Skip to content
Post Views: 3,611
ராஜேந்திரனுக்கு பயங்கர கோவம் வசீகரனின் குடும்பத்தின் மேல். இன்று தான் அவர் அவனது திருமணத்தைப் பற்றின செய்தியை அறிந்திருந்தார். தரகர் ராமு வந்து தெரிவித்து விட்டு சென்றிருந்தார்.
தெரிந்ததிலிருந்து அவருக்கு ஆத்திரம் வசீகரனின் மேல். வேற பொண்ணை கல்யாணம் பண்றவன், எதுக்கு என் வீட்டுக்கு வந்து, என் பொண்ணை பொண்ணு பார்க்க வரனும். இது இவனுக்கு முன்னாடியே தெரியாதா..? என்ற கொந்தளிப்பு.
ஏதோ அறியாப் பையன் மாதிரி…? கதை விடறாங்க. அம்மாவுக்கு பயந்து பொண்ணு பார்க்க வந்தான்னு.
கேட்க நம்பற மாதிரியா இருக்கு அம்மாக்கு பயந்தேன். ஆட்டுக்குட்டிக்கு பயந்தேன்னு. அடுத்தவங்களோட உணர்வுகளோட விளையாட இவனுக்கு என்ன அதிகாரம் இருக்கு என கொதித்து போயிருந்தார்.
Advertisement
இந்த சின்ன வயசுலேயே நல்லா ஒழுக்கமா தொழில் பண்றானேன்னு எவ்வளவு பெருமைப் பட்டேன் அவனைப் பார்த்து.
அதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு ஆக்கிட்டான். சின்ன பையன்னு நிரூபிச்சிட்டான் என கொதித்து போனார்.
ஒரு மரியாதைக்காவது நேர்ல வந்து மதிச்சு சொல்லிட்டு போனாங்களா..? சுத்த மரியாதை தெரியாத குடும்பம்.
Advertisement
இவனாவது ஏதாவது சொன்னானா. அப்படி என்ன இவன் பெரிய ஆள்…? என வசீகரனை காய்ச்சிக் கொண்டிருந்தார்.
Advertisement
இல்ல போன்லயாவது சேதிய சொல்லி, மன்னிப்பு கேட்டாங்களா…? இவ்வளவு நாள் கல்யாணத்தைப் பத்தி பேசும் போது ஓயாம ஒரு வாரத்துக்கு இரண்டு தரம் போன் போட்டு பேசுனவங்க, இதுக்கு பேச முடியலையா…?
இவங்களை நம்பி நான் மண்டபம் பார்த்து, பத்திரிக்கை அடிச்சு, சொந்தத்தை கூட்டி கல்யாணம் பண்ண இருந்தனே. என்ன ஆகியிருக்கும் என் நிலைமை. ஊருக்கு முன்னாடி என் முகத்தில கரியை பூசியிருப்பாங்க.
நல்லவேளை எப்ப பண்ண புண்ணியமோ தப்பிச்சேன். அப்பவே புவனா படிச்சு படிச்சு சொன்னாள். படிக்காத மாப்பிள்ளை வேணாங்க. அவசரப்படாதீங்க. நமக்கு சரிவராதுன்னு. நான்தான் புத்திகெட்ட தனமா அவள் பேச்சை கேட்காம போயிட்டேன். படிச்சவனா இருந்தா மட்டு மரியாதை தெரிஞ்சிருக்கும். அவன் படிக்கலன்றத நிரூபிச்சிட்டான் என கனன்று கொண்டிருந்தார்.
Advertisement
யாருக்கோ சொல்ற மாதிரி தரகர் கிட்ட சொல்லி அனுப்புறாங்க. நல்ல மரியாதை தெரிஞ்ச குடும்பம். தப்பிச்சோம்டா சாமி என ஆற்றமாட்டாமல் புலம்பித் தீர்த்தார்.
அவருக்கு எங்கே தெரியப்போகிறது, சரசு போனில் சொல்ல கூச்சப்பட்டுக் கொண்டு தான், தரகரிடம் சொல்லிவிட்டார் என்று.
வசீகரன் அதற்கு மேல் ஒரு படி சென்று யோசித்தான். நேரில் பார்த்து பேசினால், ஏதாவது தேவையில்லாத வீண் விவாதம் ஏற்படும் என அவரை நேரில் சந்தித்து பேசுவதையே தவிர்த்திருந்தான்.
இருவரும் ஒரே தொழிலில் இருப்பதால் நிச்சயம் நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அட்லீஸ்ட் நேரில் பார்க்காமல் விஷயத்தை தரகர் மூலம் தெரிவித்தாலாவது, எங்காவது நேரில் பார்க்க நேர்ந்தால் வெறும் மனக்கசப்புடன் நகர்ந்து விடலாம் என நினைத்திருந்தான்.
அதுதான் உண்மையும் கூட. அவர்கள் வீட்டில் இருந்து யாராவது நேரில் வந்து தெரிவித்திருந்தால், ஒரு வழி செய்திருப்பார் ராஜேந்திரன் அவர்களை. அவர்தானே இந்த சம்மந்தத்தை அதிகம் எதிர்பார்த்திருந்தது. இந்த ஏமாற்றத்தை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
பாரிஜாதம் கூட, “அட பார்க்க நல்ல மனுஷங்களா… இருந்தாங்க, நல்ல குடும்பம்னு நினைச்சேன். அந்த பிள்ளையாண்டான் பார்க்க நாகரிகமா…. இருந்தானேன்னு பார்த்தேன். இப்படி செஞ்சுட்டானே “என அவரது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
இதில் புவனாவும் அருந்ததியும் தான் சந்தோஷப்பட்டது. இருவருக்கும் எதிலிருந்தோ விடுபட்டதுபோல அப்பாடா என இருந்தது.
ஒரு பக்கம் கணவரை நினைத்து புவனாவுக்கு வருத்தம் இருந்தாலும், மகளை நினைத்து, மகளுக்காக ஆசுவாசப்பட்டார். அந்த மீனாட்சியே வேணாம்னு நினைச்சிட்டாள் போல. அதான் தடங்கலாயிடுச்சு என்று நிம்மதியானார்.
அருந்ததிக்கும் போன் செய்து சொல்லியிருந்தார் இங்கு நடந்ததை விவரமாக. அவளுக்கும் எதிலிருந்தோ தப்பித்த உணர்வுதான். நெடு நாட்களாக அவளை போட்டு அரித்தெடுத்த பிரச்சினையிலிருந்து விடுதலை.
இப்படி வசீகரன் நித்யா திருமணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வைக் கொடுத்தது.
அருந்ததி ஆட்டோவில் வந்து இறங்கினாள். அது தனி வீடு தான். வீட்டிற்கு முன்னே ஜாடிகளில் பல வண்ணங்களில் பூச்செடிகள் வரிசை கட்டியிருந்தன. ரோஜா, மல்லி, சாமந்தி என எல்லா வகை பூக்களும் பூத்திருந்தது.
வீடே விழாக் கோலமாக காட்சியளித்தது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நிறைய மனிதர்கள் இருப்பது போலிருந்தது. அச்சோ நிறைய பேர் இருப்பாங்க போல இருக்கே. வந்திருக்க கூடாதோ..?
இவங்க ரொம்ப வேண்டி கூப்பிட்டாங்கன்னு தான் வந்ததே என எண்ணியவாறே வெளி கேட்டைத் திறந்து காம்பௌண்டிற்குள் நடக்க ஆரம்பித்தாள்.
அன்று ஸ்கூல் விடுமுறை தினம். ஆதலால் காலையிலேயே தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து, ஆயாசமாக படுத்து தூங்கி எழுந்து, சாவகாசமாக கிளம்பி வந்திருந்தாள்.
மாலைதான் பிறந்த நாள் விழா என்பதால், முன் மாலையில் கிளம்பியிருந்தாள் அவள் வீட்டிலிருந்து.
முதலில் வரவில்லை, எனக்கு இது எல்லாம் பழக்கமில்லை. நான் யார் வீட்டு பங்ஷனுக்கும் போனதில்லை என மறுத்து விட்டாள்.
ஒரு மாணவர் வீட்டு பங்ஷனுக்கு சென்று இன்னொருவர் வீட்டுக்கு செல்லவில்லை என்றால் அது அவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கும் எனகூட பூஜாவிடம் சொல்லிப் பார்த்தாள்.
ஆனால் பூஜா ஒத்துக் கொள்ளவே இல்லை. நீங்கள் வந்தே ஆகவேண்டும் என ரொம்ப ரிக்வெஸ்ட் செய்து அழைத்ததால் அவளால் மறுக்க முடியவில்லை. ஒரு அளவுக்கு மேல் சொன்னா அலட்டற மாதிரி இருக்குமோ என தயங்கிக் கொண்டே தான் இங்கு வந்திருந்தாள்.
ஸ்கூல் ஆசிரியை என்ற முறையில் வந்திருந்ததால், நீட்டாக சில்க் காட்டன் சேரியில், அதற்கேற்றவாறு கண்ணை உறுத்தாத ஆபரணங்கள் அணிந்திருந்தாள்.
இங்கிருந்த கும்பலைப் பார்த்ததும் சங்கோஜம் வந்தது அவளுக்கு. கிப்ட் கொடுத்துட்டு சீக்கிரம் கிளம்பிடனும் என மனதிற்குள் சொல்லிக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள்.
இவளைப் பார்த்ததும் சைந்தவி ஓடி வந்து “ம்மா மிஸ் வந்துட்டாங்க…” என சந்தோஷமாக அருந்ததியைக் கட்டிக் கொண்டாள். பின் அவ்வளவு ஆசையாக தன்னுயை மிஸ்ஸை, தனது பிறந்த நாள் விழாவிற்கு அழைத்திருந்தாளே.
இந்த ஒரு வாரமாக ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது எல்லாம் நித்தமும் ஞாபகப்படுத்திவிட்டு தான் செல்வாள்.
“மிஸ் மறக்காம வந்திரனும். உங்களுக்காக வெயிட் பண்ணுவேன். நீங்க வந்தா தான் நான் கேக்கே கட் பண்ணுவேன்” என மழலையான குரலில் பிளாக் மெயில் வேறு.
அச்சோ இந்த பொம்ம குட்டி என்னை பேசியே மயக்கறாளே என நெகிழ்ந்திருந்தாள். பின் இதுவெல்லாம் அஸ்வத்தின் ட்ரெயினிங் அல்லவா? ஆம் அவன்தான் இவர்களை வைத்து அவளை அழைத்தது.
பூஜாவிடம் சொல்லியே விட்டான் தனது விருப்பத்தை. எத்தனை நாள் மூடி மறைப்பது என. அருந்ததியின் வீட்டில் திருமணத்திற்கு பார்க்கிறார்கள் என அறிந்ததிலிருந்து அவனுக்கு உறக்கமேயில்லை.
அன்று அருந்ததியிடமிருந்து போன் நம்பர் வாங்கி வந்தவன்தான், ஆனால் அவளுக்கு போன் எதுவும் செய்யவில்லை. நேராக வீட்டினரிடம் சொல்லி பெண் கேட்பது என முடிவெடுத்து பூஜாவிடம் தெரிவித்து விட்டான்.
பூஜா, “டேய் என்னடா சொல்ற?” நிஜமாவா…? என்றாள் கண்களை விரித்து நம்ப முடியாமல்.
ஆமாம் என ஒத்துக் கொண்டவன், ஆரம்பத்தில் அவளை முதுமலையில் பார்த்ததிலிருந்து, அன்று மழையில் அருந்ததியை ட்ராப் செய்த வரை சொல்லியிருந்தான். ஆனால் அருந்ததியிடம் தன் விருப்பத்தை தெரிவித்ததைப் பற்றி பூஜாவிடம் மூச்சு விட வில்லை.
இதைக் கேட்டு பூஜா ஏதாவது நேராக அருந்ததி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம். அவள் ஏதாவது தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்ற அச்சம் இருந்தது அவனுக்கு.
இன்னும் அவள் விருப்பம் தெரிந்திராத பட்சத்தில் பூஜாவிடம் சொல்ல தயக்கமும் இருந்தது.
பூஜா. “டேய் இவ்வளவு பண்ணவன், நீயே அவங்ககிட்ட நேரா உன் விருப்பத்தை சொல்ல வேண்டியதுதானடா?” என முறைத்தாள்.
அவளுக்கு இலேசாக கோவம்கூட. இவ்வளவு நடந்திருக்கு. அமுங்கினி மாதிரி என்கிட்ட எதையும் சொல்லாம மறைச்சிட்டான் இல்ல. இவனுக்கு தேவைக்கு மட்டும் நானா… என.
“ப்ச், ஏன் டென்ஷன் ஆகற. நான் என்ன சின்ன பையனா. லவ் சொல்லி பின்னாடியே அலைஞ்சு கரெக்ட் பண்றதுக்கு. பார்த்தேன், பிடிச்சிருந்தது. உங்க கிட்ட சொல்லிட்டேன். நீங்க தான் பார்த்து பேசி கட்டி வைக்கனும். அப்புறம் எதுக்கு கூடப் பொறந்தவன்னு நீ இருக்க” என்றான் அசால்ட்டாக.
“அம்மாகிட்ட பேசினா அதையும் இதையும் பேசி, என்னை ஏதாவது பேச வைப்பாங்க. நீதான் அவங்களுக்கு ஏத்த மாதிரி பொறுமையா பேசி புரிய வைப்ப. அதான் உன்கிட்ட சொல்றேன். நீதான் அம்மாகிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணனும்” என்றான்.
“நல்லா வருவடா. ஏதோ கத்தரிக்காய கடையில வாங்குன்ற மாதிரி, இவ்வளவு அசால்ட்டா பேசற. அம்மா பத்தி தெரியுமில்ல…?”
கையில் இருந்த ஆப்பிளை தூக்கி போட்டு கேட்ச் பிடித்து கொண்டே “தெரியும்தான். தெரிஞ்சதாலதான், உன்கிட்ட வந்திருக்கேன்”. என்றான் சிரித்துக் கொண்டே.
“எவ்வளவு பெரிய மேட்டரை, இவ்வளவு ஈசியா என் தலையில கட்டறடா…”
“அப்புறம் அக்கான்னா சும்மாவா? நீதான் இதெல்லாம் செய்யனும்…” என்றான் கெத்தாக.
“ரொம்ப நல்லவன்டா நீ. நோகாம நோன்பு கும்பிடனும்னு நினைக்கற.”
“அம்மா கிட்ட என்னை கோர்த்து விட்டுட்டு நீ எஸ்கேப் ஆகுற. ம்ம்… என்ன ஆனாலும் உன் கெத்தை மட்டும் விட்டுடாதடா”.
“தம்பினு வந்து வாய்ச்சிருக்கான் பார்” என புலம்பதான் முடிந்தது அவளால். தன் கணவனிடம்கூட இதைப்பற்றி அவள் பகிரவில்லை.
அஸ்வத் அதற்கும் தடா போட்டிருந்தான். பூஜாவால் அவனை முறைக்க மட்டும் தான் முடிந்தது. இருந்தாலும் தம்பியின் மேல் உள்ள பாசத்தால் அடுத்து என்ன என யோசித்து அழகாக காய் நகர்த்த ஆரம்பித்திருந்தாள்.
தன் பெண்ணின் பிறந்த நாள் விழாவிற்கு அருந்ததிக்கு அழைப்பு விடுத்து, தன் பெற்றோரையும் அழைத்திருந்தாள்.
இந்த பங்ஷனில் தன் பெற்றோருக்கு அருந்தியை அறிமுகப்படுத்தி, பேச வைத்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தாள் மனதில்.
அஸ்வத்தின் விருப்பத்தை நேரிடையாக பெற்றவர்களிடம் சொல்லி, பேசவும் பயமாக இருந்தது பூஜாவுக்கு.
தன் பெற்றோரை அழைக்கும் பொழுது மாமனார் மாமியாரை எப்படி அழைக்காமலிருப்பது என அவர்களையும் அழைத்திருந்தாள். உள்ளூரில் உள்ள சொந்தங்கள், நண்பர்கள் என ஒரு கூட்டமே கூடியிருந்தது அங்கே.
தன்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்ட சைந்தவியை அப்படியே கையில் அள்ளிக் கொண்டாள் அருந்ததி புன்னைகையுடன்.
அதில் சைந்தவிக்கு ஏக குஷி. அருந்ததி தன்னைத் தூக்கிக் கொஞ்சி, பிறந்தநாள் வாழ்த்து கூறி கன்னத்தில் முத்தம் வைத்ததும்.
பூஜா தம்பதியரும் சந்தோஷமாக வந்து அருந்ததியை வரவேற்று உள்ளே அழைத்து சென்று தன் வீட்டினருக்கு எல்லாம் அறிமுகம் செய்து வைத்தனர்.
அங்கே சைந்தவியின் வகுப்பில் படிக்கும் அவள் நண்பர்கள் சிலர் தங்கள் பெற்றோருடன் வந்திருந்ததால், அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
எல்லோரது பார்வையும் புதிதாக வந்த இவள் மேல்தான் இருந்தது. பூஜாவின் மாமியார் கூட அவரது மருமகளிடம், “சைந்தவி மிஸ்சா. ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா…” என்றார்.
விசாலினியும் அங்கேதான் இருந்தார். கனகா பேச பேச அருந்தியைத் தான் பார்த்திருந்தார். அவருக்கு மனதில் பொண்ணு நல்லா கிளி மாதிரியிருக்கா. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ என்ற எண்ணம்தான்.
அஸ்வத் வேலையிலிருந்து நேராக அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தான். காலையிலிருந்து வீட்டில் இருந்தவன், மதியத்திற்கு மேல் ஸ்டேஷனில் இருந்து அர்ஜென்ட் போன் கால் வரவும் சென்றிருந்தான்.
பூஜா கூட கத்திக் கொண்டிருந்தாள். “டேய் உனக்காக நான் பாட்டுக்கு எல்லாம் இங்க அரேன்ஜ் பண்ணி வச்சிருக்கேன். நீ பாட்டுக்கு எனக்கென்னன்னு கிளம்பற” என முறைத்துக் கொண்டிருந்தாள் தம்பியை.
“வந்திருவேன் க்கா. அர்ஜென்ட் ஒர்க். உன் எதிர்ல தான போன் வந்தது. கண்டிப்பா போயே ஆகனும் க்கா…”.
“லேட் பண்ணாத டா”.
“இல்லல்ல. சீக்கிரம் வந்துருவேன். நீ வேலைய கவனி…” என கிளம்பியிருந்தான்.
இதோ வேலை முடிந்ததும் நேராக உடையை கூட மாற்றாமல் அப்படியே வந்திருந்தான்.
அவன் உள்ளே நுழையும் போது அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அருந்ததி. இதுவரை அவனை காக்கி யூனிபார்மில் பார்த்ததில்லை. இன்று பார்க்கும் போது ஆளே மாறி பார்ப்பதற்கு கம்பீரமாக தெரிந்தான்.
இவனா அன்று தன்னிடம் தயங்கி தயங்கி காதல் சொன்னது என்ற ஆச்சர்யம்தான் பெண்ணுக்கு. அவனை இந்த புதிய பரிணாமத்தில் பார்த்து மலைப்பு.
அன்று அவன் பேசிச் சென்றதின் தாக்கம் பெண்ணிடம் இருக்கதான் செய்தது.
“பூ பூக்கும் ஓசை அதை கேட்கதான் ஆசை புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை”
என சில நாட்களாக பெண்ணின் மனமும் பறந்து ஓசையிடதான் செய்தது.
அஸ்வத் வந்ததும் அவனது மருமகள், உறவுகள் எல்லாம் சுற்றிக் கொண்டது அவனிடம் பேச என. ஆனாலும் அவனது கண்கள் அவளைத் தேடி கண்டுகொண்டு தான் நிம்மதியானது. இவளும் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள்.
விடாமல் தன்னையே பார்த்திருந்தவளைப் பார்த்தவன் யாரும் காணாதவாறு தனது புருவங்களை உயர்த்தி என்ன என்றான் உதட்டில் நெளியும் புன்னகையுடன்.
அச்சோ என நாக்கை கடித்து, மூக்கைச் சுருக்கி, ஒன்றுமில்லை என தலையசைத்து திரும்பிக் கொண்டாள் வெட்கத்தில்.
பார்க்கவே கவிதையாக இருந்தது அவனுக்கு.
பூஜா அவனிடம் வந்து “டேய் எல்லாரும் உனக்காகதான் வெயிட்டிங். அப்புறம் வந்து பேசலாம். போய் டிரஸ் மாத்திட்டு வா…” என்றாள்.
அவனும் பதில் பேசாமல் தலையசைத்து உள்ளே சென்றான்.
அங்கே ஹாலில் ஏற்கனவே எல்லாம் செட் பண்ணி ரெடியாக இருந்ததால், அஸ்வத் வந்ததும் கேக் வெட்ட ஆரம்பித்தனர். வந்திருந்தவர்கள் எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்தினைப் பாடி கைத்தட்ட, சைந்தவி அவளது நண்பர்களை பார்த்துக் கொண்டே சந்தோஷமாக, அவளது அன்னை சொல்லியது போல் மெழுகுவர்த்தியினை ஊதியனைத்து, கேக்கை கட் செய்து அவள் அன்னைக்கும் தந்தைக்கும் முதலில் ஊட்டிவிட்டாள்.
பின்பு அஸ்வத், அவளது தாத்தா பாட்டி என வரிசையாக ஊட்டி விட்டாள். அதற்குள் பூஜா கேக்கை கட் செய்து, வந்திருந்த எல்லோருக்கும் பிளேட்டில் வைத்து கொடுக்க ஆரம்பித்தாள்.
வந்திருந்த எல்லோருக்குமான விருந்தை புகழ்பெற்ற ஹோட்டலில் இருந்து தருவித்திருந்தனர். கேக் வெட்டியதுமே, விருந்து பறிமாறவும் ஆரம்பமாகியது.
சைந்தவிக்கு எல்லோரும் பரிசு கொடுத்து, தனித்தனியாக வந்து வாழ்த்தினைத் தெரிவித்து சாப்பிட ஆரம்பித்தனர். அருந்ததியும் சைந்தவிக்காக வாங்கி வந்த பரிசினை, அவள் கையில் கொடுத்து வாழ்த்தி முடிக்கும் தருணம், பூஜா வந்து அவளை விருந்துண்ண கைப்பிடித்து அழைத்துச் சென்று விட்டாள் விடாமல்.
அதுமட்டுமில்லாமல் அவளுடன் சேர்த்து சைந்தவி கிளாஸ்மேட்ஸ் அவர்களுடைய பெற்றோர் என உடன் அமரும் படியும் பார்த்துக் கொண்டாள். தெரிந்தவர்களாக சேர்ந்து அமர்ந்தாள் அவளுக்கு சங்கோஜமில்லாமல் இருக்கும் என அவர்களுடன் உட்கார வைத்தாள்.
அஸ்வத் எல்லாவற்றையும் பார்வையாலே பார்த்திருந்தானே தவிர அவளிடம் நெருங்கவேயில்லை. யாருக்கும் தங்களைப் பற்றி தெரிவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை.
எல்லாம் முறையாக பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடு நடக்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு. ஒதுங்கியிருந்தாலும் பார்வையெல்லாம் அவள்மேல்தான் இருந்தது, யாரையும் உறுத்தாத வண்ணம்.
அருந்ததியை தங்கள் வீட்டு விசேஷத்தில் பார்த்தது அவனுக்கு அத்தனை நிறைவாக இருந்தது. சொல்ல முடியா ஆசுவாசம். இப்பொழுதே அவனுக்கு சொந்தமானது போன்ற தவிப்பு.
அருந்ததி சாப்பிட்டு முடித்து பூஜாவிடமும் சைந்தவியிடமும் சொல்லி கொண்டு கிளம்பினாள்.
உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தவனை அழைத்த பூஜா, “அஸ்வத் இவங்களை ட்ராப் பண்ணிடறியா…? லேட் நைட் ஆயிடுச்சு. தனியா அனுப்ப பயமாயிருக்கு” என்றாள் தம்பியைப் பார்த்து.
ஆஹா… அக்கா கோடு போட சொன்னா.., ரோடு போடறாளே. கரும்பு தின்ன கூலியா வேணும்..? என புளகாங்கிதம் அடைந்தவன், தமக்கையின் செய்கையில் விரிந்த புன்னகையை மீசைக்கடியில் மறைத்து கொண்டு “சரி க்கா…” என கார் சாவியை எடுக்க சென்றான்.
இவரா… என பதறிய அருந்ததி, “வேணாம்… வேணாம்… அவரை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க..? நானே கேப் புக் பண்ணி போயிடுவேன். ஒன்னும் பயமில்ல…” என்றாள் பூஜாவிடம்.
அஸ்வத் சாவி எடுக்க சென்றதைப் பார்த்த விசாலினி என்ன என்று விசாரித்தார் மகளிடம்.
“சைந்தவி மிஸ்ச அஸ்வத்த விட்டு ட்ராப் பண்ண சொன்னேன் மா. லேட் ஆயிடுச்சு இல்ல. பாவம் வரமாட்டேன்னு சொன்னவங்கள, நான்தான் கம்பெல் பண்ணி வரவச்சேன். நமக்காகதான் வந்தாங்க”.
“இல்லங்க இருக்கட்டும் பரவாயில்லை” என்றாள் அருந்ததி. அவளுக்கு அவனுடன் மறுபடியும் தனியாகவா என பதட்டம்.
“ரொம்ப இருட்டிடுச்சு மா. இங்கிருந்து தூரம்னு வேற சொல்றாள். எதுவும் நினைக்காம, சங்கோஜப்படாம அஸ்வத்தோட போமா” என அவனுடன் செல்வதற்கு அவரே சிபாரிசு செய்தார்.
அச்சோ அம்மா அக்கான்னு குடும்பமே கோர்த்து விடுதே. தெரிஞ்சுதான் பேசறாங்களா…? தெரியாம பேசறாங்களா…?
நானே அவர் கூட போறதை அவாய்ட் பண்ணனும்னு பார்த்தா, இவங்க விட மாட்டாங்க போலயே என திகைத்து நின்றிருந்தாள்.
பூஜாவுக்கே சிரிப்பு வந்தது விசாலினி சொன்னதைக் கேட்டு. தனக்குள் மூண்ட சிரிப்பை மறைக்க அஸ்வத்தை திரும்பி பார்த்தாள்.
“நீயே காட்டி குடுத்துடுவ போலிருக்கு. ஸ்சு சிரிக்காத க்கா” என உதட்டசைத்தவனுக்கும் தாயின் கரிசனத்தில் சிரிப்பு பொங்கியது
அவனாலும் அதற்குமேல், அங்கே நிற்க முடியாமல் பூஜாவிடம் கண்களை காட்டி விட்டு, அருந்ததியைப் பார்த்து ஒரு தலையசைப்புடன் கார் எடுக்க நகர்ந்து விட்டான்.
அவளை யோசிக்கவே விடாமல் விசாலினி அவள் கைப்பிடித்து கார் வரை கூட்டி வந்தார்.
அவளுக்காக முன் பக்க கதவைத் திறந்து வைத்து விட்டு, அவன் ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டான்.
விசாலினி, “ஏறிக்கோமா..”
“ம்ம்…” என தலையசைத்த அருந்ததி தயங்கிக்கொண்டே கூச்சத்துடன் அவன் பக்கத்தில் உட்கார தயங்கி நின்றிருந்தாள். அன்று அவனுடன் சென்றதுபோல் இன்று சாதாரணமாக இருக்க முடியவில்லை. நெர்வசாக இருந்தது.
நெஞ்சு கூட்டில் படபடப்பு. கண்களில் அலைபுறுதல். முகத்தில் வெட்கம். சுவாசம் கூட சீராக இல்லை.
அவன் அவளைத்தான் பார்த்திருந்தான். மெல்ல தயங்கியபடியே அவனை ஏறெடுத்துப் பார்த்தவளை, கண்களாலேயே அவனருகில் இருந்த இருக்கையை காட்டி அமரச் சொன்னான்.
அதற்குமேல் ஏதும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டாள். பூஜாவிடமும் அன்னையிடமும் தலையசைத்து விடைபெற்றவன், மறு நொடி காரை கிளப்பியிருந்தான்.
அன்று போல் இன்றும் ராஜா சாங்ஸ் காரில் ஓடிக் கொண்டிருந்தது. எந்த பேச்சும் இல்லை இருவருக்குள்ளும்.
தனிமையில் இனிமை சேரக்க இதயங்கள் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது.
தொடரும்.
error: Content is protected !!