Skip to content
Post Views: 1,258
நயம் – 18 
வெள்ளிகிழமை காலையில் அழகாய் பொழுது புலர்ந்தது. கோலமிட்டு வந்து காபியை போட்டு விட்டு வந்து, பவியை எழுப்பி மெதுவாக வெளியே வர சொன்னார் பிரியா. ஏனோ அன்று விடியும் பொழுதே மனம் ஒரு நிலை இல்லாமல் தவிக்க தொடங்கிவிட்டது. நிறை மாத கர்ப்பிணியை வீட்டில் வைத்து கொண்டு எப்போது பிரசவம் ஆகுமோ என தவிக்கும் மனம் தானே தாய்க்கு.
Advertisement
பவி, இன்னைக்கு குழந்தை பிறந்துரும்னு எனக்கு தோணுது. ராத்திரி முழுசா தூங்க கூட இல்லை. அனத்திட்டு இருந்தா அபி, அர்விந்துக்கும் பொட்டு தூக்கமில்லை. காலையில் ஹாஸ்பிடல் போய்ட்டு பார்த்துட்டு வந்திருவோம். பசங்களை கிளப்பி உன் வீட்டுல விட்டுட்டு போகலாம். எனக்கு என்னவோ மனசை புரட்டுது.
ஒன்னும் பயப்படாம இரும்மா.,இன்னும் ஒரு வாரம் இருக்குல்ல. அதுக்குள்ள ஏன் போகணும்னு சொல்ற. நல்லா வலி வந்த உடனே போவோம் என தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள். ஆனால் பிரியா எண்ணியபடியே கொஞ்ச நேரத்தில் அபிக்கு வலி ஆரம்பித்து விட்டது. சிறிதும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டனர். டாக்டர் செக் செய்து குழந்தைகள் இன்று பிறந்துவிடும். நன்றாக நடந்து கொண்டே இருக்க சொல்லிவிட்டனர். அபியின் ஒருகையை பவியும், மறுகையை அரவிந்தும் தாங்கிக்கொண்டு நடத்தி கொண்டே இருந்தனர். வலியில் அவள் அரற்றவில்லை, எந்த வாய் வார்த்தையும் இல்லாமல் அமைதியாக ராமஜெயத்தை மட்டுமே உச்சரித்து கொண்டே இருந்தாள். கையின் அழுத்தம் உணர்ந்தே அவளின் வலி அளவை உணர முடிந்தது. தைரியமாக. அப்போதும் சிரித்த முகமாக தான் இருந்தாள். மாலை வேளை வந்ததும், வலி இருந்தும் குழந்தையின் தலை இன்னும் அதிக இடைவேளையில் தான் உள்ளே இருந்தது என்ற சிசேரியன் செய்து எடுத்து விடலாம் என டாக்டர் கூறியதால் சரி என்றுவிட்டனர். இப்போது எதையும் யோசிக்க முடியாதே, உள்ளே மூன்று உயிர்கள் அல்லவா அவளோடு துடித்து கொண்டு இருந்தது.
Advertisement
Advertisement
லேபர் ரூமிலும் அபியோடு அரவிந்தே நின்றான். அவளின் வலி முழுவதும் உணர்ந்து வேறு வழியின்றி, அவனும் வலி கொண்டான். தைரியமாக இருக்கும்படி உதடுகள் உச்சரித்தாலும் உள்ளம் கதறி அழுதது. அவள் அழுதாள் அவன் தாங்க மாட்டான் என அவளும், தான் தளர்ந்தால் அவளின் நம்பிக்கை, தைரியம் தளர்ந்துவிடும் என அவனும் துடித்து கொண்டு இருந்தனர்.
அனஸ்தீசியா கொடுக்க டாக்டர் வருகிறார். கொஞ்ச நேரம் வெளியே கதவு அருகே நில்லுங்கள் என செவிலியர் உரைத்ததைக் கேட்டு, மனமின்றி அவள் கையை விட்டு சென்றான். அதே ஹாலில் தான் சற்று தள்ளி ஆப்ரேசன் தியேட்டர் இருந்தது. அவளை அங்கே கூட்டிச் செல்ல தான், அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருந்தது.
Advertisement
அவளருகே ஒரு செவிலியர் மட்டுமே அனைத்தையும் தயார் செய்து கொண்டு இருக்க, மற்றவள் சற்று தள்ளி அமர்ந்திருந்த மருத்துவர் அருகே சென்று கேஸ் ஹிட்டை கொடுக்க சென்றார்.
அந்த செவிலியர் வெளியே வந்த நொடி, இவன் இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது. ஏதோ ஒரு உந்துதல் விரைவாக செல் என மூளை உரைக்க, சற்றும் யோசிக்காது ஆப்ரேசன் செய்யும் அறை நோக்கி ஓடி விட்டான். இவனும் உள்ளே செல்வதற்கான மாஸ்க், கேப், ஆடைகள் என பிரத்யேகமாக அணிந்து தான் நின்றான். ஆனாலும் சட்டென பதற்றம் எதனால் என அவனாலே அறிய முடியவில்லை.
அவன் உள்ளே சென்ற நொடி, அபி செவிலியரிடம், சிஸ்டர், குழந்தை வெளியே வந்து விட்டது. வேகமா பாருங்க என கத்தி கொண்டு இருந்தாள். செவிலியரோ இல்லமா, இன்னும் கொஞ்ச நேரம் தான் டாக்டரும் வந்துட்டார். வலி பொறுத்துக்கோங்க என ஆறுதல் கூறியபடியே அவளை பரிசோதிக்க, அவளின் மகவோ அழகாய் அவரின் கை சேர்ந்து விட்டாள்.
ஒரு நொடியே செவிலியர் நிலை தடுமாறி நின்றது, மறு நொடி சட்டென அருகே ஓடி வந்த அரவிந்தின் விரிந்த கரத்தில் குழந்தையை வைத்துவிட்டு, அடுத்த நொடியில் வெளிவந்த மற்றொரு குழந்தையை அபியின் வயிற்றில் படுக்க வைத்து, சட்டென தன் பணியினை தொடர ஆரம்பித்து விட்டார் அனுபவமிக்க அந்த செவிலி .
முதல் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டே , பதறி அடித்து மருத்துவரும், மற்றையோரும் ஓடி வர, யாரையும் சிரமப்படுத்தாமல் அவர்களே சுயமாய் வெளிவந்து விட்டனர். இதோ அரவிந்தின் கரத்தில் அவன் உதிரம் ஒன்று உதிரத்தோடு உயிர் துடித்து அழுதது.
அவன் கரத்தில் இருந்து குழந்தையை வாங்கி, கடகடவென மற்ற பணிகளை செய்து, அழகாய் பூத்துவாலையில், அவன் பூக்குவியல்கள் படுத்து இருந்தனர். விழி மூடாது அவர்களையே ரசித்து கொண்டு இருந்தான்.
ரோஜா பூ நிறத்தில், குண்டு கண்களோடு, தளிர் கைகளை ஆட்டிக் கொண்டு, அழுகைக்கு தயாராகிக் கொண்டு இருந்தனர். அபியும் குளிப்பாட்டப்பட்டு ரூமுக்கு அழைத்து வரப்பட்டாள், அவளின் அருகே படுக்க வைக்கப்பட்டதும் அந்த சிட்டுகள் அமைதியாயின. மூன்று கிலோவுக்கு சற்று குறைந்த எடையில் காணப்பட்டனர்.
அவனும் அவளுக்குமான நேசம் சொன்னால் புரியாது, சொல்லவும் முடியாது, உணர்ந்தாள் மட்டுமே உணர முடியும் என அவன் கூறுவதை இதோ அவளும் கண்கூடாக உணர்ந்து விட்டாள். அதனை வார்த்தையில் வடிக்க முடியாமல் அவன் மௌனமாய் அவளின் விழி பார்த்தே நின்றான்.
அத்தனை சோர்விலும், தாங்கள் மூவரும் அவனின் கை சேர்ந்து விட்டோம் என அவளும் விழியாலே பதில் மொழிந்து, வலியை குறைக்கும் மருந்தின் வீரியத்தில் தன்னை மறந்து மீண்டும் உறக்கத்தை தழுவி விட்டாள்.
வெளியில் தூக்கி வந்து குழந்தைகளை கொடுத்தனர். அச்சுதன் கையில் ஒன்று, கணேஷ் கையில் ஒன்றென இருவரும், தன் அன்பு தாத்தாக்களின் கைகளில் அழகாய் சிரித்தனர். அபியின் அழகு, அரவிந்தின் நிறம், உருவங்கள் இருவரை கொண்டு என பிரித்து கூற முடியா நிலையில், அச்சாக இருந்தனர். பிரியா, பிரமிளாவிற்கும் அத்தனை சந்தோஷம். நார்மலாக தங்கள் பேத்திகள் சாகசம் புரிந்து வெளிவந்ததை எண்ணி உவகை கொண்டனர். ஊழியர்கள், உறவுகள் என அனைவருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினர்.
குழந்தை பிறந்தவுடன் தான் பவியின் மாமியார் சிவா, விஷ்ணுவை அழைத்து கொண்டு வேகமாக வந்தார்.
சின்னக்குட்டி என்றபடியே சிவா ஓடி வந்தான்.
டேய், அண்ணா அவ சின்னக்குட்டி இல்ல என் தங்கக்குட்டி , நீ தொடக்கூடாது என இருவரையும் தன் இரு விரல்களில் மெதுவாய் தடவி பார்த்தான்.
எனக்குதான் இந்த பாப்பா, நீ அந்த பாப்பாவை வச்சுக்கோ என மற்றவள் கையை இவன் பிடித்துக் கொள்ள, அடேய், அவங்க இன்னும் கண் முழித்துக் கூட பார்கள, அதுக்குள்ள ரெண்டு பெரும் பங்கு பிரிக்க ஆரம்பிச்சுடீங்க. நல்ல வேளை ரெட்டைப்பிள்ளை பிறந்தது. இல்லைனா இவங்க கூட என்னால் மல்லுக்கட்ட முடியாது என சுகமாய் அலுத்துக்கொண்டார் பவியின் மாமியார் ஜானகி. காலையில் இருந்து எப்போது பாப்பா பிறக்கும் என அவ்வளவு படுத்திவிட்டனர்.
இதில் சந்தேகம் வேறு வந்துவிட்டது விஷ்ணு குட்டிக்கு. ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க. என் பாப்பா யாருனு எனக்கு எப்படி தெரியும் ? ஏதாவது அடையாளம் சொல்லுங்க. அப்பதான் எனக்கு பாத்துக்க முடியும்.
இப்ப ஒன்னும் சொல்ல முடியாது. வேணும்னா டிரஸ் வச்சி அடையாளம் பண்ணிக்கோ என்றார் பிரியா.
ஒரே டிரஸ் எப்படி பாப்பா போட்டுட்டு இருக்கும். அழுக்காயிடும்ல. உனக்கு ஒண்ணுமே தெரியல மை டியர் ஓனர் என்றான் அலுத்துக் கொண்டே.
இவனின் பேச்சைக்கேட்டு அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். அப்புறம் பிரியா தான், அது ஒனரில்லை, மை டியர் ஹானார்டா, உன் பாப்பாக்கு கோல்டு வளையல் போடும்போது ரெண்டு டிஸைனா வாங்குவோம். அதை பார்த்து நீ கண்டுபிடிக்கலாம். வீட்டுக்கு கூட்டி போன உடனே போட்டுவிடுவோம். சரியா என உம்மென முகத்தை திருப்பி அமர்ந்தவனை, சமாதானம் சொன்ன உடன் அமைதியானேன்.
இவங்க நாலு பேரை மேய்கிறதுக்கே பொழுது ஓடிரும் போல. எப்படிதான் சுந்தரி பெரியம்மா பத்து பிள்ளைகளை பார்த்துக்கிட்டாங்களோ, மொத அவங்க எல்லார்க்கும் தகவல் சொல்லனும் என அடுத்த நகர்வுக்கு சென்றுவிட்டனர்.
இரவில் பவி, பிரியா, அரவிந்த் மட்டும் அபிக்கு துணையாக இருக்க மற்றவர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
அரவிந்த், எப்படி அபிக்கு பாப்பா வெளியே வர்ற சமயம் நீ ஓடி போனே. டாக்டரே ஆச்சரியப்படுறாங்க. யாரும் அந்த நேரத்துல பக்கத்துல இல்லாம போயிருந்தா என்ன ஆகியிருக்கும்னு சொல்லவே முடியாது. அபிக்கு வேறு டெலிவரி முடிந்ததும், பதட்டத்துல பல்ஸ் அப்நார்மல் ஆகி, பிபி வேற தாறுமாறா ஏற ஆரம்பிச்சதாமே, ரொம்ப டென்ஷன் ஆகிட்டியா?
பக்கத்துல போய் நின்ன உடனே, குழந்தையை பார்த்ததும் உசுரே நின்னுடுச்சு. என்ன பண்றதுன்னே தெரியல, எனக்கும் கை நடுங்க ஆரம்பிச்சுருச்சு. என் பொண்ண நான் தானே பார்த்துக்கணும்னு பயந்துட்டே தான் கையில் வாங்கினேன். கை எல்லாம் ஒரே இரத்தம். அதுக்குள்ள அடுத்த பாப்பா, அபியை பார்த்தா அவ மயங்கிட்டா. நல்லவேளை எல்லாரும் ஓடி வந்து கடகடன்னு எல்லாம் பண்ண ஆரம்பிச்சாங்க. பாப்பாவை அவங்க கையில் கொடுத்துட்டு அபி கை பிடிச்சி நின்னேன். போதும்டா சாமி, குழந்தை பெறக்குறதுக்குள்ள எவ்ளோ வலி, உயிர் போய் உயிர் வருது, இன்னைக்கு தான் நேர்ல உணர்ந்தேன். எப்படித்தான் நீங்க எல்லாம் அதை தாங்குறீங்களோ ? பொண்ணுங்க எல்லாம் ரொம்ப கிரேட்.
இப்போவாவது ஒத்துக்கிறியே, நாங்க கிரேட்னு, அபிக்கு தைரியம் ஜாஸ்தின்னு புரிஞ்சுக்கோ. எவ்ளோ கிண்டல் பண்ணி சிரிப்ப. இப்போ புரியுதா.
விடு பவி, தம்பியே அவ்வளவு தைரியமா போய் நின்னு எல்லாம் பார்த்துருக்காரு. அவர்ட்ட வம்புக்கு நிக்குறே.
அது எப்படிம்மா , உன் மாப்பிள்ளை பத்தி ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேங்கிறே. எங்களை என்ன சொன்னாலும் கண்டுக்காம இருக்க. இப்ப மட்டும் உடனே கொடி பிடிச்சுட்டு ஓடி வர்ற என செல்ல சண்டை போட்டாள்.
அது என்னோட செல்ல அத்தை, பார்த்துக்கோ என வம்பு பேசினான்.
யாரு உன் செல்ல அத்தை? கல்யாணம் பண்ண நாளில் இருந்து அவங்கிட்ட எவ்ளோ நேரம் பேசி இருப்ப என்றவள், தன் தாயிடம் திரும்பி, அம்மா, நீ இன்னும் உன்கிட்ட பேச தான் போன் பண்ணான்னு நினைச்சுட்டு இருக்கியா, அய்யாவுக்கு தூது போகும் செல்ல கிளின்னு உன்கிட்ட பேசி , அபியை பத்தி தெரிஞ்சுட்டு இருக்கான். அதான் கல்யாணம் பண்ணதும், . அத்தை வேணாம், அத்தை பொண்ணு போதும்னு , உன்கிட்ட ரொம்ப நேரம் பேசாம இருக்கான் என அவனை மேலும் வம்பு வளர்த்தாள்.
அவளிடம் ஒன்றும் சொல்லாமல், என்னை நீ அறிவாய் என தன் அத்தையின் வதனத்தை நோக்கினான், . அவரோ பவியிடம், லூசு மாதிரி எதாவது உளறாம ஒழுங்கா என்னோட வா. போய் பால் வாங்கிட்டு வருவோம். நீங்க பாப்பாங்களை பார்த்துட்டு இருங்க. இப்போ வந்திடுறோம் என்றப்படி அவளை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டார்.
அம்மா, அரவிந்த் எதுவும் பேசாம அமைதியா இருக்கான்னு தானே வம்பிழுத்துட்டு இருந்தேன். என்னை போய் லூசுன்னு சொல்றே என்றால் முகத்தை உம்மென வைத்து கொண்டு.
நீ என்ன பண்ணாலும் அவன் பேச மாட்டான். அவளோட வலியை அவனும் சுமந்துட்டு நிற்கிறான். அபி எந்திரிச்சி பேசிட்டா நார்மலா மாறிடுவான். சூடா பால் குடிச்சிட்டு தூங்கட்டும். எல்லாம் சரியாகிடும். மகளை தாங்கும் மருமகனை எண்ணி பெருமிதம் கொண்டாலும், அவனின் அத்தையாய் அவருக்கும் வலிக்க தான் செய்தது.
ஏனென்றால் டெலிவரி முடித்து வந்து அவன் யாரிடமும் பேசவில்லை. தனியே சென்று அமர்ந்து விட்டான். அபியை ரூமுக்கு அழைத்து வந்தும் , அவள் கண் திறக்கும் வரை மௌனமாய் இருந்தவனை, அவளை பற்றி பேசியே மனம் மாற வைக்க முயற்சித்து கொண்டு இருந்தாள். தன் நண்பன் அமைதியாக இருப்பதாய் காண சகியாமல், அவள் வம்பு வளர்க்க, அவனோ அப்போதும் வேறு எதுவும் பேசினான் இல்லை . அவனின் சகி மௌனம் கலைந்தால் மட்டுமே அவன் பேசுவனோ ?
அவனோ அபியின் தலை கோதி, கன்னம் வருடி, நெற்றியில் முத்தம் வைத்து, சாரிடா, உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனி பண்ண மாட்டேன் என அவளிடம் மன்னிப்பு கேட்டவன், அவளின் இடையோடு ஒட்டி கொண்டு உறங்கி இருந்த தன் அரும்புகளின் காலடியில் தலை சாய்ந்து, சேரில் அமர்ந்தவாரே உறங்கத்தை தழுவினான்.



“பிள்ளைக்கனியமுதே – கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே;
ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி ;
உச்சிதனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளருதடி ;
மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ;
உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ !
என் உயிர் நின்னதன்றோ !
error: Content is protected !!