Skip to content
Post Views: 1,884

அகம் 19
நிகர்வேலன் அங்கிருந்து சென்றதும் நளினி உடனே மகளை அலைபேசியில் அழைத்தார். அப்போது நயந்தினி மருத்துவமனையில் இருந்தவள், அவர் அழைக்கிறார் என தெரிந்தும் அந்த அழைப்பை ஏற்காமல் இருந்தாள். ஆனால் அவர் விடாமல் அழைக்கவும், அழைப்பை ஏற்று, “எடுக்கலன்னா விட வேண்டியது தானே, எதுக்கு விடாம கால் செய்றீங்க, உங்களோட பேச எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.” என்று அவள் கூற,
“ஆமாம் இந்த வீம்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. எல்லாம் பேச்சோட தான் போல, அன்னைக்கு நான் உங்க பொண்ணு கிடையாது. நிகரோட மனைவி மட்டும் தான்னு வீராப்பா சொன்ன, ஆனா அந்த பேச்சு காத்தோட போயிடுச்சோ, இப்போ அந்த விக்னவியோட போய் ஹாஸ்பிட்டலில் உட்கார்ந்திருக்க,” என்று அவர் கேட்க,
Advertisement
“உங்களுக்கு எப்படி தெரியும்? யார் சொன்னது? நிகர் சொன்னாங்களா?” என்று நயந்தினி பதிலுக்கு கேட்டாள்.
“ஆமாம், இந்நேரம் நீங்க திருநெல்வேலி கிளம்பியிருக்கணுமே, கிளம்பிட்டீங்களான்னு தெரிஞ்சிக்க நிகர்க்கு போன் செய்தேன். நீதான் பேச மாட்டீயே, அதனால மாப்பிள்ளைக்கு கேட்டு தெரிஞ்சிக்கலாம்னு போன் செய்தப்ப தான் நிகர் இந்த விஷயத்தை சொன்னாரு,” என்ற நளினி,
“இல்லை தெரியாம தான் கேட்கிறேன். ஃப்ரண்ட்க்கு கல்யாணம் நடந்தா சந்தோஷப்படணும், இல்லை இப்படி நடந்திடுச்சேன்னு உனக்கு ஆறுதலா இருக்கணும், அதைவிட்டு அந்த பொண்ணு தற்கொலை வரைக்கும் போறது பைத்தியக்காரத்தனமா தெரியல, நீ என்னடான்னா எனக்கு கல்யாணம் நடந்தது என் ஃப்ரண்ட்க்கு பிடிக்கல, அதான் தற்கொலைக்கு முயற்சி செய்தான்னு சொல்லிட்டு இருக்க, இது உனக்கு பெருமையான விஷயமா இருக்கலாம், ஆனா இதை மத்தவங்க பைத்தியக்காரத்தனம்னு தான் நினைப்பாங்க,
Advertisement
நிகர் என்ன வேலைவெட்டி இல்லாம வெட்டியாவா இருக்காரு, உன்னோட வந்து அவரும் ஹாஸ்பிட்டலில் உட்கார, அதிலும் அவங்க கௌரவத்தோட வெளியே நடமாடிட்டு இருக்கவங்க, இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா என்னல்லாம் பேசுவாங்களோ? அது நம்மளோட முடிஞ்சு போகாது. ஏன்னா நீ இப்போ அவங்க வீட்டு மருமக, அவங்களையும் அது பாதிக்கும், இந்த சின்ன வயசுல பொறுப்பா இருக்க நிகர், உன்னை கட்டிக்கிட்ட பாவத்துக்கு இதெல்லாம் வேற அனுபவிக்கணுமா? உன் ஃப்ரண்ட்க்கு எப்போ கோபம் போய் உன்னிடம் பேசறாளோ அதுவரைக்கும் நீ அங்க தவம் கிடப்ப, நிகர்க்கு என்ன தலையெழுத்தா? அவரும் அங்க வந்து உட்கார்ந்திருக்க, உங்க பைத்தியக்காரத்தனத்தால நிகர்க்கு தலைகுனிவை ஏற்படுத்திடாத, ஒழுங்கா அவரோட ஊருக்கு கிளம்பி போ. என்னிடம் சொன்னப்படி நிகரோட நல்லப்படியா வாழ்ந்து காட்டு, இல்லை விக்கியோட சேர்ந்து நாசமா தான் போவன்னா அதில் நிகரோட வாழ்க்கையை பலியாக்காத,” என்றவர், அலைபேசி அழைப்பை அணைக்க,
Advertisement
‘என்னமோ, நிகரை தான் கல்யாணம் செய்துப்பேன்னு பிடிவாதம் பிடிச்சு கல்யாணம் செய்துக்கிட்டு, இப்போ அவரை கஷ்டப்படுத்தறது போல பேசறாங்க, சின்ன பிரச்சனையை பெருசாக்கி கல்யாணத்தை நடத்திட்டு இப்போ வேறமாதிரி பேசறாங்க, முன்னமே என்னை என் வழியில் விட்டா ஏன் இப்பெடியெல்லாம் நடக்கப் போகுது?’ என்று மனதில் நளினியை திட்டினாலும், நிகரை கஷ்டப்படுத்துகிறோம் என்பதும் அவளுக்கு புரியாமல் இல்லை. விக்னவியை அப்படியே விட்டுவிட்டுப் போகவும் மனம் வரமால் ஒரு குழப்பமான மனநிலையில் இருந்தாள் அவள்,
நளினியிடம் பேசிய நிகர்வேலன் அடுத்து நேராக ஒரு பெண் மனநல ஆலோசகரை காண சென்றான். நயந்தினி விஷயத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது எதுவும் புரியாததால் அவரிடம் சென்றான்.
அவனுக்கு நடந்த திருமணத்தைப் பற்றியும், நயந்தினி விக்னவிக்குள்ளான நெருக்கம் குறித்து நளினி சொன்னதையும் இப்போது விக்னவி இவர்கள் திருமண விஷயம் தெரிந்து தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் இருப்பது வரை அனைத்தையும் சொல்லி அவரிடம் அவன் ஆலோசனை கேட்க,
Advertisement
அனைத்தையும் கவனமாக கேட்ட அவரோ, “ரெண்டுப்பேரும் ரொம்ப நெருங்கிய தோழிகளா இருந்து உங்க மாமியார் தேவையில்லாம பயப்பட்றதா தான் நினைக்கிறேன். ஆனா கல்யாணம் விஷயம் கேள்விப்பட்டு அந்த பொண்ணு சூசைட் அட்டம்ட் வரைக்கும் போனதை சாதாரணமாகவும் எடுத்துக்க முடியாது. இது ஓவர் பொசசிவ் காரணமா கூட இருக்கலாம், எதுவா இருந்தாலும் அவங்க ரெண்டுப்பேரிடமும் பேசினா தான் தெரிய வரும், தேவைன்னா பேசலாம்,
உங்களுக்கு தெரிஞ்சிக்க வேண்டியது ஒருவேளை அவங்க ஓரின சேர்க்கையில் இருந்திருக்கவோ இல்லை இருக்கவோ விருப்பபட்றாங்களா அப்படிங்கிற சந்தேகம் தானே, உங்க மாமியாருக்கும் அப்படி நடந்திடுமோன்னு பயம் இருக்கு சரியா?” என்றவர், ஓரின சேர்க்கை என்பது அவங்களை பொறுத்தவரை உடல் சார்ந்த விஷயமா இருந்தா கண்டிப்பா இந்த திருமணம் அவங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்காது. ஆனா எல்லோருக்குமே இது அபப்டியில்லை. சிலருக்கு அது மனம் சார்ந்த விஷயமாகவும் இருக்கலாம்,
ஆண்கள் மேல வெறுப்பு, கோபம், பயம் இதெல்லாம் சில பெண்களை இப்படி யோசிக்க வைக்கும், இப்போல்லாம் செக்ஸ் என்கிற ஒரு விஷயத்துக்காக கல்யாணம் செய்து ஒரு ஆணுக்கு கீழே அடிமை வாழ்க்கை வாழணுமா? அப்படியெல்லாம் கூட பெண்கள் யோசிக்கிறாங்க, ஒரு பெண்ணோட இருக்கறதை கம்ஃபார்ட்டா உணருறாங்க, எப்படி ஒரு பெண் கொஞ்சம் சிரிச்சு பேசினதும் அது காதல் என்று ஒரு ஆண் முடிவு செய்கிறானோ, அதேபோல நல்லா நெருங்கி பழகினதுமே பெண்ணுக்கும் பெண்ணுக்குமே காதல் அப்படியெல்லாம் இப்போ யோசிக்க ஆரம்பிச்சிட்றாங்க, அவங்களால ஒரு ஆணை திருமணம் செய்து எல்லோரும் போல குடும்ப வாழ்க்கையை வாழ முடியும், ஆனாலும் இப்படியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துப்பாங்க,
அதேபோல இந்த ஓரின சேர்க்கை வாழ்க்கையிலுமே டாமினேட், பொஸசிவ், அடிமைத்தனம் எல்லாம் இருக்கத்தான் செய்யுது. இங்க யாராவது ஒருத்தர் அந்த வாழ்க்கையை விரும்பறவங்க, இன்னொருத்தரை அந்த வாழ்க்கைக்குள்ள இழுக்க பார்க்கிறதும் உண்டு. இப்படி நிறைய சொல்லிட்டேப் போகலாம்,
ஆனா எதுவுமே அவங்க ரெண்டுப்பேரிடமும் பேசிப் பார்த்தா தான் தெரியும், நான் முன்ன சொன்னமாதிரி இப்படி எதுவுமில்லாம ரொம்ப நெருக்கமான நட்பாகவும் இருக்கலாம், கல்யாணம் அவங்களை பிரிச்சிடுமோ என்கிற பயம் கூட காரணமாக இருக்கலாம்,
நீங்க சொன்னதை வச்சுப் பார்க்கும்போது உங்க மனைவி அதுவரை அம்மாவோட ஓட்டிட்டு இருந்தவங்க, திடீர்னு ஹாஸ்டல்க்கு போனதும் அது அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்திருக்கலாம், யாரையாவது சார்ந்து இருக்கும் அவங்க ஈஸியா அந்த பொண்ணை சார்ந்து இருக்கப் பழகி, நாளைடவில் அவங்க பேச்சை வேதவாக்கா நினைக்க ஆரம்பிச்சிருக்கலாம்,
இப்போதைக்கு நீங்க செய்ய வேண்டியது அவங்களோட நிறைய டைம் ஸ்பெண்ட் செய்ங்க, அவங்களுக்கு எல்லோருமே எப்போதும் துணையா இருப்பீங்கன்னு உங்க செய்கைகளால உணர்த்துங்க, அவங்களுக்கு பிடிக்காத கல்யாணம். அதனால அவங்களுக்கு டைம் கொடுக்கணும்னு நினைச்சு ஒதுங்கி இல்லாம அவங்களோட நெருங்கி பழகுங்க, அப்போத்தானே அவங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கான்னு தெரியும், உங்க காதலை இன்னும் மறைச்சு வைக்காம அவங்களிடம் வெளிப்படுத்துங்க, முடிஞ்சா எங்கேயாச்சும் ஹனிமூன்க்கு போயிட்டு வாங்க, பத்து நாள் அந்த பொண்ணை விட்டு விலகி இருந்ததே அவங்களிடம் மற்றத்தை பார்த்ததா உங்க மாமியார் சொன்னாங்கல்ல, அதனால் இது பெட்டரான ஐடியா.
இப்படியெல்லாம் நடந்துக்கிட்டாலே அவங்களிடம் மாற்றம் வர வாய்ப்பு இருக்கு, இல்லை அவங்களுக்கு பிரச்சனைன்னாலும் நம்மாள தெரிஞ்சிக்க முடியும், அதேபோல அந்த பொண்ணோட பழகாதன்னு அவங்களை அடக்கி வைக்காதீங்க, அப்போ தான் அவங்களுக்கு அதை மீறணும்னு தோனும், அதனால அவங்களோடவும் அவங்க பேசிட்டு இருக்கட்டும், நான் சொன்னது போலவும் செய்ங்க, அப்போதும் எந்த மாற்றமும் ஏற்படலன்னா முதலில் உங்க மனைவியோட பேசி பார்ப்போம், தேவைப்பட்டா அந்த பெண்ணோட கார்டியனிடம் கலந்து அந்த பொண்ணுக்கு கவுன்ஸ்லிங் தேவைன்னா கொடுக்கலாம், நீங்க நினைச்சு பயப்பட்ற அளவுக்கு இருக்காது. ரிலாக்ஸா இருங்க,” என்று அவர் பேசியதில் நிகர்வேலனுக்கும் தெளிவு கிடைக்கவும், அவருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
மீண்டும் அவன் மருத்துவமனைக்கு வரும்போது மாலை நேரம் இருட்ட தொடங்கியிருந்தது. அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் இருந்தாள் நயந்தினி. அப்போது தான் மீண்டும் ஒருமுறை விக்னவியை பார்ப்பதற்காக அவள் செல்லவும், அப்போதும் விக்னவி கத்தி அனுப்பியதில் திரும்பி வந்தவளுக்கோ, தேவையில்லாமல் இங்கு இருந்து நிகர்வேலனுக்கும் கஷ்டம் கொடுக்கிறோம் என்று இன்னும் அதிகமாக உறுத்தல் வந்து சேர்ந்து கொண்டது.
நிகர்வேலன் வரும்போதே இருவருக்கும் சாப்பிட இரவு உணவை வாங்கிக் கொண்டு வந்தவன், “எப்படி இருக்கா உன்னோட ஃப்ரண்ட். போய் பார்த்தீயா? அவளுக்கு கொஞ்சமாச்சும் உன்மேல கோபம் குறைஞ்சுதா?” என்று அறைக்குள் நுழைந்தப்படியே அவன் கேட்க,
“ம்ப்ச்ச்,” என்று அவள் உதட்டை சுழிக்கவும், அந்த உதட்டில் முத்தமிட எழுந்த ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தவன்,
“என்னாச்சு?” என்று கேட்டான்.
“என்னால உங்களுக்கும் கஷ்டம்,” என்று அவள் கூற,
“இதிலென்ன கஷ்டம்,” என்றவன்,
“உன்னோட ஃப்ரண்ட் உன்னோட பேசலன்னு கஷ்டமா இருக்கா,” என்று அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்தப்படி கேட்க,
“இருக்கு தான், அதோட உங்களை நினைச்சும் கொஞ்சம் குற்ற உணர்வா இருக்கு, இந்த விஷயத்தில் உங்களையும் சேர்த்து கஷ்டப்படுத்தறேன்.” என்று மீண்டும் அவள் அதையே கூற,
“அதான் எனக்கு இதில் எந்த கஷ்டமும் இல்லைன்னு சொன்னேனே, திரும்ப திரும்ப அதையே சொல்ற, முதலில் சாப்பிடு, பசியில் என்ன பேசறோம்னு தெரியாம உளர்ற போல,” என்றான்.
“நான் பேசறது உங்களுக்கு உளருவதை போல தெரியுதா? என் ஃப்ரண்ட்க்கு இப்படி ஆனதுக்கு நான் இங்க உட்காரலாம், ஆனா நீங்க ஏன் எனக்காக இங்க வந்து இருக்கணும், எனக்கே அது புரிஞ்சுது. இதில் அம்மா வேற போன் செய்து திட்டினாங்க, உங்களை நான் கஷ்டப்படுத்தறேனாம், அவங்க பேசின விதம் கோபப்படுத்தினாலும் அது உண்மை தானே, அதுவுமில்லாம என்னால திருநெல்வேலிக்கு போகற பிளானும் ட்ராப் ஆகிடுச்சு, எனக்கென்னமோ விக்கி கோபம் இப்போ குறையும் போல தெரியல, நாம நாளைக்கு ஊருக்கு கிளம்பி போகலாம்,” என்று நயந்தினி கூற,
“சாரி நயா, அத்தை ஊருக்குப் போறதை பத்தி கேட்கவும், அவங்களிடம் விஷயத்தை சொல்ல வேண்டியதா போச்சு, அப்புறம் அப்பாவிடம் தான் ரெண்டுநாளில் வரோம்னு சொல்லியிருக்கோமே, அப்போதே போகலாம், உன்னோட ஃப்ரண்டை அப்படியே விட்டுட்டுப் போனா உன்னோட மனசு முழுக்க இங்கேயே தான் சுத்திட்டு இருக்கும்,
நான் வரும்போது ஹாஸ்பிட்டலில் விசாரிச்சிட்டு தான் வந்தேன். நாளைக்கு ஈவ்னிங் விக்கியை டிஸ்சார்ஜ் செய்திடுவாங்களாம், அதுக்குப்பிறகு விக்கியை தங்க வைக்கவும் ஏற்பாடு செய்துட்டேன். நம்ம ஷோரூமில் வேலைப் பார்க்கும் சில பொண்ணுங்க தங்கியிருக்க பிஜி, ஹாஸ்ட்ல எல்லாம் விசாரிச்சு பேசினேன். விக்னவியை தாராளமா அங்க தங்கிக்க சொல்லிட்டாங்க, இதில் அந்த பிஜி டீடெயில்ஸ் இருக்கு, விக்கியிடம் இதுபத்தி பேசு, உன்னை பேச விடலன்னாலும் நர்ஸ் யாரிடமாவது சொல்லி பேச வை. இங்கேயே இருக்க முடியாதில்லையா?” என்று அவன் சொல்லவும்,
“என் ஃப்ரண்ட்க்கு ஒரு பிரச்சனைன்னு நீங்க ஹாஸ்பிட்டல் வந்து பார்த்துட்டுப் போனாலே போதும், இதைப்பத்தி நீங்க கேர் செய்துக்கணும்னு அவசியமேயில்லை. ஆனா இவ்வளவுதூரம் யோசிச்சு செய்றீங்க, இது ரொம்ப பெரிய விஷயம், நான் விக்கியிடம் பேசறேன். எல்லாத்துக்கு தேங்க்ஸ்,” என்று அவள் கூற,
“தேங்க்ஸ்னு சொல்லி என்னை தள்ளி நிறுத்தாத நயா, எனக்கு விக்கியை நேத்துல இருந்து தான் தெரியும், நான் விக்கிக்காக இதெல்லாம் யோசிச்சு செய்யல, உனக்காக தான் செய்றேன். இதனால நீ கவலைப்படக் கூடாது. அடுத்து என்னன்னு யோசிச்சு உன்னோட உடம்பை கெடுத்துக்க கூடாது. உன்னோட நலன் எனக்கு ரொம்ப முக்கியம். ஏன்னா நீ யாரோ இல்லை. நீ என்னோட மனைவி. எப்போ நமக்குள்ள இந்த பந்தம் ஏற்பட்டுச்சோ, அப்போதே உன் பிரச்சனை என் பிரச்சனை வேற வேற கிடையாது புரியுதா?” என்றான்.
“உங்களை மாதிரி நான் யோசிக்கல பாருங்க, விக்கிக்கு இப்படி ஆன டென்ஷன்ல என்னென்னெமோ பேசிட்டேன். ஆனா அதை மனசுல வச்சிக்காம நீங்க இவ்வளவுதூரம் யோசிக்கிறீங்க, உண்மையாகவே நீங்க கிரேட் தான்,” என்று அவள் கூற,
“நீ என்னை புகழணும்னு நான் இதையெல்லாம் செய்யல நயா, எனக்கு நீ சந்தோஷமா இருக்கணும், அதுதான் முக்கியம். ரெண்டுநாளா உன்னோட முகம் இல்லையில்லை நம்ம கல்யாணம் நடந்ததிலிருந்தே மனசுல இருக்க குழப்பம் உன்னோட முகத்தில் தெரியுது. அந்த முகத்தை பார்க்கவே நல்லா இல்லை. என்னோட நீ இருக்கும்போது சிரிச்சிட்டே இருக்கணும், அதுதான் எனக்கு வேணும் நயா, இனி தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காம ஃப்ரீயா விடு,” என்றவன், அத்துடன் நில்லாமல் மீண்டும் அவளது கைகளை தன் கைக்குள் கொண்டு வந்தவன், அந்த கைகளுக்கு முத்தமிட, அதில் அவளுக்கு சிலிர்த்துப் போனது. அந்த நொடிகள் நீடிக்க வேண்டுமென்று மனம் விரும்பியது.
“சரி சாப்பிட்டு தூங்குவோம், நைட் ரெண்டுப்பேருக்கும் பொட்டு தூக்கமில்லை இல்லையா?” என்று அவன் கூற,
“என்ன சொல்றீங்க, நீங்களும் இங்கேயாவா தங்கப் போறீங்க, உங்களுக்கு இங்க வசதி படுமா? நீங்க வீட்டுக்குப் போங்க, நான் இங்க மேனேஜ் செய்துப்பேன்.” என்றாள்.
“உன்னை விட்டுட்டு நான் எப்படி போவேன்னு நினைச்ச, உன்னை தனியா விட்டுட்டு அங்க போய் என்னால எப்படி இருக்க முடியும், உனக்கு இங்க வசதிபடும் எனக்கு படாதா?” என்றவன்,
“நீ விட்டா இப்படி ஏதாவது பேசிட்டே இருப்ப, முதலில் சாப்பிடு,” என்று வாங்கி வந்த உணவை பிரித்தவன், அதை தன் கையால் எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டான்.
அவளும் வாய் திறந்து வாங்கிக் கொண்டவள், “நானே சாப்பிட்டுக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்க,” என்று சொல்ல,
“அப்போ எனக்கு நீ ஊட்டி விடு,” என்று அவன் கூறவும்,
“நானா?” என்று அவள் கேட்க,
“நீதான என்னோட மனைவி. அப்போ நீதான் எனக்கு ஊட்டி விடணும்,” என்று அவன் சொன்னதும்,
“என்ன அடிக்கடி இதையே சொல்றீங்க,” என்று கேட்டப்படியே உணவை கையில் எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டாள்.
“ஏன் அப்படி சொல்றது உனக்கு பிடிக்கலையா?” என்று அவன் கேட்க,
“அப்படியில்லை, இத்தனைநாள் இப்படி நீங்க சொன்னதில்லையே, அதான் கேட்டேன்.” என்று அவள் கூறவும்,
“என்னன்னு தெரியல, இப்போ அடிக்கடி இதை சொல்லணும்னு தோனுது, சொல்லவும் பிடிக்குது.” என்றான்.
அதற்கு அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனாலும் அது அவளுக்கு பிடிக்காமலும் இல்லை. பதில் ஏதும் கூறாமல் அமைதியாக சாப்பிட்டாள். அவனும் அதன்பின் அமைதியாக சாப்பிட்டான். சாப்பிட்டு முடித்த பின், “சரி தூங்கு நயா, பார்க்கவே ரொம்ப சோர்வா தெரியற,” என்று நிகர் கூறவும்,
“ம்ம்,” என்றவள்,
“விக்கிக்கு என்மேல இருக்க கோபம் சீக்கிரமா போயிடும் தானே,” என்று கேட்டாள்.
“உன்மேல ரொம்ப நாள் கோபமா இருக்கவும் யாருக்காவது மனசு வருமா? விக்கியோட கோபம் சீக்கிரம் போயிடும், இப்போ வா வந்து படு,” என்றவன்,
“எதையும் பெருசா போட்டு குழப்பிக்காத, ரிலாக்ஸா இரு,” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான். பின் நேற்று சுத்தமாக உறக்கம் இல்லாததால் இருவரும் சிறிது நேரத்திலேயே உறங்கிவிட்டனர்.
மறுநாள், “எப்படியோ ஈவ்னிங் தான் டிஸ்சார்ஜ்னு நினைக்கிறேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு மதியம் உனக்கு லன்ச் வாங்கிட்டு வரேன். விக்கியிடம் பிஜி விஷயமா பேசிடு,” என்ற நிகர்வேலன் கிளம்பிவிட்டான்.
அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் நயந்தினி விக்னவியை பார்க்க சென்றாள். அப்போது விக்க படுக்கையில் அமர்ந்து இருக்க, அவள் அருகே சென்றவள், “விக்கி,” என்றழைத்ததும், விக்னவி கோபமாக காதை பொத்திக் கொண்டவள்,
“ஏன் சும்மா சும்மா வந்து தொந்தரவு செய்துக்கிட்டே இருக்க நயன், எனக்கு தான் உன்னைப் பார்க்க பிடிக்கல, பேசப் பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கேனே, சொன்னா உனக்கு புரியாதா?” என்று கேட்க,
“உன்னோட கோபம் எப்போ குறையுதோ குறையட்டும், எப்போ என்னிடம் பேச நினைக்கறீயோ பேசு, எப்போ என் பக்க விளக்கத்தை கேட்க தோனுதோ அப்போ கேளு, இதுக்கு மேலேயும் உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்.
ஒருவிஷயத்தை மட்டும் சொல்லிட்றேன். இன்னைக்கு உனக்கு டிஸ்சார்ஜ். மறுபடியும் நீ நம்ம காலேஜ் ஹாஸ்டலுக்குப் போக முடியாது. வார்டன் இனி உன்னை அங்க தங்க வைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க, உன்னோட சித்தியை எப்படி காண்டாக்ட் செய்றதுன்னு தெரியல, உனக்கு அது பிடிக்காது. உனக்கு தங்க பிஜி ஏற்பாடு செய்திருக்கேன்.
அதை ஏற்பாடு செய்தது கூட நிகர் தான், உனக்கு தெரியுமா? முந்தா நேத்துல இருந்து அவர் தான் என்னோட இங்க இருக்கார். நாங்க ஏற்பாடு செய்ததால இங்க தங்க விரும்புவியா தெரியல, ஆனா நீ கோபமா இருக்கேன்னு உன்னை அப்படியே விட்டுட்டுப் போக முடியாது. என்ன முடிவெடுக்கிறீயோ எடு,” என்று நயந்தினி கூறவும்,
நயந்தினி சொன்னது போல் கல்லூரி விடுதிக்கும் செல்ல முடியாது. இங்கே மருத்துவமனையிலும் இருக்க முடியாது. சித்திக்கு விஷய்ம் தெரிந்தால் தன்னை ஊருக்கே அழைத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்பது புரிந்ததால்,
“நீயும் உன் ஹஸ்பண்ட்டும் செய்த உதவிக்கும் ரொம்ப தேங்க்ஸ், இனி நான் பார்த்துப்பேன். அதேபோல ஹாஸ்பிட்டல் பில் எவ்வளவு ஆகுதோ, அடுத்த மாசம் சித்தி எனக்கு பணம் அனுப்பினதும், அதை நான் திருப்பிக் கொடுத்திட்றேன்.” என்று எங்கேயோ பார்த்தப்படி விக்னவி கூறவும்,
கத்தி வெளியே அனுப்பாமல் தான் பேசியதை கேட்டதே போதும் என்று நினைத்த நயந்தினி, “ஈவ்னிங், உனக்கு கார் ஏற்பாடு செய்ய சொல்லி நிகரிடம் சொல்றேன். அதோட ஹாஸ்டலில் இருக்க உன்னோட பொருளை எடுத்துட்டு வந்து கொடுக்க ஆள் ஏற்பாடு செய்றேன்.” என்று சொல்லிவிட்டு அவள் சென்றுவிடவும், விக்னவி அப்போதும் அழுத்தமாக அவளது முகம் பார்க்காமல் அமர்ந்திருந்தாள்.
மதியம் நிகர்வேலன் வந்ததும் விக்னவியிடம் விஷயத்தைக் கூறியதையும், அவள் அங்கு தங்க ஒத்துக் கொண்டதையும் நயந்தினி கூறவும்,
“நல்லது,” என்றான் அவன்,
“அப்புறம் அவளுக்கு ஒரு கார் ஏற்பாடு செய்ங்க, அதில் அவள் போகட்டும், எப்படியோ நான் கூட போனா அவ கோபப்படுவா, அவளுக்கு எப்போ கோபம் தணியுதோ அப்போ அவளை போய் பார்க்கிறேன். அப்புறம் நாம ஊருக்கு கிளம்பலாம், இன்னைக்கு நைட்டே போகறதா இருந்தாலும் எனக்கு பரவாயில்லை.” என்று நயந்தினி கூறியதை கேட்டவன்,
“உறுதியா தான் சொல்றீயா, அப்புறம் அங்க போனதும் உன் ஃப்ரண்டை ரொம்ப மிஸ் செய்யப் போற, வேணும்னா ஒருநாள் கழிச்சு கூட போகலாம்,” என்றான்.
“இல்லை, நான் போய் போய் பார்த்தா தான் அவளுக்கு கோபம் அதிகமாகுது. அதனால இப்போதைக்கு நான் அவளைப் போய் பார்க்காம இருக்கறது தான் நல்லதுன்னு தோனுது,” என்று அவள் கூறவும்,
“உனக்கு பிரச்சனையில்லன்னா, நாம நாளைக்கு காலையில் ஊருக்கு கிளம்பலாம்,” என்று அவனும் ஒத்துக் கொண்டான்.
பின் டிஸ்சார்ஜ் வேலைகள் முடிந்ததும், விக்னவியை தனியாக கார் ஏற்றி அனுப்பி வைத்தார்கள். அவளை கவனித்துக் கொள்ளவும் நிகர் ஒரு நபரை ஏற்பாடு செய்திருந்தான். அதில் நயந்தினிக்கும் திருப்தி தான்,
நளினி கூட அதன்பிறகு ஒருமுறை நடப்பதை நிகர்வேலனிடம் விசாரித்து தெரிந்து கொண்டவர், “அவ எப்படியோ போறான்னு விடாம, எதுக்கு அவளுக்கு தங்கறதுக்கு ஏற்பாடு செய்றீங்க, அவ நயனியை விட்டு விலகினா தான் நயனிக்கு நல்லது.” என்று கேட்க,
“அதிரடியா இப்படி ஏதாவது செய்தா, நயாக்கு நம்மளைவிட விக்னவி தான் முக்கியமா தெரியும், விக்னவி விஷயத்தில் நாம பக்குவமா நடந்துக்கணும்,” என்றவன், மனநல ஆலோசகரிடம் சென்றதையும், அவர் சொன்ன விஷயங்களையும் கூறவும்,
“என்னவோ நிகர், சீக்கிரம் நயனி மாறினா நல்லது தான், நானும் போனில் அப்படி பேசியிருக்கலன்னா விக்கி விக்கின்னு புலம்பிக்கிட்டு தான் இருந்திருப்பா, இப்போ உங்களோட ஊருக்கு வர ஒத்துக்கிட்டா தானே, இப்படியே அவ ஒழுங்கா இருந்தா தான் எனக்கு நிம்மதி.” என்று சொல்லி நளினி அலைபேசி அழைப்பை அணைத்தார்.
விக்னவி தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்ததும், அவளுக்கென்று வரவழைக்கப்பட்ட உணவை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தாள். அப்போது அவளது அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்திருந்தது. நயந்தினி தான் அனுப்பியிருந்தாள்.
‘நானும் நிகரும் நாளைக்கு அவங்க சொந்த ஊருக்கு போறோம், வர ஒருவாரம் ஆகும், அதுக்குள்ள உன்னோட கோபம் குறைஞ்சு இருக்கும்னு நம்பறேன். டேக் கேர் விக்கி,’ என்று அனுப்பியிருந்தாள்.
அதைப்பார்த்த விக்னவி எப்படி உணர்ந்தாள் என்றே அவளுக்கு தெரியவில்லை. கோபமாக இருந்தால் நயந்தினி தன்னை சமாதானம் செய்ய சுற்றி சுற்றி வருவாள் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அவள் இப்படி தன்னை கண்டுக் கொள்ளாமல் நிகர்வேலனுடன் ஊருக்கு சென்றதில் முதலில் அதிர்ச்சியில் இருந்தவள், இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ன செய்யலாம்? என்று அப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
அகம் சேர்வான்…
error: Content is protected !!