Skip to content
Post Views: 2,569
அத்தியாயம் 3
அது சேலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கல்யாண மண்டபம்.
அந்த மண்டபம் முழுவதும் பல வித பூந்தோரணங்களாலும், குட்டிக்குட்டி மின் விளக்குகளாலும் ஜொலித்துக் கொண்டிருந்தது.
Advertisement
மண்டபத்தின் உள் கட்டமைப்பே அத்தனை பிரமாண்டமாக இருந்தது.
ஒரு பக்கம் மண்டபம் எங்கும் கசகசவென்று மனிதர்களின் இரைச்சலால் நிரம்பி வழிந்தது என்றால் மற்றொரு பக்கமோ மங்கள வாத்தியங்களால் நிரம்பி வழிந்தது.
Advertisement
Advertisement
அங்கே மணமகனின் அறையில் மணமகனுக்கே உரிய பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த ஹரியை பார்த்தபடி அமர்ந்திருந்தான் வாசு.
“என்ன வாசு, அப்படி பார்க்கிற…” தலைவாரிக் கொண்டே கண்ணாடியில் தெரிந்த வாசுவின் பிம்பத்தை பார்த்தபடி சுதன் கேட்க,
Advertisement
“ஒன்னுமில்லை…” என்பதைப் போல் தலையாட்டினான்.
“நீ தலையாட்டறத பார்த்தா ஏதோ இருக்கு போலவே…” என்றவன் வாசுவின் அருகில் அமர்ந்து தோளோடு அணைத்தான்.
அதில் கொஞ்சம் நெளிந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்
“என் பாப்பாவை நல்லா பார்த்துக்கோங்க…” என்றான் சுதனின் முகத்தைக் கூட பார்க்காது.
வாசுவின் குரலில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்து கொண்டவன்
“உன் பாப்பாவை மட்டும் நல்லா பார்த்துகிட்டா போதுமா… அந்த பாப்பாவோட அண்ணனை பார்த்துக்க வேண்டாமா?…” மெல்லிய புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி கேட்டான் சுதன். அதற்கு பதில் கூறாமல் ஹரியை பார்த்து சிரித்தான் வாசு.
சில நிமிடங்கள் அங்கு மெளனம் ஆட்சி செய்ய அதை கலைக்கும் விதமாக ஒலித்தது வாசுவின் அலைபேசி.
‘ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்…’
என்று உதித் நாராயண் குரலில் பாடிய பாடலை முழுவதுமாக ஒலிக்க விடாமல் பட்டென அழைப்பை ஏற்று காதில் வைத்தான் வாசுதேவன். எதிர்ப்புறம் என்ன கூறப்பட்டதோ சட்டென எழுந்து நின்றவன்
“என்ன அண்ணா இந்த நேரத்துல இப்படி காரணம் சொல்லிட்டு இருக்கீங்க… நேத்தே இதெல்லாம் பார்த்திருக்க வேண்டாமா… இன்னும் கொஞ்ச நேரத்தில பந்தி ஸ்டார்ட் ஆயிடும் அதுக்குள்ள ஏதாவது பண்ண முடியுமா பாருங்க…” என கட்டளையிட்டுக் கொண்டிருந்தவனைத் தான்
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி.
நெடு நெடுவென்று ஆறடி மூன்று அங்குலத்தில் உயரம். சிவந்த வெண்மை கலந்த நிறம். எவரையும் ஊடுருவி பார்க்கும் கண்கள் அவற்றில் தெரிவது கோபமா? உறுதியா? மென்மையா? என புரிந்து கொள்ள முடியாது. எதிராளியை நடுங்க செய்யும் பார்வை… வசீகர தோற்றமும், அசரடிக்கும் அழகும், ஆளுமையும், எப்போதும் போல பிரமிக்க வைத்தது ஹரியை…
அந்த கணம் ஹரியின் மனதில் தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது ‘நான்கு வருடங்களுக்கு முன்பு இதயாவின் பின்னால் கண்களில் பயத்தை தேக்கி பயந்து நின்ற வாசுவா இது?’ என்பது தான். தற்போது இருக்கும் வாசுவிற்கும் அப்போது இருந்த வாசுவிற்கும் எத்தனை எத்தனை வித்தியாசங்கள் அதை பார்க்க பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது… கடந்த இரண்டு வருடத்தில் அவனிடம் எத்தனை மாற்றங்கள்…
நிச்சியம் இந்த யூ பி.எஸ்.சி இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்று விடுவான் என்ற நம்பிக்கை ஹரிக்கு இருக்கவே செய்தது. இருந்தும் இன்டர்வியூவில் வெற்றி பெறுவது மட்டுமே வேலையை தீர்மானிக்காது அல்லவா அடுத்த நிலைக்கு இவன் செல்ல வேண்டுமே என்ற தவிப்பும் இருந்தது.
அதே நேரம் “மகனே சுதனு ரெடியா…” எனக் கேட்டபடி மணவாளனின் அறைக்குள் நுழைந்தார் ஹரியின் தந்தை ஈஸ்வர்.
அறையினுள் வந்தவரின் கண்கள் வசீகரிக்கும் அழகோடு, ஆளை மயக்கும் கம்பீர தோற்றத்தோடும் அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வாசுவை தான் கண்டது.
“அடடே வாசு பையா இங்க தான் இருக்கியா?…” எனக் கேட்டவரிடம் ஆமென்று தலையாட்டியவன் அழைப்பை துண்டித்தான்.
அதற்கு மேல் அவரிடம் என்ன பேச என்பதைப் போல் தயங்கி நின்ற வாசுவைப் பார்த்து சிரித்த ஈஸ்வர் மகனை நெருங்கினார்.
ஹரியிடம் நெருங்கிய அளவிற்கு இன்னும் மற்ற ஆண்களுடன் நெருங்கி பழகவில்லை தான். ஆனால் அதே கணம் மற்ற ஆண்களைக் கண்டு பயந்து நடுங்கவும் இல்லை…
அதே போல் தனது தந்தையான ஈஸ்வருக்கு வாசுவைப் பற்றி அனைத்தும் கூறியிருந்தான் சுதன். என்னதான் வாசுவைப் பற்றி ஈஸ்வருக்கு தெரிந்தாலும் அதை பற்றி அவனிடம் இன்றுவரை விசாரித்தது இல்லை…
“டைம் ஆயிருச்சு தம்பி போகலாமா…” எனக் கேட்ட தந்தையை நிமிர்ந்து பார்த்த ஹரிக்கு அவர் கேள்வியில் மற்ற அனைத்தும் மறந்து விட, தன் காதலுக்காக இன்று வரை துணை நின்ற தந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டான் ஹரிஹரசுதன்.
“தேங்ஸ் ப்பா…” என தகப்பனின் தோளில் முகத்தை மூடிக்கொண்டு ஹரி கூற, மகனின் குரலில் தெரிந்த பேதத்தை உணர்ந்தவர் “அப்பாக்கு யாராவது தேங்க்ஸ் சொல்லுவாங்களாடா…” என செல்ல கோபத்துடன் கேட்டார்.
அவரின் தோளில் முகத்தை புதைத்து இல்லையென தலையாட்டிய மகனின் கேசத்தைக் கோதிக் கொண்டே “உனக்கு புதுசா எதுவும் சொல்லனுன்னு இல்லை ஹரி, என் மருமக முழுக்க முழுக்க உன்னை மட்டுமே நம்பி வரா, அவளை எந்தவொரு சூழ்நிலையிலையும் தலை குனிய வைச்சிடாத…” என்றவருக்கு தெரியவில்லை மருமகளின் தலைக்குனிவிற்கு தன் மனைவியே காரணமாக இருப்பார் என்று…
ஆம் ஹரியின் தாயான காமாட்சிக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை, வீட்டிற்கு ஒரே பெண்.. பலகோடிகளுக்கு ஒரே வாரிசு இதயா மட்டுமே என்ற செய்தியை கேட்டதிலிருந்து இந்த திருமணம் வேண்டவே வேண்டாம் என மறுத்தார் காமாட்சி.
‘பணக்கார பெண், செல்லமாக தான் வளர்க்கபட்டிருப்பாள் நிச்சியம் குடும்பத்தை அனுசரித்து செல்ல மாட்டாள்’ என்று பல காரணங்களை அடுக்கி இதயாவை மறுத்தார்.
உண்மையில் இதெல்லாம் வெறும் காரணங்கள் மட்டுமே. அவர் மனதின் பயமே வேறு…அனைத்து சொத்திற்கும் ஒரே வாரிசு இதயா தான் என்றால் தங்களின் பிள்ளையை வீட்டு மாப்பிள்ளையாக அழைத்துக் கொள்வார்களோ என்ற பயம் தான் இதயா, சுதன் திருமணத்திற்கு பலமாக மறுப்பு தெரிவிக்க வைத்தது.
காமாட்சியின் பயம் சரியென்பதை போல் திருமணமான இரண்டே வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறி விடுவாள் என்று தந்தையும், மகனும் அறிந்திருக்க வாய்ப்பில்லை..
மகனின் ஆசைக்காக மட்டுமே இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் காமாட்சி. என்ன தான் திருமணத்தை ஏற்றுக்கொண்டாலும், எதிலும் அதீத ஈடுபாடு இல்லாமல் தான் இருக்கிறார். அதனை நினைத்து ஒருபுறம் சுதனுக்கும் வருத்தம் தான். நீண்ட நாட்களாக மனதிலிருந்த வருத்தம் இக்கணம் வெளியில் வந்திருந்தது…
இக்கணம் சூழ்நிலை சற்றே கடினமாக இருப்பது போல் தோன்றியது ஈஸ்வரனுக்கு. அதை இலகுவாக்கும் பொருட்டு
“சரி சரி தள்ளி நில்லு, டிரஸ் எல்லாம் கசங்குது, உங்கம்மாவோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்துருக்காங்க. அவங்க முன்னாடி உனக்கு தம்பி ரேஞ்சுக்கு இல்லைன்னாலும் அண்ணன் ரேஞ்சுக்காவது இருக்க வேண்டாம்..” என்றார் தனது சால்ட் அண்ட் பெப்பர் கேசத்தை கோதிக் கொண்டே…
தந்தையின் பேச்சில் சட்டென அவரைப் பிரிந்து நின்றவன் வாயிற் கதவை அதிர்ச்சியாக பார்த்து “மீ, நீங்க எப்ப வந்தீங்க…” எனக் கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னு சொல்லல தங்கம், இவன் பொய் சொல்றான்…” என்று அவசரமாக திரும்பிட கதவு மூடி இருந்தது. உப் என்று காற்றை வாயில் நிரப்பி வெளியிட்டவர் நெஞ்சில் கைவைத்து “அப்பா…” என்றார்.
ஈஸ்வரின் பதட்டமான பேச்சிலும், செய்கையிலும் ஹரியும், வாசுவும் ஒரு சேர சிரித்தனர்.
இளையவர்களின் சிரிப்பில் அசடு வழிந்தவர் நாற்காலியிலிருந்த மாலையை ஹரிக்கு அணிவித்து “வெல்கம் டூ பொண்டாட்டி தாசன் சங்கமடா மவனே…” என வாழ்த்த, இடைவரை குனிந்து நன்றி கூறினான் சுதன்…
அதே கணம் அங்கே மணமேடையிலிருந்து ஐயரின் அழைப்பு குரல் கேட்க “வா தம்பி டைம் ஆச்சு…” என அழைத்துச் செல்ல முனைய, கழுத்திலிருந்த மாலையை ஒரு முறை சரிபார்த்து கேசத்தை கோதிக் கொண்டே போலாம் என்பதை போல் தலையாட்டினான் ஹரி.
ஈஸ்வர் முன்னால் நடக்க அவருக்கு பின்னால் வாசுவும், ஹரியும் சென்றனர். மணமகன் ஒரு விதத்தில் அழகு என்றால் அவனின் அருகில் நடந்து வந்த வாசு ஒருவித அழகு.
மண்டபத்தில் அமர்ந்திருந்த பலரின் கண்கள் மணமகன் கம்பீரத்தைப் பார்த்தது என்றால் ஒருவளின் கண்கள் மட்டும் வாசுவின் வசீகரத்தையும், கம்பீரத்தையும் திருட்டுத்தனமாக ரசித்துக் கொண்டிருந்தது…
“அந்த பையனுக்கு பக்கத்துல வர பையன் எங்க சின்னமாமன் மவள் ஜானகியோட பையனாங்க. கவர்மென்ட் பரிட்சையில பாசாகி இருக்கானாம். வேலை சீக்கிரம் கிடைச்சுடும்ன்னு சொல்றாங்க…” என்றார் அந்த பெண்மணி…
“ஓ…” என்றார் அந்த பெண்மணியின் கணவர்.
“ஏங்க உங்களுக்கு ஞாபகம் இல்லையா? ஒரு முறை ஊருக்கு போகும் போது கூட கேட்டீங்களே எங்க சின்ன மாமனுக்கு பொண்ணு இல்லையான்னு, நான் கூட சொன்னனே சின்ன வயசுலயே நேசிச்சு கால்யணம் பண்ணிட்டான்னு சொன்னேனே, அவ தாங்க இந்த ஜானகி… அவளோட மகன் தான் இந்த பையனாம்…” என்றதும் நினைவு வந்தவரக நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவர் மனைவி கூறியவனை பார்த்தார்…
பார்க்க நன்றாக தான் இருந்தான் அவனும். அதனாலேயே மேலும் பேச்சை வளர்த்தார் அந்த பெண்மணியின் கணவர் “அது சரி… உனக்கு யார் இதெல்லாம் சொன்னது. என்கூட தானே இருந்த…” எனக் கேட்ட கணவரை அசடு வழிய பார்த்தார்.
“பாத்ரூம் போன கேப்ல தான் இதெல்லாம் விசாரிச்சேன்…” என்றதும் “அங்க யாரை டி பார்த்து இதெல்லாம் கேட்ட…” என்றார் கடுப்பாக…
“வேற யாரை கேட்பாங்க..எங்க சின்ன அத்தையை தான்…” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“பாத்ரூம் போகும் போற வழில எங்க சின்ன அத்தையை பார்த்தேன். அட! இவங்க எங்க டா இங்கன்னு போயி விசாரிக்கும் போது தான் சொன்னாங்க… ‘என் அக்கா பேத்திக்கு கல்யாணன்னு கூப்பிட்டாங்க வந்தேன். இங்க வந்து பார்த்தா இவ இருக்கா..’ன்னு ஒரே அழுகை… அவங்களை சாமதானம் பண்ணிட்டு தான் வரதுக்கு தான் லேட் ஆயிடுச்சு…” கணவனின் கோபத்தில் உதட்டை சுழித்து அழகு காட்டியப்படி கூறினார்..
“ஓ… இந்த கல்யாண பொண்ணு உங்க சின்னத்தைக்கு அக்கா பேத்தியா? ம்ம் எந்த அக்கா? இவங்க எப்படி முறையாம்?…” எனக் கேட்டார் அவரும்.
“நம்ம ஹரி பொண்டாட்டியோட அப்பா, அதாங்க சுந்தரம்(இதயாவின் தந்தை) இருக்காருல அவரு எங்க சின்னத்தையோட ஒன்னு விட்ட அக்கா பையனாம். இந்த ஜானகியோட புருசன் செத்ததும் கை குழந்தையோட இருந்திருக்கா… இவங்க எதுக்கோ இவ தங்கிருக்கற ஊருக்கு போயிருக்காங்க போல, இவளை பார்த்ததும் கூடவே கூட்டிக்கிட்டாங்கன்னு சொல்றாங்க. அப்ப இருந்து இப்ப வரைக்கும் அம்மாளும், மகனும் இவங்களோட தான் இருக்காங்களாம்…” என பல வருட கதையை பத்தே வரிகளில் கூறினார் அந்த பெண்மணி.
ஆம், சுந்தரமும், மீனாட்சியும் ஜானகியை பற்றி இப்படி தான் வெளியில் கூறியிருக்கிறார்கள். அந்த பொய் பலரிடமும் வேவ்வொரு விதமாக சென்று தற்பொழுது அதுவே உண்மையாகி நிற்கிறது..
“அப்ப தான் இந்த பையனை கைகாட்டி ஜானகி மவன்னு சொன்னாங்க. பையனை பார்த்ததும் பிடிச்சு போச்சு. நம்ம பாப்பாக்கு பொருத்தமா இருப்பான்னு தோணுச்சுங்க. நம்ம நவிக்கு கேட்டு பார்ப்போமா…” என்றதுமம் மணவறையில் இருந்த ஆடவனை ரசித்துக் கொண்டிருந்தவள் அந்த பெண்மணியின் கடைசி வரிகளில் தன்னிலைக்கு மீண்டாள்.
சட்டென பக்கவாட்டில் அமர்ந்திருந்த பெண்மணியை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தாள். அவளின் பார்வையை பக்கவாட்டில் அமர்ந்தவரும் உணர்ந்தாரோ என்னவோ சட்டென திரும்பி
“என்னடி, பெரியவங்க பேசும் போது இங்க என்ன நோட்டம் விட்டுட்டு இருக்க..” எனக் கேட்டது வேறு எவருமில்லை நவினாவின் தாய் பானுமதி தான். ஆம், மணவறையில் சுதனோடு வந்தவனை கூச்சமே இல்லாமல் ரசித்து கொண்டிருந்தது நம் நவினா தான்.இக்கணம் நீங்கள் நினைப்பதும் சரியே இரண்டு மாதங்களுக்கு முன்பு வாசுவிடம் அதிரடியாக காதலை கூறியதும் இவளே தான்.
தன்னுடன் பணிபுரியும் பெண்களில் நவினாவை மட்டுமே திருமணத்திற்கு அழைத்திருந்தான் சுதன். அவனின் நலம் விரும்பி என்பதை விட நல்ல தோழி அல்லவா அவள்… அதனாலயே குடும்பமாக சென்று முறையாக பத்திரிகை வைத்து அழைத்திருந்தனர். அவர்களின் அழைப்பின்படி தன் குடும்பத்துடன் நண்பனின் திருமணத்திற்கு கலந்து கொண்டாள் நவினா..
அன்றைய நிகழ்விற்கு பிறகு இனி அவனை நினைக்கவே கூடாது, பார்க்கவே கூடாது, ஏன் அவன் இருக்கும் திசைக்கு கூட செல்ல கூடாது… என மனதில் கூறிக் கொண்டதெல்லாம் மண்டபத்தில் வாசுவை பார்க்கும் வரை மட்டுமே நிலைத்தது.
மணவறையில் சுதனுடன் வந்தவனை பார்த்ததும் பொத்தென விழுந்தவள் தான் எழவே இல்லை… “நம்ம நவிக்கு கேட்டு பார்ப்போமா…” என்ற பானுவின் பேச்சில் சுயம் பெற்றாள். சட்டென தாயை திரும்பி பார்க்க, அவர் திட்ட மீண்டும் மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
அக்கணம், அவளது கண்கள் தன்னாலேயே பானுமதி கூறிய ஜானகியின் மகனை தேடியது.
“யாரை சொல்லுது இந்த மம்மி…” என முனகிக் கொண்டே மீண்டுமொருமுறை சுற்றும் முற்றும் பார்த்தாள். தாய் வர்ணித்த அளவிற்கு ஒருவரும் அங்கில்லை “ப்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டவள் தாயை பார்த்தாள்.
அவரோ இவளை துளியும் கண்டுகொள்ளாமல் கணவரிடம் பேசுவதிலேயே இருந்தார்..
இப்போது அன்னையை அழைத்து யார் அந்த ஜானகியின் மகன் என்று கேட்டாலும் அதற்கான பதில் வராது, ‘ப்ச்…யாராக இருந்தால் நமக்கு என்ன?’ நினைத்தவளின் வெண்டை விரல்கள் இடையை தாண்டி வளர்ந்திருந்த கேசத்தின் இறுக்கி பிடித்தும், விடுவித்துக் கொண்டும் இருந்தது.
****
அதே கணம் அங்கே மணமகளின் அறையில் தந்தையின் மடியில் அமர்ந்தப்படி தாய் கொடுத்த உணவை உண்டுக் கொண்டிருந்தாள் மீனாட்சி சுந்தரத்தின் ஒரே புதல்வி இதயநிலா.
“போதும் போதும் மா…” மறுத்துக் கொண்டே அடுத்தடுத்த வாய் உணவை வாங்கிக் கொண்டிருந்தாள்.
தட்டிலிருந்த சாதம் முழுவதும் தீரவும் “பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ…” என ஐயர் கூறவும் சரியாக இருந்தது. நிமிடம் கடந்தும் மணமகள் வரவில்லை என்றதும் அவசரமாக மணமகள் அறைக்குள் நுழைந்தார் ஜானகி.
லேசாக மூடியிருந்த அறையை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவரின் முகம் நிமிடத்தில் பல பாவனைகளை காட்டியது… “இதுக்கு தான் எல்லாரையும் வெளிய அனுப்பி விட்டீங்களா நீங்க…” என இடுப்பில் கைவைத்து கேட்க, அதில் சிறியவள் உட்பட பெரியவர்கள் இருவரும் அசட்டு சிரிப்பை உதிர்த்தனர்.
மூவரின் சிரிப்பைக் கண்டு தலையில் அடித்துக் கொண்ட ஜானகியோ
“உங்களையெல்லாம் வைச்சிட்டு ஒன்னும் பண்ண முடியாது. தட்டை கொடுங்க அண்ணி… பிள்ளையை மணமேடைக்கு கூட்டிட்டு போங்க…” என்றவர் மீனாட்சியின் கையிலிருந்த தட்டை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு நிலாவிற்கு நீரை புகட்டி இதழ்களை துடைத்து விட்டார். அதற்குள் வாசுவும் இவர்களைக் காணவில்லையென்று வந்துவிட்டான்.
மணமகளின் அறைக்குள் நுழைந்த வாசுவின் கண்கள் இதயாவை பார்த்ததும் ஆச்சரியமாக விரிந்து கொண்டது, தன் இதயாவா இது என்பதை போல்.
எல்லோரா சிற்பம் உயிர் கொண்டு வந்தது போல் இருந்தாள் இதயநிலா.
பனாரஸ் பட்டில், பின்னந்தலையில் கூந்தலை சுருட்டி அடைத்து வட்ட வடிவில் மல்லிகை மலர்கள் சூழ, கழுத்தில் வரிசை வரிசையாக ஆரங்கள் நின்றாட, தோளிலே ஓர் மலர் மாலை வழிய நின்றிருந்தாள்.
வாயிலில் நின்ற வாசுவை சிரிப்பு மாறாது பார்த்தனர் பெரியவர்கள் மூவரும். வாசுவை கண்டதும் சட்டென சூழ்ந்த கண்ணீருடன் “வாசு பையா…” என அழைத்தாள். மங்கையின் அழைப்பில் தன்னிலைக்கு வந்தவன்
அவசரமாக இதயாவின் முன் சென்று நின்றான்.
“ஸ்… இதயா, என்ன இது சின்ன பொண்ணு மாதிரி, அழ கூடாது…” என்றவன் மங்கையின் கண்ணில் தேங்கி நின்ற நீரை துடைத்தான்.
“என் கண்டிசன் ஞாபகம் இருக்குல்ல…” எனக் கேட்கவும் சிரித்தான் வாசு.
‘இங்க பாரு வாசு, நீ சொல்றது போல டூ மந்த்ல மேரேஜ் வைச்சிக்க ஒத்துக்கிறேன் ஆனா நீயும், அத்தையும் இங்கேயே வந்துடணும்… இல்லைன்னா எனக்கு டூ மந்த்ல எல்லாம் கல்யாணம் வேண்டாம், ஒன்னு, இரண்டு, வருஷத்துக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிக்கிறேன்…’ என முதன்முறையாக திருமண பேச்சை ஆரம்பிக்கும் போது இதயா கூறியது நினைவு வந்தது வாசுவிற்கு
“நீ முதல்ல கல்யாணம் பண்ணிக்க, அப்பறம் நாங்க இங்க வரதை பத்தி பேசிக்கலாம்…” என தான் கூறிய பதிலும் நினைவு வர மெல்லிய புன்னகை வாசுவிடம்.
ஆம் வாசுவிற்கு நினைவு திரும்பிய பின்பு ஜானகியும் வாசுவும் தனியாகவே இருந்து கொண்டனர்.
இருவருக்குமே மீனாட்சி சுந்தரத்தையும், இதயாவையும் பார்ப்பது தயக்கம் இருந்தது. அதனாலயே சற்று ஒதுங்கி இருந்தனர். ஆனால் இதயா தான் அவர்களை தனியாக விடவே இல்லை… அவளையும் தேற்றி வாசு, ஜானாகியையும் தேற்றி தங்களின் கூட்டுக்குள் மீண்டும் இணைத்து கொண்டாள்.
“என்னடா சிரிக்கிற…” எனக் கேட்ட இதயாவிடம் ‘ஒன்னுமில்லை’ என்று தலையாட்டியவன் அவளின் கையை பிடித்து மணமேடைக்கு அழைத்து சென்றான்.
வாசுவின் கையை பிடித்தப்படி வந்த இதயாவை முகம் சுணங்க பார்த்தார் காமாட்சி. “என்னங்க இது, கல்யாணம் முடியற வரைக்கும் கூட சாப்பிடாம இருக்க மாட்டாளா?.. இதுக்கு தான் சொன்னேன் பெரிய இடத்து பெண்ணெல்லாம் நமக்கு வேண்டாம்னு யாரு கேட்டீங்க… பையனுக்கு பிடிச்சிருக்கு பையனுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லி சொல்லியே என் வாயை அடைச்சிட்டீங்க…” என மெல்லிய புன்னகையுடன் கண்களில் கோபத்தை தேக்கி கூறிக் கொண்டிருந்த மனைவிக்கு பதில் சொல்லாமல் சிரித்து சமாளித்தார் ஈஸ்வர்..
இங்கு சுதனும் இதயாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான் பனாரஸ் பட்டில் மிதமான ஒப்பனையுடன் தேவதையாய் வந்து கொண்டிருந்த பெண்ணை பார்க்க இரு கண்கள் போதவில்லை அவனுக்கு.
அதே கணம் பூங்காரிகையின் விழிகளும் சுதனை தான் தொட்டு மீண்டது. ஆடவனின் பார்வையில் மெல்லிய வெட்கம் சூழ மணமேடையில் வந்தமர்ந்தாள் பூங்காரிகை.
“ஸ்டிரேஞ்சர் இனிமே நான் உங்களோட பாசிங் கிளவுட் இல்லை.. லைஃப் லாங் உங்க கூடவே இருக்கற மூன்…” என மெல்லிய குரலில் அவள் கூற அழகாய் சிரித்தான் ஹரிஹரசுதன்.
சுபயோக சுப நேரத்தில்… ஐயர் ‘கெட்டிமேளம்… கெட்டிமேளம்…’ என்று பணிக்க மங்கையின் கழுத்தில் இரு கைகளால் தொடுத்த மங்கல நாணை கட்டினான் இதயாவின் சுதன்…
அதன் பின் அவளது நெற்றி வகுட்டில் குங்குமம் வைக்க, அவள் இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் சட்டென ஆடவனின் கைகளில் விழுந்தது… மனைவியின் கண்ணீரை கண்டதும் ‘நான் இருக்கிறேன்’ என்பதைப் போல் அவளின் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான் இதயாவின் சுதன்.
error: Content is protected !!