வசந்தங்களை வாடுவதில்லை 21
நலங்கு முடிந்ததும் மீனா தேவநாதனிடம் மோதிரத்தை நீட்டி.., அஞ்சனாவிற்கு போட்டுவிடச் சொன்னார். அஞ்சனாவுக்கு நலங்கு வைத்து முடியும் வரை அங்கேதான் உட்கார்ந்து, அவளைதான் பார்த்துக்கொண்டிருந்தான் தேவநாதன். இன்னும் அவனால் முழுமையாக இந்த சந்தோஷத்தை அனுபவிக்க இயலவில்லை.
மோதிரத்தை எடுத்துக்கொண்டு அவளது அருகில் சென்றவன், அதனை போட்டு விடுவதற்காக அவள் முன்னால் கையை நீட்டினான். எதிரே நின்றிருந்தவள் அவனது எண்ணம் புரிந்து…, தனது கையை அவனது கையில் வைத்து… அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
பெண்ணின் விழிகளையே ஆழ்ந்து பார்த்தவனுக்கு, அதில் எந்த சலனமும் இல்லாமல் நிர்மலமாக இருந்தது நிம்மதியைத் தந்தது போல. இருந்தும் வெளிப்படையாக அவளிடமே சம்மதமா என கேட்க நினைத்தவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. எல்லோர் முன்னிலும் கேட்க கூச்சமாக இருந்ததுபோல. அதை சமாளிக்க எண்ணி பெண்ணின் கண்களை பார்த்துக் கொண்டே…. அவளது விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டான்.
இப்போது அஞ்சனா, அவனுக்கான மோதிரத்துடன் கையை நீட்டிக்கொண்டிருந்தாள், அவன் கையைப் பார்த்தவாறே. அவனோ அதை கவனியாதவன் போல…, அவளது விழிகளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.
Advertisement
நேரமாவதை உணர்ந்து, அவனது கையிலிருந்த பார்வையை மாற்றி அவனது முகத்திற்கு நிமிர்த்தினாள் விழியை. சில நொடிகள் கையைக் கொடுப்பானா என பொறுத்துப் பார்த்தவள், அவனுக்கு அருகில் இன்னும் நெருங்கி.., அவளே அவனது கையைப் பற்றி…, அவனது விரலில் மோதிரத்தை மாட்டிவிட்டாள்.
அவளது செயலில் தேவநாதனுக்கு என்ன புரிந்ததோ…, முகத்தில் மென்மையும், உதட்டில் குறும்பும் மலர்ந்தது. மாப்பிள்ளை பெண் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆசிர்வதித்த பெரியவர்கள்… போட்டோ, வீடியோ எடுத்து முடித்ததும், சாப்பிட அழைத்து சென்றனர் அவர்களை ஒன்றாக.
நிச்சயம் முடிந்து ஒரு வாரத்திற்கு மேல் சென்றிருந்தது. வேல் முருகனுக்கு மகளின் மீதிருந்த வருத்தம் இன்னும் தீரவில்லை. முன்பு போல கலகலப்பான பேச்சு இல்லை தந்தை மகள் இருவரிடமும்.
Advertisement
நிச்சயம் முடிந்து இரண்டு நாள் வீட்டில் இருந்தவள், நிஷாவுடன் சேர்ந்து வேலைக்கு வந்துவிட்டாள். ஜாதகம் பார்த்து இரண்டு முகூர்த்த நாட்களை குறித்த பெரியவர்கள், மண்டபம் எந்த தேதியில் கிடைக்கிறதோ…. அதை பொறுத்து தேதியை முடிவு செய்துகொள்ளலாம் என பேசி முடிவு செய்திருந்தனர்.
Advertisement
அடுத்த மாதமே திருமணத்திற்கு ஐவுளி எடுப்பதற்காக இரண்டு குடும்பமும் சேர்ந்து காஞ்சிபுரம் வந்திருந்தனர். முதலில் முகூர்த்த புடவையை எடுத்துவிடலாம் என அதனைப் பார்த்து கொண்டிருந்தனர்.
பெண்கள் எல்லாம் ஒன்றாக சூழ்ந்து… ஆளுக்கொரு ஆலோசனை சொல்லி அஞ்சனாவை குழப்பிக் கொண்டிருந்தனர். தூர இருந்து இதைப் பார்த்து கொண்டிருந்த செல்வதுரை அருகே வந்து, ‘’இங்கயே இவ்வளவு நேரம் ஆச்சுனா.., எப்படி…? இன்னும் மத்தது எல்லாம் எடுக்க வேண்டாமா…? நீங்களும் நேரம் கடத்தாம உங்களுக்கானத எடுங்க….’’ என்றார் அவர்களை அங்கிருந்து நகர்த்த.
அவரைப் பார்த்த பெண்கள் அதுவும் சரிதான்…, ‘’வாங்க நாம போய் நமக்கு பார்ப்போம்….’’ என்று நகர்ந்திருந்தனர். சுற்றியிருந்த பெண்கள் கூட்டம் நகர்ந்ததும்தான்… அஞ்சனாவுக்கு பிரியானது.
Advertisement
திரும்பி செல்வதுரையை பார்த்து, உதடுவிரியாமல் நன்றியுடன் புன்னகைத்தாள். அவளைப் பார்த்து மென்னகையுடன்…, அருகில் வந்து நின்றவர், “உனக்கு பிடிச்சமாதிரி எடும்மா….” என்று தலையசைத்துவிட்டு மீனாவிடம் சென்றுவிட்டார்.
ரோகிணியும் தங்களது உறவினர்களுக்கு எடுப்பதற்காக வேல்முருகனுடன்
சென்றுவிட்டார். இவள் தனியாக இருப்பதைப் பார்த்த தேவநாதன் அவளது அருகில் வந்து நின்றான் அவளுக்கு பின்பக்கமாக. கைகளை பேன்ட் பாக்கெட்டில் நுழைத்துக்கொண்டு, அவள் சேலை பார்க்கும் அழகையே ரசித்துக்கொண்டிருந்தான்.
நேரம் ஆகியும் அஞ்சனா… எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாளே தவிர எதையும் தேர்வு செய்யவில்லை.
அம்மாடி… இவள் ஒரு சேலை எடுக்கறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும் போலயே.. என நினைத்தவன், “ம்க்கும்….” என்று தொண்டையைக் கனைத்தான் அவளுக்கு பின்னாலிருந்து.
சத்தத்தைக் கேட்டு திரும்பி பார்த்தவளை. அவளுக்கு மட்டும் கேட்குமாறு, ‘’எதுவும் பிடிக்கலையா……..?’’ என்றான் கிசுப்கிசுப்பாக.
“பிடிச்சிருக்கு…. ஆனால்.., எதை சூஸ் பண்றதுன்னு கஷ்டமாயிருக்கு…” என்றாள் எதிரில் எடுத்து வைத்த இரண்டு புடவையை காட்டி அவனிடம். “இந்த இரண்டு சேலையும் பிடிச்சிருக்கு. இரண்டுமே நல்லாயிருக்கு. ஆனால் எதை எடுக்கறதுன்னுதான்…. யோசனையாயிருக்கு….” என இரண்டு புடவையையும் எடுத்து தன் இரண்டு தோள்பட்டையியிலும் வைத்து அவனுக்கு காண்பித்தாள்.
“இரண்டையுமே எடுத்துக்கோ….”
“ம்கூம். முகூர்த்தத்துக்கு எதை எடுக்கறதுன்னு யோசனையா இருக்கு. நீங்களே ஒன்னு செலக்ட் பண்ணுங்களேன்”.
“நானா….? எனக்கு இந்த… சேலையைபத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது. அம்மாவ வேணா கூப்பிடவா….?”
“பரவாயில்லை…. இனிமே கத்துக்கோங்க. ஸார்…. அதான் கல்யாணம் ஆகப்போகுதே…” என சொல்லி சிரித்தார்….. எதிரில் இருந்த விற்பனையாளர்.
அவரது வார்த்தையில் சிரித்தவன்….., அவள் கையில் எடுத்து வைத்திருந்த இரண்டையும் பிரித்து காட்ட சொல்லி பார்த்து, அதிலிருந்து ஒரு புடவையை செலக்ட் செய்து கொடுத்தான் அஞ்சனாவுக்கு.
மெச்சுதலான பார்வை பார்த்தாள் அஞ்சனா. அவள் மனதில் நினைத்திருந்த புடவையையே செலக்ட் செய்திருந்தான். புடவையை தேர்வு செய்தவன், அதை கைகளில் வைத்துகொண்டு…, அவளைப்பார்த்து “ஓகே……….வா……, பிடிச்சிருக்கா…. என தலையசைத்து கேட்ட பின்புதான் பில் போடலாமா…” என கேட்டு நின்றான்.
அவளும் “ஹ்ம்ம்… என தலையசைத்து சம்மதம் சொல்லியிருந்தாள்.
இருந்தும் “எனக்காக சொல்லாத…., உனக்கு பிடிச்சமாதிரியே எடுத்துக்கோ……” என்றான் அவளிடம்.
“இல்லல்ல. இந்த கலர்தான் நானும் மைன்ட்ல சூஸ்பண்ணி வச்சிருந்தேன்….” என்றவள், பெரியவர்களையும் அழைத்து காட்டினாள். எல்லோருக்கும் பிடித்திருந்ததால் அதையே முகூர்த்தபுடவையாக முடிவு செய்து பில் போட கொடுத்தனர்.
அங்கே எடுக்க வேண்டிய துணிமணிகளை வாங்கி முடித்தவர்கள், அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். அங்கேயும் பர்சேஸ் நடந்தது. எல்லாவற்றையும் முடிக்கவே இரவு ஒன்பது மணிக்கு மேலானது.
காலையிலிருந்து அலைந்ததால் எல்லோரும் சோர்வாக இருந்தனர். இரவு உணவை அங்கேயே முடித்து கிளம்புவதற்கு மணி பத்துக்குமேல் ஆனது. இவர்கள் சென்னையை தாண்டுவதற்குள் மழை பிடித்துகொண்டது. வேல்முருகன் மனைவி மகளுடன் அவரது காரில் வந்திருந்தார். இன்று டிரைவரை அழைத்து வந்திருந்தார்.
செல்வதுரையின் குடும்பம் மொத்தமாக அவர்களுடைய வண்டியில் வந்திருந்தனர். தேவநாதன்தான் கார் ஓட்டிக்கொண்டிருந்தான். உண்டு முடித்த மயக்கம், உடல் அசதி என எல்லோரும் காரில் ஏறினவுடனே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
கும்மிருட்டு…., அடைமழை வேறு…, காரை ஓட்டுவதற்கே சிரமமாயிருந்தது. தேவநாதனும் களைத்திருந்தான். தூக்கம் வேறு கண்ணை சுழற்றிக் கொண்டிருந்தது.
வேகமான காற்றிலும், சோ… என கொட்டிய மழையிலும், எதிரில் செல்லும் வண்டி எதுவும் கண்ணுக்கே தெரியவில்லை. அந்த அளவு கும்மிருட்டும்… மழையுமாக இருந்தது. எதிரில் டேஞ்சர் லைட் இல்லாமல் சென்று கொண்டிருந்த வண்டியை கவனிக்காமல் ஓட்டி வந்தவன்…., அருகே வந்து மின்னல் வெளிச்சத்தில் திடீரென்று அதை பார்க்கவும், அந்த வண்டியின் மீது மோதாமல் இருக்க… சட்டென்று பதட்டத்தில் சடன் பிரேக் போட்டு வலதுபுறம் இவனது வண்டியை திருப்பியதுதான் தெரியும்.
இதோ குடும்பம் மொத்தமும் ஹாஸ்பிட்டலில் இருக்கிறார்கள். எல்லோரும் சின்ன சின்ன காயங்களோடு உயிர் தப்பியதே அரிதென்றாலும்…, தேவநாதனுக்குதான் பெருத்த அடி.
நல்லவேளை உயிர்சேதம் இல்லாமல் பிழைத்தனர். பின்னாடியே வேல்முருகனது கார் வந்து கொண்டிருந்ததால்…… தாமதிக்காமல் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு கொண்டுவர முடிந்திருந்தது.
தேவநாதனுக்கு காலில், இடுப்பில் எல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடனே ஆப்பரேஷன் செய்யவேண்டும் என பரிந்துரைத்து, ஆப்பரேஷனும் முடிந்து ஐ.சி.யுவில் வைத்திருந்தனர். டிரைவர் சீட்டுக்கு நேர் பின்புறம், கதவை ஒட்டி உட்கார்ந்திருந்த காஞ்சனாவுக்கு மட்டும் கையில் பிராக்சர்… மற்ற எல்லோருக்கும் சின்ன சின்ன காயம்தான்.
அடுத்த இரண்டு நாள் மருத்துவமனையே கதியாக இருந்தார்கள் குடும்பம் முழுவதும். குழந்தைகளை பார்க்கவேண்டும் என்பதால், கார்த்திக் விவேக், கீர்த்தி எல்லோரும் வீட்டிற்கு புறப்பட்டனர். செல்வதுரையும் மீனாவும் மருத்துவமனையில் இருந்து கொண்டனர்.
காஞ்சனாவும் கையில் பிராக்சர் இருந்ததால்….. கட்டு போட்டு மருத்துவமனையில் தான் தனி அறையில் இருந்தாள். அவளது கணவன் கார்த்திக், அவளுடன் இருக்கிறேன் என பிடிவாதம் பிடித்தவனை குழந்தைகளை பார்ப்பதற்காக காஞ்சனாதான் வீ்ட்டிற்கு அனுப்பி வைத்திருந்தாள்.
தான் பார்த்துகொள்வதாக தைரியம் கூறி அனுப்பியிருந்தார் மீனா. காஞ்சனாவைப் பார்ப்பதற்காக அவரது அம்மா அப்பா தங்கை என எல்லோரும் வந்திருந்தனர்.
மகளை பார்க்க வந்திருந்த காஞ்சனாவின் தாய்… வாயை வைத்துகொண்டு சும்மா இருக்காமல்…,” ஏன் அண்ணி……, என் பொண்ணை தேவா தம்பிக்கு பேசியிருந்தா……… இப்படியெல்லாம் நடந்திருக்குமா………..?” என ஒரு அணுகுண்டை தூக்கிப்போட்டார் மீனாவை நோக்கி.
மீனா புரியாமல் புருவத்தை நெறித்து… “என்ன சொல்றீங்க….? எனக்கு புரியல….” என்றார்.
“எதுக்குபோனீங்க எல்லாரும் காஞ்சிபுரத்துக்கு….”
“கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க….”
“அததான்… சொல்றேன். கல்யாண ஜவுளி எடுக்க போயிட்டு வந்ததுக்கே குடும்பம் மொத்தத்தையும், ஆஸ்பத்திரியில கொண்டு வந்து படுக்க போட்டுட்டா மகராசி….. இன்னும் அவளை தாலி கட்டி, வீட்டுக்கு கூட்டிட்டு போனா… என்னெல்லாம் நடக்குமோ….?”
“ஏதோ… நீங்களும் அண்ணனும் செஞ்ச புண்ணியம் தலைக்கு வந்தது…, தலைபாகையோட போச்சுன்னு.., உயிர் பொழைச்சீங்க எல்லாரும். நிச்சயம் முடிஞ்சதுக்கே தேவா தம்பிய…. இப்படி பேச்சு மூச்சில்லாம படுக்க வச்சிட்டா…. புண்ணியவதி…”
காஞ்சனாவின் தாய் மனதில் வஞ்சம் வைத்து பேசியதை அறியாத மீனா இவர் பேசியது போல் இருக்குமோ…. என குழம்ப ஆரம்பித்தார் மனதுக்குள்ளேயே.
மீனாவின் கலக்கத்தை முகத்திலே பார்த்த…, காஞ்சனாவின் தாய்… இன்னும் அவரை குழப்ப எண்ணி…. “முதல்ல ரெண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கான்னு ஜாதகம் பார்த்தீங்களா….?” என அடுத்த வெடியை கொளுத்திப் போட்டார்.
“இல்லை…” என தலையசைத்தார் மீனா.
அதான பார்த்தேன். எப்பயும் நீங்க எல்லாத்துலயும் கெட்டக்காரத்தனமா… சூட்சுமமா இருப்பீங்களே… எப்படி கோட்டை விட்டீங்க…? இதமாதிரி நடந்ததுன்னு தெரிஞ்சவுடனே, ஏதோயிருக்குன்னு எனக்கு பட்டுச்சு. எப்படி பார்க்காம விட்டீங்க… அண்ணி? கல்யாணம்றது என்ன கடையில விக்கிற கத்திரிக்காய் மாதிரியா…? சரியில்லனா…. சொத்தைனா…. தூக்கிப்போட்டுட்டு… வேற மாத்தறதுக்கு. ஆயிரம் காலத்து பயிர் இல்லையா….?”
“அண்ணன் என்ன சொல்லியிருந்தாலும், நீங்க பார்த்திருக்கனும் ண்ணி. அங்கதான் தப்பு பண்ணீட்டீங்க நீங்க. முதல்ல அததான செஞ்சிருக்கனும். அதிலேயே இரண்டு பேருக்கும் பொருத்தம் இருக்கான்னு தெரிஞ்சிருக்கும் இல்ல…” என இன்னும் அவர் மனதை குழப்பிவிட்டார்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இல்லாது பொல்லாததையும் பேசி மீனாவின் மனதில் அஞ்சனாவைப் பற்றி நஞ்சைப் புகுத்திருந்தார். இது யாருக்கும் தெரியாது. அவர்கள் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், அறைக்கு வெளியேயிருந்த நாற்காலியில்.
செல்வதுரை……. தேவநாதனிடம் இருந்தார். காஞ்சனாவிடம் அவளது தந்தையும், தங்கையும் இருந்தனர். இவர்கள் இருவரும் வெளியே அமர்ந்து இதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.
மாலைவரை காஞ்சனாவுடன் இருந்த அவரது தாய் தந்தை வீட்டிற்கு கிளம்பினர். அவளது தங்கை வர்ஷா மட்டும் காஞ்சனாவின் உதவிக்காக மருத்துவமனையிலேயே தங்கிவிட்டாள்.
இரண்டு நாட்களாக தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருந்ததால், நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்ற வேல்முருகன் ரோகிணி, அஞ்சனா எல்லோரும் இன்று மாலை வந்திருந்தனர்… தேவநாதனைப் பார்க்கவென்று.
இவர்கள் வரும்போது தேவநாதன் உறங்கிக் கொண்டிருந்தான். கைகால் எல்லா இடத்திலும் கட்டு போடப்பட்டிருந்தது. இவர்கள் உள்ளே நுழையும் போது… அங்கே வர்ஷா உட்கார்ந்திருந்தாள் அவனுக்கு துணையாக.
வேல்முருகன் அவளை யார் என்று பார்த்திருந்தார். இவர்களைப் பார்த்து ஓரளவுக்கு அனுமானித்த வர்ஷா, ‘’அத்தையும் மாமாவும் கேன்டீன் வரைக்கும் போயிருக்காங்க’’ என்றாள் அவளாகவே.
ரோகிணி அவளை கேள்வியாகப் பார்த்தார். அவரது பார்வையை உணர்ந்துகொண்ட வர்ஷா…. “நான் காஞ்சனாவோட சிஸ்டர். அக்காவ பார்த்துக்கறதுக்காக… வந்திருக்கேன்” என்றாள் அவளாகவே.
“ஓஹ்…. காஞ்சனாவுக்கு இப்ப எப்படியிருக்குமா…. ?” என காஞ்சனாவப்பற்றி விசாரித்தார் அவளிடம்.
“ஹ்ம்ம்… அக்கா தூங்கிட்டிருக்காள்…. அத்தையும் மாமாவும்… வெளியே போனதால இங்க வந்தேன்”.
அவளோடு பேசிக்கொண்டிருக்கும் போதே மீனாவும் செல்வதுரையும் வந்திருந்தனர் உள்ளே. மீனா இவர்கள் இருப்பதை பார்த்ததும்…, அங்கே இருக்கப் பிடிக்காமல் காஞ்சனாவின் அறைக்கு சென்றுவிட்டார்.
மீனா தங்களைப் பார்த்தும் பார்க்காததுபோல் சென்றது…., ரோகிணிக்கு சுருக்கென்று தைத்தது மனதில். இருந்தும் அதை அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. செல்வதுரைக்கும் கேள்வியாக இருந்தது. இவர்களிடம் மீனா பேசாமல் சென்றது. சரி எல்லோரும் இங்கே இருப்பதால் காஞ்சனாவைப் பார்க்கும் அவசரத்தில் சென்றிருப்பாள்… என சமாதானப்படுத்திக் கொண்டார்.
அந்த நேரம் டாக்டர் வரவே கவனம் எல்லாம் அவரிடம் திரும்பியது எல்லோருக்கும். தேவநாதனின் உடல்நலனைப் பற்றி விசாரித்தபடி இருந்தனர் மருத்துவரிடம். அவரும் அவர்களது எல்லா விசாரணைகளுக்கும் பொறுமையாகவே பதிலளித்து முடித்து, தேவநாதனையும் பரிசோதித்து, பக்கத்தில் இருந்த நர்சிடம் சில இன்ஸ்ட்ரக்ஷனை கூறிவிட்டு சென்றிருந்தார்.
சிறிது நேரம் அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் காஞ்சனாவைப் பார்த்து வருவதற்காக… அவளது அறைக்கு சென்றனர், ரோகிணியும் வேல்முருகனும். அவர்களுடன் பேசியபடியே செல்வதுரையும் சென்றார். அஞ்சனா மட்டும்தான் தேவநாதனிடம் இருந்தாள்.
தொடரும்.
