Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 24

ரக்‌ஷி அந்த காபி ஷாப்பில் அரவிந்தனுக்காக காத்திருந்தாள்.  அரவிந்தன் போன் செய்து ரக்‌ஷியை பார்த்து பேச வேண்டும் என கேட்டதும் முதலில் முடியாது என் மறுத்தவள், அவனது வற்புறுத்தலின் பேரில் வந்திருந்தாள்.

தூரத்திலிருந்து வரும் போதே அவளைப் பார்த்துக்கொண்டுதான் வந்தான் அரவிந்தன்.  உடல் மெலிந்து கண்கள் சுற்றி கருமை படர்ந்திருந்தது.  எப்போதும் சிரிப்புடனும் துறுதுறுப்புடனும் இருக்கும் முகம் களையிழந்து சோர்ந்திருந்தது.

இவனைப் பார்த்தாலும் கண்களில் எந்த பாவனையையும் காட்டிக் கொள்ளவில்லை.  மொத்தத்தில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள்.  அவளின் எதிரில் வந்து அமர்ந்தவன் அவளைப் பார்த்து சிரிக்க முற்பட்டு, “எப்படியிருக்க…. ரக்‌ஷி…? என்றான்.

அவளைப் பார்க்க அவனுக்கே வருத்தமாக இருந்தது.  ஏதோ இந்த கொஞ்ச நாட்களிலேயே நிறைய மாற்றங்கள் தெரிந்தது அவள் மேனியில்.



Advertisement

அழுத்தமாக அவனை ஒரு பார்வை பார்த்தவள் “ம்ம்…” என தலையசைத்தாள்.

பதிலுக்கு அவனை எப்படியிருக்கிறாய்….? எனக் கேட்கவும் இல்லை.  பேசவும் முயற்சிக்கவில்லை.  ஆனால் கண்கள் மட்டும் அவன் மீதுதான் இருந்தது.  அதை அவள் விலக்கவில்லை.

“ஏன்.. இப்படி இளைச்சு போயிட்ட?  சரியா சாப்பிடறதில்லையா…?” என்றான் அக்கறையாக.

Advertisement

அவளுக்கு அவனைப் பார்க்கவே எரிச்சலாக வந்தது.  எதற்கு வர சொன்னான்? என்று சொல்லி முடித்தால் கிளம்பலாம் என்று தோன்றியது மனதில்.  இருந்தும் வாய்விட்டு எதையும் சொல்லாது அழுத்தமாக அமர்ந்திருந்தாள்.

Advertisement

“எதுவும் பேசமாட்டியா ரக்‌ஷி…, என்கிட்ட….?”

இப்ப என்ன சொல்லனும் இவனுக்கு.  நான் நல்லாயிருக்கேன்னு சொல்லனுமா…?  என அவனை உறுத்து விழித்தாள் பார்வையால்.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், “உனக்கு என் மேல நிறைய கோவமிருக்கும்னு எனக்குத் தெரியும்.  அன்னைக்கு உன்கிட்ட பேசிட்டிருக்கும் போதே உன்கிட்ட சொல்லாம கொள்ளாம எழுந்து போனதிலிருந்து இப்பவரைக்கும்” என்றான் பூடகமாக.

Advertisement

அவள் மனதிலும் கோவம் அவன் மீது கனன்றுகொண்டு தான் இருந்தது.  அவள் ஹாஸ்பிட்டலில் இருக்கும் போதும் சரி, அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தும் சரி, இத்தனை நாட்களில் அவன் வந்து பார்ப்பான், அட்லீஸ்ட் போனிலாவது பேசுவான் என எதிர்பார்த்தவளுக்கு பெருத்த ஏமாற்றமே.

இப்ப மட்டும் எதுக்கு வர சொன்னான் என எரிச்சல் வந்தது அவளுக்கு.

“உன்ன நேர்ல பார்த்து என்ன பேசறதுன்னு எனக்கு தெரியல ரக்‌ஷி  அதுமட்டுமில்ல உண்மைய சொல்லனும்னா உன் மேல எனக்கு அவ்வளவு கோவம் இருந்தது.  எங்க உன்னை நேர்ல பார்த்தா கத்தி, திட்டிடுவேன்னு தான் உன்னை நேர்ல பார்க்க வரல”.

ஓ… இப்ப மட்டும் ஏன் வர சொன்னான், கோவம் போயிடுச்சோ…?

“அன்னைக்கு அவ்வளவு எடுத்து சொல்லியும், புரிஞ்சுக்காம என்ன வேலை செஞ்சு வைச்ச நீ?  உயிர்ன்றது உனக்கு அவ்வளவு துச்சமா போயிடுச்சா….?  நான் மட்டும் அன்னைக்கு சரியான நேரத்துல வராம இருந்திருந்தேனா… என்னாயிருக்கும்?  இன்னும் என்னால அந்த நிமிஷத்தை மறக்க முடியல.  அதை பத்தி ஞாபகம் வரும் போதெல்லாம் உன் மேலதான் கோவமா வருது”.

“படிக்கிறதான அறிவில்ல உனக்கு.  அப்படியென்ன பிடிவாதம்?  உன்னை சுத்தி இருக்கற யாரையும் நீ நினைச்சு பார்க்கல அப்படிதான?  ஒரு நிமிஷம் உன் அப்பா அம்மாவ நினைச்சு பார்த்தியா…?  அவங்க என்ன தப்பு பண்ணாங்க?  உன்னை பெத்து வளர்த்தத தவிர?” என்றான் ஆத்திரமாக.

அவன் பேச பேச அவளுக்கு அழுகை வந்தது.  அவன் முன்னால் அழக்கூடாது என எவ்வளவு பிரயத்தனபட்டும் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துவிட்டது.

அவன் சொல்வதும் உண்மைதானே, அந்த நிமிட மன உணர்வுகளின் போராட்டத்தில், ஏமாற்றத்தில், ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என அறிவிழந்து உயிரை மாய்க்க எண்ணி தூக்க மாத்திரை எடுத்திருந்தாள்.  அவளைப் பெற்று வளர்த்த பெற்றோரை நினைக்கவில்லைதானே.

ஹாஸ்பிட்டலில் இருந்து வந்த இத்தனை நாட்களில் அவளும் அதனையெல்லாம் எண்ணி வருந்திக் கொண்டுதானே இருக்கிறாள்.  இதில் அவளது பெற்றோர் இதுவரை அவளிடம் எந்த கேள்வியும் எழுப்பாமல் இருந்தது வேறு அவளை குற்றவுணர்ச்சியில் தள்ளியிருந்தது.

எப்போதாவது கீதா தன்னையும் மீறி அவளிடம் வேதனையை வெளிப்படுத்தும்போது இன்னும் துடித்துப் போவாள்.

“கண்ணைத் தொட ரக்‌ஷி.  நீ அழறுதுக்காக உன்னை பேசல?  நீ மட்டும் தான் முக்கியம்.  உன்னோட உணர்வுகள் மட்டும் தான் முக்கியம்னு நினைச்சு முட்டாள்தனமா சிந்திக்காம, ஒரு நிமிஷம் உன்னை சுத்தி இருக்கற உறவுகள நினைச்சு பாரு.  தப்போ சரியோ நீ செஞ்ச காரியத்தால நம்ம குடும்பத்துக்குள்ள விழுந்த விரிசல் விழுந்ததுதானே”.

“என்னைவிடு.  அம்மா உன்கிட்ட எவ்வளவு அன்பா, பாசமா இருந்தாங்க.  இதுவரைக்கும் அவங்களோட மகள் மாதிரி தான உன்னை பாசமா அன்பா பார்த்தாங்க.  உன்னோட இந்த செய்கை அவங்களை எவ்வளவு வருத்தப்பட வச்சிருக்கு தெரியுமா உனக்கு?  இதுவரைக்கும் எதுக்குமே என்னை திட்டாதவங்க, உன்னோட இந்த செயல்னால என்னை எப்படி திட்னாங்க தெரியுமா? உனக்கு”.

அவன் சொல்லியதை நம்பாமல் கண்களை விரித்துப் பார்த்தாள் அவனை.  ஷ்யாமளா அத்தையாவது அரவிந்த் மாமாவ திட்றதாவது.  எதுக்கும் மாமாவ கோச்சுக்க மாட்டாங்களே என ஆச்சர்யமாக பார்த்தாள். அவளுக்கும் தெரியும் தானே.  ஷ்யாமளா அரவிந்த் மேல் வைத்திருக்கும் பாசம்.

“என்ன அப்படி பார்க்கற?  நிஜந்தான்….?  அன்னைக்குதான் அம்மா உன் மேல வச்சிருக்கற அன்பை பாசத்தை என்னால உணர முடிஞ்சது” என்றான் பெருமையாக.

அவன் வார்த்தையைக் கேட்டதும், அவளுக்கு இன்னும் அழுகை அதிகமாகியது.  கைகளால் முகத்தை மூடி சுற்றம் மறந்து தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

சுற்றியிருக்கற யாரோட பாசத்தையும் புரிஞ்சுக்காம க்ஷண நேர முடிவினால என்ன முட்டாள்தனம் பண்ணிட்டேன்.  அது எல்லாரையும் எவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கும் என உருகினாள் கரைந்தாள்.

“ம்ப்ச்… ரக்‌ஷி இங்க பாரேன்.  சொல்றத கேளு.  அழுகைய கன்ரோல் பண்ணு.  எல்லாரும் நம்மளயே பார்க்கிறாங்க பாரு” என்றான் அதட்டலாக.

இருக்கும் இடத்தை உணர்ந்து தன்னை கன்ட்ரோல் செய்தவள் டேபிளில் இருந்த டிஷ்யூவை எடுத்து கண்களை அழுந்த துடைத்தாள்.

“குட்.  இந்த இயரோட படிப்பு முடியுது இல்ல.  எக்ஸாம் எப்ப?” என்றான்.  எதிரிலிருந்த தண்ணீரை அவள் முன் நகர்த்தி அவளைக் குடிக்கும் படி கண்களால் ஜாடை காட்டியவன், அவளது மனநிலையை மாற்ற எண்ணி பேச்சின் திசையை மாற்றினான்.

அதை புரிந்தவளாக தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள், அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அடுத்து என்னப் பண்றதா பிளான் வச்சிருக்க?”

கைவிரல்களைக் கோர்த்து பிரித்து என தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றவள் அவனைப் பாராது, தன் கைகளை பார்த்து குனிந்த வண்ணமே பேசிக் கொண்டிருந்தாள்.

“பி.ஜி. க்கு அப்ளை பண்ணியிருக்கேன்.  ஐ.ஐ.எம்க்கும் பிரிபேர் பண்ணிட்டிருக்கேன்”.

“ஓஹ்… சூப்பர் ரக்‌ஷி” என்றான் சந்தோஷமாக.

அவன் மீதிருந்த கவனத்தை கடினப்பட்டு படிப்பில் திசை திருப்பிக் கொண்டிருக்கிறாள்.  அதற்கான கோச்சிங் கிளாஸுக்கும் சென்று வருகிறாள்.  இவளது ஆர்வத்தைப் பார்த்து அவளது தந்தையும் இவளுக்கு வரன் பார்ப்பதை ஒத்தி வைத்திருந்தார்.

இதுவரை மகளின் விருப்பத்திற்கு எதிராக எதையும் அவர் செய்ததில்லை.  மகளின் செயலால் வேதனையில் இருந்தவர், அதற்கான காரணத்தை ஷ்யாமளா மூலம் அறிந்தவருக்கு அரவிந்தன் மீது கோவம் வந்தாலும் விருப்பமில்லாதவனைக் கட்டாயப்படுத்த எண்ணமில்லை.

சூட்டோடு மகளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் முடித்து வைத்தால், மகளது கவனம் திசை திரும்பும் என எண்ணி வரன் பார்க்க ஆரம்பித்தார்.  பின் மகளின் படிப்பின் மீதான ஆர்வத்தைப் பார்த்து அவரது எண்ணத்தை ஒத்தி வைத்திருந்தார்.

ரக்‌ஷியின் ஒட்டாத பேச்சு அவனை வருத்தியது.  இனி அவ்வளவுதானா? இல்லை காலம் மாற்றுமா? என பார்த்திருந்தான் அவளை.  என்ன ஆனாலும் பழைய நெருக்கமோ, உரிமையோ திரும்பி வரும் என அவனால் நினைக்க முடியவில்லை.

அமுதினியிடம் அன்று என்ன பேசினாள் எனக் கேட்க எண்ணினாலும், கேட்பதற்கு விழையவில்லை.  அதையெல்லாம் மறந்து அவள் தேறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திரும்ப திரும்ப அதை கேள்வி கேட்டு அவளை வருந்தச் செய்வதில் அர்த்தம் இல்லை என கேட்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தான்.

அதன்பிறகு பொதுவாக பேசி அவளை ஓரளவு பேசவைத்தவன், முடிவில் அவளிடம் “நான் எப்பவும் அதே அரவிந்தன் தான், உன் மேல கோவம் இருந்தாலும், உன் மேல இருக்கற பாசம் என்னைக்கும் மாறாது.  நீ எப்பவும் என்னை கான்டாக்ட் பண்ணலாம்.  பேசலாம்.  எந்த ஹெல்ப்னாலும் கேட்கலாம்.  நீ முன்னமாதிரி வீட்டுக்கு வரதில்லைன்னு அம்மாவும் வருத்தத்துல இருக்காங்க ரக்‌ஷி.  எதையும் மனசுல வைக்காம வீட்டுக்கு வா” என்றான்.

அவன் சொல்வதை எல்லாம் தலையை குனிந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தவள் முடிவில் கசப்பான சிரிப்பை உதிர்த்தாள்.  அதைப் பார்த்தவன் மனதில் வருத்தமே.  இதை எல்லாம் காலம்தான் மாற்ற வேண்டும் என புரிந்தவன், தன்னால் முடிந்தளவு அவளை சமாதானப்படுத்தினான்.

அவனது பேச்சுகளுக்கு எல்லாம் தலையசைத்தவள், இறுதியில் அவனைப் பார்த்து “தேங்க்ஸ்” என்றாள்.

எதற்கு என புரியாமல் முழித்தவனுக்கு “என்னை காப்பாத்தினதுக்கு. அன்னைக்கு நீங்கதான் எனக்கு வீட்லயே பர்ஸ்ட் எய்ட்லாம் பண்ணி ஹாஸ்பிட்டல் கொண்டுபோய் சேர்த்து என் உயிரை காப்பாத்தினதா அம்மா சொன்னாங்க.  அதுக்கு தான் தேங்க்ஸ் சொன்னேன்” என்றாள், நிமிர்ந்து அவனைப் பார்த்து.

“ரக்‌ஷி…” என அவன் கைநீட்டி ஏதோ பேசவரும்போதே கையை நீட்டி அவனைத் தடுத்தவள், “என்ன இருந்தாலும் என் உயிரை மீட்டுக் கொடுத்திருக்கீங்க.  அதுக்கான நன்றியை நான் உங்களுக்கு சொல்ல வேணாமா…?” என்றாள் அந்நியப் பார்வையுடன்.

“அதுக்காக முன்ன மாதிரி என்னால உங்களோட பழக முடியுமா? பேச முடியுமான்னு கேட்டா…?” என ஏதோ கோவமாக சொல்ல வந்தவள் உணர்வுகளின் தத்தளிப்பில் அதற்கு மேல் பேச முடியாமல் உதட்டை அழுந்த கடித்து அழுகையை அடக்கமுயன்று, “தெரியாது…” என முனகலாக தலையசைத்தாள்.

“இப்ப இதுதான் என் பொசிஷன்.  மேபி இது மாறக்கூட செய்யலாம்.  அது எனக்கு தெரியாது?  இப்ப எனக்கு உங்களைப் பார்க்க வேணாம்.  பேச வேணாம்.  அது மட்டும் தான்.  பிளீஸ்… இனி என்னைப் பாரக்கவோ, பேவோ முயற்சி பண்ணாதீங்க.  நீங்க பண்ண மாட்டீங்கன்னு நம்பறேன்” என எழுந்து விட்டாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்டவன் அப்படியே திக்பிரமைப் பிடித்தது போல் அமர்ந்திருந்தான்.  அவள் அவனிடம் முன்பு போல் பேச மாட்டாள் என்பது அவனே ஊகித்திருந்தான்.  ஆனால் இப்படி உனக்கும் எனக்கும் இனி எதுவும் இல்லை என கத்தரித்தாற்ப் போல பேசுவாள் என எதிர்பார்த்திராதவன் அதிர்ந்து அசையாமல் அவளையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான்.

அவனைப் பார்த்து தலையசைத்து வருகிறேன் என சைகை செய்தவள் திரும்பிப் பாராது சென்றிருந்தாள்.

அப்படியே தெளியாமல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தவன் இந்த பொண்ணு எல்லாத்துலயும் பாஸ்ட் டிசிஷன்தான்போல.  உறவு வேணும்றதுலயும் சரி.  வேணாம்னு முடிவு பண்றதுலயும் சரி.  எப்படியோ அவள் நல்லாயிருந்தா… சரி என நினைத்தவன் எழுந்து சென்றிருந்தான் அங்கிருந்து.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!