Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்!… அத்தியாயம் 13

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 13

       நர்மதா வரும் போது சுசீலா தான் கத்தி கொண்டு இருந்தார்.

       “அரசாங்க வேலையே வேணாம். வீட்டுல ரெஸ்ட் எடுன்னு சொன்னான் என் மகன். வீம்புக்கு உங்க மக தான் வேலைக்கு போறா… நீங்க வைர நகை எல்லாம் போட்டா கல்யாணம் பண்ணி குடுத்தீங்க. இன்னைக்கு எவ்வளவு வைர நகை வச்சு இருக்கா தெரியுமா! எனக்கு சந்தோசம் தான். என் பிள்ளை பேர் சொல்ல தான் பிழைக்கணும். போன வாரம் தான் ஒரு கோடிக்கு கார் வாங்கி இருக்கான். யாருக்கு? காலத்துக்கும் அவளுக்கு தான். இந்த வீட்டுல அவ சொல்லுறது தான் சட்டம். உங்க பொண்ணு என்னைக்கு கல்யாணம் பண்ணி வந்தாளோ அன்னைக்கே எல்லா பொறுப்பும் அவ கிட்ட நான் கொடுத்துட்டேன்…”



Advertisement

   “நல்ல குடும்பன்னு தெரிஞ்சு தான் பொண்ணு கொடுத்தேன் சம்மந்தி…” தயவாக தான் சொன்னார் பாலமரத்தான்.

   சண்டையின் முழு விவரமும் தெரியாமல் வார்த்தை விட கூடாதே…

       “எம் மகனையும் நான் சரின்னு சொல்லல. நிரஞ்சன் கோபக்காரன் தான். ஆனா கெட்டவன் கிடையாது. பொண்டாட்டி, பிள்ளை மேல கொள்ளை பாசம் இருக்கும். ஒரு அம்பிளை கோபத்துல இருக்கும் போது ஒரு பொம்பளை வாய மூட வேணாம். அது என்ன கூட கூட, எதுத்து பேசுறது. அது சரியா?…”

Advertisement

   “அவன் பொறுமையா தான் சம்மந்தி பேச ஆரம்பிச்சான். நர்மதா, உங்க அக்காட்டா வீட்டு விசயம் எதுவும் சொல்லாதம்மா. நம்ம வீட்டு நிலவரம் அவங்களுக்கு என்ன தெரியும். அவங்க ஏதாவது யோசனை சொல்லி, நம்ம குடும்பதுக்குள்ள சண்டை வந்துரும்ன்னு பொறுமையா எடுத்து சொன்னா, ஒரு பொண்ணு அனுசரிக்க வேணாம்…” என்றவர்,

Advertisement

   “ஆனா, உங்க மக என்ன பண்ண தெரியுமா? பெரியவன் குடும்பம் வந்ததுல இருந்து குடைச்சல் குடுக்க ஆரம்பிச்சா… எங்க அக்கா, என் சொந்த ரத்தாம்ன்னு என்னா பேச்சு. உன் வீடு எது? உன் குடும்பம் எது? உன் புருசன், பிள்ளைக யாரு? அதை தான மொத பார்க்கணும். அதை விட்டு அப்படி தான் எங்க அக்கா வருவா, நான் அவ பேச்சை தான் கேட்பேன்னு எம்புட்டு வாயி, திமிரு… என்ன இருந்தாலும் அவங்க ஊர் திமிரை காட்டுறா உங்க பொண்ணு… கூட பொறந்தாலும் வாயும் வயிறும் வேற தான…” என்று விடாமல் பேசினார் சுசீலா.

  மகன் அடித்தது தவறு என்று தெரியும். அதை சாதாரண நிகழ்வாக, நர்மதா தூண்டுதலில் தான் பிரச்சனை வந்ததாக காட்ட நினைத்தார். அப்போது தான் மனைவியை மகன் அடித்தான் என்று தெரிந்தாலும், பெரிய அளவில் பிரச்சனை ஆகாது. அவர்கள் பொண்ணும் தவறு தானே… அதை கொண்டு மகன் மனைவிக்கு செய்த நல்லதை பட்டியல் போட்டு, மகனின் தவறை சூழ்நிலை என்று காட்டி கொண்டார்.

   வேற வழியும் இல்லை. நேற்று ஏதோ ஒரு கோபத்தில் சம்மந்திக்கு போன் செய்து சத்தம் போட்டார். அதற்காக விடிந்ததும் வீட்டு வாசலில் வந்து நிற்பார் என்று எதிர்பார்க்க வில்லை. நிரஞ்சன் மட்டும் அடிக்காமல் இருந்திருந்தால் சுசீலா ஆட்டம் வேற மாதிரி இருந்து இருக்கும்.

Advertisement

      “நீங்க சொல்றது எல்லாம் புரியுது சம்மந்தி. அதனால் தான் சண்டை வந்துச்சா?… வாய் பேசுனது பிருந்தான்னு சொல்லி இருந்தா நான் நம்பி இருப்பேன். எம் பெரிய மகளை பத்தி எனக்கு தெரியும். அதே போல என் சின்ன மக குணமும் எனக்கு தெரியும். அநாவசிய பேச்சு, வீம்பு , பிடிவாதம் எதுவும் எம் பிள்ளைக்கு கிடையாது. அதுவே வாய் பேசி இருக்குன்னா… தப்பு எம் பிள்ளை மேல இருக்காது சம்மந்தி. இத்தனை வருசம் கூட்டு குடும்பமா தான் இருக்கீங்க. என்னைக்காவது வாய் பேசி, திமிரா நடக்குற பொண்ணா அது?… அப்படி இருந்தா இத்தனை வருஷம் ஒன்னா ஒரே குடும்பமா வாழ முடியுமா?…” நியாமான பேச்சை முன் வைத்தார் பாலமரத்தான்.

   சம்மந்தி அம்மா பேச்சில் அவருக்கு உடன்பாடு இல்லை. வாக்குவாதம் வந்து விட கூடாது பெண் கொடுத்த இடத்தில் என்று சாதாரண பேச்சாக ஆரம்பித்தாலும், தன் பிள்ளை மீது இருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார்.

     “அப்ப நான் தான் தப்புன்னு சொல்றீங்களா மாமா?…” வந்து விட்டான் நிரஞ்சன்.

   அறுவத்தி ஐந்து வயது முதியவர், மருமகன் என்றதும் எழுந்து நிற்க. அந்த மரியாதை யார் கண்ணிலும் பட வில்லை. வேண்டாம் என்றும் சொல்ல வில்லை.

    “நான் உங்களை தப்பு சொல்லலை தம்பி. எம் பிள்ளை தப்பு பண்ணி இருக்காதுன்னு சொல்றேன். அதாவது, உங்களையும் தப்புன்னு சொல்லலை. உங்க புரிதல் தப்பாக இருக்கும் மாப்பிள்ளை…”

    “நான் சரியா தான் புரிஞ்சு வச்சு இருக்கேன். உங்க மகளை நீங்க விட்டு குடுப்பீங்களா?…”

   “அப்படி இல்லை மாப்பிள்ளை. விசாரிப்போம் எம் மக மேல தப்புன்னு தெரிந்தா உங்க கண்ணு முன்னாடியே கண்டிச்சு வைக்கிறேன்…”

      “நீங்க யாரும் தலையிடாம இருந்தாலே எம் பொண்டாட்டி எம் பேச்சை கேட்பா… சொந்தம்ன்னா ஒரு அளவு இடைவெளி வேணும். உங்க பெரிய பொண்ணு எங்க வீட்டு விசயத்துல வாராங்க. எனக்கு அது பிடிக்கல. அத்தோடு நீங்க தனியா எதுக்கு நர்மதாவ பார்த்து பேசுனிங்க…” நிரஞ்சன் வாதத்தை மாமனாரிடம் திருப்பினான்.

    “மாப்பிள்ளை, பொதுவாவே நர்மதா எல்லா விசயங்களையும் எல்லார் கிட்டையும் வெளிப்படையா சொல்லுற ஆள் கிடையாது. தாங்க முடியாத கஷ்டம் இருந்தா மட்டும் தான் வார்த்தை வெளி வரும். கஷ்டம், கவலையை சொல்ல தான் கூட பொறந்த உறவு. அப்புறம் நான் பெத்த பிள்ளை. வேலை செய்யிற இடத்துல போய் நான் பாக்குறது என்ன தப்பு மாப்பிள்ளை. உங்களுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தா, எம் பிள்ளைக்கு நான் அந்நியம் ஆகிடுவேனா மாப்பிள்ளை..”

   “அந்நியம் தான் மாமா. புருசன், பொண்டாட்டிக்கு இடையில பெத்த தகப்பன், கூட பொறந்த சொந்தம் அந்நியம் தான். அதை புரிஞ்சு தள்ளி நிலுங்க…” வெறுப்பாக சொன்னான்.

   “அது முடியாது மாப்பிள்ளை. ஒரு பொண்ணுக்கு புருசன் தான் முதல்ல.. அதை நான் மறுக்க மாட்டேன். அதுக்காக ஒரு நேரம் கஷ்டம், கவலைன்னு ஆறுதல் தேட பொறந்த வீட்டு உறவு வேணாமா? நீங்க வேலைக்கு போறீங்க. உங்க வாழ்க்கை பிஸி. நான் என் வேலை, கடமை எல்லாம் முடிச்சுட்டேன். கடைசி காலத்துல இருக்கேன். எனக்கு நிம்மதி எம் பிள்ளைக தான். அவங்க வாழ்க்கையை பாக்குறது தான் எங்க வாழ்க்கையே… நான் உயிரோடு இருக்கும் போது எம் பிள்ளை ஆள் இல்லாம ஏன் இருக்கணும். எங்களுக்கு, பெத்த பிள்ளைகளை விட்ட யார் இருக்கா?…”

    “உங்களுக்கு நர்மதா மட்டும் தான் மகளா? மத்த பிள்ளைகளை பாருங்க. உங்க தலையீடு எங்களுக்கு தலைவலி…” வெறுப்பாக உரைத்தான்.

  வேதனையாக இருந்தது. ஆனாலும் பேச தவறவில்லை.

   “இதே வார்த்தையை எம் மக உங்களை பெத்தவங்களை பார்த்து சொன்னா?…”

   “மாமா.. வார்த்தையை பார்த்து விடுங்க…” கர்ஜித்தான் நிரஞ்சன்.

   “அதான் மாப்பிள்ளை சொல்றேன். உங்க சம்மந்தப்பட்ட விசயங்களை நீங்க உங்க அம்மா, அப்பா கிட்ட சொல்றீங்க தான? அதே மாதிரி எம் பிள்ளை என்கிட்ட சொல்லுது… உங்க அம்மா அப்பா உங்களுக்கு நல்லது சொல்லுவாங்க. நான் எம் பிள்ளைக்கு கெட்டது சொல்வேனா?…” ஆதங்கமாக வந்தது வார்த்தைகள்.

   “எங்க அம்மா, அப்பாவ நீங்க பேசாதீங்க. அவங்க உங்களை மாதிரி ஏத்தி விட மாட்டாங்க…” என்றவன்,

   “நீங்க, உங்க பெரிய பொண்ணு யாரும் பார்த்தா, பேசுனாவே எங்களுக்குள்ள சண்டை தான் வருது. ஏதாவது விசேஷன்னா மட்டும் நான் அனுப்பி வைக்கிறேன். மத்தபடி தள்ளியே நிப்போம்…” என்று நிரஞ்சன் சொல்லி முடித்தான்.

   அவன் விட்ட வார்த்தை எந்த அளவுக்கு எதிரில் இருந்தவரை காயப்படுத்தும் என்று யோசிக்கவே இல்லை. அவனை பொறுத்த வரை மனைவி பழைய மாதிரி தன் கைக்குள் நிற்க வேண்டும். அதனால் அவள் சார்ந்த உறவுகளை வெட்ட நினைத்தான்.

  “அப்ப இது தான் பிரச்சனைன்னா என் ஆதரவு எம் மகளுக்கு தான். நியாயமில்லாம என் பிள்ளை கோபப்படல…” திடமாக சொன்னார் பாலமரத்தான்.

   “அப்ப உங்க மகளை, உங்க வீட்டோடவே கூட்டி போங்க…” மறைமுக மிரட்டல் தான்.

   “நிரஞ்சா… என்னடா பேசுற. பைத்தியம் மாதிரி உளராத…” கடிந்தார் தாமோதரன்.

  “என்ன பேசுறீங்க. இப்படி பாதியிலேயே வெட்டி போறதுக்கு எம் மகளை ஏன் உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும். நல்ல குடும்பம்ன்னு நினைச்சு தான் பொண்ணு கொடுத்தேன்…” தாங்கவில்லை பாலமரத்தானுக்கு…

     “பொண்ண கட்டி கொடுத்தா அப்புறம் என்ன உறவு. அவ எம் பொண்டாட்டி. நான் தானே அவளை பார்க்கணும். கடைசி வர கூட இருக்க போறது நான் தான். நீங்க எவ்வளவு நாளைக்கு இருப்பீங்க…” குரலை உயர்த்தி கத்த தொடங்கினான்.

   “நிரஞ்சா நீ பேசுறது நியாயம் இல்லடா வாய மூடு…” தாமோதரன் அடக்க பார்க்க,

     “என்ன சம்மந்தி உங்க பையன் இப்படி பேசுறாரு… பெத்த தகப்பனுக்கு பிள்ளை சொந்தம் இல்லையா… நான் தூக்கி வளர்த்த எம் பிள்ளையை பார்க்க கூட உங்க மகன் கிட்ட அனுமதி வாங்கணுமா? இதுல கொஞ்சமாவது நியாயம் இருக்கா…” என்று இவரும் சத்தம் போட,

    அப்போது தான் குரல் உயரும் தன் தந்தை சத்தத்தை கேட்டு பதறி அடித்து ஓடி வந்தாள் நர்மதா. தன் அப்பாவை அங்கு எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் இவ்வளவு காலையில்…

  “அப்பா…” என்று கிட்டே வர,

திரும்பி மகளை பார்த்தவர், அவள் கோலம் கண்டு அதிர்ந்து போய் நெஞ்சில் கை வைத்தார். நேற்று போட்ட நைட்டி, சாப்பிடாமல் இருப்பது, இரவு முழுவதும் உறங்காமல் சிவந்த கண்கள், நேற்று விழுந்த அடிக்கு கன்னம் மட்டும் தான் இரவு வீங்கி இருந்தது. இன்று காலை பார்க்கும் போது ஒரு பக்க முகமே சிவந்து வீங்கி போய் இருந்தது. ஒரு பக்க உதடு தொங்கி போய் பார்க்கவே எப்படியோ இருந்தாள் நர்மதா.

   மனதின் வலி, கவலை முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. என்னவோ தந்தைக்கு கண்கள் கலங்கியது.

   “பாப்பா என்ன ஆச்சு உனக்கு… முகம் ஏன் வீங்கி இருக்கு. அடிச்சாங்களா உன்னை?…” என்றவருக்கு மகளை பார்க்கவே முடியவில்லை.

  நேற்று முழுக்க தைரியமாக இருந்தவள் தான். கலகம் பிறக்கட்டும் என்று கூட நினைத்தாள். எதையும் ஒரு கை பார்ப்போம் என்ற துணிச்சல் கூட தந்தையை பார்த்ததும், அவர் கலங்கிய கண்களை கண்டதும் வலிக்க தொடங்கியது.

   தைரியம் எல்லாம் காணாமல் போய், தானே இரு பிள்ளைகளின் தாய் என்பதை மறந்து தன் தகப்பனை பார்த்ததும் அழுகை வந்தது.

   “அப்பா…” அழுகையை கட்டுபடுத்தி ஒரு விக்களோடு அழுக, உடைய தொடங்கினார் தந்தை.

      “பாப்பா, உன்னை இப்படி பார்க்கவா சீரும் சிறப்புமாக கல்யாணம் பண்ணி குடுத்தேன். நீ இப்படி அடி வாங்கவா உன்னை பெத்து வளர்த்தேன். உன் கண்ணீரை பார்க்கவா நான் உசுர வச்சு இருக்கேன்…” என்று பாலமரத்தானும் கண் கலங்க…

   நாடகம் பார்ப்பது போல பார்த்தான் நிரஞ்சன். “வொர்ஸ்ட் ஆக்டிங்” என்று முனங்கி கொண்டான்.

    “அவனுக்கு என்னவோ கோபம். கை நீட்டிட்டான் சம்மந்தி. இத்தனை வருசத்துல ஒரு நாளும் நிரஞ்சன் இப்படி இல்ல…” என்று தாமோதரன் எடுத்து சொல்ல,

   “என்னங்க கோபம். ஒரு மனுசனுக்கு வரமுறை தெரியாத கோபம் வருமா? என்னைக்காவது கோபத்துல உங்க மேல கை வச்சு இருக்கானா…” மகள் நிலை கண்டதும் மருமகன் என்ற மரியாதை காணாமல் போய் இருந்தது.

    “உங்க மகளுக்கு எம்புட்டு செஞ்சு இருக்கான். ஏதோ ஒரு கோபம். அதுக்கு உங்க மக வாயும் தான் காரணம்…” சுசீலா தன் பங்குக்கு வந்து விட்டார்.

      “என்னவும் பேசட்டும். ஆயிரம் வாக்குவாதம் வரட்டும். அது புருசன், பொண்டாட்டிக்கு உள்ள… அதுக்கு முகம் வீங்குற அளவுக்கு அடிப்பாங்களா?…” நார்மதாவின் கையை பிடித்து இழுத்து சுசீலா அருகில் நிறுத்தியவர்,

  “பாருங்க நல்லா முகத்தை பாருங்க. எப்படி வீங்கி, சிவந்து போய் இருக்குன்னு… நேத்து அடிச்சதுக்கே இப்படி வீங்கி இருக்கே. எம் பிள்ளைக்கு எப்படி வலிச்சு இருக்கும். எம்புட்டு வலிய தாங்கி இருக்கும். இதுக்காக நான் பிள்ளையை கட்டி கொடுத்தேன். என் நெஞ்சே கொதிக்குது…” என்று பாலமரத்தான் கத்த,

  அதுவரை வெளியே வராமல் இருந்த வித்யா கூட வெளியே வந்து விட்டாள். அவளுக்கு பயம். எங்கே தன்னால் தான் என்று சொல்லி விடுவார்களோ!… தன்னை விட நர்மதா உசதி இல்லை என்று காட்ட தான் நினைத்தாலே தவிர, இப்படி சண்டை போடணும் என்று நினைக்க வில்லை.

  “அதான் சொன்னேனே. உங்க மகளும் தான் தூண்டி விடுற மாதிரி பேசுனா… அடிச்சது தப்பு தான். அதுக்காக அவன் செஞ்ச நல்லது இல்லன்னு ஆகிடுமா?…” சுசீலா மீண்டும் மகனுக்கு ஆதரவாக பேச,

  “ தலைவாழை இலை போட்டு விருந்து வச்ச பின்னாடி, ஒரு ஓரத்துல சானி வச்சா எப்படி இருக்கும். ஒரு ஓரமா தானே இருக்குன்னு விருந்து ருசிக்குமா… அது தான் உங்க மகன் குணம்…” என்ற மாமனாரின் வார்த்தை நிரஞ்சனை தூண்டி விட,

   “பிருந்தா அப்பாவுக்கு பேச சொல்லியா கொடுக்கணும். பாருங்க, நர்மதா எம் பொண்டாட்டி, நான் அடிப்பேன். எங்களுக்குள்ள ஆயிரம், அதுல நீங்க எதுக்கு உள்ள வாரீங்க…” நிரஞ்சன் தன் பேச்சை ஆரம்பித்தான்.

      “நான் பெத்த தகப்பன். கையை தடவி, கால உருவி தொட்டு தொட்டு வளர்த்தவன் நான்… நெஞ்சுலையும், தோல்லையும் போட்டு வளர்த்த எம் பிள்ளையை அடையாளம் மாறி போற அளவுக்கு நீ அடிப்ப, நான் பார்த்து இருக்கணுமா…” என்று தந்தையும் எகிற,

   “அப்பா வேணாம் ப்பா…” என்று கையை பிடித்து தடுத்தாள் நர்மதா.

   “நடிக்காதடி. அப்படியே குடும்பமே டிராமா, சீரியல் மாதிரி… நீ தான் சொல்லி வர சொன்ன…”

    “எம் மகளை எம் முன்னாடியே மிரட்டாத…” என்று தந்தை வர,

    நிரஞ்சன் முகம் மாறி விட்டான்.

   “அவ எம் பொண்டாட்டி. அப்படி தான் நான் அடிப்பேன், பேசுவேன். நீங்க யாரு? என்னைக்கு எனக்கு கட்டி கொடுத்தீங்களோ அன்னைக்கே அவ மேல எனக்கு தான் உரிமை இருக்கு. இனி நீங்க பேச கூடாது. இது எங்க குடும்ப விசயம்…” எகிறினான் நிரஞ்சன்.

   “எங்க அப்பா கிட்ட குரலை உயர்த்தி பேசாதீங்க. இனி ஒரு வார்த்தை வந்துச்சு உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை…” நர்மதாவும் சண்டைக்கு வந்தாள். தந்தையை பேசிய கோபம்…

     “வாம்மா நல்லவளே… இப்ப வரைக்கும் உன் புருசனை உங்க அப்பா பேசினாரே, அப்ப எங்க போச்சு உன் ரோசம். உங்க அப்பா, மகள் பாச படம் ஓட்ட நான் தான் கிடச்சனா? உலகத்துல நீங்க தான் உன்னதமான குடும்பம். அப்படியே அப்பா, அக்கா, தங்கச்சி பாசத்தை பார்த்து சிலிர்த்து போச்சு. இப்படி அங்க இருந்தும் மகளவே பாக்குறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். கூடவே வச்சுக்க வேண்டிய தான…”

    “தப்பு தான் தம்பி. என் தப்பு தான். நீங்க நல்ல குடும்பம்ன்னு நினைச்சு பொண்ண கட்டி கொடுத்தேன். ஆனா பசு தோல் போர்த்துன புலின்னு நினைக்கலையே…”

   “அப்பா பேச வேண்டாம்…” கையை பிடித்து இழுத்தாள்.

  “என்ன பேச்சு இது. மருமகன் கொஞ்சமாவது மரியாதை வேணாம்…” சுசீலாவும் சண்டைக்கு தயாரானார்.

   “எம் மகளை நல்ல படியா வச்சு இருந்தா தான் எனக்கு மருமகன்… எம் மகளை கட்டி தான் எனக்கு மருமகன்…”

  “என்ன குறை உங்க மகளுக்கு… நீங்களே பாருங்க. அவ கிட்ட என்ன இல்லை. உங்க வீட்டுல இவ்வளவு வசதியாவா வாழ்ந்தா…”

  “ பணமும், வசதியும் நிறைவான வாழ்க்கையை கொடுக்காது சம்மந்தி அம்மா. இம்புட்டு வசதி எங்க வீட்டுல இல்லை தான். ஆனா ஒரு நாளும் எம் பிள்ளையை நான் கை நீட்டுனது இல்லை. இந்த வசதியை பார்த்து நான் பொண்ணு கொடுக்கல. எம் பிள்ளையை நல்லா வச்சுகுவீங்கன்னு தான் பொண்ணு கொடுத்தேன்…” என்றவர்,

   “நர்மதா நீ கிளம்பு. ஆளுகளை வச்சு பேசுவோம், போய் பிள்ளைகளை கூட்டி வா…” என்றவர் குரல் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது.

  சுகர் வேறு இருக்க, சாப்பிடாத மயக்கம் போல…

  “ ஏய் எங்கடி போற… எம் பிள்ளைகளை தொட்ட அவ்வளவு தான். ஒன்னு நீ எனக்கு பொண்டாட்டியா என் வீட்டுல இரு, உங்க அப்பாவுக்கு மகள அவர் கூட போறதா இருந்தா அவர் மகளா மட்டும் போ…” பெற்றவள் பிள்ளையை விட்டு எப்படி இருப்பாள். அதை உணர்ந்து தான் நிரஞ்சன் சொன்னான்.

   “வாய மூடு நிரஞ்சன். உனக்கு புத்தி கெட்டு போச்சு. இப்ப எதுவும் பேசாத… நர்மதா பிள்ளைகளை நீ கூட்டி போ… கொஞ்ச நாள் அவன் தனியா கிடக்கட்டும். அப்ப தான் புத்தி வரும். நிறைய பிடிச்சு, நல்லா சம்பாதிச்சா பெரியவங்க மரியாதை வேணாம். அப்படி என்ன ஆணவம் உனக்கு?…” என்று தாமோதரன் சத்தம் போட,

   “என்னங்க என்ன பேசுறீங்க. நம்ம புள்ளை, நாமளே விட்டு கொடுக்கலாமா?…” என்று சுசீலா கேட்க.

    “மொத நீ வாய மூடு. அவனுக்கு ஏத்தி விடுறதே நீ தான். சின்னவன், கடைகுட்டின்னு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சு இருக்க…” என்று மனைவியை அடக்கியவர்,

    “நர்மதா நீ போ…” என்று சொல்ல, அவள் தன் தந்தையை பார்க்க, அவரும்

  “போ பாப்பா. கொஞ்ச நாள் அக்கா வீட்டுல போய் இரு… பிள்ளைகளை கூட்டிட்டு துணி எடுத்துட்டு வா…” என்று பாலமரத்தான் சொல்ல,

         நிரஞ்சனுக்கு கோபம் அடங்க வில்லை. கண்ணில் பிருந்தா பேசியதும், மாமனார் பேசியதும். அதற்கு தக்க மனைவியும் தன்னை அவமதிப்பதாக தோன்ற…

    “ நர்மதா போறதா இருந்தா நீ போ… நீ உங்க அப்பா கூட போற மாதிரி, அவங்களும் அவங்க அப்பா கூட இருப்பாங்க…” என்று எதிர்க்க,

     “டேய் அறிவுகெட்டவனே… பேசுறான் பாரு பேச்சு. அந்த பொண்ணா ஒரெடியா ஒதுக்கியா வைக்க போறா… நீ நினைக்கிறது தான் நடக்கணும்ன்னு சொன்னா, அது பிரச்சனைக்கு திர்வா இருக்காது. ஒரு பத்து நாளைக்கு தள்ளி நில்லுங்க. கோபம் ஆறட்டும். பெரியவங்க நாங்க பேசி முடிவு எடுக்கிறோம்…” என்றவர்,

   “நர்மதா நீ போ… சின்ன பாப்பா அழுகை சத்தம் கேட்குது பாரு…” என்று மாமனார் சொல்ல,

   கணவனை ஒரு பார்வை பார்த்தவள். மேலே செல்ல அடி எடுத்து வைக்க, அப்படி ஒரு கோபம் நிரஞ்சனுக்கு…

  வேகமாக முன்னே வந்தவன், மனைவி கையை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு வெளியே வந்தான்.

    “என்ன பண்ற எம் பிள்ளை கையை விடுடா…” என்று கத்தி கொண்டு வந்தார் பாலமரத்தான்.

  “டேய் நிரஞ்சா வேணாடா. கொஞ்சம் அமைதியா இரு…” என்று சுசிலாவும் பின்னே வர,

  நர்மதா கை கன்றி சிவக்கும் அளவுக்கு அழுத்தி பிடித்தவன், வீட்டுக்கே வெளியே தள்ளினான்.

  “உனக்கு நான் வேணாம்ல. எம் பேச்சு உனக்கு முக்கியமில்லை. என் மரியாதை உனக்கு அவசியமில்லை. அப்புறம் நீ என்ன எம் பொண்டாட்டி. போ, உங்க அப்பாவுக்கு மகளாவே போ…” என்று கத்த,

   “வாய மூடுடா. தப்பு பண்ணினது நீ… மருமகன் மேல ஏண்டா கை வச்ச. முகம் வீங்கி போச்சு உன் கண்ண வச்சு நல்லா பாரு… எந்த தகப்பனுக்கும் கோபம் வர தான் செய்யும். கூட குறையா வார்த்தை வந்தா பொறுத்துக்க. உங்க அப்பா ஸ்தானத்துல இருக்கவர் தானா… அப்படி என்னடா கௌரவம் உனக்கு…” என்று தாமோதரன் எடுத்து சொல்ல, முகுந்தனும் வந்து விட்டான்.

   நர்மதாவுக்கு அழுகை தாங்க வில்லை. எத்தனை வருட திருமண வாழ்க்கை. எப்படி துரத்துகிறான். வெளியில் நின்ற அத்தனை பேருக்கும் காட்சி பொருள் ஆனாள். சாரதா குடும்பமும் வந்து விட, ஆளாளுக்கு கத்த தொடங்கி விட்டார்கள்.

   தெருவே பயங்கர சத்தம். வண்டியில் போவோர் எல்லாம் ஒரு பார்வை பார்த்து தான் சென்றார்கள். நர்மதா நிமிறவே இல்லை.

   சுற்றி நின்ற அனைவரும் சரி, நிரஞ்சன் வீட்டு ஆட்களும் சரி அவன் தான் தவறு என்று அழுத்தம் கொடுக்க. அதிகமாக இறுகி போனான் நிரஞ்சன். அவன் பிடிவாதத்தை தளர்த்த வில்லை.

   “ எம் பொண்டாட்டியா வந்தா தான் எம் பிள்ளைகளுக்கு அம்மா இல்லை அப்படியே போகட்டும்…” என்று வாசலின் இரு பக்கமும் கை வைத்து நின்று கொண்டான்.

   “டேய் யாரும் சண்டையை பெருசு பண்ணல. நீ தான் சரியாகத அளவுக்கு பெருசு பண்ற…” என்று முகுந்தன் கத்த,

   நிரஞ்சன் எதையும் காதில் வாங்க வில்லை. எம் பொண்டாட்டி எம் பேச்சை தான் கேட்கணும். யாரும் எங்க வீட்டுக்கு வந்து பஞ்சாயத்து பண்ண கூடாது.

     யார் சொல்லியும் நிரஞ்சன் விட வில்லை. நர்மதாவுக்கு மிகுந்த அவமானம். தன்னை மாதிரி வாழ வந்த பெண்ணும் இருக்க, கணவன் தெருவில் வைத்து அசிங்க படுத்துகிறான். எத்தனை தான் கணவன் என்று அனுசரித்தாலும் நல்ல மனைவி என்ற பட்டம் மட்டும் என்றும் வாங்க முடியாது.

  “சரிடா. உன் முடிவு உன் விருப்பம். உம் பிள்ளைக உன் கூடவே இருக்கட்டும். அந்த பொண்ணு நேத்து போட்ட நைட்டியோடு தான் நிக்குது. உன் பொண்டாட்டி முகத்தை பாரு. மொத உள்ள விடு, ட்ரெஸ் மாத்திட்டு போகட்டும். நைட்டியோடு போகுமா… அசிங்க படுத்தாத நிரஞ்சன்…” என்று முகுந்தன் எடுத்து சொல்ல,

   கொஞ்சம் கூட இறங்கி வர வில்லை நிரஞ்சன். என் முடிவுக்கு தான் எல்லோரும் உடன் பட வேண்டும். சுசீலாவுக்கே தன் மகன் தப்பாக தோன்றினான்.

      “அம்மா நீ போய் வேற ட்ரெஸ் எடுத்து வா… நர்மதா வெளிய இருக்குற பாத்ரும்ல மாத்திகட்டும். பின்னாடி நீ நல்லா அனுபவிப்ப நிரஞ்சன்…” என்று முகுந்தன் வெறுப்பாக சொல்ல,

   “அம்மா நீ நகர கூடாது. நர்மதா நீ உள்ள வா எனக்கு பொண்டாட்டியா…”

   நர்மதா நிமிர்ந்து கூட பார்க்க வில்லை கணவனை. அவளுக்கு மனம் முழுதாக வெறுத்து இருந்தது. நேற்று இரவு கூட பிரச்சனைக்கு தீர்வு என்று தான் யோசித்தாள். கணவன் இப்படி என்று நினைக்க கூட இல்லை.

    பிள்ளை அழுகை சத்தம் கேட்டதும், நர்மதா உள்ளே செல்ல முனைய, நிரஞ்சன் விட வில்லை.

  “ஏண்டி நான் அவ்வளவு பேசுறன். என் புருசன் தான் முக்கியம்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா…” அவளை தோலை பிடித்து உலுக்கி எடுக்க,

  “நிரஞ்சன் “ என்று கத்தி முகுந்தன் அவனை பிடிக்க,

  மகளை அவன் பிடியில் இருந்து விடுவிக்க நிரஞ்சனை பிடித்து தள்ளினார் பாலமரத்தான். கொஞ்சம் தள்ளி முள்ளு தான். சுற்றி இருந்த அனைவரும் வர,

     “அப்பா வேண்டாம். அவரை விடுங்க…” நர்மதா தந்தையை தடுக்க,

  நிரஞ்சன் மனைவி கையை விடவே இல்லை. பாலமரத்தான் பிடித்து இழுத்தார்,

  “ விடுடா எம் பிள்ளையை…”

  “நிரஞ்சா என்னடா கிறுக்கு தனம் விடுடா…”

   தன்னை பிடித்து அழுத்தவும், நிரஞ்சன் திருப்பி தள்ளினான். அது அனிச்சையாக வந்து விட்டது. கை மாமனார் பக்கம் இருக்க, அவர் தான் தூர போய் விழுந்தார்.

   இதை யாருமே எதிர்பார்க்க வில்லை. பாலமரத்தானுக்கு மயக்கம் வரும் போல இருந்தது. ஏற்கனவே முடியாதவர். கையில் நல்லா சிராய்ப்பு. இரத்தம் வந்தது.

   நர்மதாவுக்கு உயிரே இல்லை. அவருக்கு சுகர் உண்டு. சின்ன காயம் கூட ஆற பல நாள் ஆகும்.

     “அப்பா… என்று பதறி போய் தூக்க போக, அவளுக்கு பதட்டத்தில் கை, கால் எல்லாம் விலுவிலுவென்று நடுங்க தொடங்கியது.

   கையை நேராக்கி அப்பாவை பிடிக்கவே முடியவில்லை. சுசீலா நிரஞ்சன் முதுகில் வேகமாக ஒரு அடி போட்டார்.

  “பாவி என்னடா காரியம் பண்ணி தொலைச்ச…”

  முகுந்தன், சாரதாவின் கணவர் இருவரும் தான் பால மரத்தானை தூக்கி அங்கிருந்த சேரில் அமர வைத்தார்கள்.

   நர்மதா நிலை கண்டு நிரஞ்சன் அருகே வர, தள்ளாட்டம் இருந்த போதும் அவனை விட்டு தள்ளி நின்றாள். சாரதா ஒரு வலி தண்ணி பிடித்து வந்து நர்மதா முகத்தில் அடித்தார். தந்தை விழுந்ததில் அவளுக்கு அவ்வளவு பதட்டம், பயம்.

      தெளிவு வந்து நிமிர்ந்து தந்தையை பார்க்க… முகுந்தன், அருகே கொடியில் கிடக்கும் துண்டை எடுத்து அவர் கையில் கட்டினான். வெள்ளை துண்டு தாண்டியும் இரத்தம் வெளியே தெரிய, நர்மதாவுக்கு உயிரே அவளிடம் இல்லை.

   எங்கே அவன்… வேகமாக அவன் அருகில் செல்ல, இறுகி போய் நின்றான்.

        இவ்வளவு சண்டையிலும் நேராக கணவனை பார்த்து வாக்குவாதம் செய்யாதவள், போட்டு இருந்த அவன் சட்டையை பிடித்து,

     “ நீ நல்லவன்னு உனக்கு பொண்ணும் குடுத்து, குறையாத சீர் செஞ்ச அந்த மனுசனுக்கு என்னடா மரியாதை குடுத்த… அறுவத்தி அஞ்சு வயது, சேர்ந்து கால் மணி நேரம் நடக்க முடியாதவர். ஆனா உன்னை பார்த்து எந்திருச்சு நின்னு மரியாதை கொடுப்பார். எதுக்கு மருமகன், நம்ம பிள்ளைக்கு புருசன்னு உன் வயசுக்கு உனக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தார். அவரை போய் தள்ளி விட உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு. நீ மனுசனே அல்ல, மிருகம். நீ நல்லா இருப்பியா…” ஆவேசத்தில் நிதானமின்றி கத்த தொடங்கினாள்.

   சாரதா தான் ஓடி வந்து பிடித்து இழுத்தார்.

   “நர்மதா விடுடி. அவனை விடு…” என்று கத்த.

   நிரஞ்சன் இறுகி போனான். அவன் மனமே குத்தியது போல… அமைதியாக பின் பக்கம் கை கட்டி நின்று கொண்டான்.

   நர்மதா தெளிவாக, நிதானமாகவே இல்லை.

   “எங்க அப்பா டா அவரு, எங்க அப்பா மேலயா நீ கை வச்சா. நீ வேணாம். உன் பிள்ளைக வேணாம். உன் காசு, பணம், வசதி எதுவும் வேணாம். எனக்கு எங்க அப்பா தான் வேணும். எனக்கு எங்க அப்பா மட்டும் போதும். அவர் அசிங்க படுத்துன நீ வேண்டாம்…” வெறி வந்தவள் போல கத்த,

   நிரஞ்சனுக்கு கண் கலங்கியது. “நம்மு…” மெல்ல அழைக்க,

   “நான் போறேன். எங்க அப்பாவுக்கு மகள நான் போறேன். நான் என்ன நிரஞ்சன் பொண்டாட்டின்னா வானத்துல இருந்து குதிச்சேன். பாலமறத்தான் மகளா தான் பிறந்தேன். நான் படிச்ச படிப்பு, பாக்குற வேலை, வாழ்ற வாழ்க்கை எல்லாம் எங்க அப்பா குடுத்தது தான். உன்னையாகவே எங்க அப்பா தாண்ட எனக்கு பார்த்து வச்சார். அவர் சொல்லி தான் நீ எனக்கு புருசன்…” நர்மதா கையில் நிரஞ்சன் சட்டை கிழிந்தது.

   பாலமரத்தான் வந்து விட்டார்.

     “பாப்பா விடு. மாப்பிள்ளையை விடு பாப்பா. நாம போகலாம் வா…” என்று கையை விடுவிக்க பார்க்க,

   “எங்க அப்பா மேல போய் கை வச்சையே… அந்த மனுஷனை தள்ளி விட்டையே. நான் செத்து என் உடம்புல தீ வச்சாலும் மறக்க முடியாத வலி…” என்று கத்த,

   “நர்மதா…” என்று அதட்டினான் நிரஞ்சன்.

   பித்து பிடித்தவள் போல பேசினாள். முடிந்து வைத்த கொண்டை கழன்று, கண் சொருகி, வாய் ஒரு ஓரம் இழுத்தது. ஆனாலும் அவனை விட வில்லை.

    “உன்னை சும்மா விட மாட்டேன்டா… நான் பொம்பளை பிள்ளைன்னு தான் எங்க அப்பா மேலகை வச்சயாடா…” என்று நிரஞ்சனை இழுக்க, அவன் கழுத்து செயின் அறுந்து விழுந்தது.

  பாலமரத்தான் போட்டது தான். கல்யாணத்தின் போது இருவர் பெயரும் என் என்ற எழுத்தில் தொடங்க, அதை வைத்து அழகான டிசைன் செய்து ஐந்து பவுனுக்கு மருமகனுக்கு போட்டார். அதையே அத்து எரியும் அளவுக்கு சக்தி அவளுக்கு எங்கிருந்து வந்தது என்று தெரிய வில்லை.

  கண் சொருகி மயங்கி விழ, நிரஞ்சன் வேகமா பிடிக்க வந்தான், “நம்மு”

“ தொடத, எம் பிள்ளையை நீ தொடாத. கிட்ட வந்த அவ்வளவு தான்” என்று மிரட்டியவர், காயத்தோடு மகளை தூக்க முனைய,

   சாதரா வீட்டுகாரர் வந்து விட்டார். உண்மையில் நிரஞ்சன் மனைவியை பார்த்து நடுங்கி போனான். முகுந்தன் ஓடி போய் கார் எடுத்து வர,

    “ உங்க கார்ல எம் பிள்ளையை நான் ஏத்த மாட்டேன். இனி உங்க சகவாசமே எங்களுக்கு வேணாம்…” என்றவர், சாரதா மகன் கொண்டு வந்த காரில் மகளை ஏற்றியவர். அழுது கொண்டு கீழ வந்த பேத்திகளை தூக்கி கொண்டவர்,பெரிய மகளுக்கு உடனே அழைப்பு விடுத்தார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!