Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மெய்யறிவாயோ மெல்லினமே 16

அத்தியாயம் 16

எப்பொழுதும் போல அறைக்குள் துள்ளலுடன் நடந்தவள் சற்று யோசித்து பின்னால் திரும்பியப்படியே தன் அறைக்குள் நுழைந்தாள்.



Advertisement

படுக்கையை நெருங்கியதும் ஒருவித வேகத்தோடு பின்னாலிருந்தபடியே ஒரே ஜம்பில் படுக்கையில் விழ “அம்மா…” என ஆடவன் கத்த, அந்த கத்தலில் பயந்தவள் என்றுவென்று உணரும் முன்பே “ஆ…” என்று கத்தினாள்.

“ஏய்.. ஹேய்… எழு டி…” என வாசு கத்திய தெல்லாம் அவளின் காதில் துளியும் விழவில்லை.. ஆவென்று கத்திக் கொண்டே இருந்தாள்.

Advertisement

Advertisement

அவளின் கத்தலில் எரிச்சலானவன் பெண்ணின் இடையில் ஒரு கையையும், வாயில் ஒரு கையையும் வைத்தான். அவனது செய்கையில் கண்கள் இரண்டும் விரிய “ம்ம்…” என்று சத்தமாக திணறினாள்.

அது இவனுக்கு இன்னும் கடுப்பாக, மங்கையின் வெற்றிடையில் அழுத்தத்தை அதிகரித்து “இப்ப நீ கத்தறதை நிறுத்த போறயா இல்லை கீழே தூக்கி போடவா…” எனக் கேட்டான்.

Advertisement

கன்னத்தில் உணர்ந்த ஆடவனின் சூடான மூச்சு காற்றும், செவியில் பட்டும் படாமல் தீண்டி சென்ற காளையின் வன்னிதழும், அவளது மேனியை சிலிர்க்க வைத்தது என்றால்  அவனது கைகள் இடையில் கொடுத்த அழுத்தம் மேனி முழுவதும் மின்சாரத்தை பாய்ச்சியது.

அதில் அவன் முன்னே பேசியது சற்றும் புரியாமல் தான் போனது பெண்ணிற்கு “ம்ம்…” என்றாள்.

அந்த ‘ம்ம்’ இல் “என்ன” என்ற கேள்வி ஒளிந்திருந்தது. ஆனால் வாசுவிற்கு அப்படி தோன்றவில்லை போல மங்கையின் ‘ம்ம்…’ குழைவது போலிருக்க, க்கடுப்பானவன் அவளது இடையில் இன்னும் இன்னும் அழுத்தம் கூட்டினான். அதில் பாவையின் மேனி மேலும் மேலும் சிலிர்த்து அடங்கியது.

தன் பிடியில் தான் அவளுக்கு சிலிர்க்கிறது என்று உணர்ந்தவன் சட்டென பெண்ணின் இடையிலிருந்த கைகளை எடுத்தப்படி “இப்ப எழுந்துக்க போறயா? இல்லை நான் உன்னை இறங்க வைக்கட்டுமா…” இறுகிய குரலில் கேட்டான்.

ஆடவனின் இறுகிய குரலில் இத்தனை நேரம் அவளைப் பிடித்திருந்த பித்து சற்றே விலகி நின்றது. அவசரமாக எழுந்து நின்றவள் “என் ரூம்ல என்ன பண்றீங்க நீங்க…” எனக் கண்களை உருட்டி உருட்டி மிரட்டலாக கேட்டாள்.

அவளது மிரட்டலை கண்டுக்கொள்ளாமல் நிதானமாக எழுந்து நின்றவன் “இது உன் ரூம்மா இருக்கட்டும். எதுக்கு என்மேல விழுந்த? படுக்கையில் நான் இருக்கிறது கூடவா உனக்கு தெரியல?…”  கைகளை கட்டிக் கொண்டு அவன் கேட்ட விதம் இவளுக்கு கோபத்தைக் கொடுத்தது.

“என்னவோ உங்க மேல ஆசைப்பட்டு  விழுந்த மாதிரி பேசறீங்க. இது ஜஸ்ட் ஆக்சிடென்ட்…” என்றவளை நம்பாது புருவம் உயர்த்தி கேள்வியாக பார்த்தான்.

அவனது பார்வையில் பல்லைக் கடித்தவள் “நீங்க நம்பலைன்னாலும் இதான் நிசம்…” அசட்டையாக கூறியவள் அவனின் பதிலை கூட கேட்காது திரும்ப

“இப்படியெல்லாம் மேல விழுந்தா மயங்கிடுவேன்னு நினைக்கிறயா? நீ என்ன பண்ணாலும்,எதை காட்டினாலும் நான் மயங்க மாட்டேன். இனிமே இப்படி சீப்ப்பா பிகேவ் பண்ணாத…” என்றவனின் கன்னத்தில் நவியின் கைகள் அதன் தடத்தை பதித்திருந்தது.

கண்கள் இரண்டும் கலங்க, சிவந்த இதழ்கள் அழுகையில் நடுங்க  “ச்சீ…” என்றவள் அவனை வெற்று பார்வை பார்த்துவிட்டு  அங்கிருந்து நகர்ந்தாள்.

படியில் வேகமாக இறங்கி சென்றவளின் காலடி சத்தமும் “எங்கடி இத்தன வெசையா போற…” என்ற அய்யமாளின் சத்தமும் வாசுவின் காதில் கேட்டது.

கண்களை இறுக மூடித் திறந்தவன் பொத்தென்று படுக்கையில் விழுந்தான். மனம் ஊமையாய் கதறியது. நெஞ்சை  அழுத்தி துடைத்து கொண்டே கண்ணில் தேங்கிய கண்ணீரை வெளிவிடாது அண்ணார்ந்து விட்டத்தை பார்த்தான்.

உன் காதலுக்கும்..

என் காதலுக்கும்…

இடையில்

சிக்கித் தவிக்கிறதடி

என் பொல்லா உணர்வுகள்..

**

அறையிலிருந்து வேகமாக வெளியில் வந்தவளிடம் “எங்கடி இத்தன வெசையா போற…” எனக் கேட்டார் அய்யமாள். அவருக்கு பதில் சொல்லாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

“சித்த நில்லு டி. அவனை வேற ரூம் மாத்திக்க சொல்றேன்…” என்று அழைத்தபடியே அவளின் பின்னாலேயே சென்றார். அவளோ அவர் பின்னாலேயே வருவதை துளியும் பொருட்படுத்தாமல் வேக நடையோடு மலை காட்டை நோக்கி நடந்தாள்.

“அவன் கிட்ட நான் பேசறேன். நீ வா சாமி..” என்றவர் நெற்றியில் புறங்கையை வைத்து தூரத்தில் சென்று கொண்டிருந்தவளை பார்த்து

“எதுக்கு இப்படி வெக்குடு வெக்குடுன்னு காட்டைப் பார்த்து போற…” கத்தினார் அய்யம்மாள்.

பெரியவரின் கத்தலை அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்பதை விட அவரின் குரல் இவளின் கவனத்தில் பதியவில்லை என்பதே உண்மை.

பாவையின் நினைவுகள் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தான் வாசுதேவன். ஒருபக்க மனமோ ஆடவனின் பேச்சில் ஊமையாய் கதறி கொண்டிருந்தது.

‘எத்தனை முறை அடித்து விரட்டினாலும் வெட்கமே இல்லாமல் அவன் முன் சென்று நிற்பதினால் தானே இன்று இந்த வார்த்தையை கேட்கிறான்…’என நினைத்தவளுக்கு மலுக்கென்று கண்ணீர் வந்தது.

‘அந்தளவிற்கு கீழாக தன்னை நினைத்து வைத்திருக்கிறானா?’ என்ற மனதின் கேள்வியே அவளுக்கு கசந்தது. மனம் முழுக்க ரணமாய் வலிக்க அப்போதைக்கு தனிமையை தான் தேடினாள்…

நேராக மலைக் காட்டிலுள்ள தோட்டத்தில் வந்தமர்ந்து கொண்டாள். கண்களில் சூழ்ந்திருந்த கண்ணீர் வரவா வேண்டாமா என்பதை போல் தேங்கி நின்றது. தொண்டைக் குழி ஏறி இறங்க, பொத்துக் கொண்டு வந்தது பெரும் அழுகை… கீழ் இதழ்களை அழுத்திக் கடித்து கொண்டாள்.. அழுகையை அடக்கியதாலோ என்னவோ தொண்டைக் குழி வலித்தது.

“வேண்டாம் அவன் உனக்கு வேண்டாம். நீ அவனுக்காக அழக் கூடாது. அவன் மனசுல நீ கொஞ்சமாச்சும் இருந்திருந்தா இப்படியான வார்த்தையை விட்டு இருப்பானா? வேண்டாம் அவன் உனக்கு வேண்டாம்…” மனம் கடுமையாக சொல்லவும் பெண்ணின் இதழ்கள் கீழாக வளைந்தது. ‘அவன் உனக்கு வேண்டாம்…’ என்ற சொல்லில்

நான்கு வருடங்களாக அவன் மீது நேசம் வைத்திருப்பவள் அல்லவா… சட்டென அவன் வேண்டாம் விட்டுவிடு என்றால் எப்படி அதனை ஏற்று கொள்வாள்.

‘நம்ம கம்பெனியோட  ஒன் ஆப் தி ஹெட் வாசுதேவன் தான் நீ மயங்கி கிடந்ததை கேமராவுல பார்த்து ஹாஸ்பிடல்ல சேர்த்த சொல்லி இருக்காரு. உன்கூட என்னை துணைக்கு இருக்க சொன்னதும் அவர் தான். வாட்ச்மேன் அண்ணா சொல்லலயா? …’  என்ற அபியின் கேள்வியில் தான் அவன் யாரென்று தேட ஆரம்பித்தாள்.

அவளது தேடலின் முடிவில் அக்கவுண்டன்ட்  உதவியோடு ஆபிஸ் பார்ட்னர்ஷிப் டாக்குமெண்ட்டில் வாசுவின் புகைப்படத்தை பார்த்தாள்.

முதல் பார்வையிலேயே அவன் மீது காதல் பொத்துக் கொண்டு வரவில்லை என்று பொய்யெல்லாம் கூற மாட்டாள்.

பார்த்த நொடியே அவளின் ஆழ் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் ஆடவன். அது, அவனது அழகோ இல்லை,  அவன் செய்த உதவியோ? ஏதோ ஒன்று அவனை,அவளுக்கு பிடித்து இருந்தது.

இதில் கவனிக்க கூடிய விசயம் என்னவென்றால் இதயா இன்ஃபராவின் ஷேர் ஹோல்டர் வாசுதேவனை  தான் அவளுக்கு தெரியுமே தவிர…சுதன் கூறிய வாசுவையோ, இல்லை இதயநிலாவையோ இவளுக்கு தெரியாது. இருவருமே வேறு வேறு ஆட்கள் என்று தான் நினைத்தாள்.

அதற்கு காரணம் அத்தனை பெரிய சொத்துகளுக்கு அதிபதியானவர்கள் அரசு தேர்விற்கு முயற்சிக்கிறார்கள் என்றால் யார் தான் நம்புவார்கள்.

*இங்கு, சுதனும் இவர்களை பற்றிய உண்மையை கூறவில்லை என்பது கூறிப்பிடதக்கது.*

சுதனின் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வைத்து அவர்களை காணும் வரையுமே இருவரும் வேறு வேறு ஆட்கள் என்று தான் நினைத்தாள்.

இதயாவோடு அவனைக் கண்டதுமே முதலில் அதிர்ச்சி, ஆனந்தம், ஆர்ப்பரிப்பென்று அத்தனை உணர்வுகளும் மொத்தமாய் அவளைத் தாக்கியது.

வெறும் புகைப்படத்தை பார்த்தே அவனில்  பித்து பிடித்து சுற்றிக் கொண்டிருப்பவள் அவனை நேரில் கண்டால்? குப்புற விழுந்து விட மாட்டாளா என்ன? அவனது  முதல் பார்வையில், முதல் வார்த்தையில், முதல் புன்னகையில் என்று அனைத்திலும் அவனில் மொத்தமாய் குப்புற விழுந்தாள்.

அதே சமயம் ‘அவனுக்கு என்னை நினைவு இருக்குமா?’ மனதில் எழுந்த கேள்விக்கு அவனது அந்நிய பார்வையே பதில் கூறியது.

அந்த பார்வையில் மனம் சுணங்கினாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.  அவன் மீது அவள் வைத்திருந்த காதல் அதனை பெரிதுப் படுத்தவில்லை என்பதே உண்மை.

அதே நேரம்,  தன் காதலை அவன் ஏற்கவில்லை என்றாலும் பரவாயில்லை மனதில் இருப்பதை அவனிடம் கூறிவிட வேண்டும் என்பதில் தெளிவாக  இருந்தாள்.

அதன்படி அன்றே அவனிடம் காதலைக் கூறிவிட்டாள் பாவை. ஆனால் என்ன  அதனை உணர வேண்டியவன் தான் துளியும்  உணரவில்லை.

அன்று  மட்டுமல்ல அதற்கு பின்னான சந்திப்புகளில் கூட அவளை  கண்டும் காணாமல் சென்றுவிட்டான். ஆம் கடந்த இரண்டு வருடத்தில் மூன்று நான்கு முறை ஈரோட்டில் உள்ள அலுவலகத்திற்கு வந்திருக்கிறான்.

அப்பொழுதெல்லாம் வெட்கமே இல்லாமல் அவனை பார்த்து வைப்பது உண்டு. ஆனால் அவனோ இவளை துளியும் பொருட்படுத்தாமல் கடந்து விடுவான். அந்த சமயம் மனம் ரணமாய் வலிக்கும் தான் ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொண்டால் அது நவினா இல்லையே.

இதுவே இவர்களுக்குள் தொடர்கதையானது. அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றெண்ணி தான் அன்று சேலத்தில் அவனிடம் அதிரடியாக காதலைக் கூறியது.

ஆனால் அவளே எதிர்பாராத ஒன்று பொது வெளியில் வைத்து அவன் அடித்தது.  உண்மையாவே  அன்று பெரிதும் காயப்பட்டு போனாள் பெண்.

அவன், அவளது காதலன் தான், உயிருக்கு உயிரானவன் தான், வருங்காலத்தில் கணவனாக போகிறவன் தான். அதனால் தான்  அத்தனை வலித்தது.

அன்றைய காயம் முற்றும் முழுதாக ஆறும் முன்பே இன்று மீண்டுமொருமுறை காயத்தை வலிக்க வலிக்க கொடுத்து விட்டான். அந்த வலி  இன்னும் இன்னும் கண்ணீரை கொடுத்தது அவளுக்கு. பட்டென கண்களை இறுக மூடி கொண்டாள். கண்களுக்குள் விழுந்தான் ஆடவன்.

மெல்லிய புன்னகையோடு நின்றவனிடம் “நீ எனக்கு வேண்டாம்…” என்றாள் உதடு துடிக்க. “அப்படியா?…’ புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான். ஆமென்பதை போல் தலையாட்டியவளின் கன்னங்களில் கண்ணீர் கோடுகள். நொடிகள், நிமிடங்களாக கரைய மெளனமாக அழுது கரைந்தாள்.

அவளது அழுகையை பொறுக்க முடியாமல் தென்றலும் பெண்ணின் மேனியை பலமாக தீண்டி சென்றது. தென்றலின் தழுவலில் சட்டென கண்களை திறந்தாள்.  கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரை அழுத்தி துடைத்துக் கொண்டப்படி எழுந்தவளுக்கு அப்பொழுது தான் சுற்றம் உரைத்தது.

சுற்றம் முழுவதும் அரையிருட்டாக இருந்தது. ஒரு பக்கம் காற்று வேறு சற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. நீண்ட நெடிய பெருமூச்சுடன் வீட்டை நோக்கி நடந்தாள். அக்கணம் “நவி…” என்றழைக்கும் சத்தம் கேட்டது. தூரத்திலிருந்து ஒலிக்கும் குரல் யாரின் குரல் என்று சரியாக யூகிக்க முடியாவிட்டாலும் அந்த அழைப்புக்கு பதில் கூறினாள்.

“ஹான் வரேன்…” என்று..

அந்தோ பரிதாபம் இவள் கத்தியது அழைத்தவருக்கு கேட்கவில்லை போல. மீண்டும் மீண்டும் நவி என்ற அழைப்பு மட்டுமே எதிர்ப் பக்கத்திலிருந்து வந்தது. இப்பொழுது பதில் கொடுக்காமல் குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள்.

பாதி தூரம் வந்தவள் ஓரிடத்தில் நின்று தன்னை அழைத்தவரை கண்களால் தேடினாள். அப்பொழுது தான் அவளுக்கு முன்னால் பாதி உயரத்திற்கு படமெடுத்தப்படி நின்ற ஜீவனை கண்டாள்.

கண்கள் தன்னாலயே விரிய, கால்கள் அதன் போக்கில் பின்னால் நகர்ந்தன… அக்கணம் அவளுக்கு பின்னாலிருந்த அகழியை பெண்ணவள் பார்க்கவில்லை என்பது தான் உண்மை. அந்நேரம் அவளுமே  எதிர்பாராத விதமாக கால்கள் சறுக்கி அந்த அகழியில் விழுந்தாள்.

******

‘மாட்டேன் மாட்டேன்…’ என மறுத்தும் சிறுவனின் அனுமதியின்றி அவன் இழுத்து செல்ல ‘விடு, என்னை விடு, நான் அம்மாகிட்ட போகணும் என்னை விடு, என்னை விடு…’ கைகளை உதறிக் கொண்டே பெருங்குரலெடுத்து கத்தியவன் நிஜத்திலும் கத்தி விட்டான் அந்த சிறுவனான வாசு தேவன்.

கனவில் பிடித்த கைகளின் அழுத்தம் தற்போது நிஜத்திலும் உணர்ந்தான் ஆடவன். அக்கணம் கனவெது நிஜமெது என்பது மறந்து போக ‘என்னை விடு, என்னை விடு…’ கத்த.. அவன் கத்தலில் பட்டென விட்டது அந்த கைகள்…

அக்கணம் மெல்ல விழிகளை திறந்து பார்த்தான். அரையிருட்டில் மூழ்கி இருந்தது அவ்வறை. வியர்வையில் நனைந்திருந்த முகத்தை அழுத்தி துடைத்து கொண்டே சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டான்.

சூரியனின் செந்நிற கதிர்களை விழுங்கி கொண்டிருந்த கருநீல நிறத்தை பார்த்ததும் அந்தி மாலையை தாண்டி சென்று கொண்டிருக்கிறது என்று புரிந்தது அவனுக்கு. நீண்ட நெடிய பெருமூச்சு விட்டவனுக்கு நன்றாகவே புரிந்தது மாலையில் அவன் நினைவுகளின் மிச்சம் தான் கனவில் வந்தது என்று.

எப்பொழுதெல்லாம்  அவளையும், அவளின் காதலையும், இவன் உணர்கிறானோ அப்பொழுதெல்லாம் அவனது கொடூரங்கள் அனைத்தும் கண்களுக்குள் முன் தோன்றி அவனைத் தூரத்தும். அதில் தப்பிக்க உறங்கினான் என்றால் கனவில் வந்து பயமுறுத்தி கொண்டிருக்கிறது.

கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே எழுந்தவன் மின் விளக்கை எரிய விட்டு குளியலறைக்குள் நுழைந்தான். தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அறையிலிருந்து வெளியில் வந்தவனுக்கு கிடைத்த செய்தி என்னவோ மலைக் காட்டிற்கு சென்ற நவினா இன்னும் வீடு திரும்பவில்லை என்ற செய்தி தான்.

அதற்கு பின்னான நிமிடங்களை சொல்லவா வேண்டும்… மண்ணில்  விழுந்த மழைத்துளி போல் மாயமானது. அதற்கு பின் நடந்த கலவரத்தில் இவனது அறைக்குள் வந்தவர் யாரென்று யோசிக்க மறந்து விட்டான் வாசுதேவன்.

******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!