Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 17

பிடித்தம் 17

ஆறு மாதங்களுக்கு முன் முறையான அனுமதி இன்றி கிருபாகரனின் நிறுவனம் கட்டிக் கொண்டிருந்த தரம் குறைந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிர் இழந்திருந்தனர். கொடுக்க வேண்டியதை கொடுத்து முறையான அனுமதி இன்றி கட்டியதையும், சரியான தரம் இல்லாததையும் மூடி மறைத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்திருந்தார் கிருபாகரன். இந்த விஷயத்தில் தான் பிரசாத் அவரை அதிகமாக எதிர்த்தது. மனோஜிற்கும் இதில் உடன்பாடு இல்லை என்றாலும் எப்பொழுதும் போல் தந்தையை எதிர்த்து வாய் திறக்காததோடு விஷயம் கை மீறி போன  போது அதை மூடி மறைக்க உதவி வேறு செய்தான். இந்த வழக்கைத் தான் புகழ்வேந்தன் தூசித் தட்டி உண்மையை தோண்டி எடுத்திருந்தான். சதீஷ் கொடுத்த கோப்பியத்தில் இந்த வழக்கில் கிருபாகரனுக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் இருந்தது.

 

புகழ்வேந்தன், “இது சாம்பிள் தான்.. உன்னோட ஜாதகமே என் கையில் இருக்குது” என்றான்.



Advertisement

 

“..”

 

Advertisement

“என்ன பார்க்கிற? இதை விட பெருசா ஒன்னு சொல்லவா?” என்றான் உதட்டோர புன்னகையுடன்.

Advertisement

 

‘என்ன வரப் போகிறதோ!’ என்று சிறிது பதறிய கிருபாகரன் முதல் முறையாக பயம் என்னும் உணர்வை உணர்ந்தார்.

 

Advertisement

கிருபாகரன் முகத்தை பார்த்த சதீஷ், ‘பார் டா! இந்தாளுக்கு கூட பீதியாகுது!’ என்று நினைத்தான்.

 

புகழ்வேந்தன் இகழ்ச்சியான புன்னகையுடன், “உனக்கு பெர்மிஷன் தராத அதிகாரியை போட்டு தள்ளுனியே! அதுக்கும் என் கிட்ட ஆதாரம் இருக்குது”

 

சதீஷ் மனதினுள், ‘இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே! பாஸ் பாஸ் தான்’ என்று எப்பொழுதும் போல் இப்பொழுதும் புகழ்வேந்தனை சிலாகித்தான்.

 

“அதை நான் பண்ணலை” என்று கிருபாகரன் அவசரமாக கூற,

 

புகழ்வேந்தன், “நீ சொல்லி தானே பண்ணாங்க!”

 

“இல்ல.. நான் சும்மா மிரட்ட தான் லேசா அக்சிடென்ட் பண்ணச் சொன்னேன்.. ஆனா……………..”

 

“எது எப்படியோ! நீ பண்ண வேலையால் தானே அவர் உயிர் போச்சு!”

 

சட்டென்று கிருபாகரன், “உனக்கு என்ன வேணும்?” என்று இறுகிய குரலில் கேட்டார்.

 

சதீஷ், ‘நீ என்ன டிசைன் டா!’ என்பது போல் பார்க்க, புகழ்வேந்தன் வாய்விட்டு சிரித்தான்.

 

தன்னால் தற்போது எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த கிருபாகரன் புகழ்வேந்தன் மீதான கோபத்தையும் வெறியையும் அடக்கிக் கொண்டு அமைதியாக நின்றார்.

 

சிரிப்பை நிறுத்திய புகழ்வேந்தன், “பக்கா கிறுமினல் டா நீ” என்றான்.

 

அப்பொழுது கிருபாகரனின் கைபேசி அலறியது. மல்லிகா தான் அழைத்திருந்தார். இவர் முதலில் அழைப்பை எடுக்கவில்லை ஆனால் அழைப்பு மீண்டும் மீண்டும் வரவும் எரிச்சலுடன் எடுத்து, “இப்போ என்னடி வேணும் உனக்கு?” என்று கோபத்துடன் கத்தினார்.

 

மல்லிகா எப்பொழுதும் போல் வலியை தன்னுள் புதைத்தபடி மெல்லிய குரலில், “எங்க இருக்கிறீங்க? மித்து முகூர்த்தப் புடவை மாத்த போயிட்டா”

 

“வரேன்.. போனை வை” என்று மீண்டும் கத்திவிட்டே அழைப்பைத் துண்டித்தார்.

 

புகழ்வேந்தனிடம் கிருபாகரன் மீண்டும், “உனக்கு என்ன வேணும்?”

 

கைகள் இரண்டையும் கோர்த்து தலைக்கு மேல் கொண்டு சென்று நீட்டி முறுக்கியவன் நிதானமாக, “மித்ராணி” என்றான்.

 

“என்ன! என்ன சொன்ன?”

 

“திடீர் னு காது கேட்காம போயிடுச்சா?” என்று நக்கலுடன் புகழ்வேந்தன் கேட்க,

 

“என்ன சொன்ன?” என்று அப்பொழுதும் கிருபாகரன் அதிர்ச்சியுடன் தான் கேட்டார்.

 

“மனோஜ் மித்ராணி கழுத்தில் தாலி கட்டினால் உன் கழுத்துக்கு தூக்கு கயிறு னு சொல்றேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கும் மித்ராணிக்கும் கல்யாணம் நடக்கணும் னு சொல்றேன்”

 

“இப்படி கடைசி நேரத்தில் சொன்னா எப்படி?”

 

‘நீ என்ன லூசா!’ என்பது போல் கிருபாகரனை பார்த்த சதீஷ், ‘அடேய் மங்கூஸ் மண்டையா! கடைசி நேரத்தில் சொன்னா தான் அது செக்மேட்’ என்று மனதினுள் கூறிக் கொண்டான்.

 

‘சொல்றதை சொல்லிட்டேன்’ என்பது போல் புகழ்வேந்தன் அமைதியாக இருக்கவும் கிருபாகரன், “இந்த கல்யாணத்தை நிறுத்த வேணா என்னால் முடியும் ஆனா நீ சொல்றது நிச்சயம் முடியாது”

 

“அப்போ ஏழரை மணிக்கு உனக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிடும்”

(6 – 7.30 தான் முகூர்த்தம்.. அதை மனதில் வைத்து கூறுகிறான்)

 

“ச்ச் புரியாம பேசுற…………”

 

“நான் ஏன் உன்னை புரிஞ்சுக்கணும்?”

 

“நான் சொல்றதை கேளு.. எனக்கு கொஞ்சம் டைம் கொடு”

 

புகழ்வேந்தன் அசைவதாக இல்லை என்றதும் வேறு வழியே இல்லாமல் முதல் முறையாக கெஞ்சினார்.

 

கிருபாகரன், “மனோஜை சமாளிச்சிருவேன்.. ஆனா மித்ரா என் பேச்சிற்கு கட்டுப்பட மாட்டா.. ப்ளீஸ் நான்……………”

 

“அது உன் பிரச்சனை” என்று தோள்களை குலுக்கியவன், “உனக்கு பத்து நிமிஷம் தான் டைம்” என்று கூறிவிட்டு வெளியேறி முன் வரிசையில் அமர்ந்திருந்த அவனது அன்னை கலைவாணி அருகில் அமர்ந்தான்.

 

புகழ்வேந்தன் பின்னால் வந்த சதீஷ், இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த அவனது மனைவி நிவேதா அருகில் அமர்ந்தான்.

 

நிவேதா, “உன்னோட பாஸ் வரதை சொல்லவே இல்லை!”

 

சதீஷ், “அல்மோஸ்ட் எல்லா பிஸ்னஸ்மென்-னும் வந்திருக்காங்க.. அப்படியே நான் முன்னாடி சொல்லி இருந்தா மட்டும் என்ன பண்ணியிருப்ப?”

 

நிவேதா முறைக்கவும் அவன் மனதினுள், ‘அடி போடி! ஒரு சுனாமியையே நாடு தாங்காது இதில் இன்னும் கொஞ்ச நேரத்தில் ரெண்டு சுனாமி ஒன்னா வரப் போகுது! கொஞ்ச நேரத்துக்கு முன் அந்தாளை பாஸ் திணறடிச்சப்ப நல்லா தான் இருந்துது ஆனா இப்போ என்ன நடக்குமோ னு திகிலோட உட்கார்ந்து இருக்கிறேன்’ என்று கூறிக் கொண்டான்.

 

 

 

கலைவாணி இறுக்கத்துடன் அமர்ந்திருக்க, புகழ்வேந்தன், “உன்னோட பையன் கல்யாணம் மா.. சிரிச்ச மாதிரி இரு”

 

“ஈஈஈ.. போதுமா?”

 

“தேவதை மாதிரி சிரிக்க சொன்னா பேய் மாதிரி சிரிக்கிறியே!”

 

“ஹ்ம்ம்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னோட தேவதை வருவா.. அவ கிட்ட சொல்லு”

 

சட்டென்று புகழ்வேந்தனின் இதழ்கள் மென்னகையை சூடிக் கொள்ள, அவன், “அவ தேவதையா னு போகப் போகத் தான் தெரியும் ஆனா எப்படியும் கொஞ்ச நாளுக்கு லக லக னு சலங்கை கட்டி ஆடுவா”

 

கலைவாணி அதிகமாக முறைக்க, அவன் சிரித்தான். கடந்த சில நாட்களாக மகனிடம் தெரியும் பழைய துள்ளலில் கலைவாணியின் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னும் சற்று நேரத்தில் மித்ராணிக்கு மகன் செய்யவிற்கும் அநியாயத்தில் அவருக்கு சிறிதும் உடன்பாடு இல்லை.

 

அப்பொழுது ஒரு தொழிலதிபர் அவனிடம் வந்து பேசவும், அவனும் அவரிடம் பேசத் தொடங்கினான். அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவனது கவனம் மணமகன் அறை நோக்கியே இருந்தது.

 

 

நிவேதா, “பாப்பாவை பிடி.. நான் மித்துவை பார்த்துட்டு வரேன்”

 

“அவளையும் கூட்டிட்டு போ.. பாஸ் எப்போ வேணா என்னைக் கூப்பிடலாம்”

 

அவள் முறைப்புடன், “இது ஆபீஸ் இல்லை.. இப்போ நீ என்கூட என் பிரெண்ட் கல்யாணத்திற்கு வந்திருக்க, புரியுதா!!”

 

‘இல்லையே! நான் என்னோட பாஸ் கல்யாணத்துக்கு வந்திருக்கிறேன்’ என்று அவன் மனதினுள் கூறிக்கொள்ள,

 

அவனது முழியை பார்த்தவள், “என்னமோ இன்னைக்கு நீ சரியே இல்லை” என்றாள்.

 

அதற்கும், ‘அது இப்போ தான் உனக்கு தெரியுதா!’ என்று மனதினுள் கூறிக் கொண்டான்.

 

நிவேதா, “என்னமும் பண்ணு” என்றுவிட்டு குழந்தையுடன் மணப்பெண் அறை நோக்கிச் சென்றாள். இவள் அங்கே செல்லவும் கலங்கிய நிலையில் மனோஜும் கண்ணீருடன் மல்லிகாவும் உள்ளே சென்றனர்.

 

அவர்கள் சென்ற அடுத்த நொடி ஒப்பனையாளர்கள் வெளியே வந்தனர்.

 

 

இதற்குள் உறவினர்கள் மத்தியில்,

‘என்ன பிரச்சனையோ?’,

‘எதுவும் லவ்வு கிவ்வு இருக்குமோ?’,

‘பிரசாத் ஏன் வரலை? ஒருவேளை அவனுக்கு எதுவும் ஆகி இருக்குமோ?’,

‘இப்படி அவசர அவசரமா ஒரே வாரத்தில் கல்யாணம் பண்றாங்க! என்னவா இருக்கும்?’,

‘என்ன கசமுசா னு தெரியலையே!’,

‘சொத்து வெளியே போயிடக் கூடாதுன்னு தானே கிருபா மனோக்கு மித்ராவை எடுக்கிறான்.. ஏதும் சொத்து பிரச்சனையா இருக்குமோ?’ என்று பலவிதமான பேச்சுகள் பரவத் தொடங்கியிருந்தது.

 

நிவேதா குழப்பமான நிலையில் முன்பு அமர்ந்திருந்த இடத்தில் வந்து அமர்ந்தாள்.

 

சதீஷ் என்னவென்று கேட்க அவள் நடந்ததை கூறினாள். சதீஷ் புகழ்வேந்தனை பார்க்க, அவன் மணமகள் அறையை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

 

புகழ்வேந்தனும் சதீஷும் மேலாளர் அறையை விட்டு வந்ததும் கிருபாகரன் மணமகன் அறைக்குத் தான் சென்றார்.

 

ஒருசில உறவினர்கள் இருக்க, கிருபாகரன், “எல்லோரும் கொஞ்ச நேரம் வெளியே இருங்க” என்று கூறவும் அவர்கள் ஏதோ முணுமுணுத்தபடி வெளியேறினர்.

 

மல்லிகா, “என்னங்க?”

 

கிருபாகரன் இறுகிய குரலில், “இந்த கல்யாணம் நடக்காது”

 

“என்னங்க சொல்றீங்க?”, “ஏன் பா? என்னாச்சு?” என்று மல்லிகாவும் மனோஜும் அதிர்ச்சியுடன் ஒன்றாக வினவினர்.

 

கிருபாகரன் மனோஜை பார்த்து, “நீ மித்ரா கழுத்தில் தாலி கட்டினால் உன் அம்மா கழுத்தில் இருந்து தாலி இறங்கிடும்”

 

“அப்பா!!!!” என்று பெரும் அதிர்ச்சியுடன் மனோஜ் அழைக்க,

 

மல்லிகா தாலியை இறுக்கமாக பிடித்தபடி கலங்கிய குரலில், “ஏன் இப்படி பேசுறீங்க?” என்றார்.

 

கிருபாகரன், “ஆமா.. இந்த கல்யாணம் நடந்தால் நான் தூக்கில் தொங்கணும்”

 

மனோஜ், “அப்பா என்ன பிரச்சனை? தெளிவா சொல்லுங்க… நாம சமாளிக்கலாம்”

 

“என்னை விட, என் உயிரை விட உனக்கு மித்ரா தான் பெருசா போயிட்டாளா? என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவன் இப்போ……………”

 

“அப்பா ப்ளீஸ்.. அப்படி இல்லை”

 

“அப்போ நான் சொல்றதை செய்”

 

“அப்பா!!” என்று அவன் தவிப்புடன் அழைக்க, அவரோ கண்டுக் கொள்ளவில்லை.

 

“அப்பா ப்ளீஸ் பா..”,

“அப்பா ப்ளீஸ்.. இதுவரை நான் எதுவுமே கேட்டது இல்லை.. இப்போ எனக்காக பா ப்ளீஸ்”,

“மித்ரா எதுக்கு புகழ்வேந்தனை கல்யாணம் செய்யணும் னு சொல்றீங்க? என்ன பிரச்சனை?”

“அப்பா அட்லீஸ்ட் என்னன்னு சொல்லுங்க.. நான் சரி பண்றேன்”

“இந்த ஒரு முறை பா.. எனக்காக கொஞ்சம் யோசீங்களேன் பா.. ப்ளீஸ்” என்று மனோஜ் விதவிதமாக கெஞ்ச, எதற்கும் கிருபாகரன் மனம் இறங்குவதாக இல்லை.

 

மனோஜ் ஓய்ந்து போய் அமர, கிருபாகரன், “நீ தான் மித்ரா கிட்ட பேசுற.. இப்பவே அவளுக்கும் புகழ்வேந்தனுக்கும் கல்யாணம் நடக்கணும் னு சொல்ற” என்று கூற,

 

“அப்பா!!!!!” என்று மனோஜ் கத்தியேவிட்டான்.

 

ஆனால் கிருபாகரனோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் கல் போல் நின்றுக் கொண்டிருந்தார்.

 

மல்லிகா, “உங்களுக்கு மனசே இல்லைங்க.. நீங்க கல்” என்றவர் பின் கோபத்துடன், “மித்ரா வாழ்க்கையை முடிவு பண்ணும் உரிமை உங்களுக்கு இல்லை” என்றார்.

 

“சரி உங்க இஷ்டம்.. இந்த கல்யாணத்தை நடத்திக்கோங்க.. ஆனா இன்னைக்கு மித்ரா புகழ்வேந்தன் கல்யாணம் நடக்கலைனா நான் பொணமாகப் போவது உறுதி”

 

மல்லிகா அழுது கரைய, மனோஜ் செய்வதறியாது நிற்க,

 

கிருபாகரன் மனோஜை பார்த்து, “நான் உயிருடன் வேணும் னு நினைத்தால் மித்ராவை இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கவை”

 

மனோஜ் வலியுடன், “நானே எப்படி பா அவளிடம் சொல்லுவேன்? என்னால் முடியாது பா..”

 

“அப்போ என் உயிர் உனக்கு முக்கியம் இல்லை”

 

மனோஜ், “நான் தான் உங்க ஏற்பாட்டிற்கு ஒத்துக்கிறேனே பா! ஆனா என்னால் அவளிடம் பேச முடியாது.. ப்ளீஸ் பா புரிஞ்சுக்கோங்க”

 

“நான் சொன்னா கண்டிப்பா அவ கேட்கவே மாட்டா.. நீ தான் சொல்லணும்” என்றவர் “என் உயிர் முக்கியம் என்றால் இதை செய்” என்றும் சேர்த்துக் கூறினார்.

 

மனோஜ், “இதுக்கு நீங்க என்னை கொன்றிருக்கலாம் பா” என்று பெரும் வலியுடன் கூற,

 

மல்லிகா அழுதபடி வெறுப்புடன், “நீங்க மனுஷனே இல்லை..” என்றார்.

 

கண்களை இறுக மூடித் திறந்த கிருபாகரன் அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக்கொள்ள,

 

இரண்டு நிமிடங்கள் கழித்து மனோஜ் இறுகிய குரலில், “அம்மா மித்ரா ரூமுக்கு போகலாம்”

 

மல்லிகா, “இதுக்கு நான் ஒரு நாளும் ஒத்துக்கவே மாட்டேன்” என்று கூற,

 

அவனோ, “நான் போறேன்” என்றபடி வெளியேறினான்.

 

“என் பையனை உயிரோட கொன்னு, மித்ராவை என்னோட நிலைமையில் கொண்டு வந்து நிறுத்திய உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்” என்று வெறுப்புடனும் கோபத்துடனும் கூறியவர் கன்னங்களில் வடிந்திருந்த கண்ணீரை துடைக்கக் கூட தோன்றாமல் மனோஜ் பின்னால் விரைந்தார்.

 

மல்லிகாவும் மனோஜும் சென்ற பிறகு கிருபாகரன், ‘மித்ரா இதற்கு சம்மதிக்கணுமே!’ என்று சிறு பயம் கலந்த கவலையிலும், ‘எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணித் தான் பண்ணியிருக்கிறான்.. யார் இவன்? எதுக்கு இப்படி பண்றான்? இவன் எதுக்கு என்னை டார்கெட் பண்றான்? நான் தான் டார்கெட்டா இல்லை இவனோட டார்கெட் மித்ராவா?’ என்று புகழ்வேந்தனை நினைத்து கோபம் கலந்த யோசனையில் ஆழ்ந்தார்.

 

 

 

மணமகள் அறையினுள் மனோஜ், மல்லிகா, கமலா மற்றும் மித்ராணி மட்டுமே இருந்தனர்.

 

கமலா, “என்னாச்சு அண்ணி?” என்று பதற, மல்லிகாவோ இறுகிய முகத்துடன் நின்றார். அவரால் கிருபாகரனின் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை தான் ஆனால் அதே நேரத்தில் மித்ராணியிடம் ‘இதற்கு ஒத்துக்காத’ என்று திடமாக கூறவும் முடியவில்லை. கிருபாகரன் இதில் தனது உயிர் சம்பந்தப்பட்டிருக்கிறது என்றது தான் அதற்கு காரணம்.

 

மித்ராணி, “மனோ” என்று தீர்க்கமான குரலில் அழைத்தாள்.

 

இரண்டு நொடிகள் மித்ராணியை தவிப்புடனும் வலியுடனும் மெளனமாக பார்த்த மனோஜ் கண்களை இறுக மூடித் திறந்து இறுகிய குரலில் சுவற்றை பார்த்தபடி, “அப்பா ஏதோ பிரச்சனையில் மாட்டி இருக்கிறார்.. அவர் உயிரை காப்பாற்ற நீ இப்போ மிஸ்டர் புகழ்வேந்தனை கல்யாணம் செய்துக்கணும்” என்றான்.  

 

கமலா, “என்ன மனோ? என்ன சொல்ற?” என்று பதற,

 

மித்ராணி அமைதியான குரலில், “புகழ்வேந்தனை வரச் சொல்லு” என்றாள். புயலை உள்ளடக்கிய அமைதியோ இது!

 

மனோஜ் அதிர்ச்சியுடனும் சிறு குழப்பத்துடனும் அவளை பார்க்க, அவளோ அதே குரலில், “சம்பந்தப்பட்ட ஆளிடம் தானே பேசணும்! மே பி இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது அவனா தான் இருக்கணும்.. கூட்டிட்டு வா”

 

 

 

மனோஜ் கோபத்தை அடக்கிய இறுகிய முகத்துடன் சென்று புகழ்வேந்தன் முன் நின்றான். அனைவரின் பார்வையும் இவர்களிடம் தான் இருந்தது, ஆனால் அதை கவனிக்கும் நிலையில் மனோஜ் இல்லை.

 

மனோஜ், “மித்ரா பேசணுமாம்”

 

புருவச் சுளிப்புடன் அரை நொடி பார்த்த புகழ்வேந்தன், “ஓகே” என்றபடி எழுந்தான்.

 

புகழ்வேந்தன் மணமகள் அறையினுள் சென்றபோது மித்ராணி மட்டுமே இருந்தாள். அவள் கமலாவையும் மல்லிகாவையும் வெளியே இருக்க கூறியிருந்தாள். இப்பொழுது மூடிய அறையினுள் புகழ்வேந்தன் மித்ராணி மற்றும் மனோஜ் இருந்தனர்.

 

மித்ராணியும் புகழ்வேந்தனும் நேருக்கு நேர் சந்திப்பது இது தான் முதல் முறை. புகழ்வேந்தன் இருமுறை எதேர்ச்சையாக அவளைப் பார்த்திருந்தாலும் அது அவளுக்குத் தெரியாது. புகழ்வேந்தனை பற்றியும் அவனது திறமைகளைப் பற்றியும் கேள்விப் பட்டிருந்தாலும் இன்று தான் அவனை முதல் முறையாக அவள் பார்க்கிறாள்.

 

மித்ராணி புகழ்வேந்தனை ஏற இறங்க பார்க்க, அவனும் அவளை அவ்வாறே பார்த்தான். அவனது மனமோ, ‘அம்மா உன் மருமக தேவதை தான்’ என்று சொல்லிக் கொண்டது.

 

மித்ராணி புகழ்வேந்தனிடம், “உனக்கு என்ன பிரச்சனை?”

 

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே”

 

“அப்போ எதுக்கு இந்த கட்டாய கல்யாணம்?”

 

“நான் யாரையும் கட்டாயப் படுத்தலையே!”

 

அவள் முறைப்புடன், “நான் ஏன் நீ சொன்னதை செய்யணும்?”

 

மனோஜ் தவிப்புடன் அவளைப் பார்க்க, புகழ்வேந்தன் அலட்சியமாக தோள் குலுக்கினான்.

 

அவனது அலட்சியத்தை அலட்சியம் செய்தவளாக அவள் புருவம் உயர்த்தி அவனை பார்க்க, அவன், “உனக்கு வேற வழி இல்லை”

 

“ஏன் இல்லை?”

 

“உங்க நிலைமையை இவனோட அப்பன் சொல்லியிருப்பானே!”

 

“எங்களோட இல்லை.. அவரோட நிலைமையைச் சொன்னார்.. அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?”

 

“அப்போ அவன் ஜெயிலுக்கு போய் தூக்கில் தொங்க வேண்டியது தான்”

 

“போய் தொங்கட்டும்” என்று அவள் வெகு அலட்சியத்துடன் கூற,

 

மனோஜ், “மித்து!” என்று அதிர்ச்சியுடன் பதறினான். தந்தை ‘தூக்கில் தொங்குவேன்’ என்று மிரட்டுவதற்காக சொன்னதாக மட்டுமே நினைத்திருந்தவனுக்கு தற்போது புகழ்வேந்தன் சொன்ன ‘ஜெயில்’ என்ற வார்த்தை அதிர்ச்சியை தந்தது என்றால் அதற்கு மித்ராணி அலட்சியத்துடன் அளித்த பதில் மேலும் பெரும் அதிர்ச்சியை தந்தது. ஆனால் அதை மற்ற இருவரும் கண்டுக்கொள்ளவே இல்லை.

 

புகழ்வேந்தன் பல்லை கடித்துக் கொண்டு அவளை பார்க்க, அவளோ அலட்டிக் கொள்ளாமல், “என்ன பல் வலியா?” என்றாள்.

 

அவன் கோபத்துடன், “ஏய்!”

 

“இந்த சவுண்ட் விடுற வேலையெல்லாம் இவனிடமோ இவனோட அப்பா கிட்டயோ வச்சுக்கோ.. நான் உன்னை கல்யாணம் செய்துக்க மாட்டேன்.. உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ” என்றாள் தீர்க்கமான குரலில்.

 

அவள் மனோஜை மனமுருகி காதலிக்கவில்லை தான் இருப்பினும் அவனது காதலை ஏற்று அவனுக்காக போராடி கல்யாணம் வரை வந்த பிறகு வேறு ஒருவனை கல்யாணம் செய்துக்கொள்வதற்கு அவளது மனம் ஒப்பவில்லை. அதுவும் கத்திமுனையில் நிர்பந்தப்படுத்தி திருமணம் செய்ய நினைக்கும் புகழ்வேந்தனை திருமணம் செய்ய சிறிதும் விருப்பமில்லை என்பதோடு அவன் மீது வெறுப்பும் கோபமும் கொண்டாள்.

 

அவளது அரைக்கூவல் புகழ்வேந்தனின் தன்மானத்தை தாக்க, அவன், “நீ என்னை கல்யாணம் செய்து தான் ஆகணும்” என்று கட்டளையாக கூறினான்.

 

அவனை கடுமையாக முறைத்தபடி அவள், “எனக்கு கட்டளையிட நீ யார்?”

 

“உனக்கு கணவன் ஆகப் போறவன்”

 

“அது உன் கனவிலும் கூட நடக்காது”

 

“கனவில் என்ன! நிஜத்திலேயே நான் நடத்திக் காட்டுவேன்” என்றான் நெஞ்சை நிமிர்த்தி.

 

அவள் அவனை முறைத்தபடி பதில் கூறும் முன் மனோஜ் அவரசமாக அவள் அருகே சென்று, “ப்ளீஸ் மித்து” என்று கெஞ்சினான். புகழ்வேந்தனுடன் கல்யாணத்தை அவள் மறுப்பதில் மனோஜின் மனம் மகிழ்ந்தாலும், தந்தையின் உயிர் பயம் அவனை அவளிடம் கெஞ்ச வைத்தது. தனது நிலையை சபித்தபடி வலியுடன் தான் அவளிடம் கெஞ்சினான்.

 

இப்பொழுது மனோஜை வெறுப்புடன் முறைத்தாள்.

 

மனோஜ், “எனக்கு வேறு வழி இல்லை.. ப்ளீஸ்………….”

 

“அதுக்கு நான் தான் பலியா?”

 

“எனக்காக ப்ளீஸ்”

 

“உனக்காக நான் ஏன் செய்யணும்?”

 

“மித்து…”

 

“காள் மீ மித்ராணி”

 

அவளது தோரணையில் மனோஜ் அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்க அவளோ இறுகிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.

 

புகழ்வேந்தன் தன்னையும் அறியாமல் அவளை சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அதை அவனே முழுமையாக உணராத நிலையிலும் கூட அவனது  முகத்தில் அவளை ரசிக்கும் பாவம் துளியும் இல்லை. பல ஆண்டுகளாக தனது உணர்ச்சிகளை முகத்தில் சிறிதும் காட்டாமல் தன்னைத் தானே அவன் கட்டுக்குள் வைத்திருந்ததின் விளைவோ!

 

மனோஜ் சிறு திணறலுடன், “மித்ரா.. நீ என்னை காதலிக்……………”

 

“இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்லை! எனக்கு உன்னை பிடித்து இருந்தது.. அதாவது உன் குணங்களை பிடித்து இருந்தது.. உன் செயல்களால் அந்த பிடித்தம் குறைந்து இப்போ இந்த நொடியில் நான் உன்னை வெறுக்கிறேன்..” என்று இகழ்ச்சியுடன் ஆரம்பித்து வெறுப்புடனும் சிறு கோபத்துடனும் முடித்தவள்,  பின் கடும் கோபத்துடன், “என்னை காதலிக்கிறேன் னு சொல்லி அன்பே ஆருயிரே னு உருகினவன் தானே நீ.. அப்படிப்பட்ட நீ என்னை பற்றி யோசிக்கிறியா? நீ ஒரு கோழை மட்டுமில்லை பக்கா சுயநலவாதி”

 

மனோஜ் அடிபட்ட பார்வை பார்க்கவும் அவள், “என்ன பார்க்கிற? நான் சொல்றது தான் உண்மை.. நீயும் உன் குடும்பமும்………………..”

 

“என்ன மித்து பிரிச்சு பேசுற?”

 

“இன்னொரு முறை மித்து னு கூப்பிடாத” என்று கடுமையான குரலில் கூறியவள், “பிரிச்சு தான் பேசுவேன்.. நீங்க அப்படித் தானே பார்க்கிறீங்க.. என்னை உங்க குடும்பத்தில் ஒருத்தியா நினைச்சு இருந்தா இப்படி ஒரு முடிவை எடுப்பீங்களா?”

 

“இல்லை……..”

 

கையை உயர்த்தி அவனது பேச்சை நிறுத்தியவள், “என் முடிவில் மாற்றம் இல்லை.. நீயும் உன் குடும்பமும் சுயநலமா யோசிக்கும் போது நான் மட்டும் ஏன் உனக்காகவும் உன் அப்பாவிற்காகவும் யோசிக்கணும்?” என்று சீறினாள்.

 

புகழ்வேந்தன், “என்ன ஒரு தெய்வீக காதல்” என்று நக்கலாக கூற,

 

அவளும் நக்கல் குரலில், “என் காதலை விமர்சிக்க உனக்கு அருகதையே இல்லை” என்றாள்.

 

“ஏய்” என்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரிக்க,

 

மனோஜ் மீது காதல் இல்லாதபோதும் புகழ்வேந்தனை காயப்படுத்தும் நோக்கத்துடன் அவள், “வேறு ஒருத்தனை காதலிக்கிறவளை மிரட்டி கல்யாணம் செய்துக்க நினைக்கிற உனக்கு நிச்சயம் என் காதலை பற்றி பேச அருகதையும் இல்லை உரிமையும் இல்லை” என்றாள் நிமிர்வுடனே.

 

அவளது நிமிர்வை அவனது ஆழ்மனம் ரசித்தாலும் வெளியே அவளிடம், “அதிகமா பேசுற.. நான் யாரு என் உயரம் என்ன னு உனக்கு தெரியுமா?” என்று குரலை சற்று உயர்த்தி பேசினான்.

 

“என்ன ஆறடி இருப்பியா!” என்று நக்கலுடனும் அலட்சியத்துடனும் கூறியவள் பின் தீர்க்கமான குரலில், “நீ பெரிய பருப்பா இருந்தா எனகென்ன! தொழில் சாம்ராஜ்யத்தில் ஹீரோவாவே இருந்தாலும் எனக்கு நீ வில்லன்” என்றாள்.

 

புகழ்வேந்தன் சிறு கோபம் கலந்த குரலில், “நான் வேந்தன்.. ஹீரோவுக்கும் மேல்” என்று கூற,

 

அவளோ அலட்சிய குரலில், “இருந்துட்டு போ! நான் உன் அந்தபுரத்தை அலங்கரிப்பவள் இல்லை” என்றாள்.

 

“ஓ” என்று இதழோர புன்னகையுடன் கூறியவன், “இந்த வேந்தனின் பட்டத்து ராணி நீ தான்” என்றான் தீர்க்கமான உறுதியான குரலில்.

 

“அது ஒருகாலமும் நடக்காது”

 

“பார்க்கலாமா?”

 

“பார்க்கலாம்”

 

இருவரும் சிங்கம் போல் சிலிர்த்துக் கொண்டு சவாலிட்டனர். வேந்தன் ராணி என்ற பெயரிற்கு ஏற்றார் போல் இருவரின் தோரணையும் அக்காலத்து ராஜா ராணியின் தோரணை போன்று தான் இருந்தது.

 

 இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!