Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 13

அருந்ததியுடன் வேலை செய்யும் ஆசிரியை ஒருவருக்கு, சென்னையில் இருக்கும் வேளச்சேரியில் குழந்தை பிறந்திருந்தது.  அவரைப் பார்க்க என பள்ளியில் வேலை செய்த டீச்சர்ஸ் எல்லாம், மாலை ஸ்கூல் முடிந்து புறப்படவும், இவளும் அவர்களுடன் சேர்ந்து வந்திருந்தாள்.

இவர்கள் பள்ளி இருந்த இடமான முகப்பேருக்கும், வேளச்சேரிக்கும் சற்று தூரம் அதிகம்தான்.  வரும் போது அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேப் பிடித்து வந்திருந்தார்கள்.  திரும்ப போகும்போது அங்கிருந்து எல்லோரும் ஆட்டோ, பஸ் என அவரவர் வசதிக்கேற்ப தனித் தனியாக சென்றிருந்தனர்.  அருந்ததிக்கு அங்கிருந்து பஸ் வசதி இருந்தமையால் பேருந்துக்காக காத்திருந்தாள்.

வந்திருந்தது பழக்கமில்லாத புது ஏரியா என்பதால் இருட்டுவதற்கு முன்பு வீடு போய் சேர வேண்டும் என பதட்டத்துடன் நின்றிருந்தாள்.  பஸ் நிறுத்தத்தில் கூட ஒன்றிரண்டு பேர்தான் இருந்தனர்.  அவர்களும் அடுத்தடுத்து வந்த பேருந்தில் சென்றிருந்தனர்.  பேருந்து நிறுத்தத்தில், இவள் தனியாகதான் நின்றிருந்தாள்.

மழை வருவதற்கு அறிகுறியாக மேகம் கருமையடைந்து, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது.  மாலை ஆறு மணிக்கே, இரவு போல காட்சியளித்துக் கொண்டிருந்தது.



Advertisement

பேருந்தும் வருவது போல் தெரியவில்லை.  என்னடா இது தெரியாம வந்து மாட்டிகிட்டமோ, பேசாம ஆட்டோவாது பிடிச்சு போயிடலாமா என அவள் நினைக்கத் தொடங்கியிருந்த நேரம், சரியாக அவளது பக்கத்தில் வெள்ளைக் கலர் ஹோண்டா சிட்டி கார் வந்து நின்றது.  காரின் கதவைத் திறந்து அஸ்வத் இறங்கினான்.

அஸ்வத்தை எதிர்பாராமல் அங்கு பார்த்ததில் அருந்ததி, இவரா…?  இவர் இங்க… எங்க என நினைத்தாள் மனதில்.

அஸ்வத் தூரத்தில் வரும் போதே இவளைப் பார்த்துவிட்டான்.  பர்சனல் வேலையாக ஒரு இடத்திற்கு சென்று திரும்பும் வழியில் தான் பார்த்திருந்தான்.  அருந்ததியைப் பார்த்ததும் அவனுக்கு இன்ப அதிர்ச்சிதான்.  அதுவும் இவள் தனியாக இருப்பதைப் பார்த்ததும் இரட்டிப்பு சந்தோஷம்.

Advertisement

எப்போதும் அவன் பார்க்க நேரிடும் சமயமெல்லாம் தோழிகளுடனே இருப்பாள்.  இப்பொழுதுதான் முதல் முறை தனியாகப் பார்க்கிறான்.  இவளைத் தூரத்தில் பார்த்ததுமே காரின் வேகத்தை குறைத்து, அருந்ததி தானா என பார்த்துவிட்டு காரை அவளருகில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான்.

Advertisement

“ஹாய்….”

“ஹலோ ஸார்”.

“இங்க எங்க… யாருக்காவது வெயிட் பண்றீங்களா…?” என்றான் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து கொண்டே, யாராவது வருகிறார்களா என.

Advertisement

“இல்லல்ல.  யாருக்காகவும் வெயிட் பண்ணல.  என் கூட வொர்க் பண்ற டீச்சர்க்கு கொழந்த பொறந்திருக்கு. அவங்களை பார்க்க டீச்சர்ஸ் எல்லாரும் ஒன்னா வந்தோம்.  கூட வந்தவங்க எல்லாம் வேற சைட்.  கிளம்பிட்டாங்க.  நான் பஸ்காக வெயிட் பண்றேன்….” என்றாள்.

“ஓஹ்… சரி வாங்க.  நான் ட்ராப் பண்றேன்”.

“இல்ல, ஸார் இருக்கட்டும்”.

“அட பரவாயில்லை, வாங்க நான் ட்ராப் பண்றேன்.  பஸ் வர எவ்வளவு நேரம் ஆகும்னு சொல்ல முடியாது. மழை வேற வர மாதிரியிருக்கு. வாங்க…” என்றான்.

ஆமாம்.  இவர் சொல்ற மாதிரி மழை வந்துடுச்சுனா என நினைத்தவள், சரியென்று அவனுடன் நடந்தாள்.  முன் பக்க கார் கதவை திறந்து அவளை உட்கார வைத்தவன், அவள் பக்க கதவை சாற்றி விட்டு டிரைவர் சீட்டில் வந்து அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

இவள் ஏறுவதற்காகவே காத்திருந்தது போல மழை வலுக்க ஆரம்பித்தது.  காரினுள் ராஜாவின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

வெளியே குளிர்ந்த காற்றுடன் சில்லென அடை மழை.  காரினுள்ளே இசைஞானியின் இசை மழை.  பக்கத்தில் மனதிற்கினியவள்.  அந்த ஏகாந்தத்தை என்ன முயன்றும் அவனால் அனுபவிக்காமல் இருக்க முடியவில்லை.

எதிர்பாராமல் அவளை இங்கு பார்த்தது அவனுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.  அதைவிட அவளுடன் சேர்ந்த இந்த மகிழ்ச்சியான பயணத்தில் மனம் ஆனந்த மயமாக கூத்தாட துவங்கியது.

தன் மனதின் ஆசையை அவளிடம் சொல்வதற்கு தக்க சமயம் எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு, கிடைத்த நல்ல வாய்ப்பு என நினைத்துக் கொண்டான்.

மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்தான்.  “நீங்க அந்த வீட்லருந்து காலி பண்ணீட்டீங்களா?” என.

“‘நான் இருந்த இடம் உங்களுக்கு தெரியுமா…?” என திரும்பி அவனை ஆச்சர்யமாக பார்த்தாள்.  அவளுக்கு மனதில் இவருக்கு எப்படி தெரியும்?  அதுவும் நாங்க வெக்கேட் பண்ணதகூட கரெக்டா சொல்றார் என தான் இருந்தது.

“ம்ம்… ராகவன் சொன்னார்”.

“ராகவன் அண்ணாவ உங்களுக்கு தெரியுமா…?” என்றாள் இன்னும் ஆச்சர்யமாக.

“ம்ம்…” என்றவன், ராகவன் ஸ்டேஷன் வந்தது, கம்ப்ளெய்ன்ட் செய்தது என எல்லா தகவல்களையும் அவளிடம் கூறினான்.

அஸ்வத் சொல்ல சொல்ல அருந்ததி அவனைத்தான் பார்த்திருந்தாள்.  ஓஹ்… இவர் இன்ஸ்பெக்டரா… என.

“கம்ப்ளெய்ன்ட் வந்ததும், அவன்கள விசாரிக்க நானே அங்க வந்திருந்தேன்”.

“நீங்களா…?  நான் பார்க்கவே இல்லையே உங்களை”.

“போலீஸ் விசாரணைக்கு வந்திருக்காங்கன்னு ராகவன் அங்க வந்திருந்தாரா…?”

“ஆமாம்.  வந்திருந்தாங்க”.

“அன்னைக்கு நான்தான் வந்திருந்தேன்”.

“ஓஹ்….”

“நீங்களும், உங்க பிரண்ட்ஸ் எல்லாரும் ராகவனோட வீட்டுக்கு வெளிய நின்னு பேசிட்டிருந்தீங்க”.

ஆமாம்.  அன்னைக்கு ராகவன் அண்ணா எங்ககிட்ட எல்லாம் பத்திரமாயிருங்கன்னு சொல்லிட்டு கிளம்பும்போது நாங்களும் அவர்கூடவேதான வெளிய வந்து பேசிட்டிருந்தோம் என அன்றைய நிகழ்வை நினைத்துப் பார்த்தாள்.

“வெளிய இருந்தே ராகவனோட பேசிட்டு போயிட்டேன்.  எனக்கு நீங்க அங்கதான் தங்கியிருக்கீங்கன்னு தெரியாது.  கிளம்பற நேரத்தில, நீங்க உங்க ப்ரண்ட்ஸ் இரண்டு பேரும் வெளிய வந்து நின்னு ராகவனோட பேசிட்டு இருந்ததை பார்த்தேன்.  அப்பதான் நீங்க அங்க தங்கியிருக்கறது தெரிஞ்சது”.

அஸ்வத் பேச பேச அன்றைய சம்பவத்தை நினைத்து முகம் மாறியது அவளுக்கு.

அதைப் பார்த்தவன் “ரொம்ப பிரச்சனை கொடுத்தானுங்களா?” என்றான்.

அவளுக்கு அந்த நினைவுகளின் தாக்கம் இன்னமும் இருந்தது மனதில். அந்த நினைவிலேயே “ம்ம்… ஆமாம்.  ஆரம்பத்துல அவன்கள கண்டுக்காம தான் இருந்தோம்”.

“ஆனால், அதையே அட்வான்டேஜா எடுத்து கிட்டு ரொம்ப இன்டீசன்டா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க.  பொறுக்க முடியாமதான் ஹவுஸ் ஓனர் கிட்ட சொல்ல போய் தகராறாயிடுச்சு.  அப்புறம் ராகவன் அண்ணாகிட்ட சொல்லி அவங்க வந்து பேசியும் அவனுங்க அடங்கலன்னுதான் கம்ப்ளெய்ன்ட் பண்ணாங்க உங்ககிட்ட”.

“அவன்களை அரெஸ்ட் பண்ணதா அண்ணா சொன்னாங்க…”

ஆமாம் என தலையசைத்தவன், “வாங்குன உதைக்கு இனி எப்பவும் தகராறு பண்ற தைரியம் அவனுங்களுக்கு வராது.  வார்ன் பண்ணி தான் அனுப்பியிருக்கேன்.  இனி இந்த ஏரியாப் பக்கமே தலை வைக்க மாட்டானுங்க”.

மழை இன்னும் தூரிக் கொண்டு தான் இருந்தது.  மீண்டும் இருவரிடமும் அமைதி.

அருந்ததியின் மொபைல் ரிங் ஆனது.  அவளது அம்மா தான் அழைத்திருந்தார்.

“சொல்லும்மா…”

“வீட்டுக்கு போயிட்டியா டா…?”

“போயிட்டிருக்கேன் ம்மா”.

“அருந்ததி மா… அ..து…” என சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் தயங்கினார் புவனா.

“சொல்லும்மா… என்னவோ சொல்ல வந்த…, நிறுத்திட்ட”.

ஒன்னும் இல்லடா.  இங்க உங்கப்பா சீரியஸா கல்யாண ஏற்பாடு பண்ணிட்டிருக்காரு.

“அம்மா…  கடுப்பேத்தாதீங்க இரண்டு பேரும்.  நான்தான் முதலே சொன்னேன் இல்ல.  நீங்கதான் பொண்ணு பார்க்கதான வராங்கனு என்னை சமாதானப் படுத்தனீங்க.

“கொஞ்ச நாளாகட்டும்னு.  அப்பாக்கு பேசி புரிய வை மா.  இல்ல நானே மாப்பிள்ளை வீட்டுல போன் பண்ணி எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்லிடுவேன் பார்த்துக்கோ…”

“ஏய், அப்படி எதுவும் செஞ்சிடாதடாமா.  அப்பா கோவப்படுவாங்க” என்றார் புவனா பதறிப்போய்.

“ம்மா உனக்கு புரியுதா இல்லையா…?  இது என் லைப்.  நீ எப்ப பாரு அப்பாவ சொல்லியே என்னை சமாதானபடுத்தனும்னு நினைக்காத”.

“நான் என்னடா பண்ணட்டும்.  அப்பா கிட்ட பேசி பார்த்தேன்.  அவர் பிடிவாதமாயிருக்காரு.  நானும் என்ன பண்றதுன்னு தவிச்சிட்டிருக்கேன்.  இதுல உங்கப்பா வேற உன்கிட்ட மாப்பிள்ள படிப்ப பத்தி பேசிட்டியான்னு, என்னை போட்டு தெனமும் தொனச்சு எடுக்கறாரு”.

“நான் கல்யாணமே இப்ப வேணாம்னு சொல்லிட்டிருக்கேன்.  இதுல மாப்பிள்ளை படிப்ப பத்தி பேசறீங்க.  என்னால முடியாதுமா.  நீதான் அப்பாகிட்ட பேசி அவருக்கு புரிய வைக்கனும்.  நான் இப்ப வெளிய இருக்கேன்.  வீட்டுக்கு போய்ட்டு உனக்கு கால் பண்றேன்…” என போனை வைத்து விட்டாள்.

பெண் பார்க்கும் வைபவம் முடித்து அருந்ததி சென்னைக்கு வந்ததற்கு பிறகு வசீகரனது படிப்பை பற்றிய விவரத்தை  புவனா போன் மூலம் கூறியிருந்தார்.  அதில் இன்னும் கடுப்பாகியிருந்தாள்.

அஸ்வத்துக்கு, அருந்ததி அவள் அம்மாவிடம் போனில் பேசுகிறாள் என தெரிந்தது.  ஆனால் அவள் என்ன பேசுகிறாள் என அவன் காதில் விழவில்லை.

அவளை பார்ப்பதும், ரோட்டைப் பார்த்து கார் ஓட்டுவதுமாக இருந்தான்.

போன் பேசி முடித்ததும்தான், அஸ்வத் பக்கத்தில் இருக்கும் ஸ்மரணையே வந்திருந்தது அருந்ததிக்கு.  புவனா போன் செய்கிறார் என்றதும், ஒரு வேகத்தில் எடுத்து பேசிவிட்டாள்.

இப்பொழுது அவன் தன்னை திரும்பி திரும்பி பார்ப்பதை பார்த்து சங்கோஜமாக இருந்தது.  அச்சோ இப்படியா பக்கத்துல யார் இருக்காங்கன்னுகூட பார்க்காம பேசிவைப்ப என சங்கோஜப்பட்டாள்.

அஸ்வத் அருந்ததியை பார்ப்பதும் சாலையைப் பார்த்து கார் ஓட்டுவதுமாக இருந்தான்.

அதற்குமேல் பொறுக்க முடியாமல், “ஸாரி. அது அம்மா வீட்லருந்து பேசனாங்க.  அர்ஜென்ட் கால்…” என்றாள் அவன் கேளாமலே.

சரி என தலையசைத்து கொண்டவனுக்கு,  ஏதோ கல்யாணம்னு காதுல விழுந்துதே, யாருக்கு கல்யாணம் என தொண்டை வரை எழுந்த கேள்வியை கேட்காமலே நிறுத்தியிருந்தான்.  அவள் எனக்குதான் என ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது  என பயந்து கேட்காமலே இருந்தான்.

என்னடா இது எனக்கு வந்த சோதனை.  ஒரு பொண்ணு முன்னாடி…. ச்ச. எப்படிதான் அவனவன் லவ் சொல்றானோ.  எனக்கு மட்டும் இவள பார்த்தா பேச்சே வரமாட்டேனுது.  மூச்சே நின்னுடும் போலிருக்கு என புலம்பித் தவித்தவன் “அருந்ததி…” என அழைத்து விட்டான் தைரியமாக.

முதன்முறை அவள் முன்னால், அவளை பெயர் சொல்லி அழைக்கிறான்.  அதில் அவளுக்கு ஆச்சர்யம்.  “ஸார்…” என அவனைத் திரும்பி பார்த்தாள்.

“உங்க கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசனும்.  ஆனால் அதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தான் தெரியலை…”

இவன் பூடமாக பேசியதில் ஒன்றும் புரியாமல் “சொல்லுங்க ஸார்…” என்றாள்.

இன்ஜினை ஆப் செய்யாமல், காரை ஓரம் கட்டி நிறுத்தியவன், அவளைத் திரும்பி பார்த்து அமர்ந்தான்.

“நான் சொல்றத நீங்க தப்பா எடுத்துக்க கூடாது.  என்னடா இவன் ட்ராப் பண்றேன்னு அழைச்சிட்டு வந்து, இதமாதிரி பேசறானேன்னு நினைக்காதீங்க”.

“ரொம்ப நாளாவே உங்ககிட்ட பேசனும்னு நினைச்சிட்டிருக்கேன்.  அதுக்கான சந்தர்ப்பம் அமையலன்னுதான் நினைக்கறேன்.  இன்னைக்கு உங்களை இங்க பார்த்ததும் சந்தோஷமாயிடுச்சு.  அதான் பேசிடனும்னு முடிவு பண்ணிட்டேன்”.

“எனக்கு உங்களை  பிடிச்சிருக்கு.  பர்ஸ்ட் டைம் முதுமலையில பார்த்ததுல இருந்தே, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்”.

 “ஐ லவ் யூ… அருந்ததி” என மனதில் இருந்ததை சொல்லி விட்டான் அவளை நேரிடையாக பார்த்துகொண்டே.

அருந்தியும் அவனைதான் பார்த்திருந்தாள்.  இவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அப்படியே உறைந்திருந்தாள்.  சற்றும் அவனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.

இருவரின் பார்வையும் அப்படியே தேங்கியிருந்தது.

அவனது பார்வையை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தனது பார்வையை அவனிடமிருந்து விலக்கி கொண்டாள்.

“அருந்ததி…”

திரும்பி அவனைப் பார்த்தாள்.

“ஏன் சைலன்ட் ஆகிட்டீங்க…?  ஏதாவது சொல்லுங்க…?  பிடிச்சிருக்கு.  பிடிக்கல… ஏதாவது பேசுங்க…”.

ஒன்றும் பேசாமல் தலையை குனிந்துகொண்டாள்.  என்ன சொல்வது… என அவளுக்கும் புரியவில்லை.  ஏற்கனவே வீட்டில் நடக்கும் குழப்பங்களே அவளை நிலைகுலைய வைத்துக் கொண்டிருந்தது.  அந்த மனநிலையில் இருப்பவளுக்கு, இவன் சொல்லியது இன்னும் அதிர்ச்சியாகதான் இருந்தது.

சில நாட்களாக அவளும் குழம்பிதான் இருக்கிறாள்.  அன்று வசீகரனின் வீட்டில் இருந்து வந்து பெண் பார்த்து சென்ற போதெல்லாம் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.  யாருக்கோ, எதுவோ என்ற பாவம் தான் அவள் மனதில் இருந்தது.

ஆனால் சில நாட்களாக ஒரே சிந்தனை அவள் எண்ணத்தில்.  இந்த திருமணமத்தை எப்படி தடுப்பது என.

பெண் பார்த்த அன்று ஒன்றும் தோணாத வித்தியாசம், போக போக அவள் மனதை அச்சுறுத்தியது.  எதையோ இழப்பது போலவே இருந்தது, இந்த சில நாட்களாக…  தோழிகள் கூட “ஏன் டல்லா இருக்கடி, ஏதாவது உடம்பு சரியில்லையா…” என விசாரிக்கும் அளவு சோர்ந்திருந்தாள்.

இவ்வளவு குழப்பத்தில் இருக்கும் போது அஸ்வத் தன்னுடைய விருப்பத்தை சொன்னது, அவளுக்கு ஷாக்காக இருந்தது.  அவன் எதிர்பார்த்தளவு அவளுக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என தான் சொல்ல வேண்டும்.

அவனுக்கு, என்னடா இது… என்ற உணர்வுதான்.  இவள் ஒன்றுமே சொல்லாமல் இருந்தது இன்னும் ஏமாற்றத்தைக் கொடுத்தது அவனுக்கு.

“ஏன் ஒன்னும் பேச மாட்டேன்றீங்க….?”

“அ…து…, நீங்க இப்படி கேட்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை.  அதுதான்…” என்றாள் தயக்கமாக.

“ஏன் நான் லவ் பண்ணக் கூடாதா…?  இல்ல காலேஜ் படிக்கிற பையன் மாதிரி லவ் சொல்றேன்னு நினைக்கிறீங்களா…?”

“இல்லல்ல.  நான் உங்களை அப்படி எதுவும் நினைக்கலை”.

“வேற…?”

“ஏற்கனவே எங்க வீட்ல, அப்பா கல்யாணம் பேசிட்டிருக்காங்க…”

இப்பொழுது அவன் ஷாக்காகி அவளைப் பார்த்தான்.

“என்ன சொல்றீங்க…?” என்றான் அதிர்ச்சியாக

“ம்ம்… ஆமாம்.  இப்ப அம்மாகூட அதபத்தி பேசதான் போன் பண்ணாங்க.  எல்லாம் பேசி முடிவு பண்ணிட்டாங்க.  மண்டபம் கூட பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.  மண்டபம் கிடைச்சதும், கல்யாண டேட் ஃபிக்ஸ் பண்ணிடுவாங்கன்னு அம்மா சொன்னாங்க”.

“ஜஸ்ட் பேசியிருக்காங்க அவ்வளவுதான.  நான் வந்து உங்க வீட்ல பேசட்டுமா…?  ஐ மீன் எங்க அப்பா அம்மாவ வந்து பொண்ணு கேட்க சொல்லட்டுமா…?” என்றான்.

இதுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை அவளுக்கு.  அங்கிருந்து தப்பித்தால் போதும் என இருந்தது அவளுக்கு.  அதனால் “டைமாகுது போலாமா…” என்றாள்.

அவனும் அதற்குமேல் அவளிடம் வாதிடாமல் காரை எடுத்தான்.  அருந்ததியின் வீடு வரும் வரை இருவருக்குள்ளும் அமைதிதான்.  எந்த பேச்சும் இல்லை.

வெளிகேட்டின் வாசலிலேயே காரை நிறுத்தியவன், அவள் இறங்கும் போது “யோசிச்சு சொல்லுங்க.  நான் உங்க பதிலுக்காக வெயிட் பண்ணிட்டிருப்பேன்” என, அவள் போன் நம்பரை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@

நித்யா வசீகரனை முறைத்துக் கொண்டிருந்தாள்.  வசீகரனுக்கோ இவளது முறைப்பில் சிரிப்புதான் வந்தது.  ஏதோ சின்னப் பிள்ளை அடம் பிடித்து முறைத்து கொண்டிருப்பது போல இருந்தது அவனுக்கு.  அவன்  வந்ததிலிருந்து இப்படிதான் கோவமாக முகத்தை உர்ரென்று வைத்திருக்கிறாள்.

அவனும் அவளை கண்டு கொள்ளவில்லை.  கைகால் சுத்தம் செய்து வந்தவன், அடுக்களைக்குள் சென்று, சாப்பிட என்ன இருக்கிறது என பார்த்து தானாகவே எடுத்து வைத்து சாப்பிட்டு கை கழுவி எழுந்து சென்று படுத்திருந்தான்.

ஆனால் நித்யாதான் இன்னும் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பாடில்லை. அங்கேயே நின்று அவனை முறைத்திருந்தாள். மாதக் கணக்கில் ஆகியிருந்தது அவன் இங்கு வந்து.

அன்று தன்னுடைய திருமண விஷயத்தை அவளிடம் கூறி சென்றவன் தான்.  அதன் பிறகு அவள் வீட்டிற்கு வரவேயில்லை.

அதுவும் அன்று செல்லும்போது அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றது, அவளுக்கு இன்னும் ஆத்திரத்தை உண்டு பண்ணியிருந்தது.

சிறு குழந்தைபோல் அவன் வரட்டும்.  அன்னைக்கு வி்ட்டுட்டேன்.  இப்போ வரட்டும் அவன்.  அவன் சட்டைய பிடிச்சு உலுக்கி சண்டை போடறனா இல்லையா பார் என ஆத்திரத்துடன் இருந்தாள், இத்தனை நாட்களும்.

என்கிட்டயே அவன் கல்யாணத்தைப் பத்தி பேசுவானா.  வரட்டும் அவன்.  வீட்டுக்குள்ளயே விடமாட்டேன்.  கழுத்த பிடிச்சு வெளிய தள்ளறேன் என உள்ளுக்குள் கறுவிக் கொண்டிருந்தாள்.  ஆனால் இதெல்லாம் அவனைப் பார்க்கும் க்ஷணம் வரை தான்.

அவனைக் கண்ட நிமிடத்தில், அவள் உள்ளம் பாகாக, அவன் புறம் கரைந்து கொண்டிருந்தது.  மனதை அவன் புறம் சாயாமல் பிடித்து நிறுத்த போராட வேண்டியதாக இருந்தது.  இதோ இழுத்து பிடித்து கோவமாக நின்றிருந்தாலும், அவளையும் மீறி அவள் மனது அவன் மீதுதான் சென்றது.

உனக்கு கொஞ்சமாவது ரோஷம் வருதா, சூடு சுரணையே இல்லையா…? அவன் உன்னை விட்டு வேற ஒரு கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்லிட்டு போனான்.  நீ என்னடான்னா மானங்கெட்டுப் போய் அவன் பின்னாடியே போறயே என்று அவள் மனம் அவளைக் கேள்விக் கேட்டு  கொண்டிருந்தது.

இத்தனை மாதம் வராததில், அவ்வளவுதான் தன்னை மறந்து விட்டான்.  இனி இங்கு வர மாட்டான், அவனுக்கும் தனக்குமான தொடர்பு முடிந்தது என மருகி இருந்தாள்.  தினமும் அவனை நினைக்காத நேரமில்லை அவள்.

எல்லாம் முடிந்தது வாழ்க்கையில் என சோர்ந்து பலமிழந்து போன சமயத்தில் திடீரென்று வந்து நின்றவனை பார்த்து துள்ளிக் குதித்த மனதை அடக்கும் வழியறியாமல் திகைத்து நின்றாள்.

இவ்வளவு நடந்தும் அவனை பார்த்து இளிச்சேன்னா உன்னை சுத்தமா வெட்கங் கெட்டவன்னு முடிவே பண்ணிடுவான் என அவளை அவளே வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்து நின்றிருந்தாள்.

அவனைப் பார்த்ததும் உண்டான சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!