Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 28

ஹால் ஜன்னல் திறந்திருந்தது.  அதன் வழியாக காற்று சில்லென வீசிக் கொண்டிருந்தது.

அஞ்சனா, “மழை பெய்ய போவுதுனு நினைக்கறேன்.  காத்து சில்லுனு வீசுது”.

“ஹ்ம்ம்…..”

திரும்ப அவனைப் பார்த்து ஒருக்களித்துப் படுத்து, “எங்க போனீங்க…,  இவ்வளவு நேரம்…?” என்றாள் கேள்வியாக.



Advertisement

அவளது கையைப் பிடித்து தனது நெஞ்சின் மேல் வைத்துக் கொண்டவன், “ரொம்ப கஷ்டப்படுத்தறேனா… உன்னை ?” என்றான்.

இது என்ன கேள்வி என அவனைப் பார்த்தவள், “என்ன ஆச்சு…?  ஏன்… திடீர்னு இப்ப இந்த கேள்வி…?” என்றாள்.

“நீதான சாயந்திரம் சொன்னே….”

Advertisement

“ம்ப்ச்.  அதையே இன்னும் நினைச்சிட்டிருக்கீங்களா……..?  ஏதோ அந்த நேர டென்ஷன்ல, டக்குனு வாய்ல வந்துடுச்சு…..”

Advertisement

“அது உண்மைதான.  நீ அப்படி சட்டுனு என்னை பார்த்து  அழுதுட்டே சொன்னதும், எனக்கே ஒருமாதிரியாயிடுச்சு அனு.  மனசெல்லாம் ஏதோ கனமா… அழுத்தி பிசையற மாதிரி, கஷ்டமாயிடுச்சு எனக்கு.  அதான் நான் பாட்டுக்கு கால் போன போக்குல நடக்க ஆரம்பிச்சிட்டேன்”.

“மனசு புல்லா கஷ்டமாயிருக்கவே யாரையும் பார்க்க பிடிக்கல.  அப்படியே ஆட்டோ பிடிச்சு பீச்சுக்கு போயிட்டேன்”.

“பீச்சுக்கா……” என வாயை பிளந்தவள் “லூசா…… நீங்க.  அப்பா அம்மா ஊருக்கு கிளம்பனதும், என்னவோ கஷ்டமாயிருந்துதேன்னு கண்ணை கசக்கிட்டேன்.  அதுக்கு சொல்லாம கொள்ளாம…., போனைகூட எடுக்காம போவீங்களா…?” என முறைத்தாள்.

Advertisement

“உன்கூட தான கீழே வந்தான்.  எங்க போனான்னு….? அத்தை என்னை நச்சி எடுத்துட்டாங்க.  இங்க எல்லாரும் நமக்குள்ள ஏதோ சண்டைன்ற மாதிரி, என்னையே குறுகுறுன்னு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, தெரியுமா……?  நானுமே உங்களை இவ்வளவு நேரம் காணோம்னதும் பயந்து போயிட்டேன்.  இனிமே இப்படி பண்ணாதீங்க…..”

“ம்ம்…., நான் உன்கிட்ட ஒன்னு கேட்கறேன். அதுக்கு நீ உண்மையா பதில் சொல்லனும்….?”

இப்ப என்ன எனப் பார்த்தாள் அவனை.

“என்னை பிடிச்சுதான கல்யாணம் கட்டிகிட்ட…?  இல்ல உங்க வீட்ல சொன்னாங்கன்னு, கல்யாணம் பண்ணிட்டியா….?”

“எதுக்காக….. இந்த கேள்வி, இப்ப திடீர்னு….?”

“ம்ப்ச்…. கேட்டதுக்கு.. பதில் சொல்லுடி”.

“அவசியம் சொல்லனுமா……?”

“ஹ்ம்ம்…. எனக்கு தெரியனும்” என்றான் பிடிவாதமாக.

“சரியான மக்கு மாமா…. இன்னுமா என்னை உங்களுக்கு புரியல…?  வெளிப்படையா சொன்னாதான் தெரியுமா…?  இத்தனை நாள் என்னோட இருந்ததுல… என்னை உங்களுக்கு தெரியவேயில்லையா…?”

“கேட்டதுக்கு பதில் சொல்லுடி….”

ம்ஹ்… என மூச்சை இழுத்து விட்டவள் விட்டத்தை பார்த்துகொண்டு,  “உண்மையா சொல்லனும்னா… நீங்க பர்ஸ்ட் டைம் என்கிட்ட வந்து பேசினப்போ, எனக்கு ஒன்னும் பெருசா தோணல.  இன்னும் சொல்லனும்னா…, அப்ப கல்யாணத்த பத்தின எந்த ஐடியாவும் என் மனசுல இல்ல.  அதனால நீங்க பேசின எதையும் நான் மைன்ட் பண்ணவே இல்ல.  அடுத்த கொஞ்ச நாள்ல, அதை நான் மறந்துட்டேன்னுதான் நினைச்சேன்”.

“ஆனால், அப்படியில்லன்னு உங்களை திரும்ப மயிலம் முருகர் கோவில்ல பார்த்ததுக்கு அப்புறம்தான் எனக்கு புரிஞ்சது”.

“அட்ரா சக்கை மாமன அப்பவே உனக்கு பிடிச்சிதாடி…?”

“ம்ம்….” என தலையசைத்தாள் வெட்கத்துடன்.

ஏதோ கதை கேட்கும் ஆர்வத்தில் அவளை ஒட்டி உரசிக்கொண்டு படுத்தவன், அவள் முகத்தை பார்த்துகொண்டே, மனைவியைச் சுற்றி அணைவாக கைகளை போட்டுக்கொண்டான்.

“அப்புறம் எப்படி உங்கப்பா வேற ஒருத்தனை பார்த்து கல்யாணம் பண்ண நினைச்சார்….?”

“அது எல்லாம்…, உங்கள மயிலத்துல பார்க்கறதுக்கு முன்னாடி நடந்தது.  மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பேசனாலும்…, எனக்கு அதுல பெருசா இன்ட்ரெஸ்ட் இல்லை.  அப்பாவுக்காக எல்லாம் ஓகே சொன்னேன்.  இருந்தும் என்னவோ…  எனக்குள்ள குறையாவே இருந்தது.  அந்த கல்யாணம் பேசனதுல.  எனக்கே என்னை சரியா புரிஞ்சுக்க முடியல, அந்த சமயத்துல”.

அவனை திரும்பி பார்த்தவள், “இன்னும் சொல்லப் போனா… அந்த மாப்பிள்ளை உங்களைவிட அழகு தெரியுமா…” என்றாள் கிண்டலாக அவனைப் பார்த்து.

“அடிங்…. என்கிட்டேயே சொல்வியா….. நீ?”

“ஹா… ஹா…. பொறாமையா… உண்மைய சொல்லிதான ஆகனும்”.

அவளை முறைத்தான்.

“முறைக்காதீங்க… பாஸ்.  நான் அழகுன்னுதான சொன்னேன்.  எனக்கு பிடிச்சிருக்குன்னா சொன்னேன்.  எனக்கு இந்த முசுடு மாமனைதான் பிடிச்சிருந்துச்சு போல…”

“ஹ்ம்ம்… அது…” என அவளை இறுக்கிக்கொண்டான் இன்னும் நெருக்கமாக.

“இப்படி பிடிச்சுட்டா… நான் எப்படி சொல்றதாம்….?”

“எல்லாம் இப்படியே சொல்லலாம்.  சொல்லுடி…”

“மாட்டேன் போங்க….”

“ஏன்டி…? நான் உனக்கு முசுடா…?” என அவள் நெற்றியோடு முட்டி காதை பிடித்து கடித்தான் வலிக்கும்படி.

“ஹ்ம்ம்.  முசுடு இல்லாம வேற என்னவாம்?  எது சொன்னாலும் பொசுக்குன்னு கோவம் வந்துருது… உடனே ஐயாவுக்கு…”.

“அப்படியா…. முசுடு என்னல்லாம் பண்ணும் தெரியுமா…?” என்றவன் அவளது கன்னத்தை பிடித்து நுனி பற்களால் அழுத்தி கடித்தான்.

“ஸ்ஆ….. முரட்டு மாமா….?  வலிக்குது.  கடிக்காதீங்க…” என அவனை பிடித்துத் தள்ளினாள்.

“இப்ப தெரியுதா… முசுடுன்னா… என்ன பண்ணும்…?  முரடுன்னா… எப்படி இருக்கும்னு…” என கெக்கலித்தான்…

அஞ்சனா, “சிரிப்ப பாரு…” என அவன் கன்னத்தை பிடித்து கிள்ளினாள்.

“உன்கிட்ட மாமன் எவ்வளவு பொறுமையா இருக்கேன் தெரியுமா……?  இன்னும் ஐயா….. கோவத்த எல்லாம் நீ முழுசா பார்க்கல…….”

“இதுல வேற பெருமையா…..?”

“சரி சொல்லு.  பேச்சை டைவர்ட் பண்ணாத.  நமக்கு கல்யாணம் ஆகி இத்தனை நாள்ல இன்னைக்கு தான்டி நீ என்னை மாமான்னு வாய திறந்துருக்கே….”

“ஹா… ஹா… இது வேறயா…?  இன்னும் என்னல்லாம் வச்சிருக்கீங்க மனசுல…?”

“ம்கூம்… பேச்சை டைவர்ட் பண்ற.  ஒழுங்கா சொல்ல வந்தத சொல்லுடி”.

“என்ன சொல்ல…..?” என ஜெகன் இவளை பெண் பார்க்க வந்ததிலிருந்து, இவள் வேண்டாம் என அவள் தந்தையிடம் பேசி மறுத்த வரைக்கும் ஒன்று விடாமல் சொல்லியிருந்தாள்.

“இவ்வளவு நடந்திருக்கா…?  என்கிட்ட நீ எதுவும் சொல்லவேயில்லை….?”

“எதுக்கு சொல்லனுமாம்…?  நீங்கதான்… மயிலம் கோவில்ல பார்த்துகூட என்னை கண்டுக்காம போனீங்களே.  நான் ஏன் உங்ககிட்ட சொல்லனும்…..?”

“ஹா… ஹா… அது உனக்கு வேற ஒருத்தனோட கல்யாணம் பிக்ஸ் ஆகப்போகுதுன்னு கேள்விபட்டதும், கொஞ்சம் கோவம்.  அதான் கண்டுக்காம இருந்தேன்…”.

“நானே விருப்பப்பட்டு எங்க வீட்ல சண்டை போட்டதாலதான் நீங்க என்னை கல்யாணம் பண்ணிகிட்டீங்க.  இல்லனா என்னை அப்படியே விட்டிருப்பீங்கல்ல…..”

“நீ மட்டும் என்ன…?  உன் மனச என்கிட்ட சொன்னியா…?  உனக்கு என்னை கட்டறதுல விருப்பமில்லையோன்னுதான் விலகியிருந்தேன்.  உனக்கு விருப்பம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா…, நிச்சயம் உங்க அப்பாகிட்ட நானே வந்து பேசியிருப்பேன்…”.

“எப்படி…? இப்ப மாமாவ கூட்டிட்டு வந்து பேசினீங்களே, அப்படியா…? சும்மா எதையாவது சொல்லாதீங்க…..”

“நிஜமாடா…  ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்ததுக்கப்புறம்…தான் நீ எந்த அளவு என் மனசுல ஆழமாயிருக்கேன்றதையே தெரிஞ்சுகிட்டேன்.  நீயில்லாம வாழ முடியாதுன்னு புரிஞ்சதுக்கப்புறம்தான்…, என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு, உங்க அப்பாகிட்ட நம்ம கல்யாணத்த பத்தி பேசனும்னு, என் அப்பாவ கூட்டிட்டு வந்துட்டேன்…”

தேவநாதன் ஆக்சிடென்ட்பற்றி பேசியதும், அன்று ஹாஸ்பிட்டலில் ஜெகனை சந்தித்தது நினைவுக்கு வந்தது அஞ்சனாவுக்கு.

தேவநாதன் ஆக்ஸிடென்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் சேர்ந்திருந்த மறுநாள்…  அஞ்சனாவுக்கு நிஷா போன் செய்திருந்தாள். மருத்துவமனைக்குள் சிக்னல் சரியாக இல்லாததால் பேசுவதற்காக ஹாஸ்பிட்டலிலிருந்து வெளிவந்து அங்கிருந்த கார் பார்க்கிங்கில் நின்று பேசிக் கொண்டிருந்தாள்.

இவள் பேசி முடித்து திரும்பும்போது, ஜெகன் இவளையே பார்த்து கொண்டு நின்றிருப்பது தெரிந்தது.  இவனா… இவன் எங்க இங்க என அதிர்ச்சியாக பார்த்தவள், தன்னை சுதாரித்துகொண்டு மருத்துவமனைக்குள் செல்ல திரும்பினாள்.

அதுவரை அவளையே பார்த்துகொண்டு நின்றிருந்தவன், இவள் திரும்பி நடப்பதைப் பார்த்ததும் “ஹலோ…” என அவளிடம் வந்தான்.

சில நொடிகள் அவளையே நேராக நின்று பார்த்தவன், “எப்படியிருக்க…?  நல்லாயிருக்கியா…?” என்றான் நக்கலாக.

“ம்ம்….” என்றாள் வெறுமனே.

“திரும்ப நான் எப்படி இருக்கன்னு கேட்க மாட்டியா…?” என்றான் கைகளை மார்பின் குறுக்காக கட்டி நின்று.

அவனை நிமிர்ந்து நேராக பார்த்தவள், “எப்படியிருக்கீங்க…?” என்றாள் மெல்ல.

“இவ்வளவுநாள் எப்படியோ…?  ஆனால் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…” என்றான் சிரித்துக்கொண்டே.  ஒன்றும் புரியாமல் முகத்தைச் சுருக்கி அவனையே பார்த்திருந்தாள் அஞ்சனா.

“உள்ள ஆக்ஸிடென்டாகி படுத்திருக்கவர் உன் மாமாவா…?” என்றான்

இவனுக்கு எப்படி தெரியும்……?

“என்ன பார்க்கறே…?  எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறயா…?”

“என் கசினுக்கு குழந்தை பொறந்திருக்கு.  இந்த ஹாஸ்பிட்டல்லதான் இருக்காங்க.  அதான் அவங்கள பார்க்க வந்தேன்.  அப்பதான் உங்க அப்பாவ பார்த்தேன்.  கூடவே உன் தாய்மாமாவையும்”.

“உன் அப்பாவ பார்த்து கோவமாயிருந்தாலும், உன் பேமிலதான் யாருக்கோ உடம்பு சரியில்லைபோலன்னு விசாரிக்கலாம்னு கிட்ட போனேன்”.

“என்னைப் பார்த்ததும் உங்க அப்பா பேசாம முகத்தை திருப்பிட்டு போயிட்டார்.  உங்க மாமா கிட்டதான் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்”.

“இவனை கல்யாணம் பண்ணிக்கதான் என்னை வேணாம்னு… சொன்னியா..?” என நக்கலாக கேட்டான் ஜெகன்.

…………………………

“எழுந்து நடக்கறதே கஷ்டமாமே.  ஆண்டவன் இருக்கான் இல்ல.  என்னை வேதனைப்படுத்துனதுக்கு உன்னை அழ வச்சுட்டான் பாத்தியா..?”

“காரணமே சொல்லாம என்னை ரிஜக்ட் பண்ணீங்கல்ல.  அதான்.  எத்தனை நாள் தூக்கம் இல்லாம தவிச்சிருப்பேன்…, உங்கப்பா நம்ம கல்யாணத்தை நிறுத்துனதை நினைச்சு.  இப்பதான் எனக்கு நிம்மதியாயிருக்கு.  இனி நான் சந்தோஷமா கல்யாணம் பண்ணிப்பேன்…”.

அங்கிருந்து திரும்பி இரண்டெட்டு எடுத்து வைத்தவன், மறுபடியும்  திரும்பி அவளைப் பார்த்து, ‘’அப்படி என்ன…? என்னைவிட அவன் உசத்தின்னு அவனை பிடிச்சே….?’’  என்ன முழிக்கறே….?  அவனைப் போய் பார்த்துட்டுதான் வந்தேன்”.

“என்னை ஏமாத்துன மாதிரி…, அவனையும் ஏமாத்திடாத…..” என இகழ்ச்சியாக சொன்னவன் அவளை திரும்பி பாராமல் வேகமாக சென்றிருந்தான்.

இப்போது நினைத்தாலும் அவனது வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை.  ஜெகன் பேசிச் சென்றதை நினைத்து வெகுகாலம் வேதனைப்பட்டு கொண்டிருந்தாள்.

அவனது வார்த்தைகள் அவளையும் சுட்டிருந்தது.  அஞ்சனாவுக்கும் மனதில் வருத்தமுண்டு ஜெகனை நினைத்து.  முதலிலேயே அவனிடம் தனது மறுப்பை கூறியிருக்கவேண்டும் என்று.  இனி அதனை நினைத்து வருந்தி பயன் இல்லை.

ஜெகனிடம் முதலிலேயே தனக்கு விருப்பமில்லை என்பதை தெளிவாக கூறியிருந்தால் அவனை அலைகழித்த பாவமாவது எஞ்சியிருக்கும் என தனக்குள்ளேயே நினைத்து வருந்தியவள், ஒருவேளை அவன் சொல்வதுபோல், அதனால்தானோ… என்னவோ, தேவநாதனுக்கு இப்படி விபத்து நடந்துவிட்டது, என எண்ணி மனதிற்குள்ளேயே தேவையில்லாததை எல்லாம் போட்டு குமைந்து கொண்டிருந்தாள் திருமணத்திற்கு முன்.

அதிலும் அவன் கடைசியாக….. அவனையும் ஏமாத்திவிடாதே என சொல்லிச் சென்ற வார்த்தை அவளை உள்ளுக்குள் ஊசியாக குத்திகொண்டிருந்தது.  இதுவரை யாரிடமும் அதைப்பற்றி அவள் சொன்னதுகூட இல்லை.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவள், சுரீர் என மூக்கு வலிக்கவும்….” ஆ…” என கத்தினாள்.

“ஹேய்… கத்தாத…டி” என அவள் வாயைப் பொத்தினான் தேவநாதன்.

மூக்கை தேய்த்துவிட்டவள், “இப்படியா கடிப்பீங்க.  வலிக்குது…” என சிணுங்கினாள்.

“நான் பாட்டுக்கும் பேசிட்டேயிருக்கேன்.  நீ எதையும் கவனிக்காம ட்ரீம்ல இருந்த.  அதான்… வேணும்னா பதிலுக்கு என் மூக்கை கடிச்சுக்கோ….” என அவனது மூக்கை அவளது உதட்டை நோக்கி கொண்டு வந்தான்.

அவனது தோளில் அடித்தவள்.., “தூங்கற நேரத்துல என்ன சேட்டை பண்ணிட்டிருக்கீங்க…?”

“என்ன சேட்டை பண்றாங்க…?  வெளில திரும்பி பாரு.  செம மழை.  சில்லுனு காத்து.  பக்கத்துல பொண்டாட்டி.  இப்படி இருக்கும்போது சேட்டை பண்ணலன்னாதான் தப்பு…” என்றான் கண்ணடித்து.

“அய்ய… கவிதன்னு நினப்பா மனசுல.  சகிக்கல… தூங்க விடுங்க.  காலையில சீக்கிரம் எழுந்துக்கனும்.  எல்லாருக்கும் டிபன் பண்ணனும்ல….?”

“அனு மா….. இங்க பாரேன்”.

“என்ன…?”

“நம்ம விரதத்தை கொஞ்சம், ரீ கன்சிடர் பண்ணலாமா….?” என்றான் அவளது புருவத்தை வருடிக்கொண்டே.

“ஹா.. ஹா… என்னாச்சு… திடீர்னு…?”

“சிரிக்கற நீ… என்னைப் பார்த்தா கிண்டலாயிருக்கா…? என காதை பிடித்து திருகினான்.

“பின்ன நானா உங்களை தள்ளியிருக்க சொன்னேன்.  நீங்கதான் பெரயவங்க எல்லாம் முட்டிட்டு நிக்கிறாங்க.  அவங்க மனசு கஷ்டத்துல நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்க வேணாம்னு….. வீர வசனம் எல்லாம் பேசினீங்க……”

“ஹேய் நான் அப்படியா சொன்னேன்.  சமாதானமாகி இரண்டு குடும்பமும் ஒன்னா சேர்ந்ததுக்கு அப்புறம்… சந்தோஷமா நம்ம வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணலாமேன்னு… சொன்னேன்”.

“அப்படியா…. சரி.  அப்ப நம்ம அறுவதாம் கல்யாணத்துலதான் அவங்க எல்லாம் சேருவாங்க.  பரவாயில்லையா… உங்களுக்கு…?” என்றாள் சிரித்துக்கொண்டே.

“கொழுப்பு அதிகமாயிடுச்சு உனக்கு.  என்ன பேச்சு பேசறே…. நீ” என அவளை கன்னத்தை பிடித்து கிள்ளினான்.

“ஸ்ஆ…. விடுங்க மாமா.  நாம ஹால்ல படுத்திருக்கோம்.  யாராவது எழுந்து வரப்போறாங்க….”

“அதெல்லாம் யாரும் வரமாட்டாங்க.  நீ அங்க பார்க்காத.  என்னை பாரு, மாமன கவனி”  என்றவன் அவளை சத்தமில்லாமல் மொத்தமாக போர்வைக்குள் இழுத்துக் கொண்டான்.

வெளியில் சோ என மழை அடித்து பெய்ய ஆரம்பித்திருந்தது.  இயற்கைகூட அவர்களுக்கு இசைந்து கொடுத்ததுபோல.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல்… அங்கே இனிமையாக இல்லறம் ஆரம்பமாகியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!