Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் – 20

அத்தியாயம் 20:

பஞ்சாயத்தை முடித்துவிட்டு ஆதி வீட்டிற்கு வந்தான். வீட்டு முற்றத்தில் ஈஸ்வரன், சுந்தரம் மற்றும் சந்தியாவின் அப்பா செல்வமும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஆதியை பார்த்த சுந்தரம்தான் “ஆதி, இங்க வாய்யா” என்றார். ஆதிக்கு அமர்ந்து பேசும் எண்ணம் இல்லையென்றாலும் சித்தப்பா கூப்பிட்டுவிட்டதால் வந்து அமர்ந்தவன், செல்வத்தை பார்த்து மரியாதையாக “வாங்க மாமா” என்றான்.

ஈஸ்வரன் ஆதியிடம் “தம்பி. நம்ம சந்தியா புள்ளைய அரவிந்துக்கு  கேக்குறாராம் கிருஷ்ணன். அவரே நேரடியா வீட்டுக்கு வந்து பேசிட்டு போனாராம்” என்றதும் ஆதி “ஓ” என்றான்.



Advertisement

செல்வம் “ஆமா தம்பி. நா இங்க புதுசு. அவங்கள தெரியாது. ஏற்கனவே நாங்க ஒரு தடவை சூடு பட்டுட்டோம். அதான் என்ன பண்றதுன்னு அப்பாட்ட பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன். சந்தியாவும் அதைத்தான் சொன்னா. உங்ககிட்டேயும் உங்க குடும்பத்துகிட்டயும் பேச சொன்னா” என்றார்.

ஈஸ்வரன் “நாங்க சொல்லி போட்டோம் தம்பி. பையன் தங்கமானவன். எந்த குறையும் கிடையாது. தாராளமா நம்ம புள்ளைய குடுக்கலாம்ன்னு” என்றார்.

செல்வமும் “ஆமா தம்பி. ஆனா பையன உங்களுக்கு பிடிக்காதுன்னு கேள்விபட்டேன். அதான் உங்ககிட்டேயும் ஒரு வார்த்தை கேக்கலாம்ன்னு இருந்தேன்” என்றார்.

Advertisement

ஆதியும் “அப்பா சொன்னது உண்மைதான் மாமா. மாப்பிள்ளைன்னு பாத்தா நம்பி நம்ம புள்ளைய கொடுக்கலாம். எனக்கும் அவனுக்கும் சும்மா சின்ன வயசுல வந்த விளையாட்டு சண்டை. அதெல்லாம் நீங்க பாக்காதீங்க. அவன மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறது சிரமம். நீங்க தாராளமா கல்யாணம் பண்ணலாம்” என்றுவிட்டு வேலையிருப்பதாக சொல்லிவிட்டு மாடிக்கு சென்றுவிட்டான்.

Advertisement

மாலையில் ஆறு மணிவாக்கில் அரிசி ஆலையில் தனியாக அமர்ந்திருந்தவனின் முன்னால் பத்ரகாளி மாதிரி வந்து நின்றாள் சந்தியா.

அவளை பார்த்து திடுக்கிட்டவன் “இந்த நேரத்தில இங்க என்ன பண்ற. தனியாவா வந்த” என்று அதட்டினான்.

கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அவன் எதிரில் அமர்ந்தவள் “கௌரியும் வந்துருக்கா. எங்க அப்பாகிட்ட என்ன சொன்னீங்க” என்றாள்.

Advertisement

“உங்கப்பா உன்கிட்ட என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்லிருப்பேன்”

அவனை முறைத்தவள் “அதாவது நா அரவிந்த தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னீங்க. இல்லையா”

“ஆமா”

“ஏன்”

“ஏன்னா எல்லா விதத்திலையும் ஒரு பொண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை அவன்”

“எல்லாருக்கும் ஓகே. எனக்கு பொருத்தமானவர்ன்னு உங்களுக்கு தோணுதா”

“ஆமா”

“ஓ. அப்ப தீபாவளி அன்னைக்கு நா உங்களுக்கு பொருத்தமா இருக்கேனான்னு கேட்டதுக்கு சிரிச்சிட்டே போனீங்களே அதுக்கு என்ன அர்த்தம்”

“சிரிக்கத்தானே செஞ்சேன். உன்ன எனக்கு பிடிக்கும். நா உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னா சொன்னேன்”

“ஓ அப்ப உங்களுக்கு என்ன பிடிக்கவே பிடிக்காது”

“ஆமா பிடிக்காது”

“பிடிக்காதவங்களுக்குத்தான் புடவை கட்டி விடுவீங்களா உங்க ஊர்ல”

“அது அன்னைக்கு என்ன தப்பா யாரும் நினைக்க கூடாதுன்னுதான் பண்ணேன்”

“ஓ அந்த இடத்தில எந்த பொண்ணு சேலை அவிழ்ந்து நின்னுருந்தாலும் கட்டி விட்ருப்பீங்க. சரி உங்க வயல்ல எனக்கு சேறு தொடைச்சிவிட்டு, என் காலை பிடிச்சி என் டிரஸ் கர்ரெக்ட் பண்ணது எல்லாம், எந்த பொண்ணுக்கா இருந்தாலும் செய்வீங்களா”

“ஆமா”

“ம் எல்லாத்துக்கும் முன்னாடி உங்க தோட்ட வீட்ல நா குளிச்சிட்டு ஈரத்தோட நின்னப்ப, மேல வந்து கட்டி பிடிச்சிட்டு”

“நிறுத்து சந்தியா. இப்ப எதுக்கு சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்க. ஒழுங்கா வீட்டுக்கு கிளம்பி போ”

“இல்ல இல்ல நா பேசுவேன். நா பாத்தேன். ரொம்ப முன்னாடியே உங்களுக்கு என்ன பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. நா பீல் பண்ணிருக்கேன். இன்னும் சொல்ல போனா எனக்கு உங்கள பிடிக்கிறத விட, உங்களுக்கு என்ன பிடிக்கும். நீங்கதான் மறைக்கிறீங்க. உண்மைய சொல்லுங்க”

“இது எல்லாம் உன்னோட மன பிரம்மைதான். எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல. எந்த பொண்ணையும் எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. நீ கிளம்பு”

“இல்ல இல்ல நா நம்ப மாட்டேன். நீங்க பொய் சொல்றீங்க. எனக்கு உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். வேற யாரையும் பண்ணிக்க முடியாது” என்று கத்தினாள் சந்தியா.

“என்ன முடியாது. இதே ஆறு மாசத்துக்கு முன்னாடி வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க ரெடியாதான இருந்த. அதும் உனக்கு லவ் மேரேஜ்தான. அவனையும் லவ் பண்ணீல்ல. இப்ப என்னத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்ற. என்னமோ தெய்வீக காதல் மாதிரி பேசிட்டுருக்க. நாளைக்கு அரவிந்த் மேலையும் இந்த காதல் வரும் உனக்கு. அதனால முதல்ல இங்கிருந்து கிளம்பு நீ” என்றுவிட்டு அங்கிருந்த P C யை பார்க்க ஆரம்பித்தான் ஆதி.

வாயடைத்து போய் அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சந்தியா. சிறிது நேரம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு ஒவொவ்வொன்றாக நியாபகம் வந்தது. முதலில் நடந்த நிச்சயம். ஸ்ரீதர். இவ்வளவு நாளாக அனைத்தையும் மறந்திருந்தாள். இன்று எல்லாம் நினைவில் வந்தது. அழுகை வரும் போல் இருந்தது. ஆனால் அடக்கி கொண்டாள். எதிரில் அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு ஒன்றும் சொல்லாமல் கிளம்பி வெளியே சென்றாள்.

அவள் சென்றதும் முகத்தை அழுந்த துடைத்து கொண்ட ஆதி வாசலுக்கு வந்து பார்த்தான். ஸ்கூட்டியை கௌரி ஓட்ட சந்தியா பின்னால் அமர்ந்து சென்றாள்.

வீட்டிற்கு வந்த சந்தியாவிடம் செல்வம் கேட்டார் “என்னம்மா அரவிந்த் அப்பாக்கு என்ன முடிவு சொல்லட்டும்” என்றதற்கு “உங்களுக்கும் அம்மாவுக்கும் பிடிச்சிருந்தா ஓகே ப்பா” என்று விட்டு மேலே ரூமிற்க்கு சென்று விட்டாள் சந்தியா.

மறுநாள் காலை வந்து பத்மா சந்தியாவிடம் “ஈவினிங் பார்மாலிட்டிக்கு பொண்ணு பாக்க வரோம்ன்னு அரவிந்த் அப்பா சொல்லிருக்காங்க சந்தியா. அப்பா ஸ்ரீதர் விஷயத்தை இன்னைக்கே அவங்கட்ட தெளிவா பேசிடனும்ன்னு இருக்கார்” என்றார்.

நிமிர்ந்து பார்த்த சந்தியா ஒன்றும் சொல்லவில்லை. ஏதோ யோசனையிலிருந்தாள். சரி பழைய நியாபகம் என்று பத்மாவும் “சாரிடா. பழைய நியாபகமா. அதையெல்லாம் மறந்துட்டு இன்னைக்கு நீ சந்தோசமா இருக்கணும்” என்றதும் சிரித்து வைத்தாள் சந்தியா.

ஆதி, கௌரி குடும்பத்தை முறையாக பெண் பார்க்கும் படலத்திற்கு அழைத்திருந்தார் செல்வம். விஷயம் கேள்விப்பட்டவுடன் கௌரியை அழைத்து பேசினான் அருண்.

“என்ன கௌரி. சந்தியா ஆதி அண்ணனை லவ் பண்றான்னு நினைச்சேன். என்னதான் நடக்குது கௌரி”

“சந்தியா லவ் பண்றது உண்மைதான் அருண். அண்ணாதான் ஒத்துக்கல  போல. நேத்து அவள என்ன பேசினாங்கன்னு தெரியல. பேயடிச்ச மாதிரி இருக்கா” என்றாள் கௌரியும் குழப்பத்துடன்.

மாலை எல்லாரும் சந்தியாவின் வீட்டில் ஒன்று கூடினர். கௌரிதான் ஒரு புடவையை எடுத்து கட்டிவிட்டாள் சந்தியாவிற்கு. பிறகு சந்தியாவே மனதில் ஒரு முடிவெடுத்தவளாக தானாக கிளம்பினாள்.

ஆதியையும் தனியாக அழைத்திருந்தார் செல்வம். தோட்ட வீட்டின் வாசலில் கயிற்று கட்டிலில் போகலாமா வேண்டாமா என்று குழம்பியவாறு அமர்ந்திருந்தான். யோசித்து கொண்டே இருந்தவன் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் எழுந்து கிளம்பி விட்டான்.

அரவிந்த், அவன் அப்பா, கிருஷ்ணனின் ஒன்றுவிட்ட பங்காளிகள் இருவர் அவரின் மனைவிமார்கள் என்று ஆறு பேர் வந்திருந்தனர்.

சித்ரா சென்று மாடியிலிருந்து சந்தியாவை அழைத்து வந்தார். கௌரியும் கூடவே வந்தாள். சிவகாமிக்கு மனது சரியில்லை. அவருக்கும் சந்தியாவை வேறு வீட்டுக்கு அனுப்ப மனமில்லை. இப்பொழுது வந்து அனைவரையும் வணங்கியவளை பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டார்.

சந்தியாவை பார்த்த அரவிந்த் செல்வத்திடம் “அங்கிள், எனக்கு உங்க பொண்ணுகிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

செல்வம் ஈஸ்வரனையும், சுந்தரத்தையும் பார்த்தார்.

ஈஸ்வரனும் “சரி கண்ணு. போய் பேசி போட்டு வாங்க” என்றதும் பக்கத்திலிருந்த சிறிய தோட்டத்தில்  பெரியவர்களின் கண் பார்க்கும் தொலைவில் நின்று பேசினார்.

அரவிந்த் “என்ன சந்தியா. என்னட்ட என்ன பேசணும்”

“முதல்ல சாரி அரவிந்த். உங்கள தேவையில்லாம இன்னைக்கு அலைய  வச்சிட்டேன்”

அவளை கைகட்டி கொண்டு அமைதியாக பார்த்தவன் “யாரு. ஆதியா” என்றான்.

அவனை ஆச்சரியமாக பார்த்த சந்தியாவிடம் “என்ன அப்படி பாக்கிற. சின்ன வயசுலேருந்து நா தோக்கிறேன்னா, அது அவன்கிட்டத்தான். அதுக்காகத்தான் நா முந்திக்கணும்ன்னு நினைச்சேன்.ம்…  இத நா எதிர் பார்த்தேன். இப்ப என்ன சார் ஒத்துக்க மாட்றாரா”

“ம் என்னை அவருக்கு பிடிக்கும்ன்னு எனக்கு நல்லா தெரியும்” என்று ஒரு பெருமூச்சை வெளியிட்டவள் “ஆனா இனிமே என்னாலையும் ஏதும் அவர்ட்ட பேச முடியும்ன்னு தோணல”

“ஏன். நீ அவ்ளோ சீக்கிரம் தோல்விய ஏத்துக்கிற பொண்ணு இல்லன்னுல்ல  நினைச்சேன்” என்று அவன் கேட்டதற்கு நேற்று ஆதியுடன் பேசியவைகளை கூறினாள். சொல்லும்போதே கண் கலங்க ஆரம்பித்து விட்டது சந்தியாவிற்கு. வீட்டின் பெரியவர்களுக்கு தெரியாதவாறு திரும்பி நின்று கண்ணை மெதுவாக துடைத்து விட்டவளை பார்த்து கொண்டே புல்லட்டில் வீட்டு வாசலில் வந்து இறங்கினான் ஆதி.

அவன் புல்லட் சவுண்ட் கேட்டு அவன் வருவது தெரிந்தும் அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை சந்தியா. ஆதி உள்ளே போய் அமர்ந்து பெரியவர்களிடம் பேசி கொண்டிருந்தாலும் அவன் பார்வை சந்தியாவின் மேல்தான் இருந்தது.

வண்டியிலிருந்து இறங்கிய ஆதியை பார்த்து நக்கலாக சிரித்த அரவிந்த் அவன் உள்ளே சென்றவுடன்  “இப்ப என்ன செய்யலாம்ன்னு இருக்க. அவன்கிட்டயும் பேச முடியாதுன்னு சொல்லிட்டே” என்றான்.

“அவங்க விஷயமா என்னால எதும் யோசிக்க முடியல . சாரி அரவிந்த். நேத்து எதோ ஒரு மூட்ல அப்பாட்ட உங்க விருப்பம்ன்னு சொல்லிட்டு போய்ட்டேன். இப்ப போய் பேசி பாத்தோம் பிடிக்கலன்னு நானே சொல்லிடறேன்”

“சொல்ல வேண்டாம். பொண்ணு பார்த்து எல்லாம் ஒத்து வந்தா இருபது நாள்ல நிச்சயம் வைக்கலாம்ன்னு பேசிட்டு இருந்தாங்க. அது அப்படியே இருக்கட்டும். நீ ஓகே சொல்லிடு. உன் ஆள் இருபது நாள்லாம் தாங்க மாட்டான். அவனாவே நிச்சயத்த நிறுத்தறமாதிரி நான் பாத்துக்கிறேன்”

“ப்ச். இது விளையாட்டில்லை அரவிந்த். ரெண்டு வீட்டு பெரியவங்களையும் வச்சி விளையாட முடியாது”

“ஹலோ மேடம். உனக்கோ உன் குடும்பத்துக்கோ கஷ்டம் வர விடமாட்டான் உன் ஆள். நா நிச்சயத்துக்கு வராம இருந்துட்டேன்னா அவரே மாப்பிள்ளை ஆய்டுவாரு”

“இதெல்லாம் நடக்கிற கதையா அரவிந்த். அப்பவும் அவர் ஒத்துக்கலன்னா நிச்சயம் நடக்காது. எங்க அப்பா அம்மா ஏற்கனவே ஸ்ரீதர் விஷயத்துல கஷ்ட பட்ருக்காங்க. திரும்பவும் அதே நடந்தா ரொம்ப நொந்துடுவாங்க”

“உன் ஆள பத்தி நீ இன்னும் சரியா புரிஞ்சுக்கல சந்தியா. என்னோட கார்லயே உன்ன அனுப்ப அவனால ஒத்துக்க முடியல. நா சொல்றபடி மட்டும் நடந்துக்க. சார் தானா வந்து உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நிப்பாரு. ஆனா இந்த இருபது நாள் எனக்கு ஒரு வாய்ப்பு. அவனுக்கு எதுக்க அவன் ஆள கல்யாணம் பண்ண போற மாப்பிள்ளை நான். அவனை வச்சி செஞ்சறேன் பாரு”

அவனை முறைத்து பார்த்தவள் “அப்ப என் ஆதி மாமா மேல உள்ள போட்டிலதான் என்ன பொண்ணு கேட்டதா” என்றதும்

“என்ன பாத்தா போட்டிக்காக பிடிக்காத பொண்ண கல்யாணம் பண்ணிக்கிற ஆள் மாதிரி தெரியுதா. எல்லாம் உன்ன பிடிச்சிதான் பொண்ணு கேக்க சொன்னோம். ஆனா பாரேன். எனக்கு பிடிச்ச பொண்ணு அவன் ரிலேஷனா இருந்து எனக்கு முன்னாடி அவன் பாத்து பிடிச்சு…. ம். இந்த கடவுளுக்கு இருந்தாலும் என் மேல என்னதான் கடுப்போ. எப்ப பாத்தாலும் அவனுக்கு அடுத்துதான் நானு. கண்டிப்பா உன் சைட்ல இருந்து பாசிட்டிவ் பதில் வராதுன்னு நினைச்சிதான் கேக்க சொன்னேன். ஆனா ஓகேன்னு இன்னைக்கு பொண்ணு பார்க்க வர சொன்னதும் ஆச்சரியமாத்தான் வந்தேன். ஆனா உன் முகத்தை பார்த்ததும் தெரிஞ்சிடுச்சி”

“எப்படி தெரியும். எனக்கு ஆதி மாமாவைத்தான் பிடிக்கும்ன்னு”

“ம்…. நா பஸ்ட் நாள் உன்ன பாத்தனே, அன்னைக்கே என்ன கழட்டி விட்டுட்டு உன் மாமா கூட ஈன்னு புல்லட்ல ஏறிட்டு போனீயே. அப்பவே புரிஞ்சது. வழக்கம் போல பையன் முந்திட்டான்னு. அது மட்டுமா. என்னதான் என் கூட போட்டிக்கு உன்ன அவன் புல்லட்ல கூட்டிட்டு போனாலும் அந்த இடத்தில வேற பொண்ணு இருந்தா அவன் புல்லட்ல ஏத்திருப்பானான்னு  யோசிச்சா, ம்ஹும் வாய்ப்பே கிடையாது. அப்பவே யோசிச்சேன் பையன் உன்னட்ட கவுந்துட்டான்னு. அப்புறம் அவன் உன்ன வேண்டாம்ன்னு சொல்றதுக்கு நானும் ஒரு காரணம்” என்றவன்

அன்று புடவை கடையில் ஆதியிடம் பேசியதை கூறினான்.

அதை கேட்டதும் திரும்பவும் அரவிந்தை முறைத்து பார்த்தாள் சந்தியா.

“என்னம்மா திரும்ப திரும்ப நெற்றிக்கண்ண  தொறக்கிற. நான்தான் அப்படி பேசினா, உன் மாமா அந்த மாங்கா மடையனுக்கு என்னவாம். உனக்கு என்னடா. நா எத்தனை கல்யாணம் வேணாலும் பண்ணிக்குவேன்னு சொல்ல வேண்டியதுதான”

“என் மாமா அவருக்காக இல்ல, எனக்காகத்தான் யோசிச்சிருப்பாரு. அப்புறம் யாரை மடையன்னு சொல்றீங்க. என் மாமா இந்த ஊருக்கும் நாட்டுக்கும் எவ்ளோ நல்லது செய்றாரு. உங்கள மாதிரியா பணத்துக்காக வெறும் பிசினஸ் பண்றாரு”

“அடேயப்பா, உன் மாமா அப்படி இருக்கும்போதே உனக்கு இப்படி இருக்கு. இன்னும் உன்ன மட்டும் லவ் பண்ணிட்டான். அவ்ளோதான் போ”

“சரி நேரம் ஆகுது அரவிந்த். இப்ப என்னதான் பண்ண சொல்றீங்க”

“நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம். நா போய் எல்லார்ட்டையும் ஓகே ன்னு சொல்லிடறேன். நீ அமைதியா இரு. மத்தத  நா பாத்துக்கிறேன்”

“ப்ச் இது ரிஸ்க்ன்னு தோணுது எனக்கு. கடைசி வரை அவர் ஒத்துக்கலைன்னா?”

“என்ன நம்பு. சின்ன வயசுலேருந்து ஆதியை நா பாக்கிறேன். உனக்குத்தான் இன்னும் அவன சரியாய் புரியல. நேத்து அப்படி பேசினவன் இன்னைக்கு தாங்க முடியாம இங்க கிளம்பி வந்துட்டான் பாரு”

“சரி ஓகே அரவிந்த். எனக்கு ரெண்டு கண்டிஷன். ஒன்னு ஆதி மாமா கடைசி வரை சம்மதிக்காம நிச்சயம் வரை வந்துட்டா, என்ன ஆனாலும் பரவால்லன்னு நானே நிச்சயத்தை நிறுத்திடுவேன். இன்னொன்னு இந்த எல்லா விஷயத்தையும் அங்கிள், அதாவது உங்க அப்பாட்ட இன்னைக்கே சொல்லிடனும். அவருக்கு ஒரே பையன் நீங்க. அவரு சம்மதிச்சா, நீங்க சொன்ன பிளான் ப்ரொசீட் பண்ணுங்க. அங்கிள் ஒத்துக்கலைன்னா இன்னைக்கே எல்லாத்தையும் நிறுத்திடுங்க”

“பஸ்ட் கண்டிஷன் ஓகே. நீ நிச்சயத்தை நிறுத்த வேண்டிய அவசியம் வராது. நானே நிறுத்திடுவேன். பட் அப்பாட்ட அவசியம் சொல்லனுமா”

“கண்டிப்பா”

“சரி நீ உள்ள போ. நா அப்பாவுக்கு கால் பண்ணி இங்க வர சொல்லி பேசிடறேன்” என்றதும் சந்தியா உள்ளே சென்று, ரூமிற்குள் சென்றுவிட்டாள். ஆதி அவள் முகத்தை பார்ப்பது தெரிந்தது. அவள் கண்டுகொள்ளாமல் யாரையும் பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டாள். பின்னாலேயே கௌரியும் சென்றாள்.

அரவிந்த் கால் பண்ணி கூப்பிட்டதும் கிருஷ்ணன் எழுந்து சென்று அவனிடம் பேசிவிட்டு இருவரும் உள்ளே வந்து நிச்சயத்திற்கு நாள் குறிக்க கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!