Skip to content
Post Views: 2,548
சில வருடங்களுக்கு முன்பு…
துபாய் பன்னாட்டு விமான நிலையத்தில் பிரம்மாண்ட இறக்கைகள் விரிய வீற்றிருந்தது அந்த உலோகப் பறவை.
Advertisement
பயணிகள் அனைவரும் வந்து விட்டதாக இறுதி அறிக்கை வர, பத்தே நிமிடங்களில் விமானம் வான்வெளியில் பயணிக்கத் தொடங்கியிருந்தது.
துபாயில் இருந்து இந்தியாவின் மங்களூரு நோக்கி பறந்துக் கொண்டிருந்தது விமானம்.
Advertisement
ஒரு மணி நேரம் கடந்திருக்க, அதன் கட்டுப்பாட்டு அறையில் இருந்த இரண்டு விமானிகளில் ஒருவரான முக்கிய விமானி ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தார்.
Advertisement
ஃபர்ஸ்ட் ஆபீஸர், கோ பைலட் என்று அழைக்கப்படும் இரண்டாம் தலைமை இடத்தில் இருக்கும் இளம் விமானியின் கட்டுப்பாட்டில் மொத்த விமானமும் இருந்தது.
Advertisement
அன்று இரவு மங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி துபாயில் இறக்கி விட்டு, மீண்டும் வேறு பயணிகளுடன் மங்களூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
நேரம் அதிகாலையை தொட, மனித உடல் கடிகார கணக்குப்படி ஆழ்ந்த உறக்கத்திற்குள் செல்லும் அந்த நேரத்தில் அவனையும் சோர்வு அப்பியது.
எத்தனை முயன்றும் தடுக்க முடியாமல் கொட்டாவி வர, புறங்கையால் அதைத் தடுத்தும் முடியாமல் சத்தமில்லாமல் கொட்டாவி விட்டிருந்தான். மெல்ல திரும்பி விமானியை பார்த்தான். அவர் இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருந்தார். லேசாக குறட்டை சத்தமும் கேட்டது. அந்தக் கட்டுப்பாட்டு அறையை அந்த மெல்லிய சத்தம் நிறைத்தது.
அவனுக்கு கண்களை சோர்வு அப்பத் தொடங்கவும், விமான பணிப்பெண்ணை அழைத்து, “ஒரு காஃபி குடுங்க பிளீஸ்” என்று கேட்டான். அதை அருந்திய பின்னர் உறக்கமும் சோர்வும் விலக நிமிர்ந்து அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் மங்களூர் விமான நிலையத்தை நெருங்கியிருந்தார்கள்.
“கேப்டன், எழுந்துக்கோங்க. ஃப்ளைட் லாண்ட் பண்ணணும்” என்று ஆங்கிலத்தில் சொல்லி, விமானியை எழுப்பினான்.
அவனை விட வயதில் மட்டுமல்ல, அனுபவத்திலும் மூத்தவர். அவன் அந்தப் பதவியை அடைய இன்னும் பல மணி நேரங்கள் விமானியாக பயணித்து அனுபவம் பெற வேண்டும். அதுவரை கோ பைலட் தான் அவன்.
ஒரு கொட்டாவியை சத்தமாக வெளியேற்றி நிமிர்ந்து அமர்ந்தார் அந்த ஐம்பதை தொடும் விமானி. அவருக்காக சூடான பானத்தை வருவித்தான் அவன்.
“தேங்க்யூ மேன்” என்றவர், அவனது சட்டையில் பெயரை படித்து, “ஆனந்த்” என்றார். புன்னகைத்தான் அவன்.
பயணிகளுக்கு விமானம் தரையிறங்க போவதாக அறிவித்து, சம்பிரதாய தகவல்கள் பகிர்ந்து, சீட் பெல்ட் அணிய பணித்தான்.
விமானத்தை தானியங்கி செயல் வகையில் இருந்து விலக்கி, அவனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தான். அதற்கும் விமானியின் அனுமதி பெற்றே செய்தான் அவன். ஏனெனில் அது அவரது பணி. அவன் செய்யக் கூடாது.
அடுத்ததாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி வேண்டினான்.
“நெகடிவ். 7000 அடி உயரத்திற்கு வந்தப் பின் கீழிறங்கவும்” என்ற பதில் கிடைக்கவும், விமானத்தின் வேகத்தை குறைத்து கீழிறக்கத் தொடங்கினான். அதற்கு மேல் அவனால் ஏதும் செய்ய முடியாது. அவன் செய்யவும் கூடாது.
ஏனென்றால் மங்களூர் விமான நிலையம், இந்தியாவின் அதிக கவனம் வேண்டும் விமான நிலையங்களில் ஒன்றாகும். கிரிட்டிகல் ஏர்போர்ட் என்று அழைக்கப்படும் அந்த விமான நிலையம், மலை முகட்டின் மேலிருந்தது. டேபிள் டாப் ரன்வே கொண்டது. அதன் நான்கு பக்கமும் அடர்ந்த காடுகள். ஒரு பக்கம் கடல், மறுபக்கம் மலை என ஆபத்தான பகுதிகள் சூழ்ந்தது. மிகுந்த கவனம் கோரும் விமான நிலையங்களில் ஒன்று. சற்றே சவாலானதும் கூட. ஏனென்றால் அங்கு ரேடாரும் அப்போது வேலை செய்யவில்லை. வானில் விமானம் எங்கிருக்கிறது என்பதை தரைத் தளத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்க முடியாது. ஆக, விமானிகளும் மனக் கணக்கில் தான் விமானத்தை செலுத்த வேண்டும்.
விமானம் பயணிக்கும் வேகத்தை வைத்து தூரத்தை கணித்து தரையிறக்க வேண்டும். மிகுந்த சவாலான விஷயம். ஆகையால் தான், அங்கே கட்டுப்பாடுகளும் அதிகம். விமானி மட்டுமே விமானத்தை தரையிறக்க அனுமதி. சக விமானி அவருக்கு உதவலாம். அவ்வளவுதான்.
ஆனால், இன்று முக்கிய விமானி சோர்வுடன் உறக்கம் சுமந்த விழிகளுடன் இருக்கையில் சாய்ந்திருக்க, அவரை மீண்டும் எழுப்பினான் அவன்.
அவரும் நிமிர்ந்து கட்டுப்பாட்டு அறையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ஆனால், அவனுக்கு எதுவோ சரியில்லை என்று உள்ளுணர்வு சொல்லியது.
“காற்று அதிகமில்லை. நீங்கள் ரன் வே 14 லில் தரையிறங்கலாம்” என்ற அனுமதி கட்டளை அவர்களை அடைந்தது. ஆனால், மேகத்தை விலக்கி கீழிறங்கியவனுக்கு விமான நிலையத்தின் ஓடு தளம் கண்ணில் படவேயில்லை.
அது மிகச் சிறிய, குறுகலான ஒற்றை ஓடு தளத்தை கொண்ட விமான நிலையம். ஓடு தளத்தின் முடிவில் மலை முகடு, அதலபாதாளத்தில் முடிந்திருந்தது. அதனால், மிக துல்லியமாக தரையிறக்க வேண்டும்.
விமானம் விதிக்கப்பட்ட வேகத்துடன் தரையிறங்க யத்தனித்தது. பாதி உயரத்தை கடந்த பின்னும் ஓடு தளம் கண்ணில் படாததால், “கேப்டன், லெட்ஸ் கோ அரவ்ண்ட்” என்றான். சரியாக ஓடு பாதையை அடைய மற்றும் வேகத்தை குறைக்கும் பொருட்டு.
விமானி ஒரு முடிவுடன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
“கேப்டன்” மூன்று முறை அவன் அழைத்த பின்னரும் அவரின் முடிவு மாறவில்லை.
கீழே கட்டுப்பாட்டு அறையில் இருந்து, “தரையிறங்க தயாரா?” என்ற கேள்வி வர, ஆமென்று தலையசைத்தார் அவர்.
அவரின் சொல்லை மீற முடியாமல், அவனும், அவர்களுக்கு பதில் சொன்னான்.
விமானம் செங்குத்தாக, அதற்கு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை காட்டிலும் அதிக உயரத்தில் இருந்து, குறையாத வேகத்துடன் தரையிறங்கத் தொடங்கியது. இப்பொழுது தான் ஓடு தளம் அவர்களின் கண்ணில் பட்டது. ஆனால், விமானம் தரையை தொட்டதே பாதி ஓடு தளத்தை கடந்த பிறகுதான். அந்த சிறிய ஓடு தளத்தின் தொடக்கத்தை தொட்டால் மட்டுமே சரியாக தரையிறங்க முடியும்.
“கேப்டன்” என்றான் பதற்றத்துடன். இதற்கு முன்னர் பத்து முறைக்கும் மேல் மங்களூர் விமான நிலையத்திற்கு பயணித்திருக்கிறான். ஆனால், முதல் முறையாக அவனை பயம் தொற்றிக் கொண்டது.
“ஆனந்த்” என்று அவனை அதட்டி அடக்கினார் விமானி.
“லெட்ஸ் கோ அரவ்ண்ட் கேப்டன்” இம்முறை குரலை உயர்த்தி வற்புறுத்தினான்.
அவர்களை நம்பி இருநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தில் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்கள் இருக்கிறது. அவர்களை நேசிக்கும் நெஞ்சங்கள் அவர்களுக்காக காத்திருப்பார்கள்.
அவர்கள் அத்தனை பேரின் உயிரும், பாதுகாப்பும் அவன் வசமிருக்க, அவனுக்கு மனம் நடுங்கியது.
நேசித்தவர்களை நினைக்கும் போதே அவள் நினைவு வந்தது.
அவனுக்காக காத்திருக்கும் அவளை காண முடியாமலேயே, கடைசியாக அவளிடம் விடை பெற முடியாமலே, அவளின் ஆசையை நிறைவேற்ற முடியாமலேயே போய் விடுமா? என்ற எண்ணமே அவன் நெஞ்சை உலர செய்தது.
“கேப்டன்” என்று இறுதியாக எச்சரித்தவன், தனக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் அந்த நொடி உடைத்தெறிந்தான்.
அதற்குள் ஓடு தளத்தின் ஆபத்தான எல்லையை தொட்டிருந்தது அந்த உலோக பறவை.
error: Content is protected !!