Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

00 உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 

அத்தியாயம் 0 (2)

.

 



Advertisement

கண்களை மூடி ஆழ மூச்செடுத்தவன், “ம்ம்” என்றான். கையில் இருந்த மலரை நுகர்ந்தான்.  முன்பெல்லாம் இந்த வாசம் அவனுக்குப் பிடித்ததில்லை. இழவு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை மட்டுமே அந்த மலர் கொடுக்கும். தன்னையும் அறியாது உடல் சில்லிட்டுப் போகும்.

இன்று? சிரிப்பு வந்தது. பிடிக்காது என நினைத்த அதே வாசம் இன்று பிடிக்கிறது… உயிர்ப்பைக் கொடுக்கிறது, எல்லாம் அவளால். அவளை பார்க்க வேண்டும்…. அவள் கரம் பிடிக்க வேண்டும்… திகட்ட திகட்ட அவளோடு நேரம் செலவிட வேண்டும்… அவளோடு ஒரு வாழ்வை வாழ வேண்டும் என்ற ஆசையை அள்ளி தெளிக்கிறது.

மூச்சை உள்ளிழுக்க மரம் முழுவதும் பூத்துத் தொங்கிக் கொண்டிருந்த பன்னீர் மலர்களின் வாசத்தைத் தென்றல் அதன் பங்கிற்கு அவனிடம் அழைத்து வந்தது.  மலர்ந்திருந்த பன்னீர்ப் பூக்களின் சுகந்த வாசனை அவன் சுவாசம் வழி உள்ளிறங்கியது. கூடவே துர்நாற்றம் நாசியில் நுழையப் பட்டெனக் கண்களை திறந்தான்.

Advertisement

“என்ன டா காலையிலேயே புகை வண்டிய ஓட்ட ஆரம்பிச்சுட்டியா?” என அமர இடம் பார்த்து கொண்டிருந்த விக்ரமை எரிச்சலோடே கேட்டான் ஜீவன்.

Advertisement

“ப்ச்… ஜீவா” என்ற விக்கி, கையில் இருந்த சிகரெட்டைக் கண்கள் மூடி ஆழ உள்ளிழுத்து, புகை வண்டி போல் புகையை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் வெளியனுப்பினான்.

“எல்லாத்தையும் குறைச்சு இருந்தியே டா? இப்போ என்ன திரும்பவும் ஆரம்பிச்சுட்டியா?” எனக் காரணம் தெரிந்தும் நொந்துக் கொண்டான் ஜீவன்.

மூன்று வாலிபர்களும் தனியாகத் தங்கியிருந்த போதும் மது, மாது, போதை என்ற எதையுமே வீட்டினுள் அனுமதித்தது இல்லை.

Advertisement

“கண்ட கண்ட நோய் பிடிச்சு சாக முடியாது” என்பதே இருவரின் கூற்றாயிருக்க, அந்தக் கூற்றில் விக்கிக்கு என்றுமே உடன்பாடிருந்தது இல்லை. “வாழ்க்கை வாழ டா. இருந்தோமா… ஹேப்பியா என்ஜாய் பண்ணினோமான்னு இருக்கணும் டா. லைஃப் இஸ் ஷார்ட் டா மச்சி… வாழ தானே வாழ்க்கை” என தத்துவம் கூறுவான்.

ஜீவன் போல் நாசுக்காக அல்லாது, “விக்கி… ஆயிரம் முறை சொல்லி இருக்கேன். நீ சாகணும்ன்னு முடிவு பண்ணினா நீ தனியா போய் சாகணும். கூட இருக்கவன் நுறையீரல எல்லாம் போட்டுத் தள்ள கூடாது. பேசிவ் ஸ்மோக்கிங் ரொம்ப டேஞ்சரஸ்ன்னு உனக்கு தெரியும் தான? ஒண்ணு அத அணைச்சு போடு இல்ல இடத்த காலி பண்ணு” எனத் தயவு தாட்சணியம் இன்றி உரைத்தான் வீர்.

அவன் பழக்க வழக்கங்கள் சுத்தமானவை, அதையே அவனைச் சுற்றி இருப்பவர்களிடமும் எதிர்பார்ப்பான் வீர்.

“இவன் ஒருத்தன்… இம்சை” என்றவன், “ஒழுக்கமா இருந்து மட்டும் என்ன சாதிச்சுட்டானாம்?” எனக் கடுப்போடு முணுமுணுத்தவன், அவசர அவசரமாக குபுக் குபுக் என நான்கைந்து முறை புகையை உள்ளிழுத்து சிகரெட்டின் கங்கை பாறையில் தேய்த்து அதைக் கீழே போட்டான். அவன் சிகரெட்டை இழுத்த வேகத்தைப் பார்த்திருந்த மற்ற இருவருக்கும் மூச்சு வாங்கியது.

“இவன எப்படி டா ஃப்ரெண்டு பிடிச்சோம்?” என ஜீவன் அலுத்துக் கொள்ள, சிரித்தான் விக்கி. இவர்கள் இருவரின் குணத்தோடு சற்றும் ஒத்துப்போகாத விக்கி இவர்களின் நண்பன் என்றால் யார் நம்புவார்?

எப்படி எல்லாம் ஒருவன் கெட்டுப் போக முடியும் என விக்கியிடம் கேட்டால் பாடம் எடுக்கும் அளவிற்கு அனைத்தையும் பதின்ம வயதிலேயே கற்றிருந்தான். அவன் சேர்க்கை அப்படி. பெற்றவர்களின் கண்டிப்பு இல்லாது… கண்காணிப்பு இல்லாது… பணத்தில் புரண்டதின் விளைவு எனலாம்.

“ஏன் டா இப்படி?” எனக் கேட்டால், “களவும் கற்று மற டா மச்சான்” என்பான். அது ‘களவும் கத்தும் அற/மற’ (திருட்டும் சூதும் அழி/மறந்திடு) என்று இவனிடம் யார் கூறுவது? குடும்பத்தில் யார் செய்த புண்ணியமோ மூன்று வருடங்கள் முன் இவர்கள் இருவரின் நட்பு வட்டத்தில் நுழைந்தான் விக்கி. அதன் பின் நிறைய மாற்றங்கள் அவனிடம்.

“நல்லவன் தான் டா. ஆனா இவன் சாவகாசம் அப்பிடி… கௌதமன் மாதிரி ஒருத்தனோட ஃப்ரெண்டு வேற எப்படி இருப்பான்? பூவோடு சேர்ந்தா நாரும் மணக்க தான செய்யும்? என்ன டா விக்கி… சரி தான?” என விக்கியை சீண்டினான் வீர்.

நன்றாக இருந்த கௌதமனை பற்றி ஒரு வார்த்தை கூறினாலே பொங்கிவிடுபவன் இப்பொழுது கௌதமன் இருக்கும் நிலைக்கு சும்மாவா இருப்பான்? பொங்கி விட்டான்.

“கௌதமன் என் ஃப்ரெண்டு டா… அவன பிளே பாய், குடிகாரான்னு யார் வேணா… எந்தப் பத்திரிக்கை வேணா சொல்லட்டும். சொல்றவனுக்கு அவன தெரியாது டா. அவன் மனசு தங்கம் டா. பத்து வயசுல அவன் சொத்தோட மதிப்பு தெரியுமா…? வீட்டோட ஒரே வாரிசு. சொட்டு திமிர் இருக்காது டா அவன்ட்ட.

ஃப்ரெண்ட்ஸ்சுன்னு இல்ல, அவன நம்பி அவன் கைய பிடிக்கிறது எவனா இருந்தாலும் அவனுக்காக உயிர கூட கொடுப்பான் டா என் தோழன். அவன பார்த்துச் சிரிக்க இந்த உலகத்துல ஒருத்தனுக்கும் தகுதி கிடையாது.

எப்போ யாருக்கு என்ன நடக்கும்ன்னு யாருக்கு டா தெரியும்? இதோ இவன பாரு… ஒரு கெட்ட பழக்கம் இல்ல. பிரெயின்ல டியூமர்! சரி… வந்தது வந்துது ஈசியா எடுக்கிற இடத்தில வந்திருக்கலாமே? வரல. ஆப்பரேஷனுக்கு அப்பறம் உன்னையும் என்னையும் இவனுக்கு நினைவு இருக்காதாம்.

அதுக்கப்பறம் ரேடியேஷன் அது இதுன்னு இந்த ஒழுக்க சிகாமணிக்கு பிள்ளையும் பொறக்காது. அதுக்கு இப்போவே ஸ்பர்ம்ம ஃபிரீஸ் பண்ணி வைக்கணும்! என்ன கொடுமை டா இது? இது எல்லாம் சார் பிழைச்சா!

அப்பேர் பட்ட வாசுதேவனே அவர் மகன காப்பாத்த தெரியாம முழி பிதிங்கி நிக்கிறார். நீ எம்மாத்திரம் டா? இன்னைக்கு அவன் நாளைக்கு நீ!

சர்ஜரி… நூத்துல ஒரு பங்கா ஃபெயில் ஆகிட்டா? எல்லாம் முடிஞ்சுது! இன்னைக்கே நாங்க செத்தாலும், வாழ்க்கையை முழுசா அனுபவிச்சுட்டு சாவோம் டா. நீ? வாழத் தெரியாத நீ எல்லாம் சொல்ல வந்துட்ட சிகரெட் பிடிக்காத… தண்ணி அடிக்காத… பொண்ணுங்க பின்னாடி சுத்தாதன்னு…. போடா போடா.”

அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காத விக்ரம், அறையை நோக்கி நடந்தான். அமர்ந்திருந்த நண்பர்கள் அமைதியாகி விட்டனர். விக்ரம் கூறியதை அசைபோட்டான் வீர். தனக்கு வாழத் தெரியாதா? சிரிப்பு வந்தது.

தன்னை பற்றி… தன் குடும்பம் பற்றி என எதையேனும் கூறியிருந்தால் அவர்களுக்கும் தெரிந்திருக்கும். காதலிக்கும் பெண்ணின் பெயரை கூட கூறியதில்லை எனும்போது இவர்களுக்குத் தன்னை பற்றி என்ன தெரிந்துவிடப் போகிறது?

வீரின் கைப்பேசி ஒலிக்க, “உள்ள போறேன் டா” என கிளம்பிவிட்டான் ஜீவன். யசோ என்றதும், முகம் மலர்ந்தவன், “என்ன மா?” என்றான் அக்கறை வழிய. எப்பொழுதாவது தான் இப்படி எல்லாம் ‘மா’ வரும். ஆனால் இப்பொழுதெல்லாம் ‘மா’ அதிகம் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தது.

“இன்னைக்கா? நினைவிருக்கு. அதுக்கு என்ன?” என்றான் எழுந்த சங்கடத்தை மறைத்து.

இன்றைய தினத்தை பற்றி அவள் கேட்கவும் அவன் மனம் இன்னும் வாடிப்போனது. எல்லாம் சரியாகச் சென்றிருந்தால், இன்று சட்டப்படி இருவரும் கணவன், மனைவியாக கரம் பற்றி ஒரு மாதம் ஆகியிருக்கும். தேனிலவு முடிந்து வெளிநாட்டில் இருந்து இன்று கிளம்பியிருப்பர். ஆனால்… எதுவும் சரியாக நடக்கவில்லையே.

“ஆமா இன்னைக்கு கிளம்பறேன். என்ன விஷயம்?”

“என்ன விஷயம்ன்னு சொல்லேன்” என்றான் கெஞ்சலாக. அவன் கெஞ்சலுக்கு அவள் இசைந்து கொடுக்கவில்லை போலும்.

“பிளான்ல சின்ன ச்சேஞ் மா. நாளைக்கு சென்னைல இருக்கணும். அப்பா வராங்க. சில டெஸ்ட் இருக்கு எடுக்க, அதையும் எடுத்துட்டு சர்ஜரிக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு உன்ன பாக்க வரேன். நேர்ல பார்த்தா தான் விஷயத்த சொல்லுவேன்னா, இப்போதைக்கு முடியாது.”

“ம்ம்ம்… சர்ஜரிக்கு முன்ன ஒரு வாரம் அங்க இருக்க மாதிரி வரேன்.  எக்சாம் முடிஞ்சுதா? நேத்து எம்.பி.ஏ. என்ட்ரன்ஸ் எக்சாம் எப்டி பண்ணின?”

“அதுதான பார்த்தேன். கவனம் படிப்பில இருக்க வேண்டாமா? போகட்டும் விடு! அடுத்து?”

“ஹ ஹ ஹா… என் கூடவே இருக்கது எல்லாம் ஒரு ஃபியூச்சர் பிளானா?”

“இப்போ என்னன்னு சொல்ல போறியா இல்லையா?”

“நிஜமா? நிஜமாவா சொல்ற?” கண்கள் விரிந்தன. குரலில் அதிர்ச்சி என்றாலும் உள்ளுக்குள் ஏதோ செய்தது. மகிழ்ச்சியா? பயமா? வலியா? என்ன உணர்வு இது? புரியவில்லை. தமிழில் வார்த்தை தட்டுப்பாடா? அப்படித் தான் போலும்.

“யார்ட்டையும் சொல்ல வேண்டாம். நான்… நான் நாளைக்கே வரேன்.”

“ஒரு வாரம் தள்ளி போடறதினால கட்டி ஒண்ணும் வெடிச்சுடாது.”

“சரி சரி சண்டை போடாத. பிளான திரும்பவும் மாத்தல. டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு, சென்னைல தங்குற அரேஜ்மென்ட்ஸ் எல்லாம் சரி பார்த்துட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்”

“இல்ல இல்ல டென்ஷன் ஆகல. நான்… நான் நார்மல் தான் டி. உனக்குப் பயமா இல்லையா?”

அவள் கூறிய பதிலில் மெய் சிலிர்க்க அமர்ந்துவிட்டான் வீர். கைப்பேசி வழியே அவள் காதலை எல்லாம் கொட்ட, அந்த இதத்தில் அமர்ந்து இருந்தான் வீர். பிழைக்கும் சாத்தியம் 99.99 விழுக்காடு என மருத்துவர் கூறி இருந்தபின்னும் பயம் கொண்டிருந்த மனம், இப்பொழுது தான் நன்றாகத் திரும்பி விடுவேன் என நம்பியது.

திருமணத்தை நிறுத்தி இருக்கவே கூடாது என மனம் சாடியது. அவள் எவ்வளவு அழுதாள்… இவன் கேட்டுக் கொள்ளவே இல்லை. அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என இவன் தான் பிடிவாதம் பிடித்து அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தினான்.

மீண்டும் அவள் வீட்டில் பேச வேண்டும், பெண்ணவளின் கரம் பற்ற வேண்டும், பின் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என வீரின் மனம் கணக்கு போட ஆரம்பித்தது.

கைப்பேசியை அணைத்த யசோவின் இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. அன்று இல்லாத பயம் இன்று வீண் எனத் தெரிந்தும் படபடப்பு அடங்கவே இல்லை. ஏதோ காதலனின் அறுவை சிகிச்சையின் காரணமாக… ஸ்ட்ரெஸ்… டென்ஷனில் மாதவிடாய் வரவில்லை என எண்ணி இருந்தவளுக்கு முந்தின இரவு தான் ஐந்து வாரங்கள் முன் நடந்த அனைத்தும் புத்திக்கு உரைத்தது.

வயிற்றை வருடினாள். இம்மி அளவு கூட வேண்டாம் எனத் தோன்றவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பின் எட்டா நிலவென எண்ணிய பிள்ளை வரம். வேண்டாம் என எப்படி நினைப்பாள்? மனம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தாலும் வீட்டில் இருப்பவர்களின் மனம் நோகாது எப்படி உரைப்பது எனப் புரியவில்லை. ‘நான் பாத்துக்கிறேன்’ என அவன் கூறியதை நினைத்தவள் முகத்தில் நிம்மதி பரவியது.

காதலன் வந்து விடுவான்… பெற்றவர்களிடம் அவன் பேசி சரி செய்துவிடுவான்… தன்னை கரம் பிடிப்பான். அறுவை சிகிச்சையின் போது அவன் மனைவியாக அவனோடு இருந்து அவனைப் பார்த்து கொள்ளலாம். கண்விழித்த பின் அவன் நினைவில் தான் இல்லை என்றாலும் மனைவி என்ற அங்கிகாரத்தோடு அவன் காதலை மீட்டெடுக்கலாம் எனக் காதலியின் மனது கணக்கு போட்டது.

இவனோடு சேர்ந்து விடுவேன் என அவள் கணக்கு போட்டிருக்க, விதியின் சதியை வென்று பெண்ணவளின் கரம் பற்றிவிடுவேன் என அவனும் கணக்கு போட்டிருக்க… காலத்தின் கணக்கு தான் என்ன? இருவர் போட்ட கணக்கும் ஒன்றாய் இருக்க, காலம் போடும் கணக்கும் அவர்களுக்கு அனுகூலமாகத் தானே இருக்க வேண்டும்?

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!