Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெந்து தணிந்தது காதல்!

அத்தியாயம் – 8

கடல் காற்று மெல்ல கேசம் கலைக்க, அவளது அறையின் பால்கனியில் நின்றிருந்த ஷிவ்வோ, கையில் வைத்திருந்த காபியை ஒரு மிடறு அருந்தியபடி அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“நீ என் கண்ணுல பார்த்தது உண்மை தான்!” என்கவும் பெண்ணவளின் விழிகளிலோ பளிச்சிடல்!

கூடவே சேர்ந்து கொண்ட சிறு குறும்புடன்..

“அப்பறம் ஏன் சார் என்னை யாருன்னே தெரியாத மாதிரி நடிச்சீங்களாம்? அதையும் விட, என்னை காப்பாத்துனதுக்காக உங்களுக்கு இந்த க்ரூஸ் டிக்கெட் ஆஃபர் செய்தா, அதையும் அவ்வளவு பிகு பண்ணி வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ என் முன்னாடி வந்து நிக்கறீங்க?



Advertisement

உங்களுக்கு என்னைத் தெரியும் தானே?

என் பாட்டு பிடிக்கும் தானே?” என்றாள் குரலில் குழந்தையின் குதூகலத்துடன்!

தலை குனிந்து கடலைப் பார்த்தான் ஷிவ்.

Advertisement

கப்பலுக்குக் கீழே நுரையுடன் பொங்கி கொண்டிருந்தது கடல்.. மெல்ல அசைந்து அசைந்து கப்பலும் கிளம்பத் தயாரானது.

Advertisement

கப்பலின் அசைவு துவங்கியதும் மீண்டும் நிமிர்ந்து அவளை நேர பார்த்தவன்,

“உன்னை நான் முதன் முதல்ல பார்த்தது, நீ முதன்முதலா “எட்டர்னல் ஃபிளேம்ஸ்” பாடினப்போ.” என்று கூற, நவிராவின் விழிகள் விரிந்தன!

“கிட்டத்தட்ட உன்னை ஒரு மாசமா தான் தெரியும். முதல்ல உன் பாட்டுக்காகத் தான் உன்னைப் பிடிச்சுது..

Advertisement

ஆனா உன் குரல் மட்டும் எனக்குப் போதல..” என்ற பொழுதில் அவளது கண்களை ஊடுருவினான் ஷிவ்.

“எஸ்.. நான் உன்ன மத்தவங்க மாதிரி ரசிக்கலைன்னு புரிஞ்சுது..

அதுக்காக நீ ரெகுலரா வர ரெஸ்டாரண்ட்டுக்கு உன்னைப் பார்க்கவே சர்வரா வந்தேன்.

உனக்கு மட்டுமே சர்வரா இருக்க வந்தேன்..” என்று அவன் நிறுத்திய போது, நவிராவோ அதிர்ந்த குரலில்..

“சர்வரா நடிச்சீங்க..” என்று அவனைத் திருத்தினாள்.

அதை அலட்சியமாகவே ஏற்றவன், லேசாக தோளைக் குலுக்கிவிட்டு.. “ஹ்ம்ம்.. அப்படியும் சொல்லலாம்..” என்று மேலும் தொடர்ந்தான்.

“ஆனா அப்போ நடந்த அசம்பாவிதம் யாருமே எதிர்பார்க்காதது.

நீ என்கிட்ட கேட்ட இல்ல?

உன் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா நான் இப்படி என் உயிரையும் மதிக்காம உன்னைக் காப்பாத்தி இருப்பனான்னு?

நிச்சயம் காப்பாத்தி இருந்திருப்பேன்.. ஆனா, வேற எந்த பொண்ணுக்காகவும் இப்படி சர்வரா நடிச்சிருக்க மாட்டேன்..

அது கீழான வேலைனு சொல்ல வரல..

எந்த பொண்ணுக்காகவும் நான் இவ்வளவு மெனக்கெட்டிருக்க மாட்டேன்..

இந்த மெனக்கெடல் உனக்கே உனக்காக மட்டுமே..

அந்த ரெஸ்டாரண்ட் என் பிரெண்டோடது தான். அவன்கிட்ட இப்படி நான் சர்வரா நடிக்கணும்னு கேட்டப்போ என்னைப் பார்த்துக் கேவலமா சிரிச்சான்.. அதுக்காக நான் வருத்தப்படல. இப்பவும் சந்தோசமா தான் இருக்கு!” என்றவன் உதட்டைக் கடித்து சற்று சிரித்தபடி மேலும் தொடர்ந்தான்.

“ஆனா, வேற எந்தப் பொண்ணுக்காகவும் இப்படி இன்னொருத்தன் கிண்டல் செய்யறதை சகிச்சிட்டு இருந்துருக்க மாட்டேன்..

அது, உனக்காக செய்தது தான்!” என்று கூறி ஷிவ் அவளைப் பார்க்க, நவிராவின் முகத்தில் இன்னமும் பிரம்மிப்புடன் கூடிய விலகாத அதிர்ச்சி.

அவளது முகத்தைப் பார்த்து மென்மையாக சிரித்தவன்..

“இப்ப இங்க வந்ததும் உனக்காக மட்டும் தான்..” என்று கூறிவிட்டு,

“தேங்க்ஸ் ஃபார் த காஃபி!” என்று கூறியபடி கப்பை உயர்த்திக் காண்பித்துவிட்டு அவன் வெளியேற, இங்கு நவிராவுக்குத் தான் ஒன்றும் புரியவில்லை.

அவளுக்கு இது போன்ற ப்ரோபோசல்கள் ஒன்றும் புதிதல்ல.. எந்தவொரு பெண்ணுக்கும் ப்ரோபோசல்கள் புதிதல்ல தானே?

அதிலும் அவளை போல பேர், புகழ், அழகு என்று இருப்பவளுக்கு அது ஒன்றும் கிளர்ச்சியூட்டும் விசயமுமல்ல.. பெரும்பாலான நேரங்களில் எரிச்சலூட்டும் விஷயமே!

அவளை பொறுத்தவரையில், இது போன்ற ப்ரபோசல்கள் சில நேரங்களில் ஒரு பிசினஸ் பேச்சு வார்த்தையாக இருக்கும்.

ஆனால்.. இவன்?

எதையுமே யோசிக்கவில்லையே? அவளிடம் யாசிக்கவும் இல்லை!

எத்தனை நிமிர்வுடன் கண்ணைப் பார்த்து காதல் பகிர்ந்திருக்கிறான்? என்று அவள் யோசிக்கயிலேயே.. “வெயிட்.. வாட்?” என்று அதிர்ந்தாள்!

“அவன் லவ் ப்ரொபசலா செய்தான்?” என்று வாய்விட்டே கேட்டவளுக்கு உள்ளுக்குள் குழம்பியது!

“இல்லையே.. இங்க.. ‘ஐ லவ் யு’ன்னு அவன் எங்கேயுமே சொல்லலியே..

எனக்காக மட்டுமே சர்வரா வேலை செய்ததா சொன்னான்.. எனக்காக மட்டுமே இங்க வந்ததா சொன்னான்? அப்போ அதுக்கு பேர் என்ன?” என்று புலம்பியவள்..

“ஹேய் இடியட்.. சொல்ல வந்தத தெளிவா சொல்லிட்டு போயிருக்க வேண்டியது தானே டா?” என்று சிணுங்கினாள்.

தன் அறையில் அமர்ந்து இரவு வெல்கம் பார்ட்டிகாகத் தயாராகிக் கொண்டிருந்தான் ஷிவ்.

மனசுக்குள் பூத்த புது மழையின் பொன் சாரலுடன் கிளம்பிக் கொண்டிருந்தான் அவன்.

வாழ்க்கையில் இதுவரைக்கும் எதைக் கண்டுமே பயம் கொண்டதில்லை அவன். அவன் மனத்தால் நினைத்ததெல்லாம் அடுத்த கணமே அவன் கரங்களில் தவழ்ந்து விடும்.

இப்பொழுதும் அதே மிதப்பில் தான் இருந்தான் ஷிவ்.

அவளது பணம், பெரிதாகத் தெரியவில்லை!

அவளது புகழ், பெரிதாகத் தெரியவில்லை!

அவள் இருக்கும் நிலை, பெரிதாகத் தெரியவே இல்லை அவனுக்கு!

அவனும், அவளும் இணைந்திருப்பதே முழுமை! அது தான் முழுமை என்று அவன் உணர்ந்துவிட்டான்!

இனி விரைவிலேயே அவளும் உணர்ந்துவிடுவாள் என்பதும் அவனுக்கு நிச்சயம்!

அந்த நிச்சயத்திலே தான் அவன் அத்தனை சந்தோசமாக இருந்தது.

சாம்பல் நிற சாட்டின் சட்டையும், கருப்பு நிற பாண்ட் மற்றும் கோட்டுடன் கிளம்பியவன், பளபளக்கும் சிகையை ஒற்றைக் கையால் கலைத்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

ஆனால் அறைக்குள் தன் கையில் இருந்த லைலாக் வண்ண உடையை வெறித்துப் பார்த்திருந்தாள் நவிரா.

ஒவ்வொரு முறையும் பிறர் தன்னிடம் காதல் உரைக்கையில் வெடித்துச் சிரித்திருக்கிறாள்!

கீழ் உதடு ஏளனமாய் வளைய, அவர்களை அத்தனை உதாசீனப்படுத்தியிருக்கிறாள்!

சில நேரங்களில் கண்களில் கனல் தெறிக்கப் பார்த்திருக்கிறாள்!

பெரும் பலம் பொருந்தியவரிடம் கூட, கைகளைக் கட்டிக் கொண்டு கீழ்க்கண்ணால் பார்த்து எதிரில் நின்றவனை தரைக்குள்ளேயே புதைய வைத்திருக்கிறாள்!

ஆனால் என்றுமே இப்படிச் சிலிர்த்துப் போய் சிவந்ததில்லை!

மனமெல்லாம் தடதடத்து, இத்தனையாய்.. இனிதினிதாய் படபடக்க வைத்ததில்லை!

இப்படிச் சர்க்கரையாய் இனித்ததுமில்லை!

உணர்வறியாத மோன நிலையில் தயாராகி வந்தாள் பெண்ணவள்!

மேடைக்குப் பின்புறமிருந்து அறையை விட்டு வெளியேறி, மேடைக்கு வந்தவளை பார்த்த மொத்தக் கூட்டமும் பிரம்மித்துப் போய் இருந்தது!

அந்த பிரமிப்பு, அவளது அழகிலா? அவள் மேனியெங்கும் மிளிரும் செழுமையிலா?

அல்லது அவள் குரலின் இனிமையை உணரப்போகும் பரவசத்திலா?

எல்லாமுமாக ஒன்றாய் சேர்ந்து மக்கள் அவளை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்திருக்க, நவிராவின் விழிகளோ ஒருவனைத் தான் தேடின!

மேடையேறி நின்றிருந்தவள் கூட்டத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்தாள்.

முன்னே இருந்த மக்கள் அனைவரும் அத்தனை வசதி படைத்தவர்கள்! பெரும் தொழிலதிபர்கள்!

அத்தனை பேரும் இவளது வாய்மொழி திறந்து பேசும் ஒற்றை வார்த்தைக்காக தவமிருந்தார்கள்!

எப்பொழுதுமே தன் முன்பாக இப்படிப் பரவசத்துடன், தெய்வ தரிசனத்துக்காக ஏங்கி நிற்பது போல், தேங்கி நிற்கும் கூட்டத்தைக் கண்டு மனமெங்கும் ஒரு கர்வம் மேலோங்கும் நவிராவுக்கு!

இத்தனைக் கூட்டத்தையும் தன் குரலால் கட்டுப்படுத்துகிறோம் என்ற செருக்கு அவளுக்கு என்றுமே உண்டு!

ஆனால் இன்று.. அந்தப் பரவசமோ, செருக்கோ, கர்வமோ எதுவுமே தோன்றவில்லை அவளுக்கு!

அவளது மனம் அவன் ஒருவனைத் தேடி, படபடத்து சிறகடித்துக் கிடந்தது!

சுற்றி வந்த விழிகள் ஓரிடத்தில் நிலை பெற்றன!

அந்த அரங்கின் கதவைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தான் அவன் – அவளவன்!

அவளதாய்.. அவளுடையதாய் ஆன ஆணவன்!

அதுவரை அன்றைய நாளுக்காய் அவள் தயாரித்து, தயாராகிய பாடல் வேறு.

ஆனால் அவனை அந்த அரங்கினுள் கண்டதுமே அவளுக்குள் ஏதோ ஒன்று பொங்கிப் பிரவகித்தது!

அந்த உணர்வை விழி மூடி அப்படியே அவள் உள்வாங்கி, தனது குழுவினருக்கு சைகை செய்தாள்.

அவளது சைகையில், அவளது அந்தப் பாடலுக்கு பின்னணி இசை எதுவும் வாசிக்கத் தேவையில்லை என்று உணர்ந்த அவர்கள் அமைதியானார்கள்!

மொத்த மக்கள் கூட்டமும் அமைதியானது!

ஆழ்கடலை நோக்கித் தன் பயணத்தை தொடர்ந்த அந்தக் கப்பலின் ஓசையும், அந்தக் கப்பலின் காலடியைத் தழுவிச் செல்லும் கடலின் இரைச்சலும் கூட அந்த அரங்கினுள் நுழையாது அமைதி காத்தது!
இது எதையுமே யோசிக்கவில்லை நவிரா!

விழி திறவாதே தன் மனதுக்குள் ஊற்றெடுத்த உணர்வுகளுக்கு அப்படியே வார்த்தை வடிவம் கொடுத்தாள் அவள்!

Beneath a sea of endless blue,
You knelt, a vow both wild and true.
The wind, a tender symphony,
Wrapped ’round your words and carried me.

The waves, they sighed with soft delight,
As stars leaned in to greet the night.
Your voice, like currents, strong and deep,
Awoke my heart from guarded sleep.

The ocean sang of boundless grace,
While moonlight kissed your rugged face.
A man of strength, a storm in calm,
Your love, a shelter, soft as balm.

Yet here I stand, unsure, afraid,
In waters deep, where dreams are made.
This joy, this fear, they intertwine,
Am I to drown, or call you mine?

The breeze weaves whispers through my hair,
It smells of salt, of truth, of dare.
You wait, unmoving, sure and free,
A lighthouse shining just for me.

Eternal tides that never cease,
Our love’s a flame that finds its peace.
In sea and wind, our hearts ignite,
Bound forever by this star-kissed night

அவள் பாடி முடித்து கண்களை மெதுவாய் திறக்க, சுற்றி இருந்த கூட்டம் மொத்தமும் உறைந்து போய் ஒரு கணம் பார்த்திருந்து. ஆனால் அடுத்த கணமே அவர்களது கரகோஷம் விண்ணைப் பிளந்தது!

அதையெல்லாம் சற்று மகிழ்வுடன் பார்த்தாலும், நவிராவின் விழிகள் ஷிவ்வைத் தான் தேடின.

அவனோ அப்படியே சிலையாய் வீற்றிருந்தான்.

அவனால் இப்படி அவள் உடனே தனது மனதை இவ்வளவு வெளிப்படையாக உணர்த்தியதை நம்ப முடியவில்லை.

அதே சமயம் அவளது மனதின் குழப்பங்களும், அவளின் தயக்கமும் புரிந்தது.

அது புரிந்ததாலேயே அலைப்புறுதலாய் தன்னைப் பார்த்தவளின் விழிகளைத் தன் விழிகளால் ஏந்தியவன், இதழில் சிறு முறுவலோடு அவளை பார்க்க, அதுவே அவளுக்குப் போதுமானதாய் இருந்தது.

அவன் உதட்டின் முறுவல், அவன் தன் உணர்வுகளை புரிந்துகொண்டதில் வந்த ஆறுதல்!..

அத்தனையும் சேர்ந்ததில், அவளது மணிக்கண்ணில் வெள்ளித் திரளாய் நீர் மணி!

விருந்தெல்லாம் முடிந்து அனைவரும் கூடடங்கிய நேரம், அவளும் – அவளுக்காய் அவனும் மட்டுமே கப்பலின் மேல் அடுக்கில் தலை கோதும் காற்றை ஸ்பரிசித்து நின்றிருந்தனர்.

இன்னமும் அவளது இடது விழியின் ஓரத்தில் நின்றிருந்தது வெள்ளி மணி!

அதை ஷிவ் கவனித்தாலும் அவளே பேசட்டும் என்று அமைதியாய் அவளது முகம் பார்த்து நின்றிருந்தான் அவன்.

“நீங்க என்கிட்டே என் ரூம்ல என்ன சொல்லிட்டு போனீங்க ஷிவ்?” என்று அவள் வினவ, அவனுக்கு சிரிப்பு வந்தது.

அவன் அறைக்குள் பகிர்ந்த ரகசியத்துக்கு அம்பலத்தில் பதில் உரைத்துவிட்டு இப்பொழுது வந்து விளக்கம் கேட்கிறாளா? என்று சிரிப்பாய் இருந்தது ஷிவ்வுக்கு.

பாக்கெட்டில் கைகளை நுழைத்துக்கொண்டு அவளையே அசையாது பார்த்தவன், “நீ எதை நினைச்சு இப்போ பாடினியோ, அதைத் தான் நான் சொன்னேன்..” என்று அவன் கூற சட்டென..

“நான் எதை நினைச்சு பாடினேனாம்? நானெல்லாம் எதையும் நினைச்சு பாடல.. சாதாரணமா தான் பாடினேன்..” என்று முகம் திருப்பி நின்றுகொண்டாள் பெண்ணவள்.

அந்த பாவனையில் அவளை அள்ளிக் கொண்டு கொஞ்சத் தோன்றியது ஷிவ்வுக்கு.

ஒற்றைக் கை பாக்கெட்டில் இருக்க, மறுகையால் தலையைக் கோதியபடி வேறு புறம் பார்த்தவன், மெல்ல நடந்து அவளருகே சென்றான்.

அவள் குனிந்திருந்த முகத்தை பார்க்க, தானும் சற்று குனிந்தவன்..

“சரி.. நானே சொல்லிடறேன்.. எஸ், ஐ லவ் யூ..

உன்னைப் பார்த்ததிலிருந்து.. உன் குரலை நான் கேட்டதிலிருந்து.. இப்ப வரைக்கும்.. ஹம்ம்ஹும்.. இனி நான் வாழும் காலத்துக்கெல்லாம் உன்னைக் காதலிச்சுட்டே இருப்பேன்..

உன்னைப் பார்த்த அந்த முதல் நொடில இருந்து இந்தக் காதல் இன்னுமின்னும் அசுரத்தனமா வளர்ந்துட்டே போகுது..” என்று அவன் கூற அவனை நிமிர்ந்து பார்த்தவளது விழிகளில் அத்தனை மகிழ்வு.. அத்தனைக்கும் மேலே ஆசுவாச நிம்மதி! ஆழ்மன பூரிப்புப் பூச்சிதறல்!

மகிழ்ச்சியின் கணம் தாங்காது அவள் கால் மடக்கி அப்படியே கீழே அமர்ந்துவிட, தானும் அவளருகே அமர்ந்தவன், ஒற்றைக் கையால் அவளை மெல்ல அணைத்து அவளது முன் நெற்றி உச்சியில் முத்தம் பதித்தான்!

வாழ்க்கையின் முழு முழுமைக்கும் தித்திக்கும் என்றெண்ணிய அந்த முத்தத்தின் ஈரம், இப்பொழுது தொண்டைக்குள் சிக்கிய ஆலகாலமாய் திரண்டது!

பழைய நிகழ்வுகளிலிருந்து உணர்வு மீண்டவனது விழிகள் உவர்நீரை மெல்லத் திரட்ட, அதில் தன் மீதே எரிச்சலுற்றவனாகி தொண்டை வலிக்க.. அந்த வீடே அதிரக் கத்தினான்.

மறுபுறத்திலோ நவிரா மறுத்தும் கேட்காமல் அவளைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டிருந்தான் சூர்ய வர்மன்!

நவிராவுக்கோ இவன் முன்பாகத் தானும், ஷிவ்வும் ஒரே இடத்தில் நின்றது மனதை பிசைந்தது.

அதை விட.. அந்த ஷிவ், என்ன தைரியமிருந்தால் இன்னமும் தன்னை அப்படி முத்தமிடுவான்?

அதற்கு கொஞ்சமும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்த தன்னை நினைத்து அவளுக்கே அருவருப்பாக இருந்தது.

“ச்சே..” என்றபடி தன்னையும் அறியாது தன்னிதழ்களைப் புறங்கையால் அவள் துடைக்க, அதைப் பார்த்துவிட்ட சூர்யவர்மனோ மெல்லத் தொண்டையைக் கனைத்தான்.

அந்த சத்தத்தில் நவிரா அவனை நிமிர்ந்து பார்க்க..

“ஒரே ஒரு கேள்வி இருக்கு எனக்கு!” என்றான் நேரடியாக, சற்றுக் கூர்மையான பார்வையுடன்.

அவளது முகத்தைப் பார்த்து இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடலாம் தான். ஆனால் அப்படி விட்டுவிட்டால் அது சூர்ய வர்மன் இல்லையே?

அவனுக்கு அவனது உணர்வுகளை விட.. தன் உணர்வுகளை ஆட்டிப் படைக்கும் அவளை விட, கட்சி முக்கியமாயிற்றே!

அதனால் அவளிடம் பேசியே தீருவதென்று முடிவெடுத்தவன், தெரிந்தே அவளது இதயத்தைக் கீற நினைத்தான்.

“உங்களுக்கு ஆபத்துன்னு உங்க கட்சிக்காரனான எனக்குத் தெரிய வரதுக்கு முன்னாடியே எப்படி மேடம் உங்க எதிரிக்குத் தெரிஞ்சுது?” என்று கேட்கவும் நவிராவின் கோபம் எல்லையைக் கடந்தது!

“ஸ்டாப் த கார்!..” என்று ஒரே கர்ஜ்ஜனை!

அடுத்த கணம் அந்த கார் கீரிச்சிட்டு நின்றுவிட, நவிரா வண்டியை வீட்டுக் கீழிறங்கினாள்.

அதைப் பார்த்து, அவசரமாகத் தானும் பின்னே இறங்கினான் சூர்யவர்மன்!

“இப்போ என்ன கேட்டுட்டேன்னு உங்களுக்குக் கோபம் வருது மேடம்?” என்று அவனது கேள்விக்கு அவனைத் தீயாய் முறைத்தவள்,

“என்னைக் கேள்வி கேட்கற உரிமை, உங்களுக்கு மட்டுமில்ல.. இங்க யாருக்கும் கிடையாது!” என்று சீறினாள்.

ஆனால் சூர்யாவோ விடுவதாய் இல்லை.

“அதெப்படி மேடம் அப்படியே விடமுடியும்? இது உங்களை மட்டும் சம்மந்தப்பட்ட விஷயம் கிடையாதே?

உங்களோட ஒவ்வொரு நடவடிக்கையும், கட்சியையும் பாதிக்குமே!

இப்போ நீங்களும், அந்த ஷிவ்வும் ஒரே இடத்துல இருந்ததை மீடியா பீப்பிள் பார்த்திருந்தா அவங்க உங்களை மட்டுமா தப்பா பேசுவாங்க?

உங்களால கட்சியைத் தானே தப்பா பேசுவாங்க?

அதுவும்.. நீங்க ஒரு பொண்ணு, பழைய காதலனைப் பார்த்ததும் மறுபடியும் காதல் துளிர்விட, அவர்கிட்ட நீங்க மயங்கிட்டீங்கன்னு பேசினா, கட்சியோட மதிப்பு என்ன ஆகறது?” என்று அவன் கேட்டதிலிருந்து உண்மை சுட, “ஏய்..” என்று கத்திவிட்டாள் நவிரா.

அதில் சூர்ய வர்மன் விதிர்த்துப் பார்க்கையிலே, “ஆஆஆஆ… அம்மா..” என்ற கூவலுடன் அவள் மயங்கிச் சரிய, அருகிலிருந்த ஜான்சியோ..

“அய்யயோ.. நவிம்மா.. நவிம்மா..” என்று பதறியபடி, சூர்யவர்மனிடம் திரும்பி..

“பெரிய பிரச்சனை..” என்று கூற, சூர்ய வர்மனுக்கோ நெஞ்சம் அதிர்ந்துவிட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!