Skip to content
Post Views: 16,623
அத்தியாயம் 25
காலை ஆறு மணிபோல் விஷாலினி எழுந்துகொள்ள, விஷ்ணுவர்தன் இல்லை. ஜாகிங் சென்றிருப்பான் என்று குளித்து வெளியே வந்தாள். “விஷாலினி” என்று உற்சாக குரல் கொடுத்தபடி காவ்யா வர, தனதறைக்கு அக்கா வரமாட்டார்களே என்று தற்போதுதான் சந்தேகம் வந்தது.
விஷாலினியின் யோசனையான முக பாவனையில் “நேத்து நைட் பதினொரு மணிக்கே விஷ்ணு கிளம்பிட்டான்ம்மா, அர்ஜண்ட் வேலையாம்” என்றார் கோபாலன்.
மனம் மிகுந்த ஏமாற்றமாய் உணர, அதை அவளின் முகமும் காட்டியது. “ப்ச் கமான் விஷாலினி, விஷ்ணு வேலையைப் பத்தி உனக்கு தெரியாதா என்ன?” என்று தேற்ற முயன்றாள் காவ்யா.
Advertisement
“இதோ வரேன்க்கா” என்று உள்ளே சென்று மொபைலை உயிர்பிக்க, விஷ்ணுவிடமிருந்து செய்தி காத்திருந்தது. “அர்ஜண்ட் வேலை விஷாலினி, டீப் ஸ்லீப்ல இருந்த. அதான் எழுப்பல. பத்து மணிக்கு மேல கால் பண்றேன்” என்றிருந்தான்.
இவள் விஷ்ணுவிற்கு அழைக்க, விஷ்ணு அழைப்பை ஏற்கவில்லை. பத்து மணிக்கு விஷ்ணு அழைக்காமல் போகவே, ஒரு மணிநேரம் வரை காத்திருந்து, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் இவள் அழைத்தாள். தற்போதும் அழைப்பை ஏற்கவில்லை விஷ்ணுவர்தன்.
கோபாலனிடம், “மாமா என்னை விழுப்புரம் கூட்டிட்டு போய் விடுங்க” என்றாள் கோரிக்கையாக.
Advertisement
“கிளம்பும்போதே உன்னையும் அழைச்சிட்டு போகத்தான் சொன்னேன்ம்மா, அங்க அழைச்சிட்டு போனா பகலெல்லாம் நீ தனியா இருக்கிற மாதிரி இருக்குமாம். தினமும் லேட்டாதான் வருவானாம். அதனால இங்கையே இருக்கட்டும்னுட்டான்” என்றார்.
Advertisement
“பரவால்ல மாமா, நான் தனியா இருந்துப்பேன், புக்ஸ் எடுத்துட்டு போறேன், என்ட்ரன்ஸ்க்கு படிச்சா டைம் போறதே தெரியாது”
“இல்லைம்மா, விஷ்ணு காரணமில்லாம அப்படி சொல்லமாட்டான்” எனும்போதே விஷாலினிக்கு கண்கள் கலங்கிட, தாள முடியாமல் “சரிம்மா கிளம்பலாம்” என்றார் கோபாலன்.
“வீட்டுக்கு போய் புக்ஸ் எடுத்துட்டு வந்திடறேன் மாமா” என்று உற்சாகத்தோடு அன்னையிடம் வந்தவள் விசயத்தை சொன்னவாறு புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
Advertisement
“விஷ்ணுகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு போலாம்ல விஷாலினி, அங்க என்ன சூழ்நிலையோ?” என்றார் மேகலை.
“என்ன சூழ்நிலையா இருந்தாலும் என்னை பார்த்துப்பார், நான் போறேன்ம்மா” என்றாள் கெஞ்சலாக.
“சரி” என்று மகளின் உடைகளை எடுத்து வைத்தார் மற்றொரு பையில்.
பையை எடுத்துக்கொண்டு வந்தவள், “டிரைவர் அண்ணாக்கு கால் பண்ணுனிங்களா மாமா?” என்றாள்.
அவசரத் தேவைக்கும், பூர்வீகமான செங்கற்பட்டுக்கு செல்வதாக இருந்தால் தந்தையால் நிறைய நேரம் கார் ஓட்ட முடியாதென்றும் டிரைவரை ஏற்பாடு செய்திருந்தான் விஷ்ணுவர்தன்.
தற்போது உடல்நிலை சீராக இருக்கவே “இல்லம்மா, நானே ஓட்டுறேன்” என்றார் கோபாலன்.
“வேண்டாம் மாமா, மூனு மணிநேரம் ஓட்டினா ரொம்ப டையர் ஆகிடுவிங்க” என்று டிரைவருக்கு அழைத்தாள். கால் மணி நேரத்தில் டிரைவர் வரவே இருவரும் கிளம்பினர் விழுப்புரத்திற்கு.
*** *** *** ***
காவ்யாவின் மொபைல் ஒலிக்கவே, “காவ்யா போன் அடிக்குது, சீக்கிரம் வா, எவ்வளோ நேரம் குளிப்ப?” என கடுகடுத்தார் பிரபாவதி.
பத்து நிமிடம் கழித்து குளித்து வந்து பார்க்க, திவாகர்தான் அழைத்திருந்தான்.
பெங்களூரில் காவ்யா தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று திவாகர் விசாரித்ததை நேற்றே காவ்யாவின் டிரைவர் சொல்லியிருந்தார். சென்னையில்தன் இருக்கிறேன் என்று தற்போது தெரிந்திருப்பான். சந்திக்கவே அழைக்கிறான் என்று புரிந்த போதும் மொபைலையே பார்த்திருந்தாள் காவ்யா.
கம்பெனியில் இருந்த திவாகருக்கோ வேலையில் கவனமில்லை. வீட்டில் பேசியதை காவ்யாவின் அன்னை சொல்லியிருப்பார். ஆனாலும் காவ்யா அழைப்பை ஏற்கவில்லை. எனில் தன்னோடு சேர விருப்பமில்லையோ என்ற பதட்டம் தொற்றிக்கொண்டது.
எங்கே கோர்ட்டில் வைத்து தனக்கு திவாகரோடு வாழ விருப்பமில்லை என்றிடுவாளோ என்று பயம் வந்தது. இன்னும் இரண்டு நாள்களுக்குள் காவ்யாவை சந்தித்தாக வேண்டும், இல்லையேல் ஃபோனிலாவது பேச வேண்டும்.
ஆனால் காவ்யாவின் கைப்பேசி எண் தவிர்த்து அவள் குடும்பத்தில் யார் எண்ணும் தெரியாது ஆதலால், காவ்யாவின் அன்னையை மீண்டும் நேரில் சந்திக்கலாமா என்று யோசித்திருந்தான் திவாகர்.
விஷ்ணு வீட்டில் இருப்பாரா என்ற பயமும் இருந்த போதும் வேறு வழியில்லாமல் காவ்யா வீட்டிற்கு கிளம்பினான். பதினொரு மணிபோல் திவாகர் வர, அந்த நேரம் வழக்கம்போல் மேகலையும் பிரபாவதியும் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
திவாகரை கண்டதும் “வாங்க தம்பி” என்று இன்முகமாய் வரவேற்றார் பிரபாவதி. கேட்டினுள் வந்தவன் வீட்டிற்குள் செல்லும் முன்பாகவே, “காவ்யா என்னை பார்க்க விரும்பல ஆன்ட்டி. பெங்களூர்ல இல்லைனு டிரைவர்கிட்ட சொல்ல சொல்லிட்டா” என்றான் வருத்தமாக.
“அவ உண்மையாவே பெங்களூர்ல இல்லை தம்பி, வேலைக்கு சேர்ந்த்துலயிருந்து லீவே போடாம இருந்தா. மனசு சரியில்லையோ என்னவோ அஞ்சு நாள் லீவ் போட்டுட்டு வந்திருக்கா. நேத்து கூட வீட்டுலதான் இருந்தா, உள்ள வாங்க” என்றார்.
இந்த நேரம் கணவனும் மகனும் வீட்டில் இல்லாதது பெரும் மகிழ்வை உண்டாக்கியது பிரபாவதிக்கு. “உக்காருங்க” என்று தண்ணீர் கொடுத்து, “காவ்யா” என்று குரல் கொடுத்தபடி மகள் அறைக்கு சென்றார்.
“எதுக்கும்மா நான் இங்க இருக்கேனு சொன்ன?” என்றாள் முறைப்பாக.
“வருந்தி வரவங்களை ரொம்பமும் கஷ்டப்படுத்தக் கூடாது காவ்யா. அப்புறம் அவங்கம்மா பண்ணினதுக்கும் நீ பண்றதுக்கும் வித்யாசம் இல்லாம போய்டும். வா… வந்து பேசு” என்றார் தன்மையாக.
காவ்யா அமைதியாய் இருக்க, “இரு உள்ள அனுப்பறேன்” என்று வெளியேற எத்தனிக்க, “நானே வரேன்” என்று வெளியே வந்தாள் காவ்யா.
திவாகர் காவ்யாவை பார்க்க, காவ்யா தனது மொபைலை பார்த்தவாறு நின்றிருந்தாள். பிரபாவதி வெளியே எத்தனிக்க, “ம்மா இங்கேயே இரு” என்றாள்.
“எனக்கு வேலையிருக்கு” என்று நொடிப்பாய் சொல்லி மேகலை வீட்டிற்கு சென்றார் பிரபாவதி.
“உன் கோபம் போக்க இன்னும் நான் என்னதான் செய்யனும் காவ்யா?”
“எனக்கு உங்க மேல கோபம் இல்லை”
மகிழ்ந்த திவாகர் “அப்போ ஏன் என் கால் அட்டன் பண்ணல?” என்றான்.
“கோபமும் இல்ல, அதே நேரம் ஒரு பிடிப்பும் வரமாட்டேங்குது. அதான் உங்களோட பேசல”
“காவ்யா” என்று அதிர்ந்தான் திவாகர்.
“உங்க பேரண்ட்ஸ், என் பேரண்ட்ஸ்னு யாரைப் பத்தியும் யோசிக்காம உங்களை மட்டுமே நம்பி வந்தேன். அது தப்புனு புரிய வச்சிங்க.
நம்ம கல்யாணத்துக்கப்புறம் என் துரோகத்தை தாங்க முடியாம, அப்பாக்கு அட்டாக் வந்திருக்கு. என் அண்ணன் ஐ.பி.எஸ் கனவு திறமையிருந்தும் வீணாகிடுச்சு.
உங்க பேரண்ட்ஸோட சேர்ந்துக்கிட்ட நீங்க… என் பேரண்ட்ஸ் நிலைமை என்னனு யோசிக்கக்கூட இல்ல. இதோட உங்க அம்மா டார்ச்சர். இது அத்தனையும் மன்னிச்சு என் பேரண்ட்ஸை பார்த்து பேசினா வாழலாம். இல்லைனா வேண்டாம்னு சொன்னேன்.
அதுல உங்களுக்கு உடன்பாடில்லாததால வேற பொண்ணை பார்க்கட்டுமானு கேட்டிங்க, ஆக… உங்களுக்கு என் பிரச்சனை ஏதும் பெருசா தெரியல. உங்களுக்கு படுக்க நான் வேணும். அவ்வளோதான். இதுல காதல் எங்க இருக்கு?”
“நீ சொன்னதால மட்டும் ஆன்ட்டிகிட்ட சாரி கேட்கல காவ்யா. உண்மையா என் தப்பை உணர்ந்துதான் கேட்டேன். உன்மேல காதல் இல்லைனா இங்க வந்திருக்கமாட்டேன்” என்றான் வருந்தி.
“ஆனா உங்க மேல முன்ன இருந்த காதல் எனக்கு இப்போ இல்ல. உங்களை ஏத்துக்கலைனா என் அண்ணன் எனக்கு வேற கல்யாணம் செய்து வைப்பான்ற ஒரே காரணத்துக்காக மட்டும்தான் இப்போ உங்க முன்ன நின்னு பேசிட்டிருக்கேன்” என்றாள்.
திவாகம் முகம் வாடிட, “கசந்தாலும் சில விசயங்களை பேசித்தான் ஆகனும். நாம சேர்ந்து வாழ்றதாயிருந்தாலும் உங்க வீட்டுக்கு என்னால வர முடியாது. நான் வேணும்னா நீங்க பெங்களூர்க்குதான் வந்தாகனும். உங்க அம்மா உண்மையா சேன்ஜ் ஆகியிருக்காங்கனு என் மனசுக்கு தோணும்போது உங்க வீட்டுக்கு வருவேன்.
என் வேலையை எக்காரணம் கொண்டும் விடமாட்டேன். திரும்ப உங்க மேல காதல் வந்து நமக்கு குழந்தை பிறந்தாலும் கூட, என் சம்பாத்தியத்துலதான் சாப்பிடுவேன். ஏன்னா… என்னைப் பொருத்தவரை காதல் வேற, தன்மானம்ன்றது வேற. நான் சொன்னது எல்லாம் யோசிச்சு டிவோர்ஸ் வேணுமா, வேணாமானு முடிவெடுங்க” என்றாள்.
தனது வீட்டிற்கு வரமாட்டேன் என்று காவ்யா சொன்னது பெரும் வேதனைதான் என்றாலும், தனது பெற்றோர் இனி தவறாக நடந்துகொள்ள மாட்டார்கள், அவர்கள் மீதான காவ்யாவின் கசப்பு சீக்கிரம் நீங்கும் என்ற நம்பிக்கையோடு “எனக்கு சம்மதம்” என்றான்.
காவ்யா நம்பாமல் பார்க்க, “உன்னை யாருக்கும் என்னால விட்டுக்கொடுக்க முடியாதுடீ. என்னை நம்பு. உன் விருப்பத்துக்கு முழு மனசோடதான் சம்மதிச்சிருக்கேன்” என்றான்.
திவாகர் மீதான பழைய காதல் எட்டிப்பார்க்க, அதை மறைத்து “சரி கிளம்புங்க” என்றாள் திவாகர் முகம் பாராமல்.
“காபி வேணும்”
சமையலறைக்கு சென்று காபி போட்டு வந்தாள். வாங்கி பருகியபடி “உங்கண்ணன் கிளம்பிட்டாரா?” என்றான்.
ஆமாம் என்பதாய் தலையசைக்க, நிம்மதியானவன் “வெளில போலாமா?” என்றான் கெஞ்சலாக.
“முதல்ல லீகலா புருசன் பொண்டாட்டி ஆகலாம். மத்தது அப்புறம் பார்க்கலாம்” என்றாள்.
திவாகர் முகம் வாடிட, “நீங்க எவ்வளோ பிஸினு எனக்கு தெரியும். எதுக்கு இங்க வெட்டியா உக்கார்ந்திருக்கிங்க? கிளம்புங்க” என்றாள் கோபமில்லாமல்.
தற்போதுதான் காவ்யா தனக்கு என்ற நம்பிக்கை பிறக்க, “லீகல் புருசன் பொண்டாட்டி ஆக சம்மதிச்சதுக்கு தேங்க்ஸ் காவ்யா” என்று சொல்லி கிளம்பினான்.
*** *** *** ***
மதியம் மூன்று மணிபோல் விஷாலினிக்கு அழைத்தான் விஷ்ணு. “சாப்பிட்டிங்களா?” என்றாள்.
“இனிதான். காலைல கால் பண்ண முடியல, நீ சாப்பிட்டியா?”
விஷ்ணு கேட்கும் தோரணையில் தற்போதும் கூட பேச நேரமில்லாமல் இருக்கிறான் என்பது புரிய, “சாப்பிட்டேன், நீங்க ஃப்ரீயாகிட்டு கூப்பிடுங்க” என்றாள்.
“சரி” என்று இணைப்பை துண்டித்தவன், அரைமணி நேரத்திற்கு பிறகு தந்தைக்கு அழைத்தான்.
“அப்பா, விஷாலினி டல்லா பேசினா. என்னனு பாருங்க, நான் அப்புறம் கால் பண்றேன்”
“நாங்க இங்கதான்ப்பா இருக்கோம்” என்றார் கோபாலன்.
“எங்க?” என்றான் அதிர்வாக.
“இங்க உன் குவாட்ரஸ்ல”
“எப்போ வந்திங்கப்பா? டிரைவரை அழைச்சிட்டு வந்திங்களா? நீங்க டிரைவ் பண்ணுனிங்களா?”
“விஷாலினி என்னை ஓட்ட வேணாம்னுடுச்சு, டிரைவர் வந்திருக்கான்ப்பா, நாங்க வந்து அரைமணி நேரம் இருக்கும்”
“டிரைவரை கிளம்பச்சொல்லுங்கப்பா”
“இங்க பாதுகாப்பா இருக்கும்தான? அங்க உன் அம்மா, காவ்யா, மேகலை தனியா இருப்பாங்க, இன்னும் இரண்டு நாள்ல கோர்ட்டுக்கு போகனும்ன்றதால அந்த பையன் வந்தாலும் வருவான். டிரைவரோடவே கிளம்பிடட்டுமா?”
“இங்க பாதுகாப்பாதான்ப்பா இருக்கும், ஆனா நான் வரதுக்கு லேட்டாகிடும், விஷாலினி தனியா இருக்குறதும் கஷ்டம். உடனே சென்னை போகனும்னா உங்களுக்கும் டையர்ட் ஆகிடும். ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு போங்க”
“கார்லதான போறேன்? உன் அப்பாக்கு அப்படியொன்னும் வயசாகல. உன் அம்மாக்குத்தான் நானில்லாம கஷ்டம். அதைவிட கஷ்டம் நீ இல்லாம விஷாலினியை சென்னையில வச்சி பார்த்துக்கிறது” என்றார் சிரிப்போடு.
அதிகாலையிலிருந்து உண்டான இறுக்கம் தளர்த்து தானும் சிரித்தவன், “சரிப்பா கிளம்புங்க” என்று இணைப்பை துண்டித்தான்.
இரவு பதினொரு மணிக்கு வந்தான் விஷ்ணுவர்தன்.
error: Content is protected !!