய சொல்லிருக்கலாம்ல”

“இல்ல கண்ணு. இவ பொறந்ததோட்டம் உனக்குத்தேன் இவளை கட்டி வைக்கோணும்ன்னு எனக்கு ஆசை. உன்னைய விட நல்ல புருஷன் இவளுக்கு கிடைப்பானா கண்ணு. அது இந்த புள்ளைக்கு புரியலையே” என்று புலம்பினார் பரிமளா.

ஆதி முடிவாக தில்லையிடம் “நா டைவர்ஸ் பண்ணத்தான் போறேன் மாமா. அப்புறம் உங்க விருப்பம்” என்றான்.

தில்லையும் அலட்டி கொள்ளாமல் “நீங்க டைவர்ஸ் பண்ணாலும் அவ கடைசி வரை உங்க பொண்டாடித்தேன் மாப்ள. வேற யாருக்கும் நா அவள கட்டி கொடுக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக கூறினார்.

அவரிடம் வேறு ஒன்றும் பேசாமல் சுதாவை அழைத்து கொண்டு கிளம்பி விட்டான் ஆதி. ஆனால் அவளை விவாகரத்து பண்ண போவதாக ஈஸ்வரன், சிவகாமியிடம் தெளிவாக கூறிவிட்டான்.

மறுநாள் சுதாவின் காதலன் மனோ ரஞ்சன் வீட்டுக்கு சென்றான். அவன் தந்தையும் தாயும் இவனை பார்த்து பயந்து போயினர். பல வருடங்களாக சுதாவின் அப்பாவிடம் வேலை பார்த்ததால் மனோ அப்பாவிற்கு ஆதியை தெரிந்திருந்தது.

அவர்களும் இவர்கள் இனம்தான். பட்டம்தான் வேறு. ஆனால் பெரிதாக சொத்து பத்து கிடையாது. பழைய ஓட்டு வீடுதான்.

மனோ சுதாவின் காலேஜ் சீனியர். படித்து விட்டு சிறிய வேலையில் சேர்ந்திருந்தவனும் இந்த காதல்  பிரச்சனையில் வேலையை விட்டு வந்திருந்தான்.

ஆதி அவன் வீட்டுக்கு சென்றபோது காலில் கட்டுடன் படுத்திருந்தான் மனோரஞ்சன். அவன் தந்தைதான் “ஏனுங் தம்பி இங்க வந்துருக்கீங். ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைங்க” என்றார்.

மனோ ஒன்றும் பேசாமல் ஆதியை திரும்பியும் பார்க்காமல் விரக்தியுடன் படுத்திருந்தான்.

ஆதி நேரடியாக “நா சுதாவ டைவர்ஸ் பண்ணா, நீ அவள கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்கியா” என்றதும் ஆச்சரியமாக ஆதியை திரும்பி பார்த்தான்.

இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த மனோவின் அம்மா ராதா “ஏனுங் தம்பி. கல்யாணம் முடிஞ்ச பிறகு இது எதுக்கு தேவையில்லாத வேலைங்க. இப்படியே விட்டா கொஞ்ச நாள்ல இவனே எல்லாத்தையும் மறந்து போடுவான்” என்றார்.

அதற்கு ஆதி “அத உங்க பையன் சொல்லட்டும்ங்ம்மா. கல்யாணம் முடிஞ்சதனால பிரச்னை முடிஞ்சதா நீங்க சொல்றீங்க. நா ஒரு கயிற கட்டிட்டேங்கிறதால மேஜிக் மாதிரி இவங்க ரெண்டு பேரும் மனசுக்கு புடிச்சவங்கள மறந்துடுவாங்களா. சுதா நேத்து நைட் தூக்கு மாட்டி தற்கொலை பண்ண போயிட்டா. அவ மனசுல இவன பத்தின நினைப்பு ஸ்ட்ராங்கா இருக்கும் போது, என்னால அவள மனைவியால்லாம் நினைக்க முடியாது. எப்படி இருந்தாலும் நா அவள டைவர்ஸ் பண்ணத்தான் போறேன். அவ என் அத்தை பொண்ணு. சின்ன வயசுலேந்து தெரியும். டைவர்ஸ் பண்ணி அவள அப்படியே விட முடியாது. உங்க பையன் கல்யாணம் பண்ணிக்கலன்ன்னா அவளுக்கு வேற என்ன வழின்னு நா யோசிக்கணும்” என்றவனின் கைகளை பற்றி கொண்டு கண்ணீர் விட்டான் மனோ.

“சார். நேத்துலேந்து எனக்கும் தற்கொலை பண்ணிக்கணும்ன்னுதான் எண்ணம். கால் நல்லாருந்தா மே பீ பண்ணிருப்பேனோ என்னவோ. வாழ்க்கையே முடிஞ்சிட்டுன்னுதான் நினைச்சிக்கிட்ருந்தேன் இப்ப வரைக்கும். ஆனா நீங்க வந்து என் வாழ்க்கைய திருப்பி தரேன்னு சொல்றீங்க. ரொம்ப நன்றி சார். என் கால் நல்லாருந்தா உங்க கால்லயே விழுந்திருப்பேன்”

“இப்ப இவ்ளோ பேசற நீ முன்னாடியே என்ன பாத்து பேசிருக்கலாம்ல”

“நா உங்கள பாக்க உங்க சுகர் பாக்ட்ரிக்கு வந்தேன் சார். நீங்க அன்னைக்கு ஒருத்தன, உனக்கு காதல் கேக்குதான்னு கையை உடைச்சிகிட்டு இருந்தீங்க. அதை பாத்துட்டு உங்கலுக்கு காதல் பிடிக்காதுன்னு திரும்பி வந்துட்டேன்”

அவன் சொல்வது என்னைக்கு என்று யோசித்த ஆதிக்கு மல்லிகாவின் அத்தை மகன் சதீஷை அடித்த நியாபகம் வந்தது.

“ஓ நா அன்னைக்கு அடிச்சவன் தினமும் ஒரு புள்ளைக்கு லவ் லெட்டர் கொடுப்பான். அன்னைக்கு கூட பன்னெண்டு வயசு புள்ளைக்கு மிரட்டி லவ் லெட்டர் கொடுத்துட்ருந்தான். அதை பாத்துட்டு தான் அவன் கைய உடைச்சேன். நீ அதை பாத்துட்டு வந்துருக்க. ஒரு காரியம் செய்ய நினைச்சா எவ்ளோ தடங்கல் வந்தாலும் செஞ்சு முடிக்கோணும். நாமளா ஒன்னு நினைச்சி பாதியில விட கூடாது. அன்னைக்கே நீ என்ன பாத்து பேசிருந்தீன்னா பிரச்சனை இவ்ளோ தூரம் போயிருக்காது” என்று விட்டு கிளம்பினான்.

சொன்னது போல் விவாகரத்தும் செய்தான். இருவரும் சேர்ந்து வாழவே ஆரம்பிக்காததாலும், பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து கேட்டதாலும் ஈசியாக கிடைத்தது.

முதலில் சும்மா மிரட்டுகிறான் என்று அலட்சியமாக விட்ட தில்லை நாயகம், பிறகு எவ்வளவோ ஆதியிடம் கெஞ்சி பார்த்தார். அவன் மசியவில்லை என்றதும் சாதி சனத்தை கூட்டி பஞ்சாயத்து வைத்தார் வீட்டிற்குள்ளேயே.

ஆரம்ப தப்பு அவரது என்பதனால் ஆதியிடம் யாராலும் அவருக்கு சப்போர்ட்டாக பேச முடியவில்லை.

விவாகரத்து கிடைத்த பிறகு பிறகு வேறு வழியில்லாமல் மனோவிற்க்கே கட்டி வைக்க சம்மதித்தார். இன்னும் இரு மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது.

இதற்கு இடையில் ஆதி மனோவுக்கு நல்ல வேலையும் வாங்கி கொடுத்திருந்தான் சென்னையில் உள்ள தன் நண்பர்கள் மூலமாக. இப்பொழுது புதிதாக மாடி வீடும் கட்டி முடித்துவிட்டான் மனோ. அதனால் ஒரு வழியாக ஏற்று கொண்டார் தில்லை நாயகம், என்று கதையை சொல்லி முடித்தான் வசந்த்.

ஆச்சர்யமாக கதையை கேட்ட சந்தியா “பரவால்லண்ணா உங்க மச்சான். ப்ராக்டிகலா ரொம்ப கஷ்டமான விஷயத்தை நடத்தி காட்டிருக்கார். ரொம்ப வித்தியாசமானவர்தான்” என்றாள்.

“ஆமா கண்ணு. எல்லாத்திலையும் ஜெயிக்கிறவன, எப்படா கீழ விழுவான் நாம பேசி பாத்துடாலான்னு சில பேர் இருப்பாங்க. அப்படி நிறைய அவமான படுத்துற மாதிரி பேசுனானுங்க. எதையும் கண்டுக்காம விட்டாலும், இனி திரும்ப கல்யாணமே வேண்டான்னு சொல்லி போட்டான் ஆதி. அவன எப்படி நீ சம்மதிக்க வைக்க போற கண்ணு. அவன் நெம்ப அழுத்தக்காரனாக்கும்”

“அதெல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான் அண்ணா. இப்ப உங்க மேட்டருக்கு வருவோம். கௌரிக்கு ஏன் நீங்க ஓகே சொல்லல” என்று திடீரென இவன் பேச்சை ஆரம்பித்ததும் ஜெர்க்கானான் வசந்த்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பிறகு “அது எதோ சின்ன புள்ளதனமா உளறினா நாம பெருசா எடுத்துக்கலாமா கண்ணு”

“பதினாறு வயசுல உளறிருப்பா. ஆனா அவ இப்பவுமா உளறுவா”

“அதெல்லாம் சரியா வராது கண்ணு. அவங்க பெரிய இடம். முக்கியமா ஆதியோட  தங்கச்சி வேற”

“ஓ உங்க ஆதி மச்சான் உங்கள கவர்ன்மெண்ட் வேலைக்கு ட்ரை பண்ண சொன்னாராம்ல. ஏன் நீங்க வேண்டாம்ங்கிறீங்க”

“அது என்னத்துக்கு கண்ணு. நம்ம வயல்லயே உழைப்ப போடறத விட்டு போட்டு, இன்னொருதன்ட்ட எதுக்கு கை கட்டி நிக்கோணும்”

“நீங்க நைன் டு பைவ் வேலை பாத்துட்டு அப்படியே உங்க வயலையும் பாத்துக்க வேண்டிதான. பணத்துக்காக சொல்லல. க்ரூப் டூ எக்ஸாம் எழுதி ஆபிசர் கேடர்க்கு ஒரு வேல வாங்கினீங்கன்னா, கௌரி அம்மாட்ட, அதாவது அவர் சித்திட்ட பேசறதுக்கு சுலபமா இருக்கும்ன்னு அவரு நினைச்சிருக்கலாம்” என்றதும் பலமாக யோசித்தான் வசந்த்.

“ஓ அதனாலதான் மச்சான் பிடிவாதமா என்ன வேலைக்கு போக சொல்றான்னு சொல்றியா நீ”

“அப்படியும் இருக்கலாம். தகுதியோட இருந்தா அப்புறம் யாரு எங்கண்ணன வேண்டாம்னு சொல்ல முடியும். அப்புறம் அவங்களே தேடி வந்து பொண்ணு குடுப்பாங்கள்ல” என்று கொளுத்தி போட்டாள் சந்தியா.

“சரி கண்ணு. உன்ர ஆசைக்காக நா கட்டாயம் வேல வாங்குறேனாக்கும்”

“ஓ அப்ப கௌரி மேல ஆசை இல்ல. என்ர ஆசைக்காகத்தான் செய்ய போறீங்க”

“ஹா ஹா. நீ பயங்கரமான ஆளு கண்ணு. என்ர மச்சான் உன்னட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட போறானோ” என்று கவலை பட்டான் வசந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!