Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Abinayangalin Vizhigalil

Abinayangalin Vizhigalil 19

💞 நயம் – 19 💞



Advertisement

இரட்டையர்களின் பெயர் சூட்டு விழா மிக கோலாகலமாய் கொண்டாடப்பட்டது. அரவிந்த் வீட்டில் பெண் குழந்தை இல்லை, பவிக்கும் இரண்டுமே ஆண்கள், அவளின் நாத்தனாருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் என அத்தனை ஆண் பிள்ளைகளுக்கும் நடுவே இரு குட்டி செல்ல பெண்கள்.

முப்பதாம் நாள் நிறைவில் உறவினர்களின் முன்னிலையில் தீக்சிதா, தீக்சனா என நாமகரணம் சூட்டப்பட்டது. ஒத்த உருவங்கள் தங்கள் உணர்வினை கூட ஒருமித்த குரலில் தான் வெளிப்படுத்துவர். பாலிற்கு கூட ஒரே நொடியில் சிணுங்க ஆரம்பிப்பவர்கள் தாய் பாலை தவிர்த்து பவுடர் பாலை விரும்புவதில்லை. அவசரத்திற்கு கூட குடிக்க மறுத்து முகத்திலேயே துப்பிடுவர். ஆதலால் பாலாடை என்னும் சங்கிலே முதலிலேயே எடுத்து வைத்து, பாதுகாத்து மற்றொரு குழந்தைக்கு புகட்டுவர்.

Advertisement

Advertisement

மூன்றாம் மாத தொடக்கத்திலேயே நன்கு தலை நிற்க ஆரம்பித்து, சிரிக்க ஆரம்பித்து விட்டனர். காலையில் ஓடும் அரவிந்த் இரவு தான் வீட்டிற்கு வருவான். அதன்பின் அவனின் பொழுதுகள் முழுதையும் அவர்களே ஆக்ரமித்து கொள்வர். பன்னிரண்டு மணி வரை உறக்கம் தொலைத்தவன், மீண்டும் மகள்களின் பா.., பா…, எனும் ராகத்தில் நான்கு மணிக்கே எழும்பி விடுவான். தூக்கம் தொலைத்தாலும் தேவதைகளின் சிரிப்பு சப்தமே அவன் புத்துணர்ச்சிக்கு மருந்தானது. இருவரையும் பெயரில் கூட பிரித்து பார்க்க மாட்டான்.தீக்சா என்றே இருவரையும் அழைப்பான் .

தவழ ஆரம்பித்த நேரத்தில் இருவரும் ஒன்றாய் வந்து காலை சுற்றிக் கொள்வர். ஒன்றாகத்தான் தூக்கி தோளில் அமர வைத்து சுற்றுவான். பேச ஆரம்பித்ததும் ஒத்த குரலில் தான் அழுகையோ, கோபமோ, சிரிப்போ ஒன்றாய் ஒலிக்கும். கண்டிப்பான தாயை விட பாசமான, அடிக்காத தந்தையை தானே பெண்கள் விரும்புவர். அவன் பெண்களுக்கும் அவனே மிக மிக பிடித்தமானவன். எதற்கும் அவன் பின் வந்து ஒளிவது தான் வழக்கம்.

Advertisement

****

இதோ அவனின் வீட்டிற்குள் நுழையும் போது, ஓங்கி ஒலித்த அபியின் குரல் கேட்டு திகைத்து நின்று விட்டான். நில்லுடி, ஓடாதே ! ஒழுங்கா சொல்லு யார் இதை பண்ணீங்க….சொல்லிட்டு போடி என ஓட்டப்பந்தயம் நடத்தி கொண்டு இருந்தனர். இவனை கண்டதும் இரு புறமும் வந்து காலை ஒட்டி நின்று கொண்டு, தாயினைப் பார்த்து எக்களிப்பு செய்தனர்.

ஏன்…உங்க டாடி வந்துட்டா, அடிக்க மாட்டேன்னு நினைச்சியா. நீங்க பண்ணத சொன்னா அவரே அடிப்பார் என அபி கூறுவதை கேட்டவன்.

என்னாச்சும்மா, ஏன் இவ்ளோ கோபப்படுற?, ரெண்டு பேரும் இன்னைக்கு என்ன பண்ணாங்க?.

ம்ம்..எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம். இவங்க வயித்துல இருக்கும்போது ஆரம்பிச்ச பிளான் இப்பதான் பினிஷிங் ஸ்டேஜ்ல இருக்கு. நான் எலக்ட்ரீசியன் லைன்ல கொஞ்சம் சேஞ்ச் பண்ணிட்டு இருந்தேன். போன் வந்ததேன்னு அப்படியே வச்சுட்டு போயிட்டேன். வந்து பாத்தா அதுல கிறுக்கி வச்சுருக்காங்க. இவங்களை என்ன பண்ணலாம் சொல்லுங்க?

பென்சில்லதானே கிறுக்கி இருப்பாங்க. அதை அழிச்சிரலாம். இதுக்கா இவ்வளவு டென்ஷன்.

அவள்க கோடு மாதிரி எல்லாம் கிறுக்கி வைக்கல. நான் போட்ட மாதிரியே அங்கங்க குட்டி குட்டியா டாட் வச்சி இருக்காங்க. எது நான் போட்டது?, எது இவள்க போட்டாங்கனு தெரியாத அளவுக்கு இருக்கு.

அப்படியா தீக்சா, அம்மா போட்ட மாதிரியே போட்டிங்களா? ஏன் இப்படி பண்ணீங்க?

டாடி, நீங்க தானே அம்மா மாதிரியே எல்லாம் பண்ணனும்னு சொல்லியிருக்கீங்க. அதான் அதே மாதிரி குட்டி குட்டியா டாட் போட்டோம். இது தப்பா ? என்றாள் தீக்சனா .

அவங்க பிளான் போட்ட மாதிரியே நாங்களும் பிளான் போட்டோம். ரெண்டுமே சொதப்பிருச்சு தெரியுமா. மீ பாவம் என்றாள் தீக்சிதா.

இவர்களை என்ன சொல்வது என குழம்பியவன். ஆமாம் நீங்க என்ன பிளான் போட்டிங்க சொதப்புறதுக்கு?

டாடி, இன்னிக்கி சிவா, விஷ்ணு அண்ணாக்கு லீவு, எல்லாரும் சேர்ந்து பார்க் போகலாம்னு பிளான் போட்டோம். அதுவும் முடியல. அம்மா போட்ட பிளானும் போச்சு. இப்போ என்ன பண்ண நாங்க? என பாவமான குரலில் எதுவும் தெரியா சிறு பிள்ளையை போல மிழற்றினர்.

அடிங்க என மீண்டும் அவர்களை துரத்த ஆரம்பித்து விட்டாள் அபி.

சிரிப்பை அடக்க முடியாமல் நின்றவன் எவ்ளோ பிளான் இந்த வயசுல ?என்றபடியே ஓடி சென்று தூக்கி கொண்டவன்.

தீக்சா… மொத அம்மாட்ட சாரி கேளு. அவங்க எவ்ளோ நேரம் எடுத்து, பிளான் ரெடி பண்ணி வைக்குறாங்க. அதுல கிறுக்கினது தப்பு தானே. சே சாரி என அரவிந்த் சொன்னவுடன்.

சாரிம்மா…இனிமே இப்படி பண்ண மாட்டோம் என தப்பை ஒத்துக் கொண்டனர். நீங்க பார்க் போக பிளான் பண்ணா எங்கிட்ட சொல்லுங்க. டாடி கூட்டிட்டு போவேன். அம்மா இப்போ கொஞ்சம் பிசி. அதனால நீங்க போய் ரெடி ஆகுங்க. நம்ம எல்லாரும் போகலாம் என்றவன் அபியிடம்.

மெயில்ல லாஸ்ட் பிரிண்ட் எடுத்து செக் பண்ணி பாரு. இவங்க பண்ணதை மாத்தி சரி பண்ணிரலாம் என்றான் , ஆனாலும் என் பொண்ணுங்க எவ்ளோ அறிவு ! ஒன்றரை வயசுலயே ட்ராயிங் மார்க் வைக்குறாங்க. இதுக்கெல்லாம் தனி திறமை வேணும் தெரியுமா? என்றவனிடம்

இருக்கிற கோபத்தை இன்னும் கிளப்பாதீங்க போயிடுங்க. எவ்ளோ முக்கியமான வேலை. இப்படி பண்ணிட்டாங்களேன்னு நானே கடுப்புல இருக்கேன். போங்க. உங்க பொண்ணுங்கள கூட்டிட்டு போய் சுத்துங்க. ராத்திரி தான் அடுத்து என்கிட்ட வரணும் சொல்லிட்டேன்.

அப்ப நைட் வந்தா…தப்பில்லை அப்படிதானே, தேக்ங்ஸ்டா நயா… என்றவனை புரியாமல் பார்த்தவள், பின் அவன் கூறியதை புரிந்துக் கொண்டு.

போடா… படுத்தாதே… நீயும் சேர்ந்துக்கிட்டு என திட்டிக்கொண்டே சென்றவளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்துவிட்டே தன் பெண்களை அழைக்க ஓடினான்.

இவங்க மூணு பேரை வச்சிட்டு, நான் ஒரு வீட்டை கட்டி முடிக்கிறதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடி போச்சு. பேசாம சின்னதா பிளான் போட்டு இருக்கலாம் போல. ஒரு ஏக்கர்ல வீடு கட்டணும்னு அகலக்கால் வச்சிட்டேன். அபி, முன்வச்ச காலை பின்னாடி வைக்கமாட்டா. இன்னும் ஒரே மாசத்துல முடிச்சுட்டு தான் அடுத்த வேலை பார்க்கணும் என அலுத்து கொள்ள தான் அவளால் முடிந்தது.

பெண்களை வயிற்றில் சுமந்து கொண்டு ஆரம்பித்த பிளானிங் ஒர்க் எல்லாம் முடிந்து இப்போது தான் அவளின் கனவு இல்லம் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த மாதம் குழந்தைகளின் பிறந்தநாள் அன்று அதன் திறப்புவிழா என்று முடிவு செய்யப்பட்டு துரித கதியில் அனைத்து இறுதி வேலைகளும் நடந்து கொண்டு இருக்கிறது.

ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கட்டப்பட்ட வீடுகள் வசீகரிக்கும் வண்ணங்களான பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களைக் கூடுதலாகப் பயன்படுத்தி வண்ணம் தீட்டினார்கள். குறைந்தது முப்பது அறைகள் வரை இருக்கும். வீட்டுக்கு முன்புற வாசல் ஒரு தெருவிலும் பின்புற வாசல் இன்னொரு தெருவிலும் இருக்குமாறு மிகப்பிரம்மாண்டமாக இருந்தது.

வீடுகளின் தரைப்பகுதி தெருவைவிட ஐந்து அடி உயரம்வரை கொண்டதாக கட்டப்பட்டு, வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலையம்சத்துடன் அமைக்கப்பட்டது. வீட்டின் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலானமான திண்ணை கம்பீரமான மரத் தூண்களோடு இருக்கும். முன் வாசல் கதவும் நிலையும் நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும். தெய்வச் சிலைகளை நிலையின் மேல்புறத்தில் செதுக்கி உள்ளனர்.

வீட்டின் முகப்பு பட்டாலை (திண்ணை) என அழைக்கப்படுகின்றது. பட்டாலையைத் தாண்டினால் வருவது வளவு (முற்றம்) ஆகும். வீட்டில் தேக்குமரத்தால் ஆன பெரிய பெரிய கதவுகள், மர பீரோக்கள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள் கொண்டதாக அமைத்தனர் . ஆங்காங்கு உள்ள நிலைகளில், இராமாயண, மகாபாரதக் காட்சிகளை வரிசையாகச் செதுக்கி உள்ளனர்.

இந்த வீடுகளின் நடுவே பெரிய வானவெளி முற்ற அமைப்பு உள்ளது. வீட்டுக்குள் காற்றையும் வெளிச்சத்தையும் இந்த வானவெளி கொண்டு வருகிறது. வீட்டின் முன்வாசலும் பின்வாசலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளும் இந்த வானவெளியில் வந்து சேர்வதாக இருக்கும். பின்வாசலில் இருந்து பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும் வகையில், இரு வாசல்களும் நேர்க் கோட்டில் உள்ளன. வீடு முழுதும் பல தூண்கள் பர்மா தேக்கைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வீட்டினை நிறைய திரைப்படங்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். தன் முதல் கனவு இல்லம் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த உன்னத நிலையில் இருக்கவேண்டும் என அத்தனை கஷ்டங்களோடு அவள் கட்ட ஆரம்பித்தாள்.

அச்சுதன், கணேஷ் இருவரின் தொழிலார்களின் குழுமத்தோடு தான் தொடங்கினாள் என்றாலும் புது முயற்சியில் தடைக்கற்கள் இல்லாமலா இருக்கும். அத்தனையையும் அவளுக்காக தகர்த்து அவள் கணவனும் ஓடி கொண்டு தான் இருக்கின்றான். இவள் வீட்டிலில் இருந்து கொண்டு சொல்ல அனைத்தையும் செய்பவன் அவன் தானே. பழமையில் புதுமை புகுத்தி முடிக்கும் தருவாயில் உள்ள நிலையில் தான் அவளின் செல்லங்கள் இத்தனை பாடுபடுத்துகிறது.

******

நாட்கள் கழிந்த நிலையில் இதோ இன்று இரட்டையர்கள் இருவரின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள். இளம் பச்சை வண்ணத்தில் பட்டுப்பாவாடையும், குட்டி ஜிமிக்கி, கை கொள்ளா வளையல்கள், சிறிய கழுத்தை ஒட்டிய செயின், நெத்திச்சுட்டி சூடி ,தன் குண்டு விழிகளை உருட்டிக் கொண்டு, சிறு குடுமி அசைந்தாட, குதித்து குதித்து நடையா, இல்லை ஓட்டமா என கணிக்க இயலா தளிர் நடையில் இருவரும் கரம் கோர்த்து, மறு கரங்களில் அபியும் அரவிந்த் கரத்தினை இறுக பற்றிக் கொண்டு அன்பு இல்லத்தில் வருகை தந்தனர். அவர்களின் கரங்களால்தான் ரிப்பன் வெட்டி அதனை திறந்து வைக்க போகின்றனர்.

அவன் தன் தொழிலாளர்களுக்காக ஆரம்பித்த அன்பு இல்லத்தினை பலரும் நாடி வர ஆரம்பித்து விட்டனர். முதியோர்களும் விரும்பியே ஆவல் கொண்டதால் வேறு ஒரு புதிய இடத்தில புதிதாக ஒன்றை திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். பின் அச்சுதனின் பரம்பரை இடத்தில் கட்டப்படும் அபியின் கனவு இல்லத்தையே இதற்கு பயன்படுத்தலாம். எத்தனை பேர் வந்தாலும் இடமிருக்கும், அனைவர்க்கும் உதவ முடியும் என்ற நோக்கத்தில் பல முன்னேற்பான ஏற்பாடுகளுடன் இதோ இருவரின் ஆசையும் ஒன்றாக்கி கட்டிய , பிரம்மாண்ட கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது.

பல கோடிகளை கொண்டு கட்டப்பட்டு, அதன் மாடலை விரும்பியே பலரும் இப்போதோ தங்கள் பட்ஜெட்டில் கட்டி தரும்படி அபியை நெருக்க ஆரம்பித்து விட்டனர். அவளின் கலை அறிவும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு அடுத்த நகர்வினை நோக்கி வாழ்வில் முன்னேறினர். கிட்டத்தட்ட நூறு முதியோர்கள் , ஐம்பதிற்கும் மேற்பட்ட அனாதை குழந்தைகளின் விடியலுக்கு அடித்தளமிட்டு, புண்ணியத்தையும் தேடிக் கொண்டனர். முயன்றோர் பணம் கொடுக்கலாம். இல்லையென்றாலும் ஒன்றுமில்லை . ஆனால் இங்கே அனைவரும் சமமாக தான் நடத்தப்படுவர் என்பதை சொல்லியே வீட்டிற்குள் நுழையவிட்டனர். அவர்கள் அத்தனை பேரின் செல்ல குழந்தைகளாய் தீக்சாக்களின் ஆர்ப்பரிப்பு சொல்லில் அடங்காது.

அகத்தின் புரிதலால், வார்த்தைகளாக உணர்த்தாமல் ஒருவரின் எண்ணத்தை மற்றவர் புரிந்துக் கொண்டு காதலில் மட்டுமல்ல வாழ்விலும் ஜெயித்துவிட்டனர்.

💞💞💞

“பாயுமொளி நீ எனக்கு

பார்க்கும் விழி நான் உனக்கு

தோயும் மது நீ எனக்கு

தும்பியடி நான் உனக்கு

வாயுரைக்க வருகுவதில்லை

வாழிநின்றன் மேன்மை எல்லாம்

தூய சுடர் வானொலியே

சூரையமுதே கண்ணம்மா…

தாரையாடி நீ எனக்கு

தண்மதியம் நான் உனக்கு

வீரமடி நீ எனக்கு

வெற்றியடி நான் உனக்கு

தரணியில் வானுலகத்தில்

சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஓருருவமாய் சமைந்தாய்

உள்ளமுதே கண்ணம்மா….!!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!