Skip to content
Post Views: 16,465
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 25
காலை எழுந்ததும் நிரஞ்சன் பார்த்தது அவன் கணக்கில் விழுந்த பணத்தை தான். அவன் தந்தை தான் போட்டு விட்டிருந்தார். நர்மதா திருமணம் முடித்து சென்னை வரும்போது அவளுக்கு சீர் என்று எதுவும் கொடுக்கவில்லை. எங்க வீட்ல எல்லாம் இருக்கு தேவையில்லை, பணமாக கொடுத்து விடுங்கள் என்று சுசிலா சொன்னதால் பணமாக தான் கொடுத்தார்கள்.
அப்பொழுது கூட்டு குடும்பமாக இருந்ததால், பாலமரத்தான்.. வீட்டில் பெரியவர் என்று தாமோதரன் கையில் தான் பணத்தை கொடுத்தார். அதை தற்போது மகனுக்கே திரும்ப கொடுத்து விட்டார் தாமோதரன். நிரஞ்சன் கையில் பணம் இருக்கா, இல்லையா என்று அவருக்கு தெரியாது. நிரஞ்சன் மனைவி மக்களோடு மட்டும் வெளியேறியதால் அவனுக்கு உதவும் என்று போட்டுவிட்டார் போல… மகன் அதை பார்க்கும்போது கொஞ்சம் வேதனையாக இருந்தது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு அடுத்து என்ன என்று யோசிக்க தொடங்கிவிட்டான். வேற வழி இல்லை.
Advertisement
இவன் தான் வழி என்று இவனை நம்பி மனைவி, மக்கள் இருக்க கடந்ததை யோசித்து ஒன்னும் பயனில்லை. நர்மதா பரபரப்பாக இருந்தால் இன்று அவள் வேலைக்கு செல்ல வேண்டும். இன்றோடு லீவ் முடிகிறது ஆனால், அவளுக்கு ஒரு யோசனை தான் வீடு இருக்கும் நிலையில் எப்படி அப்படியே விட்டு விட்டு வேலைக்கு போக முடியும். ஆனாலும், அதிக நாட்கள் லீவு எடுத்தாச்சு என்ன பண்ண என்று யோசனையில் இருக்க…
நிரஞ்சன் சொல்லிவிட்டான், “நீ கிளம்பு நம்மு பிள்ளைகளை நான் பாத்துக்குறேன்…” என்றவன் வீட்டில் பொருட்கள் ஏதும் இல்லாததால் தற்போதைக்கு உணவை வெளியில் வாங்கி சமாளித்துக் கொண்டார்கள்.
நர்மதாவுக்கு தயக்கமாக இருந்த போதும், கணவன் முகத்தை பார்த்தாலும், வேற வழி இன்றி கிளம்பி விட்டாள். அன்றைய நிலையில் படித்த படிப்புக்கு கிடைத்த மதிப்பு மிக்க வேலை என்ற எண்ணம் தான். இன்று அது அத்தியாவசியம், அலட்சியம் செய்ய முடியாது.
Advertisement
அதையே தான் நிரஞ்சனும் உணர்ந்தான். இன்றைய நிலையில் சுய சம்பாத்தியம், சேமிப்பின் முக்கியத்துவம், வேலையின் அவசியத்தை நன்றாக அறிந்து கொண்டான்.
Advertisement
ஒரு மாதிரி அரை மானதாகத்தான் நர்மதா கிளம்பி சென்றாள். நிரஞ்சன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கடைக்கு கிளம்பி விட்டான். இப்படியே ஹோட்டல் வாங்கி ஓட்ட முடியாது. தேவையானதை வாங்க வேண்டும். அதற்கு அவனுக்கு பெருத்த சிரமம் ஒன்றும் இல்லை. இப்பொழுது தான் எல்லா கடைகளும் மொத்தமாகவே கொடுத்து விடுகிறார்களே… அவனும் வீட்டுக்குத் தேவையான அனைத்தும் என்று சொல்லி இருக்க அவர்கள் மொத்தமாக இறக்கி விட்டார்கள். அன்றைய பொழுது நிரஞ்சனுக்கு பிள்ளைகள் உடன் தான்.
மாலையில் சோர்ந்து போய் வீடு வந்த நர்மதாவுக்கு அவ்வளவு ஆச்சரியம். அவளே நினைத்து தான் இருந்தாள் வீட்டுக்கு பொருள் வாங்க வேண்டும் என்று கணவனிடம் சொல்ல வேண்டும் என்று… நிரஞ்சன் அவனாக யோசித்து செய்தது ஆச்சர்யமாக இருந்தது.
பிள்ளைகளுக்கு இந்த வீடு பிடிக்க வில்லை…
Advertisement
“நாம நம்ம வீட்டுக்கு போவோம் ப்பா… இது ஸ்மால் ஹவுஸ்… விளையாட இடம் இல்லை…” என்று சஸ்டி சொல்ல,
குழந்தைக்கு புரிய வைக்க முடியாது என்று உணர்ந்தவன்,
“கொஞ்ச நாளுக்கு தான் குட்டிம்மா… அப்புறம் அப்பா பெரிய வீடு உங்களுக்காக வாங்குறேன். எங்க இருந்து உங்களுக்கு ஸ்கூல் பக்கம். அப்புறம் நிறைய ஃப்ரண்ஸ் கிடைப்பாங்க. பக்கத்துல ஒரு பார்க் இருக்கு, போகலாம் வாங்க. அங்க உங்களுக்கு ஜாலியா இருக்கும்…” என்று ஏதேதோ சொல்லி சமாளித்து பிள்ளைகளை கூட்டி கொண்டு நிரஞ்சன் கிளம்ப,
நர்மதா தன் அக்காக்கு போன் செய்து நடந்ததை சொல்லி விட்டாள். தனியாக வந்தது நர்மதா வீட்டில் யாருக்கும் தெரியாது.
“ஏமாந்த பொழப்பு பொழச்சு இருக்க.. உன்னை என்னத்த சொல்ல?…” கடிந்து கொண்டாள் பிருந்தா.
“விடு க்கா, எல்லாம் நேர காலம். வேற என்ன சொல்லி மனசை சரி செய்ய முடியும்…”
“ஆமா, மாமனார், மாமியார்ன்னு ஓடி ஓடி பார்த்த.. கடைசில என்ன கிடச்சுச்சு உனக்கு.. கூடவே இருந்து பார்த்த நீயும் சரி, ஒன்னுமே பார்க்காத அவளும் சரி. எல்லாம் ஒன்னுன்ற மாதிரி தான் போச்சு. எத்தனை வருஷம் அனுசரிச்சு, விட்டு கொடுத்து போன உனக்கு என்ன மரியாதை…”
“விடு க்கா. முடிஞ்சதை பேசாத.. எங்களை பார்க்கணும்ன்னு அங்க போகாதீங்க, சொல்ல தான் போன் பண்ணேன். சூழ்நிலை அப்படி ஆகி போச்சு”
“உடம்பு முடியாத மனுசன், பொண்டாட்டி, பிள்ளைக கூட வெளிய போகும் போது நியாயமா தடுத்து தான் இருக்கணும். ரெண்டு பிள்ளைகளும் ஒன்னு தான். அதுக்காக யாருக்கு தேவைன்னு ஒன்னு இருக்கு தான. சாப்பிடுற பிள்ளை சாப்பாடு போட்டு குடுக்கலாம், கைல அடி பட்ட பிள்ளைக்கு ஊட்டி தான் விடணும். வளர்ந்தாச்சு நீயே சாப்பிடுன்னு சொன்னா நியாயமா? என்னவோ போ.. இதுக்கு தான் உங்க வீட்டு ஆட்களே எனக்கு அலர்ஜி…” என்றவள்,
“ நாளைக்கு நான் வரவா நம்மு.. நிரஞ்சன் எவ்வளவு பார்ப்பார். வீட்டை ஒதுங்க வைக்க, சுத்தம் பண்ண நான் வாரேன்…” என்று பிருந்தா சொல்ல,
“வேணாம், வேணாம். ஏற்கனவே, மூணு பேரும் மூணு முக்குல நிக்கிறோம். இதுல நீ வந்த.. அமைதியா இருக்குற வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சுன்னா… நான் எங்க வீட்டு பக்கம் சண்டை, நீ உங்க வீட்டு ஆடகளோட கூட்டானு எகிறிட்டா… அதுக்கு தான் சொல்றேன், தள்ளியே நில்லு..”
“என்னவோ போ… அப்புறம் நர்மதா, உன் புருசனுக்கு பயந்துட்டு எதுவும் என் கிட்ட சொல்லாம இருக்காதா… எப்ப, எதுவும் அவசரம்ன்னா தயங்காம போன் பண்ணு… இங்க பக்கத்துல தான் உங்க அக்கா ஒருத்தி இருக்கேன்…” என்று பிருந்தா சொல்ல,
நர்மதா முகம் கனிந்தாள். பண தேவை என்றால் என்னிடம் தயங்காமல் கேள் என்று சொல்கிறாள். நேரடியாக சொன்னாள் சங்கடம் என்று சித்தி வளைத்து சொல்கிறாள்.
“ம்ம், எனக்கு ஒரு கஷ்டம் வந்தா.. மொத நினைப்பு உன்கிட்ட தான் போகும். உன்னை தாண்டி நானும் எங்க போக போறேன்..” சமாதானமாக பேசினாள் நர்மதா.
நாளை வெள்ளி கிழமை என்பதால் பால் காய்ச்சி விடலாம் என்று நினைத்து, கீழ இருக்கும் கடையில் அப்போதைக்கு தேவைக்கு வாங்கி கொண்டாள். பெரிதாக யாருக்கும் சொல்ல வில்லை. மனம் கேட்காமல் மாமியாருக்கு மட்டும் அழைத்து சொன்னாள். ரோச பட்டு தள்ளி எல்லாம் நிற்க வில்லை. சிலது பிறவி குணம் மாற தெரியவில்லை.
அதிகாலையில் நிரஞ்சன், நர்மதா மட்டும் பால் காய்ச்சி, அந்த வீட்டில் வாழ்க்கையை தொடங்கினார்கள். பிள்ளைகள் கூட உறங்கி கொண்டு தான் இருந்தார்கள். வார விடுமுறையில் தான் மளிகை வாங்க கடைக்கு போக வேண்டும்.
அந்த வார இறுதியில் நர்மதா கணவனிடம் சொல்ல, லேசாக யோசித்தவன்,
“உங்க அக்காவ கூட வர சொல்றியா நர்மதா… ஏன்னா, பிள்ளைக கூட அவ்வளவு கடை ஏறி, இறங்க முடியாது. எனக்கும் பெருசா ஒன்னும் தெரியாது. அவங்க இருந்தா, உனக்கு எல்லாம் பார்ப்பாங்க…” என்ற கணவனை அதிசியமாக பார்த்தவள், சந்தோசமாக தலையசைத்தாள்.
தனியாக வந்து விட்ட விசயம் கேட்டு பாலமரத்தான் ஒன்றும் சொல்ல வில்லை. மகள் வீடாக இருந்தாலும், ஒரு அளவுக்கு மேல் உள் நுழைய முடியாது. அவர்களின் சுய சம்பாத்தியம், அவர்கள் விருப்பம்…
இங்கு விஜயா தான் தள்ளி கொண்டு இருந்தார்,
“வீட்டை விட்டு போக சொன்னா, நீ வாய மூடிட்டு இருந்தியா?… அந்த வீட்டை காட்டி தான பொண்ணு கேட்டு வந்தாங்க. அதை நினைச்சு தான நாங்களும் உன்னை கட்டி கொடுத்தோம். இப்போ வேலையும் இல்லை, சொத்தும் இல்லைன்னா எப்படி?… ரெண்டு பிள்ளைக வேற இருக்கு…” என்று புலம்ப,
“சும்மா ஏதாவது சொல்லாதம்மா… நான் என்ன ஒன்னுக்கும் வழி இல்லாம ரோட்டுலையா நிக்கிறேன். மலை மாதிரி எம் புருசன் என் கூட தான் இருக்கார். அவரை கை பிடிச்சு தான் வெளியே வந்தேன். இன்னைக்கும் நல்லா தான் இருக்கேன். நூறு பேருக்கு பார்க்க கூட என் புருசனுக்கு வழி தெரியும். அவங்க சொத்து வச்சு ஒன்னும் இல்லை… மக புருசன், பிள்ளைகள் கூட நல்லா வாழ்கிறாளா மட்டும் பாரு…” என்று தாயை அதட்டி விட்டு திரும்ப, நிரஞ்சன் தான் நின்று இருந்தான்.
அவளுக்கு ஒரு மாதிரி பயமாகி விட்டது. ஏதாவது சொல்ல போறான் என்று பார்க்க,
நிரஞ்சன் மனதில் அவ்வளவு பூரிப்பு. உண்மையில் அவனே கூட அவனை நம்ப வில்லை. இன்றைய நிலையில் மாமியார் சொன்ன வார்த்தை உண்மை தான். அவனிடம் என்ன இருக்கு? தனியா சேமிப்பு இருக்கு தான். ஆனால், அது யாருக்கும் தெரியாது. மனைவி உட்பட…
எதுவும் இல்லை என்ற நிலையில் கூட கணவனை பெரிதாக நினைக்கும் மனைவி. நடு வீட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்கும் தகுதி நிச்சயம் மனைவிக்கு இருக்கு… அவன் தன்தோன்றி தனத்தால் மட்டுமே இவர்கள் நிலையான இடம் இல்லாமல் நிற்கிறார்கள். ஆனாலும், மனைவி அரவணைக்கிறாள். அவனையும் இழுத்து கொண்டு தான் வாழ்க்கையில் ஓடுகிறாள்.
நீ போட… எனக்கு வேலை இருக்கு, படிப்பு இருக்கு, என் பிள்ளைகளை நான் பார்ப்பேன் என்று நிமிர்ந்து சொல்லலாம். அந்த தகுதி உடையவள். ஆனாலும், கணவன் முகம் பார்த்து நிற்கிறாள்.
“உனக்கு எம் மேல கோபமே இல்லையா நர்மதா?… எனக்கே என் மேல கோபம் வருது…”
“ புரிதல் இல்லாம இருக்கும் போது கோப பட்டு, சண்டை போட்டேன் தான். நீங்களே நிறைய வறுத்த படுறீங்க. நான் முன்ன சொன்னது தான். நான் உங்க மனைவி நிரஞ்சன். உங்க எல்லாத்துக்கும் எனக்கும் பங்கு இருக்கு… உங்க வலிய நான் உணருறேன். அதுல எனக்கு ஆறுதல் இல்லை. எனக்கும் தான் வலிக்குது. நீங்க சிரிச்சு சந்தோசமா இருந்தா என் முகமும் மலர்ந்து இருக்கும். நம்ம வீடு மகிழ்ச்சியா இருக்கும்…” என்றதும்,
அவ்வளவு பெருமை நிரஞ்சன் முகத்தில்… எத்தனை தெளிவானவள் தன் மனைவி.
“உனக்கு, வித்யா அண்ணி மாதிரி தனி குடுத்தனம் போக ஆசை இல்லையா நம்மு…”
“நிச்சயம் இருந்துச்சு. உங்க அம்மா ஆரம்பத்துல ரொம்ப கண்டிப்பா இருக்கும் போது தனியா போன என்னன்னு யோசிச்சு இருக்கேன். பொதுவாகவே, எம் மனசு நான் தப்பா யோசிச்சா, தப்பா பேசுனா எனக்கு காட்டி கொடுத்துட்டும். எனக்கு என் நினைப்பு தப்புன்னு நினைச்சேன்…”
“எனக்கும் ஒரு தம்பி இருக்கான். எனக்கும் அம்மா, அப்பா இருக்காங்க.. பணம் கொடுத்து பாக்குற அளவுக்கு அவங்க இல்லை. எங்க அப்பா பென்சன் போதும் ரெண்டு பேருக்கும்.. ஆனாலும் அவங்க தனிமையை உணருவாங்க. மூணு பிள்ளைகளோடு நிறஞ்சு இருந்த வீடு. வயசனவங்க, முடியாதவங்களும்… பக்கத்துல ஆள் இருந்தா ஒரு ஆறுதல், தைரியம் இருக்கும். என் தம்பி எங்க அம்மா, அப்பாவா விட்டு தனியா போன எங்களுக்கு எப்படி இருக்கும்? அது மாதிரி தான நீங்களும்…” என்று நர்மதா சொல்ல,
“வீடு பத்தி நீ ஒன்னுமே சொல்லல…” அவனை உறுத்திய விசயம் அது… எத்தனை பெருமை பேசி இருப்பான் மனைவியிடமே…
“நீங்க சொல்லும் போது எனக்கும் நம்ம வீடுன்னு நினைப்பு இருந்துச்சு… ஏன்னா, எங்க அப்பா எங்களுக்கு செய்யிறது தான். அதை தாண்டி அந்த வீடு, நிலம் எல்லாம் எந்தம்பிக்கு தான். அவன் தான் கூட இருக்கான், நாங்க இல்லை… ஆனா, அன்னைக்கு வித்யா சொல்லும் போது, அதுவும் நியாயமா தான் தோணுச்சு. அதான் அமைதியாகிட்டேன். இப்போ எனக்கு என் புருசன், பிள்ளைக மட்டும் தான் நினைப்பு. சொந்த வீடு தான… காலப்போக்கில் அமையும். நம்மளே வாங்கலாம் நிரஞ்சன்…” என்று தன்னோடு, கணவனுக்கும் தைரியம் சொல்ல,
லேசாக மனைவியை அணைத்து கொண்டான் நிரஞ்சன்.
“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்… யாரோ என்ன போல அனுபவசாலி தான் சொல்லி இருக்கான். அது உண்மை தான் நர்மதா…”
கணவன் வார்த்தையில் மனம் குளிர்ந்தாலும்,
“யாரோ சொன்னதை தான் நீங்க சொல்லுவீங்களா? புதுசா சொல்லுங்க நிரஞ்சன்…” என்று கேலி போல சொல்லி, லேசான வெட்கத்தை மறைக்க,
“அப்படியா… எனக்கு கடவுள் கொடுத்த வரம் என் பொண்டாட்டி. சரிதானா?…”
முகம் சிவந்தாலும், “என்னத்தவாது உலராம போய் வேலையை பாருங்க…” என்று நகர்ந்தாலும், மனைவி முகத்தை கணவன் கண்டு கொண்டான்.
பிருந்தா உடன் தான் நர்மதா கடைக்கு சென்றது. முதலில் இருந்து முழுதாக வாங்க வேண்டும். நிறைய நேரம் பிடித்தது. நிரஞ்சன் பிள்ளைகளை பார்த்து கொண்டு வீட்டில் தான் இருந்தான்.
மாலை இருவரும் வீடு வரும் போது மணி ஆறு.
“ நீ கிளம்பு க்கா… அடுத்து உனக்கு லேட் ஆகும்…”
“வேண்டாம், எல்லாத்தையும் எடுத்து அடுக்கி வச்சுட்டு தான் போவேன். நீ தனியா கிடந்து அல்லாடுவ…” என்றவள், வீட்டை ஒழுங்கு படுத்தி தான் கிளம்ப போனாள்.
நர்மதா தான், “ரொம்ப லேட். இனி நீ போய் எதுவும் செய்ய லேட் ஆகும். அத்தோடு சோர்வாவும் இருக்கும். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து செய்வோம். நீ வீட்டுக்கு கொண்டு போ…”
பிருந்தா முகம் யோசனையை காட்டியது. நிரஞ்சன் சொல்லி விட்டான்,
“நர்மதா சொல்ற மாத்தி இங்க இருந்தே சாப்பாடு செஞ்சு கொண்டு போங்க. ரெண்டு பேருக்கும் வேலை குறையும், ரெஸ்ட் கிடைக்கும்.நாளைக்கு வேலைக்கு போகணும் வேற…” என்று நிரஞ்சன் சொன்ன பின் பிருந்தா தயங்க வில்லை. நிரஞ்சன் ஒரு வார்த்தை சொன்னால் தான் மரியாதையாக இருக்கும்.
அவனும் பார்த்து கொண்டு தானே இருந்தான். அவளுக்கு வாரத்தில் ஒரு நாள் தான் விடுமுறை. புருசன், பிள்ளைகள் கூட இருக்காமல் யாருக்காக வந்தார். தங்கை என்பதால் தானே… கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் உறவுகளை அரவணைக்க கற்று கொண்டான்.
“ ஏன் நம்ம உன் புருசனா இது! என்னால நம்பவே முடியல போ…” என்று பிருந்தா சொல்ல,
“அவரை ஏதாவது சொல்லிட்டே இருப்பியே நீ…”
“சும்மாவே நீ புருஷன் பாட்டு பாடுவ… இனி சொல்லவா வேணும். நான் வாய மூடிக்கிறேன்…” என்று கேலி போல சொன்னாலும், நிரஞ்சன் மாற்றம் பிருந்தாவுக்கு நிறைவாக இருந்தது.
நிரஞ்சன் தான் வாங்கிய பெரிய காரை விற்க முயற்சி செய்தான். பழைய வீட்டில் இருந்ததுக்கு இங்கு நிறைய சங்கடம் தான். மனைவிக்கு சொந்த வீடு வாங்கி கொடுக்க எண்ணம். வாடகை வீடு, நம் விருப்ப படி எத்தனை காரும் வைக்க முடியாது. அதுவும் அதன் விலை… விற்றால் போட்ட பணம் பெரிய தொகை. நிச்சயம் பெரிய உதவி தான். அஸ்வின் மூலம் விற்க ஏற்பாடு செய்தான். நர்மதாவுக்கு தெரியாது. நிரஞ்சன் எப்படியாவது தன் மனைவியை சொந்த வீட்டுக்காரியாக நினைத்தான்.
ஆனால், அதற்கு முன் பிருந்தா கிரகப்பிரவேசம் பத்திரிக்கையோடு வந்து விட்டாள். சென்னையில் கொஞ்சம் தள்ளி தான் சொந்த வீடு வாங்கி இருக்கிறார்கள். குடும்பமாக வந்து இருந்தார்கள். விநாயத்தோடு நல்ல விதமாக தான் பேசினான் நிரஞ்சன்.
“கடவுள் நம்மளை மட்டும் சுத்தி சுத்தி அடிக்கிறார். நான் வாடகை வீட்டுல இருக்கும் போது தான், ஊரே சொந்த வீடு வாங்குது…” மனதோடு புலம்பி கொண்டான்.
நர்மதா குடும்பம் ஒரு வாரத்துக்கு முன்பே வந்து விட்டார்கள். நிரஞ்சன் குடும்பம் முன்பே எல்லாம் செல்ல வில்லை. அவனுக்கு நிறைய தர்ம சங்கடம். வெளியில் பெரிதாக சொல்ல விட்டாலும், மனதில் இவர்கள் எல்லாம் எனக்கு ஆளா என்ற நினைப்பு இருந்தது. பிருந்தா கணவனோடு அவ்வளவு ஒன்றும் ஒட்ட மாட்டான். இன்று ஒரு மரியாதை இருக்கு தவிர, பட்டென்று ஒட்ட முடிய வில்லை.
விழா அன்று காலையில் தான் குடும்பத்தோடு சென்றான். தனி வீடு வில்லாவாக இருந்தது. அன்று போலவே இன்றும் பெரிய கூட்டம். ஒரு மாதிரி தயக்கமாக இருந்தது. யாரும் ஏதேனும் கேட்டு விடுவார்களோ?
“மாமனார் கூட கேட்கலாம், எப்போ நீங்களும் செட்டில் ஆவீர்கள் என்று?…” நிறைய யோசனை அவனுக்கு…
யாரும் எதுவும் சொல்ல வில்லை. உண்மையில் வராத மருமகன் வந்து விட்டார் என்று அவ்வளவு மரியாதை. தனியே பெரிதாக இருந்த ஸோபாவில் இவன்I உட்கார வைத்தார்கள்.
எல்லோரும் வந்து மரியாதையாக நலம் விசாரித்தார்கள். நர்மதா பெற்றோர் கூட கேட்க வில்லை. “ஏன் தனி குடித்தனம்? எதற்கு வாடகை வீடு? வேலை இல்லாமல் குடும்பத்தை எவ்வாறு பார்ப்பாய்?…” என்று ஒரு வார்த்தை யாரும் கேட்க வில்லை.
அப்படி ஏதாவது ஒன்று சாதரணமாக, பேச்சு வாக்கில் வந்தால் கூட நிரஞ்சனால் எதிர் கொள்ள முடியாது. நர்மதாவும் கூடவே தான் இருந்தாள். கணவனை விட்டு எங்கும் நகர வில்லை. பொதுவாக விசயம் தெரியும். அதனால் யாரும் ஒன்றும் கேட்காதவாரு கூடவே இருந்தாள்.
நேரம் சென்று தான் நிரஞ்சன் நார்மலாக அமர்ந்தான். பிருந்தா பால் கொண்டு வந்து கொடுத்தாள்.
“வீடு ரொம்ப அழகா இருக்கு…” சுத்தியே பார்க்க வில்லை. சும்மாவாது சொல்ல வேண்டுமே…
“நீங்களும் நல்ல இருக்கீங்க நிரஞ்சன். இந்த வேஷ்டி, சட்டை உங்களுக்கு பொருத்தமா இருக்கு…” சிரித்த முகமாக பிருந்தா சொல்ல,
என்ன என்று திகைத்தவன், மனைவியை பார்த்தான். அங்கு தான் விநாயகமும் நின்று இருந்தான். நர்மதா சிரிக்க, விநாயகம் சொல்லி விட்டான்,
“பிருந்தா அப்படி தான். தேங்காய் உடைச்ச மாதிரி எதையும் வெளில சொல்லிடும்… நீங்க எதுவும் நினைக்காதீங்க…”
“நான் என்ன நினைக்க இருக்கு… நீங்க எதுவும் நினைக்காமல் இருந்தா சரி தான்…” என்றவன் மனைவியை பார்த்தான்,
“மொத முகத்தை தூக்கிட்டு சுத்துவீங்க. கொஞ்ச நாளாக எங்க அக்கா கிட்ட சகஜமா பேசுறீங்க. அதான் உரிமை எடுத்து சொல்லிட்டா…” என்ற போதே, திரும்ப வந்த பிருந்தா,
“நிரஞ்சன் இனி குடும்பத்துல எந்த விசேஷம்ன்னாலும் நீங்க இப்படியே ட்ரெஸ் பண்ணி வாங்க. உங்களுக்கு நல்லா இருக்கு, மரியாதையாகவும் இருக்கு…” மனம் திறந்து ஒரு பாராட்டு. நிரஞ்சனுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது.
“சாப்பாடு ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி இருக்கு… நர்மதா, நிரஞ்சனுக்கு வேற தனியா செய்யணும் தான…” என்று விநாயகம் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம்ங்க… நர்மதா வேண்டாம் சொல்லு… என்ன இருக்கோ அதைவே நான் சாப்பிடுவேன்…” என்று நிரஞ்சன் தடுக்க.
“வேண்டாம் நிரஞ்சன் நீங்க மாத்திரை போடணும்…” என்ற விநாயகம்,
“பிருந்தா…” என்று சொல்ல,
“கால் மணி நேரம் தான். குக்கர்ல காய்கறி சாதம் வைக்கிறேன்…” என்று நகர்ந்தாள் பிருந்தா.
“நர்மதா கூட போ…” என்ற விநாயகம், “வாங்க நிரஞ்சன் வீட்டை பார்க்கலாம்…” என்று அழைத்து சென்றான்.
நிரஞ்சன் வீட்டை சுற்ற, “பத்து வருசம் ஆச்சு நிரஞ்சன் சொந்த வீடு வாங்க. முன்னவே லோன் போட சொல்லி பிருந்தா சொன்னா… எனக்கு விருப்பம் இல்லை. நிறையவே மிச்சம் பிடிச்சோம். பல திட்டம் போட்டு தான் வீடு கட்ட ஆரம்பிச்சோம். ஆனாலும் இடிச்சது… பிருந்தா நகை எல்லாம் வச்சு தான் மேல் வேலை பார்த்தேன்…” சகோதரமாக சொன்னான் விநாயகம்.
“நிஜமா நல்லா இருக்கு வீடு… எல்லாம் சூப்பர். இடம் கொஞ்சம் தான்போல…”
“ ம், எல்லாம் பிருந்தா தான். அவ இழுத்து பிடிக்கும் போது எரிச்சல், கோபம் தான் வந்துச்சு. இன்னைக்கு கடனே இல்லாம வீடு கட்டும் போது பெருமையா, நிம்மதியா இருக்கு…”
நிரஞ்சனுக்கு உள்ளே குத்தியது. அவனும் மனைவிக்கு கொஞ்சம் காது கொடுத்து இருக்கலாம். அப்பவே வீட்டுக்கு சேவ் செய்து இருந்தாலும், இவ்வளவு பணத்தை கொண்டு போய் ஷார் மார்கெட்டில் போட்டு இருக்க மாட்டான்.
அவன் சம்பளத்துக்கு பத்து வருடம் எல்லாம் வேண்டாம். ஒரு வருடத்திலேயே எடுத்து விடலாம். அப்போ எங்கே பொண்டாட்டி சொன்னதை கேட்டான். கழுதையாக கத்தும் போது, கழுதை கத்தல் என்று கண்டு கொள்ள வில்லையே…
நான் என் மனைவிக்கு ஒன்றும் செய்ய வில்லை. அவளின் சக உறவுகள் மத்தியில், தகுதியாக நிலை நிறுத்தாமல் போனேனே… எல்லோரும் ஒரு அடி முன் செல்ல, என்னால் என் குடும்பம் பின் தங்கி விட்டதே… அவ்வளவு வலி மனதில்..
இரவு தான் நிரஞ்சன் குடும்பம் கிளம்பியது. பிருந்தாக்கு தங்கையை அனுப்ப மனம் இல்லை. வீட்டில் உறவுகள் நிறைந்து நிற்க, அவள் மட்டும் போவதா…
“நிரஞ்சன், பிள்ளைக , நர்மதா இருக்கட்டுமே…”
நிரஞ்சன் மனைவி முகம் பார்த்தான். அவள் வீட்டு பக்கம் உறவுகள் அதிகாக இருக்க,
“நீ, பிள்ளைக எல்லாம் இருங்க நர்மதா. நான் காலையில வாரேன்…” அவர்களுக்காக சொன்னான்.
“ இல்லங்க வேண்டாம். நாங்க வாறோம்…” நர்மதா கிளம்ப,
“ மாப்பிள்ளை தான் சொல்றாரே நர்மதா…” என்று விஜயாவும் வர, அவளுக்கு விருப்பம் இல்லை.
“என்ன நர்மதா. உனக்கு பிடிக்கும் தான…” கணவன் கேட்க.
“அதில்லைங்க… நாம இப்போ தனியா இருக்கோம். முன்ன நீங்க வீட்டுக்கு போனா மாமா, அத்தை இருப்பாங்க. இன்னைக்கு எங்களை விட்டுட்டு போனா, வெறும் வீடு தான் இருக்கும். நாங்க இல்லாம நீங்க தனியா… உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும். நாங்க வாறோம்…” என்றதும் நிரஞ்சன் மனதில்,
அவ்வளவு நிறைவு. ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் மனைவி தனக்காக எவ்வளவு பார்க்கிறாள். முன்பு எல்லாம் அவ்வாறு யோசித்தது இல்லை. இன்று நினைக்கும் போது , என்ன ஒரு அழகான வாழ்க்கை என்னது… அதை ஒழுங்காக வாழாமல் விட்டு விட்டேன் பாரு.. வருத்தமாக இருந்தது.
“அப்ப பிள்ளைகளை நாங்க பார்த்துகிறோம் நம்மு. நீ உன் நிரஞ்சன் கூட போ…” என்று பிருந்தா, நிரஞ்சன் முகம் காட்டிய கனிவில் பிள்ளைகளை தன்னோடு இருத்தி கொண்டாள்.
நிரஞ்சன் தலையை கோதி லேசாக சிரித்து கொண்டான். புருசன், பொண்டாட்டிக்கு இடையில் புரிதல் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வாழ வாழ தான் வரும் போல….
error: Content is protected !!