Skip to content
Post Views: 3,974
இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்தின் காயலில் மிதந்துக் கொண்டிருந்தது அந்தப் படகு வீடு. வானில் வெண்மேகங்கள் மறைந்து கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான கட்டியம் கூறின. அதுவரை இருந்த இதமான காலநிலை சூரியனோடு சேர்ந்து பதுங்கி மறைய, காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் பரவியது.
அவன் பயண அலுப்பு தீர குளித்து லகுவான உடைக்கு மாறி வெளியில் வந்தான். அவனுக்கு கிடைத்திருந்த ஒரு நாள் ஓய்வை ஓய்வாகவே உறங்கி கழிக்க விரும்பினான். ஆனால், அவனது நண்பர்களோ ஓய்வாக களிக்க அவனை ஆலப்புழாவின் பிரபலமான படகு வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தார்கள்.
Advertisement
அது ஆறு படுக்கை அறைகள் கொண்ட, இரண்டடுக்கு பிரம்மாண்டமான சொகுசு படகு வீடு. அவன் நண்பர்கள் ஏற்கனவே திட்டமிட்டு பதிவு செய்திருக்க, திட்டமிடாமல் சேர்த்துக் கொண்ட அவனுக்காக தற்போது ஓர் அறையை ஒதுக்கி தந்தார்கள்.
அறையை விட்டு வெளியில் வந்ததும் நீண்டிருந்த பாதையை கடந்து முன் பகுதிக்கு வந்தான். ஒரு வீட்டின் வரவேற்பு அறையையே அங்கே அழகாக உருவாக்கி இருந்தார்கள்.
Advertisement
Advertisement
ட வடிவில் நீண்டிருந்த சோஃபாவில் பொத்தென்று விழுந்தான். அவனை அப்படியே உள்வாங்கிக் கொண்டது அது. படகின் முதல் தளத்தில் துள்ளலான பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, நண்பர்கள் அத்துடன் இணைந்து பாடுவதை கேட்கையில் தாமாக அவன் உதடுகள் பிரிந்து ஓர் ஓரமாக புன்னகையில் வளைந்தன.
சாலையை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அந்தப் படகு வீடு. அங்கிருந்து சாலையை பார்க்க பரபரப்பு குறையாமல் இயங்கிக் கொண்டிருந்தார்கள் கேரள மக்கள். அப்படி கேரள மக்கள் என்று பொதுப்படையாக சொல்லிட முடியாது. ஏனெனில் கண்கள் காண்கிற திசையெல்லாம் கலவையான முகங்களே அவனுக்கு தரிசனம் தந்தது. சுற்றுலா பயணிகள் சுறுசுறுப்பாக நகர, கேரள மக்கள் பெரிதான அவசரங்கள் ஏதுமின்றி நிதானமாக தேநீரை அருந்தியபடி சம்சாரித்து கொண்டிருந்தார்கள்.
Advertisement
“ஹேய் விவே, இன்னும் மேல வராம என்னடா பண்ற?” அவனைத் தேடி சப்தமிட்டார்கள்.
அவனைச் சூழ்ந்திருந்த ஏகாந்தத்தை கலைக்க விருப்பமின்றி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் கண்களை சுழற்றினான்.
ஒரு பக்கம் பெரிய பெரிய படகுகள் ஒவ்வொன்றாக நகர, மறுபக்கம் அங்கு வசிக்கும் மக்கள் தங்களின் போக்குவரத்திற்காக மிகச் சிறிய படகுகளில், ஓடங்களில் பயணித்ததை கண்டவனுக்கு, இரண்டுக்குமான வித்தியாசம் கசப்புடன் புன்னகைக்க வைத்தது.
“விவே, இருக்கியாடா?”
“டேய், மச்சி. அவனுக்கு கால் பண்ணு”
“வாடா, இப்படி கத்தி கூப்பிடுறதுக்கு நாமளே கீழ போய் பார்த்துடலாம்.” நண்பர்கள் மாறி மாறி பேசவும், பதில் சொல்ல தொண்டையை செருமினான்.
அதற்குள் தடதடத்து கீழிறங்கி வந்து வரிசையாக அவன் முன் நின்றார்கள் நண்பர்கள் ஐவரும்.
“என்னடா மச்சா, உன்னை எத்தனை டைம் கூப்பிட்டோம். இங்க இருந்துட்டே ஆன்சர் பண்ணாம அமைதியா இருக்க?” கேட்டவன் தடாலென அவன் அருகில் அமர்ந்தான். அவனோடு நின்றிருந்த இளம்பெண் இப்பொழுது அவனை நோக்கி வந்தாள்.
நண்பனுக்கு பக்கத்தில் அமராமல் அவனது வலப் பக்கத்தை நிரப்பினாள். அவளிடம் இருந்து விலகி அமர விரும்பினாலும், அவன் நகர அங்கே இடமில்லை. நண்பனை திரும்பி முறைத்து கண் காட்ட, அவன் கண்கள் சொன்ன செய்தி நண்பனுக்கு புரிந்தாலும், அவன் நகர்ந்து அமர்வதாக இல்லை.
“ஹாய்” என்றாள் அவள்.
ஒருவித அசௌகரிய உணர்வு அவனை ஆட்கொள்ள, அவளுக்கு புன்னகையை பதிலாக கொடுத்தான். அதுவே போதுமென்று அவனது கைப் பிடித்து கோர்த்துக் கொண்டாள் அவள்.
அவளின் உள்ளங்கையின் தகிப்பு அவனது உடலுக்குள் ஊடுருவ, பல்லைக் கடித்துக்கொண்டு கண்களை மூடித் திறந்தான்.
அவனை யாரும் கவனிக்கவில்லை. நண்பர்கள் அவரவர் துணையுடன் பேச, சிரிக்க என அவர்களுக்குள் மூழ்கி இருந்தார்கள்.
“என்னடா பண்றானுங்க, இவனுங்க? இந்த போட்ஹவுஸ் நகரும் சொன்னானுங்க. ஆனா, இப்போ ஆடாம, அசையாம அப்படியே நிக்குது?”
“நம்மளை 12 மணிக்கு வரச் சொல்லிட்டு, ஒரு மணி வரைக்கும் போட்டை நகர்த்தாம இருக்கானுங்க பாரேன்”
“டைம் இப்போ ஒன்னு இருபது டா. இன்னும் எவ்ளோ நேரம் ஆக்குவானுங்க. யாராவது ஒருத்தன் போய் என்னனு கேளுங்க டா” நண்பர்களின் புலம்பலை கேட்டபடி, அமைதியாய் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தான். அவன் கரத்தை பற்றியிருந்த மென்கரம், ஒவ்வொரு விரலாக வருடி ஆராய, வேதியியல், இயற்பியல், மட்டுமல்ல அவனது இதயமும் மரத்துப் போய் இருந்த காரணத்தினால், எவ்வித உணர்வும் இன்றி இறுக்கமாக அமர்ந்திருந்தான்.
“சேட்டா, சேட்டா. இன்னும் எவ்வளவு நேரமாகும்? போட் ஏன் நகராம இருக்கு?” கேள்வி எழுப்பினார்கள்.
“சாரி, சாரி. இதோ வந்து…” படகு வீட்டின் உள்ளிருந்து ஓடி வந்து சமையல் பொறுப்பில் இருந்தவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் கரம் பற்றி எழுப்பினாள் அவள். இப்போது உடலுடன் மனதும் இறுக்கமாக, அவளை கேள்வியாக ஏறிட்டான்.
“வாங்க மேல போகலாம். அங்க வியூ நல்லாருக்கு. அமைதியாவும் இருக்கு.” அந்த கடைசி வாக்கியம் வேலை செய்தது. அவன் மெல்ல எழ முயற்சிக்க, அவனின் முழங்கையை பிடித்து வேகமாக இழுத்தாள் அவள். அதே வேகத்தோடு முதல் தளத்துக்கு இழுத்துக் கொண்டு போனாள். அவனும் இழுபட்டான்.
சற்று நேரத்தில், “வாவ்…” என்ற சத்தம் அந்த அமைதியை கலைத்து அவன் காதை எட்டியது.
“வாவ்” மெலிதாய் வியப்பும், விசிலும் கேட்க, அது படகு வீடு நகர்ந்ததற்கு என்றே நினைத்தான் அவன்.
அரை மணி நேரம் கழித்தே, நண்பர்களின் வியப்பிற்கான காரணத்தை விளங்கிக் கொண்டவனின் விழிகள் தன்னிச்சையாய் விரிந்தன.
அவன் தலை தானாக திரும்பி கீழே பார்த்துக் கொண்டேயிருக்க, “மச்சா டேய், உன் கைக்குள்ள இருக்க பொண்ணை பாரு டா. இப்படி அவளை கூட வச்சுட்டு அப்பட்டமா வேறொரு பொண்ணை சைட் அடிச்சா உன்னை மிதிக்கப் போறா” என்று எச்சரித்தான் நண்பன்.
“போட் ஹவுஸ் கேப்டன் பொண்ணான்னு ஷாக். அதான் பார்த்தேன் டா. சைட் எல்லாம் அடிக்கல” என்றான்.
“ஏன்டா பொண்ணுங்க அவ்வளவு பெரிய கப்பலே ஓட்டும் போது, தம்மாத்துண்டு போட் ஓட்ட மாட்டாங்களா? லாஜிக்கே இல்லாம என்னடா கேள்வி இது?” என்று கேட்டவன், “ஆனா, எனக்கும் இது ஷாக்தான். அப்புறம், பின்னாடி இருந்து பார்க்க அட்டகாசமான ஃபிகராதான் இருக்கு விவே. டிரை பண்ணி..”
அவனின் முறைப்பில் சொல்ல வந்ததை முடிக்காமல் தோளை குலுக்கினான் நண்பன்.
“நான் ஒன்னும் சொல்லல டா எப்பா. நீதான் கேப்டன் பொண்ணான்னு ஆச்சரியமா பார்த்த. அதான் அவங்க அழகை சொன்னேன். பாவம் உனக்கு இங்க இருந்து பார்க்க சரியா முகம் தெரியல இல்ல? நாம வேணும்னா கீழ போய் பார்ப்போமா? கீழ போனா முகம் மட்டும் பார்க்காம, அவங்க முத்து உதிர பேசுறதையும் கேட்கலாம்” நண்பன் கண்ணடித்து கேட்க, மறுப்பாக தலையை அசைத்தான்.
அந்நேரம் வரவேற்பு பானம் குடிக்கக் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து நண்பர்கள் அதிர்வான இசையை ஒலிக்க விட்டு, அதனோடு சேர்ந்து பாடி, ஆடத் தொடங்கியிருக்க, படகு வீடு மெல்ல பயணிக்கத் தொடங்கியது. எதையும் ரசிக்கும் மனநிலை அவனுக்கில்லை.
அதிலும் அவனை உரசிக் கொண்டிருந்தவளை உதற முடியாமல் பண முதலீடு பற்றி நண்பன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தான்.
படகோடு சேர்ந்து நேரமும் நகர, காற்றில் இறகை போல மிதந்து கொண்டிருந்த அந்த படகு வீடு மெல்ல ஓர் ஓரமாக கரைத் தொடுவதை பார்த்தபடியே கீழிறங்க முற்பட்டான்.
“விவேக்” என்று அவன் கரத்தை இறுக்கமாக பற்றினாள் அந்தப் பெண்.
“டென் மினிட்ஸ்ல வர்றேன். வெயிட் பண்ணு” என்று விலகி மரப் படிகளில் இறங்கி கீழே வந்தான்.
அவனைப் பார்த்ததும், “லஞ்ச் எடுத்து வைக்கட்டா சாரே?” என்று கேட்டார் சமையல் பொறுப்பாளர். அந்தக் கேள்வி அவனை தடுத்து நிறுத்தவில்லை.
மனத்தின் வேகம் உடலை உந்த முன்னோக்கி வேகமாக நகர்ந்தான். கரையை அடைந்ததும், அவனைக் கடந்து சமையல் பொறுப்பில் இருந்தவர் படகை ஓரிடத்தில் நிறுத்த உதவ ஓடினார். ஓட்டுநர் இருக்கையில் இருந்தப் பெண், புயல் வேகத்தில் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, அவளைப் போலவே அந்தப் படகு வீடும் நிலை தடுமாறியது.
சட்டென எட்டி அவளின் கைப் பற்றினான். அவன் கரத்தை அனிச்சையாய் உதறி மீண்டும் இருக்கையில் பொத்தென அமர்ந்தாள் அவள். அக்கணம் படகு வீடும் அவளைப் போலவே நிதானித்து நின்றது.
“பார்த்துங்க…” என்றான் கரிசனத்துடன்.
மெல்ல விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள். அதுவரை அவனுக்கு பரிட்சயமாக தெரிந்த அவளது உருவம், இப்போது பளிச்சென அவன் கண்ணில் விழுந்து, இதயத்தில் இறங்கியது.
அந்த முகம், அவனை ஊடுருவிய அந்தக் கருவிழிகள். சில வருடங்கள் விழி தொடும் தூரத்தில் பார்த்திருக்கிறான். சில மாதங்கள் விரல் தொடும் தூரத்தில் பார்த்திருக்கிறான். பல இரவுகள் இதழ் தொடும் தூரத்தில்.. இப்போது அவனது சுவாசக் குழாயை யாரோ விரல் கொண்டு அழுத்தி நெரிப்பது போலிருக்க, வாயில் காற்றை உள்ளிழுத்து அவசரமாக வெளியேற்றினான்.
“குட்டிம்மா, மோளே..” அவளை யாரோ அழைக்க, அவனிடம் இருந்து பார்வையை விலக்கி விலகிப் போனாள்.
ஆனால், அவனோ கால்களுக்கு விலங்கிட்டது போல, அங்கிருந்து விலகி செல்ல முடியாமல் விதிர்த்து நின்றான்.
அந்த கணம் மீண்டுமொரு முறை உரிமையாய் அவளைத் தழுவியது அவன் விழிகள். உலகில் அவள் ஒருத்தியை மட்டும் இனி ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அறிந்தே இருந்த அவனது மனது, தாளம் தப்பித் துடித்தது.
இரண்டு பணியாளர்கள் படகு வீட்டை கரையில் இருந்த மரத்தோடு சேர்த்து கட்டிக் கொண்டிருக்க, படகு சமநிலையின்றி தள்ளாடுவதை பொருட்படுத்தாமல் அதன் முன்னிருந்த படிகளில் தாவி இறங்கினான்.
அதற்குள் காற்றை போல கடந்து மறைந்திருந்தாள் அவள்.
அங்கு திரும்பிய பக்கமெல்லாம் ரகம் ரகமாக படகு வீடுகள் வரிசைக் கட்டி நின்றன. கரையின் ஓரம் நான்கைந்து கடைகள் இருந்தது. அதில் குளிர்பானங்கள், தின்பண்டங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். படகில் இருந்து இறங்கியவர்களில் பாதி பேர் அங்குதான் படையெடுத்தார்கள். அங்கேயே மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகளும் விற்கப்பட்டது. அதை வாங்கிக் கொடுத்தால் போதும், படகில் கேரள முறையில் சமைத்து தருவார்கள் என்பதால் அங்குமே கூட்டத்தை காண முடிந்தது.
அவள் சென்ற திசையில் திரும்பி நடந்தான் அவன். எவ்வளவு தூரம் துரத்தினாலும், அவள் அங்கிருந்தால் தானே பிடிக்க முடியும்? ஐந்து நிமிடங்களுக்கு மேல் நடந்து படகு வீட்டின் கடைசி வீட்டிற்கு வந்து விட்டான். இப்போது நீரும், நிலமும் மட்டுமே அங்கிருந்தது.
“திரும்பவும் தொலைச்சுட்டேன்” வலியும், கசப்பும், கோபமுமாக முணுமுணுத்து கொண்டான். அங்கிருந்த தென்னை மரத்தில் சாய்ந்து நின்று மனத்தை சமப்படுத்த முயற்சிக்கையில், அவனது அலைபேசி அடித்தது.
“டேய் விவே. எங்கடா போய்ட்ட. போட்ல உன்னை ஆளையே காணோம். கீழ இறங்கிட்டன்னு சொன்னாங்க. பட், இந்த கூட்டத்துல உன்னை எங்கடா தேடுறது? சொல்லிட்டு போக மாட்டியா? முதல்ல எங்க இருக்கன்னு சொல்லு” நண்பன் படபடத்து கத்த,
“வர்றேன் டா” என்றான் ஒரே வார்த்தையில்.
அனைவரும் தனக்காக காத்திருப்பது பிடிக்காமல், அவசரமாக படகு வீட்டிற்கு திரும்பினான். ஒன்று போல வரிசையாக நின்றவற்றில் அவர்களதை கண்டுபிடிப்பதற்குள் சோர்ந்து போனான் அவன்.
தலையை வலிப்பது போலிருக்க சோஃபாவில் சாய்ந்து, நெற்றியை அழுத்தினான். அவன் ஏறியதும் நகரத் தொடங்கியது படகு. சட்டென எழுந்து இரண்டே எட்டில் முன் பகுதியை அடைந்தான். இப்பொழுது படகை செலுத்திக் கொண்டிருந்தது நடுத்தர வயது ஆண்.
“சேட்டா..” மெதுவாக அழைத்தான்.
“ஹா, சாரே..”
“இதுக்கு முன்னாடி ட்ரைவ் பண்ணவங்க எங்க?”
“ஆரையானு சோதிக்குன்னது? (யாரை கேட்கறீங்க?)” என்று மலையாளத்தில் கேட்டவர், நொடியில் சுதாரித்து, “மோளுக்கு வேற ஜோலி வந்து” என்றார், சீராக படகை செலுத்தியபடி.
“உங்க மோள், அவங்களை எங்கப் பார்க்கலாம்”
“உங்களுக்கு அதெதுக்கு சாரே? ஓனர் கேட்டா என்னை கொன்னு களையும்.” என்றார் சிரிப்பு மாறா முகத்துடன்.
“நீங்க போய் உங்க கேர்ள் ப்ரெண்ட் கூட பேசுங்க சாரே.” என்று அவர் சாதாரணமாக சொல்ல, அவனுக்கு சுருக்கென்றது.
“விவேக், மேல வாடா. அவர்கிட்ட என்ன பேச்சு கொடுத்துட்டு இருக்க?” நண்பன் வந்து அவனை இழுத்துக் கொண்டு போனான்.
சோறு, சாம்பார், மீன் குழம்பு, மீன் பொரியல், மரக்கறி அவியல், முட்டைகோஸ் தோரன், பயறு மெழுக்குப்பிரட்டி, சாலட், ரசம், பப்படம், அட பிரதமன் என சுவையான உணவு மேஜையை நிறைத்திருந்தது.
“உட்காரு மச்சி, சாப்பிடலாம்” என்று அழைத்து அவனுக்கும் தட்டு வைத்தார்கள்.
அவனுக்கு பக்கத்தில் வந்தமர்ந்து அவனுக்கு உணவு பரிமாற யத்தனித்தவளின் கையை தடுத்து, தானே பரிமாறிக் கொண்டான்.
அவர்களுக்காக பொன்னி அரிசி சோறு தான் பொங்கியிருந்தார்கள். ஆனாலும், உணவு அவனுக்கு இறங்கவில்லை. நண்பர்களின் கலகல பேச்சில் கலந்துக் கொள்ள முடியவில்லை. சோறும் உள்ளே செல்ல மறுத்து தகராறு செய்தது. ஒரு பெருமூச்சுடன் தட்டில் இருந்த சாலட்டை விழுங்கி விட்டு எழுந்து கொண்டான்.
அலைபேசியுடன் அவன் நழுவவும் நண்பர்களும் அவனைத் தொல்லை செய்யவில்லை.
படகு வீட்டின் இரண்டாம் தளத்தில் இருந்து மேலேறிய சிறிய வெட்டவெளி பகுதிக்குச் சென்றான். அங்கே அவனுக்கு தேவையான தனிமை கிட்டியது. சுற்றிலும் சூழ்ந்திருந்த நீரை பார்த்தவனின் நினைவெல்லாம் அவள் மீதுதான் நிலைத்திருந்தது.
அலைபேசியில் தேடி துழாவி அந்த எண்ணை அழுத்தினான். இரு முறை அழைப்பு முழுதாக சென்றும் பதிலளிக்கப்படவில்லை. அப்படியும் விடாமல் மீண்டும் மீண்டும் அழைத்தான்.
அழைப்பு ஏற்கப்பட்டதும், “டேய், நான் போனை எடுக்கலன்னா பிஸியா இருக்கேன்னு அர்த்தம்டா. ரொம்ப முக்கியமான கேஸ்ல இருந்தாதான் போனை எடுக்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா?. அது தெரிஞ்சும் திரும்ப திரும்ப கால் பண்றன்னா.. என்னடா?” என்று கோபமாக கத்தினான் அவனது நண்பன்.
“திரு..” என்று மட்டுமே உச்சரித்தான் அவன். நண்பனின் மனநிலையை புரிந்துக் கொள்ள அதுவே போதுமானதாக இருந்தது போலும்.
“என்ன பிரச்சினை விவேக். சொல்லு” என்று அக்கறையுடன் கேட்டான் அவனது நெருங்கிய நண்பன் திருமூர்த்தி.
“நீ எங்க இருக்க?” என்று பதில் கேள்வி கேட்டான் விவேக்.
உடனே பதில் சொல்லவில்லை திருமூர்த்தி. தொண்டையை செருமினான்.
“சொல்லுடா. எங்க இருக்க?” விவேக் மீண்டும் கேட்க, “ராணிக்கு பாதுகாப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்” என்றான் புதிராக திருமூர்த்தி.
“எந்த ராணி?” என்று புரியாமல் வினவிய விவேக், “யாருன்னு சொல்லுடா திரு” என்றான் அலுப்புடன்.
“அவ்ளோதான் சொல்ல முடியும்” என்றான் திருமூர்த்தி, கடுமையாக.
“ராணி, எந்த ராணி? நீ ராணின்னு யாரைச் சொல்லுவ? சட்டுனு ஞாபகம் வரலையேடா. நீயே யார்ன்னு சொல்லிடு” என்றான்.
“இட்ஸ் நாட் இம்பார்ட்டன்ட். விடு. உன் பிரச்சனையை சொல்லு”
“ராணி.. குயின்..” என்று மெல்ல முணுமுணுத்த விவேக்கிற்கு மின்னல் வெட்டியது போல அந்த முகம் நினைவில் வர, “ராணின்னா? சிங்கர் ஜெயதேவன் வைஃப் சிவரஞ்சனியையா சொல்ற நீ?” என்று சந்தேகமாக கேட்டான்.
“ம்ம்ம்”
“என்னாச்சு அவங்களுக்கு? இஸ் ஷீ ஓகே? ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்னு சொன்னியே, அவங்களுக்கு என்னாச்சு?” அவன் பதற, “எதுக்கு கால் பண்ணன்னு சொல்லு விவே” என்றான் திருமூர்த்தி.
“டேய், நான் கேட்டது உன் காதுல விழுந்ததா இல்லையா? சிவரஞ்சனிக்கு ஒன்னும் இல்லையே? நாம போன மாசம் பார்க்கும் போது அவங்க ப்ரெக்னன்ட்டா இருந்தாங்களே டா. இப்போ ஹாஸ்பிடல்னா..”
நண்பனை மேலே பேச விடாமல், “ஷீ இஸ் ஓகே” என்றான் திருமூர்த்தி.
“ஓஹோ. என்கிட்டயே சொல்ல மாட்டியா டா?” என்று கோபமாக கத்தியவன், “அவங்க உயிருக்கு ஆபத்தில்லையே? வயித்துல இருந்த குழந்தை?” அதைக் கேட்கும் போதே அவன் குரல் நடுங்கி விட்டது. அவனது கடந்த காலம் ஒரு நொடி நினைவில் வந்துப் போக, சர்வமும் பதற, கண்களை மூடி அலைபேசியை இறுக பற்றினான்.
“உயிரோட இருக்காங்க” அவ்வளவுதான், சொன்னான் திருமூர்த்தி. அதற்கு மேல் தோண்டி துருவி கேள்விகள் கேட்கும் தெம்பில்லாமல் மௌனமானான் விவேக்.
“சொல்லு விவே, என்ன பிரச்சினை? நான் என்ன ஹெல்ப் பண்ணணும்?” திருமூர்த்தி கேட்க,
“கேரளால இருக்கேன்டா. இங்க.. போட் ஹவுஸ்ல அவளைப் பார்த்தேன். நீதான் எங்க இருக்கா என்னன்னு கண்டுபிடிச்சு சொல்லணும்” என்றான் தயக்கத்துடன்.
திருமூர்த்தி அவனை கேள்விகளால் துளைத்தெடுத்தான். பொறுமையா பதில் சொன்னான் விவேக்.
“பொண்ணு பொண்ணுன்னா யாருடா அது? நான் நினைக்கிற பொண்ணா?” திருமூர்த்தி இறுதியாக கேட்க, “ம்ம்” என்றான் விவேக்.
“அடங்கோ. என்ன ம்ம்? ஒழுங்கா வாயை திறந்து பதில் சொல்லுடா. பொண்ணு யாரு? பேரென்ன?” அப்போதும் பதில் சொல்லவில்லை விவேக்.
“விவே..” அழுத்தமாக அழைத்தான் திருமூர்த்தி.
“என் பொண்டாட்டி..”
“முன்னாள்னு சொல்லுடா முட்டாள்” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினான் திருமூர்த்தி. விவேக்கின் உடல் வில்லில் பொருத்திய நாணாக நிமிர்ந்தது.
error: Content is protected !!