Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்! அத்தியாயம் 11

பொழியும் மேகம்!

அத்தியாயம் 11

   ஒரு கோடி! முழுதாக ஒரு கோடி ரூபாய்க்கு என்ன என்ன வாங்கலாம். இரு பிள்ளைகளுக்கும் நகையாக சேர்த்தால், கல்யாணத்தை பத்தி கவலைப்பட வேண்டியதில்லை. அப்படி இல்லாவிட்டால் படிப்புக்கு என்றாலும் டாக்டர் படிப்பை கூட முடித்து விடலாம். அவ்வளவு மதிப்பு மிக்க பணத்தை கொஞ்சமும் யோசிக்காமல் வருசத்துக்கு ரெண்டு முறை மட்டும் செல்லும் கோவிலுக்கு குடும்பமாக போக கார் வாங்கினானாம்.

   முகமே செத்து போனது நர்மதாவுக்கு… எத்தனை வருட சேமிப்பு, கட்டிய மனைவியிடம் ஒரு சொல் சொல்ல தோன்ற வில்லையே. என்ன தான் சண்டையாக இருந்தாலும், அவ்வளவு பெரிய அமௌன்ட் எடுக்கும் போது பொண்டாட்டிக்கு தெரியாமல் செய்கிற குற்ற உணர்வு துளி கூட இல்லையா?… அவன் சம்பாத்தியமாவே இருக்கட்டுமே! மனைவியிடம் சொல்ல வேண்டும் தான.



Advertisement

   வித்யாவுக்கே ஆச்சர்யம். இப்படி தாங்குற புருசனை வச்சுகிட்டு எதுக்கு நம்மளை பார்த்து வயிறு எரியிறா…

  சுசீலாவுக்கு பெருமை பிடி பட வில்லை. “நம்ம குடும்பத்துலையே இல்லை இல்லை நம்ம வம்சத்திலே இவ்வளவு விலையுயர்ந்த கார் யாரும் வாங்கல. ஊருக்கு போகும் போது இந்த கார்ல தான் போகணும். நிரஞ்சா, இன்னைக்கு நல்ல நாள் தான?…” என்று பரபரத்தார்.

  மருமகள் முகம் பார்த்த தாமோதரன், “நர்மதா என்னம்மா ஒரு மாதிரி இருக்க. எல்லாரும் குடும்பமா கோவிலுக்கு போயிட்டு வருவோம்…” என்று சொல்ல,

Advertisement

    “இல்லை மாமா வரமுடியாது. இன்னைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு. லீவும் போட முடியாது. நிறைய லீவ் போட்டுட்டேன். நீங்க போயிட்டு வாங்க…” என்று நர்மதா ஒதுங்கி கொண்டாள்.

Advertisement

   தாமோதரன் மகன் முகம் பார்க்க,

     “நல்லது நடக்கும் போது மூஞ்சி சுண்டைக்காய் மாதிரி வச்சு இருக்கா பாரேன்…” சுசீலா சாட,

       “அம்மா அவளை விடுங்க. அவளுக்கு தான் முக்கிய வேலை இருக்காம். நாம கோயிலுக்கு போவோம் வாங்க. டேய் நீ ஏறுடா…” என்று அண்ணனை சத்தம் போட,

Advertisement

   நர்மதா இல்லாமலே புது காருக்கு பூஜை போட்டார்கள். அதில் அவளுக்கு வருத்தம் இல்லை. நிச்சயம் சிரித்த முகமாக நடிக்க கூட முடியாது. பள்ளிக்கு கிளம்பி விட்டாள்.

      என்னவோ ஒரு பெரிய அழுத்தம். தூக்கி சுமக்கவோ, கடக்கவோ முடியவே இல்லை. நிரஞ்சன் நினைக்கும் போதே கண்ணில் நீர் கட்டியது. பேசவும் முடியவில்லை, உடைத்து பேசினாலும் புரிய வைக்க தெரியவில்லை. ஏதோ ஒரு நேரம், பல நேரம் கூட கணவன் என்று ஒரு பெண் அனுசரித்து, விட்டு கொடுத்து செல்லலாம். ஆனால், வாழ்நாள் முழுக்க எப்படி பொறுத்து கொண்டே போவது.

     கணவன், இரு பிள்ளைகள் இருந்தும் தனியான உணர்வு. தன் உடலே பாரமாக தோன்ற மெல்ல அடி எடுத்து தான் நடந்து வந்தாள். பின் பக்கம் கார் சத்தம் கேட்க,

   “என்ன இது ரோட்டு ஓரமாக தானே நடந்து வாரேன்…” என்றவாறு திரும்பி பார்க்க, பிருந்தா கார்.

   பிருந்தா தான் காரை நிறுத்தி இறங்க,

   அக்கா என்று முன்னே சென்றவள், அடுத்த பக்கத்தில் இருந்து பாலமரத்தான் இறங்கினார்.

  “அப்பா…” என்று வாய் அசைக்கவும் கண்ணில் நீர் பொங்கியது.

   பெரிய அழுத்தம், மன பாரத்தில் இருக்கும் போது தன் சொந்த உறவுகளை பார்க்கும் போது வருமே ஒரு நெகிழ்ச்சி, ஆறுதல், அடக்க முடியாத அழுகை. எல்லாம் நர்மதாவை தாக்கியது.

   ஓடி சென்று பார்க்கும் தூரத்தில் பெற்றவர்கள் இல்லை. நினைத்த நேரம் தாய் வீடு போகும் படி புகுந்த வீடும் இல்லை. இப்படி ஒரு சூழலில் தன் தந்தையை பார்க்கவும் அழுகையை கட்டு படுத்தவே முடியவில்லை. பெத்த தகப்பனை பார்த்ததே ஒரு பெரிய ஆறுதல்.

    ஓடி சென்று கையை பிடிக்கும் போதே தாங்க வில்லை. அப்பா… என்று அழுக, பதறி போனார்கள் பிருந்தாவும், தந்தையும்…

     “என்னடி ஆச்சு? நம்மு, வீட்டுல எதுவும் சண்டையா?…” பதட்டமாக பிருந்தா கேட்க.

    தந்தையும் பதறி போய் தான் பார்த்தார்.

     “ஒன்னுமில்லை சும்மா தான். ரெண்டு மூணு நாளாவே அப்பா நினைப்பா தான் இருந்துச்சு. லீவ் இல்லை, பிள்ளைக படிப்பு, அவருக்கு வேலைன்னு ஊருக்கு போகாதா ஏக்கம் வேற ஒன்னுமில்லை…” கண்ணை துடைத்தாள் நர்மதா.

    “மொத வா கார்ல ஏறு, வெளிய எங்கேயாவது போலாம்…” பிருந்தா கூட்டி சென்றாள்.

        ஒரு நல்ல ஹோட்டல் தான் போனார்கள். கொஞ்சம் தெளிந்து இருந்தாள் நர்மதா.

    “ பிள்ளைகளை கூட்டி வருவோமா மக்கா?…” என்று பாலமரத்தான் கேட்க.

  ரெண்டு பேரும் ஒரே போல வேண்டாம் என்றார்கள். அவர்களுக்கு தந்தையோடு தனியாக இருக்க வேண்டும். பிருந்தா சின்ன வயது கதைகளை எல்லாம் பேசினாள்.

   இவர்கள் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது வீட்டில் அம்மா, அப்பாக்கு சண்டை வந்தால் பிருந்தாவுக்கு ஒரே குஷி. ஏனென்றால் விஜயா கோபித்து கொண்டு அம்மா வீடு சென்றால் வர ஒரு வாராமாவது ஆகும். அதுவரை இவர்கள் இருவருக்கும் அப்பா ஹோட்டல் உணவு, சினிமா என்று நன்றாக பார்த்து கொள்வார். அதனால் செழியன் போல அம்மா பின்னால் போகாமல், அப்பாவோடு தான் வாசம்.

    திரும்ப அந்த காலத்திற்கு செல்ல முடியாது. அந்த நினைவுகளையாவது சுகமாக மீட்டு எடுக்கலாம் அல்லவா… அப்பா மகள்கள் இருவருக்கும் பிடித்த மாதிரி உணவு வாங்கி கொடுத்தார்.

   நர்மதா நிறைவாக உணர்ந்தாள். பெண் பிள்ளை என்பதால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின் தந்தையுடன் ஒட்ட முடியவில்லை. கல்லூரி, விடுதி, திருமணம், கணவன், பிள்ளைகள், தனி குடும்பம் என்று வந்த பின் தனித்து பெற்றவரிடம் செல்லம் கொஞ்சவே முடியவில்லை. இன்று பிடித்த உணவாக வாங்கி கொண்டார்கள்.

   பாலமரத்தான் மக்களை நிறைவாக பார்த்தார். என்ன தான் படித்து பெரிய வேலையில் இருந்தாலும், கை நிறைய சம்பாத்தியம் செய்தாலும், தன்னை எதிர்பார்த்து நிற்கும் மக்களை மனம் பொங்க பார்த்தார்.

   “என்னப்பா திடின்னு வந்து இருக்கீங்க… விசயம் எதுவும் பெருசா?…” நர்மதா கேட்க.

    காரணத்தோடு தான் மக்களை பார்க்கணுமா? எம் பிள்ளைகளை பார்க்க எனக்கு ஏக்கம் இருக்கும்த்தா…” என்றவர், தன் கையில் கொண்டு வந்ததை எடுத்து கொடுத்தார்.

   “என்னப்பா இது?…” பிரித்து பார்த்தாள் பிருந்தா.

   அதில் இருபது பவுனுக்கு மேல் இருக்கும் நகையும், ஐந்து லட்சம் பணமும் இருந்தது.

  “இது எதுக்குப்பா?…”

    “நான் நல்லா நடமாடும் போதே பொம்பளை மக்களுக்கு செய்யிற கடமையை நிறைவா செய்ய நினைக்கிறேன் மக்கா…” என்றார் தந்தை.

   பயந்து போனாள் பிருந்தா, “என்னப்பா உடம்புக்கு என்ன செய்யுது. மருந்து, மாத்திரை சரியா தானே எடுக்குறீங்க…”

முன்பு கொஞ்சம் குடி பழக்கம் இருந்தது. பெண் பிள்ளைகள் பெரியவர்களானதும் விட்டு விட்டார். தற்போது அதன் பாதிப்பு எட்டுது. லிவர் பிராப்ளம் இருக்க மருந்து, மாத்திரையில் தான் காலம் போகுது.

  நர்மதாவுக்கு திரும்ப அழுகை பொங்கி கொண்டு வந்தது. தூரத்தில் இருந்தாலும் பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதே ஒரு பலம், பாதுகாப்பு அல்லவா.

  “என்னப்பா குறி எதுவும் கேட்டீங்களா?…” சரியாக கேட்டாள் பிருந்தா.

  உண்மை தான். அவர்கள் வீட்டு தெய்வம் பாலமரத்து முத்தையா. அவர்களின் சொந்த தோட்டத்தில் இருக்கும் அரச மரத்துக்கு அடியில் இருப்பதாக மூதாதையர் வழி வணங்கி வருகிறார்கள். எந்த விசேஷம், யோசனை, காரியம் என்றாலும் பாலமரத்தான் அங்கு சென்று ரெண்டு பழம், வெத்தலை, பத்தியோடு வணங்கி கண் மூடி அந்த மரத்தடியில் அமர்ந்தால் போதும் காரியம் கை கூடி வரும் என்றால் உடனே குறி சத்தம் கேட்கும். அபசகுணம் என்றால் எத்தனை நேரம் அமர்ந்தாலும் கும்மிருட்டு மட்டுமே பதில்.

   மனது சஞ்சலமாக இருக்க தன் தெய்வ துணை தேடி போக, நல்லதாக ஒன்றும் கேட்க வில்லை. அறியாத பயம் வர, தூரத்தில் இருக்கும் பிள்ளைகள் மீது தான் கவனம் சென்றது. சிரமம் பார்க்காமல் ஒரு எட்டு போய் பார்த்தால் தான் நிம்மதி என்று தோன்ற, உடனே வந்து விட்டார். அத்தோடு தான் நன்றாக இருக்கும் போதே பிள்ளைகளுக்கு சேர்த்ததை கொடுக்க நினைத்தார்.

    “சமமா பிரிச்சு எடுத்துக்கோங்க…” என்று தந்தை கொடுக்க,

    இருவரும் பயந்து போய் தந்தையை பார்த்தார்கள்.

    “நெருப்புன்னு சொன்ன வாய் வெந்து போகுமா மக்கா… உங்க அப்பனுக்கும் அறுவத்தி அஞ்சு ஆச்சுல, எல்லாம் ஒரு நாள் போக வேண்டிய ஆட்கள் தான். நீங்க எடுங்க அது தான் எனக்கு நிம்மதி…” தந்தை வற்புறுத்திய பின்,

  பணத்தை எடுத்த பிருந்தா, நகையை தங்கை புறம் நகர்த்தி வைத்தாள்.

   “என்ன பிருந்தா சரி சமமாவே எடுக்கலாம். வீட்டுக்கு போனதும் அம்மா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க அப்பா. இல்லை கூட்டு களவாணின்னு ஒரு பஞ்சாயத்து வரும்…” என்று நர்மதா சொல்ல,

    “எனக்கு எதுக்கு நகை நம்மு. ஏற்கனவே அப்பா போட்டது இருக்கு, உங்க மாமாவும் எடுத்து கொடுத்து இருக்கார். ரெண்டும் பசங்க தான். நீ நகையை எடுத்து வை… நம்ம அப்பா நமக்கு கொடுக்கிறார். யார் கூட, குறை எல்லாம் வேண்டாம். உனக்கு பெண் பிள்ளைகள் இருக்கு நகை உனக்கு, எனக்கு பசங்க தான். அப்ப பணம் எனக்கு…”

   நிறைவாக புன்னகைத்தார் தந்தை. உண்மையில் இரு பெண் குழந்தைகள் இருக்கு என்று சின்ன மக்களுக்கு தான் நகை சேர்த்தது. ஆனால், பெரிய மகள் எதுவும் நினைக்க கூடாது என்று தான் பொதுவில் வைக்க, பெத்தவரை புரிந்து கொண்டாள் மகள். தம் மக்களை எண்ணி தந்தைக்கு பெருமை வந்தது.

       காலையில் இருந்த மன உளைச்சலுக்கு கொஞ்சம் ஆறுதல் நர்மதாவுக்கு… சந்தோசமாக தான் வீடு வந்தாள். தற்போது இருக்கும் சூழலில் அப்பாவை வீட்டுக்கு கூப்பிட வில்லை. அப்படி இல்லாவிட்டாலும் கூட்டு குடும்பம் தான் மட்டும் வந்து தங்குவது சரி வராது என்று தங்க மாட்டார்.

      தாமதமாக வந்து அவசரமாக வேலையை தொடங்க, சஸ்டி நச்சரித்தாள்.

  “என்னடி வேணும்?…”

  “பெரியம்மா வச்சு இருக்குற ட்ரெஸ் வேணும்…”

  “என்னது” என்றவள் வித்யாவை பார்க்க,

     “ ஆமா நர்மதா. என் அண்ணன் பொண்ணுக்கு தான் எடுத்து வந்தேன். ஆனா சைஸ் சரியா வரல. மாத்தவும் முடியாது. அதை தான் சஸ்டி கேக்குறா…”

  நர்மதாவுக்கு அப்படி வாங்கி போட பிடிக்கல. எவ்வளவு சொல்லியும் மகள் கேட்க வில்லை. அடம் பிடித்து கேட்க, போ என்று விட்டு விட்டாள்.

   கீழ போய் பெரியம்மாவின் ட்ரெஸ் வாங்கி வந்தவள்.

  “அம்மா, இந்த ட்ரெஸ் தான். பெரியம்மா, உங்க அம்மா கிட்ட சொல்லுன்னு ஆயிரத்து ஐந்நூறு சொல்லி பில் கொடுத்து விட்டாங்க..” என்று மகள் கொடுக்க,

   அவ்வளவு கோபம் நர்மதாவுக்கு… பணத்தை எண்ணி கொடுத்தவள், நேர தன் கணவனிடம் போய் நின்றவள்,

   “போன வாரம், நம்ம சான்வி வச்சு இருக்குற ரிமோட் கார் கேட்டு உங்க அண்ணன் பையன் அழுகவும் ,நீங்க அதே மாதிரி வாங்கி கொடுத்தீங்க தான. அது எவ்வளவு விலை?…”

    “அது எதுக்கு உனக்கு?…” முகத்தை தூக்கி வைத்து கேட்டான்.

  “வேணும், சொல்லுங்க…”

“எழுபதாயிரம்…”

  “உங்க மகளுக்கு வெறும் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு கணக்கு பாக்குற அவங்க பையனுக்கு, நீங்க எழுபதாயிரம் பொருள் வாங்கி கொடுப்பிங்களா..” என்றவள் நடந்ததை சொல்ல,

   “இங்க பாரு நர்மதா. அவன் என் அண்ணன் பையன், அவனுக்கு நான் வாங்கி கொடுப்பேன். உனக்கு காரணம் சொல்ல முடியாது…”

    “நம்ம பிள்ளைகளை அவங்க பிரிச்சு பாக்குறாங்க. அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டாது. ஒரு ட்ரெஸ்க்கு என் பிள்ளை வராதா… நாம எவ்வளவு பாக்குரோம்…”

   “அவங்க அப்படி இருந்தா, நானும் ஒதுங்கி நிக்கணுமா? என்னையும், எங்க அண்ணனையும் பிரிக்க பாக்குறையா?…” ஒரு மார்க்கமாக கேட்க.

   தலையை பிடித்து கொண்டாள் நர்மதா. சொல்ல வந்தது ஒன்னு, புரிஞ்சு வைக்கிறது இன்னொன்னு.. இதுக்கு மேல பேசினா பிரச்சனை கடை பரப்ப படும். அப்புறம் நர்மதா தான் குடும்பத்தை உடைகிறாள் என்று பெயர் வரும். வாயை மூடி கொண்டாள். அவ்வளவு கடுப்பு…

      “என் பணம். உன் பணம் கிடையாது. நான் சம்பாதிக்கிறேன். என் அண்ணன் பையனுக்கு செலவு செய்யிரேன். உனக்கு என்ன வந்தது…” நக்கலாக கேட்டு வெளியே சென்றான்.

    நர்மதா இறங்கி வந்து கோபத்தில் கூட பேச்சு கொடுத்தாள். நிரஞ்சன் பேசி சரி செய்ய வில்லை. மீண்டும் முட்டி கொண்டது.

        நகை விசயத்தை நர்மதா சொல்லவே இல்லை. மறுநாள் கப்போர்டை பார்த்து தான் நிரஞ்சன் கண்டு கொண்டான்.

“நர்மதா… இது என்ன நகை?”

மறைக்கவெல்லாம் இல்லை. உண்மை என்னவோ அதை சொல்லி விட்டாள்.

     “இந்த நகையை திரும்ப கொடுத்திடு. எம் பிள்ளைகளுக்கு நான் இருக்கேன். கோடில கார் வாங்குற எனக்கு கோடில நகை வாங்கவும் தெரியும்…”

   “அப்படியா எந்த கோடி, தெரு கோடில தான…”

  “நர்மதா…”

    “சும்மா கத்தாதீங்க. எங்க அப்பா எனக்கு கொடுத்த நகை. உங்க வீண் கவுரவத்துக்கு நான் விட்டு கொடுக்க முடியாது…”

  “ நீ நகை வாங்கினது எனக்கு பிடிக்கல…”

  “அதுக்கு நான் என்ன பண்ண? நீங்க கார் வாங்கினது கூட தான் எனக்கு பிடிக்கல. நம்ம பொண்டாட்டின்னு என்னை வச்சு இல்லை என்கிட்ட சொல்லிட்டா வாங்கி வந்தீங்க…”

 “எப்ப இருந்து எதுத்து பேச கத்துக்கிட்ட… உங்க அக்கா சொல்லி கொடுத்தாங்களா?”

 “எங்க அக்காவ எதுக்கு இழுக்குறீங்க… எனக்கு வாய் இல்லை. நான் பேசுவேன். உங்க சம்பாத்தியத்தில் கட்டுன பொண்டாட்டி நான் கணக்கு கேட்க கூடாதுன்னா… நீங்க மட்டும் எப்படி என்னை கேள்வி கேக்கலாம்..” கத்தி விட்டு வேலைக்கு கிளம்பி விட்டாள்.

  பிருந்தாவுக்கும் போன் பண்ணி, “பெரிய சண்டை தான். உனக்கு அடுத்து போன் வரும். நீயும் பேசி விடு பிருந்தா. எவ்வளவு தான் நான் பொறுத்து போறது. என்னை ஒரு ஆளாக கூட மதிக்கலை…”

  “என்ன சண்டை நம்மு?…” என்று அக்கா கேட்க.

  மறைக்காமல் முழுதாக சொல்லி விட்டாள்.

   நர்மதாவை நினைத்து பிருந்தா வருத்தத்தில் இருக்க, நிரஞ்சனிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது.

   “ஹலோ…”

   “நான் நிரஞ்சன். உங்க தங்கச்சி இன்னுமா சொல்லாம இருப்பா?… இங்க என்ன நடந்தாலும் உங்க காதுக்கு வந்துடுமே!…”

   “வரத்தான் செய்யும் நிரஞ்சன். அவளுக்கு ஒரு அக்கா நான் தான். என்கிட்ட தான் சொல்ல முடியும். என் கிட்ட சொன்ன என்ன தப்பு…”

  “தப்பு தான் எங்க குடும்ப விசயம், அடுத்தவங்க தலையிட கூடாது…” கோபம் ஏறியது அவனுக்கு.

   “உங்களுக்கு நான் அடுத்த ஆளாவே இருந்துட்டு போறேன். எந்தங்கச்சிக்கு நான் அக்கா, என் கிட்ட சொல்ல தான் செய்வா…” தைரியமாக சொன்னாள் பிருந்தா.

   இந்த பேச்சு முடியாது என்று உணர்ந்தவன்.

   “ உங்க நகை எங்களுக்கு வேணாம். எம் பிள்ளைகளுக்கு நான் பார்ப்பேன். திரும்ப வாங்கிகோங்க…”

  “இங்க பாருங்க நிரஞ்சன். நீங்க எப்படியோ எனக்கு தெரியாது. ஆனா நான் என் வயித்துல பிறந்தது வேற, என் தங்கச்சி வயித்துல பிறந்தது வேறன்னு நினைக்கல. ரெண்டும் எம் பிள்ளைக தான். அவங்களுக்கு நான் செய்வேன்…”

   “அத்தோடு நர்மதா என் தங்கச்சி. என் கூட பொறந்தவ… எங்களை பெத்தவங்க காலத்துக்கு பின்ன நாங்க தான் ஒருத்தருக்குகொருத்தர் ஆறுதல். நான் அவளுக்கு பார்க்க தான் செய்வேன். அவளுக்கு ஒன்னுன்னா நான் வர தான் செய்வேன். நேத்து கல்யாணம் முடிச்சு, இன்னைக்கு வந்து எம் பொண்டாட்டின்னு சொல்லுவீங்களா? இத்தனை வருடம் கூட வளர்ந்த நாங்க ஒதுங்கி போகணுமா?…”

    “அப்படி எல்லாம் ஒதுங்கி போக முடியாது. என் தங்கச்சிக்கு நான் தான் வருவேன். அவளை போட்டு ரொம்ப பாடு படுத்துறீங்க. இது நல்லதுக்கு இல்ல. அவ அழுதா நான் பார்த்திட்டு சும்மா இருக்க மாட்டேன். நிரஞ்சனுக்கு என்கிட்ட மரியாதை கிடையாது. என் தங்கச்சி புருசனுக்கு மட்டும் தான் மரியாதை. நர்மதா நல்லா இருந்தா நான் தலையிட மாட்டேன். அவ அழுதா நான் வரத்தான் செய்வேன். நர்மதா மாதிரி என்னை நினைக்காதீங்க. நான் போலீஸ்காரன் பொண்டாட்டி…” என்று பிருந்தா போனை கட் பண்ண,

   என்ன இது மறைமுக மிரட்டல் என்று தோன்ற உடனே நர்மதாவுக்கு அழைத்தான். அவள் எடுக்கவே இல்லை. ஆள் வைத்தா மிரட்டுற, உன் குடும்ப உறவவே வெட்டி எரியுறேன். எப்படியும் வீட்டுக்கு தான வரணும் என்று நிரஞ்சன் நினைக்க,

   அங்கு வித்யா ஒரு பெரிய பிரச்சனையைவே கூட்டி நின்றாள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!