Skip to content
Post Views: 5,912
மகேஷ்வரன் மகனை முறைத்துக் கொண்டிருந்தார். அருகில் அவரது மனைவி மகனுக்கும் கணவனுக்குமிடையில் ஏதும் சண்டை வந்து விடுமோ எனப் பயந்து பதற்றமாக நின்று கொண்டிருந்தார்.
தந்தையின் முறைப்பிற்கெல்லாம் அசராமல் அசால்ட்டாக அமர்ந்து இருந்தான் அவருக்கு எதிரே. “கொஞ்சமாவது புத்தியோடதான் பேசறியா நீ. உனக்கு ஏன்டா புத்தி இப்படி மட்டமா போகுது?”
நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள் அன அசட்டையாக உட்கார்ந்திருந்தான்.
“ஏ…ங்க நமக்கு இருக்கறது ஒரே பிள்ளை. அவன் ஆசைப்பட்டபடி, அவன் விரும்பற பொண்ணையே கட்டி வச்சாதான்… என்னங்க?”.
Advertisement
“ஏது? வாய மூடுடி. என்கிட்ட கைக்கட்டி சம்பளம் வாங்கறவன் வீட்லருந்து பொண்ணு எடுக்கனுமா? எனக்கு அவன் சரிசமமா? பொண்ணை இங்க கட்டிக் கொடுத்திட்டு நாளைக்கு என் முன்னாடியே சரிசமமா கால் மேல கால போட்டு உட்கார்ந்து பேசுவான், அதையும் நான் சகிச்சுக்கனுமா?” என மகேஷ்வரன் எகிறினார் அடிக்குரலில் கோவமாக.
“நாம பொண்ணைக் குடுக்கறதா இருந்தா தான யோசிக்கனும். பொண்ணு அங்க போய் வாழப் போவுதுன்னு, அவங்க வீட்ல வசதி வாய்ப்பு எல்லாம் இருக்குதானு பார்க்கனும். நாம பொண்ணை எடுக்கதானங்க… போறோம்” என்றார் கணவரது மனநிலைப் புரியாமல் அவரைப் சம்மதிக்க வைத்துவிடவேண்டும் என்ற நோக்கில்.
“இவளை… தானாவும் புத்தி இருக்காது. சொன்னாலும் புரிஞ்சுக்க முடியாது” என பல்லைக் கடித்தவர், மனைவியை எரித்துவிடுவதுபோல் கோவமாக பார்த்துகொண்டே “நல்லா ஏத்திவிடுடி அவனை. உன்னை மாதிரியே அவனையும் புத்தியில்லாம வளர்த்து வச்சிருக்க” என திட்ட ஆரம்பித்துவிட்டார்.
Advertisement
“ஏன்… இப்படி கத்தறீங்க? நான் இப்ப என்ன த…ப்பா சொல்லிட்டேன்” என பேசி அதற்கும் பேச்சு வாங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமின்றி மகனையும் திரும்பி பார்த்து வறுத்து கொண்டிருந்தார் மகேஷ்வரன்.
Advertisement
ஆனால் எதற்கும் அசருவேனா என அமர்ந்திருந்தான் சித்தார்த் கையில் தினசரியுடன்.
எதிரில் அமர்ந்திருந்த தாயும் தந்தையும் பேசியது அனைத்தும் காதில் விழுந்தாலும் எதிலும் தலையிடாமல் நியூஸ் பேப்பரிலே கவனமாக இருப்பதுபோல் அமைதியாக இருந்தான்.
கணவரின் பேச்சில் ரோஷம் வரப்பெற்று, “ஏன் என் பையனை திட்டுறீங்க? அவனுக்கு என்ன குறைச்சல்? நீங்களே எத்தனை தடவை உங்க வாயால அவனை புகழ்ந்திருக்கீங்க? அவன் வந்ததுக்கு அப்புறம்தான் பிஸ்னஸ் டெவலப் ஆகியிருக்குன்னு” என விடைத்துக்கொண்டு நின்றார் சித்தார்த்தின் அன்னை.
Advertisement
“இவளைத் திட்டறேன் அது புரியல. பிள்ளைக்காக பரிஞ்சுட்டு வரா” என முனுமுனுத்தவர், “அது வேற, இது வேறடி. எதை கொண்டாந்து எதுல இணைக்கற. பிஸ்னஸ் நல்லா பண்ணிட்டா போதுமா? தராதரம் பார்த்து யாரோட பேசனும், பழகனும்னு இருக்கு. புரிஞ்சுக்காம பேசாத”.
“பேசி பழகவே தராதரம் பார்க்கனும்னு நினைக்கறவன் நான். இந்த வீட்டுக்கு மருமகளா வரவ எப்படி எந்த மாதிரி இருக்கனும்னு நினைக்க மாட்டேனா…?”
“எனக்கு என்னோட அந்தஸ்து, கௌரவம், இது எல்லாம் ரொம்ப முக்கியம். இதை நான் எப்பவும், யாருக்காகவும் விட்டுத் தரமாட்டேன். சொல்லி வை அவன்கிட்ட. கூட சேர்ந்து நீயும் ஆடாத…” என முறைத்துக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார் கோவமாக.
செல்லும் கணவனையே சில நொடிகள் விழியெடுக்காமல் பார்த்திருந்தவர், மகனை திரும்பி பார்த்தார். ம்கூம் அவனுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பதைபோல அமர்ந்திருந்தான்.
நீண்ட பெரு மூச்சொன்றை இழுத்துவிட்டு மகனுக்கு அருகே வந்து உட்கார்ந்தவர், அவனது தோளில் கையை வைத்து தன்னை திரும்பி பார்க்கச் செய்தவர் “நீயாவது அப்பா சொல்றத கொஞ்சம் கேளேன் சித்து. உன்னோட நல்லதுக்கு தான அப்பா சொல்லுவாங்க. அவர் இவ்வளவு கஷ்டப்படறது எல்லாம் உனக்காகதான. இதுவரைக்கும் அப்பா உன் விருப்பத்துக்கு மாறா ஏதாவது பேசியிருக்காரா? இல்ல உன் ஆசைக்கு விரோதமா நடந்திருக்காரா?”
“அவர் உனக்கு கெடுதல் நினைப்பாரா? கொஞ்சம் யோசிப்பா….” என மகனின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு அவரும் எழுந்து சென்றுவிட்டார்.
தினசரியை கையில் வைத்திருந்தாலும் அவனது கவனம் எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்பு அப்பாவிடம் பேசிய சம்பாஷணையை மனம் நினைத்துக் கொண்டிருந்தது
சித்தார்த் மகேஷ்வரனிடம் அவனது விருப்பத்தைக் கூறியிருந்தான். ஆம். கனிமொழியை விரும்புவதாகத் தெரிவித்திருந்தான்.
மகேஷ்வரன் சித்தார்த்துக்கு திருமணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பித்திருந்தார். இன்று காலையில் தரகர் கொண்டு வந்து கொடுத்திருந்த வரன்களின் விவரங்களையும், அதில் இருந்த பெண்களின் புகைப்படங்களையும் மகனிடம் கொடுத்து பார்க்கும்படி கூறினார்.
அவர் அவனுக்காக வரன் பார்க்க ஆரம்பித்தது அவனுக்கு தெரிந்திருந்தது. சில நாட்களாகவே அவன் மனதில் கனிமொழியைப் பற்றின எண்ணம். அதுவும் அவள் அவர்களது கம்பெனிக்கு இன்டர்ன்ஷிப் செய்ய வந்ததிலிருந்து இந்த எண்ணம் அவன் உள்ளத்தில் உச்சம் பெற்றிருந்தது.
முதன்முதலில் அவளைப் பார்த்ததிலிருந்தே அவனுக்கு அவளைப் பிடித்திருந்தது. அவளது துறுதுறுப்பும் பேச்சும் அவனைக் கவர்ந்திருந்தது. அடுத்த முறை அவர்கள் வீட்டு திருமணத்திற்கு போகும்போதும் மனது அவளை நினைவு வைத்து தேடியது.
கனிமொழியை அரவிந்தனுடன் சேர்த்து பார்த்ததும் சித்தார்த்தின் மனதில் எட்டிப் பார்த்த பொறாமையையும் அவனால் உணர முடிந்தது. அவனுக்கு நன்றாகத் தெரியும். அவனது அப்பா இதற்கு ஒருநாளும் ஒத்துக் கொள்ளமாட்டார் என்று.
அவ்வப்பொழுது அவனது மனதில் அவளைப் பற்றின எண்ணம் வந்தாலும் அதனை ஒதுக்கி வேலையைப் பார்த்து வந்தான்.
அவனது எண்ணத்திற்கு தூபம் போடுவது போல அவள் அவனது கம்பெனிக்கே இன்டர்ன்ஷிப் செய்ய வந்தது அவனது ஆசைக்கு வித்திட்டது போலானது.
அதுவரை எப்பவாவது அவனது நினைவில் வந்து சென்றவள், தினமும் அவன் முன் பிரசித்ததில் அவனை வேறு எதுவும் சிந்திக்கவிடாமல் இம்சித்தாள்.
இருந்தும் கனியிடம் பேசவோ, பழகவோ எந்த முயற்சியும் அவன் எடுக்கவில்லை.
தந்தையின் வளர்ப்போ அல்லது அவனின் இயல்போ மகேஷ்வரனின் குணநலன்கள்தான் அவனுக்கும் இருந்தது.
பணக்கார வர்க்கத்தின் அந்தஸ்த்திலிருந்து இறங்கி வந்து சகஜமாக அவளிடம் பழகவும் அவனுக்கு மனம் வரவில்லை. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பார்களே அதுபோல இருந்தது அவனது மனநிலை.
கனிமொழியை அவனது மனம் விரும்பவும் செய்தது. அதேசமயம் தனது உயரத்திலிருந்து தானாக இறங்கி வந்து அவளிடம் சென்று பேசவோ, பழகவோ அவனால் முடியவில்லை.
சிறு பிள்ளையில் இருந்தே நண்பர்களைக் கூட அந்தஸ்து, வசதிப் பார்த்து பழகுபவனுக்கு தனது இயல்பிலிருந்து மாற முடியாமல், அவளைக் கண்களால் பார்த்து மட்டும் திருப்திப்பட்டுக் கொண்டான்.
அவள் இன்டர்ன்ஷிப் முடிந்து காலேஜ் செல்ல ஆரம்பித்ததில் அவனது கம்பெனிக்கு வருவது நின்றிருந்தது. அவளது தரிசனத்தை மட்டும் கண்டு மனதில் திருப்திப்பட்டுக் கொண்டவன், அவளது வருகை நின்றதும், அவளை எதிர்பார்த்து ஏமாந்துபோனான்.
பலதையும் எண்ணி யோசித்து குழம்பியவன், இறுதியாக மகேஷ்வரனிடம் சொல்லிவிடுவது என தெரிவித்திருந்தான் அவனது மனதை. இவன் கனியை தனக்காக பெண் கேட்கும்படி அவரிடம் சொன்னதும் அவர் அவனை வார்தைகளால் கொந்தி எடுத்துவிட்டார்.
அவளது வயதும் அவனுக்கு உறுத்தலாகதான் இருந்தது. ஆனால் ஆசைக்கு அதெல்லாம் தடையாகாதே. ஆதலால் மனதில் இருந்ததை வெளிப்படையாக வீட்டில் சொல்லியிருந்தான்.
சொன்னதற்கே மகேஷ்வரன் இத்தனை நேரம் அவனையும் அவன் அன்னையையும் வறுத்தெடுத்துவிட்டு சென்றிருந்தார். இன்னும் அவன் ஏதாவது பிடிவாதம் செய்து பேசியிருந்தால் அங்கே ஒரு பூகம்பமே வெடித்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நிச்சயம் தந்தைக்குப் பிடிக்காது. அவர் இதற்கு சம்மதிக்க மாட்டார் என நன்கு தெரிந்து கேட்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டான் மனதில்.
என்னதான் அவள் மீது விருப்பம் இருந்து திருமணமே செய்தாலும், அதோடு மட்டும் முடிவதில்லையே இது. வாழ்க்கை முழுவதும் தொடரும் பந்தமல்லவா? அவளும் அவளைச் சார்ந்தவர்களும், இரு குடும்பங்களும் ஒன்று சேரும் பந்தமல்லவா?
திருமணத்திற்கு பின்னான வாழ்வில் கனியின் வீட்டாருடன் தன்னால் சகஜமாக பழகமுடியுமா என்பது அவனுக்கே கேள்விக்குறி? அப்படியிருக்க வாழ்வில் அது சிக்கலை உருவாக்கும் என அவள் மீதான ஆசையை கைவிட நினைத்துதான் அவன் இத்தனை நாளும் அவளை நெருங்காமல் இருந்தது.
இன்று தந்தையின் மூலம் அதற்கு முற்றுப்புள்ளியும் விழுந்ததை நினைத்து வருத்தமாகவும் இருந்தது.
போராடி திருமணம் செய்துகொள்ளலாம்தான். ஆனால் அதில் சந்தோஷம் இருக்காதே. வீட்டினரை வருத்தி வேதனைப்படுத்தி கட்டாயத்தில் நடப்பதாகிவிடுமே. அந்த அளவு ரிஸ்க் எடுக்க அவனுக்கும் மனமில்லை.
இருந்தும் அவளின் நினைவுகள் அவனுள் இருக்கதான் செய்தது.
அவளை எண்ணி ஏக்கப் பெருமூச்சொன்று எழுந்தது. மனதின் ஓரத்தில் கனிமொழி தனக்கு மனைவியாக வந்துவிட மாட்டாளா என்ற எதிர்பார்ப்பு முற்றுப்பெறாமலே கலைந்து போவது போலிருந்தது.
காதல் என்பது உண்மையிலேயே ஒரு வரம். அது எல்லோருக்கும் அமைவதில்லை.
அமைபவர்கள் எல்லாம் அதே காதலோடு தங்கள் இணையுடன் வாழ்கிறார்களா என்பதும் கேள்வியே.
போராடி வாழ்வில் இணையும் போது இருக்கும் உந்துதலும் ஆசையும் ஆர்வமும் வாழும்போது தொலைந்து மறைந்து போகிறது பலரிடம்.
வாழ்க்கையின் ஓட்டத்தில் இதையெல்லாம் பார்க்க முடியுமா என்றால் அதுவும் கடினமே.
ஆத்மார்த்தமான அன்பை, புரிதலை அடைந்தும் அதனை பேணாது, மதிக்காது, அவர்களது வாழ்வியல் முறையால் சிக்கி சிதைந்து போனவர்களே இங்கு அதிகம். ஓடுகிற ஓட்டத்தில் மனிதமே மறந்து போன நிலையில், காதல் எல்லாம் எம்மாத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
ஷ்யாமளாவின் ஓய்வறையில், அவரும் கௌதமும் அமர்ந்திருந்தனர். அவர்களின் எதிரே அரவிந்தன் அமர்ந்திருந்தான். அரவிந்தனுக்கு இனியும் மனதில் இருப்பதை அன்னையிடமும், அண்ணனிடமும் சொல்லாமல் மறைக்கவோ, தள்ளிப் போடவோ விருப்பமில்லை.
ஆதலால் அவர்கள் இருவரிடமும் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தவன், இன்று அதற்கான வாய்ப்பு கிட்டியதும் அவர்களிடம் முக்கியமான விஷயம் பேசவேண்டுமென்று கூறி இருவரையும் அழைத்திருந்தான்.
அமுதினிக்கு தெரியாமல் பேசவேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு. அவள் முன் பேசினால், தன் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டு விடுவாளோ என பயந்து முதலில் தாயிடமும், அண்ணனிடமும் தன் விருப்பத்தைக் கூறி அவர்களது சம்மதத்தை அறிந்த பிறகு அவளிடம் பேசலாம் என முடிவு செய்திருந்தான்.
ஷ்யாமளா, “என்னடா? ஏதோ பேசனும்னு சொல்லிட்டு, ஒன்னும் சொல்லாம உட்கார்ந்திருக்க”.
கௌதமும் அரவிந்தனைத் தான் பார்த்திருந்தான். அரவிந்தனது முகபாவத்தில் இருந்து ஏதோ முக்கியமான விஷயம் என்பது மட்டும் புரிந்தது. எதுவாயிருந்தாலும் அரவிந்தனே வாயைத் திறக்கட்டும் என நிதானமாக அமர்ந்திருந்தான்.
அரவிந்தன், “அம்மா… எ..னக்கு க…னி…மொழியை பிடிச்….சிருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்” என்றான் அவர்களை நேர்கொண்டு பார்த்து.
ஷ்யாமளா ஓரளவு இதனை எதிர்பார்த்திருந்தார். அரவிந்தன் முக்கியமான விஷயம் உங்களிடம் பேசவேண்டும் எனக் கூறும் போதே, அவரும் இதுவாகத்தான் இருக்கும் என ஊகித்திருந்தார். அது இப்போது ஊர்ஜதமாகியிருந்தது.
ஆனால் கௌதமுக்கு அரவிந்தனது எண்ணம் இப்பொழுதுதான் தெரியும் என்பதால் அவனுக்கு திகைப்பு கலந்த ஆச்சர்யம். அவன் எதிர்பார்த்திருந்ததே வேறு. அரவிந்தனும் ரக்ஷியும் சிறு வயதில் இருந்தே ரொம்ப க்ளோஸ் என்பது அவனுக்குத் தெரியும்.
இருவரும் பெரியவர்களாகியும் அதே நெருக்கத்துடன் பழகுவதால், இருவரும் விரும்புகிறார்களோ? என நினைத்திருந்தான். அன்று ரக்ஷியை ஹாஸ்பிட்டலில் கொண்டு வந்து சேர்த்த போதும் அரவிந்தன் இருந்த தோற்றத்தைப் பார்த்து முடிவே செய்திருந்தான் மனதில், அப்படித்தான் என்று.
ஆனால் இன்று அரவிந்தன் கனியை விரும்புவாகச் சொல்லவும் அவனுக்கு ஆச்சர்யமே. அப்ப இவன் ரக்ஷியை லவ் பண்ணலயா எனதான் ஓடியது அவன் மனதில்.
ஷ்யாமளா எதுவும் பேசவில்லை, எதுவானாலும் நீயே பேசு என நேராக நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவருக்கு மனதில் கடுப்பு அரவிந்தனின் மீது. எதுவென்றாலும் அன்னையிடம் வெளிப்படையாக பேசுபவன், ரக்ஷியின் விஷயத்தில் ஏதும் தன்னிடம் பகிராமல், சொல்லாமல் இருந்தது அவருக்கு அவன் மீது கோவத்தைக் கொடுத்திருந்தது.
பின்பு அவருக்கு ரக்ஷியின் கௌன்சிலிங் மூலம் தெரிய வந்ததும், அவன் மீது சொல்லமுடியாத வருத்தம்.
ரக்ஷியின் செயலை அரவிந்தனே எதிர்பார்த்திராத ஒன்று. முதல் நாள் அவனை அழைத்து பேசிய அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்குள் அடுத்தடுத்து விடாது அவள் கொடுத்த பேரிடி அவனே எதிர்பாராதது.
காழ்ப்புணர்ச்சியில் அமுதினியை அழைத்து பேசியது, தற்கொலைக்கு முயன்றது என்று ரக்ஷி கொடுத்த தாக்கத்தில் இருந்து வெளிவருவதற்கே அவனுக்கு நெடு நாள் எடுத்திருந்தது.
அதில் ஷ்யாமளாவிடம் சொல்ல வேண்டும் என்ற நினைவே பின் சென்றிருந்தது அவனுக்கு.
தான் தன் விருப்பத்தை சொல்லியும் அன்னையிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் அவரையே பார்த்திருந்தான் அரவிந்தன்.
உன் வாயிலிருந்தே எல்லாம் வரவேண்டும். நான் எதுவும் பேசமாட்டேன் என இன்னும் இறுக்கத்துடன் அமர்ந்திருந்தார் எதிரே.
அவரது அழுத்தத்தை பார்த்தவனுக்கு, ரக்ஷியைப் பற்றி தெரிந்திருக்கிறது என சரியாக ஊகித்து அவளை சந்தித்ததையும், பேசியதையும், அன்று அங்கு மாலில் அவர்களிடையே நடந்த மொத்த பேச்சு வார்த்தையையும் போட்டு உடைத்துவிட்டான்.
ரக்ஷி இவன் மீது கொண்ட கோவத்தால் அமுதினிக்கு போன் செய்து பேசியதையும் சொல்லியிருந்தான்.
ஆனால் என்ன பேசினாள் என எனக்கு தெரியாது என, ரக்ஷியிடம் பேசிய மறுநாள் காலை அமுதினியும் அரவிந்தனும் பேசியதையும் அன்னையிடம் மறைக்காமல் தெரிவித்துவிட்டான்.
இது எல்லாம் முன்னமே தெரிந்திருந்ததால் ஷ்யாமளா எதுவும் பேசாமல் அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் எதிரில்.
பக்கத்தில் இருந்த கௌதமுக்கு அரவிந்தன் கூற கூற… அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அவன் அப்படியே அசையாமல், கண்களைகூட சிமிட்ட மறந்து, திகைத்துபோய் அமர்ந்துவிட்டான்.
அரவிந்தன் இத்தனை சொல்லியும் அன்னையிடமிருந்து எந்த எதிர்வினையும் எழவில்லையென்பதால் அவரை சந்தேகமாக திரும்பிப் பார்த்தான்.
அவரது பார்வையிலிருந்து அவருக்கும் ஏற்கனவே இதுபற்றி தெரிந்திருக்கிறது என தெரிந்து கொண்டவனுக்கு கடுப்பானது.
ஆக… நான் மட்டும் தான் இந்த வீட்ல எதுவும் தெரியாம இருந்திருக்கேனா என புசு புசுவென கோவம் வந்தது.
இவ்வளவு காலம் அண்ணன் தம்பி போல் இல்லாமல் தோழர்களைப் போல இருந்த சகோதரர்களிடையே மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்தது.
யாருமே தன்னை ஒரு பொருட்டாக நினைத்து எதையும் சொல்லவில்லையே என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒருங்கே வந்தது கௌதமுக்கு.
அரவிந்தன் தன்னை மதித்து இதெல்லாம் சொல்லவில்லையே என ஆதங்கம் வந்திருந்தது என்றால், மனைவி தன்னிடம் பகிரவில்லையே என்ற ஆத்திரம் வேகத்தை கூட்டியது.
அவளிடம் இன்னும் தான் சகஜமாக பேசவே ஆரம்பிக்கவில்லை, அவளுடன் பேசி பழகி அந்த நம்பிக்கையை கொடுத்திருந்தால்தான், மனைவியிடம் இருந்து இதையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற தெளிவு எல்லாம் பின்னுக்கு சென்றிருந்தது.
இப்போது தான் ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்திருப்பவனிடம் அவள் எப்படி வந்து சொல்லுவாள் என யோசித்து பார்க்கும் அறிவுத் திறனில் அவன் மனம் நிதானமாக இல்லை.
ஓஹ் இதை நினைச்சிதான் அன்னைக்கு இரண்டு நாளும் அழுதிட்டிருந்தாளா? நான்கூட கண்ணு முகம் எல்லாம் வீங்கற அளவுக்கு ஏன் அழுதான்னு தெரியாம யோசிட்டிருந்தேன்.
அப்படி என்னதான் பேசினா… ரக்ஷி போன்ல? அரவிந்த்கிட்ட கூட சொல்லல. சரியான அழுத்தக்காரிதான்.
எல்லாம் இந்த அம்மாவ சொல்லனும். இவங்க கொடுக்கற இடம். திமிர் பிடிச்சவ… என மனதில் மனைவியை பொரிந்துக் கொண்டிருந்தான்.
அரவிந்தன் முழுமையாக சொல்லி முடித்ததும் இதை நான் எதிர்பார்த்தேன் என ஷ்யாமளாவிடம் இருந்து நீண்ட பெருமூச்சொன்று எழுந்தது. அவருக்கும் தெரியும் அவன்மீது தப்பில்லை என்று. ஆனால் நிதானமாக கையாண்டிருக்கலாம் என்பது அவரது எண்ணம்.
அவரிடம் சொல்லியிருந்தால் ரக்ஷியின் பெற்றோருக்கு தெரியப்படுத்தி, அவளிடம் பொறுமையாக எடுத்துச் சொல்ல சொல்லியிருக்கலாம். எதற்குமே சந்தர்ப்பம் கொடுக்காமல் எல்லாம் அதிவேகமாக நடந்து முடிந்திருந்ததை எண்ணி அவருக்கு வருத்தம்.
அதை அரவிந்தனிடமும் கேட்டிருந்தார் ஷ்யாமளா. “இப்ப பேசற நீ, இத அவள் உன்கிட்ட பேசனதும், ஏன்? என்கிட்ட சொல்லல? இல்ல அவளோட பேரன்ட்ஸ் கிட்டயாவது சொல்லியிருக்கலாமில்ல. இது என்ன? சின்ன பசங்க விளையாட்டா உங்களுக்கு?”
“பெரியவங்கன்னு நாங்க இருக்கறது உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்ல அதுவும் மறந்து போச்சா…?” என காய்ந்தவர் “உங்களைப் பெத்து ஆளாக்கி கஷ்டப்பட்டு வளர்த்தா…. நீங்க பெத்தவங்களை மதிக்காம உங்க இஷ்டத்துக்கு நடப்பீங்களா…? அப்புறம் நாங்க எதுக்குடா? இப்ப மட்டும் ஏன் வந்து என்கிட்ட சொல்றே? நீ தான் பெரிய மனுஷன் ஆயிட்டயே”.
“பொண்ணெல்லாம் வேற பார்த்துட்ட. அப்படியே கல்யாணமும் பண்ணிக்க வேண்டியதுதான? இப்ப மட்டும் அம்மா வேணுமா உனக்கு? அப்ப உங்களுக்கு தேவைன்னா மட்டும்தான் பெத்தவங்களா…? உங்களுக்கு பேவரா நடந்தா மட்டும்தான் பெத்தவங்களா…? நல்லது கெட்டது எதுன்னு நாங்க எடுத்து சொல்லக்கூட கூடாதா…? கேட்டா அட்வைஸ்ன்ற பேர்ல அறுக்காதீங்கன்னு டையலாக் அடிப்பீங்க” என மகனை வாட்டி எடுத்துவிட்டார் வார்த்தைகளால்.
அவரது வார்த்தைகள் ஓவ்வொன்றும் கூர் அம்புகள் போல அவனைத் தாக்கியது. அவர் கேட்பது நியாயம் என உணர்ந்ததால் அவனால் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக தலை குனிந்திருந்தான் அரவிந்தன்.
“உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கறது எதுக்கு? இப்படி சொல்லாம கொள்ளாம ஆடறுதுக்கா? பசங்களை அடச்சி வளர்க்க வேணாம், அவங்க சுதந்திரமா இருந்தாதான், தன்னிச்சையா செயல்படமுடியும். எதையும் தனியா பேஸ் பண்ற மன வலிமை, தைரியம் வரும். எதிர்காலத்துல வர எந்த பிரச்சினையும் பார்த்து கோழையாட்டம் பயப்படாம தைரியமா எதிர்த்து போராடுவாங்கன்னு தான் உங்களை பிரியா விடறது”.
“அதை சரியா புரஞ்சுக்காம, பெத்தவங்களையும் மதிக்காம நடக்கறீங்க. படிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சதும் நீங்க என்ன சொல்றது? நாங்க என்ன கேட்கறதுன்ற ஆணவமா? உன்கிட்டயிருந்து இதை நான் எதிர்பார்க்கல அரவிந்த்” என்று காய்ச்சி எடுத்துவிட்டார் வார்த்தைகளால்.
“அம்…மா… அப்படிலாமில்ல. நான் உங்ககிட்ட சொல்லாதது தப்புதான். ரக்ஷி மனசுல இப்படி ஒரு ஆசை இருக்கும்னு எனக்கே தெரியாது. அவள் என்கிட்ட சொன்னப்பகூட, நான் பொறுமையா… நிதானமாதான் அவளுக்கு என்னை புரிய வச்சிடனும்னு பேசினேன்”.
“ஆனால் அவள் நான் பேசறதையே புரிஞ்சுக்காம அவளோட எண்ணத்திலேயே பிடிவாதமா இருந்ததாலதான் நான் அன்னைக்கு அப்படி பிஹேவ் பண்ணவேண்டியதா போயிடுச்சு” என்றான்.
“ஓஹ்…! சாருக்கு ஒரு நியாயம் அவளுக்கு ஒரு நியாயமா…? எப்படி நீங்க ஒருத்தியை மனசுல நினைச்சிட்டிருக்கீங்களோ, அப்படிதான அவளும். நீங்க ரொம்ப யோக்கியமா…?”
“உனக்கிருக்க பீல்தான அவளுக்கும். அவள் இடத்துல நீயிருந்திருந்தா? உனக்கு அப்படி ஒரு சூழ்நிலை வாய்ச்சிருந்தா…?” என்றார் கோவமாக அவனை அடித்துவிடுவதுபோல.
“நீ ஆசைப்பட்ட பொண்ண அந்த இடத்துல வச்சிப் பாரு. நீ உன் விருப்பத்தை சொல்லி அவள் மறுத்திருந்தா…? நிராகரிச்சிருந்தா..?”
“ம்மா… அப்படி சொல்லா…தீங்க… ப்ளீஸ்…”
“ஏன்? ஏன் சொல்லக் கூடாது. உன்னை சொன்னதும் வலிக்குதா….? அப்படிதான… ரக்ஷிக்கும் இருந்திருக்கும். நீயும் கனியும் இதை மாதிரி சின்ன வயசுல இருந்து ஒன்னா பழகி, நீ கனி மேல விருப்பப்பட்டு, அவள் உன்னை வேண்டாம்னு மறுத்திருந்தா…. உன் மனசு என்ன பாடு பட்டிருக்கும்…?”
“அ..ம்…மா… நான் ரக்ஷியோட பழகுனது பிரண்ட்லியா நினைச்சு. எந்த உள் நோக்கமும் இல்ல. அவளை சின்ன வயசுல எப்படி பார்த்தனோ அப்படிதான் இப்பவும் பார்க்கறேன்”.
“நான் எந்த விகல்பமும் இல்லாமதான் அவள்கிட்ட பேசி பழகினேன். அதை அவள் தப்பா புரிஞ்சுகிட்டா… நான் என்ன பண்ண முடியும்?” என சலித்து கொண்டான்
“நீ அந்த மாதிரி எண்ணத்தில பழகலனாலும் அவளுக்கு மனசுல அந்த மாதிரி ஆசை வரது ஒன்னும் தப்பில்லையே. நீ அவளை கட்டிக்கற முறை வேற. அதனால அவள் மனசுல ஈசியா அந்த எண்ணம் வந்திருக்கும்”.
“அத்தைப் பையன். கட்டிக்கற முறை. இரண்டு பேரும் க்ளோஸா பழகறதால உனக்கும் அவளைப் பிடிச்சிருக்கு. வீட்ல சொன்னா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்கன்னு, அவள் மனுசுல இதை ஈசியா நினைச்சிருக்கலாம்”.
“அதனாலகூட அவள் மனசுல உன் மேல ஆர்வமும் ஆசையும் வந்ததுக்கு பின்னாடியும் சொல்லாம விட்டிருக்கலாம். எப்படியும் நீ மறுக்கமாட்ட. வீட்லயும் ஒத்துப்பாங்கன்னு மனசுல மேல மேல ஆசையை வளர்த்து இருக்கலாம் இல்ல”.
“நீ திடீர்னு நான் உன்னை அந்த மாதிரி நினைக்கவேயில்ல. சாதாரணமா பிரண்டாதான் பழகினேன்னு சொன்னதும் அவளால தாங்கிக்க முடியல. அவள் பக்கமிருந்தும் யோசிச்சு அவளோட உணர்வுகளுக்கும் மதிப்பு குடுத்துப் பார்த்தியா?”
அவரது கேள்விகள் அவனுக்கு ரக்ஷியியன் பக்கம் இருக்கும் நியாயத்தையும் எடுத்துரைத்தது. அவனே மனதில் குற்றவுணர்ச்சியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தான். இத்தனை நாட்களும் ரக்ஷி தற்கொலைக்காக முயன்றதை எண்ணி.
எத்தனை க்ளோஸாக பழகினார்கள் இருவரும். இந்த சம்பவத்திற்கு பிறகு இருவருக்குமான பேச்சுவார்த்தையே நின்றிருந்தது.
அவனுக்கு அவளிடம் சென்று பேசி அவளை சமாதானப்படுத்த எண்ணம் இருந்தாலும், என்னவென்று போய் பேசுவது என தெரியவில்லை. தன்னை பார்க்காமல் இருந்தாலாவது தன்னை அவள் மறக்க முயலலாம் என எண்ணி அவளைப் பார்த்து பேசும் எண்ணத்தைக் கைவிட்டிருந்தான்.
அன்று மட்டும் அவன் அந்த சமயத்துக்கு சரியாக அங்கே செல்லாமல் இருந்திருந்தால் அவளது நிலைமை நினைக்கவே மனதுக்குள் நடுக்கமாக இருந்தது.
அவளின் அந்த எதிர்பாராத செயல் அவனை மனதளவில் புரட்டிப் போட்டிருந்தது. அவளை கொண்டு வந்து ஹாஸ்பிட்டலில் சேர்த்து, அவள் உயிர் பிழைக்கும் வரை அவளை எண்ணி அவன் துடித்த துடிப்பு அவனுக்கு மட்டும்தான் தெரியும்.
அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து உருவகப்படுத்திட முடியாது. அதை இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சம் பதறியது.
இதோ எதிரில் அமர்ந்திருந்த ஷ்யாமளாவும் அவனிடம் அதையேதான் கேட்டிருந்தார். “அன்னைக்கு மட்டும் ரக்ஷிக்கு ஏதாவது ஆயிருந்தா…? அவள் தெய்வாதீனமா உயிர் பிழைச்சிட்டா. ஏதாவது அசம்பாவிதமா நடந்திருந்தா” என நடுங்கிய குரலில் வார்த்தைகளை தடுமாறி உதிர்த்தவர் தொண்டையை அடைத்த துக்கத்தை மறைக்க, கலங்கிய கண்களை மகன்களுக்கு காட்ட மறுத்து முகத்தை அழுந்த மூடிக் கொண்டார்.
அவரது வேதனையைப் பார்த்து மக்கள் இருவரும் துயரப்பட்டார்கள். கூடவே கலக்கமும் சேர்ந்துகொண்டது இருவரிடையே. இதுவரை அவர் இப்படி எதற்கும் கலங்கி நின்றதில்லையே.
பதறிய அரவிந்தன் “அம்மா… ப்ளீஸ்…, இங்க பாருங்க. நான் இப்படிலாம் நடக்கும்னு நிச்சயமா எதிர்பார்க்கலமா… பீல் பண்ணாதீங்க. ப்ளீஸ்மா. சாரி…” என்றான் அவருடைய கைகளை பிடித்து கண்களில் கலக்கத்துடன் வருத்தம் தோய்ந்த குரலில்.
இப்போது கௌதம் அரவிந்தனை முறைத்து கொண்டிருந்தான்.
கௌதமை திரும்பி பார்த்த அரவிந்த் “ப்ளீஸ் ண்ணா… நீயும் அப்படிப் பார்க்காத. நான் என்ன வேணும்னா… அப்படி பண்ணேன்? ஏதோ தெரியாம நடந்துடுச்சு” என்று மன்னிப்பு கேட்டான் அவனிடமும்.
கௌதமுக்கும் அரவிந்தனை மேலும் நோகடிப்பதில் விருப்பமில்லை. அவனே இதை எண்ணி வருத்தத்தில் இருக்கிறான் என்று தெரியும். ரக்ஷியை இங்கு கொண்டு வந்து சேர்த்த அன்று அரவிந்தன் இருந்த நிலைமையை கண்கூடாக பார்த்திருந்தவனாயிற்றே.
சாப்பாடு, தூக்கம் எல்லாம் மறந்து வேதனையின் உச்சத்தில் இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் உட்கார்ந்திருந்தவனை பார்த்திருந்தானே.
அந்த இரண்டு நாளும் வீட்டிற்கு கூட செல்லாமல் தன்னை மறந்து இங்கேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்தவனை, எழுப்பி வீட்டிற்கு வலுக்கட்டாயப்படுத்தி அழைத்து சென்றது கூட கௌதம் தானே. ஆதலால் அவனை ஏதும் சொல்லாமல் அமைதியாகி அன்னையை தேற்ற ஆரம்பித்தான்.
“விடுங்கம்மா… தெரியாம பண்ணிட்டான். அதான் எதுவும் நடக்கலல. இதோட விடுங்க” என்று அன்னையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.
தொடரும்.
error: Content is protected !!