Skip to content
Post Views: 3,584
வசீகரனுக்கும் நித்யாவுக்கும் திருமணமான இந்த ஒரு மாதத்தில் எல்லாம் சரியாகி விட்டது என சொல்ல முடியாது. ஊடலும் கூடலுமாக சென்று கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை.
சரசு இன்னும் இருவரிடமும் முகம் கொடுத்து பேச வில்லை, பேசாமலும் இல்லை, ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் முகத்தை பார்க்காமல் ஜாடைமாடையாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்.
ராணி தாயோடு சில நாட்கள் இருந்துவிட்டு சென்றுவிட்டாள். அவளது குடும்பத்தை கவனிக்க என. அவளுக்கு இருதலை கொள்ளி போலதான் இருந்தது. தாயையும் விட்டுத் தர முடியவில்லை. அண்ணனையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.
தந்தையின் ஸ்தானத்தில் இருந்து அத்தனையையும் செய்தவன். செய்யப் போகிறவனும் அவன்தான். அவன் மேல் பாசமும் இருந்தது. கூடப் பிறந்த பிறப்பு அல்லவா…? அவளுக்கு இருக்கும் ஒரே உறவு அவன்தான். அவனுடன் உறவைக் கெடுத்துக் கொள்ள துணிவில்லை.
Advertisement
அதற்காக அவனுடன் சமாதானமும் ஆகிவிடவில்லை. அவளது அழைப்பின் பேரில் வந்த அவளது குடும்பமும், யாரோ, எவரோ போல் தூர நின்றே விசாரித்து விட்டு சென்றிருந்தனர். இன்று தாயும் மகனும் பேசாமல் இருந்தாலும் பின் ஒன்றாகி விடுவர். இது அவர்கள் குடும்ப விஷயம். நமக்கெதற்கு வீண் வம்பு என தலையிடவில்லை.
வசீகரன், “ஓய்… என்னடி நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ எனக்கென்னன்னு இருக்க…?” என்றான் புருவங்களை நெறித்து முறைப்புடன்.
நித்யா, “என்ன இப்ப உங்களுக்கு…?”
Advertisement
“அதான் அம்மா சொல்றாங்க இல்ல. கொஞ்சம் மதிச்சு கேட்கலாமில்ல. நீயும் பிடிவாதமா இருக்க”.
Advertisement
“ம்ப்ச்… நீங்களும் என்னை புரிஞ்சுக்க மாட்டீங்களா…? நாள் முழுக்க வீட்ல சும்மா உட்காருன்னா, என்னால முடியாது. எங்க போறேன்? வேற எடத்துக்கா வேலைக்கு போறேன்? அது என்னோட நிலம். என் சொந்த நிலத்தில வேலை பார்க்கறதுக்கா இந்த பாடு. எல்லாம் தெரிஞ்ச நீங்களும் இப்படி பேசக்கூடாது…” என்றாள் பொறுமையாக அவனுக்கு புரிய வைத்துவிடும் நோக்கத்துடன்.
“என்ன திரும்ப… திரும்ப… அதையே பேசிட்டு இருப்பீங்களா…? எனக்குப் பிடிச்சதை, என் வேலையை, நான் பண்றேன். யாருக்காகவும் இதை விட முடியாது…” என தெளிவாக, அதே சமயம் என்னை இதிலிருந்து மாற்ற முயலாதீர்கள் என அழுத்தமாக தெரிவித்தாள்.
இதெல்லாம் அங்கே சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் நடந்தது. சரசுவும் அவரது அறையில் இருந்து காதில் வாங்கிக் கொண்டிருந்தார் அமைதியாக.
Advertisement
ஆம் அவர்தான் வசீகரனிடம் முறையிட்டிருந்தார். நித்யா தினமும் அவளுடைய வயலுக்கு சென்று வர ஆரம்பித்திருந்தாள். திருமணமான அன்றே இதை பற்றிதான் வசீகரனிடம் பேசிவிட முடிவு செய்திருந்தாள்.
ஆனால் அன்று இருந்த குழப்பமான மனநிலையில் அவனிடம் பேச முடியாமல் போயிருந்தது.
அவள் பராமரித்து வந்த கறவையினங்கள், கோழி, ஆடு என எல்லாவற்றையும் அப்படியே விட மனதில்லை அவளுக்கு.
அவளுக்கென்று இருக்கும் அந்த நிலத்தையும் அந்த வீட்டையும் கவனிக்காமல் இருக்க முடியாது அவளால். மேலும் அவள் வளர்த்து வந்த கறவையினங்கள், ஆடு, கோழி என எல்லாவற்றையும் பராமரிக்க வேண்டி தினமும் அவளது வீட்டிற்கு சென்று வர துவங்கியிருந்தாள்.
ஒருவேளை அவள் அம்மா இருந்திருந்தால், நிம்மதியாக இருந்திருப்பாளோ என்னவோ? இப்போது யாரையும் நம்பி ஒப்படைக்க அவளுக்கு இஷ்டம் இல்லை.
வருமானம் வரும் தொழிலை, அப்படியே நிறுத்தவும் விருப்பமில்லை. ஆள் போட்டு பார்த்தாலும், நேரில் இருந்து கண்காணிப்பது போல் வராது என செல்ல ஆரம்பித்திருந்தாள்.
வசீகரனுக்கு இவள் ஏன் அலைய வேண்டும் என்ற எண்ணம். ஆள் போட்டு பார்த்து கொள்ளலாமே என கூறினான்.
அவள் நேரில் இருந்து காவல் காக்கும் போதே சிலர் ஏமாற்ற நினைப்பார்கள். பால் அளந்து விற்பனைக்கு கொடுப்பதிலிருந்து, தோட்டத்தில் பூக்கும் பூக்களை எடை போட்டு வியாபாரிக்கு கொடுப்பது வரை நிறைய தில்லு முல்லு நடக்க வாய்ப்பு இருக்கும். கவனமாக இருந்து பார்த்து கொள்ள வேண்டும்.
இதில் கறவைகளை பராமரிப்பதிலிருந்து, பூச்செடிகளுக்கு பார்த்து பார்த்து மருந்து தெளிப்பது, எரு வைப்பது, தண்ணீர் பாய்ச்சுவது என எப்போதும் அதிலேயேதான் அவள் புத்தி, எண்ணம், கவனம் எல்லாம் இருக்கும்.
இங்கு வந்ததிலிருந்து அது எல்லாம் இல்லாமல், எதையோ இழந்ததுபோல் தவித்துக் கொண்டிருந்தாள் மனதிலேயே.
ஆரம்பத்திலேயே வசீகரனிடம் இதைப் பற்றி பேசிவிட நினைத்தாலும், அவனின் விருப்பத்தையும் கேட்டு செய்யலாம் எனதான் இருந்தாள்.
ஆனால் திருமணமாகி வந்த சில நாட்களிலேயே அவளுக்கு அதையெல்லாம் பார்க்காமல், அங்கு போகாமல் இருக்க முடியாது என தெரிந்து விட்டது.
அது அப்படிதான். சிலர் கடமையாக செய்யும் வேலையை, சிலர் உணர்வுபூர்வமாக ஈடுபாட்டுடன் செய்வார்கள்.
நித்யாவுக்கும் அப்படிதான். அவள் அதை வருமானமாக மட்டும் பார்க்கவில்லை. தனக்கு பிடித்ததை செய்யும் ஆத்மதிருப்தி இருந்தது.
அதை இழக்க அவளுக்கு இஷ்டமில்லை. ஆனால் சரசுக்கு அவள் இதுபோல சென்று வருவதில் பிடித்தமில்லை.
இது என்ன ஆபிசுக்கு போற மாதிரி தினமும் கிளம்பிடறாள். அக்கத்து பக்கத்துல இருக்கவங்க கேட்கறதுக்கு பதில் சொல்ல முடியல. “எல்லாரும் என்ன…, உன் மருமகள் ஆபிசுல உத்தியோகம் பார்க்கிறாளானு கேட்கிறாங்க” என வசீகரனிடம் காய்ந்திருந்தார்.
நித்யாவுக்கு மாமியாரின் எண்ணம் புரிந்தாலும் அலட்டிக் கொள்ளவில்லை. இப்படி பேசற நாக்கு நாளைக்கு என்ன வேணா பேசலாம்.
எனக்குன்னு வருமானம் இருக்கனும். எனக்கென்ன அண்ணன் இருக்கானா…? தம்பி இருக்கானா…? சீர்னு ஏதாவது செய்ய…? இல்ல பெத்தவதான் இருக்காளா…? யாரும் இல்ல. என் பொழப்ப நான்தான் பார்க்கனும்.
எதை காரணம் வச்சும் எனக்குன்னு இருக்க அடையாளத்த நான் இழக்க, எனக்கு விருப்பமில்லை என்பதில் தெளிவாக இருந்தாள். அதில் உறுதியாகவும் இருந்தாள்.
இன்னைக்கு இவங்க பையன் என்னை கட்ன புடவையோட கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தாலும், நாளைக்கே இதே வாய் வேற என்ன வேணா பேசலாம் இல்லையா…? அதனால யாரையும் நம்பறதா இல்ல என்ற எண்ணம் அவளுக்கு.
ஏன் படிச்சவங்க மட்டும்தான் வேலைக்கு போகனுமா என்ன…? எங்கள மாதிரி நிலத்துல, சேத்துல உழைக்கறவங்க செய்யற வேலையெல்லாம் வேலையில்லையா…?
நாங்கலாம் மண்ணுல கால வைக்கலனா இவங்கலாம் சுகமா இருந்திட முடியமா…? அது என்ன அவ்வளவு கேவலம், வயல்ல வேலை பார்க்கறதுனா… என்ற கோவம் உள்ளுக்குள் நித்யாவுக்கு, மாமியார் பேசியதை கேட்டு.
அவர் வசீகரனிடம் கேட்கும்போது அவளும் அங்கேதான் நின்றிருந்தாள்.
“ஏன் உங்க அம்மா பேப்பர்ல படிக்கிறதில்லையா…? எத்தனை பேர் ஆபிஸ்ல வேலை பார்க்கிறத விட்டுட்டு விவசாயத்தை தேடி வராங்கன்னு. இந்த காலத்தில பொண்ணுங்களே விவசாயத்தை தேர்ந்தெடுத்து படிக்கிறது மட்டும் இல்லாம, அவங்களே ஆர்வமா அதில இறங்கியும் வேலை செய்யறாங்க”.
“எந்த காலத்துல இருக்காங்க உங்கம்மா. அவங்களே அவங்க காலத்துல உழைக்கலையா…?” என முறைத்து நின்றாள் வசீகரனை.
“அதுக்கு சொல்லலடி…”
“நீங்க எதுக்கும் சொல்ல வேணாம். தெரிஞ்சுதான கட்டிகிட்டீங்க. எனக்கு தெரிந்த தொழில் இதுதான், இதில் என்ன கௌரவம் வேண்டி கெடக்கு. பொய் சொல்லாம, ஏமாத்தாம, திருடாம செய்யற எந்த வேலையும் எனக்கு உசந்ததுதான்”.
“அதுமட்டுமில்ல. என்னை பெத்தவ காத்தோட காத்தா அங்க கலந்திருக்கறதா நான் நினைக்கறேன். நான் பொறந்ததுல இருந்து பார்த்திருக்கேன். எங்க அம்மா அவங்க கண்ணு மூடற வரைக்கும், அந்த நிலத்துலதான் பழியா கிடந்தாங்க. அவங்க உயிர் மூச்சே அந்த நிலம்தான். இப்ப எனக்கு அதுதான் அம்மா மாதிரி. அதனால எதுவும் மறுத்து சொல்லாதீங்க” என கண்கலங்கி நின்றாள்.
“நீங்க சொல்ற மாதிரி விற்கறதுக்கோ, இல்ல குத்தகைக்கு விடறதுக்கோ என்னால முடியாது. என் ஆயுசு இருக்க வரைக்கும், அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன். என் அம்மா மாதிரியே என் மூச்சு காத்தும் அந்த மண்ணுலதான் கலந்திருக்கு…” என்றாள் உணர்ச்சிமயமாக.
இதற்கு மேல் என்ன சொல்வது. வசீகரனுக்கும் அவளைப் புரிந்திருந்தது. அதற்கு மேல் ஏதும் பேச அவனுக்கும் விருப்பம் இல்லை.
“நீங்க சொன்ன எதுக்கும் நான் மறுத்து பேசலை, ஆனால் இந்த விஷயத்துல என் ஆசை இதுதான். இதை மாத்தவோ வேற பேசவோ நினைக்கக் கூடாது. சொல்லிட்டேன்…” என உறுதியாக சொல்லிவிட்டாள்.
இவள் பேச்சைக் கேட்டு சரசுக்கும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மருமகள் பேச பேச அவரும் கேட்டுகொண்டுதான் இருந்தார் அவரது அறையில் இருந்து.
அவள் சொல்றதும் நியாயம்தான. ஊர்ல எவளோ எதுவோ பேசறான்றதுக்காக நாம ஏன் அலட்டிக்கனும். ம்ம்…. நல்லாயிருந்தா சரி, என தன்னை தேற்றிக் கொண்டார்.
நல்ல தைரியசாலி தான். புருஷன் சம்பாதிச்சாலும் அவள் கால்ல நிக்கனும்னு நினைக்கிறாளே என முதல் முதலாக நித்யாவை நல்ல விதமாக நினைக்க ஆரம்பித்தார்.
ஹ்ம்ம்… இப்படி இவகிட்ட, எதுவோ இருக்கப் போய்தான் என் பையன் விழுந்துட்டான். இல்லனா என் பையன் ஒருத்தருக்கும் சிக்காத சிங்கமாச்சே.
இன்னும் அந்த தாய்க்கு கண்ணில் கண்ணீர்தான். வசீகரன் திருமணத்தை நினைத்து. பிள்ளைங்க பிள்ளைங்கன்னு என் சுகத்த கூட பார்க்காம, மாடா உழைச்சு கஷ்டப்பட்டு வளர்த்தேன். கடைசில இப்படி பண்ணிட்டானே என மகனை நினைத்து தினமும் ஒரு மூச்சு கண்ணீர் சிந்தி விடுவார். இருந்தாலும் அதிலேயே மனதை தேக்காமல், நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளவும் பழகிக் கொண்டிருந்தார்.
நித்யா பேச பேச வசீகரன் ஆ… என தான் பார்த்திருந்தான். இவளுக்கு இப்படிலாம்கூட பேச தெரியுமா என அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
பின்னே அவன் பார்த்து பழகிய நித்யா இது இல்லையே. மென்மையும் கனிவையும் மட்டுமே பார்த்திருந்தவனுக்கு நேருக்கு நேர் நின்று தைரியமாக, தெளிவாக நான் இப்படிதான் என தீட்சண்யத்துடன் அவள் பேசிய பேச்சை கேட்டவனுக்கு மலைப்புதான்.
ப்பாஹ்… இந்த பொண்ணுங்க எப்ப எப்படி பிஹேவ் பண்ணுவாங்கன்னு ஒன்னும் சொல்ல முடியல என்ற நினைப்புதான்.
அவனும் அவள் செல்ல ஆரம்பித்ததில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறான் அவளை நிறுத்திவிட. இதோ இன்று அதற்கு முற்றுபுள்ளியும் வைத்துவிட்டாள்.
சின்ன வயதிலிருந்து வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடமும், அனுபவ அறிவும் அவளைப் புடம் போட்டிருந்தது. அவள் பேசியதிலிருந்து, எந்த அளவு யோசித்து செய்கிறாள் எனதான் வியக்கத் தோன்றியது அவனுக்கு.
எதற்கும் யாரையும் சாராமல், யாரிடமும் பெரிதாக ஒன்றாமல் சுயமாக சிந்தித்து செயல்படும் இந்த பரிணாமம் தானோ என்னவோ அவனை அவளிடம் ஈர்த்திருந்தது. அதுவும் இப்பொழுது அவனது மனைவியான பின்பு மேலும் மேலும் பிடித்தது.
என்னவோ திருமணத்திற்கப் பிறகு அவனது கண்களுக்கு சற்று பெருத்து அழகு கூடி தெரிந்தாள். அது உண்மையும் கூட.
அவனை கைப்பிடிக்கும் வரை இருந்த சஞ்சலங்கள் குழப்பங்கள் எல்லாம் மறைந்து வசீகரனின் மனைவி என்ற அந்தஸ்தே அவளுக்கு தனி கௌரவத்தையும், மரியாதையையும் கொடுத்திருந்தது.
அவள் இருக்கும் இடத்தில்கூட அவளுக்கான மரியாதை கூடியிருந்தது. அடுத்தவர்கள் தன்னிடம் பேசுவதிலும் அவர்களது பார்வையின் மாற்றத்திலுமே அவளால் உணர முடிந்தது.
முக்கியமாக அவனுடைய அரவணைப்பு, வசீகரனின் மனைவி என்ற போர்வையில் கிடைத்த பாதுகாப்பு எல்லாம் அவளை நிம்மதியாக உணர செய்தது.
அதுவே அவளுக்கு முகத்தில் பளபளப்பையும், மேனியில் பொலிவையும் தந்திருந்தது. வசீகரன் இருக்கும் தைரியத்தில் மனதில் நினைப்பது வார்த்தைகளாக சற்று துணிவுடன் வர ஆரம்பித்திருந்தது. இப்படி அவன் அறியாமலேயே நிம்மதியான ஒரு வாழ்க்கையை அவளுக்கு கொடுத்திருந்தான்.
அவனுடன் பழகிய காலத்தில் அவனுடன் சேர்ந்து வாழ்ந்ததென்பது வேறு. எதிர்காலத்தைப் பற்றின பயம்தான் அதில் அதிகமாக இருந்தது.
ஆனால் இப்பொழுது தன்னவள் என்ற உரிமையுடன், இந்த வீட்டின் மருமகள், அவனுக்கு மனைவி என்ற அந்தஸ்த்தையும் சேர்த்து கொடுத்திருந்தான். நித்யாவே இதையெல்லாம் நினைத்து பார்க்க வில்லை.
திருமணத்திற்கு பின்னான வாழ்கையில் கிடைத்த நிம்மதி, சந்தோஷம் பெண்ணுக்கு ஒரு செழிப்பைக் கொடுத்திருந்தது. ஏற்கனவே நித்யா ஜபம் தான் வசீகரனுக்கு. இப்போது சொல்லவே வேண்டாம் அவள் மேல் பித்தாகியிருந்தான்.
அவன் அவளை வாய் பிளந்து பார்ப்பதைப் பார்த்து என்ன என்றாள் தலையை மேலும் கீழும் அசைத்து நமுட்டுச் சிரிப்புடன். பின்னே அவன் ஜொள்ளியது அப்படியிருந்தது வெளிப்படையாக.
வசீகரன், போடி என்றான் வெறுமனே வாயசைத்து. அவன் பாவனையைக் கண்டு சிரிப்புதான் அவளுக்கு.
“சாப்பிடுங்க சீக்கிரம்” என்று அதட்டினாள்.
“ம்ம்… சுத்தமா பயம் போயிடுச்சு. வர வர ரொம்ப மிரட்டறடி…”
“ஆமாம். நீங்க பச்ச குழந்தை. உங்களை மிரட்டறாங்க. ஏன் கொஞ்சனுமோ…?”
“உன்னை எப்ப டீ நான் கொஞ்ச வேணாம்னு சொன்னேன்? கொஞ்சுனுதான் கெஞ்சறேன்”
“அதான் நீங்க பண்றீங்களே. நான் வேற எதுக்கு தனியா…” என்றாள் உதட்டைச் சுழித்து.
@@@@@@@@@@@@@@@@@@@@
இதோ ஒரு மாதம் கழித்து அருந்ததி தன் வீட்டிற்கு வந்திருந்தாள். ஸ்கூல் எக்ஸாம் முடிந்து ஒரு வாரம் விடுமுறை விட்டிருக்க, வீடு வந்திருந்தாள்.
வழக்கம் போல் பாரிஜாதத்துடன் வாயடித்துக் கொண்டு, புவனாவுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டு அவளது நேரம் எல்லாம் இனிமையாக கழிந்தது.
அஸ்வத்தை சைந்தவி பிறந்தநாளுக்கு போன போது பார்த்தது தான். அதன் பின்பு காண முயலவில்லை. அவனும் அது பற்றி ஏதும் பேசவில்லை.
போனில் கூட பேச முயன்றதில்லை. மெஸேஜ் மட்டும் செய்து கொள்வர். அதுவும் எப்போதாவது தான் இருக்கும். அவனுக்கு அவன் வேலையில் நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போதும் பிஸிதான்.
வீட்டில் இருக்கும் போது தான் அருந்ததியின் நினைவே அவனுக்கு வரும். போன் செய்து பேச ஆசையாக இருந்தாலும், ஏனோ அவன் அவளுக்கு இதுவரை போன் செய்தது இல்லை.
இரண்டு தடவை மொபைல் எடுத்து அவளது நம்பரை டயல் செய்து ரிங் போவதற்குள் கட் செய்திருந்தான். அவளுக்கும் அவனிடம் இன்னும் சகஜ மனப்பான்மை வரவில்லை.
இவள் இங்கு வந்தது கூட அவனுக்குத் தெரியாது. அவனைத்தான் நினைத்துக் கொண்டு படுத்திருந்தாள். இன்னும் மனதினில் ஐயமே எப்படி இது கைகூடும். அப்பா ஒத்துக்கொள்வாரா? எல்லாம் சுமூகமாக நடக்குமா? என்ற கேள்விகளே மனதில் குடைந்து கொண்டிருந்தது.
அவனைப் பற்றின சிந்தனையிலேயே படுத்திருந்தாள். என்னவோ அவனைப் பார்க்க வேண்டும், அட்லீஸ்ட் அவன் குரலையாவது போன் வழியாக கேட்டால் தேவலை என்ற எண்ணம். போன் செய்து பேச கூச்சம் தடையாக இருந்தது.
சிந்தித்து கொண்டே படுத்திருந்தவளின் பக்கத்தில் இருந்த போன் ஒலித்தது. யார் இந்நேரத்துல என எடுத்து பார்த்தாள்.
எண்ணத்தை நிறைத்திருந்தவனே போனில் அழைத்திருந்தான். பளிச்சென மின்னல் மின்னியது அவளுக்குள். அட இப்பதான் நினைச்சேன் அதுக்குள்ள போன்ல… என ஆச்சர்யமானது. எடுத்து பேச பயமும் இருந்தது வீட்டில் உள்ளவர்களை எண்ணி.
முகமும் அகமும் மலர போனை ஆன் செய்து “ஹலோ…” என காதில் வைத்தாள்.
“என்ன பண்றீங்க பொண்டாட்டி…?”
“அச்சோ… என்ன இது இப்படி பேசறீங்க…?” என கூச்சத்தில் கண்களை மூடிக் கொண்டாள்.
“ஹோய்… என்ன பேசறாங்க…? நீ என் பொண்டாட்டி தான? வேற எப்படி பேசனும்” என்றான் உல்லாசமாக சிரித்துக்கொண்டே.
இவளுக்கு இதுதான் முதல்முறை அவனுடன் போனில் பேசுவது. அதுவே ஒரு வித பரவசத்தை கொடுத்தது அவளுக்கு. இதில் அஸ்வத் வேறு பொண்டாட்டி என்றதும் இன்ப ரசத்தை பிழிந்ததுபோல் இருந்தது.
“நமக்கு இன்னும் கல்யாணமே ஆகல. அதுக்குள்ள பொண்டாட்டியா..? என சிணுங்கினாள்.
“வெயிட்டிங் பொண்டாட்டி. எப்பன்னு சொல்லுங்க. கட்டிக்குவோம்”.
அவனது பேச்சில் அவளுக்குதான் அச்சோ என வெட்கமானது.
“என்ன பேச்சைக் காணோம்…?”
“ம்ஹூம்…” என முனகினாள் சத்தமேயில்லாமல். எங்கே குரல் வந்தது அவளுக்கு. வெட்கத்தில் முகம் சிவந்து, மூச்சு காற்றும் தகிக்க ஆரம்பித்தது.
“யார் சொன்னா நமக்கு கல்யாணம் ஆகலன்னு…? அன்னைக்கு நான் உனக்கு மோதிரம் போட்டு விட்டது என்னவாம்…? அப்பவே நமக்கு பாதி கல்யாணம் முடிஞ்சிடுச்சு. நீ எனக்கு அரை பொண்டாட்டி ஆயிட்ட. எதையும் பிளான் பண்ணி பண்ணனும்…” என்றான் ரசனையாக.
அவனது கேலியிலும், கிண்டலிலும் அவளுக்கு பேச்சே எழவில்லை.
இவள் யாருடனோ பேசும் சத்தம் கேட்டு புவனா வந்து எட்டிப் பார்த்தார். “நீ இன்னும் தூங்கலையா…? யாரோட பேசிட்டிருக்க…?” என.
“ஐயோ அம்மா…”.
“ஹேய் யாரு…? குடு… குடு… மாமியாரா….? பேசுவோம் குடு” என கலாட்டா செய்ய தொடங்கினான். அருந்ததிக்கு பயத்தில் மூச்சடைத்து, படபடப்பானது. அயோ சும்மா இருங்க…” என முணுமுணுத்தாள்.
அஸ்வத் செய்த கலாட்டாவில் அவளுக்குதான் பேரிம்சையானது.
அவளுக்கு புவனாவை பார்ப்பதா… அல்லது இவனை கவனிப்பதா என முழி பிதுங்கினாள்.
தொடரும்.
error: Content is protected !!