வெந்து தணிந்தது காதல் – 9
அன்றொரு நாள்,
பால்நிலவின் பொன்னொளியில்
சேர்ந்த நம் கரங்கள்..
நிலவடங்கிய பேரிருளில்
Advertisement
பிரிந்துவிட்ட மாயம் அறிவாயோ?
மீண்டும் சிந்திப்போம்
என்ற நம்பிக்கையில்லை என்னிடம்..
Advertisement
நான் வெறுக்கும் என் காதல்,
Advertisement
சேருமோ உன்னிடம்?
தாபத்தில் தகித்து..
மோகத்தில் வெடித்து..
Advertisement
தாகம் தீர்த்த நம் காதல்..
இன்று வெஞ்சினத்தில்,
வெந்து தான் தணியுமோ?
கீழே மயங்கிச் சரிந்தவளை அவசர அவசரமாக காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான் சூர்யவர்மன்.
நகரின் ஒரு பெரிய மருத்துவமனைக்கு அவளை அழைத்துச் செல்ல முனைந்தவனை, தடுத்தார் ஜான்சி.
“வேண்டாம் சார். நேரா மேடமோட வீட்டுக்கு போங்க.” என்று யாரிடமோ போனில் பேசியபடி அவர் கூற, அவரைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன்,
“பெரிய பிரச்சனைன்னு சொன்னீங்க? இப்போ ஹாஸ்பிடலுக்கு போகாம வீட்டுக்குப் போக சொல்லறீங்க?” என்று அவன் பதட்டத்துடன் கேட்க, ஜான்சியோ உறுதியாக..
“இல்ல சார்.. நீங்க வீட்டுக்கே போங்க. அங்க மேடமோட ட்ரீட்மெண்ட்டுக்கு எல்லாம் தயாரா இருக்கு.” என்று கூறினார்.
அதைக்கேட்டு உள்ளுக்குள் குழம்பினாலும், நவிராவின் வீட்டுக்கே காரை ஓட்டினான் சூர்யவர்மன்.
அங்கே வீட்டின் வாசலில் நவிராவுக்காக ஸ்ட்ரெட்ச்சர் தயாராக இருந்தது.
காரிலிருந்து தானே அவளைத் தூக்கி அவசரமாக அவளை அதில் கிடத்தியவனை, மாடி பால்கனியிலிருந்து பார்த்தார்கள் தயாளனும், ப்ரணவும்.
தயாளன் அவர்களைக் கண்டு ஒவ்வாத பாவனையில் புருவம் சுளிக்க, ப்ரணவுக்கோ நவிராவைப் பார்த்து பயமாய் இருந்தது.
நவிராவின் அறையிலேயே சில மருத்துவ மெஷின்களும், அவளுக்கு சிகிச்சைக்குத் தேவையான பொருட்களும் இருக்க, படுக்கையில் அவளைக் கிடத்திவிட்டு வெளியே வந்தான் சூர்யவர்மன்.
என்னவாகிற்று அவளுக்கு? யாரிடம் அவளைப் பற்றிக் கேட்பது? என்று எதுவுமே புரியவில்லை.
ஆனாலும் அவளைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும் என்ற எண்ணம், ஆவலோ.. அக்கறையோ.. அவனையும் அறியாது உள்ளுக்குள் வெடிக்க, நடந்தான் தயாளனின் அறையை நோக்கி.
முன் அனுமதியில்லாமல் அவரை சூர்யவர்மன் சந்தித்ததே இல்லை தான். ஆனால் அது போன்ற விதிகளெல்லாம் அவனிடத்தில் செல்லுபடியாகுமா என்ன?
நேராக அவரது அறைக்கதவைத் தட்ட, அவரது மனைவி தான் வந்து கதவைத் திறந்தார்.
“ஐயாகிட்ட கொஞ்சம் பேசணும்மா..” என்று அவன் கூறியதும் அறையை விட்டு வெளியே வந்து விட்டார் அவர்.
உள்ளே சென்று கதவடைத்து அவன் நிற்க, அவனை வெறுப்பாய் பார்த்தார் தயாளன்.
“என்ன? அவ செத்துட்டாளா?” என்று எகத்தாளமாக வெளிப்பட்டது அவரது குரல்.
அதில் உள்ளுக்குள் கோபம் மூண்டாலும், அதை முயன்று அடக்கிக் கொண்டவன்..
“அவங்களுக்கு ஹெல்த்ல என்ன பிரச்சனை?” என்றான் நேராக விஷயத்துக்குள் நுழைந்து.
அதில் அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தவர், “அந்த மேனா மினுக்கி உன்னையும் மயக்கிட்டா போல?” என்று அசிங்கமாக ஒரு பார்வை பார்த்தார்.
அதில் மெல்ல அவரருகே சென்றவன், அறைக்குள்ளிருந்த சோபாவில் அமர்ந்தவரின் முகத்துக்கு நேராகக் குனிந்து..
“உங்க வாய்ல இருந்து இனி ஒரு அசிங்கமான வார்த்தை வந்தாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.
எனக்கு வேண்டியது, கேட்ட கேள்விக்கு பதில்!” என்று கூற, பயத்தில் மிடறு விழுங்கினார் தயாளன்.
அவன் நிமிர்ந்ததும் முகத்தை கோபத்துடன் வேறு புறம் திருப்பிக் கொண்டவர்,
“அபார்ஷன்!
அந்த ஷிவ் கூட சேர்ந்து கூத்தடிச்சதுல குழந்தை உருவாகிடுச்சு.. அது ரொம்ப லேட்டா தான் அவளுக்கு தெரிய வந்திருக்கு. அதுக்கப்பறம் அபார்ட் செய்ததால அவ உடம்பு ரொம்ப மோசமாகிடுச்சு. அதான் பிரச்சனை.” என்று காட்டமாகக் கூறினார்.
அதை நம்பாது அவன் பார்த்த பார்வையில்..
“எனக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான், இதுக்கு மேல உனக்கு விவரம் தெரியணும்னா நீ அவளையே போய் கேட்டுக்கோ..” என்று கூற, மாறாத பார்வையுடன் அவரை உறுத்தவன்..
“அப்போ நியூஸ்ல வெளியான செய்தி?” என்று கேட்க, அதற்கும் திரும்பிய முகத்துடன்..
“அவ மேல பரிதாபம் வரதுக்காக உருவாக்கப்பட்டது.” என்று கூற பட்டென எழுந்துவிட்டான் சூர்யவர்மன்.
‘கிளம்புகிறேன்..’ என்று கூட கூறாது கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றுவிட்டவனை வெறித்துப் பார்த்தார் தயாளன்.
அவன் வெளியே வருவதற்கும், ப்ரணவ் தன் அறைக்கதவைத் திறந்து கொண்டு வருவதற்கும் சரியாய் இருந்தது.
அவனை நிமிர்ந்து பார்த்தவன், அவன் முகத்தில் இவனிடம் பேச விளைவது போல பாவனை தோன்ற, ஒரு கணம் நின்று..
“என்ன?” என்று கேட்டான்.
“எ.. என்னாச்சு அவங்களுக்கு?” என்றான் ப்ரணவ், தயங்கியபடியே.
ஒருமுறை அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தவன், “இன்னும் சாகல..” என்று வெறுப்பாய் மொழிந்துவிட்டுப் போனான்.
தயாளன் அறையிலிருந்து வெளியே வந்த சூர்யவர்மன், நேரே மீண்டும் நவிராவின் அறைக்கு தான் சென்றான்.
அப்பொழுது தான் அவளுக்கு ஜூஸ் கொடுப்பதற்காகப் பணிப்பெண் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைய, அவள் பின்னே உள்ளே சென்றான் சூர்யா.
அங்கே.. எங்கோ வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள் நவிரா.
அந்தப் பார்வையில் மனம் பிசைந்தது சூர்யவர்மனுக்கு.
அவன் உள்ளே வரக் கண்ட மருத்துவரும், ஜான்சியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஜான்சி, தான் பார்த்துக் கொள்வதாய் விழிகளிலேயே கூறிவிட்டு சூர்யவர்மனிடம் சென்றார்.
“என்ன?” என்ற கேள்வியுடன் அவர், அவனைப் பார்க்க, நவிராவிடமிருந்து பார்வையை ஜான்சியிடம் திருப்பினான் அவன்.
“எப்படி இருக்காங்க?” என்று அவன் கேட்க,
“இப்போ ஓகே! நல்லவேளை.. இன்டெர்னல் ப்ளீடிங் இல்ல.. ஸ்டிட்ச்செஸ் தான் பெயின் ஆகி இருக்கு.” என்றார் இறுகிய குரலில்.
“நான் பேசலாமா?” என்றான் அனுமதி கேட்கும் பாவனையில்.
அதற்கு திரும்பி நவிராவைப் பார்த்த ஜான்சியோ, இன்னமும் அவள் பார்வை சூனியத்தையே வெறித்திருக்கக் காணவும், வருத்தத்துடன் தலையசைத்தபடி..
“கிவ் இட் எ ட்ரை..” என்று கூறிவிட்டு, மருத்துவரையும், உதவிப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.
நேரே சென்று நவிராவின் படுக்கைக்கு அருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கண்டு அமர்ந்தான் சூர்யவர்மன்.
அப்பொழுதும் நவிராவின் பார்வை இவனிடம் திரும்பவில்லை.
“மேடம்..” என்றான் குரலைச் செறுமியபடி.
லேசாக கருவிழிகள் மட்டும் இவனைப் பார்த்துத் திரும்ப, வேறெந்த சலனமுமில்லை அவளிடம்.
“ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி..” என்கவும், இப்பொழுது அவனது கண்களை நேராய் பார்த்தபடி அவளிருக்க, வேறு வழியின்றி இருக்கையை விட்டு எழுந்து வெளியே போகப் போனான் அவன்.
“நில்லுங்க சூர்யவர்மன்!” என்ற நவிராவின் சோர்வான குரல் அவனைத் தடுக்க, திரும்பினான் அவன்.
“வாங்க, வந்து உட்காருங்க!” என்று அவள் அழைக்கவும், மீண்டும் அதே நாற்காலியில் வந்து அமர்ந்தவன்..
“நிஜமாவே இந்த மன்னிப்பு என் மனசுல இருந்து வந்தது.” என்றான் விளக்கமாக.
அதை ஆராய்ச்சியுடன் பார்த்தவள்,
“ஏன் இந்த புது ஞானோதயம்?” என்றாள் கேள்வியாக.
“இது புது ஞானோதயம் எல்லாம் கிடையாது.. நீங்க இந்தக் கட்சியோட தலைவர். உங்களைக் கேள்வி கேட்கற அதிகாரம் யாருக்கும் கிடையாது. என்னையும் சேர்த்து.
உங்க செய்கையால ஏதாவது ஆபத்து வந்துச்சுன்னா, அதை எப்படி சரி செய்யறதுன்னு உங்களுக்குத் தெரியும். அதுக்குத் துணை நிற்க வேண்டியது தான் என் கடமை.” என்றான் சமாதானமாக.
அதற்கு மறுப்பாய் தலையசைத்த நவிரா, ஒரு பெருமூச்சுடன்..
“என் மேல பரிதாபப்படறீங்களா சூர்யவர்மன்?
தலைமைல இருக்கறவங்க தப்பு செய்யறப்போ, அதுக்கு ஜால்றா போடறவங்க நிச்சயமா அந்தத் தலைமைக்கு நியாயம் செய்ய மாட்டாங்க.
எனக்கு என் குறைகளை சுட்டிக் காட்டறவங்க கூட வேணும் சூர்யவர்மன்.” என்றாள் அமைதியாகவே.
அதில் உள்ளுக்குள் சற்று நிம்மதி தான் அவனுக்கு. ஆனாலும் அவளது செயல்களில் எப்பொழுதுமே தவறு நேராது என்றும் உணர்ந்தே இருந்தவன்,
“இல்ல மேடம்.. உங்க செய்கைகள் என்னைக்கும், யாருக்கும் பாதிப்பைக் கொடுக்காது.. ஏன் இன்னைக்கு நடந்ததையே எடுத்துக்கோங்களேன்..
நான் அந்த இடத்துக்கு வரலைன்னாலும், நீங்க எந்தப் பிரச்சனையும் இல்லாம தான் வெளில வந்திருப்பீங்க..” என்று அவன் கூற, அதில் சற்று புன்னகை விரிந்தது நவிராவுக்கு.
“நான் எந்தப் பிரச்சனையும் இல்லாம வெளில வந்துருவேன்னு சொல்லறீங்களே.. அது எப்படி?
என் கூட இருந்தது அந்த.. அந்த ஷிவ்!
அவர்.. ப்ச்.. அவன் எதுவும் பிரச்சனை செய்திருக்க மாட்டானா?
வேணும்னே நம்ம பேரைக் கெடுக்கறதுக்காகவே..” என்றாள் கிண்டல் சிரிப்புடன்.
“ஹ்ம்ம்.. கண்டிப்பா செய்திருப்பான் மேடம். ஏன்னா, ஷிவ் அப்படிப்பட்டவன் தான். எனக்கு அவனைப் பத்தி நல்லாவே தெரியும்..
ஆனா.. உங்களையும் எனக்கு நல்லா தெரியும்.. நீங்க அதுக்கு இடம் கொடுத்திருக்க மாட்டீங்க..” என்று கூற.. நடந்த உண்மை சுட்டது நவிராவை!
ஒரு கணம் தலையைக் குனிந்த நவிராவோ..
“என்னை நம்பறதுக்கு ரொம்ப நன்றி சூர்யவர்மன்..” என்றாள் இன்னமும் நிமிராமேலேயே!
அதன் பிறகு சற்று நேரம் அந்த அறைக்குள் அமைதி நிலவியது.
அவள் எதையோ நினைத்து மொத்தமாய் கலங்கியிருக்கிறாள், உடைந்திருக்கிறாள் என்று மனதுக்கு ரொம்பவுமே தோன்றியது சூர்யவர்மனுக்கு.
அதனால் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக சாதாரணமாக்க முயன்றான் அவன்.
திடுமென, “என்னை நீங்க சூர்யான்னே கூப்பிடலாம் மேடம்!” என்றவனை ஓர் அலட்சியப் புன்னகையுடன் பார்த்தாள் நவிரா.
“நீங்க இப்படிப் பெருந்தன்மையா சொன்னதுக்காக நானும் நீங்க என்னை பேர் சொல்லிக் கூப்பிடலாம்னு சொல்லுவேன்னு நினைக்கறீங்களா சூர்யவர்மன்?!” என்று, அந்தப் “பெருந்தன்மையா”வில் ஒரு நக்கலைக் கலக்கவிட்டிருந்தாள் அவள்!
அந்த நக்கலைக் கவனித்து விட்டிருந்த சூர்யவர்மனோ, மெதுவாய் சிரித்துக் கொண்டு, “கவலைப்படாதீங்க மேடம், உங்க வட்டத்துக்குள்ள, உங்க அனுமதியில்லாம நான் நுழையமாட்டேன்” என்றான்.
“அப்போ உங்க வட்டத்தை விரிவாக்கி என்னை அதுக்குள்ள இழுத்துப்பீங்க.. சரியா?” என்று அவள் சட்டெனக் கேட்கவும், சூர்யவர்மனுக்கோ.. “அம்மாடியோவ்..”!!! என்று ஆச்சர்யமாய் இருந்தது.
“அறிவான பெண்கள்கிட்ட பேசறது, சுவார்ஸ்மானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட!” என்றான் சூர்யவர்மன் சிரித்துக் கொண்டே!.
அவனது சிரிப்பையே ஆழ்ந்து பார்த்தவள்.. “நீங்க நிஜமாவே என்னோட தலைமைய முழுமனசா ஏத்துக்கிட்டீங்களா சூர்யவர்மன்?” என்று திடுமென சீரியஸான குரலில் கேட்டாள்.
அதில், நொடியில் அவனது சிரிப்பு மறைந்து, முகம் தீவிரமானது.
“நீங்க என்ன நினைக்கறீங்க மேடம்?
ஒன்னு சொல்லவா? இந்தக் கட்சி, என் அப்பாவும், உங்க அப்பாவும் சேர்ந்து உருவாக்கியது.
எப்படின்னு தெரியல, உங்க அப்பா இதோட தலைவர் ஆகிட்டார். அதுல என் அப்பாவுக்கோ, இல்ல எனக்கோ கூட வருத்தம் இல்ல.
எனக்குத் தேவை எல்லாம் இந்தக் கட்சி நேர்மையா செயல்படணும் அவ்வளவு தான்.
ஆனா யோசிச்சு பாருங்க.. இத்தனை நாள் இந்தக் கட்சிக்கு உங்க அப்பா தான் தலைவரா இருந்தாலும், இந்த கட்சியை.. கூடவே உங்க அப்பா உட்பட, இதிலிருக்கும் அத்தனை பேரையும் ஆட்டிப் படைக்கறது யாருன்னு தெரியும்ல?” என்றான் சிறு கர்வத்துடன்.
அதை விழி விரித்துப் பார்த்தவள், ஏதுமறியாத சிறுமி போல..
“அப்போ போன தேர்தல்ல நம்ம கட்சி தோத்ததுக்கும் கூட நீங்க தான் காரணம்னு ஒத்துக்கறீங்களா சூர்யவர்மன்?!” என்று கேட்க, சத்தமாக சிரித்தான் அவன்.
“ஹப்பா.. இப்போ சொல்லறேன்.. அறிவான பொண்ணுங்க கூட பேசறது ரொம்பவே ஆபத்தானது!” என்று கூற, இப்பொழுது நவிராவின் முகத்திலும் மிக லேசான புன்னகை அரும்பியது.
இருந்தாலும் விடாது.. “சொல்லுங்க சூர்யவர்மன், என் அப்பா உட்பட, ஒட்டு மொத்த கட்சியையும் நீங்க ஆட்டிப் படைக்கறது உண்மைன்னா.. எல்லாத்துக்கும் நீங்களே பொறுப்பேத்துக்கறீங்களா?” என்று அழுத்தமாகக் கேட்க இப்பொழுதும் சிரித்தான் அவன்.
சிரிப்பினுடே.. “என்ன தான் இருந்தாலும், கட்சியோட தலைவர்ன்ற முகம் உங்க அப்பாவோடதா இருக்கே?
அந்த முகம் வெளில வேறு மாதிரியா ப்ரொஜெக்ட் செய்யப்பட்டிருக்கு. அதுக்காக எடுத்த முடிவுகள் சில நேரத்துல பிசகிடுது.” என்று அவன் ஒத்துக்கொள்ள, அதையும் விழி விரிய பார்த்தாள் அவள்.
“கூடவே நாம நேர் வழில போனாலும், எதிர்ல இருக்கறவனும் நேர் வழில போனா பரவாயில்ல.. இந்த ஆளுங்கட்சி முழுக்க முழுக்க நரிக்கூட்டம்.
பரவால்ல மேடம்.. இந்த வெயில்ல பொசுங்கினா தான், நம்ம ஆட்சியின் குளுமை மக்களுக்குப் புரியும்.” என்றும் அவன் கூற, மின்னலின் வேகத்துடன் சிறு மெச்சுதலான பார்வை அவளிடம்.
இருந்தாலும் விடாது.. “சரி தான். ஆனாலும் நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் முழுசா பதில் சொல்லலியே?” என்று அவள் கேட்க, ஒரு கணம் தரை நோக்கிய அவனது பார்வை, மீண்டும் நேராய் அவள் கண்களைத் தொட்டது.
“இப்போ நீங்க வரலைன்னாலும், இன்னும் ரெண்டே வருஷத்துல உங்க தம்பியை உங்க அப்பா கட்சிக்குள்ள கொண்டு வந்திருப்பார்.
ஆனா அவனுக்கு அரசியல்ல ஆர்வமும் இல்ல, அக்கறையும் இல்ல.
அதனால அவனை ஈஸியா அடிச்சுட்டு நான் தலைமையைப் பிடிச்சிருப்பேன்.
ஆனா.. இப்போ நீங்க வந்திருக்கீங்க!” என்று கூறி ஒரு கணம் இடைவெளிவிட்டவன், அவள் எதுவும் கூறாமல் அவனையே பார்த்திருக்க, மேலும் தொடர்ந்தான்.
“உங்களை என்னால ஆட்டிப் படைக்க முடியும்னு தோணலை. ஏன்னா, உங்க கிட்ட ஒரு நேர்மை இருக்கு.
ஆனா.. உங்களுக்கு நான் பெரிய த்ரெட்டுன்னு தெரிஞ்சும், இப்படி உங்களுக்கு சரிசமமா என்னை உட்கார வச்சிருக்கீங்கல்ல? அதுவே எனக்கு சாதனை தான்.” என்று கூற, நவிராவோ சிறு கேலியுடன்..
“அப்போ சும்மா என் பக்கத்துல உட்கார்ந்து இருக்கறது போதும்னு சொல்லறீங்களா சூர்யவர்மன்?” என்று கேட்டதில் மீண்டும் பழைய நவிரா திரும்பிவிட்டதைப் போல உணர்ந்தான் அவன்.
அவனிடம், அந்தப் பழைய நவிரா திரும்புவது அவனுக்கு பிடிக்கவில்லை தான். ஆனாலும் அதற்காக, அவள் தன்னுடன் சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லி, வார்த்தைகளுக்கு தேன் தடவவும் விரும்பவில்லை அவன்.
அதனால் நேராகவே.. “அப்படி இல்ல மேடம். இப்போ உங்க செயல்பாடுகள்ல தெளிவு இருக்கு. அதுல நியாயம் இருக்கு. கூடவே என்னோட கருத்துக்களுக்கு மதிப்பும் இருக்குன்னு தோணுது. அதனால உங்களுக்கு சரிசமமா, சும்மாவேனும் உட்கார்ந்திருக்கறதுல சந்தோசம் தான்.
ஆனா.. நீங்களும், நானும் முரண்படறப்போ.. உங்களுக்கு எதிரா இருக்கவும் தயங்க மாட்டேன்.
அது கட்சிக்குள்ளன்னாலும் சரி, வெளிலன்னாலும் சரி.” என்று கூற, தன்னையும் மீறி சத்தமாக சிரித்துவிட்டாள் நவிரா.
அவள் சிரிப்பதை ஆச்சர்யமாகப் பார்த்த சூர்யவர்மனிடம், “என்ன சூர்யவர்மன்? இப்படிப் பார்க்கறீங்க?” என்று அவள் நேராகவே கேட்க, அவனோ..
“இல்ல மேடம்.. உங்களைப் பத்தி நான் கேள்விப்பட்டதுல இருந்தும், உங்களை நான் கணிச்ச விதத்துல இருந்தும், நீங்க இப்படி சிரிக்கிறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு!” என்றான் இன்னமும் விலகாத வியப்புடன்!
அதில் அவனை சிறு கிண்டலாகப் பார்த்தவள்.. “நேர்மையான ஆண்களோட பேசும் போது சந்தோசம் தானாவே வந்துடுது போல!” என்றாள் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி இறக்கி!
அந்தப் பார்வையில் அவன் சுவாசத்தின் ஆக்சிஜன் குறைந்து.. இதயத்தின் தாளம் திடீரென்று எகிறியது!
தன்னையும் மீறிய ரசனையுடன் அவளைப் பார்த்தவன்.. “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா?” என்றான் மென்மையாகிவிட்ட குரலில்.
ஆண்களின் கம்பீரம் அவர்களின் நெடுந்துயர்ந்த தோற்றத்திலல்ல.. அது இருப்பது, அனைவரையும் ஆட்டிப்படைக்கும் சிம்மக் குரலில்!
அப்படிப்பட்ட சிம்மக் குரல் சூர்யவர்மனுடையது.
ஆனால் அதே ஆண்கள், உருகிக் குழைகையில்.. காதலில் கசிந்து கிடக்கையில்.. மனதோடு சேர்ந்து குரலும் குழையும்!
“நான் ஆண்! உன்னை ஆள்பவன்! எவரையும் ஆட்டிப் படைப்பவன்! என் அடிமை நீ!” என்ற கர்வமழிந்து, தன்னவள் காலடியில் உருவமற்ற நீராய் கரைந்திருப்பான்.
அப்பொழுது பிறக்கும் குரலில் ஆளுமை இருக்காது!
கர்வமிருக்காது!
கடினமுமிருக்காது!
அதிலிருப்பது.. காதலின் கசிந்துருகல் மட்டுமே!
அது போலவே சூர்யவர்மனின் குரலின் வேறுபாடு நவிராவுக்குப் புரிந்தாலும், சாதாரணமாகவே.. “ஹ்ம்ம் கேளுங்க.” என்றிட..
“இத்தனை நடந்ததுக்கு அப்பறமும்..” என்று அவன் ஆரம்பிக்க, அங்கேயே நிறுத்தினாள் நவிரா!
“ஹோ.. கம் ஆன் சூர்யவர்மன்!
நேர்மையான ஆண்கள், புத்திசாலிகளும் கூட! அப்படிங்கறது என் யூகம். நீங்களும் எல்லாரும் கேட்கற அதே கேள்வியைக் கேட்டு, என்னோட யூகத்தைப் பொய்யாக்கிடாதீங்க.” என்று கூற மெல்லியதாக சிரித்துக் கொண்ட சூர்யவர்மனோ,
“அப்படி உங்ககிட்ட எல்லாரும் என்ன கேள்வியை கேட்கறாங்களாம்? அதுவும் உங்களை, மத்தவங்க கேள்வி கேட்கவும் உரிமை இருக்கா என்ன?” என்று அவன் சிரித்தபடியே கேட்க, மீண்டும் சத்தமாக சிரித்தாள் நவிரா.
“ஹா.. ஹா.. அதுவும் உண்மை தான். என்னைக் கேள்வி கேட்கற உரிமையை நான் யாருக்கும் கொடுக்கல தான். ஆனா சிலர் அவங்களாவே அந்த உரிமையை எடுத்துக்கறாங்க. யாரும் உங்களைப் போல அனுமதியெல்லாம் கேட்கறதில்லை.
அப்படி உரிமை எடுத்துட்டு, ‘இத்தனை நடந்த பிறகும் எப்படி இப்படி தைரியமா அதுவும் தமிழ்நாட்டுல இருக்கற ஒரு முக்கிய கட்சிக்குத் தலைமை பொறுப்பேத்துகிட்டீங்க?
உங்களுக்கு அமெரிக்கால நீங்களே உருவாக்கின அந்த அவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை விட்டுட்டு நீங்க இங்க வந்து ஏன் இவ்வளவு எதிர்மறை விமர்சனத்தை தாங்கிகிட்டு இருக்கீங்க..
அதையும் விட, அவ்வளவு பெரிய இன்சிடெண்ட்டுக்கு அப்பறம், பரிதாப ஓட்டுக்காக உங்க அப்பா உங்கள இங்க கூட்டிட்டு வந்தாரா?’ன்னு கேட்கறாங்க.
எனக்கு சிரிப்பு தான் வருது. இப்போ கூட, அந்த ஆளு என் கழுத்தை நெறிச்சு கொல்லற அளவுக்குக் வெறியோட இருக்கார்.. ஆனா எப்படி இப்படி கேட்கறாங்கன்னு தெரியல.
ஆனா, அவங்கள மாதிரி தானே நீங்களும் இப்போ அதே கேள்வியை கேட்க வந்தீங்க சூர்யவர்மன்?” என்று அவள் கேட்க, அகலமான.. அழகான சிரிப்பு அவனிடத்தில்!
சிரித்தபடியே மறுப்பாய் தலையசைத்துக் கொண்டு..
“இல்ல மேடம். நீங்க என்னை நேர்மையானவன்னு சொன்னதே புதுசா றெக்கை முளைச்ச மாதிரி இருக்கு.
இதுல நீங்க என்னை புத்திசாலின்னு யூகிச்சத நானே கெடுப்பேனா?
நான் கேட்க வந்தது இது தான்.. இத்தனைக்குப் பிறகும் நீங்க பிழைச்சதுக்குக் காரணம் என்னவா இருக்கும்னு நினைக்கறீங்க?” என்று கேட்க, அடுத்த கணமே நவிராவின் சிரித்த முகம் இறுகி, கோபத்தில் சிவந்தது!
தன்னையும் அறியாது, அவளது கரம், அவளது அடிவயிற்றை வருடியது!
மீண்டும் அதே சூன்யத்தை வெறித்தப் பார்வை!
சூர்யவர்மனிடத்தில் சங்கடம்!
நவிரா, தனக்குள்ளேயே போராடி.. தனக்குள்ளேயே தெளிந்து.. மீண்டும் சூர்யவர்மனின் விழிகளைப் பார்த்தாள்!
அந்தப் பார்வையில் முன்பிருந்த இளக்கம் இல்லை. இரும்பின் வலிமையும், நெருப்பின் கடுமையும் தெரிந்த அந்தப் பார்வையில் சூர்யவர்மனுக்கோ தொண்டைக்குழி ஏறி இறங்கியது!
அவனது கண்களை நேராய் பார்த்தவள், கர்ஜித்தாள்!
“இத்தனைக்குப் பிறகும் நன் பிழைச்சதுக்குக் காரணம்.. பழிவாங்கணும்!
என்னை.. என் வாழ்க்கையை.. என் ஒட்டுமொத்த எதிர்காலத்தைன்னு எல்லாத்தையும் கொன்னாங்களே.. அவங்க எல்லாரையும் பழிவாங்கணும்!
அந்த ஒரே ஒரு காரணத்துக்காகத் தான் நான் இப்போ உயிரோட இருக்கேன்!” என்றவளது உதடுகளில் வழிந்த வன்மம், நெஞ்சில் பிறந்து, கண்களில் தெறித்தது!
