Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒற்றை ஜன்னல்

ஒற்றை ஜன்னல் – 16

“என்ன பிரச்சனை உனக்கு? உன் இஷ்டத்துக்கு நோட்டீஸ் அனுப்புற அவ்ளோ கொழுப்பாயிடுச்சா, மனசுல என்ன பேரழகினு நினைப்பா உனக்கு, வீட்டுக்கு வராம ஏழு மாசம் பொறந்த வீடே கதின்னு கிடந்த எங்க வீட்டில ஏதாவது சொன்னாங்களா வந்ததுக்கு அப்புறமும் உன் இஷ்டத்துக்கு தான இருந்த”.

 

“பொண்டாட்டியா நடந்துக்கிட்டியா… நீ பெரிய இவளா உன் கிட்ட நாங்க கெஞ்சணுமோ”  என்று வந்ததிலிருந்து சலங்கை கட்டாத குறையாக ஆடிக்கொண்டிருந்தான் வெற்றி.



Advertisement

 

 

Advertisement

அவனை அமைதியாகப் பார்த்துநின்றவள் “உங்ககிட்ட நான் கெஞ்ச சொல்லலையே… இப்போ கேட்டிங்களே உனக்கு என்ன பிரச்சனைன்னு இதை இதுக்கு முன்னாடி எப்போவாவது கேட்டிருக்கீங்களா? எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்ன நினைக்குறேன் என்ன கவலை இருக்கு ஏதாவது தெரியுமா”.

Advertisement

 

 

Advertisement

“முதல்ல நீங்க என்னைப் பொண்டாட்டியா நடத்துனீங்களா இது எல்லாத்தயும் நீங்க மாத்திக்கிட்டாலும் என்னால வர முடியாது ஒரு தடவை யோசிக்காம தப்பு பண்ணிட்டேன் திரும்ப அதைச் செய்யமாட்டேன், எனக்கு உங்களோடு வாழப் பிடிக்கல என்னால உங்ககூட இருக்க முடியாது” என்றாள்.

 

 

“என்ன காரணம்”.

 

“நமக்குள்ள ஒத்துவராது இதைத் தொடர நான் விரும்பல என் மனசுல என்ன இருக்குனு இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் உங்களால புரிஞ்சுக்க முடியாது, நீங்களோ உங்க குடும்பமோ அதுக்கு முயற்சி பண்ண போறதும் இல்லை, ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டு பிரிஞ்சிடலாம்”.

 

 

 

“நீ இப்படி… நீ இப்படினு ரெண்டு பெரும் மாத்தி மாத்த குறை சொல்லி ஒன்னும் மாறப்போறதில்லை எனக்குச் சண்டை போடவும் தெம்பில்லை, என்னை நீங்கச் சகிச்சுக்க வேண்டிய அவசியமும் இல்லை உங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ணை தாராளமா கல்யாணம் செஞ்சிக்கலாம் நீங்களும் ஒத்துக்கிட்டு கையெழுத்து போட்டா சீக்கிரம் முடிஞ்சிடும் இல்ல என்னைப் பழிவாங்க என் மேல சேரை வாரி இரைக்கப்போறீங்கன்னா அதும் உங்க இஷ்டம்” என்றவள் கழுத்தில் கிடந்த தாலியை கழட்டி அவன் கையில் கொடுத்தாள்.

 

 

“இது ஒண்ணுதான் உங்க வீட்டில இருந்து என்கிட்டே வந்தது இது இனிமே எனக்குத் தேவையில்லை, எனக்குச் சொந்தமானதுமில்லை” என்று திரும்பி நடந்தவளுக்கு மனம் மிகவும் லேசாக இருந்தது ஒருமாதிரி நிம்மதியாக எதிலிருந்தோ விடுபட்டுச் சுதந்திரம் அடைந்தபோல அறைக்குள் சென்று மூலையில் கால்களை மடக்கி அமர்ந்துவிட்டாள் கொஞ்சம் சிரிக்க கூடத் தோன்றியது.

 

 

“அவ பாட்டுக்கு என்னென்னமோ பேசிட்டு போறா நீங்களும் அப்படியே கேட்டுட்டு இருக்கீங்க” என்று சாந்தாவிடம் எகிறினான்.

 

 

“அட இருப்பா வந்ததிலேயிருந்து துள்ளிட்டே இருக்க ஒக்காரு பொறுமையா பேசலாம்” என்றார் விஜயகுமாரின் பெரியப்பா.

 

 

“என்னங்க பேசணும் அவ எப்படி பேசிட்டு போறான்னு பாத்தீங்கல்ல” என்றான் அவரிடமும் கோபத்தோடு.

 

 

“எங்க துளசி இப்படியெல்லாம் நடந்துக்குற பொண்ணு இல்ல ரொம்ப அமைதி ரொம்ப பொறுப்பு அதுவே உன்கூட வாழ முடியாதுனு சொல்லுதுன்னா நாங்களும் யோசிக்கணும்ல” என்றார் மூத்தவர்.

 

 

“என்னங்க யோசிக்கணும் அப்படி என்ன நாங்க மோசமானவங்க” என்க.

 

 

“அதை நீங்கதான் சொல்லணும் கல்யாணம் முடிஞ்சு பொண்ணை கூட்டிட்டு போனீங்க அதுக்கு அப்புறம் மாசமா இருக்கும்போதுதான் கூட்டிட்டு வந்தோம், அதும் எப்படி பாதி உசிரா… என்ன பாத்துக்கிட்டீங்க… சரி சாந்தா ஏதும் கேக்காததால நாங்களும் தலையிடல”.

 

 

 

“இந்த வீட்டில ஒரு கல்யாணம் நடந்துச்சு நியாயமா உங்க வீட்டு ஆளுங்க வந்து நின்னிருக்கணும் யாரவது வந்தாங்களா,  சரி அதை விடுங்க நல்லதுக்கு கூடலனாலும் கெட்டதுக்கு கூடனும் தானே உங்களுக்குப் பொண்ணை குடுத்த சம்பந்தி அவர் இறப்புக்கு உங்க குடும்பம் வந்துச்சா இதுதான் மரியாதையா…”.

 

 

“சம்மந்தகாரவங்க அதுக்கு அப்புறமாவது முறைப்படி வந்து விசாரிசீங்களா முறையைத்தான் செஞ்சீங்களா நாங்களும் சரி எல்லாத்தயும் மறந்திட்டு பொறுத்து போய் வாழுனு சொல்லிப்பார்த்துட்டோம்,  பொண்ணு விருப்பப்படல அங்க அனுப்பினா எங்களுக்கு எங்க பிள்ளை இல்லாம போய்டும் போல”.

 

 

“இதுக்குமேல நீதான் சொல்லணும் சாந்தா பேசி ஒரு முடிவு எடு” என்றவர் மற்றவர்களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

 

 

என்ன முடிவெடுப்பது என்று சாந்தாவிற்கு ஒன்றுமே புரியவில்லை எவ்வளவோ பேசிப்பார்த்தும் அவளுடைய பிடிவாதத்திலே நிற்கிறாள் இதற்க்கு மேல் என்ன பேச என்றும் தெரியவில்லை, தாலியை வேறு கழட்டி கையில் கொடுத்துவிட்டாள்.

 

 

வெற்றி தன்னையே பார்த்து நிற்பதை உணர்ந்தவர் “நீங்க இப்போ கிளம்புங்க மாப்பிளை கொஞ்ச நாளுக்கு அப்புறம் நான் பேசிப் பாக்குறேன்” என்றார்.

 

 

“உங்க பொண்ணுக்கு இவ்ளோ திமிர் இருக்கும்போது எனக்கு இருக்காதா தாலியை கழட்டி போடுற அளவுக்குக் கொழுப்பு கூடிப்போனவ எனக்கும் வேண்டாம் கோர்ட்ல பாத்துக்கலாம்” என்று வீம்போடு அவனும் புறப்பட்டுவிட்டான்.

 

 

“இங்கபாருங்க வெற்றி நான் செல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு வர்ஷம் தான் ஆகுது இங்க பொண்ணுங்க சொல்றதுக்குத்தான் முக்கியத்துவம் அதிகமா இருக்கும் அதோட உங்க மனைவிக்கு அபோர்ஷன் வேற நடந்திருக்கு அதை அவங்க எப்படி வேணும்னாலும் மாத்தி கோர்ட்ல சொல்லலாம்”.

 

 

 

“நீங்களும் உங்க குடும்பமும் கொடுமை படுத்துனீங்கன்னு மாறலாம், துளசி எந்த விதமான பிரச்சனையும் வேண்டாம்னு சொல்றாங்க பரஸ்பரம் ஒத்துக்கிட்டு சைன் போட்டுடீங்கன்னா சீக்கிரமா வேலை முடியும், அவங்களப்பத்தி நீங்கத் தப்பா சித்தரிக்க நினைசீங்கன்னா அது உங்களுக்கே சிலசமயம் ஆபத்தா முடியலாம் யோசிங்க” என்றார் அவனின் வழக்கறிஞர்.

 

 

அவன் வீட்டினரும் விட்டுவிடு போகட்டும் என்று கூற மனது இல்லாமல் “சரி” என்று சம்மதித்தான், சாந்தாவும் இளைய மகளிடம் சென்றுவிட்டார், துளசி அவளின் வீட்டிலே தாங்கிக்கொண்டாள்.

 

 

தாய் சென்றபிறகு ஒரு மெல்லிய செயின் மட்டும் வைத்துக்கொண்டு  மற்ற  நகைகளை விற்றுவிட்டாள் கிடைத்த பணத்தை அவளுடைய கணக்கில் போட்டுக்கொண்டாள், இங்கேயே தங்கிவிட்டால் சரியாகவராது என்று தெரிந்தே இருந்தது என்றாலும் சென்னைபோவதற்கும் ஏதோ தயக்கம் வந்து சூழ்ந்தது.

 

 

மற்ற இடங்களைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது இப்படியே ஒரு மாதத்தைக் கடத்தியவள் மனதை திடப்படுத்திக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டாள்,  அலைபேசியில் நிறைய தகவல்களைத் தேடி வைத்திருந்தாள் எங்கு நல்ல விடுதி இருக்கிறது எப்படி இருக்கிறது என்று.

 

 

அதன்படி கொஞ்சம் நல்லதாகத் தோன்றிய ஒரு விடுதிக்கு அழைத்து விசாரித்து அறை வேண்டும் என்றும் கூறியிருந்தாள் அவர்களும்  நேரில் வரச் சொல்லியிருக்க காலைவேளை அங்குச் சென்று சேர்வதை போல ரெயில் ஏறினாள்.

 

 

விவரங்களைப் பெற்றுக்கொண்டு அறையைக் கொடுத்தார்கள், அங்கே வேறு இரண்டு பெண்களும் இருந்தார்கள், அவசரமாக வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தவர்கள் அவளிடம் ஸ்நேகமான ஒரு புன்னகையோடு கிளம்பிவிட இவள் அறையைச் சுற்றி பார்த்தாள்.

 

 

ஜன்னலை ஒட்டி ஒன்று சுவற்றை ஒட்டி இரண்டு என்று மூன்று கட்டில் இருந்தது வலப்பக்கம் சுவற்றை ஒட்டி இருந்தது இவளுக்கு என்றார் அதன் வார்டன், உணவோடு சேர்த்து மாதம் ஐந்தாயிரம் என்றார் முன்பணமாக ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டார்.

 

 

அன்றைய நாள் அவளுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது அடுக்குவது என்று நாள் கழிந்தது, இரவு ஏழு மணிக்கு வந்து சேர்ந்தார்கள் அவளுடன் அறையைப் பங்கிடும் யுவதிகள், அருகில் இருக்கும் கம்பெனியில் பேக்கிங் பிரிவில் வேலை என்றார்கள் மிகவும் களைத்து வந்தவர்கள் குளித்து வந்து அவளையும் அழைத்துக்கொண்டு சாப்பிட சென்றார்கள்.

 

 

 

அந்த விடுதியின் சில நடைமுறைகளை அவளுக்குத் தெளிவாக எடுத்துக்கூறி நன்றாகப் பேசினார்கள் “வேலை பெண்ட் கழலும் அங்கேயிருந்து வந்தா எப்படா கட்டில்ல விழுவோம்னுதான் இருக்கும், வாரத்துல ஆறுநாளும் இப்படித்தான் இருப்போம் ஞாயிறு ஒருநாள்தான் லீவ்” என்றவர்கள் “நாங்க படுக்குறோம்” என்க அவளும் அமைதியாகப் படுத்துவிட்டாள்.

 

 

 

மறுநாள் வார்டானிடம் கேட்டுக் கொஞ்சம் வழித்தடங்களை அறிந்து வைத்துக்கொண்டாள், மூன்றாம் நாள் முகப்பேருக்கு வண்டி ஏறினாள் வாணியை சந்திக்க, வாணி இன்னும் அங்கேயே வேலை செய்வாளா அல்லது வேறிடம் சென்றிருப்பாளா ஒன்றும் தெரியவில்லை ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் கிளம்பிவிட்டாள்.

 

 

 

அங்குச் சென்று வாணியை பார்க்க வேண்டும் என்று கூற காத்திருக்க சொன்னார்கள் முன்பு வேலை செய்தவர்கள் யாரும் அவள் கண்ணில் படவில்லை, அந்த நீண்ட ஹாலின் மூலையில் ஒரு சேரில் சென்று அமர்ந்துகொண்டாள் அரைமணி நேரம் சென்று வந்த வாணி யார் வந்திருப்பது என்று சுற்றிலும் பார்வையை சுழற்ற நிச்சயமாகத் துளசியை எதிர்பார்க்கவில்லை.

 

 

“துளசி” என்ற ஆர்பரிப்போடு அவளை நெருங்கினாள் வாணி “ஏய் என்ன எப்படி இருக்க இப்படி திடீர்னு வந்து நிக்குற” என்றவளுக்கு என்ன கேட்க என்ன பேச என்றே தெரியவில்லை.

 

 

 

“வா” என்று தோழியை அழைத்துக்கொண்டு கேன்டீன் சென்றாள் டீயும் வடையும் வாங்கிவந்து அமர்ந்தவள் “என்னதான் நடந்தது துளசி ஏன் நீ திடீர்ன்னு நின்னுட்ட, உனக்குக் கல்யாணம் ஆனதே ரெண்டு மாசம் கழிச்சுத்தான் எனக்குத் தெரிஞ்சுது” என்றாள் வாணி.

 

 

“யார் சொன்னா” என்றாள் துளசி.

 

 

“தமிழ் அண்ணா” என்றாள் மெல்ல, அவள் அமைதியாக இருக்க “மாசத்துல ஒருதடவை இங்க வந்துடுவாங்க நீ பேசுனியா எப்படி இருக்கன்னு தெரிஞ்சிக்க, உன்னோட நம்பருக்கு கால் பண்ணி பண்ணி டைர்ட் ஆயிட்டேன் அப்புறம் அது உபயோகத்தில் இல்லனு வந்துச்சு, ஒவ்வொரு தடவையும் அவர் வந்து நிக்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கும் என்னதாண்டி ஆச்சு” என்றாள் வாணி.

 

 

 

ஒரு பெருமூச்சோடு அனைத்தையும் சொல்லி முடித்தாள் துளசி “அப்போ தமிழண்ணா” என்றாள் வாணி கேள்வியோடு.

 

 

“இனிமே வரமாட்டாங்க அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு” என்றாள் துளசி அன்று பெங்களூரில் பார்த்ததை வைத்து.

 

 

“எனக்கு என்ன சொல்லண்ணே தெரியல இவ்ளோ அவசரப்பட்டு ஈகோ பார்த்து ரெண்டு பேரோட அம்மாவும் என்ன சாதிச்சாங்க, பிள்ளைங்க லைஃப்ல விளையாடுறதே இவங்களுக்கு வேலை” என்றவள் “சரி என்ன பண்ண போற” என்றாள்.

 

 

“தெரியல… உனக்குத் தெரிஞ்ச எங்கயாவது வேலை இருக்குமா” என்றவளை யோசனையோடு பார்த்திருந்தவள் “விசாரிச்சு சொல்றேன் துளசி, எனக்கும் கல்யாணம் முடிவாயிருக்கு சொந்தம்தான் அவர்கிட்ட சொல்லிவைக்குறேன் செங்கல்பட்டு தாம்பரம் பக்கம் அவருக்கு நிறைய பேர தெரியும் பாக்கலாம்” என்றவள் துளசியிடம் அலைபேசி  என்னையும் வாங்கிக்கொண்டாள்  புது நம்பிக்கையோடு விடுதிக்கு வந்து சேர்ந்தாள் துளசி.

 

 

இரண்டு மூன்று இடங்களில் சொல்லி வைத்து இறுதியாக ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தாள் துளசி அவளுக்குப் போதுமான அளவு சம்பளம் கிடைத்தது, விடுதிக்குக் கொடுத்தது போக மீதம் சேமிப்பில் வைத்துக்கொண்டாள்.

 

 

வாணியின் திருமணமும் முடிந்தது துளசியுடன் அறையைப் பங்கிட்டவர்கள் அவளுக்கு நெருக்கமான தோழிகள் ஆனார்கள், பார்கவிக்கு இரண்டாவது குழந்தையும் பிறந்தது இப்பொழுது இளைய மகளுடன் வெளிநாட்டில் தங்கிவிட்டார் சாந்தா.

 

 

குடும்பத்தினர் அலைபேசியில் மட்டும் அழைக்கும் உறவாக மாறிப்போயினர், வெற்றி வேறு பெண்ணை மணந்துகொண்டதாகத் தாயின் மூலம் அறிந்து கொண்டவள் “சந்தோசம்” என்றாள்.

 

 

“நீ என்ன பண்ண போற துளசி” என்ற தாயிடம் “இப்போ என்ன பண்றேனோ அதேதான்” என்றாள், மூன்று வருடங்களும் முடிந்து போனது.

 

 

செங்கல்பட்டின் அஞ்சூர் கிராமத்தின் ஒரு வீட்டில் இரவின் நிசப்தத்தில் மெல்ல கசிந்தது அந்தக் கானம்…

 

முக்குளிச்சு நானெடுத்த

முத்துச்சிப்பி நீதானே

முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள

பத்திரமா வெச்சேனே

வெச்சதிப்போ காணாம

நானே தேடுறேன்

ராத்திரியில் தூங்காம

ராகம் பாடுறேன்

நான் படிக்கும் மோகனமே

நான் படைச்ச சீதனமே

தேன் வடிச்ச பாத்திரமே

தென்மதுர பூச்சரமே

கண்டது என்னாச்சு…

கண்ணீரில் நின்னாச்சு

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி

 

 

பக்கத்துக்கு அறையில் படுத்திருந்த கற்பகத்தின் மனம் நிலை இல்லாமல் தவித்தது மெல்ல தலையைத் திருப்பிப் பார்த்தார் அவரைப் பார்த்துக்கொள்ள வீட்டோடு தங்கிக்கொண்ட ஹோம் நர்ஸ் நல்ல உறக்கத்தில் இருந்தார், அன்று மகனைப் பயமுறுத்த லாரியின் முன் விழப்பார்த்தார் அது அவருக்கே வினையானது.

 

 

சடன் பிரேக் இடப்பட்ட  வண்டி கட்டுப்பாட்டை இழந்து அவரைத் தட்டிவிட்டே சென்றது வண்டியில் அடிபடவில்லை மாறாக அங்கிருந்த மயில் கல்லில் அடித்து விழுந்து ஒரு மாதம் கோமாவில் கிடந்தது வந்தார், உடலில் எந்தப் பாகத்திலும் அசைவில்லை படுக்கைதான்.

 

 

“கல்யாணம் செஞ்சுக்கோ தமிழ்” என்று கெஞ்சிக்கேட்டும் மகனிடம் பதில் இருக்காது, தினமும் அலுவலகம் செல்லும்போதும் வந்தபிறகும் வந்து பார்ப்பான் விசாரிப்பான் அன்று நடந்தவைகளை சொல்லுவான் அவ்வளவே, கண்முன்னில் மகன் வாழாமல் நிற்பது அவரை முழுதும் தளர்த்தியது.

 

 

ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கு மாற்றலாகி வந்திருந்தான், மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு தேவைக்காகப் பெங்களூர் சென்றுவந்தவன் மிகுந்த மனஉளைச்சலில் இருக்க தாமரை அவனைப் பிடித்துவைத்து கேள்வி எழுப்பினாள்

 

 

“என்னாச்சு தமிழ் ஏன் இப்படி இருக்க” என்க.

 

முதல்முறையாக அவளிடம் மௌனம் களைத்தான் “துளசியை பாத்தேன்” என்றான்.

 

அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்திருக்க “அவ நல்லா இல்லக்கா நல்லாவே இல்ல அந்த உடம்புல உயிர் மட்டும் ஓட்டிட்டு இருக்கு” என்றவனுக்கு விழிகள் கலங்க அதை அவளிடம் மறைத்துக்கொண்டு உள்ளில் சென்று கதைவடைத்தான்.

 

 

உடன் பிறந்தவளுக்கு அவன் வலி புரிந்தது தாயை வெறுப்போடு பார்த்து நின்றாள், மீண்டும் வெளியில் வந்தவன் “என்கூட கவிதாவை பார்த்து எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு நாங்க  ஹனிமூன் வந்திருக்கோம்னு நினச்சுகிட்டா, முதல்ல சின்னதா ஒரு ஏமாற்றம் அப்புறம் அது மாறி நிம்மதி உணர்வு வந்து சேர்ந்துடுச்சு அவ முகத்துல” என்றான் சோபாவில் அமர்ந்துகொண்டு.

 

 

“நீ சொல்லலையா அவ உன் தம்பி பொண்டாட்டி அவளைக் கூட்டிட்டு  வரத் தான்  நீ போனேன்னு” என்றாள்  தாமரை.

 

 

“எதுக்கு சொல்லணும் அவ மனசுல எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு ஒரு சின்ன சந்தோசம் வந்துச்சு அது அப்படியே இருக்கட்டும் இப்போ என்ன கெட்டுப்போச்சு” என்றான் பின்னில் சாய்ந்துகொண்டு.

 

 

அதன் பிறகு இன்றுவரை அதைப் பற்றிய பேச்சுக்கள்  இல்லை, இந்தப் பாடல்  மட்டும் மூன்று வருடமாக அவன் இரவுக்குத் துணை வருகிறது, உறக்கம் வராமல் புரளும் கற்பகத்தின் மனதை வதைக்கும் பாடலும் இதுதான், லட்சம் முறையாகத் தன்னையே சபித்துக்கொள்கிறார் அன்று அவளைப் பேசிய வார்த்தைகளுக்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!