Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 19

கள்வன் – 19

 

அஜய் கூறிய நட்சத்திர விடுதிக்கு வந்தவுடன் அங்கிருந்த வரவேற்பறையில் விழா எங்கு நடக்கிறது என்று விசாரித்துக் கொண்டு அந்த கூடம் நோக்கி நடந்தாள் இனியா. என்றும் இல்லாத அளவிற்கு அஜயை பார்க்க வேண்டும் என்கிற உத்வேகம் அவளுள் ஆல மரமாய் வளர்ந்து நிற்க, இரண்டு நாட்களாக இதே சிந்தனை தான். யுக்தா குழப்பிய குட்டையில் தெளிவு பிறக்கவில்லை எனினும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையை அஜய்ரத்னத்தின் அழைப்பு உசுப்பியது. 

 



Advertisement

மனம் முழுக்க இதயனுக்கும் தனக்குமான உறவு பற்றிய குழப்பம் படர்ந்து அவளை ஆட்டி படைக்க அவனை தேற்றிட வேண்டும் என்பதில் மட்டும் முனைப்பாய் இருந்தாள். அந்த உறுதி அவளை இங்கு இழுத்து வந்திருந்தது.

 

யுக்தாவிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் அவள் மட்டுமே கிளம்பி வந்து விட்டாள். அவளிடம் சொன்னாலும் நீ எதற்கு இதெல்லாம் செய்கிறாய் என்று கேள்வி எழுப்புவாள் என்றுணர்ந்தே அவளை தவிர்த்தாள். அவளும் இன்பனிடம் சண்டையிட்டு வந்த பிறகு ஏனோ தனிமை விரும்பியாய் அமைதி காத்தாள். இன்பனும் அவளை சமாதானம் செய்ய முற்படவில்லை, அவனே வரட்டும் என்று இவளும் அவனை தொடர்பு எல்லையிலிருந்து தள்ளி நிறுத்தியிருந்தாள். 

Advertisement

 

Advertisement

ஆனால் இந்த உணர்வு கலாட்டாவில் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ இதயன் தான். மூன்று நாட்களாகவே இன்று வருவாள், நாளை வருவாள் என்று இனியாவின் வருகைக்காக வாசலிலேயே தன் விழியை பதித்திருந்தான் இதயன்.  

 

கதவடைக்கப்பட்ட அவனின் இரும்பு இதயத்திற்குள் தீயின்றி, வெப்பமின்றி தன் மென்மையினாலும், அக்கறையினாலும் ஆழமாய் பதிந்து போய் அவனை பாதித்திருந்தாள்.

Advertisement

 

அந்த பாதிப்பின் ஈரம் காயாமல் ஈரப்பசைப்புடன் இன்னுமே இருப்பதனால் அவன் அகம் முழுக்க இனியா தான், அவளின் தெம்பூட்டும் வார்த்தைகள் தான்.

 

அவளோ துளிர்விட்டிருந்த குற்றவுணர்ச்சியில் ஓவர் ஸ்பீடில் போகாமல் சற்று நிதானிப்போம் என்று முடிவெடுத்து இரு நாட்களாக இதயன் வீட்டிற்கு செல்லவில்லை. புறம் மட்டும் அவளுடனே இருக்க அவள் அகம் முழுதும் அவன் நினைவு தான். தான் பேசிவிட்டு வந்த அந்த காலை பொழுதிற்கு பின் அவனிடம் ஏதும் மாற்றம் வந்ததா? தன் வார்த்தைகளை மதித்து அதன்படி நடக்க யோசித்தானா? இல்லை இவள் சொல்லி நான் என்ன கேட்பது என்று தன்னை உதாசினாப்படுத்தி இருப்பானா? தன்னை தேடி இருப்பானா? என்பது போன்ற எண்ண அலைகள் அவளுள் ஆர்பரிக்க அமைதியுற வழியின்றி திணறித் தான் போனாள் இனியா. இத்தனைக்கும் இடையில் அவளுக்கு கிடைத்த துருப்பையும் விடுவதாய் இல்லை.

 

“ஹே இனியா… ஹாய்,” அஜய் அவளைப் பார்த்து புன்னகையுடன் எதிரே வர இனியாவும் பதிலுக்கு மென்னகை புரிந்தாள். 

 

“நீ வந்துட்டியானு தான் பார்க்க வந்தேன். கம்…” என்றபடியே தன் கோட்டின் காலரை சரிசெய்தவன் இனியாவை விழா அறை நோக்கி அழைத்துச் சென்றான்.

 

“நேரமாகி விடவில்லையே? ஆஃபீஸ் டைம் முடிந்ததும் நேரே இங்கே வந்து விட்டேன். டிராபிக் வேறு…” என்று இனியா பேசாமல் இருக்க கூடாது என்று பேசி வைத்தாள்.

 

“சரியான நேரத்திற்கு தான் வந்திருக்க… சீட் ஏற்கனவே என்னோட பாஸ் வைத்து ரிசர்வ் செய்திருக்கேன். பீ கம்போர்டபில்.” என்றவன் அவளை இரண்டாம் வரிசையில் காலியாக இருந்த நாற்காலியில் அமர வைத்தான். 

 

“விழா முடிந்ததும் போயிடாத. நான் பேசி முடித்ததும் உனக்கு துணையா கம்பெனி கொடுக்க வந்துறேன்…” என்றுவிட்டே மேடை ஏறினான் அஜய்.

 

‛நீ போ என்றாலும் நான் உன்னிடம் பேசாமல் போகப்போவது இல்லை,’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் இனியா. 

 

மேடையேறிய அஜய் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கையில் அமராமல் அவள் தெரியும் வண்ணம் சற்று தள்ளி அமர்ந்தான். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவனை இடம் மாறி அமரச் சொல்லியும் மறுத்துவிட்டான். நிறைய மேடைகளிலும், கருத்தரங்குகளிலும் பங்குபெற்று பேசியிருந்தாலும் இன்று ஏதோ பதட்டம் அவனுள். ஆனால் அதெல்லாம் அவன் முறை வரும்வரை தான். அவனை பேச அழைத்ததும் எழுந்தவன் பொதுவாய் அந்திப் பொழுது வணக்கம் தெரிவித்துவிட்டு தன் இயல்பான பேச்சு நடையை ஆரம்பித்தான்.

 

“போதை ஒழிப்பு நாள்… வருத்தத்திற்குரிய விஷயமாக இந்த குறிப்பிட்ட தினம் பற்றி தொன்னூற்றி ஐந்து சதவிகதம் பேருக்கு தெரிவதில்லை. யாரும் தெரியப்படுத்தவும் முயற்சிப்பதில்லை. காரணம் வியாபார, வர்த்தக அரசியல்… உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் சட்ட விரோதமாக போதை பொருட்கள் கடத்தல், வியாபாரம் தான் இருக்கு. போதை பழக்கம் அதிகமாக அதிகமாக தேவையும் அதிகமாகி பூதாகாரமாய் வளர்ந்து நிற்கிறது இந்த நச்சு. அதனால் எல்லாமே எளிதாய் கிடைக்கிறது. வயது பேதமின்றி அனைவரையும் சென்றடைகிறது.

 

சரி, போதை பழக்கம் என்று சொல்கிறோமே அது மது, புகையிலை என்று தான் பலர் நினைக்கிறாங்க. சொல்லப்போனால் மது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிடும் அளவுக்கான சூழல் இப்போது நாட்டில் உள்ளது, குறிப்பாக அரசே சிறப்புச் சலுகை அறிவித்து லாபம் பார்க்கிறது இங்கு…  

 

அதை விடுங்கள்… எத்தனை பேருக்கு மது, புகையிலை, சிகரெட், பீடி, கஞ்சா மட்டும் போதை தரும் பொருட்கள் அல்ல கோகைன், மூக்குப்பொடி, ஒருவகை பிரவுன் சுகர், வையிட்னர், சில பெயின்ட் வகைகள் மற்றும் சிலவகை வலி நிவாரணிகளும் மனிதனின் நரம்பு மண்டலத்தை தன்னுள் வசப்படுத்தி அவர்களை அந்த பொருளுக்கு அடிமையாக வைத்திருக்கிறது என்று தெரியும்?

 

மேலே குறிப்பிட்ட பொருட்களை எடுத்துக் கொள்பவர்கள் மட்டும் தான் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்களா என்ன? இப்போது சில நவீன பழக்கங்களுக்கு அடிமையாகி ஒருவித போதையில் அடிமையாகவே நம் அனைவரும் இருக்கிறோம் என்பதை பலர் உணர்வதில்லை. ஏனெனில் போதை என்பது ஸ்லோ பாய்சன் மாதிரி… அது எப்போ வருது… எப்படி வருதுன்னு தெரியாது… ஆனால் கண்டுபிடிக்க முடியும். குணப்படுத்த முடியும். அதற்கு முதலில் அதோட ஆணி வேரை தெரிஞ்சிக்கணும்… 

 

போதை எப்படி ஏற்படுகிறது? ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏதோ ஒன்று நம்மை கவரும் போது, அது தரும் இதத்தால் அதன்பால் ஈர்க்கப்படுகிறோம். அந்த ஈர்ப்பு அதிகமாக அதிகமாக விருப்பாகவும் மோகமாகவும் மாறி அதுவே காலப்போக்கில் போதையாகி நம்மை அடிமைப்படுத்துகிறது. ஷாப்பிங், இன்டர்நெட், கேமிங், லைக்ஸை குவிக்கும் சமூக வலைத்தளங்கள், உணவு, புகையிலை, போதைப்பொருள், சூதாட்டம், மது என்று ஏதோ ஒன்றுக்கு உலகில் பெரும்பான்மையினர் இன்றுவரை அடிமைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இவற்றில் சில ஆரம்பத்தில் சாதாரண தேவைகளாக மட்டும் இருந்தாலும் நாளடைவில் அதுவே அடிமைத்தனமாய் மாற்றமுறுகிறது.

 

முன்பெல்லாம் சாராயம் குடித்தாலே ஊரை விட்டு ஒதுக்கிவிடுவார்கள். கள்ளுக்கடையும் ஒதுக்குபுரமாய் இருந்தது… ஆனால் இப்போது??? இரண்டு தெருவிற்கு ஒரு டாஸ்மார்க். அதுவும் பல இடங்களில் பட்டப்பகலில் வியாபாரம் தூள் பறக்கிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று மேல் வர்க்கத்தினர் மத்தியில் ஒரு பெக் வைன் குடித்தால் ஒன்னும் ஆகாது… அதுவே பெருமை என்பது போன்ற மாயையை உருவாக்கி போதை நோக்கி இழுக்கப்படுகிறார்கள். சிலரோ அதில் அப்படி என்ன தான் இருக்கிறது? என்ற ஆர்வத்தில் அதை உட்கொள்கிறார்கள். 

 

போதை பொருட்களை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளிருந்தாலும், அவை முறையாக நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. பொது இடத்தில் ‛சிகரெட் பிடிக்கக் கூடாது’ என்பது விதிமுறை. ஆனால், இங்கு தெருவுக்குத் தெரு பெட்டிக்கடைகளும், சிகரெட்டை வாங்கி ஊதித் தள்ளுபவர்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ‛18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குப் புகையிலைப் பொருள்களை விற்கக் கூடாது!’ இது ஒரு விதிமுறை. ஆனால், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் ஒதுக்குப்புறமாய் புகைப்பிடிப்பதை அதிகளவில் இன்று நம்மால் பார்க்கமுடிகிறது. நாகரிகம், விழா, விசேஷங்களின் போதான கொண்டாட்டம்… எனக் கலாசாரத்துடன் ஆழமாக வேரூன்றிவிட்டது இது போன்ற ஒருவித போதைப் பழக்கம். திருமணத்தின் போது மாப்பிள்ளையிடமே, `மச்சி… எப்போ, எங்கே பார்ட்டி?’ என்பது சர்வ சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்வியாகிவிட்டது. இதுபோன்ற காரணங்கள்தாம் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகமாகவும் பரவலாகவும் காரணம்.

 

இப்போது இன்னும் ஒருபடி மேலே சென்று ஆணுக்கு பெண் நிகரில்லை என்பதை இதில் தான் நிரூபிக்க முடியும் என்பது போன்றதொரு மாயை உருவாக்கி பலரை மூளைச்சலவை செய்கின்றனர். 

 

சரி இதெல்லாம் பழக்கப்படுத்திக் கொண்ட பிறகு… அது தரும் சுகத்தில், களைப்பு நீங்கிய ஒருவித பரவசத்தில் லயித்துவிடுகிறார்கள். அந்த சுகத்திலிருந்து எளிதாக வெளியே வந்துவிட முடியாது. ஏனெனில் அந்த சுகம் அவர்களை நடப்பிலிருந்து துண்டித்து கற்பனை உலகிலேயே வைத்திருக்கும். அது வேறெதிலும் மனதை செலுத்தவிடுவதில்லை. தனி மனிதனின் வளர்ச்சியையும், அறிவையும் மழுங்கடித்து விடுகிறது. இவ்வனைத்தும் வேதிப்பொருள் செய்யும் லீலை. ஒருவர் சுகம் தரும் பொருளை உட்கொள்வதாலோ, உபயோகிப்பதாலோ மூளையின் சில ஹார்மோன்கள் தூண்டப்பட்டு அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகி ஒருவித சுகத்தை, ஆனந்தத்தை தருகிறது. இது இயற்கைக்கு முற்றிலும் மாறான செயல்.

 

இயற்கைக்கு மாறாக ஒன்று நடக்கிறதென்றால் அழிவு உறுதி.

 

இதில் அழிவு மனிதனின் நரம்பு மண்டலத்தில் இருந்து ஆரம்பமாகிறது. போதை பொருட்கள் மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலைக் குறைக்கச் செய்கின்றது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. நுரையீரல், வயிறு போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல் மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்றது. சித்த பிரம்மையை தூண்டிவிட்டு ஞாபக மறதியையும் கொண்டுவந்து விடுகிறது. இவையனைத்தும் போதைப்பொருள் பாவனையாளர்களின் உடல் ரீயான பாதிப்புக்கள் மட்டுமே… இவற்றைத் தவிர சமூக ரீதியான பாதிப்புக்கள் ஏராளம்… போதை ஏத்திக்கொண்டு என்ன செய்கிறோம் என்று புரியாமல் மனதின் வக்கிரத்தை தூண்டி பல சமுதாயக் கேடுகளை விளைவிக்கிறது.

 

இதை முறையாக கண்டறிந்து சிகிச்சை அளித்தால் இந்த அடிமைத்தனத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு விடலாம். ஒருவர் மீது சிறிது கவனம் செலுத்தினாலே போதும் போதைக்கு அடிமைய ஆனவர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். உடலளவிலும், புறத்தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் தென்படும். தன் சுயத்திலிருந்து மாறுபட்டு ஒரே சிந்தையை மட்டும் கொண்டோ, தனிமைக்கு அடிமையாகியோ, எப்போதும் ஒருவித பதப்பதப்புடன் காணப்பட்டு யாரிடமும் பேசாது இருப்பதே இதன் முக்கிய அறிகுறி. 

 

நாளைய சமுதாயம் இதிலிருந்து விடுபட உங்கள் ஒவ்வொருவருடைய பங்கும் மிக அவசியம். பூதம் நம் கதவை தட்டும் வரை நமக்கென்ன என்றிருக்காமல் உங்களால் முடிந்தவரை உங்கள் சுற்றத்தை போதையற்றதாக மாற்றுங்கள்… 

 

பெருகிவரும் பழக்கத்தை, புழக்கத்தை சுய ஒழுக்கம் கொண்டு அரிதாக்குவது தான் இந்த நாளின் நோக்கம். அதற்கான ஊக்கத்தை, உழைப்பை நீங்கள் கொடுக்க வேண்டும்.” என்று பேசி முடிக்க மெல்லிய கைதட்டல் அறை முழுதும். பத்திரிகையாளர்கள் குறிப்பு எடுத்துக்கொள்ள மீதம் இருந்த சிலர் பேசவும் விழா நிறைவுபெற்றது.

 

வாக்கு கொடுத்தது போலவே நிகழ்ச்சி முடிந்ததும் இனியாவுடன் சேர்ந்து கொண்டான் அஜய். பேச்சை எப்படி துவங்குவது என்ற யோசனையில் இருவருமே உணவு அறைக்கு சென்று பஃபெட் முறையில் இருந்த இரவு உணவை அமைதியாக எடுத்துக்கொண்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர்.

 

“என் அழைப்பை ஏத்துக்கிட்டு வந்ததற்கு தேங்க்ஸ் இனியா.” என்று அஜய் பேச்சை துவங்க,

 

“இதிலென்ன இருக்கு? நிறைய விஷயங்கள் சொன்னீங்க… இதுமாதிரி நிகழ்ச்சிகளை நாமே தேடி சென்று பார்ப்பதில்லை… அதனால் தான் இதுபற்றிய போதிய விழிப்புணர்வு பலரிடம் இல்லை. படித்து பதவியில் இருப்பவர்களுக்கு கூட இதுபற்றிய பெரிய விபரங்கள் தெரிவதில்லை என்னையும் சேர்த்து.” என்று இனியா மெலிதாய் புன்னகைக்க,

 

“அதுவும் சரிதான். என்னிடம் வருபவர்கள் பலரும் படித்த மேல்தட்டு வர்க்கத்தினரே… ரூரல் ஏரியாவில் இருப்பவர்களுக்கு இதை எளிதாக கண்டறிய முடிவதில்லை, கண்டறிந்தாலும் சிகிச்சையினால் குணப்படுத்த முடியும் என்பதில் பெரிதாக நம்பிக்கை இல்லை, நம்பினாலும் போதை பழக்கத்தில் இருப்பவர்கள் ஒத்துழைப்பதில்லை, அதிலிருந்து விடுபடவும் விரும்பவில்லை… அதோடு மேடையில் ஒன்றை சொல்லத் தவறிவிட்டேன்…” என்று நிறுத்தியவன் பின் குழைவான குரலில் சன்னத்தை கூட்டி, 

 

“நான் சொன்ன போதை பொருட்கள் மட்டும் ஒருவரை பித்தனாக்குவதில்லை… 

 

காதலும் ஒருவரை பித்தனாக்கும்… ஏனெனில்,

 

காதலும் ஒருவித போதைதான்…” 

 

*^*^*

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!