Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

00 உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 0

சலசலவென மெல்லிய இசையை எழுப்பிக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தது அந்தச் சிற்றோடை. மரத்திலிருந்து உதிர்ந்த இலைகளும் மலர்களும் அதில் கப்பல்களாக மிதந்து சென்று கொண்டிருந்தன. பாறைகளை இடித்துக் கொண்டும் தழுவிக் கொண்டும் ஓடும் நீரை, அமைதியாக வேடிக்கை பார்த்து அவன் நின்றிருக்க, அதில் மிதந்து கொண்டிருந்த கப்பல்களுக்கு என்ன அவசரமோ?

அவசரமாக ஓடிக் கொண்டிருந்த அந்த மஞ்சள் கலந்த பச்சை இலையின் நடுவே சிறு கல் ஒன்றைத் தூக்கிப் போட்டான் வீர். எந்த பிகுவும் செய்யாது கல்லையும் சுமந்து கொண்டே இலை அதன் ஓட்டத்தைத் தொடர்ந்தது. முதுகில் கடமை என்ற சுமை ஏறினாலும், மனதில் எண்ணங்கள் என்ற பாரங்கள் ஏறினாலும் நாமும் இப்படித் தானே சுகமான சுமைகளைத் தூக்கிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கிறோம்.



Advertisement

இலை சுமந்து செல்லும் கல்லைப் போல் அவன் மனம் யசோவை மட்டுமே ஏந்தியிருந்தது. அவளைப் பார்த்து நாள்கள் கடந்துவிட்டன. அவளை விட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கக் கூடாதோ? இப்பொழுதெல்லாம் அவளை மனம் அதிகம் தேடுகிறது. மனம் மட்டுமா? உடலும் தான்.

இறக்கமற்ற இரவுகளைக் கடக்க அவளின் கதகதப்பு தேவைப் பட்டாலும் அதை அனுபவிக்கும் நிலையில் அவனில்லை. அதற்கான முழு உரிமையும் இல்லை. இன்னும் எத்தனை மாதங்கள் இந்தப் பிரிவு? பிரிவு என்ற எண்ணமே கசந்தது. இன்று வரை உடல்கள் மட்டும் பிரிந்து இருக்கின்றன.  சில தினங்களில்? நினைக்கவே பிடிக்கவில்லை அவனுக்கு.

மனதில் தோன்றிய எண்ணங்களோடே குட்டி பாறைக்குப் பின்னால் இலை மறையும் வரை அதையே பார்த்து நின்றான் வீர். அந்த அதிகாலை தென்றல் அவன் அனுமதியின்றி, அவன் அடர்ந்த கேசத்தைக் கலைத்து விட்டுக் கொண்டிருந்தது. இன்று அவன் அன்னை அவன் அருகில் இருந்திருந்தால், அவன் கேசம் இருக்கும் லட்சணத்திற்கு, கேசத்தைத் தன் மென் விரல்களால் தென்றல் போல் வருடி, “இந்த முடிய வெட்டினா என்னடா?” என கண்டிப்பாகக் கேட்டிருப்பார்.

Advertisement

வீட்டுப் பெரியவர்கள் யாரேனும் ஒருவர் பார்த்திருந்தாலும் கேட்டிருப்பார்கள். ஆனால் அவன் அதைக் காதில் வாங்குவானா என்பது கேள்விக் குறியே. இன்று அவன் குடும்பத்தோடு இல்லை என்பதால் கேட்பார் இல்லை. சில மாதங்களாகக் கத்திரிக் கோலை பார்த்திருக்கவில்லை அவ்வளவு தான், மற்றபடி பராமரிப்பெல்லாம் பலமாகவே நடந்து கொண்டிருக்கிறது கடைசி நாள்களில் இருக்கும் அந்தக் கருநிற அடர் கேசத்திற்கு.

Advertisement

“என்ன டா சீக்கிரம் முழுச்சுட்டியா?” எனக் கேட்டுக் கொண்டே, ஒரு கோப்பை இனிப்பற்ற இஞ்சி மல்லி தேநீரை இவனிடம் நீட்டிய நண்பன், மற்றதைத் தன் அதரம் நோக்கி எடுத்துச் சென்றான்.

“ம்ம்” என்றவன் வாயிலைப் பார்க்க, “விக்கி இன்னும் எழுந்துகல” என்றான் ஜீவன்.

“இன்னைக்கு கிளம்பறோம்ன்னு சீக்கிரம் எழுந்தியா வீர்?”

Advertisement

“அதிக குளிரும் இல்லாத வெயிலும் இல்லாத… விடிஞ்சும் விடியாத பொழுது அழகு டா ஜீவா” என்றவன், “இயற்கைய… குருவி சத்தத… முழுசா ரசிக்கணும்ன்னா இதுதான் நேரம்” என்றான் அருகில் நின்றிருந்த நண்பனிடம்.

சுற்றி இருந்த பெரிய பெரிய மரங்களை நோட்டம் விட்டான் ஜீவன். அவன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த நீள வெண் மலர்கள் மரத்தையும், பிடியைத் தளர்த்திய மலர்கள்… தரையையும் வெண் கம்பளியாய் போர்த்தி இருந்தன. தலைக்கு மேல் நீண்டிருந்த மரக்கிளை ஒன்றை ஜீவன் இழுத்துவிட அதில் குற்றுயிரும் குலையுயிருமாகத் தொங்கிக் கொண்டிருந்த மலர்களோடு பனித்துளிகளும் சரலாய் அவர்களைக் குளிர்வித்தன.

“நல்லா தான் இருக்கு. ஆனா உன்னளவுக்கு எல்லாம் அனுபவிச்சு ரசிக்கிறது இல்ல வீர். உன்ன மாதிரி என் காதலும் நிலைச்சிருந்தா, இத எல்லாம் ரசிச்சு இருப்பேனா இருக்கும்” என்றவன், அங்கிருந்த கல் இருக்கையை அலங்கரித்திருந்த வெண் மலர்களைத் தள்ளிவிட்டு அதில் அமர்ந்தான். ஜீவனை விட்டுச் சென்ற காதலைப் பற்றியோ கடந்த காலத்துக் காதலியைப் பற்றியோ இருவருமே பேசிக் கொள்ளவில்லை.

ஸ்வெட் பேன்டும் கையில்லா டீ-ஷர்ட்டுமாக அமர்ந்திருந்தவனுக்கு இவனைப் போல் அல்லாது ஒட்ட வெட்டிய திருத்தமான கேசம். அதனால் தென்றல் காற்றிற்கு இவனிடம் விளையாட விருப்பம் இல்லாது அவன் பொன்னிற மேனியை மட்டுமே தழுவிச் சென்றது.

ஒட்ட வெட்டப்பட்ட கேசம் என்பதால் இவன் வலது காதின் கீழ்… பிடரியில் ‘ஆர் வி’ என்ற ஆங்கில எழுத்துகளும் அதன் அருகே நங்கூரமும் பச்சை குத்தியிருப்பது நன்றாகவே தெரிந்தது.

காதல் தோல்வி ஆனப்பின், அழுத்தம் குறைக்க வீரும் இவனும் செய்த சேட்டைகளில் அதுவும் ஒன்று. இப்பொழுதும் கூட வீரின் அழுத்தம் குறைக்க புதிதாக இதயம் ஒன்று வீரின் மார்பில் குடிகொள்ள… “எனக்கும் ஆள் கிடைக்கும். நானும் சீக்கிரம் போட்டுப்பேன் டா” என்றிருந்தான் ஜீவன்.

“சில்லுன்னு இருக்கு டா மச்சான்” என்றான் இனிப்பான தேநீரைப் பருகியவாறு.

இவனைப் போலவே அகன்ற மார்பும்… திரண்ட தோள்களும்… அசரடிக்கும் புஜங்களும்… அகன்ற நெற்றியுமாக ஆண்மகனுக்கே உரிதான முழு இலக்கணமுமாக அமர்ந்திருந்தவன் பக்கம் திரும்பினான் வீர்.

“மலைக்கு மேல… காட்டுக்குள்ள இந்த அளவு கூட இல்லாட்டா எப்படி டா ஜீவா?” என்றான் மென் புன்னகையோடே.

இன்று, இதை வனம் என்று கூறிவிட முடியாது… ஆனாலும் அப்படிதான் இருந்தது பல நூறு ஏக்கரில் இருந்த அந்த ரெசார்ட் வளாகம். இப்பொழுதெல்லாம் காட்டை அழிப்பதும் மலையை ஆக்கிரமிப்பதும் அப்படி ஒன்றும் கடினமில்லையே. அதனால், ஒரு மலையும் அதன் காடும், தனிமை மற்றும் இயற்கை விரும்பிகளுக்கான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகி இருந்தது.

நான்கு இரவுகளாக இங்கு தான், மேற்குத் தொடர்ச்சி மலையில் நண்பர்களின் வாசம். முன்பெல்லாம் கேம்பிங், டிரெக்கிங், ஹைக்கிங் என வருடத்திற்கு ஒரு முறை தங்களின் விடுமுறை நாள்களைச் சுறுசுறுப்பாக, வடக்கில்… மலை ஏறிக் கழிப்பர். இது ஒரு புது அனுபவம்.

அமைதியான… சோம்பலான அனுபவம். வாழ்ந்த வாழ்க்கையை… கடந்து வந்த பாதையை, ஒருமுறை அமைதியாக, நிம்மதியாக அசைபோட ஏதுவாக இருக்கும் அனுபவம். இது முற்றிலும் அவனுக்காகவே, கடைசியாக ஒரு முறை உயிர் தோழர்களோடு நேரம் செலவழிக்கவென ஏற்படுத்தியது.

விக்ரமிற்கும் மாற்றம் தேவைப்பட்டிருக்க, “அடுத்த வருஷம் உனக்கு எங்க நினைவு இருக்குமோ என்னவோ? இப்போவே ஒரு வாரம் சேர்ந்து இருந்துடுவோமே” என அவன் தான் இந்த இடத்தை தேர்வு செய்தான்.

ஒரு சில வருட நட்பு இவர்களது. வெவ்வேறு கல்லூரி… சம்பந்தமே இல்லாத வெவ்வேறு படிப்பு… வெவ்வேறு வயது என்றிருந்தாலும் மூவரையும் தமிழ் என்ற ஒரு விஷயமே வெளியூரில் படித்துக் கொண்டிருந்த அவர்களை ஒன்று சேர்த்தது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்து… பேசி… நட்பாகி… ஒன்றாய் வசித்து என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாது அறை தோழர்களாக ஆரம்பித்த நட்பு இன்று ஆழ வேர் பிடித்து நிற்கிறது.

காபி கோப்பை காலியாகி இருக்க அதை நண்பன் இருந்த கருங்கல் இருக்கையில் வைத்தான் வீர். மீண்டும் கைகள் இரண்டும் குளிருக்கு இதமாக பேன்ட் பாக்கெட்டில் நுழைந்து கொண்டன. தென்றல் வீசியது. செடிகளும் மரக்கிளைகளும் நாட்டியமாடின. மலர்கள் சிரித்தன. குருவிகள் இசைத்தன.  கண்களை மூடி தலையைப் பின்னுக்குச் சாய்த்தவன் மூச்சை ஆழமாக உள்ளிழுத்தான். பன்னீர் மலர்கள் அதன் வாசத்தை நாசி வழி அவனுள் அனுப்பின. இது ஏகாந்தம். மனம் முழுவதிலும் ஓர் அமைதி.

மீண்டும் அதே வாசம். அன்று, அவனை ஈர்த்து வீரை தன்னுள் புதைத்த அந்த ஈர இதழ்களில் இதே வாசம் தான் மந்தமாக வீசியது. அந்தக் காது மடல்கள்… ஆம்… இதே வாசம் தானே அவள் காது மடல்களிலும். அவ்வளவு தானா? இல்லையே… அவளின் கூந்தல், மார்பு எனப் பன்னீர்ப் பூக்கள் அதன் தடத்தைப் பதித்திருந்ததை இவன் நாசி முகர்ந்ததே.

அன்றைய நாளின் இனிமையை மனம் மீண்டும் அசைபோட்டது. காதலாய் ஆரம்பித்து, காமமாக மாறி, அவர்கள் இருவருக்கும் இடையே நிலவிய உஷ்ணம்… அவன் கைகள் உணர்ந்த அவளின் இளமைகள்… இவன் கைகளுக்குள் அவள் துடித்த துடிப்பு… அவள் முனகலாய் ஜெபித்த இவன் பெயர்… மார்பில் வழிந்த அவள் வியர்வை… அதில் எழுந்த பன்னீர்ப் பூவின் மணம்… அன்று போலவே இன்றும் இதயம் அதி வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

பட்டென அவன் முகத்தின் மீது மலர் ஒன்று விழ, சிறகில்லாது எங்கோ பயணப்பட்டுக் கொண்டிருந்தவன் தரை இறங்கினான். தவத்தைக் கலைத்த மலரை கையில் எடுத்து கண்கள் திறந்து பார்த்தான். நீளமான வெண்மை நிறப் பன்னீர் பூ. ஆழ முகர்ந்தான். அவனுள் ஆழ இறங்கியிருந்தவள் ‘ஏன் இப்படி ஆகிட்ட?’ என அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

‘எல்லாம் உன்னால தான் டி’ என உள்ளுக்குள் சிரித்தான். அது முகத்திலும் தெரியத்தான் செய்தது. பன்னீர்ப் பூவை மென்மையாக வருடினான். மலரின் இதழ் என்று நினைத்து வருடினானா? இல்லை அவன் மலரின் இதழ் என நினைத்து வருடினானா அவன் தான் அறிவான். மெல்ல வருடியவன், ஏதோ நினைவு வந்தவனாக மலரின் நீளக் காம்பை வாயில் வைத்து ஊதினான்.

“என்ன டா மச்சான் பண்ற?” என்ற நண்பனின் சத்தம் கேட்டுச் சிரித்தான் வீர். அதில் வெட்கம் கலந்திருந்ததோ?

“என்ன டா உன் தேவதை நினைப்பா?” எனக் கேட்ட ஜீவனின் முகத்திலும் புன்னகை. தேவதையா? காயங்களுக்கு மருந்திட்டால் தேவதை தானே? அதனால் அவள் வீரின் தேவதையே தான், சந்தேகம் வேண்டாம்.

“இப்படித் தான் டா ஊதுவா. அவ ஊதினா சத்தம் வரும். எனக்குக் காத்துத் தான் வருது” என மலர்ந்து சிரித்தவன் பார்வை கையில் இருந்த பன்னீர்ப் பூவில்.

“சத்தம் வருமா?” எனக் கேட்டவன் அவன் அருகே கிடந்த ஒரு பூவை எடுத்தான். மலரை இதழ் அருகே கொண்டு செல்லும் முன் நினைவு வந்தவனாக, “புக்க எழுதி முடிச்சுட்டியா?” எனக் கேட்டான்.

“ம்ம்ம்” என்ற வீரின் முகத்தில் ஜீவன் வடிந்து போனது.

“ஒண்ணும் ஆகாது டா. மெடிசின் வளர்ந்துடுச்சு வீர்” என்றான் தோழனின் தோளை அணைத்து.

நண்பனைத் திரும்பிப் பார்த்தவன், “அவ மேல உயிரையே வச்சிருக்கேன் டா. என் வாழ்க்கையோட முக்கு முடுக்குன்னு எல்லா இடத்தையும் நிரப்பினவடா அவ. அவள மறந்து போயிடுவேனோன்னு நினைக்கும் போது மனச போட்டு பிசையுது ஜீவா. எல்லாம் முடிஞ்சு… நான் கண்விழிச்சதும் அவள மறந்து, நான் அவள விட்டுத் தள்ளி போயிட்டா அவ என்னடா பண்ணுவா?”

“உளராத வீர். ஒண்ணும் ஆகாது. மனுஷனுக்கு முதல் எதிரியே பயமும் டென்ஷனும் தான். நல்லா இருப்பேன்னு நீ நம்பு முதல்ல.”

“எனக்கும் அவளுக்கும் ஒரு ஜென்மப் பந்தம் டா. என் வாழ்க்கையோட மட்டும் இல்ல… அவ வாழ்க்கையோட எல்லா முக்கு முடுக்குலயும் நான் இருக்கேன் டா ஜீவா. அவ உலகமே நான் தான் ஜீவா. நான் அவள மறந்துட்டா, அவ உடைஞ்சு போயிடுவா டா.”

“டேய் மச்சான், உனக்கு ஒண்ணும் ஆகாது டா. நீ பிழைச்சு நல்லபடியா வருவ. ‘இவ தான் டா உன் தங்கச்சி’ன்னு எனக்கு அறிமுகப் படுத்துவ. உங்க கல்யாணத்துக்கு அவ அண்ணனா உனக்கு நான் தான் முறை செய்வேன்” என்றான் உறுதியாக.

“இந்த ஹார்ட் பீட் இருக்க வரை…என் உயிர் இருக்க வரை, ஒரு அம்பது வருஷமாவது அவ கூட வாழுவேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன் டா. அவளுக்காகவாது இருக்கணும் டா.” என்றான் இதயத்தை வருடி.

“கண்டிப்பா வீர். ஒண்ணா… சண்டை போட்டு, அழுது, சிரிச்சு, பேரன் பேத்தி பார்த்து… தல நரைச்சு… கிழவன் கிழவியா, அம்பது இல்ல அறுபது வருஷம் அரோகியமா வாழுவீங்க டா” என்றான் வாஞ்சையோடு.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!