Skip to content
Post Views: 1,412

அகம் 18
நளினி வேலைக்கு செல்லும் பெண்மணியாக இருந்தாலும் நயந்தினியை அவர் தன்னிச்சையாக எதையும் செய்ய விட்டதே இல்லை. அனைத்தையும் அவரே மகளுக்கு செய்துவிடுவார். மற்ற இரு பிள்ளைகளும் கூட சில வேலைகளை அவர்களே செய்து கொள்வர். ஆனால் நயந்தினிக்கு அனைத்திற்கும் அன்னை தேவை. அவர் வீட்டில் இருக்கும்போது அன்னை முந்தானையை பிடித்துக் கொண்டே திரிவாள். அவள் தன்னிச்சையாக செயல்பட வேண்டுமென்று தான் அவளை நளினி கல்லூரி விடுதியில் சேர்த்தார்.
நயந்தினிக்கு நேர் மாறானவள் விக்னவி. பத்து வயதிலேயே அன்னை தந்தையை ஒரே சமயத்தில் விபத்தில் பறி கொடுத்தவள், அவளின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் ஒரு கிராமம். பெற்றோர் இறந்ததும் அவளுக்கும் அவளது சொத்துக்களுக்கும் அவளது அன்னையின் இளைய சகோதரி சீமா பொறுப்பேற்றுக் கொண்டார்.
Advertisement
சீமா வாக்கப்பட்டு சென்ற புகுந்த விட்டிலும் வசதிக்கு குறைவில்லை. விக்னவிக்கு சொந்தமான நிலத்திலிருந்து வரும் குத்தகை பணமே அவளது செலவிற்கு அதிகப்படி தான், ஆனாலும் விக்னவியை தங்களுடன் வைத்துக் கொள்வதை சீமாவின் மாமியார் விரும்பவில்லை. ஏதாவது அதுகுறித்துக் குறை சொல்லிக் கொண்டே இருப்பார். அங்கு அவரது சொல் தான் எடுபடும், சீமாவின் கணவரும் அன்னை பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவர். அதனால் சீமாவும் அவருக்கு கட்டுப்பட்டு தான் அங்கு வாழ்க்கை நடத்திக் கொண்டார். ஐந்து வயது மற்றும் மூன்று வயதில் அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.
மாமியார் என்ன பேசினாலும் அக்கா மகளை விட்டுவிடக் கூடாது என்று தன் மகளை போலவே பாவித்து தான் அவர் வளர்க்க நினைத்தார். அதேபோல் அவரது கணவரும் நினைக்க வேண்டுமே, ஆனால் அவரோ மகள் உறவு கொண்ட அந்த சின்ன பெண்ணுக்கு அடிக்கடி சின்ன சின்னதாய் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். வெளியில் சொன்னால் நீ இந்த வீட்டில் இருக்க முடியாது என்பதுபோல் மிரட்டவும், சித்தி வீட்டிலும் இல்லையென்றால் வேறு யார் தனக்கு இருக்கிறார்கள் என்று விக்னவியும் பயத்தில் வெளியில் சொல்லாமல் அந்த கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் கணவனின் செயல் சீமாவிற்கு ஒருநாள் தெரிய வந்தது. ஆரம்பத்திலிருந்தே பயந்த வாழ்க்கை வாழ்ந்தவருக்கு இது குறித்து கணவனை எதிர்க்க தைரியமில்லை. இரண்டு சின்ன பிள்ளைகளை வைத்துக் கொண்டு தனியாக எப்படி வாழ்வது என்று எதிர்காலத்தை நினைத்து பயந்தவர், வேறுவழியில்லாமல் விக்னவியை விடுதியில் சேர்த்து படிக்க வைத்தார். அந்த மிருகத்தின் தொல்லை இல்லாமல் விக்னவிக்கு நிம்மதியாக இருந்தாலும், அந்த வயதில் அனைத்தையும் தனியாக செய்து கொள்ள அவள் மிகவுமே சிரமப்பட்டாள்.
Advertisement
விடுமுறை போது கூட அவளை வீட்டிற்கு அழைத்து சென்றால் அவளை கூடவே வைத்திருப்பார் சீமா. அந்த காலத்தில் சித்தியின் பாதுகாப்பில் இருப்பது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், வளர வளர இப்படி ஒரு கணவருக்காக தன்னை தனியாக விட்டுவிட்டாரே, என்று அவள் யோசிக்க ஆரம்பித்தபோது அவளாகவே அவர்களை விட்டு விலக ஆரம்பித்தாள். அவள் பள்ளி படிப்பை முடிக்கும்போது சீமாவின் கணவரும் மரணமடைந்துவிட, அதற்கு முன்னரே அவரின் மாமியாரும் இறந்துவிட்டார். இப்போதாவது அக்கா மகளை அருகில் வைத்துக் கொள்ளலாம் என்று சீமா நினைக்க, அவளோ மனதளவில் அவர்களை விட்டு வெகுதூரம் போயிருந்தாள். அவர்களுடன் அவள் இருக்கவும் விரும்பவில்லை.
Advertisement
இதில் விக்னவி பருவ வயதில் பள்ளியில் படிக்கும்போதே விடுதியில்லாமல் வீட்டிலிருந்து படிக்கும் மாணவியுடன் அவள் மிகவும் நெருக்கமாக நட்புடன் பழகினாள். விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் அவர்கள் வீட்டிற்கு சென்று வரும் அளவிற்கு அந்த நட்பு இருந்தது.
ஒருநாள் தோழி பள்ளிக்கு வரவில்லை என்பதால் தோழியைப் பார்க்க விக்னவி அவர்கள் வீட்டிற்குச் சென்றாள். திடீரென ஒரு அவசர விஷயமாக பெற்றோருடன் அந்த தோழி ஊருக்கு கிளம்பி சென்றிருக்க, விக்னவிக்கு அதை தெரியப்படுத்தவில்லை. அதனால் தோழியை பார்க்க சென்ற விக்னவியை வரவேற்றது அந்த தோழியின் சகோதரன் தான், தோழியின் சகோதரனை தன் சகோதரன் போலவே விக்னவி நினைக்க, அவனது பார்வையோ வேறுமாதிரி இருந்தது.
தோழி இல்லை என்பது தெரிந்து கிளம்ப நினைத்தவளிடம் உபசரிப்பது போல் வீட்டிற்குள் அழைத்து அவளிடம் அவன் பாலியல் அத்துமீறல் செய்ய முயற்சிக்க, ஏற்கனவே அப்படி ஒரு அனுபவம் தனக்கு இருந்ததால் அவனை தள்ளிவிட்டு ஓடி வந்துவிட்டாள்.
Advertisement
அன்றிலிருந்து ஆண்களையே அவளுக்கு பிடிக்கமால் போய்விட்டது. அந்த அனுபவத்திற்குப் பிறகு பெண்களிடம் கூட அவள் நெருங்கி பழகுவதில்லை. அனைவரிடமிருந்தும் விலகியே இருப்பாள்.
இப்படி வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவரும் ஒரே கல்லூரியில் ஒரே பாடப்பிரிவில் மட்டுமில்லாமல் விடுதியிலும் ஒரே அறையில் தங்கியிருக்கும் சூழல் வந்தது. அனைத்திற்கும் யாரையாவது சார்ந்து இருக்க நினைக்கும் நயந்தினி. யாரோடு நெருங்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் விக்னவி. இருவரும் ஒரே அறையில் இருந்ததில் கஷ்டங்களை உணர்ந்தது நயந்தினி தான்,
ஒவ்வொரு வேலையையும் செய்யவே மிகவும் சிரமப்படுவாள். இதில் விடுதி சாப்பாடும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. உடன் பேச்சு துணைக்காவது ஆள் இருந்தால் பரவாயில்லை. எப்போதும் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் விக்னவியை கண்டால் ஏனோ நயந்தினிக்கு கோபமாக வரும், அவளாக பேச்சுக் கொடுத்தாலும் சில வார்த்தைகளுக்கு மேல் விக்னவி பேச மாட்டாள்.
ஆனால் நயந்தினியை கவனித்துக் கொண்டு தான் இருப்பாள். ஒவ்வொரு வேலையும் செய்ய முடியாமல் திணரும்போது அவளைப்பார்த்து விக்னவிக்கு பாவமாக இருக்கும், தான் சிறு வயதில் பட்ட கஷ்டமெல்லாம் ஞாபகத்திற்கு வரும், தலைவார தெரியாமல் ஏனோதனென்று நயந்தினி ஒரு குதிரைவால் பின்னல் போடுவதை பார்க்கும்போது, அவளும் அந்த கஷ்டத்தை அனுபவித்ததால் தான் வேறுவழியில்லாமல் தன் நீண்ட கூந்தலை வெட்டிக் கொண்டது விக்னவிக்கு ஞாபகத்திற்கு வரும்,
இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. நயந்தினி யாரையாவது சார்ந்து இருந்தாலும் அதற்காக அனைவரிடமும் உடனே நெருக்கமாக பழகும் குணம் கொண்டவளும் கிடையாது. விடுதியில் தங்கியிருக்கும் மற்ற மாணவிகளிடமும் சரி கல்லூரியில் உடன் படிக்கும் மாணவிகளிடமும் தேவையென்றால் பேசுவது தான்,
ஒருநாள் நயந்தினிக்கு இரவு திடீரென காய்ச்சல். குளிரில் நடுங்கியபடி அனத்திக் கொண்டிருந்தாள். விக்னவி எழுந்து அவளது நிலையை பார்த்தவள், அவளை தொட்டுப் பார்த்து அவளுக்கு காய்ச்சல் என்பதை தெரிந்து கொண்டவள், உடனே விடுதி மேற்பார்வையாளரிடம் விஷயத்தைக் கூறவும்,
“இப்போதைக்கு இந்த டேப்லெட்டை போடச் சொல்லு, காலையில் ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டுப் போகலாம், வேணும்னா அவளோட பேரன்ட்ஸை வர வைக்கலாம்,” என்று சொல்லி மாத்திரையை கொடுத்தார் அவர்,
அதை நயந்தினிக்கு கொடுத்தாலும் உடனே காய்ச்சல் குறையவில்லை. குளிரில் நடுங்கி கொண்டிருந்தவளுக்கு சுடு தண்ணீரில் துணியை நனைத்து நெற்றியில் அவ்வப்போது வைத்து இரவெல்லாம் விக்னவி அவளை கண்விழித்துப் பார்த்துக் கொண்டாள்.
மறுநாள் நளினியை வரவழைத்தனர். அவர் வந்து நயந்தினியை மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றார். இரண்டு நாள் காய்ச்சல் விடும்வரை அவளை தன்னுடன் வைத்து பார்த்துக் கொண்டார். ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல நயந்தினியால் அங்கு இருக்க முடியாது. தேர்வு நடக்கும் நேரம் அது, காய்ச்சல் விட்டிருந்தாலும் நயந்தினி மிகவுமே சோர்வாக உணர்ந்தாள். இதில் வீட்டிலிருந்து அவ்வளவுதூரம் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதிவிட்டு வருவது கடினம். படிக்கவும் நேரமிருக்காது. அதனால் நயந்தினி உடனே விடுதிக்கு கிளம்பினாள். நளினி ஆயிரம் பத்திரங்கள் கூறி அவளை அரை மனதாக தான் அனுப்பி வைத்தார்.
நயந்தினிக்குமே இந்த நிலைமையில் எப்படி விடுதியில் தனியாக சமாளிக்கப் போகிறோம் என்ற கவலையுடன் தான் விடுதிக்கு சென்றாள். ஆனால் அந்த கவலையே தேவையில்லை என்பதுபோல் விக்னவி அவளைப் பார்த்துக் கொண்டாள். நயந்தினியின் வேலைகளை அவளே செய்து முடித்து அக்கறையாக கவனித்தும் கொண்டாள். அப்படித்தான் இருவருக்கும் நட்பு மலர்ந்தது.
அப்போது மட்டுமில்லை அதன்பிறகும் நயந்தினியின் வேலைகளை அதிகம் விக்னவியே செய்து முடித்துவிடுவாள். தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அவள்மீது நயந்தினிக்கு ஒரு இனம் புரியாத பாசம் வந்துவிட்டது. அதிலும் விக்னவிக்கு நடந்தை கேட்டதும் அது இன்னும் அதிகமாக கூடிவிட்டது.
இப்போதும் நயந்தினியை தவிர யாரிடமும் விக்னவி நெருங்கி பழக மாட்டாள். அதைப்பற்றி ஒருநாள் நயந்தினி கேட்டப்போது தனக்கு நடந்தவைகளை விக்னவி சொன்னதும், நயந்தினி அப்படியே பதறி போய் தோழியை அணைத்துக் கொண்டு அழுதாள்.
கடைசியில் விக்னவி தான் அவளை ஆறுதல் படுத்தும்படி ஆனது. “நானே அதையெல்லாம் நினைச்சுப் பார்க்க விரும்பல நயன், என்ன அதிலிருந்து யாரோட பழகவும் பயம். இப்போ அந்த ஆள் உயிரோடவே இல்லை. இப்போ சித்தி என்னை அவங்களோட வச்சிக்க கூப்பிட்றாங்க, அவன் அவ்வளவு மோசமான ஆளுன்னு தெரிஞ்சும் அந்த ஆள் தான் முக்கியம்னு நினைச்சவங்களோட நான் எப்படி போய் இருக்கறது, இதுவே அவங்க பொண்ணுக்கு இப்படி நடந்தா அவங்க சும்மா இருப்பாங்களா?” என்று கேட்டவள்,
“அவங்க பொண்ணுக்கு ஏன் அப்படி நடக்கப் போகுது? நான் அனாதை தானே, எனக்கு அப்பா, அம்மா இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா? இப்போதும் அவங்க என்மேல இருக்க பாசத்திலா கூப்பிட்றாங்க, அவங்களை பொறுத்த வரைக்கும் படிப்பு முடிஞ்சதும் என்னை யாராவது ஒருத்தனுக்கு கல்யாணம் செய்து கொடுத்துட்டா அவங்க பொறுப்பு முடிஞ்சிடும், ஆனா எனக்கு கல்யாணத்தில் சுத்தமா நம்பிக்கையே இல்லை. கல்யாணம் என்கிற பேரில் ஒரு ஆணை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்க தயாரா இல்லை. அதனால திரும்ப அவங்களோட போய் இருக்க எனக்கு சுத்தமா விருப்பமே இல்லை. உண்மையை சொல்லப் போனா, சொந்தம் என்கிற பேரில் அவங்க இருந்தாலும் எனக்கு யாருமே இல்லை என்பது தான் உண்மை.” என்று விக்னவி சொல்லி முடிக்க,
“ஹே ஏன் அப்படி சொல்ற விக்கி, நான் இல்லையா? எப்போதும் நான் உனக்காக இருப்பேன் விக்கி, எப்போதும் உன்னை எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.” என்றாள் நயந்தினி.
தன் வாழ்க்கையில் அன்னை, தங்கைகளை போல் விக்னவிக்கும் மனதில் முக்கிய இடம் கொடுத்திருந்தாள் அவள், விக்னவிக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும்வரை அவளுக்கு துணையாக ஒரு நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பது தான் நயந்தினியின் எண்ணம். ஆனால் விக்னவிக்கு அப்படியில்லை. நயந்தினி தன்னுடனே எப்போதும் இருக்க வேண்டும், யாருக்கும் அவளை விட்டுக் கொடுக்கக் கூடாது. அது அவளது குடும்பமாக இருந்தாலும் சரி என்பதுபோல் இருக்க இருக்க மனதில் அழுத்தமாக அதை பதிய வைத்துக் கொண்டாள்.
விடுமுறை நாட்களில் நயந்தினி அவளது வீட்டிற்கு சென்றால் அவளது பிரிவை விக்னவியால் ஏற்றுக் கொள்ள முடியாது. உடன் அழைத்தாலும் செல்ல மாட்டாள். இருக்க இருக்க அந்த பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல், “நீ போனா தனியா இருக்கணும், என்னை விட்டுப் போகாத நயன், இந்த ஒருவாரம் உன்னைப் பார்க்கலன்னா உன்னோட அம்மா தங்கைகளால இருக்க முடியாதா? அப்படி உன்மேல பாசமா இருந்தா ஏன் உன்னை ஹாஸ்டலில் சேர்த்தாங்களாம், இங்க சென்னையில் இருந்துக்கிட்டே யாராவது ஹாஸ்டலில் தங்கி படிப்பாங்களா?
உன்னை அவங்களால் பிரிஞ்சு இருக்க முடியுது தானே, உன்னால அப்படி இருக்க முடியாதா? அவங்களுக்கு நீ இல்லன்னா இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, ஆனா எனக்கு நீ இல்லன்னா யார் இருக்கா? என்னை விட்டுப் போகாத நயன்,” என்று அதையே மந்திரம் போல் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க இருக்க, நயந்தினியும் அதை கேட்க ஆரம்பித்தாள்.
விக்னவியே உன் வீட்டுக்குப் போ என்று கூறினால் தான் நயந்தினி அவளது வீட்டிற்கு செல்வாள். அந்த அளவுக்கு அவளை விக்னவி மூளைச்சலவை செய்து மாற்றியிருந்தாள்.
அதுமட்டுமல்ல விக்னவியை தவிர நயந்தினி யாருடனும் நெருக்கமாக பழகுவது அவளுக்குப் பிடிக்காது. உடன் படிக்கும் மற்ற மாணவ மாணவிகளுடனோ, விடுதியில் இருக்கும் மற்ற மாணவிகளுடனோ அவள் நெருங்கி பழகுவதை விக்னவி விரும்பமாட்டாள். அப்படி சில நிமிடங்கள் யாருடனாவது பேசினால் கூட விக்னவி நயந்தினியிடம் சண்டை பிடிப்பாள். சிலசமயம் அது நயந்தினிக்கு எரிச்சலாக இருந்தாலும், விக்னவி நெகிழ்ச்சியாக பேசினால் போதும் நயந்தினி உருகிவிடுவாள்.
நளினிக்கோ விக்னவிக்கு நடந்ததெல்லாம் தெரியாது. ஆரம்பத்தில் மகளுக்கு ஒரு நல்ல தோழி கிடைத்திருப்பதாக தான் நினைத்தார். நயந்தினியும் அவளைப்பற்றி அடிக்கடி நல்லவிதமாக தான் கூறிக் கொண்டிருந்தாள். ஆனால் போகப் போக நயந்தினி நடந்து கொள்வது அவருக்கு சந்தேகத்தை வரவழைத்தது.
வாரவாரம் தங்களை பார்க்க வரும் மகள் இப்போதெல்லாம் அப்படி வராதது அவருக்கு உறுத்தலாக இருந்தது. முன்போல் அவள் தன்னிடமோ அவள் சகோதரிகளிடமோ பாசமாக பேசுவதும் இல்லை. ஏதாவது ஒருவாரம் வருபவள் அப்போதும் அலைபேசியும் கையுமாக தான் இருப்பாள். கேட்டால் எரிந்து விழுவாள். திட்டினாலோ, “உங்களுக்கு என்மேல பாசமே இல்லை. இருந்திருந்தா என்னை ஹாஸ்டலில் சேர்த்திருப்பீங்களா?” என்று கேட்பாள். தங்கைகளிடம் எதற்காகவாவது சண்டை பிடித்துக் கொண்டிருப்பாள்.
விக்னவி சரியே இல்லை அதனால் தான் நயந்தினி மாறிவிட்டால் என்பதை உணர்ந்து நளினி விக்னவியை குற்றம் சாட்டுபவர், அவளது நட்பை விடச் சொல்லி சொல்லும்போது, “அவளைப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அவளும் என்னோட இல்லன்னா நான் அந்த ஹாஸ்டலில் என்ன கஷ்டப்பட்டிருப்பேனோ, எனக்கு இருக்க நல்ல ஃப்ரண்ட் அவ மட்டும் தான், அவளோடவும் பேசக் கூடாது. இருக்கக் கூடாதுன்னா எப்படி?” என்று கேட்டு நயந்தினி அதற்கும் சண்டை போடுவாள்.
விடுதியில் சேர்த்தால் மகளிடம் நல்லப்படியாக மாற்றம் வரும் என்று நினைத்தால், அவளிடம் இப்படியான மாற்றங்கள் வந்ததில் நளினிக்கு மகளைப் பற்றிய கவலை அதிகமானது. இதில் விக்னவியுடனான நெருக்கம் எந்தமாதிரியான விபரீதத்தை கொண்டு வருமோ என்ற பயம் வேறு. இப்போதெல்லாம் என்னெனமோ கேள்விப்படுவதில் மகளைப் பற்றிய பயம் அவருக்கு கூடுதல் ஆகிக் கொண்டே போனது.
எப்படியோ படிப்பு முடிந்து மகள் வீட்டிற்கு தானே வரவேண்டும், அவளை மீண்டும் நல்லப்படியாக மாற்றிவிடலாம் என்று நளினி நினைத்திருக்க, படிப்பு முடிந்தால் நயந்தினியுடன் இருக்க முடியாது என்பதை விக்னவி உணர்ந்ததால், “எம்.எஸ் படிச்சா நமக்கு வெளிநாட்டிலேயே நல்ல வேலைக் கிடைக்கும் நயன், எனக்கு சித்தி கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. நாமளும் பிரிஞ்சு இருக்க வேண்டிய அவசியமேயில்லை.
அதுமட்டுமில்லாம என்னதான் உன்னோட அம்மா கவர்மென்ட் வேலை செய்தாலும் நீ ஒரு நல்ல வேலையில் இருந்தா உன் அம்மாவுக்கு அது ரொம்பவே உதவியா இருக்கும், உன்னோட தங்கைகளை நல்லப்படியா படிக்க வைக்கலாம்,” என்று திரும்ப திரும்ப அதைப்பற்றியே பேசி மூளைச்சலவை செய்ததில் நயந்தினியும் அதற்கு ஒத்துக் கொண்டாள்.
அதை நளினி தெரிந்து கொண்டபோது நயந்தினி விக்னவியின் நட்பை எப்படி பிரிப்பது என்று ஒன்றும் புரியாத நிலையில் தான் அவர் இருந்தார். அவை அனைத்தையும் தன்னை காண வந்த நிகர்வேலனிடம் சொல்லி முடித்தார் அவர். நன்மதியும் நன்மொழியும் பள்ளியில் விளையாட்டு பயிற்சிக்காக சென்றதால் தான் அவனை வரவழைத்து அவரால் இதுகுறித்து பேச முடிந்ததது.
அதைக்கேட்டு நிகர்வேலன் அமைதியாக இருக்க, “எனக்கு அவங்க ஃப்ரண்ட்ஷிப்பை பிரிக்க வேற வழி தெரியல நிகர், நயனி விக்கியோட படிக்கப் போனா, அதுக்குப்பிறகு என் மகள் எனக்கில்லை அதுதான் நிஜம். இந்த 3 வருஷத்தில் இவ்வளவு மாத்தினவ, அப்புறம் வெளிநாட்டுக்கு போனா என் மகளை எப்படியெல்லாம் மாத்திடுவாளோன்னு எனக்கு பயம் வந்துடுச்சு, வெளிப்படையாகவே சொல்றேனே, பொண்ணுங்களுக்குள்ளவே காதல், கல்யாணம்னு என்னென்னவோ இந்த காலத்தில் நடக்குது, அப்படி ஏதாவது நடந்தா என்ன செய்றது?” என்று அவர் கேட்க,
“அதுக்கு கல்யாணம் சரியான வழியில்லை அத்தை. நயாவுக்கு என்ன பிரச்சனைன்னு அவளிடம் பொறுமையா பேசலாம், தேவைன்னா கவுன்ஸ்லிங் கொடுக்கலாம், ஒருவேளை அப்படி ஒரு விஷயம் இருந்தாலும் அதுக்கு கல்யாணம் கண்டிப்பா சரியான முடிவு இல்லை. இதெல்லாம் யோசிக்காம நீங்க இப்படி ஒரு பெரிய முடிவு எடுத்திருக்க கூடாது.” என்றான் அவன்.
“இங்க பிரச்சனை நயனியிடம் கிடையாது. பிரச்சனை விக்னவியிடம் தான், நயனி அவளை நல்ல ஃப்ரண்டா மட்டும் தான் நினைக்கிறா, ஃப்ரண்ட்க்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் என்ற எண்ணம் மட்டும் தான் அவளிடம் இருக்கு, அப்படி அவ நினைக்க என்ன காரணம்னு தெரியல, ஆனா அதை விக்கி தனக்கு சாதகமாக்கிக்க பார்க்கிறா, நயனிக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சு தற்கொலை வரைக்கும் போனவளை சாதாரணமா எப்படி எடுத்துக்க முடியும்? அவளோட தொடர்ந்து நயனி பழகறது நல்லதா சொல்லுங்க, அவளைவிட்டு நயனி தள்ளியிருந்தா நல்லா இருக்கும்னு தான் நினைச்சேன்.
அதுக்கு என்ன செய்றதுன்னு யோசிச்சப்போ தான் இந்த வழி எனக்கு தோனுச்சு, அந்த சமயம் உங்க அந்தஸ்தோ வசதியோ எனக்கு தெரியல, அதை நான் பார்க்கவும் இல்லை. நயனி மேல நீங்க நேசம் வச்சிருக்கறது எனக்குப் புரிஞ்சுது. அதுமட்டுமில்ல அவளும் அங்க வந்தப்போ அவளிடம் நான் மாற்றத்தை பார்த்தேன். இந்த கல்யாணம் நயனியிடமிருந்து விக்னவியை பிரிக்க மட்டுமில்ல, உங்களைப் போல ஒரு நல்ல பையன் நயனிக்கு தேடினாலும் கிடைக்காது. அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன் என்கிற திருப்தி எனக்கு இருக்கு, அவ விருப்பப்பட்ட எதிர்கால வாழ்வு உன்மூலமா அவளுக்கு கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு நிகர்,
மேலும் மேலும் விக்னவியோட அவ பழகினா அவ அவளை ஏதாவது சொல்லி குழப்ப தான் பார்ப்பா, அது நடக்கக் கூடாது. அவளை விக்னவியோட வெளிநாட்டுக்கு போகவிடாம இருக்க தான் இந்த கல்யாணம் என்பதால அவ இதில் விருப்பம் இல்லைன்னு சொல்றா, ஆனா போகப் போக அவ மனசு மாற வாய்ப்பிருக்கு நிகர், ஆனா விக்னவியால எந்த பிரச்சனையும் வராம இருக்கணும், அவ ஏதாவரு பிரெயின்வாஷ் செய்து உங்களை பிரிக்க நினைப்பா, அதுக்கு நீங்க உடன்பட்டுடக் கூடாது. எதுக்காகவும் நயனியை நீங்க விட்டுடக் கூடாது. இதை ஒரு மடிப்பிச்சையா உங்களிடம் நான் கேட்கிறேன் நிகர்,” என்று அவர் சொல்லவும்,
அதில் பதறியவனோ, “அத்தை, ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க, நீங்க சொன்னமாதிரி நயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவளை நான் காதலிச்சேன். ஆனா மனசுக்கு பிடிச்ச பொண்ணை இப்படி ஒருநிலையில் கல்யாணம் செய்தது தான் எனக்குப் பிடிக்கல, அதிலும் அவளுக்கு இந்த கல்யாணமே பிடிக்கலன்னு தெரிஞ்சப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா? அதுக்குப்பின்னாடி பெருசா ஏதாவது இருக்குமோன்னு நான் பயந்தேன்.
ஆனா இப்படி ஒரு விஷயம் இருக்கும்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல, உண்மையா இதுக்கு என்ன செய்யணும்னு எனக்கு இதுவரைக்கும் தெரியல, நீங்க சொல்றதை பார்த்தா இந்த விஷயம் முள்ளு மேல விழுந்த துணி மாதிரி, கேர்ஃபுல்லா தான் ஹேண்டில் செய்யணும் முடிஞ்சவரை நான் நயாவோட இருப்பேன். ஆனா கடைசிவரைக்கும் நயாவால என்னை ஏத்துக்க முடியலன்னா பிரிவை தவிர இதுக்கு வேற வழியில்லை அத்தை.” என்று அவன் சொல்லிவிட்டு செல்ல, நளினி அந்த பதிலில் உறைந்து போய் நின்றார்.
அகம் சேர்வான்…
error: Content is protected !!