Skip to content
Post Views: 433
வினியின் நதி அத்தியாயம் 9
வியாழன் இரவு வெகு நேரம் நதி விழித்திருந்தாள். அவளின் முதல் சகோதரி அவள் மாமியார் வீட்டு விசேஷத்திற்கும், இரண்டாம் சகோதரிக்கு கல்லூரி திறந்துவிட்டதால் கல்லூரிக்கும் சென்று விட்டார்கள். அதனால் நதிக்கு மடிக்கணினி உபயோகிப்பதில் பிரச்சனையில்லாமல் இருந்தது.
அவளுக்கு பிடித்த இரவு நேரம். வானில் நட்சத்திரங்கள் அங்குமிங்கும் மினுமினுப்பாக ஜன்னல் வழியே தெரிந்தது. அவளின் பிறந்தநாள். காதலிக்க ஆரம்பித்து முதல் பிறந்தநாள். அவளுக்கு பிடித்தவனின் வாழ்த்துக்கான காத்திருப்பு. இந்த நிமிடம் வாழ்வில் இனிமையாக தோன்றியது.
ஆனால் அந்தோ பாவம்.. அவள் தோழிகள் அனைவரும் அவளை வாழ்த்தினர். அவனிடமிருந்து மட்டும் வாழ்த்து வரவில்லை. அந்நேரம் அழைக்கவும் அவளுக்கு தயக்கமாக இருந்தது. வீட்டில் வேறு யாராவது எடுத்துவிட்டால் என்ன செய்வது? அவன் புலனம் (Whatsapp), முகநூல் (Facebook) பக்கம் இன்று முழுவதும் வரவில்லை. வந்ததற்கான அறிகுறியும் இல்லை. பாவம் வேலை அதிகம் போல. எவ்வளவு சமாதானம் சொன்னாலும் மூளைக்கு புரிகிறது. ஆனால் மனதுக்கு புரியவில்லை.
Advertisement
’ஆயிரம் வேலை இருக்கட்டும். ஆனால் ஒரு வாழ்த்து சொல்லலாம்ல. போன் கைல தான இருக்கு. என்ன சொன்னாலும் சரி. நான் அவன்கிட்ட 2 நாள் பேச மாட்டேன். இதான் அவனுக்கு தண்டனை.’ என நினைத்துக் கொண்டாள்.
வெள்ளி காலை மங்களகரமாக விடிந்தது. அவள் வீட்டில் இந்த பிறந்தநாள் என்று ஆடம்பரமாக கொண்டாடமாட்டார்கள். என்றும் போல் அது ஒரு நாள் அவர்களுக்கு அவ்வளவு தான். நதி சிறு பெண் என்பதால் புது உடை அணிந்து கொண்டாட வேண்டும் என்று ஆசை. அவர்கள் வீட்டில் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.
எனவே எப்போதும் போல கோவில் சென்றுவிட்டு கல்லூரிக்கு சென்றுவிட்டாள். அவள் தோழிகள் அனைவரும் நேரில் வாழ்த்தியும் அவளுக்கு மகிழ்ச்சி தானே தவிர அவளுக்கு அன்றைய நாள் முழுமை பெறாமல் ஒரு வெறுமையாகவே இருந்தது.
Advertisement
மதிய உணவு நேரம் ஆரம்பித்தும் அவளுடைய வகுப்பு ஆசிரியர் மும்மரமாக அவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.
Advertisement
அவள் வகுப்பில் உள்ள அனைவரும் ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்’ என்று ஒரு வித பசியோடும், தூக்கத்தோடும் தான் அமர்ந்திருந்தனர்.
பக்கத்து வகுப்பு ஆசிரியர் அந்த வழியே கடக்கையில் ”பாவம் சார் பசங்க.. கொஞ்சம் சாப்பிட விடுங்க.. சாப்பிட்டதும் அடுத்து நடத்துங்க..” என்று கூறி விட்டு சென்றார்.
“தெய்வமே.. நீ நல்லா இருப்ப.. உன் பிள்ளைகுட்டி எல்லாம் உன் பேர சொல்லும்.. நன்றி தெய்வமே” என்று வெண்ணிலா குனிந்து மெதுவாக சொல்ல,
Advertisement
அவள் தோழிகள் அனைவருக்கும் அவள் சொன்னது கேட்டதும், பக்கென சிரித்து விட்டனர்.
”அது என்னடி அவரு பிள்ளைகுட்டி அவரு பேர தான சொல்லும்… இது என்ன லாஜிக்.. புரியலயே” என்று நதி கேட்க,
”காப்பாத்துனதுக்கு நன்றி சொன்னா நன்றிய மட்டும் கவனிங்கடி.. எக்ஸ்ரா பிட்டிங் எல்லாம் கவனிச்சு இப்டி கேள்வி கேட்க கூடாது.. அப்புறம் நம்ம சாமி கருணை காட்டாது” என வெண்ணிலா சொல்ல,
“எந்த சாமி அந்த சாமி?” என்று ராதா கேட்க,
”வேற யாரு நம்மல சாப்பிட கூட அனுப்பாம அவரு கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குற நம்ம மயில்சாமி தான் அந்த ஆசாமி” என்று வெண்ணிலா சொல்லவும்,
அவள் தோழிகள் மறுபடியும் சிரித்துவிட்டனர்.
“பொண்ணுங்களா அங்க என்ன ஒரே சத்தம்?” என வகுப்பு ஆசிரியர் கேள்வி கேட்க,
“நத்திங் சார்… எங்களுக்கு புரியாத கணக்கு கூட புரியுற மாதிரி இவ்ளோ சாதாரணமா எழுதி எங்களுக்கு சொல்லி குடுக்குறிங்களே நீங்க எங்க குலசாமி சார்” என்று வெண்ணிலா முகத்தை பாவமாக வைத்து சொல்லவும்,
இவளுடைய வகுப்பு ஆசிரியரும் மனது குளிர்ந்து ”நல்லா படிங்க” என்று சொல்லி விட்டு, ”சாப்பிட்டு வந்து அடுத்து எழுதுங்க” என்றுவிட்டு, வகுப்பு பிரதிநிதி (Representative) – யிடம் அடுத்து செய்ய வேண்டிய கணக்குகளை கரும்பலகையில் சாப்பிட்டு எழுதி வைக்க சொல்லிவிட்டு கொடுத்து சென்றார்.
“கல்நெஞ்சக்காரன் கரையுறானா பாரு… இப்பவும் வேலை கொடுத்துட்டு போறான்… எல்லாம் எங்க நேரம்.. சீக்கிரம் வாங்கடி எழுதிட்டு சாப்பிட போலாம்” என அனைவரும் வேகமாக எழுத தொடங்கினர்.
நதியும் கரும்பலகையில் இருப்பவற்றை எழுதிவிட்டு சாப்பிட செல்லலாம் என்று வேகமாக எழுதிக் கொண்டிருந்தாள்.
அப்போது வகுப்பில் வெளியே இருந்து, “இஸ் இஸ் நதி இஸ் இஸ்” என்று கேட்க,
இவள் சுற்றி முற்றி பார்த்துவிட்டு யாரும் இல்லாமல் மறுபடியும் எழுதத் தொடங்கிவிட்டாள்.
திரும்பவும் “இஸ் இஸ் நதி” என கேட்க,
அவள் அருகில் இருந்த அவள் தோழி சுதா, “அடியே நதி… உன் அத்தை பையன் வினோதன் வந்துருக்கான்… அவன் தான் இஸ் இஸ் கூப்டுட்டு இருக்கான்.. அந்த சத்தத்துல வகுப்புல எல்லாரும் அவன தான் பாக்காங்க… நீ மட்டும் சுத்திப் பாத்துட்டு இருக்க… உன்ன வச்சுட்டு” என அவள் நெற்றியில் அறைந்து கொண்டாள்.
”வினோதனா?” என இவள் விருட்டென எழுந்து சென்றாள்.
வெளியே மரத்தின் அருகில் நின்றான். விரைந்து அவனிடம் சென்று, “இன்னைக்கு வர மாட்டிங்கனு சொன்னிங்க?” என்று முகம் முழுவதும் புன்னகையுடன் கேட்டாள்.
வினோதன் இவளுக்கு இரண்டு 5ஸ்டார் சாக்லேட்டை நீட்டி, ”இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்னவளே” என்று கூறினான்.
“தேங்க்யூ சோ மச் செல்லம்.. நீங்க நேர்ல வந்து வாழ்த்து சொல்லுவிங்கனு நினச்சு கூட பாக்கல” என்று அந்த சாக்லேட்டுகளை எடுத்துக் கொண்டாள்.
”கல்லூரிக்கு வரல.. உனக்கு நேர்ல பார்த்து வாழ்த்து சொல்லனும்னு தான் இந்த நேரம் வந்தேன்…” என கூறினான்.
அவளும் மகிழ்ச்சியாக, ”நீங்க மட்டும் வாழ்த்து சொல்லாம இருந்துருந்தாலோ, மறந்துருந்தாலோ உங்கள ஒரு வழி பண்ணிருப்பேன்.. தப்பிச்சுட்டிங்க” என்றாள்.
”அப்டிங்களா.. அப்டி என்ன பண்ணுவிங்க?”
“2 நாள் உங்கட்ட பேசாம இருப்பேன்..”
“அவ்ளோ தானா?”
“இருங்க இன்னும் இருக்கு… கல்யாணத்துக்கு அப்புறம் எப்ப எல்லாம் இந்த ஞாபகம் வருதோ அப்ப எல்லாம் நீங்க சாப்புடுற சாம்பார்ல சீனி அள்ளி போட்டு சாப்புடுங்க, சாப்புடுங்கனு கொடுமை பண்ணுவேன்..”
”சாம்பார்ல சீனியா?” என்று அவன் முகத்தை அசூசையாக வைத்தான்.
”என்னடி ஹீரோயின் மாதிரி இருப்பனு பாத்தா, வில்லி மாதிரி வேலை பண்ணுவேன்னு என் கிட்டயே தைரியமா சொல்ற?”
“நதின்னா என்னனு நினச்சிங்க.. பாசம் காட்டுனா தாயா இருப்பேன்.. பகைச்சுகிட்டா பேயா மாறிடுவேன்.. நல்லது பண்றவங்களுக்கு நான் பஞ்சமுகி.. கெட்டது பண்ணா நான் சந்திரமுகியாக்கும்”
“அடச்சீ.. பஞ்ச் டயலாக் பேசுற மூஞ்சிய பாரு… பல்லழகி உனக்கு இதெல்லாம் செட் ஆகல… போய் படி.. நேரமாச்சு பாரு… நான் கிளம்புறேன்” என்று வினோதன் விடை பெற்றான்.
”அதுக்குள்ள கிளம்புறிங்க.. என் கூட சாப்பிட்டு போலாம்ல.. இன்னைக்கு பிறந்தநாள் ஸ்பெஷல்லா எனக்காக ப்ளீஸ்” என்று நதி முகத்தை சுருக்கி கேட்க,
“என் அழகு பப்ளிமாஸ்.. இப்டிலாம் பண்ணாத.. எனக்கு உன் குண்டு கன்னத்த கிள்ளனும்னு ஆசையா இருக்கு.. ஆசை பட்டத செஞ்சுருவேன் பாத்துக்க..”
“கிளுகிளுன்னு அப்டியே செஞ்சுட்டாலும்..க்க்கும்ம் போங்க’’
”செஞ்சு காட்டுறேன்டி ஒரு நாள்… எனக்கும் நேரமாச்சுடி.. அவ்ளோ வேலை இருக்கு.. உனக்காக உன்ன பார்க்க வந்தேன்.. புரிஞ்சுக்கோ… நாளைக்கு லீவ் தான.. நாளைக்கு வெளிய போலாம் சரியா? இப்ப நான் கிளம்புறேன்” என்று வினோதன் விடை பெற்றான்.
”மதர் ப்ராமிஸ்?” என நதி கையை நீட்ட,
“ஃபாதர் ப்ராமிஸ்” என வினோதனும் அவள் கை மீது கை வைத்து சத்தியம் செய்தான்.
”சரியான அப்பா கோந்து நீங்க… உங்க அண்ணன், அண்ணிக்கு என் வாழ்த்துக்கள் சொல்லிருங்க”
“சரி.. பாய்” என இருவரும் விடை பெற்றனர்.
அவன் அவ்விடம் விட்டு செல்லும் வரை பார்த்துவிட்டு இவள் வகுப்பிற்குள் வந்தாள்.
”ம்க்கும்.. என்னடி உன் அத்தான் என்ன சொன்னாரு?” என சுதா கேட்க,
“சொன்னாரு இல்ல.. குடுத்தாருனு கேளுடி.. அவ கைல எதோ வச்ச மாதிரி இருந்துச்சுல..” என்று வெண்ணிலா சொல்ல,
“ஆமா ஆமா.. கைல எதோ வச்சான் நானும் பாத்தேன்.. எங்க காட்டு அத” என்று மரியா அவள் கையை பிடிக்க,
”ஹே அவ அத்தான் பிடிக்க வேண்டிய கைய நீ பிடிக்க… பாத்துடி அவ அத்தானுக்கு வலிக்க போது” என்று ராதா கிண்டல் செய்ய,
அவள் கையில் இருந்த சாக்லேட்டை மரியா அனைவருக்கும் அவள் கையை விரித்து காட்டிவிட்டாள்.
“லவ்வ ஏத்துக்காம இருக்கேலயே இவ்ளோ பண்றான்னா.. ஒரு வேளை ஏத்துக்கிட்டா.. இவள கைல பிடிக்க முடியாது போலவே.. வானத்துக்கும், பூமிக்கும் குதிப்பா.. இவள உஷாரா கமிட் ஆகாம பாத்துக்கனும்” என வெண்ணிலா கூற,
’இன்னுமா நம்மல இந்த உலகம் நம்புது.. இந்த அரவேக்காடுங்க நான் சொன்னாலும் நம்ப மாட்டாளுங்க அய்யோ..’ என எண்ணிக்கொண்டு,
”என்னைய கிண்டல் பண்ணுனது போதும்.. எல்லாரும் சாப்டே வந்துட்டாங்க.. வாங்க நம்மளும் சாப்ட போலாம்..” என்று நதி அவர்களை விரட்டிக் கொண்டு உணவு உண்ண சென்றாள்.
அடுத்து முழுவதும் அன்றைய நாள் அவர்களுக்கு கலகலப்பாகவே சென்றது.
வீட்டிற்கு சென்றும் நதிக்கு, வினோதன் தனக்காக அனைத்து வேலைகளையும் விட்டு வந்தது, சாக்லேட் கொடுத்தது, கன்னத்தை கிள்ளுவேன் என பேசியது இதுவே அவள் மனதில் தித்திப்பான நினைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவளுக்கு இப்பொழுது தான் மன நிறைவாக இருந்தது.
அன்று இரவு அவளுக்கு வினோதனின் அண்ணனின் நிச்சயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் பகிர்ந்து அவர்கள் அனைவரும் என்ன உறவு என்று சொல்லி, நெடுநேரம் ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக் கொண்டிருந்தனர்.
மறுநாள் அவளுக்கு வாக்கு கொடுத்தது போல, அவளை வெளியே அழைத்துச் சென்றான்.
வண்டியில் செல்லும் போது, ”தொடர்ந்து வேலை இருந்ததால உனக்கு சாக்லேட் மட்டும் தான் வாங்குனேன்.. இப்ப என்ன வேணும்னு சொல்லு.. நீ எது கேட்டாலும் வாங்கி தருவேன்..” என்றான்.
“எனக்கு எதுவும் வேண்டாங்க… நீங்க வாழ்த்து சொன்னதே போதும்.. நான் ரொம்ப ஹாப்பி…உங்க கூட இப்டியே வாழ்க்கை முழுக்க போனா போதும்” என்று நதி கூறினாள்.
”இப்டியே போனா பெட்ரோல் தான் காலியா போகும்.. நீயும், நானும் நடு ரோட்டுல தான் நிக்கனும் பாத்துக்கோ…”
“ஏங்க ஒரு ரொமான்டிக்கா பேசக் கூட விடமாட்டிக்கிங்க… நீங்களாம் எப்டி தான் ரொமான்ஸ் பண்ணுவிங்க”
”அதபத்தி நீ கவலப்படாத… நீ போதும் போதும்னு சொல்ற அளவுக்கு நான் ரொமான்ஸ் பண்ணுவேன்.. நீ தாங்க மாட்ட சொல்லிட்டேன்”
”ஆமா.. நீங்க பெரிய சிங்கம்.. இவரு அடிச்சா நாங்க தாங்க மாட்டோம் பாரு.. ரொமான்ஸ் தான அதெல்லாம் தாங்குவேன் தாங்குவேன்…”
“ஃப்யூச்சர்ல அதையும் பாக்க தான போறேன் பப்ளிமாஸ்..”
“ஏங்க எப்ப பாரு என்ன பப்ளிமாஸ் சொல்றிங்க? நான் ஒன்னும் அவ்ளோ குண்டு இல்ல தெரியுமா..”
“நீ குண்டு இல்லடி செல்லம்..கொஞ்சம் கொழுகொழுன்னு இருக்கடி என் பப்ளிமாஸ்”
“நீங்களும் தான் பொசுபொசுன்னு இருக்கிங்க… நான் உங்கள கிண்டல் பண்றேனா?”
”ஹே.. எனக்கு இருக்குறது சிக் பேக்ஸ்(six pack) … ஆனா நீ ஜப்பி (chabbi)”
”சிக் பேக்கோ, சிங்கிள் பேக்கோ குண்டு குண்டு தான்.. தொப்பை தொப்பை தான்”
”எது சொன்னாலும் எடக்கு மடக்காவே பேசாத நதி.. உனக்கு சாப்பிட எதாச்சும் வாங்கி தரேன் வா இங்க நல்லா இருக்கும்” என்று ஒரு ஹோட்டலில் நிறுத்தி அவளுக்கு வாங்கி கொடுத்தான்.
பிறகு வெகுநேரம் இருவரும் பேசிவிட்டு மாலை அவளை வீட்டில் விட்டு அவன் வேலைக்கு சென்றுவிட்டான்.
error: Content is protected !!