Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் – 19

அத்தியாயம் 19:

சந்தியாவும் கௌரியும் வசந்த் வீட்டிலிருந்து திரும்பி வரும்போது சந்தியாதான் கேட்டாள் “அப்ப மல்லி வீட்டுக்கும் போகணுமா கௌரி”

“போகனும்தான். நம்ம போனா வீணா அம்மாவும் பொண்ணும் பேசுவாங்க. நம்ம அருண அனுப்பி விட்ருவோம். அவன்தான் பட்டுன்னு கேட்டுடுவான். மல்லிய நீ அதுக்கு பிறகு பாக்கலயே சந்தியா”

“இல்ல கௌ. வசந்த் அண்ணாதான் சொன்னாங்க. உங்கண்ணா வசந்த் அண்ணாவை விட்டு மல்லிட்ட பேச சொன்னாங்களாம். இனிமே சந்தியா விஷயத்துல ஏதாவது பண்ணா அவங்கப்பாட்ட நடந்தத சொல்லிடுவேன்னு மிரட்டி வச்சிருக்காராம் வசந்த் அண்ணா. அவங்கப்பா ரொம்ப ஸ்டிக்ட் ஆஃபிசராம்ல”



Advertisement

“ஆமா சந்தியா. மாரிமுத்து மாமா வயசு பொண்ணுன்னல்லாம் பாக்க மாட்டாங்க. விஷயம் தெரிஞ்சது பெல்ட் எடுத்து விளாசிடுவாங்க”

“ஓ”

“ஆமா அம்மாவும் பொண்ணும்தான் கெரகம் புடிச்சதுங்க. மாமா ரொம்ப நல்லவரு” என்று பேசிக்கொண்டே வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களுக்கு எதிரில் தெரு முனையில் அரவிந்தின் கார் இவர்களை பார்த்துவிட்டு நின்றுவிட்டது. காருக்குள் அரவிந்தின் அருகில் கண்ணை மூடி சாய்ந்திருந்த அரவிந்தின் தந்தை கிருஷ்ணன் கண் திறந்து “வீடு வந்துடுச்சா தம்பி” என்றார்.

Advertisement

அவருக்கு சிறிது தூரத்தில் நடந்து வந்து கொண்டிருக்கும் பெண்களை காட்டினான் அரவிந்த். சந்தியாவை பார்த்து “வாவ். இந்த ஊருக்குள்ள இப்படி ஒரு பியூட்டியா” என்றவர் கௌரியை பார்த்துவிட்டு “ஓ இதுதான் நம்ம கௌரியோட மாமா பொண்ணா. ஆள் பாக்க ஏஞ்சல் மாதிரி இருக்கா. அதான் நீயும் ஆதியும் போட்டி போடறீங்களோ” என்றார்.

Advertisement

அதற்கு அரவிந்த் “நா ஒன்னும் போட்டி போடல டாட்” என்று சந்தியாவை பார்த்து கொண்டே கூறினான்.

“அப்புறம் ஏன் மேன் உன்  வாய் ஓரமா ஜொள்ளு வருது” என்றதும் சட்டென்று கைகளால் வாயின் ஓரம் துடைத்து பார்த்துவிட்டு திரும்பி அவரை முறைத்தான். அதை பார்த்துவிட்டு ஹா ஹா என்று சத்தம் போட்டு சிரித்தார் கிருஷ்ணன். பெண்கள் இருவரும் அருகே வருவதை பார்த்துவிட்டு காரில் இருந்து இறங்கினார்கள்.

“ஹாய் கேர்ள்ஸ், ஹாப்பி தீபாவளி” என்றார் கிருஷ்ணன் ஆர்ப்பாட்டமாக.

Advertisement

அரவிந்த் சந்தியாவிடம் “இது என்னோட அப்பா சந்தியா” என்று அறிமுகப்படுத்தினான்.

“ஹலோ அங்கிள். நா சந்தியா, ஹாப்பி தீபாவளி” என்றாள்.

“ஹாப்பி தீபாவளி ஸ்வீட்டி. கௌரி தங்கம். உனக்கும் ஹாப்பி தீபாவளிடா. நீ புடவைல இருந்ததால மாமாக்கு அடையாளம் தெரியல போ. அப்புறம் சந்தியா எப்படி இருக்கு எங்க ஊர் தீபாவளி.

“ம் ரொம்ப நல்லா இருக்கு அங்கிள். சிட்டில டிவி முன்னாடி உக்காந்து பொழுத போக்குவோம். அதும் நா தனியாத்தான் இருப்பேன். இங்க கௌரி அருணோட ரெண்டு மூணு பேமிலியா சேந்து கொண்டாடறது ஜாலியா இருக்கு”

“ஓ. எல்லாரும் இப்ப ஆதி வீட்லதான் இருக்கீங்களா. ஆனா பாரும்மா. நீ ஊருக்கு வந்ததுல இருந்து இந்த ஊர்ல உள்ள நிறைய முரட்டு சிங்கிள்ஸ்ம் ஜாலியா இருக்காங்களாம். பொண்ணுங்கள பாத்தாலே பத்து அடி  ஓடற பசங்கள்லாம் கார் பைக்ன்னு உனக்கு லிப்ட் குடுக்க போட்டி போடறதா கேள்விப்பட்டேன்” என்றார் கிருஷ்ணன்.

அதற்குள் அப்பா என்று அதட்டிய அரவிந்த் சந்தியாவிடம் “எங்க கடைல எடுத்த சேரி தான இது. உனக்கு ரொம்ப நல்லாருக்கு சந்தியா. எங்க கடை மாடல் பொண்ணு கூட சாரீல இவ்ளோ அழகா இருந்தது இல்ல” என்றான்.

“ம்க்கும். என் சேரி கூட உங்க கடைல எடுத்ததுதானுங்ண்ணா” என்றாள் இடையில் புகுந்து கௌரி.

“உனக்கு என்னடா கௌரி. நீ எப்பொழுதும் ஏஞ்சல்தான. தனியா வேற சொல்லனுமா என்ன” என்று அவன் சமாளித்ததும் கிருஷ்ணனும் கௌரியும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு ஓஹோ என்றார்கள் ஒரே சமயத்தில்.

அரவிந்த் அவன் அப்பாவை முறைத்தவன் “நிஜமாடா கௌரி. அப்புறம் இந்த வருஷம் தீபாவளி ஸ்பெஷல் என்ன. இப்ப  எங்க போயிட்டு வரீங்க. அண்ணாக்கு பலகாரம் எங்க” என்றான்.

“ம் பரவால்ல நல்லா சமாளிக்கிறீங்ண்ணா. இப்பதான் வசந்த் மச்சான் வீட்டுக்கு போயிட்டு வரோம். அடுத்து அங்க நம்ம வீட்டுக்குத்தான் வருவோம்”

“ஓ சரிடா. சந்தியா நீயும் வீட்டுக்கு வரணும்” என்றதும் கிருஷ்ணனும் “ஆமா ஸ்வீட்டி. பொண்ணுங்க வீட்டுல இருந்தாதான் வீடு அழகாருக்கும். நானும் பெண் குழந்தை வேணுன்னு ரொம்ப ஆசைப்பட்டேன். எங்க, கடவுள் இந்த தடியனை மகனா குடுத்துட்டாரு. எப்ப பாத்தாலும் வீட்டுல இவனையே பாத்து போர் அடிச்சிடுச்சி. அதனால நீயும் அவசியம் வரணும்” என்றார்.

அரவிந்த் மறுபடியும் அப்பா என்று அதட்டியவன் “விட்டா பேசிக்கிட்டேஇருப்பீங்க. வாங்க போலாம்” என்று அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

அவர்கள் கிளம்பியவுடன் சந்தியாவும் கௌரியும் சிரித்து கொண்டே கிளம்பினார்கள்.

சிறிது நேரத்தில் கௌரி சந்தியா அருண் மூவரும் சேர்ந்து வாசலில் பட்டாசு வெடித்தனர். ஒரு தவுசண்ட் வாலாவை வைத்து கொண்டு நீ வெடி நீ வெடி என்று அருணும் கௌரியும் சொல்லி கொண்டிருந்தனர்.

பிறகு முடிவெடுத்து அருண் பட்டாசை வைக்க போனான். பின்னாலிருந்து  டேய் வெடிக்க போகுது என்று கௌரி பயமுறுத்தி கொண்டே இருந்தாள். அருணும் வைப்பதும் ஓடுவதுமாக இருந்து கடைசியாக பற்ற வைத்து வெடிக்க வைத்து விட்டான். அடுத்த தவுசண்ட் வாலாவை சந்தியா கையிலெடுத்ததும் கௌரி “அருண்டையே கொடு சந்தியா” என்றாள் .

அவளை நக்கலாக பார்த்தவள் வெடியை கையிலேயே பற்ற வைத்து தெருவில் தூக்கி வீசினாள். அவள் செய்ய போவதை உணர்ந்த அருணும் கௌரியும் கத்திகொண்டே பின்னால் ஓடி விட்டனர்.

தூக்கி வீசிவிட்டு ஸ்டைலாக பத்தியை ஊதி கொண்டே அவர்களை தாண்டி வீட்டுக்கு உள்ளே போனவள், புடவை தடுக்கி சரியாக விழுந்து வைத்தாள்.

இது அனைத்தையும் மாடி பால்கனியிலிருந்து பார்த்து கொண்டிருந்த ஆதிக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அவள் வெடியை கையில் வைத்து பற்ற வைக்க போகும்போது உண்மையிலேயே பதறி போனான். ஸ்டைலாக திரும்பி நடந்து வரும் போது ரவுடி ராட்சசி என்று செல்லமாக திட்டிக்கொண்டிருந்தான். இப்பொழுது கீழே விழுந்ததை பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது அவனுக்கு. சந்தியா கௌரியும் அருணும் பார்க்கிறார்களா என்று திரும்பி பார்த்துவிட்டு, அவர்கள் பார்க்கவில்லை என்றதும் வேகமாக எழுந்து வீட்டுக்குள் ஓடி போனாள்.

சிறிது நேரத்தில் சந்தியாவிற்கு போன் செய்து மேலே வா என்றான் ஆதி.

சந்தியா வலது கையால் இடது கையை பிடித்தபடி மேலே வந்து கொண்டிருந்தாள். ஆதியிடம் வந்து “என்ன பாஸ்” என்றாள்.

“எங்க அடிபட்டுச்சு”

“அடியா அதெல்லாம் ஒண்ணுமில்லையே” என்றாள் கையை மறைத்தபடி.

ஆதி “நா நீ பண்ண வீர சாகஸத்தையும் பாத்தேன், விழுந்து வாருனதையும் பாத்தேன்” என்றான்.

“ஹி ஹி. அது சும்மா விழுந்துட்டேன். பெருசா ஒன்னுல்ல பாஸ்”

எழுந்து அவள் அருகில் வந்து அவள் கையை பிடித்து பார்த்தான். லைட்டாக சிராய்த்திருந்தது. ஆனால் அவள் நிறத்திற்கு காயத்தை சுற்றி கன்றி சிவந்திருந்தது. ரூமிற்குள் சென்று ஆயின்மென்டை எடுத்து வந்து மெதுவாக தடவி விட்டான். பிறகு அவள் காயத்தை ஊதிவிட்டவன் “வலிக்குதா” என்று கேட்டான்.

அவன்  கண்களை பார்த்துக்கொண்டே “இல்ல மாமா” என்றாள்.

அவள் கையின் காயத்தை சுற்றி தடவி விட்டு கொண்டே “அதான் பொத்து பொத்துன்னு விழறீல்ல. இந்த புடவைய மாத்துனாதான் என்ன”

“நீங்கதான சொன்னீங்க. புடவை கட்ற பொண்ணைத்தான் பிடிக்கும்ன்னு” என்று சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவன் “அப்டி என்ன உனக்கு என் மேல பிடித்தம் .ம்.” என்று கேட்டான்.

அதற்கு தெரியவில்லை என்று அழகாக உதட்டை பிதுக்கி காண்பித்தாள் சந்தியா.

அவள் உதட்டை சிறிது வினாடிகள் பார்த்தவன், சட்டென்று பார்வையை விலக்கி அவள் கைகளின் மீது பதித்து “முதல்ல டிரஸ் மாத்து போ” என்றான்.

“எனக்கு புடவை எப்படி இருக்குன்னு நீங்க சொல்லவேயில்ல மாமா”

அவளை நிதானமாக பார்த்தவன் “நீ கட்னதாலதான் இந்த புடவையே அழகா இருக்கு” என்றான்.

“நிஜமாவா?”

“ம் பாக்க அழகா டால் மாதிரி இருக்க போதுமா”

“அப்ப உங்களுக்கு பொருத்தமா இருக்கேனா?”

அதற்கு சிரித்து கொண்டே ரூமிற்குள் சென்றுவிட்டான் ஆதி. சந்தியாவும் மகிழ்ச்சியாக கீழே இறங்கி சென்றாள்.

அடுத்த இரண்டு நாட்களில் பக்கத்து ஊரில் ஒரு பஞ்சாயத்துக்காக சென்றார்கள் ஆதியும், வசந்தும். கூடவே முரளியும் சென்றான்.

அந்த ஊரும் ஆதியின் அணைக்குடி ஊராட்சியின் கீழ்தான் வரும். அந்த ஊரின் பெரிய தலைகளை வைத்து பஞ்சாயத்து நடந்தது.  ஆதிதான் பஞ்சாயத்தை கூட்டியிருந்தான். அந்த ஊரை சேர்ந்த ரமேஷ் என்பவன் அவனின் நிலத்தை ரியல் எஸ்டேட் காரர்களுக்கு விற்க போவதாக அவனுக்கு தகவல் வந்திருந்தது. அதை தடுக்கத்தான் இப்பொழுது பஞ்சாயத்தை கூட்டியிருந்தான் ஆதி.

பஞ்சாயத்து தலைகள் நடுவில் அமர்ந்திருக்க கூட்டம் கூடியிருந்தது. ஒரு பக்கம் ஆதி அமர்ந்திருக்க வசந்தனும் முரளியும் பக்கத்தில் நின்றிருந்தார்கள்.

மறுபக்கம் ரமேஷ் அமர்ந்திருக்க சுற்றி அவன் அடிபொடிகள்  நின்றிருந்தார்கள். ரமேஷ் சில்க் வேட்டி சட்டை அணிந்து கனமான கழுத்து செயின் பிரேஸ்லெட் மோதிரம் என்று மைனர் மாதிரி அமர்ந்திருந்தான்.

அந்த ஊர் நாட்டாமை “தம்பி ஆதி. என்ன விஷயமா ரமேசு மேல பிராது குடுத்துருக்கீங்க” என்றார்.

ஆதி “ஐயா. உங்களுக்கு தெரியாதது இல்ல. நம்ம மொத்த பஞ்சாயத்துக்கும் சேத்துத்தான் நம்ம விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் காரங்களுக்கு விக்க கூடாதுன்னு தீர்மானம் போட்ருந்தோம். இப்ப ரமேஷ் வெள்ளாறு பக்கத்துல இருக்க அவரு நிலத்தை யாருக்கோ பிளாட் போடறதுக்கு விக்க போறதா எனக்கு நியூஸ் வந்தது. அப்ப நாலு ஊர் பஞ்சாயத்து நடந்தப்ப எல்லாரும் ஒத்துக்கிட்டுதான கையெழுத்து போட்டிங்க. இப்ப திடீர்ன்னு ஊர் விதிய எப்படி மீறலாம்” என்றான்.

நாட்டாமை ரமேஷிடம் “என்ன ரமேசு. தம்பி சொல்றது நெசமா. உன்ர அய்யன் இந்த பஞ்சாயத்து தலைல ஒருத்தரா இருந்தாரு. அவரு இறந்த பிறவு, நீ எதோ வேண்டாத சோலி பாக்கிறதா நானும் கேள்விபட்டுட்டுதேன் இருக்கேன். இப்ப என்னன்னா தம்பி வந்து இப்படி பஞ்சாயத்து கூட்ற அளவுக்கு வச்சு போட்டியே” என்றார்.

அதற்கு ரமேஷ் “தலைவரே, எதோ நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி போட்ட தீர்மானத்துக்கெல்லாம் என்னால ஒத்து போக முடியாதுங். காலம் எவ்வளவு வேகமா முன்னேறி போய்டுச்சிங். எங்க அப்பாரு இருந்த வரை அவரு நிலத்தை வச்சி விவசாயம் பாத்தாரு. என்னால அதெல்லாம் முடியாதுங். என் இடம் இப்ப நல்ல வெலைக்கு கேக்குறாங்க. அதான் குடுக்க போறேன்” என்றான்.

வசந்த் “உன்ரனால விவசாயம் பாக்க முடியலன்னா, விவசாயம் தெரிஞ்சவங்கிட்ட குத்தகைக்கு விட்டு பாக்க சொல்லு. இல்ல இன்னொரு விவசாயிக்கிட்டயே  நிலத்தை வித்து போடு. அதை விட்டு போட்டு நிலத்தை அழிக்கிறவங்ககிட்ட குடுக்கிறேன்ற” என்றான்.

“அதெல்லாம் பண்ணா நா எப்ப பணக்காரனா ஆகறது. என்ர அப்பாதான் விவசாயம் விவசாயம்ன்னுட்டு வளராம இருந்து போட்டாரு. நானும் அப்படியே இருக்கனுங்களா”

“பணத்துக்காக என்ன வேணாலும் செய்வியா. எத்தனையோ தலமுறையா உங்க குடும்பத்துல இருக்க நிலத்தை எவனோ வெளியூர்காரனுக்கு விக்க போறேன்னு சொல்ற. உனக்கு வெக்கமா இல்லையா” என்றான் ஆதி.

“நா என்ர  நிலத்தை விக்கிறேன். இல்ல என்னமோ பண்றேன். அதை பத்தி உனக்கு என்ன. என்னமோ வெக்கத்தை பத்தி பேசற. உன்ர பொண்டாட்டிக்கு அடுத்த மாசம் கல்யாணமாமே. அப்ப உன்ரகிட்டதேன் பிரச்சனை” என்றதும் முரளி அடிக்க பாய்ந்து விட்டான். வசந்த்தான் அவனை பிடித்து தடுத்தான்.

“நிலத்தை பத்தி பேசும்போது என்னத்துக்கு தனிப்பட்ட குடும்பத்து விஷயத்தைலாம் பேசற நீ. இது உனக்கு நல்லது இல்ல. பாத்துக்க” என்றான் வசந்த். ஆதி எதுவும் பேசாமல் கால் மேல் கால் போட்டு அசையாமல் ரமேஷை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“நீ பேசறது என்னோட சொந்த நிலம்தேன். அதை பத்தி நீ பேசினீன்னா நானும் எல்லாத்தையும் பேசுவேன். உன்ர மச்சான் கிட்ட என்னமோ கொறன்னுதேனே அவரு பொண்டாட்டி போய்ட்டா”

முரளிதான் “டேய் யாருக்குடா கொறையிருக்கு. வேணுன்னா பாருடா தேவதை மாதிரி ஒரு பொண்ணு கூட எங்கண்ணனுக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும். வந்து தின்னு போட்டு போடா வெண்ணை” என்றான்.

அதற்கு ரமேஷ் “டேய் தம்பி. நீ சின்ன பையன். உனக்கு ஒன்னும் தெரியாது. இனிமே உங்கொண்ணன கல்யாணம் பண்ணிக்க ஒரு பொண்ணு வந்தா, அது பணம், பவுசுக்காகதேன் இருக்கும். இல்லன்னா அந்த பொண்ணுகிட்டையும் கொறை இருக்கும்” என்று ரமேஷ் பேசி கொண்டிருக்கும் போதே

நாட்டாமை “டேய். எத பேச வந்தோமோ அதை பத்தி மட்டும் பேசு. முடிவா நீ என்ன சொல்ற. ஆதி தம்பிக்கு மட்டும் இல்ல. இங்க யாருக்கும் நீ இப்படி நிலத்தை கொடுக்கிறது விருப்பம் இல்ல. முதல்ல நீ குடுப்ப. உன்ன பாத்து ஒவொருத்தரா குடுக்க ஆரம்பிச்சா எல்லோரும் காசு நிறைய வச்சிருப்போம். ஆனா சோத்துக்கு அடுத்த நாட்டுக்காரனைத்தேன் நம்ம சந்ததிங்க எதிர் பாத்துக்கிட்டு இருக்கும்” என்றார்.

அதற்கு ரமேஷ் “அதை பத்தில்லாம் எனக்கு கவலை கிடையாது. எங்கப்பன் வூட்டு நிலம். நா என்ன வேண்ணா பண்ணுவேன்” என்றான்.

நாட்டாமையும் “ஒ அப்ப உனக்கும்  இந்த பஞ்சாயத்துக்கும்  இனி எந்த சம்மந்தமும் இல்ல. என்ன பிரச்னைனாலும் நீ எங்ககிட்ட வரக்கூடாது” என்றார்.

“போங்கய்யா. பணம் இருந்தா உங்க எவன் தயவும் எனக்கு தேவை இல்ல. இங்க உள்ள நிலத்தையெல்லாம் வித்து போட்டு நானே டவுன்ல போய் சொகுசா இருக்கலாம்ன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இதுல ஊராம் பஞ்சாயத்தாம்” என்று அவன் கூட்டத்தை விட்டு செல்ல, கூடவே அவன் எடுபிடிகள் சென்றனர்.

நாட்டாமைதான் ஆதியிடம் “மன்னிச்சிக்குங் தம்பி. அவங்கய்யன் முகத்துக்காக இவ்ளோ நாளா பொறுத்து போனோம். நீங்க என்ன பண்ணணுமோ பண்ணுங்க. நாங்க தடுக்க மாட்டோம்” என்றதும் ஆதி எழுந்து அவரிடம் கைகூப்பி நன்றி சொல்லிவிட்டு கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!