Skip to content
Post Views: 4,299
சீறி பாய்ந்து வந்த அர்ஜுனின் வாகனம் மருத்துவ வளாகத்தின் உள்ளே நுழைந்திருக்க, எப்பொழுதும் நேர்த்தியாக அதற்கான இடத்தில் நிறுத்துபவன் இன்று அப்படியே விட்டு வாகனத்திலிருந்து இறங்கினான்.
வாகனத்தின் கதவை கூட அடைக்கும் பொறுமை இல்லை அவனிடம். அர்ஜுனை பார்த்த சிலர் அவனுக்கு வழக்கமாக கொடுக்கும் வணக்கத்தை கொடுக்க, அவன் நிற்கவே இல்லை.
முன்பு அணிந்திருந்த கோட் வாகனத்திலிருந்து இறங்கும் முன்பே சென்றிருந்தது.
விழா நடக்கும் இடத்தை நோக்கி நடந்தவன், கச்சிதமாக மணிக்கட்டு வரை மடித்து வைத்திருந்த வெள்ளை சட்டையை முழங்கை வரை முடித்துவிட்டு கழுத்துப்பட்டையில் போட்டிருந்த பொத்தானோடு அடுத்த பொத்தானையும் சேர்த்து அவிழ்த்து விட்டான்.
Advertisement
மருத்துவனின் கண்கள் அந்த மொத்த இடத்தையும் அங்குலம் அங்குலமாக அலசியது.
அர்ஜுனுக்காக ஏற்கனவே அங்கும் அங்கும் அலைந்துகொண்டிருந்த வருண் தர்ஷனின் தவிப்பை பார்த்து நிர்மலா என்னவென்று விசாரிக்க வேறு வழியில்லாமல் அஞ்சுஸ்ரீ வந்தது, அவர்கள் நெருக்கம் இரண்டையும் கூறியிருந்தார்கள்.
அப்படியே குடும்பம் மொத்தத்திற்கும் தகவல் பிறந்திருக்க கணவன் மனைவி இருவருக்கும் அழைத்து பார்த்து ஓய்ந்து போயினர்.
Advertisement
“அர்ஜுன் இலக்கியா எங்க?” சுந்தர்ராஜன் தான் இவன் அருகில் இருக்க முதலில் அவரே இவனிடம் வந்திருந்தார்.
Advertisement
“அவ அவங்க அப்பா வீட்டுல இருக்கா மாமா” மாமனிடம் தகவல் கொடுத்தாலும் அவன் கண்கள் அவ்விடத்தை ஆராய்ந்து.
நிகழ்ச்சி நடந்த இடத்தினில் அந்த திருமுகம் இல்லாமல் போக, நில்லாத கால்கள் அங்கும் இங்கும் அல்லாடியாது.
“அர்ஜுன் எந்த பிரச்னையும் இல்லையே…”
Advertisement
“திருமுகம் வேணும் மாமா” என்றான் உணவு பரிமாறும் இடத்திற்கு நடந்து.
“அவன் எதுக்குடா. இப்பவும் பிஸ்னஸ் தானா உனக்கு?”
அவனோடு அவரும் இணைந்து நடக்க, “ஆமா கண்டிப்பா முடிக்க வேண்டிய பிஸ்னஸ்” தூரத்தில் உணவை ருசி பார்த்துக்கொண்டிருக்கும் திருமுகத்தை பார்த்து பற்களை கடித்து சென்றான்.
தன் மேல் சிறு தவறுமில்லை, தான் செய்தது அனைத்தையும் மறந்து எதுவுமே தெரியாதவன் போல் சிரித்து பேசி உணவை ருசித்துக்கொண்டிருக்க அவன் அருகே சென்ற அர்ஜுன் அவன் அமர்ந்திருந்த நாற்காலியை எட்டி உதைக்க உணவு பதார்த்தங்கள் மேலே சிந்தி தரையில் கிடந்தான்.
“அர்ஜுன் என்னடா பண்ற?” சுந்தர்ராஜன் அவனை தடுக்க முயல, அவனின் வயதிற்கும் வேகத்திற்கும் இவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.
சுற்றி இருந்தவர்கள் அனைவரின் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியிருக்க கைக்கு சிக்கியவனை மனதின் ஆத்திரம் பொங்க அடித்து நொறுக்கியிருந்தான்.
அவனும் காரணம் புரியாமல் கெஞ்சி கதறி பார்த்துவிட்டான். அசரவில்லை. இவனின் வேகத்தில் எங்கிருந்தோ ஓடி வந்த வருண் மற்றும் தர்ஷன் சகோதரனை பிடித்து வைத்தனர்.
“அர்ஜுன் என்னடா பண்ற, பிகேவ் யுவர்செல்வ்ஸ்” நீண்ட மூச்சுகளை எடுத்து நிதானித்தவன் காற்சட்டையை விட்டு வெளியேறியிருந்த உடையினை உதறி திருமுகத்தை விட்டு பார்வையை அகற்றாமல் பார்த்தான்.
கோவம் சிறிதும் குறைந்தபாடில்லை அவனுக்கு. விட்டால் நாள் முழுதும் அடித்துக்கொண்டே இருப்பான் என்னும் தோற்றம் தான் அர்ஜுனிடம்.
வீட்டினர் அனைவரும் வந்திருந்தனர், “போலீஸ் கால் பண்ணு” வருண் தர்ஷனை பார்த்து உத்தரவு பிறப்பித்தான்.
“அவர் என்ன பண்ணார் அர்ஜுன். நீ அடிச்சதே தப்பு” வரதராஜன் மகனின் இந்த அதீத பொறுப்பற்ற செயலில் அதிர்ப்த்தியோடு பார்த்தார்.
எப்பொழுதும் அவனிடம் இருக்கும் நிதானம் இன்று இல்லாமல் போனதன் காரணத்தை கூட அவனின் கோவத்தில் மறந்து போனார்.
மொத்த மருத்துவமனை முன்பு இந்த விதமான செயல் மருத்துவமனைக்கு மட்டுமல்ல அவனின் எதிர்காலத்திற்கும் பெரிய பாதிப்பாக அமைந்துவிடும் என்கிற கவலை அவனுக்கு.
“கால் பண்ணி தான் ஆகணும். நம்ம ஹாஸ்பிடல்ல இருந்து இல்லீகல் மார்க்கெட்ல ஆர்கன்ஸ் திருட உள்ளுக்குள்ள ஆள் எடுத்துட்டு இருக்கான். அதுவும் இல்லாம அவன் கம்பெனி தான் இங்க கான்டராக்ட் வாங்கிருக்கு, ஆனா சைன் ஆனது எல்லாம் வேற ஒரு தேர்ட் பார்ட்டி கம்பெனி”
“சார் என்ன மாதிரியான ஒரு பழியை என் மேல போடுறீங்க, சத்தியமா இல்ல சார். நான் ரொம்ப நேர்மையானவன்” மீண்டும் அவனிடம் சென்ற அர்ஜுன் வாயை உடைத்து தான் மீண்டும் வந்தான்.
அர்ஜுனின் ஆத்திரம் புரிந்து உடனே திருமுகத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்து அனைவரும் அர்ஜுன் அறையில் கூடியிருந்தனர்.
அறை மொத்தமும் அமைதி நிலவ அர்ஜுன் பேச்சு சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. கடந்த ஒரு மணி நேரமாக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறான்.
அவன் பேசுவதில் அங்கிருந்த வீட்டினர் அனைவருக்கும் புரிந்த ஒன்று அந்த திருமுகம் பற்றி அர்ஜுன் கூறியது உண்மை இல்லை , இவன் சித்தரித்த பொய்களை நிஜமாகும் வேலையில் தான் ஈடுபட்டிருப்பது புரிந்தது.
திருமணம் ஒன்றிற்கு சென்றிருந்த ராமகிருஷ்ணன் மற்றும் ராதா அந்நேரம் வரவும் அர்ஜுனின் வினோதமான நடவடிக்கையை கூறினர்.
“கால் கட் பண்ணு அர்ஜுன்” பேரன் அருகே சென்று நின்ற ராமகிருஷ்ணன் தீவிர பாவனையில் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தி தாத்தாவை பார்த்தான்.
“என்னடா இது? இத்தனை கூட்டத்துக்கு முன்னாடி என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?”
“என்ன பண்ணணுமோ அதை பண்ணேன்”
“எப்படி… காரணமே இல்லாம உன்னோட கோவத்துக்கு ஒருத்தனை அடிச்சு அதை நியாயமாக்க பாக்குறதா?”
“காரணம் இல்லாம இங்க எதுவும் நடக்கல தாத்தா. எல்லாம் காரணத்தோடு தான் நடக்குது”
மகனிடம் திரும்பியவர், “பாத்தியாடா? எதுக்கு உன் மகனுக்கு பொறுப்பை குடுக்காம உனக்கு குடுத்தேன்னு கேட்டல? இதுக்கு தான். இவனோட முன் கோவம், எதையும் யோசிக்காம செய்ற இந்த புத்தி தான். இப்ப ஒரு அப்பாவி மனுஷன் இவன் கோவத்துக்கு ஆளாகியிருக்கான். அவன் குடு…” தனக்கு முன்னிருந்த பொருட்களை தூக்கி தரையில் அடித்து தாத்தாவின் பேச்சை நிறுத்தியிருந்தான் அர்ஜுன்.
“நானும் ரொம்ப நேரமா பாக்குறேன், அவன் நல்லவன், வல்லவன் அப்பாவினு பெரிய பெரிய பட்டமெல்லாம் அவனுக்கு குடுக்குறீங்க. எந்த சாக்கடைல எந்த அசிங்கம் இருக்குனு தெரியுமா உங்களுக்கு?”
“அப்டி என்ன ப்பா நீ அவன் மேல அசிங்கத்தை பாத்துட்ட? அவன் செஞ்சதை விட இந்த ஹாஸ்பிடல் பேர் உன்னால போச்சுல. உன்னோட தனிப்பட்ட கோவத்துக்கு, நாலு செவுத்துக்கு நடுல சொல்ல வேண்டிய விஷயத்தை ஹாஸ்பிடல் நடுல வச்சு பண்ணிருக்க”
பேரன் செய்த செயலை பெரியவரால் சிறிதும் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. நாளை எத்தனை ஊடங்கங்களில் இது சார்ந்த தகவல்கள் கசிய போகிறதோ தெரியவில்லை ஒரு உரிமையாளரான அவருக்கு பயம்.
“ஆமா என்னோட தனிப்பட்ட விஷயம் தான் எனக்கு பெருசு. என்னோட இலக்கியா தான் எனக்கு பெருசு. நீங்க எல்லாரும் வக்காலத்து வாங்குறீங்களே அந்த பொறுக்கி, அவன் என் பொண்டாட்டி மேல கை வச்சிருக்கான். பாஸ்*ர்ட்.
அந்த நாய் பண்ண காரியத்துக்கு அவனை உயிரோட விட்டேனு சந்தோசப்படுங்க. உங்களுக்கு வேணா உங்க ஹாஸ்பிடல், அதோட பேர் பெருசா தோணலாம்.
ஆனா எனக்கு அப்டி இல்ல, மானத்தை காப்பாத்திட்டு என்கிட்ட அவ வந்து நின்னதை நினைச்சாலே வெறி ஏறுது. அவனை அடிச்சதுக்காக இந்த ஹாஸ்பிடல் பொறுப்பு மட்டுமில்ல எதை வேணாலும் நான் தூக்கி போட ரெடி தான்” வீட்டினர் அனைவரின் கேள்விக்கும் ஒரே நிமிடத்தில் பதில் கொடுத்து வெளியேறியிருந்தான் அர்ஜுன் சக்கரவர்த்தி.
அர்ஜுன் கூறி சென்றிருந்த செய்தியை கேட்ட அனைவரின் சப்த்தநாடியும் அடங்கியது.
ஒரு பெண் இது போன்ற கொடுமையை அனுபவிப்பதை செய்திகளாய் கேட்கும் பொழுதே துடித்து, கோவம் கொள்ளும் மனது, தங்கள் வீட்டு பெண்ணிற்கு அதே கொடுமையை இளைக்கும் பொழுது என்ன செய்வதென கூற இயலாத நிலைக்கு சில நிமிடங்கள் தள்ளப்பட்டனர்.
“அவனை அடிச்சு கொன்னுட்டு வர்றோம். வாடா வருண்” தர்ஷன் அறையை விட்டு வெறியோடு வெளியேற பார்க்க, இருவரையும் பிடித்து வைத்தனர் பெண்கள்.
“ஒருத்தன் அடிச்சிட்டான் தர்ஷன். இனி அவனுக்கு இந்த அடி எல்லாம் வேணாம், இதுக்கும் மேல குடுக்கலாம்”
ராமகிருஷ்ணன் அடுத்து எடுத்த நடவடிக்கையில் நிச்சயம் அந்த திருமுகம் எழ முடியாத அடியாக தான் இருந்தது. அவன் செய்துகொண்டிருந்த தொழிலையே முடக்கி பல்லில்லா பாம்பாக மாற்றியிருந்தார்.
பகட்டில்வாழ்ந்த அந்த மனிதனுக்கு இறப்பை விட இது பெரிய அடியாக தான் நிச்சயம் இருக்கும்.
அடுத்து வீட்டிற்கு செல்லாமல் நேராக மொத்த குடும்பமும் வந்து நின்றது இலக்கியாவின் இல்லத்தில். ஆனால் அவர்களுக்கு முன்பாக அவர்கள் வீட்டு பிள்ளை அங்கிருந்தான். அவன் வாகனமும்.
இவர்களுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பே வந்து நின்று மனைவிக்கு கைபேசி வாயிலாக அத்தனை முறை அழைத்திருந்தான். எதற்கும் அவள் அழைப்பை ஏற்கவில்லை.
மாறாக ஒரே ஒரு குறுந்செய்தி தான் வந்தது, “அப்பா தூங்கிட்டு இருக்காங்க. போன் பண்ணி டார்ச்சர் பண்ணாதீங்க” அதுவும் காட்டமாக தான்.
“கீழ வா இலக்கியா” இவனும் அனுப்பி வைக்க அவள் கைபேசியை அணைத்து வைத்துவிட்டாள்.
அவனிடம் பேசவோ யாரிடமும் வருத்தத்தை தெரிவிக்க கூட அவளுக்கு மனம் வரவில்லை. தனிமையில் தலையணையை கட்டிப்பிடித்து தூங்க மட்டுமே ஆசை.
ஆனால் உறக்கம் தான் அவளையும் அண்டவில்லை. அவளுக்கு கீழே நடந்த எதுவும் தெரியவில்லை.
இலக்கியாவை காண வந்த அவன் வீட்டினரை சண்டையிட்டு வீட்டிற்கு திருப்பினான், “அவ அப்பாக்கு எதுவும் தெரியாது. இந்த நேரத்துக்கு மேல போய் தொந்தரவு பண்ணாதீங்க” பிடிவாதமாக திருப்பி அனுப்பி வைத்திருந்தான்.
“இருந்தாலும் இவனோட பிடிவாதம் எல்லாத்துக்கும் ஒவ்வொரு உச்சம் தான். இலக்கியாவே வேணாம்னு சொன்னவன், இன்னைக்கு அவளுக்காக அவளை பாக்க கூட விடாம நடு ரோட்டுல நிக்கிறான். இவனை என்னனும்மா பெத்து வச்சிருக்க. புரியாத புதிராவே இருக்கான்” மனைவியிடம் புலம்பிக்கொண்டே வந்தார் வரதராஜன்.
“நிஜமா எனக்கும் தெரியலங்க” அவரே ஒப்புக்கொள்ளும்படி தான் இருந்தது அவர்கள் நிலை.
இலக்கியாவை சென்று அவள் அருகே இருக்க விரும்பி வந்தவர்களுக்கு அவளை சந்திக்க விடாமல் மகன் செய்யும் கூத்தில் அதிருப்தி வந்தாலும், இலக்கியாவை நோக்கி தங்கள் வீட்டு பிள்ளை எடுத்து வைத்திருக்கும் இந்த அடிக்கு முழு மனதாக மகிழ முடியவில்லை.
அன்று மட்டுமல்லாது அடுத்த ஒரு வாரம் இலக்கியா மருத்துவமனை வரவில்லை. அர்ஜுன் தினமும் அவளுக்கு அழைத்து பார்த்து சோர்வோடு தான் வீட்டிற்கு வரும் நிலையாகியது.
ஒரு வாரம் பிறகு இலக்கியா மருத்துவமனை வந்த நேரம் தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் அஸ்வின் மனைவி ஆரோஹி புற்றுநோய் பாதிக்கப்பட்டு இவர்கள் மருத்துவமனை வந்தது.
இயற்கையிலே துறுதுறு குணமும், பேச்சாலே தன்னிடம் மக்களை இழுக்கும் வல்லமையும் பெற்றிருந்த அந்த பெண்ணை பார்த்துக்கொள்ள அஸ்வின் தனிப்பட்ட விதத்தில் நல்ல செவிலியர் வேண்டும் என கேட்டிருந்தான்.
பெரிய இடம், ஆரோஹியின் புற்றுநோய் சார்பான எந்த தகவலும் வெளியே தங்கள் நிறுவனத்தின் மூலம் சென்றுவிட கூடாதென பாதுகாப்பான ஆட்களை நியமிக்க வேண்டும் என்கிற ஆலோசிப்பில் இலக்கியா அந்த பெண்ணிற்கு செவிலியராக வந்தது.
அர்ஜுன் வீட்டு இளசுகள் இரண்டையும் கூட ஆரோஹி தன்னுடைய பேச்சில் இழுத்து வைக்க வேலை இல்லாத பொழுதுகள் அவள் அறையில் கழிய துவங்கியது. அப்படியான ஒரு நாள் அஸ்வின் சகோதரன் சித்தார்த்,
“என்ன வேணாலும் சொல்லுங்க, டெய்லி நைட் வர்ற அந்த இலக்கியா சிஸ்டர் ஒரு தனி ரகம்டா, அந்த கண்ணு…” டம் என மெல்லிய சத்தம் கேட்க திரும்பி பார்த்தனர் அனைவரும்.
சித்தார்த் பேசியதை அர்ஜுன் அங்கிருந்த மேஜையில் சாய்ந்து நின்று கேட்க, அவன் கை பட்டு அங்கு வைத்திருந்த கத்திரிக்கோல் ஒன்று கீழே விழ அதில் மொத்த கூட்டமும் அங்கு திரும்பியது.
“ஓ ஹாய் டாக்டர்” சித்தார்த் எதார்த்தமாக அவனுக்கு கை காட்டி, விட்ட கதையை மீண்டும் தொடர்ந்தான்.
“அவங்க வர்ற நேரம் தானே, ஏன் வருண் பாக்குற வரை ஆள் அருமை, குணம் எப்படி?” அவன் கேட்ட கேள்வியில் வருண் தர்ஷன் இருவரும் உள்ளடக்கிய சிரிப்போடு அர்ஜுனை பார்த்தனர்.
“அவங்கள பத்தி டவுட் கேக்கனும்னா தோ அர்ஜுன் இருக்கானே கேளுங்க”
ஆரோஹிக்கு சுவாரஸ்யம் கூடி போக, “உங்களுக்கு அவங்கள தெரியுமா டாக்டர்? எங்க சித்தார்த்துக்கு பொண்ணு பாக்க போறோம். எனக்கும் அவங்கள ரொம்ப புடிச்சிருக்கு. என்னடா சித்து பேசிடலாமா?”
ஆரோஹிக்கு ஏற்கனவே அர்ஜுன் பார்வை இலக்கியாவை விடாமல் தொடர்வதும் தெரியும்.
இருந்தும் இருவரிடமும் உரிமை பார்வையை தாண்டி வேறு எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் போக எந்நேரமும் விறைப்பாக சுற்றும் அர்ஜுனை சீண்ட வேண்டும்.
அதற்கு ஏற்கனவே ஒரு பெண்ணிடோடு வீட்டினருக்கு தெரியாமல் திருமணம் செய்திருக்கும் சித்தார்த் மட்டுமே கிடைக்க, எளிமையாக பயன்படுத்திக்கொண்டாள்.
‘பைத்தியமா நீ?’ என்னும் ரீதியாக சித்தார்த் அவளை பார்க்க, அவளோ ஒருமாதிரி கண்ணை காட்டி உருட்டினாள்.
“ஓ எஸ் பண்ணிடலாம்” – சித்தார்த்
“ஓ ஹோ” வருண் தர்ஷன் இருவரும் ஒரேநேரத்தில் அர்ஜுனை பார்த்து கேலி பேச அறையின் கதவு சாட்டும் சத்தம் கேட்டது.
அடுத்த நொடி கதவை திறந்து உள்ளே வந்த இலக்கியாவை மொத்த கூட்டமும் சிரிப்போடு பார்க்க, அனைவருக்கும் பொதுவாய் தலை அசைப்பை கொடுத்தவள் அர்ஜுன் அங்கிருப்பதை பார்த்து தன்னுடைய பையிலிருந்து ஒரு உணவு பொட்டலத்தை எடுத்து அவன் பின்னிருந்த மேஜையில் வைத்தாள்.
“இலக்கியா க்கா, இன்னைக்கு என்ன டின்னர்?” இலக்கியாவிடம் கேட்ட ஆரோஹி,
வருணிடம், “டாக்டர் சார் அந்த பாக்ஸ் எடுங்க”
அவனுக்கு கட்டளை போட, சிரிப்போடு, “அர்ஜுன் எடுத்து தரியா பக்கத்துல தானே இருக்க?” வருணோ கோடு போட்டு பார்க்க அர்ஜுன் சக்ரவத்தி பார்வையோ அந்த பாத்திரத்தை வைத்த இலக்கியா மீது தான் இருந்தது.
“உனக்கு இங்க இருக்கு ஆரோஹி” தனக்காக வைத்திருந்த உணவை அவள் கையில் ஒப்படைக்க, பெற்றுக்கொண்ட ஆரோஹியிடமிருந்து அந்த குட்டி படை மொத்தமாக விழுங்கி இருந்தது.
கேட்டு வாங்கிய ஆரோஹிக்கே ஓரிரு கவளம் தான் கிடைத்தது. அத்தனை ருசியாக இருந்தது அந்த சப்பாத்தி மற்றும் பன்னீர் க்ரேவி. எளிமையான முறை தான், அதிகம் என்னை சேர்க்காமல் தேவையற்ற பொடி, காரம் சேர்க்காமல் இரவு உணவிற்கு கச்சிதமாக இருந்ததன் வாசனையே அனைவரையும் இழுத்துவிட்டது.
“சாதாரண சாப்பாத்தியே இவ்ளோ ருசியா வைக்கிறாங்களே, சித்து நீ அதிர்ஷ்டம் செஞ்சவன்டா, டெய்லி இலக்கியா அக்கா கையால சாப்பிட போற”
சப்பாத்தி போக மீதமிருந்த க்ரேவியை வெறுமனே ருசித்து பார்த்துக்கொண்டிருந்த ஆரோஹி புகழ, கேட்ட இலக்கியாவிற்கு திக்கென்றானது.
“ஆரோஹி…” இலக்கியா அதிர்ந்து அவளை பேசவே விடவில்லை பெண்,
“அக்கா சாரி உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். இவன் சித்து உங்களுக்கு தெரியும்ல, என்னோட கொழுந்தன். நல்ல பையன், பிஸ்னஸ் பன்றான், லவ் செட் ஆகவே இல்ல. அதான் நாங்களே நல்ல பொண்ணா பாத்துடலாம்னு முடிவு பண்ணோம். உங்கள பாத்ததும் வேற ஆப்ஷன் போகவே எனக்கு புடிக்கல. சோ உங்களையே எங்க சித்தார்த்க்கு பேசிடலாம்னு முடிவு பண்ணிட்டோம்”
error: Content is protected !!